THE HELP

| Saturday, September 7, 2013



ஆங்கில திரைப்படங்களை தொடர்ந்து பார்ப்பது என்பது கிட்டத்தட்ட தினசரி வேளைகளில் ஒன்று  என்று ஆகிவிட்டிருந்து சில வருடங்கள் முடிந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு "The Help"  எனும் படத்தைப் பார்க்க நேர்ந்தது. இந்த படத்தை சென்னையோ, பாண்டிச்சேரியோ சென்றபொழுது பல படங்களுடன் சேர்ந்து வாங்கியிருந்திருக்கிறேன். அடிக்கடி இதன் DVD கண்ணில் படும். ஏனோ இதைப் பார்க்கத் தோன்றியதில்லை. தொண்டைக்குழியை அடைக்கும் சோகமான படங்கள் என்று தெரிந்தால், அதை நான் தள்ளி போடுவது வழக்கம். GANDHI படத்தை 25 வருடங்கள் கழித்துத்தான் பார்த்தேன். தொண்டைக்குழியை அடைக்கும் படம் என்று நினைத்திருந்தது என்னுடைய தவறுதான். இதற்கு பென் கிங்ஸ்லியோ, ரிச்சர்ட் அட்டென்பரோவோ பொறுப்பேற்க முடியாது.

திடீரென்று ஏதோ தோன்ற, இப்படத்தைப் பார்த்தேன்.  தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே மூச்சில் பார்த்து முடித்த பிறகு, இவ்வளவு பாதிக்கும் படிக்கு ஒரு படத்தை சமீப காலங்களில் பார்க்கவில்லை என்று தோன்றியது. ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில் இன்னும் அழுத்தமாக சமூகத் தளத்தில் நின்று அமெரிக்காவை ஆட்டிப்படைத்த நிறவெறி ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்திலும் ஊடுபாவாக எப்படி இரண்டறக் கலந்திருந்தது என்பதை அறிய நேரும் என்னைப்போன்ற இந்தியனுக்கு, சாதி இந்து - ஆதி திராவிட அதே காலத்திய சமூக உறவை ஒப்பிட முடிகிறது.

வெள்ளை குடும்பத்திற்கு கருப்பன்களும், கருப்பிச்சிகளும் தேவை.   சமையல் கூடத்திலிருந்து படுக்கை அறையை தயார் செய்து வைப்பது வரை வெள்ளைக் குடும்பங்கள் கறுப்பர்களையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. வெள்ளைக் குழந்தைகள் ஒவ்வொருவரும் கறுப்புத் தாதிகளாலேயே வளர்க்கப்படுகின்றன.  தன்னுடைய குழந்தைகளை விதியின் கையில் விட்டுவிட்டு, வெள்ளைக்காரிகளின் குழந்தைகளை  12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை பராமரித்து வளர்த்தெடுக்கும் பணியில் வாழ்நாளை அழித்தொழித்த கறுப்பிகளின் கதை உலகின் வேறெந்த இடத்திலும் நடந்து முடிந்த சோகத்திற்கு சற்றும் குறைந்தததல்ல.

இந்தப் படத்தின் நாயகியும் - ஒரு கறுப்பி - தன்னுடைய மகனை இழந்தவள். நடைப்பிணமாக தன் வாழ்நாளை ஓட்டிவரும் இவள் தன்னுடைய வாழ்வாதார தேவைகளுக்காக ஒரு வெள்ளைக் குடும்பத்து தாதியாக இருக்கிறாள்.  அந்த கிராமத்து வெள்ளைக் குடும்பத்து பெண்மணிகள் மிகவும் நாசூக்கானவர்கள்.  கறுப்பிகளின் ரத்தத்தை வலி தெரியாமல் உறிஞ்சி எடுக்கும் வித்தை அவர்களுக்கு இயல்பாக தெரிந்திருந்தது.  படத்தில் வரும் கருப்பு வேலைக்காரிகள் பெரும்பாலும் தம்மேல் நிகழ்த்தப்படும் சமூக அவலங்களை மௌனிகளாகவே எதிர்கொள்கிறார்கள்.  அவர்களுக்கு இருக்கும் ஒரே ஜீவாதாரத்தையும் இழந்துவிட யாரும் முன்வர மாட்டார்கள்.  இவர்களுக்கிடையில் ஒரு வெள்ளைக்கார யுவதி மாறுபட்டு நிற்கிறாள்.  இப்படியான சமூகம் அவளுக்கு சம்மதமில்லாத ஒன்று.  அரும்பி வருகிற ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் தன்னுடைய முதலாளியம்மாவிடம் பரபரப்பான தொடர் எழுதுவதாக சொல்லியிருக்கிற இந்த சிவப்பு யுவதி, கருப்பு தாதிகளின் அவலத்தை, அனுபவத்தை தொடராக சொல்வதாக உறுதிகொள்கிறாள்.

முதலிலே கதாநாயகியை அணுகும் பத்திரிக்கையாளருக்கு மறுப்புதான் பதிலாக கிடைக்கிறது.  தன்னுடைய அனுபவங்களை சொல்லும் பட்சத்தில், அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, பெரிய பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு உள்ளதால், கதாநாயகி தன் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள மறுக்கிறாள்.  ஆனால், தன் தோழிக்கு நேரிடும் அவலத்தை செவியுறும் கணத்தில், தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தயாராகிறாள்.  இத்திரைப்படத்தில் மறக்க முடியாத கதாபாத்திரம் கதாநாயகியின் தோழி.  பல குழந்தைகளுக்கு தாயான இக்கருப்பி, தன்னளவிலே, ஒரு போராளி.  வெள்ளைக்காரிகளின் வீட்டு கழிவறைகளை கருப்பு வேலைக்காரிகள் பயன்படுத்துதல் மிகப் பெரிய குற்றம் என்று தெரிந்திருந்தும் கூட, அதை சகஜமாக மீறுபவள் மட்டுமல்லாது, மீறுவதிலே ஒரு சுகத்தையும், நியாயத்தையும்  காண்பவள்.  தான் வேலை இழந்ததையும் பொருட்படுத்தாதவள்.  தான் சமைக்கும் ஒரு பதார்த்தத்தை மிகவும் விரும்பும் கொடுமைக்கார வெள்ளைக்கார எஜமானியம்மாளுக்கு தன் மலத்தை தான் தயாரித்த பதார்த்தத்தில் கலந்து கொடுத்து, முதலாளியம்மாள் அதை சாப்பிட்ட பிறகு, "நீ இப்பொழுது சாப்பிட்டது எனது மலம்" என்று சகஜமாக அறிவித்துவிட்டு வெளியேறும் இவள் தீவிரமான சமூக சீர்திருத்தவாதி.

வெள்ளைக்கார யுவதியின் கறுப்பிகள் பற்றிய தொடர் மிகவும் பரபரப்பான விஷயமாகிறது. புத்தகமாகவும் வெளியாகும் இத்தொடர், பல சமூக அலைகளுக்கு காரணமாகிறது. கருப்பு வேலைக்காரிகளின் வாழ்வு அவலம் மாறுவதற்கான சூழல் மெல்ல மெல்ல உருவாகிறது. வெள்ளைக்காரிகளின் மத்தியிலோ, வெளியான புத்தகத்தில் பெயர் குறிப்பிடாமல் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருப்பியின் மலத்தை தின்ற வெள்ளைக்கார எஜமானி தங்களில் யார் என்ற விவாதம் பரபரப்பான விஷமாகிறது.  மலத்தை தின்றவளோ தன் ஜன்மசாபல்யத்திற்கு என்ன செய்வது என்றறியாது திக்பிரமை பிடித்து நிற்கிறாள்.

மெல்ல சமூகம் மாறப் போவதற்கான நம்பிக்கை தெரிய, இத்திரைப்படம் நிறைவடைகிறது. மையக்கருத்திலிருந்து எந்தவொரு காட்சியிலும் விட்டு விலகாமல் ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்கிற இப்படம் முடிகிற தருணத்தில் கனத்துப்போன நெஞ்சுடன், இதேபோன்ற அவலங்கள் நமது சமூகத்திலும், நம்மைச் சுற்றியும் இருப்பதும், நாம் கருப்பிகளாகவோ, சிவப்பிகளாகவோ தொடர்வதும், சமூக மாற்றத்திற்கான நிஜமான அறிகுறி எதுவும் தென்படாதா என்று தவிக்கிற வேளையில், டீக்கடைகளிலும், தெருச் சுவற்றின் மீதும், திவ்யாவின் தோளின்மீது கைபோட்டு, சாவடிக்கப்படப்போவது தெரியாமல் தர்மபுரி இளவரசன் சிரிக்கிறான்.

0 comments:

Post a Comment