மனிதத் துயரத்தின் எல்லையில் துளிர்த்த மானுடம்

| Thursday, February 22, 2018
 மாமேதை மார்க்ஸ் என்னும் தலைப்பில் திருப்பூர் முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்திய நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு மணி நேரம் ஐம்பத்தேழு நிமிடங்கள் சொற்பொழிவாற்றுகிறார். இதைக் கண்ணுறும் - செவி மடுக்கும் வாய்ப்பு பெற்றோர் பெரு வரம் கொண்டு வந்தவர்கள். பொழிவு முழுவதையும் ஒரே நேரத்தில் கேட்கும் தெய்வாதீனம் எனக்குக் கிட்டியது. எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது இந்த நிகழ்வு. இந்தப் பொழிவிற்காக கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டதாகவும், நூற்றுக்கு மேற்பட்ட நூற்களை இதன் பொருட்டே வாசிக்க வேண்டியிருந்ததாகவும் எஸ்ரா பொழிவின் முதல் நிமிடங்களில் சொல்கிறார். எஸ்ரா தமிழ்ப் பேச்சுக் கலையின் முக்கிய புள்ளி. இந்தப் புள்ளியில் தமிழ்ப் பேச்சுக் கலையின் ஆராவாரம் குறைந்து, ஆய்வுக் குரல் மேலெழுந்து, தன்மையாக ஒருவருக்கொருவர் பேசும் குரல் அளவில், கீழே இறங்கி வந்த நதி அகண்ட பரப்பில் எதற்கும் அஞ்சத் தேவையில்லாது தன் போக்கில் நகர்ந்து போவதைப் போன்றது.


மார்க்ஸின் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிய எதையும் தன்னுடைய பொழிவிற்கான பொருளாக எஸ்ரா எடுத்தாளவில்லை. மார்க்ஸின் பிறப்பு, வளர்ந்த விதம், குடும்பம், காதல், மனைவி ஜென்னி, குழந்தைகள், நண்பன் எங்கல்ஸ், அவரின் குடும்பத்தைக் காலம் முழுவதும் சூழ்ந்து கவிழ்ந்த வறுமை, அவரையும் மனைவி குழந்தைகள் ஆகியோருடன் கூடவே பயணித்த நோய்மை, ஏழு குழந்தைகளில் நான்கின் அகால மரணங்கள், பிழைத்த மகள்களின் அடுத்தடுத்த தற்கொலைகள், நாடு விட்டு நாடு நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டிய பிழைப்புக்கான புலம் பெயர்தல்கள், இவைகள் எவற்றாலும் தர்க்க முடியாத மார்க்ஸின் லட்சியம், இறக்கும் வரை எழுதிக்கொண்டேயிருந்த நெஞ்சுரம் - எஸ்ரா ஒரு யோகியைப் போல சொல்லிக்கொண்டே செல்கிறார்.


மார்க்ஸின் மரணத்தைப் பற்றி பேசும்பொழுதும், ஜென்னியின் இறுதிக்காலத்தையும், முப்பத்தெட்டு ஆண்டு காலம் வளர்ந்துகொண்டேயிருந்த அவர்களின் பரஸ்பர அன்பையும் பற்றிப் பேசுகின்ற எஸ்ரா, உணர்வேழுச்சியைத் தாங்கவொட்டாமல் சற்றே நா தழுதழுக்க நிறுத்தி, கீழே குனிந்து தன்னை ஒருமுகப்படுத்தி, முகத்தை உயரே நிமிர்த்தி, கூரையைப் பார்த்துக்கொண்டே பொழிவைத் தொடர எத்தனிக்கும் நொடியில், நமக்குள் எங்கோவிருந்து மானுட அவலத்தைப் பற்றிய ஏக்கம் மனதின் முன்பரப்பிற்கு ததும்பி வருகிறது.

மார்க்சை விட ஜென்னி வயதில் பெரியவர்.  மட்டுமன்றி, தனது தம்பியின் நண்பன்தான் மார்க்ஸ்.  இரு குடும்பங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை. மார்க்ஸ் யூதர்; ஜென்னி கிறித்துவர்.  ஜென்னியின் அப்பாவிற்கு மார்க்சை ரொம்பவும் பிடிக்கும்.  மணிக்கணக்காக மார்க்சிடம் அவர் கதைத்துக் கொண்டிருப்பார்.  இப்படியான ஒரு புத்திக்காரனை தனது மகள் நேசிக்கிறாள் என்பதில் அவருக்குப் பெருமையும் கூட.  ஆனால், கிறித்துவர்கள் என்பதாலேயே ஜென்னி குடும்பத்தினரிடம் திருமண பந்தம் ஏற்படுத்திக்கொள்ள மார்க்ஸின் வீட்டார் விரும்பவில்லை. தன்னுடைய விருப்பத்தை ஜென்னியிடம் தெரிவித்த பிறகு ஏழு வருடங்கள் திருமணத்திற்கு மார்க்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை. இனிமேலும் காத்துக்கொண்டிருக்க முடியாது என்ற நிலைக்கு ஜென்னியின் வந்தபோதுதான், மார்க்ஸ் அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். 

மார்க்ஸின் வலக்கை ஜென்னி என்றால் சந்தேகமில்லாமல் இடக்கை நண்பன் எங்கல்ஸ்.  ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் நீடித்தது இவர்களின் நட்பு.  மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்ட பொழுது வந்திருந்தவர்கள் பதினோரு பேர்கள். அதற்கான செலவினங்களை செய்தவர் எங்கல்ஸ். பிறகு, அவரின் விருப்பத்திற்கிணங்க மார்க்ஸின் அஸ்தியை கடலில் எங்கல்ஸ்தான் கலக்கிறார். எங்கல்ஸ் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா ஒரு டெக்ஸ்டைல் மில் முதலாளி. மார்க்ஸ் குடும்பத்தின் வறுமையை ஒவ்வொரு நிலையிலும் துடைக்கும் உற்ற தோழனாக இருந்ததிலேயே தன் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டவர் எங்கல்ஸ்.  இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. தோழி ஒருவருடன் நீண்ட காலம் வாழ்ந்தவர்.  தோழி இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், மரித்த பிறகு இடுகாட்டில் இடம் தரப்பட வேண்டுமே என்பதற்காக, இதைக் காரணம் காட்டி தோழி வேண்டிக்கொண்டாள் என்பதற்காக, அருகிலிருந்த தேவாலயத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டார் எங்கல்ஸ். நண்பனின் வாழ்வையே தனது வாழ்வாக கொண்ட எங்கல்ஸ் போல நண்பன் கிடைத்தவர் எவ்வளவு பேறு பெற்றவர்!
  
தனது உயிருக்குயிரான மனைவியை, நோய்தொற்று காரணமாக,  பார்க்க முடியாமல் அடுத்த அறையில் வறுமையுடனும், நோயமையுடனும் போராடியபடியேதான் தன் அந்திம நாட்களைக் கழித்தார் மார்க்ஸ்.  மனைவி இறந்த பிறகு, அடக்கம் செய்யும் மயானத்திற்கு அவரால் போக முடியவில்லை. சிறிது நாட்கள் கழித்த பிறகு, அவரின் கடைசி மகளும் எங்கல்சும்தான் அங்கு கூட்டிச் செல்கிறார்கள். மனைவிக்குப் பிறகு, தனது மூத்த மகளை நோயில் பறிகொடுக்கிறார். இந்த இருவரின் மரணமும் அவரை முற்றாக முறித்துப் போடுகின்றன.  சில மாதங்களிலேயே சோகம் அழுத்த இந்த மண்ணிலிருந்து விடைபெற்றுக் கொள்கிறார்.

மானுட துயரம் இதற்குப் பிறகும் மார்க்ஸின் குடும்பத்தை விடவில்லை. எஞ்சியிருந்த இரண்டு பெண்களும் மன அழுத்தம் காரணமாக தங்களது கணவர்களுடன் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டார்கள்.  கடைசிப் பெண்ணின் தற்கொலை எங்கல்சை மிகவும் பாதித்தது.  ஏனென்றால், அவளே தன்னுடைய நாட்குறிப்பில் எழுதியுள்ளபடி, எங்கல்சும் அவளுக்கு தந்தைதான்.

எஸ்ரா சொல்கிறார்: மார்க்ஸ் வாழ்வால் துரத்தப் பட்டவர்.  பிறந்த பிரஷ்யாவிலிருந்து, பாரீசுக்குப் போய், பிறகு இங்கிலாந்தில் இந்த ஜீவன் தன்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், மானுட குலத்திற்கு தன்னுடைய பங்களிப்பாக, கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கை என்ற இருபத்தேழு பக்கங்கள் கொண்ட சிறு நூலையும், மூலதனம் என்கிற ஒரு மகத்துவமான பொருளாதார விளக்கப் புத்தகத்தையும் எழுதி நமக்கு அளித்துள்ளார். பதிமூன்று புத்தகங்களாக வெளிவந்துள்ள மூலதனத்தின் முதல் பாகம் மட்டும்தான் மார்க்ஸ் தனது கைப்பட எழுதியது.  எஞ்சிய பாகங்கள் தோழர் எங்கல்ஸ் அவர்களால் தொகுக்கப்பட்டது.

தொடர்ந்து துரத்திக்கொண்டிருந்த வறுமை, குழந்தைகளின் மரணம், தனது மனைவிக்கோ குடும்பத்திற்கோ சின்னஞ்சிறு சந்தோஷங்களையும் கொடுக்கத் துப்பில்லாமல் போன மார்க்ஸ், இந்த உலகத்தையே உய்வித்த சோஷலிசக் கொள்கையின் அடிநாதமான தத்துவத்தை வழங்கிவிட்டே சென்றிருக்கிறார்.  இந்த உலகின் பொருளாதார வரலாற்றை, மானுட வரலாற்றை எழுதும் எவனொருவனும் மார்க்ஸிற்கு சில அத்தியாயங்களை ஒதுக்கியே ஆக வேண்டும். மாவீரர்களும், மாமேதைகளும் நடப்புலகில் வாழ்வதில்லை.  கனவுகளை ஊடுருவி எதிர்காலத்தில் வாழ்பவர்கள் அவர்கள். இவர்கள் இறப்பதில்லை.  தாங்கள் வழங்கியிருக்கிற தத்துவத்தால், பங்களிப்பால் காலம்தோறும் வாழ்கிறவர்கள். மார்க்ஸ் மாவீரரும் மாமேதையுமானவர்.     

நன்றி எஸ்ரா! உங்களது இந்தப் பொழிவை தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தங்களது மாணாக்கருக்கு எடுத்துச் செல்லும் அறிவை எந்தக் கடவுளாவது, இயற்கையாவது அவர்களுக்கு வழங்கக் கூடட்டும்!



திருட்டுப்பயல்

|
மனிதர்களின் சொத்துக்களை மனிதர்கள் அபகரிப்பதை பார்க்கிறோம். தேசங்கள் பிற நாட்டவர்களால் அபகரிக்கவும் ஆக்கிரமிக்கப்படுவதும் மனித வரலாற்றில் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.
இதைவிடவும் சர்வ அலட்சியமாக பெண் அபகரிக்கப்படுகிறாள். பெண் ஒருவரின் சொத்து என்கிற மனோபாவத்தின் படி இதை சொல்கிறேன். ராமனின் மனைவி அபகரிக்கப்பட்டாள். அந்தப்புரத்து பெண்கள் அரசன் மாறினாலும் தொடர்ந்து அங்கேயே இருந்திருக்கிறார்கள். ராஜா மாறினால் என்ன? கொடுக்கப்பட்ட பணி ஒன்றுதானே? அதிகாரமும் அபகரிக்கப்படுகிறது. என்.டி.ராமராவ் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது அவருடைய நிதியமைச்சர் பாஸ்கர் ராவ் முன்னவரின் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆந்திரபிரதேசத்தின் முதன்மை அமைச்சரானார். மனிதனின் எல்லாத் தொன்மங்களும் அபகரிக்கப்படுகின்றன. ஆக்கிரமிக்கப்படுகின்றன.
பாஷைகளும் அப்படித்தான். மொழியும் மனிதனின் தொன்மங்களில் ஒன்றுதானே? பாரத துணைக்கண்டம் மொழியியல் ஆய்வு செய்பவர்களுக்கு அற்புதமான இடம். இங்கே மொழிகள் ஆயிரக்கணக்கில் பிறந்திருக்கின்றன. அழிந்துமிருக்கின்றன. தொடர்ந்து அந்நிய படையெடுப்புகளுக்கு ஆளானதால், மொழிகள் தங்களுடைய அதிகாரத்தை இழந்துமிருக்கின்றன; இன்னொன்றை தட்டிவிட்டு ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருக்கின்றன. தேவர்களின் பாஷையாக இருந்த சமஸ்கிருதத்தை மனிதன் பிடுங்கிக்கொண்டு கொஞ்சகாலம் வைத்திருந்த பிறகு, பிற மொழிகள் அந்த இடத்தைக் கைப்பற்றின. ஹிந்தி உள்ளே வரக்கூடாது என்று தமிழ் நூற்றாண்டுகளாக தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள போராடி வருகிறது. 1938-லிருந்து தன்னுடைய மகன்களையும் பொண்டுகளையும் ஹிந்திக்கு எதிரான போராட்டக்களத்தில் இறக்கி வருகிறது.
இவையெல்லாம் இருக்கட்டும். இங்கே நான் கதைக்க நினைப்பது, ஒரு பாஷைக்குள்ளேயே புழங்கி வரும் வார்த்தைகள் ஒன்றுக்கொன்று அடிபடுவதைத்தான். ஒன்றை ஒன்று சிலசமயம் முழுங்கி விடுகிறது. ஒன்றை சொல்லிக்கொண்டு வந்த வார்த்தையை இன்னொரு வார்த்தை தள்ளிவிட்டு அதனிடத்தைப் பிடித்துக்கொள்வதை என்னவென்று சொல்வது? மனுசப்பயல் மட்டுமல்லாமல், அவனுடைய இத்யாதிகளுமே கூட அவன் புத்தி கொண்டு அலைவதைப் பார்க்கவேண்டி இருக்கிறது.
எர்னஸ்ட் கோவர்ஸ் அவர்களின் The complete Plain Words என்ற சிறு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன், தூக்கம் வராமல். இரண்டொரு பக்கத்தைப் படித்ததும் வந்திருக்க வேண்டிய தூக்கமும் வராமலேயே போனது. விஷயத்தைக் கதைக்கிறேன்.
Assert என்கிற வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு பதினேழாம் நூற்றாண்டில் வந்தது. முதல் முதலாக கி.பி.1604-ல் ஆங்கிலத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டதாக ஆவணம் இருக்கிறது. to state something in a strong and definite way என்பதாக அர்த்தம் கொள்ளலாம்.
Claim என்றொரு வார்த்தை. "To claim" என்றால் "to demand recognition of a right" என்று அர்த்தம். இது assert-ன் அர்த்தத்தை அபகரித்துக் கொண்டதாக எர்னஸ்ட் கொவர்ஸ் கோவர்ஸ் சொல்கிறார். இது அநியாயம் இல்லையா எனவும் வினவுகிறார். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இந்த பொருள் மயக்கம் பாஷையில் ஊன்றப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கும் கோவர்ஸ், கீழ்க்கண்ட மாதிரி வாக்கியங்களையும் நமக்குத் தருகிறார்.
• The Police took statements from about forty people who claimed that they had seen the gunmen in different parts of the city.

• The State Department claims that discrimination is being shown against the American film industry.

• There are those who claim that the Atlantic Treaty has an aggressive purpose.

• I have a friend who claims to keep in his office a filing tray labelled "Too Difficult".
வார்த்தைகள் அர்த்தபுஷ்டி கொண்டவை மட்டுமல்லாமல், கூரானவை. ஒவ்வொன்றும் பிரத்யேகமான உபயோகம் கொண்ட கூராயுதங்கள். Assert-ன் இடத்தை claim பிடித்துக்கொண்டதால், மேற்கண்டவை போன்ற வாக்கியங்கள் தாங்கள் சொல்ல வந்ததை மழுங்கவிட்டு நொண்டியடிக்கின்றன என்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்: Why should 'claim', which has its own useful job to do, claim a job that is already being efficiently done by others?

இப்படியெல்லாம் விசனப்பட்டுவிட்டு, கடைசியாக அவரே ஒரு சமாதானமும் சொல்லுகிறார். Perhaps the idea underlying this usage is that the writer claims credence for an improbable or unverified assertion.

அதாவது, assert என்றால் உறுதியாகத் தெரிந்ததை நிறுவுவது; claim என்றால் ஒரு உரிமையை அங்கீகரிக்க கோருவது. There are those who claim that the Atlantic Treaty has an aggressive purpose - என்ற வாக்கியத்தில் சில நபர்களுக்கு உறுதியாகத் தெரிந்த ஒன்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால், claim பயன்படுத்தப்பட்டுள்ளது; assert இந்த இடத்தில் வந்திருக்க வேண்டும். அட்லாண்டிக் ஒப்பந்தத்திற்கு தீவிரமான நோக்கம் ஒன்றிருப்பதை சிலர் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே assert-தான் சரி.
ஆனால், என்ன செய்வது? claim ஒரு சதியாட்டம் ஆடிவிட்டதே?
மூலம்: Sir Ernest Gowers (The Complete Plain Words)

குடி அரசும் பெரியாரும்

| Wednesday, February 7, 2018
எஸ்.வி.ராஜதுரை மற்றும் வ.கீதா இருவரும் பலகாலம் உழைத்து உருவாக்கிய "பெரியார்: சுயமரியாதை சமதர்மம்" என்ற புத்தகத்தை சரியாக பத்து வருடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை படிக்கத் துவங்கியிருக்கிறேன். குடியரசு தினமாகிய இன்று (26-1-2018) இந்தப் புத்தகத்தை படிக்கத் துவங்குவதை விட, பொருத்தமான காரியம் வேறு ஒன்றும் இருக்க முடியாது என்பதற்கான காரணங்களை பெரியாரே எனக்குத் தந்திருக்கிறார்.
"ஏகாதிபத்திய ஆதரவாளர், சந்தர்ப்பவாதி, பிழைப்புவாதி, தன்னை உயர்த்திக் கொள்வதற்காக பொதுவுடைமை பேசிவிட்டு ஒடுக்குமுறை வந்தபோது ஓடிப் போன கோழை, தலித் விரோதி, சாதி இந்துக்களுக்காக மட்டுமே பாடுபட்டவர், தமிழகத் தரகு முதலாளிகளின் சேவகர், தெலுங்கு முதலாளிகளின் நலன்களுக்காக தமிழ் தேசியத்தைச் சிதைத்து திராவிட மாயையை உருவாக்கியவர், வறட்டுப் பொருள்முதல்வாதி, இயக்க மறுப்பியல் சிந்தனையாளர், கால வழக்கொழிந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பகுத்தறிவு வாதி, மேம்போக்கான சீர்திருத்தவாதி, பூர்ஷ்வா ஜனநாயகவாதி என்று கூடச் சொல்லப்படுவதற்குத் தகுதியற்றவர், பார்ப்பனரல்லாத நிலப்பிரபுக்களுடன் கொஞ்சிக் குலவியவர் - இப்படிப் பல்வேறு வகையான தாக்குதல்கள் - பெரியார் உயிரோடிருந்த போதும் சரி, அவரது மறைவுக்குப் பிறகும் சரி - தொடர்ந்து நீடிக்கின்றன."
"கூடவே இத்தகைய தாக்குதல்களுக்கு ஆக்கபூர்வமாகவும் ஆற்றல் மிக்க வகையிலும் முகங்கொடுத்து அவற்றுக்குப் பதிலளிக்கக்கூடிய சக்திகளும் வளரத்தான் செய்கின்றன. ஏறத்தாழ அறுபதாண்டுக் காலப் பொது வாழ்வில் பெரியார் எழுதியவற்றையும் பேசியவற்றையும் கோட்பாட்டு வகையான முறைப்படுத்தலுக்கு உட்படுத்தும் காத்திரமான அறிவார்ந்த பணியை நிறப்பிரிகை தோழர்கள் அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேலுசாமி ஆகியோர் செய்துள்ளனர். அவர்களுக்கு நிகராக ராஜன் குறையும் தனது அறிவுப் பணியை செய்துள்ளார். பெரியாரை ஆக்கபூர்வமாகப் பார்க்கும் சிந்தனையாளர்களில் முனைவர் ராஜ் கௌதமன், கருணா மனோகரன், முனைவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன், முனைவர் ஆனந்தி, விடுதலை ராசேந்திரன், ஓவியா, கவிதாசரண், கவிஞர் இன்குலாப், குடந்தை ஜெயபாலன், கு.வே.கி.ஆசான், வாலாஜா வல்லவன் எனப் பலர் இன்று தமிழ்ச் சிந்தனைக் களத்தில் நிற்கின்றனர். இவர்களிற் பலர் பெரியாரின் பெயருடன் தொடர்புடைய எந்த அமைப்புகளுக்கும் தொடர்பற்றவர்கள் என்பது, பெரியாரின் சிந்தனை மிக விரிந்த தளத்திற்குச் சென்றுள்ளது என்பதற்கான அடையாளமேயாகும். இச் சிதனையாளர்கள் தவிர மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற மார்க்சிய - லெனினிய இயக்கம் சார்ந்த அமைப்புகளும் தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சியும் சில தலித் அமைப்புகளும் பெரியாரை மிக உடன்பாட்டு வகையில் அணுகுவதையும் நாம் காண்கிறோம்"
இப்படியாக தங்களது முன்னுரையில் எஸ்.வி.ராஜதுரையும், வ.கீதாவும் பெரியாரைப் பற்றிய இன்று வரையில் அவரது எதிரிகளுக்கு இருந்துவரும் விமரிசனங்களையும், அவைகளுக்கும் அவர்களுக்கும் பதிலளிக்கும் விதமாக பெரியாரியலை போற்றி வளர்த்துவரும் சான்றோர்களின் கருத்துக்களையும் நமக்கு முன்னிலைப் படுத்தி தங்களது மிகப்பெரிய நூலொன்றை (800 பக்கங்களுக்கும் அதிகமாக) துவங்குகின்றனர்.
இதைப் படிக்கத் துவங்குவதைப் போல பொருத்தமான செயல் இன்று வேறெதுவும் இருக்க முடியாது. பத்மாவதி ரிலீசாக முடியாது, மடத்துக் காரர்கள் தேசிய மொழி ஒன்றின் வாழ்த்து இசைக்கப் படும் பொழுது முறைப்படியான வணக்கம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை, வரலாற்று / புராண மாந்தர்களைப் பற்றிய ஒருவரது கருத்துக்களைப் பொதுவெளியில் வைக்க முடியாது, ஹஜ் யாத்திரை மான்யங்கள் நிறுத்தப்பட்டது, ரேஷன் கடையில் ஏழைகள் கூட எதுவும் வாங்க முடியாத நிலை, மக்களின் நிதிநிலை என்னவென்பதைப் பற்றி கவலைப்படாமல் தன்னிச்சையாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது, பார்ப்பனியத்தின் மேலெழுச்சி என்பதான இந்தச் சூழலில், என்னை மீண்டும் கூர் தீட்டிக் கொள்ள இந்தப் புத்தகத்தை மீண்டும் படிக்கத் துவங்குவதைவிடவும் வேறென்ன நற்காரியம் இருக்க முடியும்?
"பெரியார்: சுயமரியாதை சமதர்மம்" - எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா. என்னிடம் இருப்பது முதல் பதிப்பு. 1996-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. உரூபா 250/-. கோவை விடியல் பதிப்பகம்.
இன்னும் சில பதிப்புக்களைக் கண்டிருக்கும் இந்தப் புத்தகம் என்பது எனது யூகம். யார் பெரியார், இவைகளுக்காக பெரியார் அறுபது ஆண்டுகள் இடைவிடாமல் பொதுவெளியில் நின்றார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது தமிழர் அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். அவரை தூற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கும் "யார் இந்த மனுஷர்?" என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
2018-ம் வருடத்திய குடியரசு தினத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிய வண்ணம் இருக்கின்ற பொழுது, எனக்கு இந்தப் புத்தகத்தை மீண்டும் அலமாரியில் இருந்து எடுக்கத் தோன்றியதற்கும், காலையிலிருந்து இடைவிடாமல் படித்துக் கொண்டிருப்பதற்கும் இந்தச் சிறு கட்டுரையின் ஐந்தாவது பத்தியில் இருப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடும்தானே?

கண்மணி குணசேகரன்

|
கண்மணி குணசேகரன் அவர்களின் 'பொன்மாலைப் பொழுது' பொழிவைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. பத்தாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். அரசுப் போக்குவரத்து பணிமனையில் பேருந்து மெக்கானிக்காக இருக்கிறார். நடுநாட்டு சொல்லகராதி ஒன்றைத் தொகுத்துள்ளார். தமிழ்ப்பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல சர்வகலா சாலைகள் செய்ய முடியாத ஒன்றை ஒற்றை ஆளாக செய்து முடித்துள்ளார். சிறுகதைகள் - கவிதைகள் - நாவல் - கட்டுரை தொடர்ந்து எழுதிவரும் குணசேகரன் தனது எல்லா படைப்புகளுக்கும் நெய்வேலி - கள்ளக்குறிச்சி - தியாகதுருவம் - உளுந்துர்பேட்டை - கடலூர் பகுதி மக்களின் வாழ்க்கையையே தனது பாடுபொருளாக எடுத்தாள்கிறார்.


கண்மணி குணசேகரனின் சொற்பொழிவு தமிழில் பிரசங்கப் பாணிகளில் தனித்துவமான ஒன்று. நடு நாட்டு பேச்சு வழக்கு காதில் அமிர்தமாக இறங்குகிறது. நம்பமுடியாத எளிமையோடு இருக்கிறார். 'காட்டான்' என்று சொல்வார்களே, அதைப் போன்ற தோற்றத்தோடு, பேச ஆரம்பித்ததும் மேதமை பொழியத் துவங்குகிறது. நூற்றுக்கணக்கான நடுநாட்டு சொலவடைகள், ஒப்பாரிகள், பழமொழிகள் என்று தன்னெழுச்சியாக ஆர்ப்பரித்து வருகிறது.  இவரின் கதை மாந்தர்கள் ரத்தமும் சதையுமாக இவர் கண் முன்னால் நடமாடும் ஊர்க்காரர்கள்தான்.  அவர்களின் கதைதான் கண்மணி குணசேகரனின் கதைகளின் கதையும். 

தன்னுடைய கதைகளை,மற்ற படைப்புக்களை பிற மொழியில் பெயர்ப்பதென்பது மிகவும் சிரமமான காரியம் என்கிறார்.  நாடு நாட்டு பேச்சு வழக்குதான் தனது படைப்புலகத்தின் ஆதாரம் என்பதால், தனது படைப்புகள் தன் மண்ணின் மைந்தர்களின் கதையை அவர்களின் மொழியிலேயே சொல்வதைத் தம் பிறவி நோக்கமாகக் கொண்டிருப்பதால், நடுநாட்டு பேச்சு வழக்கின் நுணுக்கங்களை அப்படியே வேறொரு மொழியில் கொண்டுவருவது சாத்தியமே இல்லை என்று சொல்லும் கண்மணி குணசேகரன், மாறாக இமையம் - கி.ராஜநாராயணன் ஆகியோரது படைப்புக்கள் மொழிபெயர்க்கப்படும் பொழுது பெயர்ப்பாளருக்கு சிரமங்கள் எதனையும் அதிகம் தராத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், படைக்கப்படும்பொழுதே மொழிபெயர்ப்பு சாத்தியங்கள் மீது கண்வைத்தவை என்றும் கூறுகிறார். 

தமிழ் பிரசங்கப் பொது பாணியிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இவரின் பொழிவு அமைந்துள்ளது.  இதைப்போன்ற பொழிவுகள் அதிகம் இணையத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.  எழுதவும் பேசவும் புதிய பாணிகள் வந்துகொண்டேயிருப்பதை மொழி ஆர்வலர்கள் நேரடியாக உணர்ந்துகொள்ள இப்படியான சந்தர்ப்பங்கள்தான் பயனுள்ளவை.  தனித்தமிழ், மேடைத்தமிழ், அச்சுத்தமிழ், மற்றும் பாடப்புத்தகத் தமிழ் என்பவை உண்மையான தெருத்தமிழை இளைய தலைமுறையின் கவனத்திற்கு கொண்டுவராமல் தம்மை வெட்டவெளி எங்கும் இட்டு நிரப்பிக்கொள்கின்றன. உண்மையான பயன்பாடு தமிழ் ஆவணப்படுத்தப்படாமலேயே போகிறது.  இத்தகைய பண்டித மனோபாவம் தமிழ் மொழிக்குப் பயனாகாது.

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, சொற்றொடர் அகராதி, கொங்கு நாட்டுத் தமிழகராதி, நாஞ்சில் நாட்டு தமிழகராதி போன்றவைகளுக்கு சற்றும் குறையாமல், நடுநாட்டு மொழியை ஆவணப்படுத்த வேண்டும் என்று அரசுப் போக்குவரத்து மெக்கானிக் ஒருவருக்குத் தோன்றியிருக்கிறது.  இந்தப் பகுதிலேயே அமைந்திருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் Advanced Center for Linguistic Studies மற்றும் தமிழ்த்துறைகள் இருக்கின்றன.  ஆனால் இப்படியான முன்னெடுப்பை ஒரு தனிநபர், அதுவும் கல்விப்புலத்திற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாதவர் தனி முயற்சியாக செய்ய வேண்டியிருக்கிறது.  இப்படியான பணிகளை முன்னெடுப்பதை விட, இந்த சர்வகலா சாலைகளுக்கு வேறு என்ன முக்கியமான பணிகள் இருக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. கண்மணி குணசேகரனின் பங்களிப்பைப் பற்றி மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் விருத்தாசலம் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை தலைவருக்கு எடுத்துக்கூறி, அதற்குப் பின்னால், அந்த துறைத்தலைவர் தம்மை பேருக்கு தொடர்புகொண்டதாக கூறும் குணசேகரனின் குரலில் எந்த ஏமாற்றத்தையும் உணரமுடியவில்லை. 

'என்னைப் பயன்படுத்திக் கொள்வதும் அல்லதாததும் உன்னுடைய பொறுப்பு. அதைப் பற்றிய கவலை எனக்கு சிறிதும் இல்லை' என்பதாக இருக்கும் கண்மணி, தற்கால தமிழ் இலக்கிய உலகின் / மொழியியல் துறையின் மிகப்பெரிய ஆளுமை என்பதை இந்தப் பொழிவு சந்தேகமற துலக்குகிறது.  


Mimetic Moulds

|
(தமிழ் கட்டுரை ஒன்றுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க வேண்டுமா என்ற சந்தேகம் வந்ததும், தமிழ் சினிமாவிற்கு ஆங்கிலத் தலைப்பை தமிழ் எழுத்துருவில் வைத்துக் கொள்வது நினைவில் வருவதால் தலைப்பு சரிதான் என்கிற தைரியம். வேண்டுமானால் Mimetic Moulds என்பதை மிமெடிக் மோல்ட்ஸ் என்று வைத்துத் தொலையலாம்.)
சசி தரூர் Mirror Now என்ற தொலைகாட்சி சேனலுக்குக் கொடுத்த செவ்வி ஒன்று இணையத்தில் காணக் கிடைக்கிறது. அண்மையில்தான் இந்தப் பேட்டி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீண்ட நேர்காணல் என்றாலும், ஒரு சில நிமிடங்கள் ரொம்பவும் சுவராஸ்யமாக இருக்கிறது. பேட்டி காண்பவர் ஒரு பெண்மணி. D' Souza என்று அவரது பெயர் முடிகிறது. "நீங்கள் வேண்டுமென்றே ஆங்கிலத்தில் கடினமான மற்றும் பொதுவெளியில் பரிச்சயமில்லாத சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள்?" ஒரு புன்னகையுடன் தரூர் சொல்கிறார்: "நீங்கள் சொல்வது போன்று நான் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேனா என்பது தெரியவில்லை. அப்படியேதும் இருப்பின், அது பிரக்ஞையோடு செய்யப்படுவதல்ல. தம்பட்டம் அடிக்கும் நோக்கத்தோடும் அப்படியான வார்த்தைகளை நான் பயன்படுத்துவதில்லை. சொல்லப்போனால், வாழ்க்கையில் இதுவரை எந்த அகராதியையும் நான் உபயோகித்ததே இல்லை. வளரும் பருவத்தில் தொலைபேசி, அலைபேசி, இணையம் என்று எந்த வசதியும் இல்லாத காரணத்தால் படிப்பது ஒன்றே பொழுதுபோக்காக இருந்தது. என்னை ஒரு தீவிரமான வாசிப்பாளன் என்றுதான் அறிமுகப்படுத்திக் கொள்வேன். ஒரு வார்த்தையை வெவ்வேறு புத்தங்களில் - இடங்களில் படிக்க நேர்ந்தால், அந்த வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் என்பதாக யூகித்துக் கொண்டதுதான். என்னிடம் இருப்பதாக நீங்கள் கருதும் வார்த்தைச் சேகரம் - பிரயோகம் இப்படியாக வந்து சேர்ந்ததுதான்."
இதற்குத்தான் படிப்பது. ஒரு வெங்காயமும் படிக்காமல் - அதுவும் அந்நிய பாஷை ஒன்றில் - வார்த்தைச் சேகரம் எங்கிருந்து வரும்? ஒருவருடைய vocabulary மோசம் என்றால் diction படுமோசமாகத்தான் இருக்கும்.
முகநூலில் இருக்கும் ஒரு பொது வியாதி என்னவென்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு identity தேவைப்படுகிறது. Sharing என்பதெல்லாம் ஒரு கருமமும் கிடையாது. 'எனக்குத் தெரிந்திருக்கிறது பார்' - என்ற அறிவித்தல்தான். அல்லது 'நான் என்னவெல்லாம் செய்கிறேன் பார்' - என்ற காண்பித்தல்தான். இந்த இரண்டுமே ஒரு identity பொருட்டுத்தான். விலக்காக சில பெரியவர்கள் - நிரம்பப் படித்தவர்கள் - அறிஞர்கள் தங்களது எண்ணங்களை, - பத்திரிகைகள் தணிக்கை செய்துதான் வெளியிடும் என்பதால் - முகநூல் மற்றும் இதர வலைத்தளங்களில் எழுதுகிறார்கள். பிரமிக்க வைக்கும் பல கட்டுரைகளை கடந்த சில ஆண்டுகளாக முகநூல் அல்லது வலைப்பூக்களில்தான் நான் வாசிக்கிறேன். The Illustrated Weekly of India, Sunday, India Today, Frontline, The Hindu போன்ற சஞ்சிகைகள், நாளிதழ்கள் ஒரு இருபது / முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் என்ன செய்து வந்தனவோ அதை இப்போது இணையம் செய்து வருகிறது. இன்னும் வீரியமாக என்று கூட சொல்லலாம்.
ஆனால், இன்னொன்றைச் சொல்ல வேண்டும். இணையத்தில் பொருட்படுத்தத்தக்க வகையில் எழுதும் எல்லாப் பெரியவர்களிடமும் ஒரு பொதுக் குணாதிசயம் உண்டு. இவர்கள் அனைவருமே தீவிரமான புத்தக வாசிப்பாளராக இருக்கிறார்கள். இணைய எழுத்து - வாசிப்பது மற்றும் எழுதுவது - என்பது தீவிர புத்தக வாசிப்பிற்குப் பின்தான் அர்த்தமுள்ளதாகிறது. மற்றபடி memes / ஜோக்குகள் இதை ரசிக்கும் கூட்டம் பற்றி இங்கு பேச வேண்டிய அவசியமில்லை. Memes என்று பேசும்பொழுது மருத்துவர் ஷாலினி "பொன்மாலைப் பொழுது" நிகழ்வில் ஆற்றிய உரை நினைவுக்கு வருகிறது. அதையும் இணையத்தில்தான் பார்த்தேன். YouTube-ல் இருக்கிறது. வாசிப்பு - விஷய தேடல் உள்ளவர்கள் பார்க்க வேண்டிய பொழிவாக ஷாலினியின் பிரசங்கத்தைப் பரிந்துரைப்பேன். Genetic - Mimetic என்பதற்கான உறவையும் வேறுபாட்டையும் இவைகள் நமது அறிவுப்பரப்பில் செய்துவரும் ஆளுமையையும் பற்றி பெட்ரோலில் தீப்பந்தம் ஒன்றை விட்டெறியும் பாவனையில் பேசுகிறார்.
மற்றபடி, விட்ட இடத்திற்கே வருவதென்றால், அந்நிய பாஷைக்கு மட்டுமல்ல, சொந்த மொழியிலேயே ஒருவரின் vocabulary ஜாஸ்தியாக வேண்டுமென்றால் வாசிப்பதைத் தவிர வேறு வழியேயில்லை. இதில் subsidy / discount என்ற பேச்சுக்கே இடமில்லை.

சேர்க்கப்படாத உப்பு

| Sunday, February 4, 2018

பொதுவாகவே வரலாறு என்றால், ஆட்சியாளர்களின் வரலாறு என்றுதான் அர்த்தம்.  அல்லது அவர்களுக்கு சௌகர்யமான வரலாறு என்றும் கொள்ளலாம். இரண்டாம் உலகப் போருக்கு முன்னால், ஹிட்லரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வரலாறு திருத்தி எழுதப்பட்டது.  யூதர்களுக்கு அது பெரும் பாதகமாக முடிந்தது.  வரலாறு திருத்தி எழுதப்படுவதற்கு பாடப்புத்தகங்கள் சரியான வாய்ப்பு.  சிறுவர் சிறுமியர் மனங்களில் ஊன்றப்படுவது, அவர்கள் வளர்ந்தாலும் மாறுவதற்கில்லை. இளமையிலேயே செய்யப்பட்ட conceptual engineering நாளாக நாளாக வலுப்பெறும்.  பின்னாட்களில் கருத்து மாற்றம் செய்வது என்பது பெரும்பாலும் முடியாது.  இந்த ஒரு காரணத்தினால்தான் ஒவ்வொரு அரசும் ஆட்சிக்கு வந்தவுடன் பாடப்புத்தகங்களில் கை வைக்கிறது. வேறு எந்தனையோ முக்கியமான விஷயங்கள் இருக்க ஏன் பள்ளிக்கூடப் புத்தகங்களில் ஒரு அரசு கவனம் செலுத்துகிறது என்றால், அப்படியான செயற்பாடு அதனைப் பொறுத்தவரையில் ஒரு முதலீடு - அரசியல் முதலீடு. 

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இதன் நிலப்பரப்பெங்கிலும் பாடப்புத்தகங்கள் காங்கிரசார் முடிவுப்படி எழுதப்பட்டன.  இந்திய அரசியல் போராட்டம் - அத்தகைய ஒரு போராட்டம் உருப்பெற்று வந்தபொழுது, இந்திய மண்ணில் வேறு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தன? - அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புப்படுத்தப்பட்டன - காங்கிரசின் தலைவர்கள் யார் - தொண்டர்கள் யார் - அந்தக் கட்சியின் நோக்கம் என்னவாக இருந்தது - ஏன் பல முக்கியமான தலைவர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகினார்கள் - அன்றிருந்த இந்து முஸ்லிம் சர்ச்சைகள் இப்போதைய சர்ச்சைகளை விட வேறுபட்டிருந்தனவா? - உப்புப் போராட்டம், பூர்ண சுயராஜ்ஜியம், வெள்ளையனே வெளியேறு, சைமன் கமிஷன், வட்டமேஜை மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு முன்னும் பின்னும் நடந்தவை யாவை? - நீதிக்கட்சி, சுயராஜ்ஜியக் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரசாரோடு ஒத்துப் போக முடியாதவாறு இருந்ததற்கான காரணங்கள் என்ன? - அவைகள் காங்கிரசோடு ஒத்துப் போன காலங்களிலும் இருந்த சமூக நிலைகள் என்ன? - போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு எந்த பாடப் புத்தகத்திலிருந்தும் ஒருவன் பதில் பெற முடியாது. 

ஆயிரமாயிரம் புத்தகங்களின் வழியேதான் ஒருவன் இவைகளுக்கான பதில்களை அடைய முடியும். காங்கிரஸ் துவக்கப்பட்ட நோக்கம் என்ன? - காங்கிரசில் முடிவெடுக்கும் நிலையில் எப்பொழுதுமே பார்ப்பனர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்களே, என்ன காரணம்? - அரசுப் பதவிகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஏன் வழங்கப்பட்டு வந்தன? (ஓரிரு விலக்குகளைத் தவிர) - பெரியார் ராமசாமி நாயக்கர் ஏன் 1928-க்குப் பிறகு காங்கிரசிலிருந்து விலகினார்? - போன்ற கேள்விகள் தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானவை.  உண்மையில், பாஜக-வினர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் வரலாற்றுப் பாடப்புத்தகங்களை பெரியதொரு அளவில் மாற்ற வேண்டிய தேவையே ஏற்படவில்லை.  ஏற்கனவே இருந்த புத்தகங்களின் பெரும்பாலான கருத்துகள் அவர்களுக்கு இசைவானதுதான்.  இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக மெட்ராஸ் மாகாணத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் மட்டுமே தன்னை அரசாங்கத்திற்கு எதிர் நிலையில் இருத்தி வந்திருக்கிறது.  ஆனால், அது உண்மையிலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிர் நிலையைத்தான் எடுத்து வந்ததா என்பதும் ஒரு சுவராஸ்யமான கேள்வி. 

1927ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பூர்ணசுயராஜ் தீர்மானம் முழுமையான விடுதலை என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.  டொமினியன் அந்தஸ்தை நோக்கியதாகவே அது இருந்தது.  மெட்ராஸ் மாகாணத்தின் உப்புப் போராட்ட கதைகூட நமக்கு அதிர்ச்சி தருவது. "தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த ராஜாஜி காந்தியின் தண்டிப்பயணத்தை தமிழ்நாட்டில் அப்படியே நகல் செய்ய விரும்பினார்.  அவருக்குத் துணையாக இருந்தவர்கள் மதுரை வைத்தியநாத அய்யரும், திருச்சி டி.எஸ்.எஸ்.,ராஜனும் ஆவர்.  ராஜாஜிக்கு சென்னையிலிருந்து ஆதரவு கிட்டவில்லை.  சென்னையைத் தங்கள் கோட்டையாகக் கருதிக்கொண்டிருந்த சுயராஜ்யக் கட்சியினர் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். ராஜாஜியின் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு நிதி உதவி செய்தவர்கள் மதுரையிலுள்ள சௌராஷ்டிரா வகுப்புத் தலைவர்களும் முதலாளிகளும் பம்பாயிலிருந்த தென்னிந்தியப் பார்ப்பனர்களுமாவர்.  தஞ்சை மாவட்டத்திலிருந்த வேதாரண்யத்தை ராஜாஜி தேர்ந்தெடுத்தது தற்செயலானதல்ல.  சென்னை நகரம் சுயராஜ்யக் கட்சியினரின் கோட்டையாக இருந்ததால் அது தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது ஓரளவே உண்மை; ஏனெனில் அங்கு ஆந்திரப் பார்ப்பனக் காங்கிரஸ் தலைவர்களான பிரகாசமும் நாகேஸ்வரராவும் உப்புக் காய்ச்சும் போராட்டம் நடத்தினர். தஞ்சை, காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இருந்த மாவட்டமாகும். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், அப்போது ஆங்கிலேய அரசாங்கள் கொண்டுவந்த நில வரி விதிப்பு முறை ஆகியவற்றுக்கு எதிராக சுயராஜ்யக் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்கள் காட்டிய எதிர்ப்பு அம்மாவட்டப் பார்ப்பனர்கள் மத்தியிலும் மிராசுதார்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அவ்வெதிர்ப்புணர்வு அவர்களிடையே தொடர்ந்து நிலவியது. எனவே அவர்களிடமிருந்து உப்புப் போராட்டத்திற்கு உற்சாகமான வரவேற்புக் கிடைக்கும் என்று ராஜாஜி எதிர்பார்த்தார். தமிழ்நாட்டில் வேறெந்தப் பகுதியைக் காட்டிலும் இங்குதான் வக்கீல்கள், வணிகர்கள், மிராசுதார்கள் ஆகியோரின் ஆதரவு அதிகமாகக் கிடைக்கும் என்று கருதினார். அவரது பயணப்பாதை கள்ளர் வகுப்பினர் செறிவாக வாழும் பகுதிகளைத் தவிர்த்து, பழைய பார்ப்பன மையங்களான தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி ஆகியவற்றின் ஊடாகச் சென்றது. 1930ம் ஆண்டு ஏப்ரல் 13 - தமிழ்ப் புத்தாண்டு நாள் - பயணத்தின் துவக்க நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  வேதபாராயணங்கள் முழங்க, பார்ப்பனப் புரோகிதர்கள் ஆசி வழங்க, பார்ப்பனர்கள் நாமேசுவரத்திற்கு அடுத்தபடியாகப் புண்ணியத் தலமாகக் கருதும் வேதாரண்யத்திற்குத் திருச்சியிலிருந்து பயணம் தொடங்கியது. வழியெல்லாம் கள்ளர்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரிடையே மதுவிலக்குப் பிரச்சாரமும் செய்யப்பட்டது. இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே தலைமைப் பாத்திரம் வகிக்கும்படு ராஜாஜி பார்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  ராஜாஜி, டி.எஸ்.எஸ்.ராஜன், மதுரை வைத்தியநாத அய்யர், கே.சந்தானம், ருக்மிணி லட்சுமிபதி ஆகியோர்தான் அவர்கள்.  தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடியவர்களும் அதனை ரட்சிக்கக் கூடியவர்களும் பார்ப்பனர்கள்தான் என்ற எண்ணத்தை உருவாக்குவதற்குத்தான் அந்த ஏற்பாடு." (பெரியார்: சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி,ராஜதுரை & வ.கீதா, விடியல் பதிப்பகம், 1996, பக்கம் 103 மற்றும் 104).  

சரியாக நினைவிருக்குமேயானால், மூன்றாம் வகுப்பிலிருந்தே உப்புப் போராட்டத்தைப் பற்றி படித்துக் கொண்டு வந்திருக்கிறேன்.  சென்னை ராஜதானியில் வேதாரண்யத்தில் ராஜாஜி உப்பு எடுத்ததைப் பற்றி பக்கம் பக்கமாக சொல்லும் பாடப்புத்தகங்கள், அதே சமயத்தில் சென்னையில் பிரகாசம் உப்பு எடுத்த கதையை ஏன் சொல்வதில்லை? ஏன் வேதாரண்யம் ராஜாஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற கதை நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது எதனால்?  கள்ளர்கள் செறிவாக வாழும் பகுதிகளின் வழியாக ஏன் ராஜாஜி தன்னுடைய போராட்டத்தை வழிநடத்தி செல்லவில்லை? போராட்டத் தலைமை முழுவதும் ஏன் பிராமணர்களால் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தது? இவை பற்றியெல்லாம் படிக்கும் மாணவனிடமிருந்து ஏன் மறைக்கப்பட வேண்டும்?

இவை இத்தனை இருந்தும், இந்த சட்ட மறுப்பு இயக்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாரியமான தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை என்று எஸ்.வி.ஆர். மற்றும் கீதா கூறுகின்றனர். மாறாக, இந்தப் போராட்டம் சென்னையில் மாபெரும் வெற்றிகண்டது.  "... எதிர்பாராத வகையில் சென்னை நகரில் நடந்த உப்புப் போராட்டமோ வெகுமக்கள் தன்மையையும் வன்முறைப் பரிமாணத்தையும் பெற்றுவிட்டது. அச்சமயத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சூளை ஜவுளி ஆளைத் தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து அதில் கலந்து கொள்வதன் மூலம் ஆலை நிர்வாகத்தின் மீதிருந்த ஆத்திரத்தை வெளிப்படுத்திட ஒரு வடிகால் தேடிக்கொண்டிருந்தனர்.  உப்புப் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த கொடிய ஒடுக்குமுறைகளைக் கண்டித்து நீதிக்கட்சியினர் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் பங்கேற்ற பொதுக்கூட்டமொன்று சென்னையில் ஏப்ரல் 27-ல் நடைபெற்ற போது வேலை நிறுத்தம் செய்து வந்த தொழிலாளர்கள் ஏறத்தாழ 3000 பேர் அந்தக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தவுடனேயே கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக மோதல்கள் ஏற்பட்டன. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் மாண்டனர்; ஐவர் காயமடைந்தனர். மே 1-ல் வேலைக்குத் திரும்பிய தொழிலாளிகள் பின்னர் சட்டமறுப்பியக்கத்தில் கலந்துகொள்ளவில்லை.  தன்னெழுச்சியாக வந்து தன்னெழுச்சியாகத் திரும்பியவர்கள் அவர்கள்." (பெரியார்: சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி,ராஜதுரை & வ.கீதா, விடியல் பதிப்பகம், 1996, பக்கம் 106).  
   
இந்தப் போராட்டம் தொடர்பாக பெரியார் அவர்களுக்கு என்ன கேள்வி இருந்தது. "காந்தியின் கடந்த பத்து ஆண்டுக்கால முயற்சியால் இந்தியாவில் பொருளாதார மாற்றம் ஏதேனும் ஏற்பட்டதா? உத்தியோகஸ்தர்கள், வக்கீல்களைத் தவிர பாமர மக்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனரா? இவ்வளவு பெரிய தேசியப் போராட்டம் மகமதிய மக்களையோ தாழ்த்தப்பட்டவர்களையோ கலந்து செய்யப்பட்டதா?" (குடி அரசு, தலையங்கம், 13-4-1930)

பாடப்புத்தக வரலாற்றுக்குப் பின்தான் எத்தகைய சுவராஸ்யங்கள் ஒளிந்திருக்கின்றன! தான் ஜெயிலுக்குப் போனாலும் தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைமை பார்ப்பனரல்லாதோர் கைகளுக்குப் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ராஜாஜி. இதைப் பற்றி பெரியார் சொல்கிறார்: "சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாத வெறுங்காவல் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்ட சி.ஆர். சிறைக்குப் போகும் முன் வெகு ஜாக்கிரதையாக தலைமை ஸ்தானத்தை திரு.சந்தான அய்யங்காரிடம் ஒப்புவித்துப் போயிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  ஏனெனில் திரு.வி.க., ஆச்சாரியார் சிறை செல்ல நேர்ந்தால் அந்தத் தலைமைப் பொறுப்பை மேற்கொள்ள ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தும் அவரிடம் அது ஒப்படைக்கப்படவில்லை. ஒத்துழையாமைக் காலத்திலும் கூட ஆச்சாரியார் தனது தலைமைப் பதவியை சீனிவாசய்யங்காரிடமோ ராஜனிடமோதான் ஒப்புவிக்கக் கவலையாக இருந்தார்." (குடி அரசு, 4-5-1930)

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொரு நிகழ்வும் பல்பரிமாண ஆய்வுக்குட்பட்டது.  அவரவர்களுக்கு ஏற்ற வரலாற்றை ஒவ்வொருவரும் படைத்துக் காட்டிக்கொண்டிருக்கின்றனர். இவைகளில் அரசு ஆதரவு பெற்ற வரலாறு சிறார்களின் மனதில் பதியம் போடப்படுகிறது. எனக்கென்ன படுகிறதென்றால், மெட்ராஸ் ராஜதானியைப் பொறுத்த அளவிலாவது, கடந்த முன்னூறு ஆண்டுகால வரலாறு மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, முடிந்த அளவில் நேர்மையான நிகழ்வுக் கட்டுமானம் ஒன்று மாணவர்களின் கருத்துக்கு வைக்கப்பட வேண்டும்.  இத்தகைய ஒரு முயற்சியை திராவிடக் கட்சிகள்தான் செய்ய முடியும்.  ஏன் செய்திருக்கவில்லை என்பது மர்மமாக இருக்கிறது.  இங்கிருந்து இந்த மீளாய்வைத் தொடங்கலாம்.


வேர் பிடித்த மரமும் கீழடி மண்ணும்

|
பள்ளிக் கல்வித் துறை செயலராக உதயச்சந்திரன் அவர்கள் வந்ததிலிருந்து நடந்தவைகளில் முக்கியமானதாக நான் கருதுவது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பொருட்படுத்தத் தக்க இலக்கிய / சமூக ஆளுமை ஒருவரை அழைத்து ஒரு பிரசங்கத்திற்கு ஏற்பாடு செய்து அதை உடனடியாக YouTube-ல் பதிவேற்றம் செய்து வருவதுதான். இது இன்னும் தொடர்ந்து வருகிறதா என்று தெரியவில்லை. அறிவுலகத்திற்கு பெரிய கைங்கர்யமானது இதுவென்று தெரிந்த மாத்திரத்திலேயே இவரைவிடப் பெரியோர்களால் இது தடுக்கப்படும். தடுக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.
இருக்கட்டும். நடந்த வரை / நடக்கும் வரை நல்லதுதான். இங்கு நான் சொல்ல விரும்புவது கே.வி.சைலஜா மற்றும் பவா செல்லத்துரை ஆகியோரின் பிரசங்கங்கள் பற்றி. ஒரே காணொளித் தொகுப்பில் இருவரின் பிரசங்கங்களும் உள்ளன. அடுத்தடுத்த பொழிவுகள். முதலில் சைலஜா பேசுகிறார். இவருடைய மொழிபெயர்ப்பான "சிதம்பர நினைவுகள்" தற்காலத்திய தமிழில் அதி முக்கியமான code changing work என்று சொல்லுவதில் எந்தத் தயக்கமும் இல்லை. பொதுவாக, மூல நூலில் இருக்கும் அர்த்தப் பொதிவுகள் பிரதி நூலில் இல்லாது போய்விடும். மூல ஆசிரியர் தன்னுடைய மொழியில் அவருக்கு இருக்கும் பாண்டித்தியம் அனைத்தையும் பயன்படுத்தி ஒரு புதுவிதமான சொல்லாடலை உருவாக்கியிருப்பார். அந்த சொற்சேர்க்கைகள் - பிரத்தியேகமான பிரதி மொழி ஆகியவை அந்தப் படைப்பிற்குத் தேவையான ஆழத்தை வழங்கியிருக்கும். இவை அனைத்தையும் மொழிபெயர்ப்பில் கொண்டு வருவது சாத்தியமே இல்லை.
தமிழில் நல்ல வாசிப்பாளர்கள் என்று கூறத் தக்கவர்கள் குறைந்த பட்சம் ஆயிரம் பேராவது இருப்பார்கள், இன்றைய நிலையில். இவர்கள் அனைவருமே மேனாள் தினமணி ஆசிரியர் சொக்கலிங்கம் மொழிபெயர்த்துள்ள லியோ டால்ஸ்டாயின் "போரும் சமாதானமும்" வாசித்திருக்கக் கூடும். மூன்று தொகுதிகளாக வந்துள்ளது. இரண்டு தொகுதிகளில் இருக்கும் மூலப் பிரதி விசுவாசம் கடைசித் தொகுதியில் இல்லை என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். வந்தவரையிலுமே மகத்தான மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் ஒருவனால், இந்த வித்தியாசத்தை எளிதில் உணர முடியும். மூவாயிரம் பக்கங்களுக்கு மேலதிகமாக நீளும் ஒரு படைப்பை பெயர்க்கும் போது, பல்வேறு தடைகளை மொழிபெயர்ப்பாளன் சந்தித்திருக்கக் கூடும். ஒரு வித மன அயர்ச்சிக்குமே கூட அவன் ஆளாகியிருக்கலாம். முதல் இரண்டு தொகுதிகளும் பதிப்பிக்கப்பட்ட நிலையில் மூன்றாவதை பதிப்பிக்க, நிதி காரணம் பொருட்டு, உண்டாகியிருக்கக் கூடிய அசாத்தியம் மொழிபெயர்ப்பாளனின் உற்சாக இழப்பிற்கு காரணமாக இருந்திருக்கக் கூடும். எது எப்படியிருப்பினும், மொழிபெயர்ப்புத் தரம் கவனிக்கத் தக்க அளவில் குறைந்துபோய் விட்டது என்பது உண்மை. முதல் இரண்டு தொகுதியிலுமே கூட, இது ஒரு ரஷ்ய நாவல் என்ற உணர்வு வாசகனுக்கு முதல் பக்கத்திலிருந்தே ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு மொழிபெயர்ப்பாளரின் போதாமை மட்டுமே காரணமாகி விடாது. தமிழ் - ரஷ்ய கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள வேற்றுமை பெரிதும் காரணமாக இருக்கலாம்.
சொக்கலிங்கத்தின் குறைபாடுகள் எதுவும் சைலஜாவிடம் காண்பதற்கில்லை. இவரிடம் தமிழ் விளையாடுகிறது. இவருக்கு "பெண் மொழி" கைவசப்பட்டு விட்டது. மூலப்பிரதிக்காரர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களிடமுமே பெண் மொழி இருக்கக்கூடும். Auto-fiction என்ற வகைமையைச் சேர்ந்ததுதான் இந்தப் புத்தகம். மலையாளத்தில் "சிதம்பர ஸ்மரண" என்ற பெயரில் வெளிவந்து பெரிதும் பிரபலமான படைப்பு. இந்தப் புத்தகத்தை கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தில் 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் வாங்கியதிலிருந்து இதுவரை ஐம்பது முறைகளுக்கு மேலாகப் படித்திருக்கிறேன். சைலஜாவின் பிரதி மொழிக்காகவே. நூறுக்கும் மேற்பட்ட பிரதிகளை வாங்கி கல்யாணம், இதர தருணங்கள் ஆகியவற்றின் பொழுது, பிறருக்கு பரிசளித்திருக்கிறேன். இதில் பல வரிகள் எனக்கு மனப்பாடம். "ஒரு மனிதனின் யோக்கியதையை தீர்மானிப்பது பணம், பெண், அதிகாரம் ஆகிய மூன்று தொன்மங்களின் மீது அவன் எடுக்கும் நிலைப்பாடு மட்டுமே."
சைலஜாவின் பிரசங்கத்திலிருந்து அவர் மேற்சொன்ன படைப்பைத் தவிர, வேறு சில நூற்களையும் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவைகளுமே நன்றாக வந்திருக்க வேண்டும். ஏனென்றால், சைலஜாவின் பொழிவிலிருந்து, அவருக்கு அப்படியான மொழி இயல்பாக வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்கிறேன். இயல்பான கண்ணியமான பேச்சு. சௌகர்யமாகவும், கவனமாகவும் கேட்க முடிகிறது. எல்லோரும் கேட்கலாம்; கேட்க வேண்டும். ஆனால், உரத்த குரலில் மூன்றாந்தர ஜோக்குகளை நிரல்படுத்தி பேசும் பட்டிமன்ற பேச்சாளர்களின் பொழிவுகளுக்குப் பழக்கப்பட்டுவிட்ட காதுகள் சைலஜாவின் பிரசங்கத்தை ரசிக்குமா என்பது சந்தேகம்தான்.
சைலஜாவிற்கு அடுத்து அவரது கணவரும், கதைசொல்லியும், வம்சி பதிப்பக உரிமையாளருமான பவா செல்லத்துரை பேசுகிறார். அற்புதமான பேச்சு. திருவண்ணாமலை பேச்சுவழக்கு இவரது பிரசங்கத்திற்கு ஒரு பேரழகைத் தருகிறது. ஏன் கதைகள் எழுதப்பட வேண்டும், ஏன் அவைகள் வாசிக்கவும் கேட்கவும் பட வேண்டும் என்பதாக இவரது பிரசங்கம் அமைகிறது. தனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் சில கதைகளை நமக்கு சொல்கிறார். பஷீர் கதை ஒன்று. அதை பஷீர் அவர்களே சொல்கிறார். ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு, காசு கொடுக்கப் போகும் சமயம் தன்னுடைய பர்ஸ் திருட்டுப் போய் விட்டதை உணர்ந்த பஷீர், ஓட்டல் முதலாளியிடம் சொல்ல, முதலாளி நம்ப மறுத்து உரத்த குரலில் சண்டை பிடிக்கிறார். பஷீர் பெரிய எழுத்துக்காரர் என்பது ஓட்டல் முதலாளிக்குத் தெரியும். ஆனால், அதை அவர் பொருட்படுத்தாது, பஷீரின் வேட்டி சட்டையை அவிழ்த்துத் தர சொல்கிறார். எவ்வளவோ பஷீர் மன்றாடி பார்த்தும் முதலாளி மசியவில்லை. பஷீர் கண்களில் நீர் திரள்கிறது. அங்கிருப்போர் ஒன்றுமே செய்ய முடியாமல் இந்த மனித அவலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது உள்ளே நுழைந்த நடுத்தர வயது மனிதனொருவன், பஷீருக்காக பரிந்து பேசுகிறான். அவருக்கான பணத்தை தான் தருவதாக கூறி, அந்தப் பணத்தை முதலாளி மேல் எறிந்துவிட்டு, முதியவர் பஷீர் அவர்களை மெதுவாக ஒரு மரத்தடிக்குக் கூட்டி வருகிறான். தனது கால்சராயின் பாக்கெட்டில் கையை விட்டு ஆறேழு பர்சுகளை எடுத்து, "ஐயா, இவற்றில் உங்களின் பர்ஸ் எது என்று சொல்லுங்கள்" என்று கேட்கிறான்.
ஒரு திருடனுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இல்லாமல், மற்றவர்கள் ஏன் பஷீர் சிறுமைப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்? என்று கேட்கிறார் பவா செல்லத்துரை. அந்த ஓட்டலில் அந்த நேரத்தில் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் என்னுடைய ஒரே ஆறுதல்.
"அண்ணா நூற்றாண்டு நூலகம் பொன்மாலைப் பொழுது" என்று YouTube-ல் தேடினால், மேற்சொன்ன பிரசங்கமும், வண்ணநிலவன், வண்ணதாசன், இமையம், மருத்துவர் ஷாலினி, கவிதா முரளிதரன், அருள்மொழி மற்றும் பலரின் பொழிவுகளும் கிடைக்கின்றன.