சீக்கியர்களை தப்புவித்த நேருவின் பேரன்

| Tuesday, July 26, 2016
இந்திய அரசியல் விடுதலைக்குப் பின்னான ஒவ்வொரு பத்தாண்டுகளும் பாரியமான ஒரு சமூக - அரசியல் - பண்பாட்டு மாற்றத்தைத் தோற்றுவித்த வண்ணமே உள்ளன. முதல் பத்தாண்டுகள் இந்தியா தன்னை சகோதரியிடமிருந்து வெட்டிக் கொண்டதின் விளைவை பல்வேறு தளங்களில் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஐந்தாண்டு திட்டங்கள் முதல் பல்வேறு செயல்முறைகளின் வழியாக தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை; கல்வி மற்றும் உணவு உற்பத்தியில் தன்னிறைவுக்கான போராட்டம், இவைகளுக்குப் பிறகான நத்தை வேகத்தில் நகர முற்பட்ட தொழில் அபிவிருத்தி என்பதாக முதல் பத்தாண்டுகள் அமைந்தன. முதல் தலைமுறை தலைவர்கள் நேரு, சாஸ்திரி உள்ளிட்டோர் நாட்டை நடத்தினர். அடுத்த பத்தாண்டுகள் இந்திய அரசியலைப் பொறுத்த அளவில் தலைமை மாற்றங்கள் நிறைந்ததாக ஆகிப்போனது. 1964ம் ஆண்டு நேரு மறைந்தவுடன் நடந்த அரசியல் சித்து விளையாட்டுக்கள் முடிவில் பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட லால் பகதூர் பிரதம அமைச்சரானார். ஆனால் மிக விரைவில் தாஷ் கெண்ட்டில் அவர் மர்மமான முறையில் இறந்துபோய் விட, நேருவின் மகள் திருமதி இந்திரா பெரோஸ் காந்தி அவர்கள் பிரதமரானார்.

யாருக்கும் எளிதில் தெரிந்திராத ராஜ் நாராயண் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடர்ந்த தேர்தல் முறைகேட்டு வழக்கில் இந்திரா காந்தியின் அரசியல் நாணயம் கேள்விக்குள்ளாக்கப்பட, 1975ம் ஆண்டு எமர்ஜென்சி என்றழைக்கப்படும் "மிசா" திருமதி காந்தியால் பிரகடனம் செய்யப்பட்டது. காந்தியின் இரண்டு மகன்களில் இளையவரான சஞ்சய் காந்தி சர்ச்சைக்குரிய மனிதராக வலம் வந்தது இந்தக் காலகட்டத்தில்தான். தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்ட கார் கம்பெனி ஒன்றை நிறுவி விட மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார் சஞ்சய். திருமணமாகாத சஞ்சய் காந்தியை காதலிக்கவும் கல்யாணம் செய்து கொள்ளவும் புது தில்லியின் கண்னாட் பிளேஸ் முழுக்க சின்னப் பெண்கள் காத்திருக்க, ஒரு விளம்பத்தின் மூலம் ஏற்கனவே சர்ச்சையில் அடிபட்டுக்கொண்டிருந்த பஞ்சாபி பெண்ணான மேனகாவிற்கு அடித்தது அதிர்ஷ்டம். உண்மையில் மேனகா ரொம்பவும் செல்வாக்கான ஒரு பஞ்சாபிக் குடும்பத்தின் வாரிசு; இருந்தும் அவர் பல்வேறு விமரிசனத்திற்கு ஆளாக வேண்டியிருந்தது. ஆனால், இத்தாலி நாட்டில் ஒரு மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த சோனியா இந்திரா காந்தியின் மூத்த மகனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தும் வெளிநாட்டுப் பின்புலம் கொண்டவர் என்பதால் இந்திய ஊடகங்களின் கண்களிலிருந்து தனது சாதாரணத்தை மறைக்க முடிந்தது.

மிசா காலத்தில் உண்மையில் நாட்டின் அதிகாரம் திருமதி காந்தியின் கைகளில்தான் இருந்ததா என்பது கேள்விக்குரிய விஷயம் என்று பல அரசியல் நோக்கர்கள் அபிப்பிராயப் படுகின்றனர். ஆர்கே தவன், சஞ்சய் காந்தியின் நண்பர்கள் அம்பிகா சோனி, ராஜேஷ் பைலட் போன்றோரிடமே அதிகாரம் குவிந்து கிடந்தது. எந்த முகாந்திரமும் இல்லாமலேயே யாரையும் கைது செய்து சிறையில் அடைத்து கணக்கு தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் பல அரசியல் பழிவாங்கல்கள் தினம் தினம் நடந்து வந்தன. சஞ்சய் காந்தி என்ற மனிதர் தனி மனித சக்தி என்றால் என்ன என்பதை இந்தியர்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தார். புது தில்லியில் சேரிகள் நிர்மூலமாக்கப்பட்டன. வயோதிகர் - இளைஞர் என்ற பேதமின்றி அனைவருக்கும் குடும்பக் கட்டுப்பாடு அறுவைகள் நடத்தப பெற்றன. முடிந்ததும் ஹார்லிக்ஸ் பாட்டலும் கொஞ்சம் பணமும் கொடுத்து வீட்டிற்கு நொண்டிக் கொண்டே அனுப்பி வைக்கப்பட்டார்கள். இருந்தும் இந்தியாவின் மக்கள் தொகை கணக்கில்லாமல் பெருகிக் கொண்டே போனது. ஜெயப்ரகாஷ் நாராயண், தேசாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் சில வருடங்கள் கம்பி எண்ண வேண்டியிருந்தது. உண்மையில், இந்திய அரசியல் விடுதலைக்குப் பின்னான தசாப்தங்களில் எழுபதுகள் மிகவும் பரபரப்பான பத்தாண்டுகள். சந்தேகமேயில்லை.

எண்பதுகளின் துவக்கம் உலக அளவில் சார்லஸ் டயானா திருமணத்தோடும் சஞ்சய் காந்தியின் விமான விபத்து மரணத்தோடும் துவங்கியது. Operation Blue Star என்பதில் வேகம் பிடித்த இந்த சகாப்தம் 1984 அக்டோபர் மாதம் கடைசி நாளில் தறிகெட்டு அங்குமிங்குமாக ஓடத்துவங்கியது. திருமதி காந்தி அவர்கள் தன்னுடைய பாதுகாவலர்களாலேயே சுட்டெறியப்பட்டார். தொடர்ந்த நாட்கள் புது தில்லியின் வரலாற்றில் கரை படிந்தவை. ஹெச் கே எல் பகத் என்னும் காங்கிரஸ் இரண்டாம் நிலைத் தலைவரால் குண்டர்களின் கூட்டம் ஒன்று திரட்டப்பட்டு புது தில்லியில் இருந்த சீக்கியர்களின் தலைகள் உருட்டப்பட்டன. அரசு கணக்கின் படியே 3000 சீக்கியர்கள் மூன்று நாட்களில் கொல்லப்பட்டனர். பகத் தலைமை தாங்கி நடத்திய வெறியாட்டம் இது. இத்தகைய வீரச்செயலுக்காக அவருக்கு சில பதவிகள் தரப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தில் இருந்து வந்திருந்த காங்கிரஸ்காரர் பிரணாப் முகர்ஜீ அவர்கள் இடைக்கால பிரதமராக பதவியேற்றுக்கொண்ட போதிலும், திருமதி காந்தியின் மூத்த மகன் ராஜிவ் காந்தி மற்றவர்களால் மனமாற்றம் செய்யப்பட்டு பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். புது தில்லி ராஜீவின் நண்பர்களால் நிறைந்தது. பழனியப்பன் சிதம்பரம், அருண் சிங், அருண் நேரு, சாம் பிட்ரோடா, விபி சிங், மாதவ்ராவ் சிந்தியா மற்றும் ராஜீவின் டூன் பள்ளி மற்றும் கேம்பிரிட்ஜ் சர்வகலா சாலை நண்பர்கள் தில்லியின் அதிகார வர்க்கமாக எளிதில் மாறிப் போனார்கள். முதல் ஒன்றரை வருடம் எல்லாம் நல்லபடியாக போனது போலத்தான் இருந்தது. அடுத்து வந்த வருடங்களில் Bofors என்ற வார்த்தை இந்திய அரசியலை சுழற்றியடித்தது. அந்த ஒற்றை வார்த்தை ராஜீவை வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

தொண்ணூறுகளின் ஆரம்ப வருடத்தில் விஸ்வநாத் பிரதாப் சிங் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக தெரிந்தார். மண்டல் கமிஷன் அறிக்கை பரபரப்பாக அமுல்படுத்தப் பட்டது. நரேந்திர மோடியிடம் பின்னாளில் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை இழந்த எல் கே அத்வானி சும்மாயிருக்க முடியாமல் தேசத்தை மதத்தின் அடிப்படையில் பிளக்க முற்பட்டு ரதயாத்திரை கிளம்பினார். பிறகு, மஸ்ஜித் இடிக்கப்பட்டது. கோயில் கட்ட முடியவில்லை என்பது வேறு விஷயம். அடுத்த பிரதமர் ராஜீவதானா என்று கொஞ்சம் பேர்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த தேர்தல், தேர்தல் கமிஷனர் டி. என். சேஷனால் ஐந்து கட்டங்களாக நடத்தப்பட, இரண்டாவது கட்டம் முடிந்திருந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு பத்து மணி அளவில் சற்று குள்ளமாகவும் கருப்பாகவும் கண்ணாடி போட்டபடி புகைப்படங்களில் அடையாளம் காணப்பட்ட சின்னப் பெண் ஒருத்தியால் "கணக்கு தீர்க்கப்பட்டார்" ராஜிவ்.

பத்து மணி அளவில் கொல்லப்பட்டிருந்தார் அவர். புது தில்லியில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் குண்டர்கள் கூட்டம் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அவர் வீட்டு முன்பு கூடியது. ஊடகவியலாளர்கள் குவிந்திருந்தனர். கொஞ்ச நேரத்தில் பெரிய குண்டர் கூட்டம் ஒன்று ஓடி வர அதன் முன்பு மறுபடியும் பிரசன்னமாகியிருந்தார் ஹெச்.கே.எல். பகத். "சீக்கியர்தான் ராஜீவை கொன்று விட்டனர்" என்று வெறிபிடித்தவாறு குரலிட்டு வந்த பகத்திடம் அங்கிருந்த பத்திரிகையாளரும் ராஜீவின் நண்பருமான தவ்லீன் சிங் "கண்டிப்பாக அது சீக்கியர்கள்தானா?" என்று கேட்க, பகத் நெளிந்துகொண்டே சங்கடத்தில் சிரிப்பை உதிர்த்தவாறு "அது அவர்களாகத்தான் இருக்க வேண்டும்" என்றாராம். அந்த புரளி மட்டும் தில்லியில் அப்போது பரவியிருக்குமானால் அங்கு ஒரு சீக்கியர் கூட உயிருடன் தப்பியிருக்க முடியாது. உடனடியாக, கொலையாளி சீக்கியர் இல்லை என்ற செய்தி சொல்லப்பட தவ்லீன் சிங் பெருமூச்சு விட்டிருக்கிறார்.

தவ்லீன் சிங் ஒரு சீக்கியர்.

0 comments:

Post a Comment