முத்து வாத்தியாரும் மருத்துவ மாணவர்களும்

| Tuesday, February 28, 2017
மருத்துவர்கள் தம்மை அணுகும் நோயாளிகளிடம் ஒருவித பந்தாவோடும் "குனிந்து பார்க்கும் மனப்பான்மையோடும்" நடந்து கொள்வதாக பரவலாக ஒரு கருத்து உண்டு.  பெரும்பான்மையான மருத்துவர்களைப் பொறுத்தவரை அது உண்மையும் கூட. கருணை, இரக்கம், பரஸ்பர விசாரிப்பு, மனித நேயம் இன்றி நடந்து கொள்ளும் இவர்களை சந்திக்க தயக்கம் இருந்தாலும் வேறு வழியின்றி போய்ப் பார்த்துதான் ஆக வேண்டும்.  சிகிச்சை கட்டணமாக எவ்வளவு வசூலிப்பார்களோ என்ற கவலை அனைவரிடமும் இருக்கிறது.  இதில் ரமணா படத்தில் விஜயகாந்த் காண்பித்தது வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது. 

மேலே சொன்ன மனோபாவத்தை மருத்துவர்களிடம் மட்டுமல்ல, மருத்துவ மாணவர்களிடமும் பார்த்திருக்கிறேன். இதில் எங்கேயோ தவறு நடந்திருப்பது தெரிகிறது. மற்றவர்களை - சக மனிதர்களை - தமக்கிணையாக மருத்துவர்கள் ஏன் நடத்துவதில்லை? இதில் விலக்குகள் நிச்சயம் உண்டு. அவர்களைப் பற்றி அல்ல இது.  மெஜாரிட்டி மருத்துவர்களைப் பற்றிய கவலையால் இது பற்றி பேச வேண்டி வருகிறது.  மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய இரண்டும் எந்த நாடுகளில் தனியார் வசம் உள்ளதோ அங்கெல்லாம் சமூகம் பிளவு பட்டுத்தான் இருக்கும்.  இன்சூரன்ஸ் அட்டையை வைத்துக் கொண்டு சாதாரணர்கள் வெயிலிலும் மழையிலும் அலைவதைப் பார்ப்பது அன்றாடக் காட்சியாகி விட்டது.  அரசியல் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்.  மருத்துவம் - கல்வி ஆகிய இரண்டில் மட்டுமாவது அரசியல் இல்லாமலிருக்க கூடாதா என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. ஒட்டுமொத்த சமூக சுபிட்சத்திற்கும் இதற்கும் நேரிடையான தொடர்பை எளிதாக உணரலாம்.

இது குறித்து தி டைம்ஸ் ஆப் இண்டியா தினசரியில் இன்று (28-2-2017) அனந்த் நாராயண் என்ற மருத்துவர் நல்ல பத்தி ஒன்றை எழுதியிருக்கிறார்.  மருத்துவப் படிப்பின் கலைத்திட்டத்தில் வாழ்வியல் புலம் (Humanities) சேர்க்கப் படுவதுதான் ஒரே வழி என்று சொல்கிறார் அனந்த் நாராயண். இலக்கியம் - இசை - நடனம் - மற்ற நுண்கலைப் பற்றிய பாடங்களை மருத்துவ கலைத்திட்டத்தில் உள்ளடக்குவது அவர்களின் மூளையின் வலது - இடது ஆகிய இரண்டு பக்கங்களும் செயல்பட ஏதுவாகும் என்பது அவரது கருத்து.  இதில் எனக்கு உடன்பாடு உண்டு.  நீதி நெறி போதனை என்ற வகுப்புகள் அப்போது பள்ளிகளில் மாணவர்கள் விருப்பத்தோடு எதிர்பார்க்கும் வகுப்புகளாக இருந்தன.  ஆசிரியரும் வந்து நல்ல கதைகளைச் சொல்லுவார். நல்லதங்காள், அரிச்சந்திரன், மராட்டிய சிவாஜி, கட்டபொம்மு, மருது சகோதரர்கள் போன்றோரின் வாழ்க்கை சரிதங்களை எங்களது பள்ளியில் இருந்த அபாரமான கதைசொல்லியான முத்து வாத்தியார் மூலமாகத்தான் தெரிந்து கொண்டோம்.  முத்து வாத்தியாரின் நீதி போதனை வகுப்பு என்றால் வகுப்பை கட் அடித்த மாணவனும் ஒருவரும் அறியாமல் 'அசாமல்' வந்து உட்கார்ந்து விடுவான்.  அவருக்கு வெத்தலையும் கொட்டைப் பாக்கும் பித்தளை சொம்பில் தண்ணீரும் வேண்டும்.  பள்ளிக்கு மிக அருகில் இருந்ததால் எங்கள் வீட்டிலிருந்துதான் தண்ணீர் போகும்.  இரண்டு பைசா, மூன்று பைசா என்று சக மாணவர்களிடம் வசூலித்து ஒரு கத்தை வெத்தலை, கைப்பிடி பாக்கு வாத்தியார் வருவதற்கு முன்னமேயே மேசையில் வைத்து விடுவோம்.  கதை சொல்லுவதற்கு முன் சரியான வெத்தலையைத் தெரிந்தெடுத்து தண்ணீரில் கழுவுவார். வெத்தலையின் பின் பக்கமாக தனது வேட்டி மடிப்பில் எப்பொழுதும் வைத்திருக்கும் சுண்ணாம்பை கொஞ்சமாக எடுத்து பாசத்தோடு தடவுவதைப் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். முதலில் இரண்டு வெத்தலையை தள்ளிய பிறகு ஒவ்வொரு பாக்காக உள்ளே போட்டு பற்களால் உடைக்கும் சத்தம் கடைசிப் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவனின் காதை அடைக்கும்.  வாழ்நாளில் நான் கேட்டிருக்கும் அத்தனை அற்புதமான கதைகளும் முத்து வாத்தியார் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். மாணவர்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கைப் பற்றி மற்றவர்களுக்கு நிறைய பொறாமை இருந்ததாக அவரின் சக ஆசிரியர்களான அப்பா அம்மா சொல்லிக் கொண்டிருப்பார்கள். 

அந்தக் கதைகளின் ஊடே சொல்லப்பட்ட 'செய்திகள்' இன்றுவரை உதவுகின்றன. எத்தனையோ சிக்கலான தருணங்களில் முத்து வாத்தியார் மண்டைக்குள் இருந்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மருத்துவக் கல்லூரிகளில் பெயரளவிற்கு இருக்கும் இலக்கிய மன்றங்கள், திரைப்பட மன்றங்கள் அந்த மாணவர்களிடம் எந்தவிதமான நெகிழ்ச்சியையும் மனோபாவத்தில் கொடுத்து விடவில்லை. இது ரொம்பவும் அபாயகரமான நிலை என்று அனந்த் நாராயண் கவலைப் படுகிறார். உடனடியாக மருத்துவக் கல்வி கலைத்திட்டத்தில் இலக்கியம், இசை போன்ற நுண்கலைகள் கட்டாயப் பாடங்களாக சேர்க்கப்பட்டாக வேண்டும் என்று அனந்த் நாராயண் சொல்வது எளிதில் புறந்தள்ளக் கூடியதாக இல்லை. மருத்துவ மாணவர்களுக்கு emotional balance கிடைக்க இது உதவலாம். 

இலக்கியம், வரலாறு, இசை போன்ற வாழ்வியல் புலம் சார்ந்த துறைகள் அனைத்து வகையான பள்ளிகள், கல்லூரிகளிலும் தேவை.  இவை நம்முடைய வாழ்க்கையில் இடரான தருணங்களில் நம்மைக் காப்பாற்றும் வலிமை கொண்டவை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் தொழிற்கல்விக் கூடங்களிலும் பள்ளிகளிலும் இதன் முக்கியத்துவம் தவிர்க்கப் படுகிறது. Never mock the pain you have not endured என்று சொல்வார்கள். நாம் சந்தித்திராத துயர்கள், இடர்கள் போன்றவையால் இன்னலுறும் மக்களின் சிரமங்களை நமதே போல உணர வைக்க நுண்கலைகளின் பயிற்சியால் பெற்று விட முடியும். இத்தகைய பயிற்சியால் மருத்துவர்களும் சக மனிதர்களை அன்போடும் அனுசரணையோடும் பார்க்கவும் நடத்தவும் முடியும்.  இதற்கு என்ன தேவை என்று பார்த்தால், அனுபவமிக்க பேராசியர்கள், குறிப்பாக இலக்கியம் மற்றும் நுண்கலைப் புலம் சார்ந்த துறைகளில் பேராசிரியர்கள், அவர்களது பணி ஓய்வுக்குப் பிறகு, மருத்துவக் கல்லூரிகளில் பணிக்கு அமர்த்தப் படலாம்.  இந்தப் பேராசிரியர்களே மாணவர்களுக்கான ஒரு அற - சமூக ஒழுக்க பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.  எனக்குத் தெரிந்து ஒரு பொறியியல் கல்லூரியில் Professor of Ethics என்ற பதவியை உருவாக்கி BARC-ல் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, இறையியல், இலக்கியம், பொது வாழ்வு, நடப்பியல் உண்மைகள் என்பவைகளில் தேர்ந்திருந்த ஒரு பெரியவரை நியமித்திருந்தார்கள்.  எப்பொழுதும் சிறு வயதுப் பையனைப் போல சுற்றிக்கொண்டிருப்பார்.  இளைஞர்களிடம் மரத்தடியில், உணவகத்தில், நூலகத்தில், பாதையில் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார்.  எதைப் பற்றியும் பேச முடியும் அவரால்.  தீர்ந்து போகாத அளவுக்கு அவரிடம் ஜோக்குகளும் கதைகளும் கைவசம் இருந்தன.  அந்தக் கல்லூரியின் முதல்வரிடம், எனது நெருங்கிய நண்பர், எப்பொழுதும் சொல்லுவேன்: 'உங்கள் கல்லூரியின் ஆகச்சிறந்த பண்பே இந்த Professor-ஐ நியமித்ததுதான்.' மாணவர்களுக்கிடையே ஏற்படும் வேலைவாய்ப்பு குறித்த அவசங்களை பெருமளவில் இந்தப் பேராசிரியர் குறைத்தார் என்று எளிதாக சொல்ல முடியும்.  இள வயசுப் பெண்கள் அவரைச் சுற்றி எப்போதும் இருந்ததால், அவரும் மாணவனைப் போலவே தெரிந்தார். 

அத்தகைய பெருந்தகைகளை ஒவ்வொரு கல்லூரியும் முயன்றால் கண்டடைந்து விட முடியும்.  குறிப்பாக மருத்துவக் கல்லூரிகள்.  மாணவர்களாகச் சேருபவர்களை மருத்துவர்களாக வெளியில் அனுப்புவது இருக்கட்டும்; முதலில், மனிதர்களாக அவர்கள் வெளியில் வருவதை உறுதி செய்ய Professors of Ethics அங்கெல்லாம் தேவையாக இருக்கிறார்கள்.  
                
சரிதானே?

0 comments:

Post a Comment