A STREET CAR NAMED DESIRE

| Saturday, September 7, 2013

          
அமெரிக்க நாடக உலகில் கடந்த நூற்றாண்டின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆகப்பெரிய ஆளுமைகளில் ஒருவராக இருந்து, மாறிக்கொண்டு வந்த அமெரிக்க விழுமியங்களில் விளைந்துவந்த கேட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் டென்னிசி வில்லியம்ஸ். தொழில்மயமாக்கப்பட்டு வந்த அமெரிக்க சமூகம் தனது அத்தனை அறம் சார்ந்த விழுமியங்களையும் மாற்ற வேண்டி வந்தது. தொழிற்புரட்சி முதலில் சிதைத்துப் போட்டது குடும்பம் என்ற அமைப்பைத்தான். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் வரலாற்றில் முன்னெப்போதும்  இல்லாத பரிமாணங்களைத் தொட்டதும் இக்காலத்தில்தான். முதலாளிக்கென்று ஒரு தனி சமூக விழுமியமும், அவனிடம் வேலை செய்யும் தொழிலாளிக்கென்று தனி சமூக விழுமியம் ஒன்று தோன்றி நிலைபெற்றதும் இப்போதுதான். செவ்வியல் இலக்கியங்கள் தாங்கிப் பிடிக்கிற வாழ்வியல் நெறிகளை இரண்டாம் தொழிற்புரட்சி முற்றிலும் புரட்டிப் போட்டு விட்டது. குடும்பங்கள் இரண்டாக, நான்காக சிதைந்தன. தந்தை ஒரு புறமும், தனயன் வேறு எங்காணும் வாழ வேண்டிய கட்டாயம். அக்காவும், தங்கையும் கண்டத்தின் இரு கரைகளில். ஒருவனை அவனது சிறு வயது ஞாபகம் மட்டுமே அவனுடைய குடும்பத்தோடு பிணைத்து வைக்கும் பரிதாபம்.

எனது எம்.ஏ. தேர்வுகளுக்காக அமெரிக்க இலக்கியத்தின் சில பிரதிகளை படிக்க வேண்டிய கட்டாயத்தில் முதன்முதலாக டென்னிசி வில்லியம்சின் A Street Car Named Desire படிக்க நேர்கையில், நாடகத்தில் இடம்பெறும் பல வசனங்களை ஜீரணிக்க முடியாத வயதும், காலமும். உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் இந்தியாவை தீண்டியிராத அந்த அற்புத பொழுதுகளில் எனக்குத் தெரிந்த கலாசாரத்தின் வழியாக நோக்கையில் மிகவும் அன்னியமாக தெரிந்த இந்தப் படைப்பை, இப்போது திரைப்படமாக பார்க்க நேர்ந்தது. Marlon Barndo மற்றும் Gone With The Wind படத்தின் நாயகி Vivien Leigh ஆகியோர் தங்களது நடிப்புத் தேர்ச்சியை தாம் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். 


மிகக் கவனமாக வருடக்கணக்கில் தான் படித்த செவ்வியல் இலக்கியங்களிலிருந்தும், தன்னுடைய பெருங்கனவுகளில் இருந்தும் கட்டி எழுப்பப்பட்டு, தன்னால் உண்மை என்று நம்பப்பட்டு வந்தும், மற்றவர்களை நம்ப வைத்தும் வந்த ஒரு பெரிய பொய்ச்சித்திரம் தன்னுடைய தங்கையின் கணவனால் தூளாக்கப்படுவது கண்டு, பெருந்துயர் கொண்டு, செய்வதறியாது, தன்னை பீடித்துவந்த மன உளைச்சல் நோய்க்கு தன்னை முழுவதுமாக இரையாக்கிக்கொள்ளும் பெண்ணாக Blanche Du Bois எனும் பாத்திரத்தில் Vivien Leigh பிரமிக்க வைக்கிறார்.  30 வயதைத் தாண்டிய, ஆனால் அதை எப்பாடுபட்டவாது மறைத்து, ஒரு ஆண் துணையை தேடிக் கொண்டாக வேண்டிய மனச் சிக்கல்கள் மிகுந்த பெண்ணாக அற்புதமான முகபாவங்களை வெளிப்படுத்தியிருக்கும் இந்த நடிகை ஹாலிவுட் வரலாற்றில் ஒரு மைல்கல். தன்னுடைய சொந்த ஊரான Auriol-ல் தன் குடும்ப சொத்தை முழுவதுமாக இழந்தபிறகு, நிறைய ஆடவர்களுடன் சற்றித் திரிந்ததால் பெயர் முழுவதும் கெட்டுப்போய், பணிபுரிந்த பள்ளியில் இருந்தே துரத்தப்பட்ட Blanche Du Bois, New Orleans-ல் உள்ள தங்கை ஸ்டெல்லாவின் வீட்டிற்கு தன்னுடைய எல்லா ரகசியங்களையும் யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்ட நம்பிக்கையில் வருகிறாள். தன்னுடைய ஆளுமையாக தங்கையின் மனதில் பதிக்க விரும்பும் பிம்பம் தங்கையின் கணவனால் உடைக்கப்படுகிறது. தான் படித்த இலக்கியங்களும், தான் ஆசிரியையாக பணிபுரிந்ததும், தான் பின்பற்றுவதாக மற்றவர்களை நம்ப வைக்கும் நாகரீக செயல்களையும், பேச்சுக்களையும் யாரும் உடைத்தெறிந்துவிட முடியாது என்று நம்பிக்கொண்டிருக்கும்  Blanche Du Bois, தன்னுடைய பளிங்கு நாகரீகத்தின்மீது சரேலென்று வீசப்பட்டிருக்கும் அமிலமாக தங்கையின் கணவனைக் காண்கிறாள். 

 Stanley Kowalski ஒரு அற்புதமான பாத்திரப் படைப்பு.  நவீன உலகின் மேட்டுக்குடி நாகரீகம் தன் மீது படரவில்லையே என்ற ஏக்கமோ , ஏன் பிரக்ஞையோ இல்லாதவன். ஒரு தொழிலாளி. ஒவ்வொரு இரவும் அனுபவிக்கத்தான் என்ற நம்பிக்கை கொண்டவன். விலங்கு மாதிரியான சக்தி கொண்டவன். தன் மனைவியைக் காதலிப்பதிலும், கட்டிப்பிடிப்பதிலும், எட்டி உதைப்பதிலும், மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதிலும் உண்மையானவன். தன் மனைவிக்கும், தனக்குமான நெருக்கத்தில் தடங்கலென வந்து நிற்கும் Blanche உடனடியாக தனது வீட்டை விட்டு துரத்தப்பட வேன்டும் என்று விரும்புவன். அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பவன்.   Blanche அவள் காட்டிக் கொள்வது போல் நவநாகரீக பண்பாட்டிற்கு சொந்தக்காரி அல்ல என்று பார்த்தவுடனேயே புரிந்து கொள்ளும் Stanley எந்தவித பாசாங்கும் இல்லாமல் வாழ்பவன். மாலைப்பொழுதுகளை சீட்டாட்டமும், குடியும் இன்னபிற சூதாட்டங்களும் நிறைந்த நேரங்களாக மாற்றிக்கொண்டவன். இவனை உயிராக, உடம்பாக காதலிப்பவள் இவனது மனைவி ஸ்டெல்லா.  தனது அக்காவைப்போல் இவள் ஒரு பாசாங்குக்காரி அல்ல. தானே மறந்துபோயிருந்த  தனது இளமைக்கால விழுமியங்களை தனது அக்காவின் வருகை இவளுக்கு நினைவுபடுத்துகிறது. அக்காவின் பரிதாபமான நிலையை உணரும் ஸ்டெல்லா, அக்கா வாழவிரும்பும் வாழ்க்கைக்கும், வாழ்ந்துவருகிற வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு உணர்ந்தவளாக இருக்கிறாள்.

தமது வீட்டில் நிகழ்ந்த தொடர் சாவுகளாலும், அதையொட்டிய பொருளாதார பின்னடைவுகளாலும் வீட்டை முற்று முழுவதுமாக கடனில் தொலைத்துவிட்டு, தன் இளமை காய்ந்து போவதுற்குள் ஒரு கணவனை அடைந்துவிட வேண்டும் என்ற தேடலில் பலருடன் சுற்றித் திரிந்து, அவர்கள் அனைவராலும் கையாளப்பட்டு, கைவிடப்பட்டு, குடிகாரியாகி, நரம்புத் தளர்வு நோய்க்கு ஆட்பட்டு, வைராக்கியமேபோல் பொய் மேல் பொய் சொல்லி ஒரு கனவுலகத்தை அவளுக்காகவும், பிறருக்காகவும் உருவாக்கி, அதை யாரும் கல்லெறிந்து உடைத்துவிடாமல் பாதுகாக்க பாடுபடும் பரிதாப அபலையாக Blanche, ஏனோ பெங்களூருக்கு வேலைக்கு செல்லும் நமது இன்றைய நவீன யுவதிகளை நினைவுபடுத்துகிறாள்.

இந்நாடகத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் Mitchell. ஸ்டான்லியின் சக தொழிலாளியும் நண்பனும் ஆன Mitchell நடுத்தர வயதுடையவன்.  நல்ல பயில்வான்.  குடும்பத்தில் தன் தாயைத்தவிர வேறு யாரும் இல்லாதவன். நோய்வாய்ப்பட்ட தாயைக் கவனித்துக் கொல்வதிலேயே திருமணம் செய்ய மறந்தவன்.  நண்பனின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கும் Blanche-யின் நடை, உடை, மற்றும் பாவனை அவனுக்குள் இருக்கும் ஒரு காதல் ததும்பும் ஆணை வெளிப்படுத்துகின்றன. Blanche-யின் கறைபடியாத பிம்பம் அவனைக் கவர்கிறது. திருமணம் செய்து கொள்வதாக அவளிடம் உறுதியளிக்கும் Mitchell, தன் நண்பன் கூறும் செய்திகளைக் கேட்டு உடைந்துபோகிறான்.  நீ திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கும் எனது மனைவியின் அக்கா நீ நினைப்பதுபோல எவ்வித மாசும் படராத பளிங்குச் சிலை அல்ல, பலர் பயன்படுத்திய ஆசை ஊர்தி என்று ஆதாரங்களோடு ஸ்டான்லி அவனிடம் சொல்லும்பொழுது, உடைந்து சுக்கு நூறாய்ப்போவது Mitchell-லின் காதல் மட்டுமல்ல, Blanche-யின் பலத்த பொய்க்காவலில் இருக்கும் அவளின் பிம்பமும்தான்.

தன்னுடைய கடைசி ஆசையும் நிர்மூலமாய்ப்போன அதிர்ச்சியில் நரம்புத்தளர்ச்சி நோய்க்கு முழுவதுமாக ஆளாகிறாள் Blanche.  மீண்டும் ஒரு கற்பனைக் காதலனை ஏற்படுத்திக் கொள்ளும் அவளை அங்கே யாரும் நம்பவில்லை. தன்னுடைய அக்காவிற்காக ஒரு கடைசி உதவியை செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டெல்லா மனநோய் மருத்துவமனைக்கு போன் செய்து மருத்துவரையும் தாதியையும் அழைக்கிறாள்.  தன்னுடைய கற்பனைக் காதலன் தன்னை தேனிலவிற்கு கூட்டிச்செல்ல வருவான் என்ற நினைப்பில் அதீத ஒப்பனைகளுடன் முன் அறைக்கு வரும் Blanche, ஒரு வயதான நபர் தன்னை அழைப்பது கண்டு குழப்பமடைகிறாள்.  ஆனால் அவளுக்கு வேறு வழியில்லை.  காதலனாக அந்த டாக்டரை மனதிலே வரித்துக்கொண்ட Blanche தன்னுடைய கடைசி வசனமாக சொல்லுகிறாள்: "Whoever you are, I have always depended on the kindness of strangers."

நம்மைச் சுற்றியிருக்கும் அனைவருமே ஏதோ ஒரு நேரத்தில் நம்மை வஞ்சிப்பவர்களாகவே மாறும் உண்மை நமக்கு உரைக்கும் ஒரு பொழுதில் நம்மை Blanche Du Bois-ஆக உணர முடியும்.  இப்படத்தில், மூல நாடகத்தில் வரும் வசனங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  நாடகத்தில் படித்து புரிந்து கொள்ள முடியாத எளிதாக இல்லாத பல உணர்வு சூட்சுமங்கள் இயல்பாக பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.  திரைப்படங்கள் பார்ப்பதை ஒரு முக்கியமான வாழ்வு கடமையாக கொண்ட அனைவரும் பார்த்து உய்க்க வேண்டிய நல்ல படம் இது.  ஈவு இரக்கமின்றி வணிகமயமாகி வரும் நமது இன்றைய சமூகச் சூழலில் நம்மில் பலர் Blanche Du Bois-களாக மாறி வருகிறோம் என்று உணருகிறபொழுது, மற்றவர்கள் நம்புவதற்காக நாம் கட்டி வரும் பொய் மாளிகை என்று வேரறுந்து விழுமோ என்ற பயம் மெல்ல உள்ளே பரவுகிறது.

    0 comments:

    Post a Comment