சேத்துப்பட்டு ரசம்

| Tuesday, January 31, 2017
எத்தனையோ மகான்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள். பல தருணங்களில் மகான்கள் நம்மிடையே உலவுவது அவர்கள் இருக்கும்வரை தெரிவதில்லை.  முடிந்தவரை உலகை உய்வித்து, நேரம் வந்து நகர்ந்த பிறகுதான், தெரிந்தவர் யாரோ சொல்லி நமக்குப் புலப்படுகின்றனர்.  அலாவுதீனின் விளக்குப் போல தேய்க்கத் தேய்க்க பிம்பம் பெரிதாகிக் கொண்டே போகிறது.  கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கையும் அதைப்போலத்தான்.  ராமானுஜன் சேத்துப்பட்டில் இறந்தபோது வயது 32. பக்கத்தில் ஜானகி - மனைவி, வயது 20. இறந்த தேதியிலிருந்து கணக்குப் போட்டு முந்தைய எட்டு மாதங்கள்தான் இருவரும் சேர்ந்து நடத்திய குடித்தனம்.  அதுவும் ராமானுஜத்தின் அம்மா கோமளத்தம்மாளிடம் சண்டை பிடித்துக் கொண்டு வைத்தியம் பார்த்துக் கொள்ள ஜானகியைக் கூட்டிக்கொண்டு சேத்துப்பட்டிற்கு வந்திருந்தார் ராமானுஜம்.  பிடித்த ரசம் - சாம்பார் - சாதம் வடித்துக் கொடுத்த ஜானகியிடம் கதறியிருக்கிறார்.  இப்படியான உணவு தனக்கு லண்டன் வாசத்தின் போது கிடைத்திருந்தால் காசநோயால் பீடிக்கப்பட நேர்ந்திருக்காதே என்று கதறிய மனது அவருடையது. ராமானுஜத்தின் மறைவிற்குப் பின்பு 67 வருடங்கள் உயிர் வாழ்ந்து மறைந்திருக்கிறார் ஜானகி.  87-வது வயதில் கணவரின் சில புகைப்படங்களும் தேற்றங்களும் அவரிடம் காண்பிக்கப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.  தங்களது சேத்துப்பட்டு எட்டுமாத தாம்பத்தியம் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். 

ராமானுஜத்தின் நூற்றுக்கணக்கான தேற்றங்களைப் பற்றியும் அவரது லண்டன் பயணத்தைப் பற்றியும், லண்டன் பேராசிரியர் ஹார்டியைப் பற்றியும், இருவரின் சர்ச்சை மிகுந்த நட்பு பற்றியும் அதிகம் பேசப்பட்டு விட்டது.  ராமானுஜம் - ஜானகி - கோமளத்தம்மாள் என்ற முக்கோணம் எதுவும் பேசப்படாமலேயே போய்விட்டது.  ராமானுஜத்தைத் திருமணம் செய்துகொண்ட போது ஜானகிக்கு 10 வயது.  ராமானுஜத்திற்கு வயது 22. திருமணம் முடிந்தவுடன் பெற்றோருடனேயே இருத்தி வைக்கப்பட்டார் ஜானகி. அடுத்த பத்து வருடங்கள் கணவனை நேரடியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கப் படவில்லை .  ராமானுஜம் லண்டனில் இருக்கும்போது கோமளத்தம்மாளுடன் தங்கியிருந்த ஜானகிக்கு ராமானுஜம் எழுதிய எந்தக் கடிதமும் தரப்படவில்லை.  கோமளத்தம்மாள் தடுத்துவிட்டார்.  காரணம் அறியாமல் லண்டனில் ராமானுஜம் தவித்துக் கொண்டிருந்தார்.  ஜானகி தன்னை மறந்துவிட்டாள் என்றே நம்பினார் ராமானுஜம்.

கும்பகோணத்தில் பட்டப்படிப்பை முடிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்த ராமானுஜத்திற்கு நண்பரின் உதவியால் சென்னைத் துறைமுகத்தில் மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.  ஆனால் ரசம் சாம்பார் சாதம் கிடைக்கவில்லை.  தேற்றங்களாக எழுதித் தள்ளிக்கொண்டிருந்தார்.  இங்கிலாந்திற்கு தான் அனுப்பிய எந்தக் கடிதத்திற்கும் சர்வகலா சாலைப் பேராசிரியர்கள் எவரும் பதில் அனுப்பாததால் சோர்ந்து போயிருந்த ராமானுஜத்தின் தேற்றங்கள் அடங்கிய பார்சல் ஒன்று கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி அவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது.  ஹார்டியால் நம்பவே முடியவில்லை.  தேற்றங்களை நிரூபணம் செய்யுமாறு அவர் எழுதிய கடிதங்களை ராமானுஜம் சட்டை செய்யவில்லை.  அப்படி மெய்ப்பிப்பது தனது நேரத்தை வீணாக்கும் என்றும், தனது அத்தனை தேற்றங்களும் நிரூபணமாவதுதான் என்றும் பதில் எழுதினர் ராமானுஜம்.  தேற்றங்களை எழுதிப் பார்க்க தாட்கள் இல்லாமல் கிடைத்த கறுப்புத் தாள்களில் சிவப்பு மையைக் கொண்டு தேற்றங்களை எழுதிய ராமானுஜம், தனக்கு பணம் அனுப்பி லண்டனுக்கு அழைத்துக் கொள்ளுமாறு ஹார்டிக்குத் தெரிவித்தார். 

அப்படியாக அவரை அழைப்பதில் ஹார்டிக்கு சிரமங்கள் இருந்தாலும் அவரின் தேற்றங்களின் விசுவரூபத்தில் லண்டன் சென்றார் ராமானுஜம். ஆனால் அதற்கு முன்பாக குலதெய்வம் நாமக்கல் நாமகிரி அம்மனின் அனுமதி பெற தாயால் வற்புறுத்தப்பட்டதால் மூன்று நாட்கள் கோயிலில் படுத்திருந்து அம்மனால் அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதாக சொல்லி, ரசம் சாம்பார் சாதம் செய்வதற்கான மளிகைகளுடன் லண்டன் கிளம்பினார் ராமானுஜம். லண்டன் வாழ்க்கை இன்பம் துன்பம் இரண்டும் கொண்டதாக இருந்தது.  குளிர் தாங்கமுடியாததாக இருந்ததுடன், ரசம் சாம்பார் சாதமும் கிடைக்கவில்லை. ஹார்டியுடனான நட்பு பல முரண்களைக் கொண்டதாக இருந்தது.  இங்கிலாந்து ராமானுஜத்தின் மேதமையை உணர்ந்து கொண்டாலும் ஜாகை உவப்பாக இல்லை. 

குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ராமானுஜத்தை காசநோய் தாக்கியது.  ஒரு கட்டத்தில் அவசமாக திருப்பி அனுப்பப்பட்டார்.  தஞ்சாவூர் அல்லது சேத்துப்பட்டு மருத்துவமனைக்கு செல்லலாம் என்ற நிலையில் சேத்துப்பட்டை தேர்ந்தெடுத்தார் ராமானுஜம்.  ஜானகியை அழைத்துச் செல்வதற்கு கோமளத்தம்மாள் ஆட்சேபம் தெரிவிக்க முதன்முதலில் தாயை எதிர்த்துப் பேசுகிறார் ராமானுஜம்.
எட்டு மாதங்கள் ஜானகியுடன் குடித்தனம் செய்திருக்கிறார் ராமானுஜம். பெரும்பகுதி அழுகையிலேயே கழிந்தது.  "நீ என்னுடன் லண்டன் வந்திருந்து ரசம் சாம்பார் சாதம் செய்து தந்திருந்தால் காசநோய் என்னைத் தாக்கியிருக்காதே" என்று கதறிய வண்ணம் இருந்த ராமானுஜத்தை ஜானகியால் தேற்ற முடியவில்லை.  தன்னுடைய வாழ்நாள் சேமிப்பான ஐயாயிரம் ரூபாயை ஜானகியிடம் கொடுத்து வைரத் தோடு  வாங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். கோமளத்தம்மாளுக்கு ஏதாவது கொடுத்தாரா என்பது பற்றி தகவல் இல்லை. 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட் கனிகல் என்பவர் The Man Who Knew Infinity என்னும் பெயரில் ராமானுஜத்தின் சரிதையை எழுதி, அது உலகம் முழுக்க புகழ் பெற்றது.  நிறைய மொழிகளில் பெயர்க்கவும் பட்டது.  அண்மையில் அதே பெயரில் திரைப்படமும் வெளியாகியுள்ளது.  Slumdog Millionnaire படத்தில் நடித்த தேவ் பட்டேல் ராமானுஜமாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.  தமிழர்கள் எத்தனை பேர் அந்தப் படத்தை பார்த்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாக இந்த இருபது வருடங்களில் இரண்டாயிரம் தமிழர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்திருந்தாலே அதிகம்.  கோவை கேந்திரிய வித்யாலாயாவில் பணியாற்றிக் கொண்டிருந்தபொழுது, அங்கிருந்த நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க பெரிய தொகை ஒன்று ஒதுக்கப்பட்டது.  நூலகர் எனது நண்பர்.  ஆங்கிலப் புத்தகங்கள் தேர்வு செய்ய என்னை அனுப்பினார்.  அவினாசி சாலையில் இருந்த Landmark புத்தகக்கடையில் நிறைய புத்தகங்களைத் தேர்வு செய்தேன். அங்குதான் ராபர்ட் கனிகலின் The Man Who Knew Infinity-ஐ முதலில் பார்த்தேன்.  இரண்டொரு பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்த நான் அங்கேயே உட்கார்ந்து கிட்டத்தட்ட பாதிப்புத்தகத்தை முடிக்க வேண்டி வந்தது.  எளிமையான ஆனால் சுவராஸ்யமான ஆங்கிலத்தில் ராமானுஜத்தின் வாழ்க்கை கண்முன்னே விரிந்தது.  அதன்பிறகு என்னுடைய வற்புறுத்தலால் சகாக்கள் பலரும் அதைப் படித்தனர்.  இதுவரை நான் படித்திருக்கும் வாழ்க்கை சரிதங்கள் - சுயசரிதங்கள் ஆகியவற்றிலேயே மிகவும் சிலாக்கியமானவை என்று கருதுவது ரஸ்ஸலின் சுயசரிதம், Katherine Frank எழுதிய Indira மற்றும் கனிகலின் The Man Who Knew Infinity ஆகியவற்றைத்தான். இவைகளில் ததும்பும் புனைவுத்தன்மை எப்போதும் என்னை ஈர்த்தவாறே இருக்கிறது.  

ஜனவரி விகடன் தடம் இதழில் ராமானுஜம் பற்றிய படம் வெளிவந்திருக்கும் தருணத்தைக் கொண்டாடும் விதமாக இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஒரு நீண்ட கட்டுரையை எழுதியுள்ளார். மட்டுமல்லாது ராபர்ட் கனிகல் அவர்களுடன் நேர்காணல் ஒன்றையும் செய்துள்ளார்.  கனிகல் எழுவதற்கு எந்த முயற்சியும் அதுவரை செய்தவரல்ல.  ஆனால், 'அது' தன்னிடமிருந்து தானாகவே வருகிறது என்கிறார். ஹார்டி ராமானுஜத்தை "எப்படி உன்னால் நூற்றுக்கணக்கில் தேற்றங்களை உருவாக்க முடிகிறது?" என்று கேட்டபொழுது ராமானுஜமும் சொல்லியிருக்கிறார்: "தெரியவில்லை, ஆனால் அவைகள் தானாகவே வருகின்றன."

நல்லவை எல்லாம் நம்மிடமிருந்து "தானாகவே" வந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்!

0 comments:

Post a Comment