நன்றி மறவேல்

| Saturday, September 21, 2013


(2012 ஆகஸ்டு 15-ம் திகதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கும் விருதான சிறந்த ஆசிரியர் (முதுகலை) விருதினை பெற்றதின் காரணமாய், பணிபுரியும் பள்ளியில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவினில் பேசிய நன்றியுரை)

பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும், எனது சகாக்களுக்கும் மனமுவந்த வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.  மாவட்டத்தின் சிறந்த முதுகலை ஆசிரியர் எனும் விருதினை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றிருக்கிற இப்பொழுதிலே எனது உள்ளத்தில் சில நிழலாடல்கள்.  

நினைவு தெரிந்த நாளிலிருந்து லட்சியமே இல்லாத ஒரு வாழ்க்கை.  என்னவாக வேண்டும் என்ற வேட்கை நண்பர் குழாத்திடம் மிகுந்திருந்த வேளையில் அதுபற்றி சிறிதும் கவலையின்றி திரிந்தலைந்த நாட்களிலே நிச்சயமற்றுக் கிடந்தது எனது எதிர்காலம்.  தாயும், தந்தையும் ஆசிரியர்களாதலால் வீடு நிரம்பிக் கிடந்தன சஞ்சிகைகள்.  தீபம், கணையாழி, கலைக்கதிர், தாமரை, விகடன், தினமணிக்கதிர், கல்கி போன்ற பத்திரிகைகளை புரிந்தோ புரியாமலோ படிக்க வேண்டிய கட்டாயம்.   எனது தந்தையின் ஆசிரியரும் நண்பருமான ஆங்கில உபாத்தியாயர் ஒருவரிடம் ஆங்கில இலக்கணப் பயிற்சிக்காக, ஐந்தாவது படிக்கின்ற நிலையிலே சேர்த்துவிடப் பட்டேன். இந்தக் கப்பல் கரை சேர்ந்தது அப்போதுதான்.  எனது தந்தையைவிடவும் நான் பெரிதும் மதிக்கிற, இவ்வருடம் மார்ச்சு மாதம்  மரித்துப்போன அப்பெரும் ஜோதி, TVS என்று எம்மால் அன்பாக விளிக்கப்பட்ட திரு.T.V.சௌந்திரராஜன்.  என்னை எனக்கே கண்டுபிடித்துக் கொடுத்தவர்.  இலக்கண அரிமா.  சுயம்பு.  வேதனைகளை புறந்தள்ளிக் கொண்டே தனக்குப் பிடித்த வேலைகளை அயராது செய்துகொண்டிருந்தவர்.  அவர் சொல்லித்  தெரிந்து கொண்டதைவிட, அவரைப் பார்த்து புரிந்து கொண்டது அதிகம்.  விழித்திருக்கும் நேரமெல்லாம் புத்தகமும் கையுமாகவே இருப்பார்.  ஆசிரியர் பணி உனக்கு வேண்டாம் என்று என்னிடம் எப்பொழுதும் சொல்லுவார்.  ஆனால், அந்த ஆளுமையின் வசீகரம், அவரைப் போலவே ஆக வேண்டும் என்ற ஆசை.  புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான்.  ஆனால் உடம்பு முழுக்க இருக்கும் சூட்டு வடுக்களைப் பார்க்கும் பொழுது பூனை ஆசைப்பட்டது எதற்கு என்று புரிகிறது.  சில சமயங்களில், வலியும்  இன்பந்தான் அல்லவா?

பள்ளியில், பல்கலைக் கழகங்களில் படித்ததை விட, வீட்டு முற்றத்தில், மாடியில், சினிமாக் கொட்டகைகளில் டிக்கட்டுக்காக காத்திருக்கையில் படித்தது அதிகம்.  பாடங்களை விட, பாடத்திற்கு வெளியே படித்தது அதிகம்.  செய் என்றதை செய்யாமல் விட்டதும், செய்ய வேண்டாம் என்று தடுத்ததை எப்பாடு பட்டாகிலும் செய்திருப்பதும் நெஞ்சு நிறைய அனுபவங்களைத் தந்திருக்கிறது.

நான் நல்ல ஆசிரியன் அல்ல.  ஒரு ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய உயர் பண்புகள் எதுவும் இல்லாதவன் நான்.  மரியாதை தெரியாதவன். திமிர் பிடித்தவன்.  எதிப்பதை விருப்பமாக செய்பவன்.  கேள்வி கேட்பவன்.  கோணல் புத்திக்காரன்.    முன்கோபி.  விளைவுகளின் கவலையின்றி களமாடுபவன்.  நேரந்தவறாமை தெரியாதவன்.  அடிக்கடி காணாமல் போய்விடுபவன்.  ஆனாலும்கூட, நல்லாசிரியன் விருது வாங்கும் இந்நேரத்திலே, ஆழ்ந்து உற்று நோக்கும்பொழுது, வேறு சில ஆளுமை பண்புகளும் தெரிகின்றன.  யாரிடம் பேசுகிறோமோ அவருக்குப் புரிய வேண்டும் என்ற கரிசனம் கொண்டவன்.  மாணவனை நண்பனாக்கத் தெரிந்தவன். கிண்டல், கேலி மற்றும் வசவுகளின் மூலமே அன்பை வெளிபடுத்துபவன்.  சுமாரான நிகழ்த்துக் கலைஞன்.  மாணவனை அழ வைக்க
வும், சிரிக்க வைக்கவும், அரிதான பொழுதுகளில் சிந்திக்க வைக்கவும் தெரிந்தவன்.  நன்றி மறவாதவன்.  இது எல்லாவற்றையும்விட, படிப்பவன்.  முயன்றாலும் நிறுத்த முடியாதபடி படித்துக் கொண்டிருப்பவன்.   இவைகளில் ஏதோ ஒன்று என்னை இங்கே நிறுத்தி வைத்திருக்கக்கூடும்.

இந்த விருது எனது குடும்பத்தாரை சந்தோஷப்படுத்தியிருக்கிறது.  நண்பரை பெருமிதப்படுத்தியுள்ளது.  வீட்டு குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  என்னை சிந்திக்க வைத்துள்ளது.  சஹாக்களிடையே சிறந்தவர் என்று
நான் எண்ணும் சஹாக்களை உற்று நோக்க வைத்துள்ளது.  அவர் போன்ற தன்மைகளை, குணங்களை முயன்று பார்க்க வேண்டும் என்று உணர்த்தியுள்ளது.  முன்னிலும் அதிகமாக படிக்க வேண்டும் என்று புரிய வைத்துள்ளது.  எமது மாணவர் நலம் பொருட்டு, முன்னெப்போதையும் விட அதிகமாக இனிவரும் நாட்களில் அர்ப்பணிப்புணர்வுடன் அறிவுலகு கதவு திறந்து அவரை வழி நடத்த வேண்டும் என்ற கடப்பாடு உரைக்கின்றது.

இந்த வெளிச்சங்களோடு, இவை விளக்கும் தரிசனங்களோடு, உம் முன் நின்று, விருதளித்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும், இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதிகளுக்கும், ஊர் மக்களுக்கும், மாணவர்களுக்கும் நெஞ்சு நிறைந்த  நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, சஹாக்களிடம் நட்பு பாராட்டி எமது இடம் சேர்கிறேன், வணக்கம்.

2 comments:

Kasthuri Rengan said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment