ரிலையன்ஸ் ஜியோ நிறைய பேர்களை நிறைய விதங்களில் பாதித்திருக்கிறது. நல்லதும் கெட்டதும் உண்டு. ஒரே மனிதனைக் கூட இரண்டு விதமாகவும் பாதித்திருக்கும்.
ராத்திரி நேரங்களை ரொம்பவும் ரசிக்கும் நேரங்களாக ஜியோ மாற்றியிருக்கிறது. இரவு பத்து மணி அளவில் ஆரம்பித்து YouTube-ல் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பொழிவுகளை தூக்கம் வரும் வரை கேட்டுக்கொண்டிருப்பது என்பதை முகேஷ் அம்பானி அன்பளித்திருக்கிறார். பெருந்தகை இந்த வசதியைத் தொடர்ந்து எனக்கு கொடுக்க வேண்டும் என்பதை இதன் வழியாகவும் கேட்டுக் கொள்கிறேன்.
Series of Lectures on World Literature என்ற பெயரில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பொழிவுகள் இங்கு காணக் கிடைக்கின்றன. நேற்று இரவு ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியரின் Macbeth நாடகத்தைப் பற்றி ஏறக்குறைய தொண்ணூறு நிமிடங்கள் பேசுகிறார். எஸ்ரா பல்வேறு பார்வைகளின் வழியாக இந்த நாடகத்தை அணுகுகிறார். முதலில், எஸ்ராவின் குரலையும் அதன் தொனியையும் பற்றி சொல்ல வேண்டும். அமைதியான பேச்சு. எந்த இடத்திலும் நாடகப் பாங்கான தொனியை கேட்கவே முடியவில்லை. பொழிவு முழுவதும் மக்களின் மொழியில்தான் பேசுகிறார். ஒரு செவ்வியல் பிரதியைப் பற்றி மக்களின் மொழியில், ஆனாலும் கொஞ்சமும் ஆய்வின் தன்மையை மலினப்படுத்திவிடாமல், மலையிலிருந்து இறங்கி வந்த நதியின் அமைதியோடு பேசுகிறார்.
நாடகத்தின் ஒவ்வொரு முக்கியமான காட்சியிலும் அதை எழுதப்பட்டவாறே சொல்லிவிட்டு, அதன் பின்புலம் - அதை ஆய்வாளர்கள் அணுகிய விதம் என்பதை ஒரு யோகியின் குரலோடு எஸ்ரா சொல்ல முடிவது நமது பாக்கியம். இவரது குரலின் தொனி ஏனோ அசோகமித்திரனின் எழுத்தை நினைவுபடுத்துகிறது. எனது இந்த analogy சரியா என்பதை நண்பர்கள்தான் சொல்ல வேண்டும்.
இந்த நாடகத்தைப் பற்றி நான் இதுவரை படித்திராத தகவல்களை நிறைய சொல்கிறார். ஷேக்ஸ்பியரின் காலம் இரண்டு அரசுத் தலைமைகளை சந்தித்தது. அரசி எலிசபெத் மற்றும் அரசர் ஜேம்ஸ். இந்த ஜேம்ஸ் அரசர்தான் முதன்முதலாக பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். King James Version (KJV) என்ற பதிப்பு இந்த ஜேம்ஸ் அரசரைத்தான் சுட்டுகிறது. இதன் மொழிபெயர்ப்புக் குழுவில் ஷேக்ஸ்பியரும் இருந்திருக்கலாம் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் அபிப்பிராயப்படுகின்றனர் என்பதை எஸ்ரா வழி தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்தப் பொழிவிற்காக எஸ்ரா கடுமையாக உழைத்திருக்கிறார் என்று தெரிகிறது. இந்த நாடகம் உலகின் வெவ்வேறு இடங்களில் திரைப்படமாக்கப் பட்டிருக்கிறது என்பதையும் அவைகளில் நான்கு திரைப்படங்கள் முக்கியமானவை என்பதையும் எஸ்ரா சொல்கிறார். ஜப்பானிய மொழியில் அகிரா குருசேவா இந்த நாடகத்தைத் திரைப்படமாக்கியிருக்கிறார் - அவருக்கே உரிய பாங்கில். போரில் வென்று ஊருக்கு திரும்பும் மாக்பெத், அவனது நண்பன் பாங்கோ இருவரும் மூன்று சூன்யக் கிழவிகளை சந்திக்கின்றனர். ஷேக்ஸ்பியரின் கிழவிகளும் குருசோவாவின் கிழவிகளும் வேறு வேறானவர்கள். ஜப்பானியக் கிழவிகள் அழகானவர்கள்; மாக்பெத் சந்திக்கும்பொழுது சிலைகளை போலவே, அவர்கள் ராட்டை சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
முதலில், இந்த சூன்யக்காரக் கிழவிகள் ஏதோ மாயமந்திரம் செய்பவர்கள் அல்லர் என்றும், இவர்கள் அந்தக்கால மருத்துவச்சிகள் என்றும், இவர்களைத் தவறாகப் புரிந்து கொண்ட அந்த சமூகம், சூன்யக்காரிகள் என்று பெயரிட்டு, ஆயிரக்கணக்கானோரை கொளுத்திப்போட்டது. இந்தக் கைங்கர்யத்திற்கு ஜேம்ஸ் அரசரின் ஆதரவும், ஏன் உத்தரவுமே இருந்தது. பின்னாட்களில், இந்தப் பாவகரமான செயலின் பின்னூட்டமாக பெரும் குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஜேம்ஸ் அரசர், கடவுளிடம் பாவமன்னிப்பு இறைஞ்சும் விதமாகத்தான் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்றும் சொல்கிறார் எஸ்ரா.
தமிழ் மேடைகளில் ஒருவர் கேட்கும் இரைச்சலைப் போன்றதல்ல இந்தப் பொழிவு. ஒரு சிறந்த சர்வகலா சாலையில் முதலாண்டு பட்ட மாணவர்களுக்காக பேரறிஞர் ஒருவர் முக்கியமான பிரதி ஒன்றைப் பற்றி எளிமையாகக் கொண்டு சேர்க்கிற பாங்கில் இந்தப் பொழிவு அமைந்தது அருமையான செவிநுகர் கனியாக உருக்கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment