மருந்துச்சீட்டு

| Monday, January 16, 2017
சென்னை புத்தகக் காட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல சஞ்சிகைகளில் எழுத்தாளர்கள் தங்களை செதுக்கிய புத்தகங்களைப் பட்டியலிட்டு வருகிறார்கள்.  தமிழ் தி ஹிந்து தினமும் ஒரு எழுத்தாளரிடம் இப்படியான ஒரு பட்டியலைப் பெற்று பிரசுரிக்கிறது.  ரொம்பவுமே கைங்கர்யமானது இது.  படிக்க விரும்பும் ஒருவர் எதைப் படித்தால் நல்லது என்பதை அவைகளைப் படித்து அனுபவித்த ஒருவர் பரிந்துரைப்பது என்பது கால விரயத்தைத் தவிர்க்கும்.  என்னுடைய அனுபவத்தில் இப்படியான பரிந்துரைகள் மூலமே புத்தகங்களைப் தேடித் பிடித்திருக்கிறேன்.  பள்ளிப் பருவத்தில் ஆங்கில உபாத்தியாயர் சௌந்திரராஜன் அவர்களுக்கு பணிவிடைகள் செய்யும் பொருட்டு அன்னாரது வீட்டிலேயே மாலை நேரங்களை கழிப்பது வழக்கம்.  அவரது புத்தக அலமாரியை அவரும் நானும் மட்டுமே தொட முடியும்.  அவரது மகன் மற்றும் மகள்கள் அலமாரியை நெருங்க முடியாது. தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து ஒரு வித வன்மத்துடன் படித்துக் கொண்டிருப்பார்.  புதிது புதிதாக புத்தகங்கள் வாங்கிக் கொண்டேயிருப்பார்.  அந்த அலமாரியிலிருந்து என்ன மாதிரியான புத்தகங்களை எடுத்துப் படிக்கிறேன் என்பதையும் கவனித்தபடிக்கு இருப்பார்.  "இதைப் படிக்காதே! முதலில் இதை எடுத்துப் படி!" என்றபடி வேறு ஒரு புத்தகத்தை என்மீது சிரித்தபடியே வீசுவார்.  இரண்டு புத்தகங்களுக்குமான கருத்தியல் தொடர்ச்சி இரண்டையும் படித்த முடித்த பிறகு விளங்கும். 

ஒரு புத்தகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு அவரிடம் அதைப் பற்றி கேட்டுவிட முடியாது.  பரிந்துரைத்தவுடன் அதைப் பற்றி பேச மாட்டார்.  நான் முடித்து விட்டேன் என்று தெரிந்து கொண்ட பிறகு, தன்னுடைய அபிப்பிராயத்தை சொல்லுவார்.  என்னுடைய கருத்தையும் தெரிந்த நிலையில், விவாதம் ஒன்றைத் துவக்கி அந்தப் புத்தகத்தின் ரகசியங்களுக்குள் என்னை அழைத்துச் செல்வார்.  வைரமுத்துவின் "இதுவரை நான்" புத்தகத்தை படித்து முடித்த நிலையில், முதன்முறையாக நான் அவரிடம் கொடுத்து "படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்" என்ற போது, ஒரே இரவுக்குள் படித்து முடித்து விட்டு, அடுத்த நாள் மாலையில் அவரது கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தபொழுது, "டேய், நீ கொடுத்ததை படித்து விட்டேனப்பா! நீ என்ன நினைக்கிறாய்?" என்றார். "சார்! நான் படித்த சுயசரிதைகளிலேயே இது என்னை மிகவும் கவருகிறது" என்று சொல்ல, என்னை மெதுவாகத் தள்ளிவிட்டு சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து அலமாரிக்கு சென்று எனக்குத் தருவதற்காக ஆயத்தமாக வைத்திருந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையவர்களின் சுயசரிதமான "என் கதை" என்ற நூலைக் கொடுத்து, "இதைப் படித்துவிட்டு நாளைக்கு வா!" என்றார். 

அந்த இரவுக்குள் அதைப் படித்து முடித்த பிறகு, சுயசரிதம் என்றால் என்ன, அதை யார் எழுத முடியும், சுய சரிதத்தின் நோக்கம் என்னவாக இருக்க முடியும், சுய சரிதம் எழுதும் போழ்து தீர்மானித்துக் கொள்ள வேண்டிய மொழிநடை என்ன என்பது பற்றியெல்லாம் விளங்கியது. அடுத்த நாள் அவரிடம் வைரமுத்துவின் புத்தகத்தை அவரிடம் கொடுத்ததற்காக மன்னிப்பும், பிள்ளையவர்களின் புத்தகத்தை எனக்கு வாசிக்கப் பரிந்துரைத்ததற்காக நன்றியும் சொன்ன பொழுது, சிரித்துக் கொண்டே சொன்னார், "ஒரு எழுத்தாளனின் இடம் அவன் அந்த மொழியின் இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியாக இருக்கத் தகுதி வாய்ந்தவனா என்பதைப் பொறுத்தே அமையும்.  வைரமுத்து இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டும்.  வாசிப்பதில் நீயும் கூட ரொம்ப நடக்க வேண்டும், புரியுதா?" என்றார்.  அந்தப் பெருந்தகையை இந்தக் கட்டுரையின் பொருட்டு நினைக்கும் பொழுது, தொண்டையில் பந்து அடைக்கிறது.  என்னுடைய வாசிப்பை நேர்படுத்தியதில் சௌந்திரராஜன் ஐயா அவர்களுக்குப் பாரியமான பங்களிப்பு உண்டு.  ஐயாவின் நிழலிலியே ஒரு பதினைந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன் என்பது கிடைத்தற்கரிய பேறு.

பின்னர் கல்லூரியில் - சர்வகலா சாலையில் படிக்கும் போது, நூலகங்களில் புத்தகங்கள் எடுத்து வாசிக்கும் தருணங்களில் அவைகளுக்குப் பின்னால் இருக்கும் நூற்பட்டியலில் காணக்கிடைக்கும் புத்தகங்களை ஒரு தாளில் எழுதி வைத்து அவைகளைத் தேடிப் பிடித்து படிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.  சர்வகலா சாலையில் நடக்கும் ஆய்வுக் கூட்டங்களில் அறிஞர்கள் தங்களது உரைகளினூடே குறிப்பிடும் புத்தகங்களைப் பற்றிய குறிப்புகளோடு அவைகளைத் தேடிப் படித்தது பல வருடங்கள் நடந்த வண்ணம் இருந்தது.  ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்திற்கு கூட்டிச் செல்கிறது என்பது எனது சொந்த வாசிப்பு அனுபவம்.  எப்படி புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்கும் நேரத்தில், சிரித்துக் கொண்டு கொஞ்சம் திமிராக சொல்வதுண்டு: "இப்போதெல்லாம் நான் அவைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை.  அவைகள்தான் என்னைத் தேர்ந்தெடுக்கின்றன."  ஒரு வகையில் இது சரியான பதில்தான்.

சரி, கட்டுரையின் மையத்திற்கு வருகிறேன்.  கடந்த மூன்று தசாப்தங்களாக வாசிப்பவன் என்ற தகுதியில் நானும் ஒரு சிறிய பட்டியலை முன் வைக்கிறேன். இந்த வரிசையே சரி என்பதும் இல்லை; வேறு புத்தகங்கள் இந்த வரிசைக்கு முன்னே இருக்க முடியாது என்பதும் இல்லை.  விரல்கள் விசைப் பலகையைத் தட்டும்பொழுது மனக்கண்ணில் தோன்றும் புத்தகங்களே இவை.  இன்னொரு நாள் பட்டியலிடும் போது வேறு புத்தகங்கள் வரக்கூடும்.  விரல்களும் நாக்கும் தன்னிச்சையாக செயல்படுபவை. 

[1] மோகமுள், தி.ஜானகிராமன் (நாவல்)

[2] ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜெயகாந்தன் (நாவல்)

[3] என் கதை, நாமக்கல் வே ராமலிங்கம் பிள்ளை (சுய சரிதம்)

[4] கடல்புரத்தில், வண்ணநிலவன் (நாவல்)

[5] ஒருநாள், க.நா.சுப்ரமண்யம் (நாவல்)

[6] ஜே.ஜே.சில குறிப்புகள், சுந்தர ராமசாமி (நாவல்)

[7] ஒரு புளியமரத்தின் கதை, சுந்தர ராமசாமி (நாவல்)

[8] சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ.அதியமான் (அபுதினம்)

[9] அந்தக் காலத்தில் காப்பி இல்லை, ஆ.இரா.வேங்கடாசலபதி (அபுதினம்)

[10] சிதம்பர நினைவுகள், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (தமிழில் கே.வி.சைலஜா), (நினைவுக் குறிப்புகள்)

இந்தப் பட்டியலோடு யாரும் முரண்படத் தேவையில்லை.  ஏனென்றால், இந்தப் பட்டியலின் உள்ளீடு வாசகரைப் பொறுத்து மாறக்கூடியது. வேறு ஒரு நாளில், நானே வேறு ஒரு பட்டியலோடு வரக்கூடும். இந்த நிமிடத்தில் என்னுடைய நினைவுத் திறன் நான் படித்ததிலிருந்து வெளியே தள்ளியவையை இங்கே கொடுத்திருக்கிறேன்.  மேலும், பத்துக்கு மேலே தரக்கூடாது என்பதாலும் தகுதியானவை பல உள்ளே வரவில்லை. 


ஆரம்பிக்காதவர்கள் துவக்கலாம்.  போய்க் கொண்டிருப்பவர்கள் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.  ரொம்ப முன்னாலிருப்பவர்கள் தங்களது பட்டியலை வழியில் நட்டு வைக்கலாம்.  பரஸ்பர ஒத்தாசை மிகவும் முக்கியம்தானே?       

0 comments:

Post a Comment