ரஜினிகாந்தின் தங்கைகள்

| Tuesday, February 7, 2017
 தற்கொலைகள் விலங்குகள் மத்தியிலும் அபூர்வமாக உண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். என்ன காரணத்தால் அவைகள் தற்கொலை செய்கின்றன என்று தெரியவில்லை. ஆனால் மனிதர்கள் தற்கொலை செய்த வண்ணம் இருக்கிறார்கள். அதிலும் படித்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஸ்காண்டிநேவியா நாடுகளில் தற்கொலைகள் அதிகம். படிப்பும் அதிகம். இந்தியாவில் கேரளா தற்கொலைகளுக்கு பேர் போனது. அங்கிருந்த வருடங்களில் அடிக்கடி கேள்விப்பட்டவாறே இருந்தேன். எனது மாணவர்கள் அவர்களின் உறவினர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் முதல்நாள் பள்ளிக்கு வரமுடியவில்லை என்று சொல்லியவாறு இருந்தார்கள். சமூகத் தளத்தில் அறிவும் கிண்டலும் எப்போதும் ததும்பிய வண்ணம் இருக்கும் இடத்தில் தற்கொலைகளும் தொடர்ந்து கொண்டே இருப்பது ஒரு நகை முரண்.


கற்பனைக்கும் தற்கொலைக்கும் தொடர்பு உண்டு என்று நம்ப இடமுண்டு. அதை அனுபவ வாயிலாக நான் அறிந்திருக்கிறேன். எண்ணற்ற நிகழ்த்துக் கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  திரைப்படம், நாடகம், தெருக்கூத்து கலைஞர்கள், தொலைக்காட்சி கலைஞர்கள் என்று தற்கொலை செய்து கொள்வதில் ஒரு நீண்ட தற்செயலைக் கவனித்திருக்கிறேன். ஐந்தாவது அல்லது ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலையில் நண்பர்கள் செட்டியார் கடையில் தினத்தந்தி பார்த்துவிட்டு ஓடிவந்து கத்தினார்கள். "டேய், ரஜினி தங்கச்சி தற்கொலை செஞ்சிக்கிட்டா, வெளிய வாடா." நடிகை ஷோபா - முள்ளும் மலரும் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தங்கையாக நடித்திருந்தவர் - தற்கொலை செய்து கொண்டிருந்தார்.  ரொம்பவும் அதிர்ச்சியான காலை நேரம் அது. அன்று முழுக்க பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூட்டம் கூட்டமாக இதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். ரஜினிகாந்த் தங்கையாக நடிப்பதற்கும் தற்கொலை செய்துகொள்வதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்க இடம் உண்டு. தர்மயுத்தம் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நடிகையும் தற்கொலை செய்து கொண்டார். முள்ளும் மலரும் படித்தில் ரஜினியின் மனைவியாக நடித்தவரும் தற்கொலை செய்துகொண்டார் என்பது வியப்பான தற்செயல். தற்கொலை செய்து கொண்ட நடிகர் நடிகையர்களைப் பற்றி கூகுள் செய்தபொழுது கிடைத்த தகவல்கள் பயமுறுத்துகின்றன. ஜியா கான் தொடங்கி குரு தத் வரை பட்டியல் மிக நீளம்.  ஒரு படத்தில் காதலன் காதலியாக நடித்த மோனல் என்ற நடிகையும் குணால் சிங் என்ற நடிகரும் தற்கொலை செய்து கொண்டனர்.  மழையில் நனைந்தவாறு அவர்கள் இருவரும் ஆடிய பாட்டு ஒன்று சன் டிவியில் மிட்நைட் மசாலாவில் ஒவ்வொரு இரவும் வரும். மோனல் - குணால் இருவரோடு மிட்நைட் மசாலாவும் காணாமல் போய்விட்டது.   

சர்வகலா சாலையில் முனைவர் பட்ட ஆய்வைத் தொடங்கியிருந்த சமயம்.  துறையின் வாசலில் ஒரு மிகப்பெரிய பலகையில் ஆண்டு வாரியாக முனைவர் பட்டம் பெற்றவர்களின் பெயர்கள் பட்டியிலிடப்பட்டு இருக்கும்.  அதில் முதலில் இருந்தவர் சேலத்துக்காரர்.  சில சர்வகலா சாலைகள் அவருக்கு பேராசிரியர் பணி கொடுக்க முன்வந்த போது நிராகரித்துவிட்டு, சேலத்தில் நிறுமங்களின் பங்குகள் வாங்கி விற்கும் முகவரானார். விரைவில் ஆச்சர்யப்படத்தக்க அளவில் முன்னேறினார். ஹர்ஷத் மேத்தாவால் அத்தனையும் கெட்டுப்போனது.  தன்னுடைய பங்கு வர்த்தகத்தில் திடீரென ஏற்பட்ட ஏகப்பட்ட நஷ்டத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டார். துறையில் ஒரு வாரம் யாருக்கும் எதையும் செய்யத் தோன்றவில்லை. பேராசிரியர்களில் வயது குறைந்த சிலர் தற்கொலை செய்துகொண்டவரின் சகாக்கள். பித்தம் பிடித்த நிலையில் அலைந்து கொண்டிருந்தனர். அவரைப் பற்றிய கதைகள் எங்களது கனவுகளிலும் வந்தவாறு இருந்தன. அசாதாரணமான ஒருவரின் மாபெரும் வீழ்ச்சியாகக் கருதப்பட்டது.         

தற்கொலை செய்துகொண்ட முட்டாள்கள் என்ற தலைப்பில் தேடுபொறிகளில் பலமணி நேரங்கள் மேய்ந்துகொண்டிருந்த போதும் ஒரு நபரைப் பற்றிய தகவலையும் பெறமுடியவில்லை.  தற்கொலைக்கும் சிந்தனைக்கும் தொடர்பு உண்டு என்பது இதனால் நிரூபணமாகிறது.  தற்கொலை செய்துகொண்ட இலக்கியவாதிகள் என்று தேடினால் பட்டியல் முடிவே இல்லாமல் நீளுகிறது. தமிழில் தற்கொலை செய்துகொண்ட இலக்கிய கர்த்தாக்கள் அதிகம்தான்.  எனக்குத் தெரிந்து அதிர வைத்தது ஸ்டெல்லா ப்ரூஸ் அவர்களின் தற்கொலை.  பள்ளிப்பருவத்தில் விகடனில் வெளிவந்த அவரின் "அது ஒரு நிலாக்காலம்" என்ற நாவலையும், ராம்குமார், சுகந்தி என்ற பெயர்களையும் மறக்க முடியாமல் இரவு நேரங்களில் நண்பனொருவனுடன் மொட்டை மாடிக்குச் சென்று உதடுகள் பழுக்க பழுக்க பீடியும் சாராயமும் குடித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.  "எப்படியாச்சும் சுகந்தியை பாத்திரனும்.  விகடன் ஆபிசுக்குப் போய் ஸ்டெல்லா ப்ரூஸின் அட்ரஸ் வாங்கி விசாரித்து சுகந்தியைப் பார்க்காமல் வூடு வரக்கூடாது" என்ற விசும்பிய நிலையில் நண்பனும் நானும் திட்டம் போட்டதும் ஞாபகத்திற்கு வருகிறது.  அந்த ஸ்டெல்லா ப்ரூஸ் தற்கொலை செய்து கொண்டார்.  பின்னர் அவர்தான் ராம்குமார் என்பதும், சுகந்தி வேறு யாருமல்ல, பதினெட்டே ஆண்டுகள் அவருடைய வாழ்க்கைத் துணையாக இருந்து மரித்துப் போன திருமதி ஹேமா என்பதும் தெரிய வர, நெஞ்சம் கனத்துப் போனது.  "அந்தப் பதினெட்டு ஆண்டுகளில் மொத்த வாழ்க்கையையும் வாழ்ந்துவிட்டேன்" என்பதாக தற்கொலைக்கு சிறிது காலம் முன்பாக எழுதிய நினைவுத்தொகுப்பு ஒன்றில் ப்ரூஸ் எழுதியிருக்கிறார்.  இரண்டு நாட்களுக்கு முன்பாக க.சீ.சிவக்குமார் மாடியிலிருந்து விழுந்து இறந்திருக்கிறார். எழுத்தாளர் பாலகுமாரன் நண்பர் ஒருவரின் (அவரும் எழுத்தாளர்) தற்கொலை குறித்த அவலச்சுவை நிறைந்த அவரது கட்டுரை அப்போது ரொம்பவும் பாதித்தது.  குறத்தி முடுக்கு ஜி.நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார்.  விர்ஜினியா வூல்ப் உடம்பில் கற்களைக் கட்டிக்கொண்டு ஆற்றில் விழுந்து செத்துப் போனார்.  எப்படியேற்பட்ட கர்த்தா! நாஜிப்படைகள் தன்னைப் பிடித்துவிடும் என்று பயந்து வால்டர் பெஞ்சமின் அதிகப்படியாக மார்பின் எடுத்துக் கொண்டு செத்துப் போனார்.  புரட்சியின் போக்கும் மக்களின் எதிர்வினையும் பிடிக்காமல் மாஸ்கோவில் 1930ம் ஆண்டு மாயாகோவ்ஸ்கி தற்கொலை செய்து கொண்டார்.  1961ம் ஆண்டு மன உளைச்சலின் காரணமாக எர்னஸ்ட் ஹெமிங்க்வே ("கிழவனும் கடலும்" என்ற நோபல் நாவலை எழுதியவர்) தன்னையே சுட்டுக்கொண்டு மரித்துப் போனார்.  எரிகின்ற அடுப்பில் தலையைக் கொடுத்து சில்வியா பிளாத் தற்கொலை செய்துகொண்டார்.

க.சீ.சிவக்குமார் மாடியிலிருந்து விழுந்து இறந்து போனது 130 கோடிப்பேர்கள் உள்ள ஒரு தேசத்தில் ஒரு பெரிய விஷயம் இல்லை.  ஆனால் அவர் சிந்தித்துக் கொண்டிருந்ததால் இறந்துபோனார் என்பது நமது சமூகத்தைப் பற்றிய அவலமான ஒரு செய்தி. எல்லா சமூகங்களைப் பற்றிய அவலமான செய்திகளையும் சிந்திப்பவர்கள் தங்களின் தற்கொலைகளின் மூலம் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.   

இந்தப் பூமியின் நெடிய வரலாற்றில் சில தருணங்களில் மட்டுமே தற்கொலைகள் நியாயப்படுத்தப் பட்டுள்ளன. தங்களது நம்பிக்கைகளை சீரழிக்கும் வண்ணம் செயல்படும் அரசை எதிர்க்கும் விதமாக துறவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.  சில தற்கொலைகள் அரசுகளைக் கவிழ்த்திருக்கின்றன. உடல் ரீதியான வழி / துன்பம் நீங்க மாற்று வழியில்லாப் போகும் நிலையில் சில தற்கொலைகள் நியாயமாகலாம். 

இவை தவிர்த்த வேறு எந்த தற்கொலைக்கும் சமூகம் எவ்விதமாகவோ காரணமாக இருக்கிறது. ஒத்துக் கொள்ளவே முடியாத முரண்கள் நிறைந்த இந்த சமூகத்தில் விட்டேத்தியாகவோ, எருமை மாட்டுத் தன்மையுடனோ, சிந்திக்கும் திறன் அற்றோ, கற்பனை வளம் கொஞ்சமும் இல்லாமலோ இருக்க எல்லாம் வல்ல இறைவனின் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பது அனைவரும் முன்னெடுக்க வேண்டிய பிரார்த்தனைதானே!          

0 comments:

Post a Comment