சட்டத்தைப் பேசுவோர்

| Wednesday, July 27, 2016

சட்டத்தை தமிழில் எழுதுவது  சிரமமான காரியம்.  உயில் மற்றும் சொத்து  பத்திரம் இவைகளில்  கண்ணுறும் தமிழ் / ஆங்கிலம் நம்மை ஒவ்வொரு முறையும் பயமுறுத்தத்தான் செய்கிறது.  சட்ட ஆவணங்கள் - தமிழிலோ ஆங்கிலத்திலோ - தங்களுக்கென ஒரு பிரத்யேகமான மொழியை பயன்படுத்துகின்றன.  ஒரு சாதாரணனை இந்த வகையான மொழிப் பயன்பாடு அச்சுறுத்தத் தவறுவதேயில்லை.  பிரமாண பத்திரங்கள், எதிர் வாத உரைகள், மேல் முறையீட்டுப் மனுக்கள் போன்றவைகளையை முதன் முதலாக எழுதப் பணிக்கப்பட்ட போது, குருவித் தலையில் பனங்காயாகத்தான் உணர முடிந்தது.  ஏறத்தாழ இருபத்தொரு வருடங்கள் இதே பணிகளை செய்து வருகிற நிலையில், எனது பழைய பிரமாணங்களில் காணமுடிவது என்னவென்றால் வடிவ நேர்த்தி இல்லாமையைத்தான். நூறு வார்த்தைகள் செய்ய முடிகிற வேலையை ஒரே ஒரு கலைச்சொல் செய்து விடும். உயர் நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைகளை திரும்ப திரும்ப வாசிப்பது போல, இந்த விடயத்தில் உபயோகமளிப்பது வேறொன்றும் இல்லை.  முன்னாள் நீதியரசர்கள் கே டி தாமஸ், வி ஆர் கிருஷ்ண அய்யர், கட்ஜு, பால் வசந்தகுமார், சந்துரு போன்றோரின் தீர்ப்பாணைகள் மொழி சம்பந்தமான பல்வேறு நிபுணத்துவங்களை நமக்கு  கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருப்பன. 


London School of English எனும் புகழ் பெற்ற உயர் கல்வி நிறுவனம் சட்ட ஆங்கிலத்திற்கென மேற்படிப்புகளை நடத்துகிறது.  அங்கிருக்கும் உபாத்தியாயர்கள் கீழ்க்கண்ட பனிரெண்டு அறிவுரைகளைத் தருகிறார்கள்.  சட்ட மொழியைக் கையாண்டு  கொண்டிருப்பவர்களுக்கு, குறிப்பாக சட்ட ஆங்கிலத்தைக் கையாளுபவர்களுக்கு, இந்த அறிவுரைகள் ரொம்பவும் பயன்படும் என்று என் சொந்த அனுபவம் சொல்கிறது.  சட்ட ஆங்கிலத்தை சட்டை செய்ய  அவசியம் இல்லாதவர்கள் கூட, தேவையில்லாத பணத்தை வங்கியில் போட்டு வைப்பது போலவே, இவைகளைப் படித்து நேரம் வாய்க்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

[1] யாருக்காக நீங்கள் எழுதுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களது கட்சிக்காரர் நீங்கள் எழுதுவதை படித்துப் புரிந்து கொள்வது உங்களது தொழில் அபிவிருத்திக்கு அவசியம்.  உங்களது தொழில் சகா ஒருவருக்கு நீங்கள் எழுத நேருகிற பொழுது, உங்களிடம் இருக்கும் கலைச்சொற்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம்.  

[2] உங்களது எழுத்தில் மிக முக்கியமான அம்சம் "தெளிவு".  இதை உங்களது வரைவுகளில் சாதிக்க முடியவில்லை என்றால், நீங்கள் எழுதுவதே வீண்.  இரண்டு புத்தகங்கள் உங்களுக்கு மிகவும் உதவலாம். 
[2. a]  The A to Z to Alternative Words.
[2. b] The A to Z Guide to Legal Phrases.

[3] 'Juvenile court to try shooting defendant’ - என்ற வாக்கியத்திற்கு இரண்டு பொருட்கள் கொள்ள முடியும்.  சட்ட மொழியில் "try" என்றால் 'விசாரணைக்கு ஒரு விடயத்தை கொண்டு வருதல்' என்று அர்த்தம்.  மற்றபடி, சாதாரணமாக இந்த வார்த்தை "முயலுதல்" என்ற பொருளையும் தரும்.  எந்த வார்த்தையை எந்தப்  பொருளில் பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்வது முக்கியம்.

[4] சட்டப் பிரதி ஒன்றின் வடிவ அமைப்பு மற்றும் நிறுத்தக் குறிகள் பயன்பாடு ஆகியன மிகவும் இன்றியமையாதன ஆகும்.  உதாரணமாக, ஒப்பந்த வரைவு ஒன்றில் பிரிவுகளுக்கு இலக்கமிடுதல், உட்பிரிவுகளாக பிரித்தல், அவைகளுக்கு உட்பிரிவு இலக்கமிடுதல் என்பவை அந்தப்  பிரதியின் தெளிவை அதிகமாக்கும்.

[5] செய்வினை - செயப்பாட்டு வினை.  இதில் முன்னதையே கூடுமானவரை பயன்படுத்துதல் நலன் பயக்கும்.  'The goods shall be delivered' என்பதைக் காட்டிலும் 'The seller shall deliver the goods’  என்று எழுதலாம்.

[6]  சில வார்த்தைகளைப் பொறுத்த வரை, சாதாரண ஆங்கிலத்தில் ஒரு பொருளும் சட்ட ஆங்கிலத்தில் வேறு பொருளையும் தரக்  கூடியன.  காட்டாக, 'The seller shall deliver the goods’, என்ற வாக்கியத்தில் ‘shall’ என்ற துணை வினைச் சொல் "must" என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.  பொது ஆங்கிலத்தில் இதே வார்த்தை ஒன்றைப் பற்றிய யோசனையைத் தெரிவிக்கப் பயன்படுகிறது.  ‘Shall we go to the pub?’  'மது அருந்த செல்லலாமா?' என்பதில் ஒருவரின் யோசனை / பரிந்துரை முன்வைக்கப்படுகிறது.

[7]  இலக்கங்களில் கூடுதல் கவனம் தேவை.  அவைகள்  எண்களாலும் வார்த்தையாலும் எழுதப்பட வேண்டும்.  பல முக்கியமான வழக்குகள் இந்தப் பிரச்சினையால் சிக்கலாகியிருக்கின்றன.  தொள்ளாயிரமா அல்லது ஒன்பதாயிரமா என்பது தொடங்கி பல்வேறு சிக்கல்கள் இலக்கங்களால் உருவாகலாம்.

[8]  கூடுமானவரை வார்த்தைச் சுருக்கங்களைத் தவிர்க்கலாம்.  Don’t use contractions in formal legal writing என்று எழுதாமல் Do not use contractions in formal legal writing என்று எழுதுவது, பின் நேரக்கூடிய சங்கடங்களைத் தவிர்க்கும்.

[9] இதைப் போலவே, திகதிகளைக் குறிப்பதிலும் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சம்பிரதாயங்களை அனுசரிப்பது வரைவை எளிமையாக்கும். காட்டாக, 10/9/2015,  என்பது  10th September 2015 என்று பிரிட்டிஷ் ஆங்கிலத்திலும்,  9th October 2015 என அமெரிக்க ஆங்கிலத்திலும் குறிக்கலாகிறது.

[10]  சட்ட ஆங்கிலத்திற்கெனவே பல வினையடைகள் [adverbs] பிரத்தியேகமாக உண்டு.  காட்டாக, herein, hereby, henceforth, hereby, whereof,   wherein போன்றவைகள்.  படிப்பவர்க்கு பல குழப்பங்களை இவை போன்ற வினையடைகள் ஏற்படுத்தலாம்.  Herein என்பது in this document என்ற பொருளைத் தருவதாக இருந்தால் பின்னதை பயன்படுத்துவது  பயன்தரும்.

[11] சட்ட ஆங்கிலத்திற்கென தனியான அகராதி ஒன்றைக் கூடவே வைத்திருக்க வேண்டும்.  The Oxford Dictionary of Law அகராதி மேலான அந்தஸ்து கொண்டதென்பதால் பரிந்துரைக்கப்படுகிறது.

[12]  சட்ட மொழி ஒரு வழக்குரைஞரின் ஆயுதம்.  முதல் வரைவு, அடுத்த வரைவு, இன்னுமொரு வரைவு, என்று இறுதி வரைவுக்கு முன்னர் எழுதப்படும் பல வரைவுகளின் வழியாக  ஒரு வாதம் முன்வைக்கப் படுவது சட்ட ஆவணம் ஒன்றுக்கு அதி முக்கியமானது.

எனக்கு இந்த யோசனைகள் பலன் அளித்த வண்ணம் உள்ளன.  உங்களுக்கும் அப்படியே என்று எனது பட்சி சொல்கிறது! 
  

0 comments:

Post a Comment