என்ன செய்திருக்கலாம் இவர்கள்

| Monday, June 18, 2018
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டைப் நிறைய பேசப்பட்டு எழுதப்பட்டு வருகிறது. மே 22ல் துவங்கிய விவாதங்கள் குறைய பல மாதங்கள் ஆகும்; நிறைவுற சில ஆண்டுகள் பிடிக்கும். நியுஸ்18 தொலைக்காட்சியில் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன் அவர்களை இந்த நிகழ்வு தொடர்பாக நேர்காணல் செய்திருப்பதை YouTube-ல் பார்க்க நேர்ந்தது.
01. இந்த ஆலையை முதலில் குஜராத் நிராகரித்தது. பிறகு கோவா நிராகரித்தது. அதற்குப் பிறகு, இருநூறு கோடி ரூபாய் செலவழித்து ஆரம்ப கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் எழுச்சியின் காரணமாக மகாராஷ்டிர அரசு கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு நடக்க தடைவிதித்து ஆலையை மூடியது.
02. தமிழ்நாடு இந்த ஆலையை துவங்க அனுமதி கொடுத்த பொழுது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தது. இந்த ஆலையின் இரண்டாவது ஆலையைத் துவங்க அனுமதி கொடுத்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.
03. நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது, ஸ்டெர்லைட் ஆலை - மாநில அரசு - மத்திய அரசு - உச்சநீதி மன்றம் ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஒன்று இருந்திருக்கலாம் என்று சந்தேகப்பட தடயங்கள் வலுவாக உள்ளன.
04. இதற்கு முன்னரே பால் வசந்த குமார் மற்றும் தர்மா ராவ் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பில் விலாவாரியாக இந்த ஆலை ஏன் மூடப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் விளக்கப்பட்டு மூடவும் உத்தரவிடப்பட்டது.
05. இதற்கான மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை முற்று முழுவதுமாக தள்ளுபடி செய்ததுடன் ஆலைக்கு இருந்த சில நிபந்தனைச் சிக்கல்களையும் நீக்கியது.
06. ஆலை துவங்கப்பட்டவுடனேயே இதன் கசிவுகள் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கி விட்டன. இந்த ஆலைக்கு அருகிலிருக்கும் தமிழ்நாடு மின்சார வாரிய நிலையத்தின் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இது ஸ்டெர்லைட் கசிவுகள் காரணமாகத்தான் என்று ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
07. தடையை மீறி ஊர்வலம் சென்றதுதான் நடந்த துன்பியல் நிகழ்வுகளுக்கு காரணம் என்றால், ஏன் காவல்துறை தடையை விதித்தது? தடை இல்லாமலிருந்தால் மீறுதல் என்ற நிலையே இருந்திருக்காது. போராட்டத்தின் நூறாவது நாள் நிகழ்வு அறிவிக்கப்பட்டு விட்டது. அதைத் தடுக்கும் நோக்கத்துடன் தடை விதிக்கப்படுகிறது. போராடும் மக்கள் அதை மீறுகிறார்கள். காவல்துறை அவர்களைச் சுடுகிறது. தடை விதிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த அவலமே நடந்திருக்காது.
08. வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில் இந்த 144 மற்றும் 41 சட்டப்பிரிவுகள் படியான தடையே கிடையாது. ஜாலியன் வாலாபாக்கில் 144 தடை இருந்தது. மக்கள் மீறினார்கள். போலிஸ் சுட்டது. தூத்துக்குடியில் 22-5-2018 அன்று 144 தடை இருந்தது. மக்கள் மீறினார்கள். போலிஸ் சுட்டது. இரண்டிற்குமிடையில் என்ன வித்தியாசம்?
09. சென்னை ஒரு பெருநகரம். அங்கு எப்போதும் 41 பிரிவின் கீழ் தடை இருக்கிறது. ஆளுங்கட்சி தவிர வேறு கட்சிகளோ அல்லது எந்த ஒரு அமைப்புமோ கூடவும் போராடவும் அரசு தடை விதிக்கிறது. ஆனால் ஆளுகின்ற கட்சியானது தன்னுடைய விருப்பத்தின் படி எப்போது வேண்டுமானாலும் தொண்டர்களை கூட்டும். அப்போதெல்லாம் 41-வது பிரிவு என்ன ஆகிறது?
10. போலிஸ் காலில் சுட்டிருக்கலாம் என்பது தவறு. சுட்டிருக்கவே கூடாது. தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் மட்டுமே துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியிருக்க முடியும்.
11. நடந்த துப்பாக்கிச் சூடு ஒரே இடத்தில் நடைபெறவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்திருக்கிறது என்பது முக்கியமான விடயம்.
12. நடந்த துப்பாக்கிச் சூடு பற்றி முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது நம்பும்படியாக இல்லை. இதற்கான உத்தரவு சென்னை அல்லது தில்லியிலிருந்து பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
13. உயிரிழந்தவர்களுக்கு நட்ட ஈட்டுத் தொகை - அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதெல்லாம் சரியான பின்னூட்டங்கள் அல்ல. உயிரிழப்பிற்கு மூல காரணம் யார் என்பதை அறிந்து அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்துவதுதான் செய்யத்தகுந்த காரியம்.
14. போலீஸ்காரர்கள் தங்களுடைய சீருடையில் இல்லாமல் இருந்தது தவறு. சீருடையில் இல்லாத போது துப்பாக்கி ஏந்தியது தவறு.
15. போலீஸ்காரர்களை மட்டும் குற்றம் சொல்லுவது தவறு. அவர்கள் உத்தரவிடப்படுவதை செய்பவர்கள். யார் உத்தரவிட்டது?
16. உள்ளூரின் வெப்பத்தை தில்லியும் உச்சநீதி மன்றமும் உணர்வதே இல்லை.
17. துன்பியல் சம்பவத்திற்குப் பிறகு மின்சாரத் தொடர்பைத் துண்டிக்க முடிகிற அரசு அதற்கு முன்னரே இதை செய்திருக்கலாமே? ஏன்
செய்யவில்லை?
18. ஸ்டெர்லைட் ஆலையில் maintenance பணிகள் நடந்து வந்ததினால்தான் ஆலை மூடப்பட்டிருந்தது என்பது தவறு. அந்தக் காலத்திலும் உற்பத்திப் பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன.
19. Nexus among corporates - government - courts என்பதை சந்தேகிக்க முடியும்.
20. பால் வசந்தகுமார் மற்றும் தர்மா ராவ் அமர்வின் தீர்ப்பிலேயே ஆலையை எந்த விதிமுறைகளின் கீழ் மாநில அரசு மூட உத்தரவிடலாம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
21. நடந்த துப்பாக்கிச் சூடு மக்கள் எழுச்சிகளை தடுக்க முடியாது. பிரச்சினையால் பாதிக்கப்படும் மனிதன் அது தீரும் வரை போராடத்தான் செய்வான்.
22. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக நீதிமன்றத்தைக் கருதுவது தவறு. மக்கள் போராட்டங்களின் வழியாகத்தான் வெகுஜன பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன.
23. இந்த துயர சம்பவத்தின் போது உள்ளூர் நீதிமன்றங்கள் போற்றத்தக்க பணியை செய்துள்ளன. நீதியரசர்கள் நேரடியாகவே காவல் நிலையங்களுக்கு சென்று வலுக்கட்டாயமாக பிடித்து வைக்கப்பட்ட மக்களை உடனடியாக வெளியே அனுப்புமாறு உத்தரவிட்டது பாராட்டத்தக்கது.
24. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது குறித்து கர்னாடக இசைப் பாடகர் கிருஷ்ணா உள்ளிட்ட சில பிரபலங்களுடன் இணைந்து ஒரு வழக்கை மேனாள் நீதியரசர் ஹரிபரந்தாமன் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்.
மேற்சொன்னவை மேனாள் நீதியரசரின் கருத்துகள். நேர்காணலை குறிப்பெடுத்திருந்தால் இன்னும் சில கருத்துகள் விட்டுப்போகாமல் நினைவு கூர்ந்திருக்க முடியும்.
பார்க்கவும் சிந்திக்கவும் சிந்தனையைக் கூர்படுத்திக் கொள்ள உதவுவதுமான நேர்காணல்.

0 comments:

Post a Comment