எனக்குப் பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமா?

| Sunday, December 21, 2014
சற்றே பின்னோக்கிப் பார்த்தால், எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப் பட்டிருக்கிறோம்? யாருமே நமக்கு நிரூபித்துக் காட்ட முடியாத விடயங்களில்தான் நிறைய நம்பிக்கையை முதலீடு செய்யுமாறு கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்று தெரிய வருகிற இந்த நாட்களில் அனைவரின் மீதும் கோபம் வருகிறது. ‘அந்தப் புளியமரம் பக்கம் போகாதே! இளசுகளின் மேலேதான் அங்கிருக்கும் பேய்க்கு ஒரு கண்!” என்பது தொடங்கி எத்தனை எத்தனை மோசடிகள்!

அரசியல் என்பதற்கு நமது நடுத்தர வர்க்கத்து குடும்பங்களின் பார்வையை பாருங்களேன்! அது தீண்டத் தகாத ஒரு விடயம் என்று நம்மை முழுமையாக நம் பெற்றோர் நம்ப வைத்திருக்கிறார்கள். “எம்ஜிஆர் சினிமா வேண்டுமானால் பார்த்துக் கொள். அதிமுக என்றால் என்னவென்று கேட்காதே, பக்கத்து வீட்டுக்காரர் வாங்கும் முரசொலியைப் படிக்காதே, பள்ளிக்கூடம் போகும்போது செட்டியார் கடையில் தினத்தந்தி படிப்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் சிந்துபாத் கதையை மட்டும் படி” என்ற அப்பாவின் கட்டளைகள் எனது குழப்பத்தை அதிகரித்தபடியே இருந்தன. அரசியல்வாதிகளுக்கு நம்மைச் சுற்றியிருப்பவர் தந்த அதீதமான பயம் கலந்த மரியாதை அவர்களின் மீது ஒரு தீராத மயக்கத்தையே உண்டாக்கியிருந்தது.
 
நல்லவேளையாக, உயர் நிலைப் பள்ளியில் எனது ஆசான் தனது நண்பர்களிடம் அரசியல் பேசும் பெரும்பாலான நேரங்களில், நாங்கள் அருகில் இருப்பதை பொருட்படுத்தவில்லை. மிக நுண்ணியமான அவரின் அரசியல் அவதானிப்பு, பிற ஆசிரியர் பெருமக்களின் விவாதங்கள் என்னுள் அரசியலைப் பற்றிய தீக்கனலை மூட்டின. முப்பது வருடங்களுக்கு முன்பு எனது ஆசான் கூறிய சில வாசகங்கள், மூன்று நிமிடங்களுக்கு முன் சாப்பிட்டு முடித்த கறிக்குழம்பின் வாசனை இன்னும் கையில் வீசியடிப்பது போல, அப்படியே அவரது குரலிலேயே காதுக்குள் ஒலித்தபடியே உள்ளது. “இந்தியாவை பிரபாகரன் நம்புகிறான் போல தெரியுது: ரொம்ப தப்பு. இண்டியன் கவர்ன்மென்ட்டிடம் இவன் கடைசியில் மோதியாக வேண்டும்” என்று ஆகஸ்டு 1983-ல் சொன்னார் என்றால் நம்பமுடிகிறதா? “தடை செய்யப்பட்ட டாப்லாய்ட் இது. படித்துவிட்டு உடனே கொடுத்து விடு” என்று சொல்லியபடியே எண்பத்து மூன்றில் இலங்கையில் இருந்து வெளிவந்த சில செய்தித் தாள்களை எங்களிடம் கொடுத்தது நினைவுக்கு வருகிறது. பள்ளிக்கூட நூலகத்தை வெறுத்துப் பார்த்தவாறு இருந்த அவர், “டே முட்டாப்பசங்களா! ஒரு புஸ்தகம் விடாம எல்லாம் படிங்கடா. எவன் எப்போ இதையெல்லாம் எரிப்பான்னு தெரியல. இப்படி எரிச்சுப்புட்டானுங்களே படிக்கிற இடத்துல நுழைஞ்சு!” என்று ஒருநாள் எங்களிடம் அவர் கத்தியபோது, திகிலோடு அவரைப் பார்த்தவாறு அசையாமல் நாற்காலிகளில் அமர்ந்திருந்ததும் ஞாபகம் வருகிறது. யாழ் சர்வகலாசாலை எரிக்கப்பட்ட பதட்டமான நாட்கள் அவை. 

தமிழ் மொழி, திராவிட இனம், தென்னிந்திய பிரதேசம், இந்திய தேசம், சோசலிஸ்டு பொருளாதாரம், அரசியல் கட்சிகளில் தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள், எம்ஜிஆர், கருணாநிதி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகள், மேல்சபை, மக்கள் சபை, பாராளுமன்றம், ஜார்ஜ் கோட்டை என்ற வார்த்தைகள் எல்லாம் அந்த ஆசான் எங்களை மனுசப்பயல்களாய் மதித்து பக்கத்தில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருக்கும்போது தெரிந்துகொண்டதுதான். 


“பணக்காரன் கட்சி, ஏழைக்கான கட்சி என்று ரெண்டுதான இருக்கு. இதுல காங்கிரஸ், திமுக, அதிமுக எல்லாம் ஒண்ணுதாண்டா. நம்ப ஊர்ல கம்யூனிஸ்டுகாரன் எதுக்கு இருக்கான்னு தெரியமாட்டேங்குது!” என்று ஒருமுறை ஆதங்கப்பட்டார். அவர் எப்போதும் கையில் தி ஹிந்து அல்லது இண்டியன் எக்ஸ்பிரஸ் வைத்திருப்பார். “டே, இந்தப் பேப்பர எல்லாரும் படிக்க முயற்சி பண்ணுங்கடா, ஐயரு எப்பவுமே குசும்பாத்தாண்டா நியூஸ் போடுவான், கோயங்காதாண்டா பெரிய ஆம்பள! அந்தப் பொம்பளையவே எதுத்து நின்னான் பாரு, அப்பா, யாராலடா முடியும்!” என்று எங்களிடம் அங்கலாய்த்திருக்கிறார். டவுசர் போட்டுத் திரிந்த சின்னூண்டு பசங்களான எங்களுக்கு அன்று அவர் கற்றுத் தந்தது நடைமுறை அரசியலின் பால பாடம்தான். 

இன்றைக்கோ நிலைமையே வேறு! இன்று பள்ளிகளில் பாடம் நடத்தும் எந்த ஆசிரியருக்கும் எந்தவிதமான அரசியல் உணர்வும் – மொழி, இனம், பிரதேசம், தேசம் உட்பட – இருந்து நான் பார்த்ததில்லை. அவர்கள் காலைக்கதிர் படிக்கிறார்கள்; அதிலும் உள்ளூர் செய்தி மட்டுமே. ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாசு போன்ற ஒன்றிரண்டு பெயர்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்கக் கூடும். அதிலும் பெண் ஆசிரியர்களுக்கு இந்தப் பெயர்கள்கூட தெரியாது என்று எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்யலாம். அரசியல் தத்துவங்கள் எதுவும் இவர்களுக்குத் தெரியாது. எந்தக் கட்சியின் கோட்பாடுகளையும் இவர்கள் படித்தது இல்லை. கேபிடலிசம், சோசலிசம், கம்யூனிசம், பாசிசம் போன்ற வார்த்தைகள் தினத்தந்தியிலோ, காலைக்கதிரிலோ பஞ்சப்படி உயர்த்திய செய்தி வந்த நாட்களில் பிரசுமாயிருந்தால் அர்த்தம் புரியாமல் பார்த்திருக்கக்கூடும். கூகுள் இருக்கும் இந்த நாட்களில் ஒருவரின் அரசியல் உணர்வு எவ்வளவு ஆழமாக இருக்க வேண்டும்! 

ச.தமிழ்ச்செல்வன் எழுதி, இந்திய தொழிற்சங்க மையம் இணைந்து பாரதி பதிப்பகம் வெளியிட்ட “அரசியல் எனக்குப் பிடிக்கும்” என்ற சிறிய புத்தகம் நடைமுறை அரசியலை நமக்கு கற்றுத் தருகிறது. அரசு, அரசியல், அரசாங்கம் என்பனவற்றை விளக்கியிருக்கும் தமிழ்ச்செல்வன், கட்சிகளையும் இரண்டே வகைகளில் அடக்கலாம் என்கிறார். இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு பக்கம், மற்ற அனைத்து கட்சிகளும் இன்னொரு பக்கம் என்பதை நிறைய ஆதாரங்களுடன் இவர் நிரூபிக்கும்போது, ‘அடப்பாவிகளா!’ என்று அதிர்ந்து போகிறோம். ரெண்டே ரெண்டு வர்க்கம்தான் இங்கு உண்டு. இருப்பவன் – இல்லாதவன். அவ்வளவுதான். எந்தக் கட்சியும் அனைவரின் நலம் குறித்து போராடாது என்று சொல்லும் ஆசிரியர், அரசு – அரசியல் – அரசாங்கம் பற்றி இதுவரை நாம் ஆழமாக சிந்திக்காமல் இருந்திருக்கிறோம் என்றால், நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். 

வெளிவந்த நாட்களில் முனைப்பாகவும் பரவலாகவும் படிக்கப்பட்ட புத்தகம். படிக்க வேண்டியதும் கூட!

[‘அரசியல் எனக்குப் பிடிக்கும்’, ச.தமிழ்ச்செல்வன், இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் பாரதி புத்தகாலயம், சென்னை, உரூபா 10/-]

0 comments:

Post a Comment