தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005: சட்ட திருத்த மசோதா 2018 - சிக்கல்களும் தீர்வுகளும்.

| Saturday, July 21, 2018
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு மசோதா ஒன்றை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் அறிமுகம் செய்வதாக இருந்தது. ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சிகளும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, தீவிரமாக எதிர்த்ததின் பலனாக, நடப்புத் தொடரில் மேற்படி மசோதாவை அறிமுகம் செய்வதிலிருந்து தவிர்த்திருக்கிறது மோடியின் பாஜக. மத்திய தகவல் ஆணையர் எம்.ஸ்ரீனிவாச ஆச்சர்யுலு அவர்களும் தகவல் ஆணையர்களின் தரப்பாக, ஏன் இந்த சட்ட திருத்தம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படலாகாது என்பதற்கான நிறைய காரணங்களை முன் வைத்திருக்கிறார். இந்திய அரசியல் சாசன சட்டத்திற்குப் பிறகு சாதாரண மக்களுக்கு அதிகார அமைப்புகளைக் கேள்வி கேட்கும் வல்லமையை அளித்திருப்பதாக நம்பப்படும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, இதில் ஏற்படுத்தும் எந்த திருத்தத்தாலும் குந்தகப்பட்டு போவதற்கே அதிக வாய்ப்பு என்பதால், இந்தியப் பிரஜைகள் அனைவருமே இச்சட்டத்தில் அரசுகள் முனையும் திருத்தங்களை எதிர்க்க வேண்டும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 5 (13) என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இப்பிரிவின் படிக்கு, இந்தியாவின் தலைமை தகவல் ஆணையர் மற்றும் நடுவண் அரசின் பிற தகவல் ஆணையர்களின் மாத ஊதியம் மற்றும் படிகள் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களுக்கு இணையானதாக இருந்து வருகிறது. இதைப் போலவே தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 5 (16) என்ன சொல்கிறதென்றால், மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்களின் மாத ஊதியம் மற்றும் படிகள் மாநில தலைமை தேர்தல் ஆணையர், தலைமைச் செயலர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களுக்கு இணையானதாக இருந்து வருகிறது. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். மைய அரசின் தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்களின் ஊதியம், படிகள் மற்றும் பிற பணி விதிகள் / நிபந்தனைகள் (terms and conditions) உச்ச நீதி மன்றத்தின் நீதிபதிகளுக்கு இணையானதாகவும் இருந்து வருகிறது. வேறு வாத்தைகளில் சொல்வதென்றால், இந்திய அரசின் தலைமை தேர்தல் ஆணையர், பிற ஆணையர்கள், மாநில அரசுகளின் தலைமை தகவல் ஆணையர்கள் ஆகியோரின் ஊதியம், படி மற்றும் பிற பணி விதிகள் / நிபந்தனைகள் ஆகியவை உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகளுக்கு சரிசமமாக இருந்து வருகிறது.
இதுதான் பாஜக-வின் கண்களை உறுத்தியிருக்கிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் திருத்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கான காரணங்களை நடுவண் அரசு அமைச்சர் ஜித்தேந்திர சிங் இவ்வாறு விளக்குகிறார்:
"இந்திய தேர்தல் ஆணையமும் இந்திய தகவல் ஆணையமும் முற்றிலும் வேறான பணித்தன்மைகளைக் கொண்டவை. இந்திய அரசியல் சாசனத்தின் உறுப்பு 324 (1)ன் படி (constitutional body) இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப் பட்டுள்ளது. இதனுடைய பணிகள் மத்திய, மாநில அவைகளுக்கு தேர்தல்களை நடத்துவது மட்டுமன்றி, வாக்காளர் சேர்க்கைப் பணிகள் மற்றும் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகியவற்றையும் நடத்துவதாகும். மாறாக, தகவல் ஆணையம் என்பது சட்டபூர்வமாக (statutory body) ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பாகும். இதன் காரணமாகவே, இந்த இரண்டும் சமமாக மாட்டா என்பதுடன் வேறு வேறாகவும் கருதப்படத் தக்கவையாகும்."
ஆனால் இதில் இன்னொன்றை கவனிக்க வேண்டும். தகவல் ஆணையர்களின் பணிதான் என்ன? இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 19 (1) (a)-வை செயல்படுத்தும் சட்ட முகவர்களாக இவர்கள் இருப்பது பாஜக-அரசின் கண்களுக்குப் புலப்படவில்லையா? அல்லது இத்தகைய பணி இந்திய அரசியல் சாசனத்தோடு தொடர்பற்றது என்பதாக சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுகிறதா? தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ஒரு மைய அரசின் சட்டம்; ஜம்மு காஷ்மீர் நீங்கலாக, இந்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்குமானது.
அதிகாரப் பகிர்வைப் பற்றி அரசியல் சாசனம் சொல்வது என்ன? மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குட்பட்டவைகளில் மேலதிகமாக மைய அரசு எந்த சட்டமும் இயற்றியுள்ளது எனும் நிலை, அரிதினும் அரிதான நிகழ்வுகளைத் தவிர்த்து, பின்பற்றப்பட்டு வராத நிலையில் ஏன் மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்களின் உரிமைகளில் நடுவண் அரசு குந்தகம் ஏற்படுத்த தற்போது முனைகிறது? மாநில தகவல் ஆணையர்கள் /. மத்திய தகவல் ஆணையர்களை தம் வசம் கொண்டு வர விரும்பும் பாஜக அரசின் தந்திரம்தான் இது. தகவல் ஆணையங்கள் இது நாள் வரை குறிப்பிடத்தக்க அளவில் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. இப்படியான நிலை தொடர்வது வருகின்ற காலங்களில் தனது நலனுக்கு மிகப் பெரிய அளவில் சிக்கலை உண்டாக்கும் என்று பாஜக அரசு கருதுவதாலேயே மேற்சொன்ன திருத்தத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது. மத்திய தகவல் ஆணையம் / ஆணையர்களுடையது மட்டுமன்றி, மாநில தகவல் ஆணையர்களின் ஊதியம், பதவிக்காலம் மற்றும் இதர பணி நிலைகளையும் மத்திய அரசே அவ்வப்பொழுது தீர்மானிக்கும் ஆற்றலை இப்படியான திருத்தம் செல்லத்தக்கதாக்கி விடும். நாளடைவில், நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கே வெடி வைக்கும் அபாயமும் இதில் உள்ளார்ந்து இருக்கிறது.
இன்னொன்றையும் பார்க்கலாம். இந்திய தேர்தல் ஆணையமானது இந்திய அரசியல் சாசனத்தின் உறுப்பு 324 (1)-ஐ செயல்படுத்தும் அமைப்பு. இந்திய தகவல் ஆணையம் இந்திய அரசியல் சாசனத்தின் உறுப்பு 19(1)(a)-வை செயல்படுத்தும் அமைப்பு. இதில் முன்னதை அரசியல் சாசன ரீதியான அமைப்பு என்றும், பின்னதை அரசியல் சாசன ரீதியான அமைப்பு அல்ல என்றும் எப்படி பாஜக அரசு முடிவெடுக்கிறது? வேறொன்றையும் கவனியுங்கள். இந்திய அரசியல் சாசனத்தின் 19(1)(a) உட்தலைப்பு (rubric) சொல்வதென்ன? - "right to express choice through voting and also right to information". "வாக்களிக்கும் உரிமையும் தகவல் பெறும் உரிமையும் இந்திய அரசியல் சட்டத்தால் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்" என்று இந்திய உச்ச நீதிமன்றம் திரும்பத் திரும்ப சொல்லியாயிற்று. இந்த நிலையில் தேர்தல் ஆணையரும் தகவல் ஆணையரும் சமமான நிலை வகிக்கிறார்கள் என்பது பாஜக அரசைத் தவிர மற்ற அனைவருக்கும் தெளிவாகி விட்டது.
இரண்டு ஆணையர்களையும் வேறு வேறு தளங்களில் நிறுத்துவதைத் தவிர மற்றொரு பாதகமும் இந்த சட்ட திருத்தத்தில் உறைந்துள்ளது. மாநில உரிமைகளில் நியாயமற்ற முறையிலான மத்திய அரசின் தலையீடு நாளடைவில் குடியரசின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு குந்தகமாகி விடும். பாஜக அரசின் சட்ட திருத்த மசோதாவின் படி, மைய தகவல் ஆணையராக இருந்தாலும் சரி, மாநில தகவல் ஆணையராக இருந்தாலும் சரி, ஊதியத்தையோ, பணிக்காலத்தையோ, பணி விதிகளையோ மைய அரசு நினைத்த படி, நினைத்த பொழுது மாற்றிக்கொள்ளலாம். இந்த வருடம் தகவல் ஆணையர்களாக பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு பணிக்காலமாக மூன்றாண்டுகளும், அடுத்த வருடம் பணியமர்த்தப்பட போகிறவர்களைப் பொறுத்தவரை இரண்டாண்டுகளுமாக மாற்றிக் கொள்ளலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், "எனது பேச்சைக் கேட்டு நடப்பதாக இருந்தால் நீ பதவியில் நீடிக்கலாம்; இல்லையென்றால் மூட்டை கட்டிக் கொள்." நிச்சயிக்கப்பட்ட பதவிக் காலமும், உயர் பதவி நிலையும், எளிதாக பதவி நீக்கம் செய்ய முடியாத முறைமையும் தகவல் ஆணையர்களை தன்னாட்சி சுதந்திரம் கொண்டவர்களாக உருவாக்கியுள்ளது. இப்படியானது பாஜக அரசு சகித்துக் கொள்ளவே முடியாத நிலை. தகவல் ஆணையர்களை தட்டி வைத்தாலொழிய, பாஜக-வின் அரசுகள் தங்களது போக்கில் தொடர முடியாமல் போய்விடக் கூடும் என்கிற அச்சத்தைத்தான் முன்னளிக்கப் பட்டிருக்கும் சட்ட திருத்தம் நமக்கு உணர்த்துகிறது.
மேலும், தலைமை தகவல் ஆணையர் / தகவல் ஆணையர்களின் பதவிகள் அண்மையில் பணி ஓய்வு பெற்றிருக்கும் / பெறவிருக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுதல் ஆகாது. இப்படியான பணியமர்த்தல்கள், பெற்ற லாபங்களுக்கு நன்றி பாராட்டும் செயலாகவோ, அல்லது பெறப் போகும் லாபங்களுக்காக தரப்படும் முன்தொகையாகவோ இருக்கலாமே தவிர, நியாயமான செயல்களாக இருக்கவே முடியாது. இவ்விடத்திலேயே வெளிப்படைத்தன்மை அழிந்தொழிகிறது. பாராளுமன்றம் உறுதியளித்துள்ள படி, தகவல் ஆணையர்களாக பணியமர்த்தப் படுபவர்கள் சமூகத்தின் சிறந்த மனிதர்களாகவும், அவர்களது பணிக்காலம் ஐந்து வருடங்கள் அல்லது அறுபத்தைந்து வயது நிறைவடைதல் ஆகியவற்றில் எது முன்னதோ அது என்பதாக இருப்பது தொடரும் என்று உறுதிப்படுத்துதலும் அவசியமானது. ஆனால், பாஜக முன் வைத்திருக்கும் சட்ட திருத்தமானது பொது அதிகார அமைப்புகளை யாருமே கேள்வி கேட்க முடியாத அமைப்புகளாக மாற்றி விடும். மத்திய தகவல் ஆணையம் / மாநில தகவல் ஆணையங்கள் சம்பந்தப்பட்ட அரசுகளின் கைப்பாவைகளாக மாறிவிடும் அபாயம் உண்டு.
இந்த சட்ட திருத்தமானது தற்போது தேவைதானா என்பது பற்றி யாருடனும் பாஜக அரசு ஆலோசித்ததாக தகவல் இல்லை. மாநில அரசுகள், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகள் கேட்டுப் பெறப்படவில்லை. இந்த ஒரு காரணத்தின் பொருட்டே, இச் சட்ட திருத்தம் ஜனநாயக விரோதமானது என்று கூறிவிடலாம்.
நடப்புப் பாராளுமன்றத் தொடரில் அறிமுகப்படுத்தப் படவிருந்த இந்த சட்ட திருத்தம் பலமான எதிர்ப்புகள் எழுந்ததின் காரணமாக தற்காலிகமாக தள்ளி போடப்பட்டுள்ளது. இது நல்லதுதான். ஆனால், இந்தத் திருத்தமானது முற்று முழுவதுமாக பாஜக அரசால் கைவிடப்படும் வரையில், ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் தத்தம் அளவில் எதிர்ப்புகளை சட்டத்திற்குட்பட்டு தெரிவித்துக் கொண்டேயிருக்க வேண்டும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது விடயத்தில் தங்கள் பணியை நாளது வரை செம்மையாக செய்திருக்கின்றன என்பதையும் சொல்லியாக வேண்டும்.
எப்படியாவது, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 காயம் படாமல் தப்பித்துக் கொண்டால் ஜனநாயகத்திற்கு நல்லதுதானே?

0 comments:

Post a Comment