சர்வம் நாசம் மயம்

| Thursday, July 28, 2016
 ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார்.  "என்னை யாரும் ஓட்டளிக்கும் படி கட்டாயப்படுத்த முடியாது.  ஓட்டளிக்க தகுதியான வேட்பாளரும் கட்சிகளும் அரசியலில் நிலவும் சூழலில் நான் வாக்களிப்பேன்." துணிந்து நல்லவர்களாக மாறவும் அப்படியே நிலைக்கவும் நம்மில் பலருக்கு மனமுண்டு. ஆனால் பொழுது முழுவதும் சகதியில் நடக்க  வேண்டியிருக்கும் நிகழ்வில், கால்களை சுத்தமாக வைத்திருக்க எப்படி சாத்தியமாகும்?  "நான் யார் என்பதை நீதான் முடிவு செய்கிறாய்" என்பதாகத்தானே நிதர்சனம் நமக்கு வாய்த்திருக்கிறது.  


அங்கு எல்லாமே தேவலோகத்தில் இருப்பது போலவே இருந்தது. தேவனின் தோட்டமேதான் அது.  எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே எல்லாமும் இருந்தன.  அவனும் அவளும் ஆசிர்வதிக்கப் பட்டவர்களே. சுபிட்சமும் ஆனந்தமும் மட்டுமே நிலவின.  அன்பைத் தவிரவும் பகிர்ந்து மகிழ அங்கு வேறொன்றும் இல்லவே இல்லை.  பின்னால் கொடுமையின் - துரோகத்தின் - தீமையின் உருவாக மாறிப்போனவர்களும் அன்று அன்பே உருவாகத்தான் இருந்தார்கள்.  


இடையில் என்னென்னமோ நடந்து விட்டது.  யாரோ எதையோ சொன்னதை நம்பியதால், யார் பூக்களை நீட்டுகிறார்கள், யார் கத்தியை மறைத்து நம்மை அணைக்கிறார்கள் என்று தீர்மானமாக சொல்ல முடியவில்லை.   உறவே ஊறு தருவதால், துரோகத்தை நட்பென்று நம்பிக்  கெட வேண்டிய அவநிலை நம் எல்லோருக்கும் வாய்த்து விட்டதல்லவா?   நாமும் பயப்படுகிறோம்; நம்மைக் கண்டும் அச்சுறுகிறார்கள். மனிதர்களும் நாய்களும் பன்றிகளும் காகங்களும் ஒன்றைப் போலவே ஒன்று தெரிகிறது.  எல்லாமே .ஒன்றுதான். எல்லாமே கெட்டதுதான்.  நாசம் நம்மை சூழ்ந்து விட்டது.  மேய்ப்பர்கள் நம்மைக் கைவிட்டனர்.  மீட்சி இல்லவே இல்லை.  

இதைத்தான் வில்லியம் பிளேக் இப்படி எழுதுகிறார்.

The Defiled Sanctuary 
by William Blake

I saw a chapel all of gold 
That none did dare to enter in, 
And many weeping stood without, 
Weeping, mourning, worshipping. 

I saw a serpent rise between 
The white pillars of the door, 
And he forced and forced and forced 
Till down the golden hinges tore: 

And along the pavement sweet, 
Set with pearls and rubies bright, 
All his shining length he drew, 
Till upon the altar white 

Vomited his poison out 
On the bread and on the wine. 
So I turned into a sty, 
And laid me down among the swine.

சட்டத்தைப் பேசுவோர்

| Wednesday, July 27, 2016

சட்டத்தை தமிழில் எழுதுவது  சிரமமான காரியம்.  உயில் மற்றும் சொத்து  பத்திரம் இவைகளில்  கண்ணுறும் தமிழ் / ஆங்கிலம் நம்மை ஒவ்வொரு முறையும் பயமுறுத்தத்தான் செய்கிறது.  சட்ட ஆவணங்கள் - தமிழிலோ ஆங்கிலத்திலோ - தங்களுக்கென ஒரு பிரத்யேகமான மொழியை பயன்படுத்துகின்றன.  ஒரு சாதாரணனை இந்த வகையான மொழிப் பயன்பாடு அச்சுறுத்தத் தவறுவதேயில்லை.  பிரமாண பத்திரங்கள், எதிர் வாத உரைகள், மேல் முறையீட்டுப் மனுக்கள் போன்றவைகளையை முதன் முதலாக எழுதப் பணிக்கப்பட்ட போது, குருவித் தலையில் பனங்காயாகத்தான் உணர முடிந்தது.  ஏறத்தாழ இருபத்தொரு வருடங்கள் இதே பணிகளை செய்து வருகிற நிலையில், எனது பழைய பிரமாணங்களில் காணமுடிவது என்னவென்றால் வடிவ நேர்த்தி இல்லாமையைத்தான். நூறு வார்த்தைகள் செய்ய முடிகிற வேலையை ஒரே ஒரு கலைச்சொல் செய்து விடும். உயர் நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைகளை திரும்ப திரும்ப வாசிப்பது போல, இந்த விடயத்தில் உபயோகமளிப்பது வேறொன்றும் இல்லை.  முன்னாள் நீதியரசர்கள் கே டி தாமஸ், வி ஆர் கிருஷ்ண அய்யர், கட்ஜு, பால் வசந்தகுமார், சந்துரு போன்றோரின் தீர்ப்பாணைகள் மொழி சம்பந்தமான பல்வேறு நிபுணத்துவங்களை நமக்கு  கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருப்பன. 


London School of English எனும் புகழ் பெற்ற உயர் கல்வி நிறுவனம் சட்ட ஆங்கிலத்திற்கென மேற்படிப்புகளை நடத்துகிறது.  அங்கிருக்கும் உபாத்தியாயர்கள் கீழ்க்கண்ட பனிரெண்டு அறிவுரைகளைத் தருகிறார்கள்.  சட்ட மொழியைக் கையாண்டு  கொண்டிருப்பவர்களுக்கு, குறிப்பாக சட்ட ஆங்கிலத்தைக் கையாளுபவர்களுக்கு, இந்த அறிவுரைகள் ரொம்பவும் பயன்படும் என்று என் சொந்த அனுபவம் சொல்கிறது.  சட்ட ஆங்கிலத்தை சட்டை செய்ய  அவசியம் இல்லாதவர்கள் கூட, தேவையில்லாத பணத்தை வங்கியில் போட்டு வைப்பது போலவே, இவைகளைப் படித்து நேரம் வாய்க்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

[1] யாருக்காக நீங்கள் எழுதுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களது கட்சிக்காரர் நீங்கள் எழுதுவதை படித்துப் புரிந்து கொள்வது உங்களது தொழில் அபிவிருத்திக்கு அவசியம்.  உங்களது தொழில் சகா ஒருவருக்கு நீங்கள் எழுத நேருகிற பொழுது, உங்களிடம் இருக்கும் கலைச்சொற்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம்.  

[2] உங்களது எழுத்தில் மிக முக்கியமான அம்சம் "தெளிவு".  இதை உங்களது வரைவுகளில் சாதிக்க முடியவில்லை என்றால், நீங்கள் எழுதுவதே வீண்.  இரண்டு புத்தகங்கள் உங்களுக்கு மிகவும் உதவலாம். 
[2. a]  The A to Z to Alternative Words.
[2. b] The A to Z Guide to Legal Phrases.

[3] 'Juvenile court to try shooting defendant’ - என்ற வாக்கியத்திற்கு இரண்டு பொருட்கள் கொள்ள முடியும்.  சட்ட மொழியில் "try" என்றால் 'விசாரணைக்கு ஒரு விடயத்தை கொண்டு வருதல்' என்று அர்த்தம்.  மற்றபடி, சாதாரணமாக இந்த வார்த்தை "முயலுதல்" என்ற பொருளையும் தரும்.  எந்த வார்த்தையை எந்தப்  பொருளில் பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்வது முக்கியம்.

[4] சட்டப் பிரதி ஒன்றின் வடிவ அமைப்பு மற்றும் நிறுத்தக் குறிகள் பயன்பாடு ஆகியன மிகவும் இன்றியமையாதன ஆகும்.  உதாரணமாக, ஒப்பந்த வரைவு ஒன்றில் பிரிவுகளுக்கு இலக்கமிடுதல், உட்பிரிவுகளாக பிரித்தல், அவைகளுக்கு உட்பிரிவு இலக்கமிடுதல் என்பவை அந்தப்  பிரதியின் தெளிவை அதிகமாக்கும்.

[5] செய்வினை - செயப்பாட்டு வினை.  இதில் முன்னதையே கூடுமானவரை பயன்படுத்துதல் நலன் பயக்கும்.  'The goods shall be delivered' என்பதைக் காட்டிலும் 'The seller shall deliver the goods’  என்று எழுதலாம்.

[6]  சில வார்த்தைகளைப் பொறுத்த வரை, சாதாரண ஆங்கிலத்தில் ஒரு பொருளும் சட்ட ஆங்கிலத்தில் வேறு பொருளையும் தரக்  கூடியன.  காட்டாக, 'The seller shall deliver the goods’, என்ற வாக்கியத்தில் ‘shall’ என்ற துணை வினைச் சொல் "must" என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.  பொது ஆங்கிலத்தில் இதே வார்த்தை ஒன்றைப் பற்றிய யோசனையைத் தெரிவிக்கப் பயன்படுகிறது.  ‘Shall we go to the pub?’  'மது அருந்த செல்லலாமா?' என்பதில் ஒருவரின் யோசனை / பரிந்துரை முன்வைக்கப்படுகிறது.

[7]  இலக்கங்களில் கூடுதல் கவனம் தேவை.  அவைகள்  எண்களாலும் வார்த்தையாலும் எழுதப்பட வேண்டும்.  பல முக்கியமான வழக்குகள் இந்தப் பிரச்சினையால் சிக்கலாகியிருக்கின்றன.  தொள்ளாயிரமா அல்லது ஒன்பதாயிரமா என்பது தொடங்கி பல்வேறு சிக்கல்கள் இலக்கங்களால் உருவாகலாம்.

[8]  கூடுமானவரை வார்த்தைச் சுருக்கங்களைத் தவிர்க்கலாம்.  Don’t use contractions in formal legal writing என்று எழுதாமல் Do not use contractions in formal legal writing என்று எழுதுவது, பின் நேரக்கூடிய சங்கடங்களைத் தவிர்க்கும்.

[9] இதைப் போலவே, திகதிகளைக் குறிப்பதிலும் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சம்பிரதாயங்களை அனுசரிப்பது வரைவை எளிமையாக்கும். காட்டாக, 10/9/2015,  என்பது  10th September 2015 என்று பிரிட்டிஷ் ஆங்கிலத்திலும்,  9th October 2015 என அமெரிக்க ஆங்கிலத்திலும் குறிக்கலாகிறது.

[10]  சட்ட ஆங்கிலத்திற்கெனவே பல வினையடைகள் [adverbs] பிரத்தியேகமாக உண்டு.  காட்டாக, herein, hereby, henceforth, hereby, whereof,   wherein போன்றவைகள்.  படிப்பவர்க்கு பல குழப்பங்களை இவை போன்ற வினையடைகள் ஏற்படுத்தலாம்.  Herein என்பது in this document என்ற பொருளைத் தருவதாக இருந்தால் பின்னதை பயன்படுத்துவது  பயன்தரும்.

[11] சட்ட ஆங்கிலத்திற்கென தனியான அகராதி ஒன்றைக் கூடவே வைத்திருக்க வேண்டும்.  The Oxford Dictionary of Law அகராதி மேலான அந்தஸ்து கொண்டதென்பதால் பரிந்துரைக்கப்படுகிறது.

[12]  சட்ட மொழி ஒரு வழக்குரைஞரின் ஆயுதம்.  முதல் வரைவு, அடுத்த வரைவு, இன்னுமொரு வரைவு, என்று இறுதி வரைவுக்கு முன்னர் எழுதப்படும் பல வரைவுகளின் வழியாக  ஒரு வாதம் முன்வைக்கப் படுவது சட்ட ஆவணம் ஒன்றுக்கு அதி முக்கியமானது.

எனக்கு இந்த யோசனைகள் பலன் அளித்த வண்ணம் உள்ளன.  உங்களுக்கும் அப்படியே என்று எனது பட்சி சொல்கிறது! 
  

சீக்கியர்களை தப்புவித்த நேருவின் பேரன்

| Tuesday, July 26, 2016
இந்திய அரசியல் விடுதலைக்குப் பின்னான ஒவ்வொரு பத்தாண்டுகளும் பாரியமான ஒரு சமூக - அரசியல் - பண்பாட்டு மாற்றத்தைத் தோற்றுவித்த வண்ணமே உள்ளன. முதல் பத்தாண்டுகள் இந்தியா தன்னை சகோதரியிடமிருந்து வெட்டிக் கொண்டதின் விளைவை பல்வேறு தளங்களில் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஐந்தாண்டு திட்டங்கள் முதல் பல்வேறு செயல்முறைகளின் வழியாக தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை; கல்வி மற்றும் உணவு உற்பத்தியில் தன்னிறைவுக்கான போராட்டம், இவைகளுக்குப் பிறகான நத்தை வேகத்தில் நகர முற்பட்ட தொழில் அபிவிருத்தி என்பதாக முதல் பத்தாண்டுகள் அமைந்தன. முதல் தலைமுறை தலைவர்கள் நேரு, சாஸ்திரி உள்ளிட்டோர் நாட்டை நடத்தினர். அடுத்த பத்தாண்டுகள் இந்திய அரசியலைப் பொறுத்த அளவில் தலைமை மாற்றங்கள் நிறைந்ததாக ஆகிப்போனது. 1964ம் ஆண்டு நேரு மறைந்தவுடன் நடந்த அரசியல் சித்து விளையாட்டுக்கள் முடிவில் பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட லால் பகதூர் பிரதம அமைச்சரானார். ஆனால் மிக விரைவில் தாஷ் கெண்ட்டில் அவர் மர்மமான முறையில் இறந்துபோய் விட, நேருவின் மகள் திருமதி இந்திரா பெரோஸ் காந்தி அவர்கள் பிரதமரானார்.

யாருக்கும் எளிதில் தெரிந்திராத ராஜ் நாராயண் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடர்ந்த தேர்தல் முறைகேட்டு வழக்கில் இந்திரா காந்தியின் அரசியல் நாணயம் கேள்விக்குள்ளாக்கப்பட, 1975ம் ஆண்டு எமர்ஜென்சி என்றழைக்கப்படும் "மிசா" திருமதி காந்தியால் பிரகடனம் செய்யப்பட்டது. காந்தியின் இரண்டு மகன்களில் இளையவரான சஞ்சய் காந்தி சர்ச்சைக்குரிய மனிதராக வலம் வந்தது இந்தக் காலகட்டத்தில்தான். தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்ட கார் கம்பெனி ஒன்றை நிறுவி விட மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார் சஞ்சய். திருமணமாகாத சஞ்சய் காந்தியை காதலிக்கவும் கல்யாணம் செய்து கொள்ளவும் புது தில்லியின் கண்னாட் பிளேஸ் முழுக்க சின்னப் பெண்கள் காத்திருக்க, ஒரு விளம்பத்தின் மூலம் ஏற்கனவே சர்ச்சையில் அடிபட்டுக்கொண்டிருந்த பஞ்சாபி பெண்ணான மேனகாவிற்கு அடித்தது அதிர்ஷ்டம். உண்மையில் மேனகா ரொம்பவும் செல்வாக்கான ஒரு பஞ்சாபிக் குடும்பத்தின் வாரிசு; இருந்தும் அவர் பல்வேறு விமரிசனத்திற்கு ஆளாக வேண்டியிருந்தது. ஆனால், இத்தாலி நாட்டில் ஒரு மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த சோனியா இந்திரா காந்தியின் மூத்த மகனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தும் வெளிநாட்டுப் பின்புலம் கொண்டவர் என்பதால் இந்திய ஊடகங்களின் கண்களிலிருந்து தனது சாதாரணத்தை மறைக்க முடிந்தது.

மிசா காலத்தில் உண்மையில் நாட்டின் அதிகாரம் திருமதி காந்தியின் கைகளில்தான் இருந்ததா என்பது கேள்விக்குரிய விஷயம் என்று பல அரசியல் நோக்கர்கள் அபிப்பிராயப் படுகின்றனர். ஆர்கே தவன், சஞ்சய் காந்தியின் நண்பர்கள் அம்பிகா சோனி, ராஜேஷ் பைலட் போன்றோரிடமே அதிகாரம் குவிந்து கிடந்தது. எந்த முகாந்திரமும் இல்லாமலேயே யாரையும் கைது செய்து சிறையில் அடைத்து கணக்கு தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் பல அரசியல் பழிவாங்கல்கள் தினம் தினம் நடந்து வந்தன. சஞ்சய் காந்தி என்ற மனிதர் தனி மனித சக்தி என்றால் என்ன என்பதை இந்தியர்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தார். புது தில்லியில் சேரிகள் நிர்மூலமாக்கப்பட்டன. வயோதிகர் - இளைஞர் என்ற பேதமின்றி அனைவருக்கும் குடும்பக் கட்டுப்பாடு அறுவைகள் நடத்தப பெற்றன. முடிந்ததும் ஹார்லிக்ஸ் பாட்டலும் கொஞ்சம் பணமும் கொடுத்து வீட்டிற்கு நொண்டிக் கொண்டே அனுப்பி வைக்கப்பட்டார்கள். இருந்தும் இந்தியாவின் மக்கள் தொகை கணக்கில்லாமல் பெருகிக் கொண்டே போனது. ஜெயப்ரகாஷ் நாராயண், தேசாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் சில வருடங்கள் கம்பி எண்ண வேண்டியிருந்தது. உண்மையில், இந்திய அரசியல் விடுதலைக்குப் பின்னான தசாப்தங்களில் எழுபதுகள் மிகவும் பரபரப்பான பத்தாண்டுகள். சந்தேகமேயில்லை.

எண்பதுகளின் துவக்கம் உலக அளவில் சார்லஸ் டயானா திருமணத்தோடும் சஞ்சய் காந்தியின் விமான விபத்து மரணத்தோடும் துவங்கியது. Operation Blue Star என்பதில் வேகம் பிடித்த இந்த சகாப்தம் 1984 அக்டோபர் மாதம் கடைசி நாளில் தறிகெட்டு அங்குமிங்குமாக ஓடத்துவங்கியது. திருமதி காந்தி அவர்கள் தன்னுடைய பாதுகாவலர்களாலேயே சுட்டெறியப்பட்டார். தொடர்ந்த நாட்கள் புது தில்லியின் வரலாற்றில் கரை படிந்தவை. ஹெச் கே எல் பகத் என்னும் காங்கிரஸ் இரண்டாம் நிலைத் தலைவரால் குண்டர்களின் கூட்டம் ஒன்று திரட்டப்பட்டு புது தில்லியில் இருந்த சீக்கியர்களின் தலைகள் உருட்டப்பட்டன. அரசு கணக்கின் படியே 3000 சீக்கியர்கள் மூன்று நாட்களில் கொல்லப்பட்டனர். பகத் தலைமை தாங்கி நடத்திய வெறியாட்டம் இது. இத்தகைய வீரச்செயலுக்காக அவருக்கு சில பதவிகள் தரப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தில் இருந்து வந்திருந்த காங்கிரஸ்காரர் பிரணாப் முகர்ஜீ அவர்கள் இடைக்கால பிரதமராக பதவியேற்றுக்கொண்ட போதிலும், திருமதி காந்தியின் மூத்த மகன் ராஜிவ் காந்தி மற்றவர்களால் மனமாற்றம் செய்யப்பட்டு பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். புது தில்லி ராஜீவின் நண்பர்களால் நிறைந்தது. பழனியப்பன் சிதம்பரம், அருண் சிங், அருண் நேரு, சாம் பிட்ரோடா, விபி சிங், மாதவ்ராவ் சிந்தியா மற்றும் ராஜீவின் டூன் பள்ளி மற்றும் கேம்பிரிட்ஜ் சர்வகலா சாலை நண்பர்கள் தில்லியின் அதிகார வர்க்கமாக எளிதில் மாறிப் போனார்கள். முதல் ஒன்றரை வருடம் எல்லாம் நல்லபடியாக போனது போலத்தான் இருந்தது. அடுத்து வந்த வருடங்களில் Bofors என்ற வார்த்தை இந்திய அரசியலை சுழற்றியடித்தது. அந்த ஒற்றை வார்த்தை ராஜீவை வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

தொண்ணூறுகளின் ஆரம்ப வருடத்தில் விஸ்வநாத் பிரதாப் சிங் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக தெரிந்தார். மண்டல் கமிஷன் அறிக்கை பரபரப்பாக அமுல்படுத்தப் பட்டது. நரேந்திர மோடியிடம் பின்னாளில் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை இழந்த எல் கே அத்வானி சும்மாயிருக்க முடியாமல் தேசத்தை மதத்தின் அடிப்படையில் பிளக்க முற்பட்டு ரதயாத்திரை கிளம்பினார். பிறகு, மஸ்ஜித் இடிக்கப்பட்டது. கோயில் கட்ட முடியவில்லை என்பது வேறு விஷயம். அடுத்த பிரதமர் ராஜீவதானா என்று கொஞ்சம் பேர்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த தேர்தல், தேர்தல் கமிஷனர் டி. என். சேஷனால் ஐந்து கட்டங்களாக நடத்தப்பட, இரண்டாவது கட்டம் முடிந்திருந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு பத்து மணி அளவில் சற்று குள்ளமாகவும் கருப்பாகவும் கண்ணாடி போட்டபடி புகைப்படங்களில் அடையாளம் காணப்பட்ட சின்னப் பெண் ஒருத்தியால் "கணக்கு தீர்க்கப்பட்டார்" ராஜிவ்.

பத்து மணி அளவில் கொல்லப்பட்டிருந்தார் அவர். புது தில்லியில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் குண்டர்கள் கூட்டம் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அவர் வீட்டு முன்பு கூடியது. ஊடகவியலாளர்கள் குவிந்திருந்தனர். கொஞ்ச நேரத்தில் பெரிய குண்டர் கூட்டம் ஒன்று ஓடி வர அதன் முன்பு மறுபடியும் பிரசன்னமாகியிருந்தார் ஹெச்.கே.எல். பகத். "சீக்கியர்தான் ராஜீவை கொன்று விட்டனர்" என்று வெறிபிடித்தவாறு குரலிட்டு வந்த பகத்திடம் அங்கிருந்த பத்திரிகையாளரும் ராஜீவின் நண்பருமான தவ்லீன் சிங் "கண்டிப்பாக அது சீக்கியர்கள்தானா?" என்று கேட்க, பகத் நெளிந்துகொண்டே சங்கடத்தில் சிரிப்பை உதிர்த்தவாறு "அது அவர்களாகத்தான் இருக்க வேண்டும்" என்றாராம். அந்த புரளி மட்டும் தில்லியில் அப்போது பரவியிருக்குமானால் அங்கு ஒரு சீக்கியர் கூட உயிருடன் தப்பியிருக்க முடியாது. உடனடியாக, கொலையாளி சீக்கியர் இல்லை என்ற செய்தி சொல்லப்பட தவ்லீன் சிங் பெருமூச்சு விட்டிருக்கிறார்.

தவ்லீன் சிங் ஒரு சீக்கியர்.