சாகித்ய அகாடெமி "இந்திய இலக்கியச் சிற்பிகள்" வரிசையில் வெளியிட்டிருக்கும் "கவிஞர் பாலா" என்ற நூலை அவரின் நண்பரும் பேராசிரியருமான சேதுபதி எழுதி அளித்துள்ளார். சற்றே ஏமாற்றமாக இருக்கிறது. கவிஞர் பாலா-வைப் பற்றி நிறைய தகவல்கள் எதிர்பார்த்தேன். மிகவும் குறைவான தகவல்கள் என்பது மட்டுமன்றி, இரைச்சலான வார்த்தைகளுடன், எந்த விதமான கருத்துக் கட்டுமானமும் இன்றி ஏனோதானோ என்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.
பாலாவின் புத்தகங்கள், அவற்றில் அவர் எழுதியுள்ளவை அனைத்தும் அவருடைய புத்தகங்களிலேயே உள்ளன. பாலா யார்? என்பதற்கு ஒரு வாசகனாக நான் இந்தப் புத்தகத்தில் நிறைய எதிர்பார்த்தேன். அவரது சர்ரியலிசம், புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை, பாரதியும் கீட்சும் போன்ற சில நூல்களிலிருந்தும், பாலாவைப் பற்றி அவரது நண்பர்களும், சக கவிஞர்களும் சொல்லியிருப்பதைக் கூட முழுமையாகத் தராமல், அந்த பெரிய ஆளுமையின் வீரியத்தை வாசகன் அறிய முடியாத வண்ணம் "கடமைக்குச் செய்தல்" என்பதாக எழுதப்பட்டிருப்பதை ஏன் சாஹித்ய அகாடமி கண்டுகொள்ளவில்லை? கைப்பிரதி அல்லது தட்டச்சு பிரதி வந்து சேர்ந்ததும் அதை ஒரு வல்லுநர் குழுவிடம் கொடுத்து கருத்து கேட்பது மாதிரியான செயல் வடிவம் எதுவும் அகாடமியிடம் இல்லையா என்ன?
பாலா என்ற பேராசியரை, மொழியியல் அறிஞனை, இலக்கிய விமர்சகனை, கவிஞனை, மொழிபெயர்ப்பாளனை, தேர்ந்த சொற்பொழிவாளனை, பதிப்பாளனை சரியாக வரலாற்றில் சரியான விதத்தில் நட்டு வைக்க வேண்டாமா? இந்த இடத்தில் நான் இன்னொரு biography-யை நினைத்துப் பார்க்கிறேன். முப்பதே நாட்களில் அவசரமாக எழுதப்பட்டது. இன்று அது ஒரு செவ்வியல் பிரதி ஒன்றுக்கு இணையாக மதிக்கப் பெறுகிறது. புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை அவரது நண்பனும் எழுத்தாளருமான தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் "புதுமைப்பித்தன் வரலாறு" என்ற பெயரில் எழுதியது இன்றளவும் இலக்கிய ஆர்வலர் பலராலும் பிரமிக்கப் படுகிறது. புதுமைப்பித்தனின் ஆளுமையை வாசகன் நேரிலே காண்கிற மாதிரியான எழுத்து. ரகுநாதனும் ஒரு சிறந்த எழுத்துக்காரர் என்பதாலோ, அல்லது பித்தனின் நெருங்கிய நண்பர் என்பதாலோ, அந்த ஆளுமையின் சிறந்த குணங்களை வியந்து, சிற்சில குணக்கேடுகளையும் படிப்போர் கவனத்திற்கு கொண்டு வந்து, எப்படி அந்தக் கெடுக்கலாம் மாபெரும் கலைஞன் ஒருவன் வீழ்ந்து மடிந்தான் என்பதை ஒரு காவியம் போல ஆக்கிக்காட்டியிருப்பார். நான் எப்பொழுதுமே சொல்வதுண்டு. தமிழ் சுயசரிதம் என்பதில் நாமக்கல் கவிஞரின் "என் கதை" நூலுக்கு தன்னிகரற்ற இடம் உண்டு. அதே போல, biography என்று பார்த்தோமானால், ரகுநாதனின் "புதுமைப்பித்தன் வரலாறு" இன்னும் சில நூறு ஆண்டுகள் இந்த இலக்கிய வகைமைக்கு உதாரணமாக விளங்க வல்லது.
ரகுநாதன் புதுமைப்பித்தனின் வரலாற்றை bildungsroman என்ற வகைமைப்படி எழுதியிருக்கவில்லை. பெரிய ஆளுமை ஒன்றின் வரலாற்றை பிறப்பு முதல் இறப்பு ஈறான படிக்கு எழுதுவது, வாசகன் அந்த ஆளுமையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்ந்த காலத்தின் தன்மையை குழப்பம் ஏதும் இல்லாதபடிக்கு புரிந்து கொள்வது மட்டுமன்றி, அவரைப் பற்றி தான் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் தகவல்களை சரியான இடத்தில் பொருத்திப் பார்க்கவும் உதவும். கணித அறிஞர் ராமானுஜத்தின் வாழ்க்கையை The Man Who Knew Infinity என்ற அற்புதமான சிறு புத்தகத்தில் Robert Kanigel இப்படியான உத்தியில்தான் எழுதியிருக்கிறார். படிக்க எடுத்தவர் கீழே வைக்க முடியாதபடிக்கு எழுதப்பட்ட புத்தகம் அது. ரகுநாதனின் புத்தகத்தைப் போல. ஒன்றின் மீது இரண்டு, இரண்டின் மீது மூன்று என்று ஆண்டு வாரியாக நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டு போவது மாதிரியான எழுத்துக் குறிப்பொன்றில், சரிதத்தை எழுதுபவர் எழுதப்படும் ஆளுமையைப் பற்றிய தன்னுடைய எண்ணங்களை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற கேள்விக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு புத்தகங்களுமே தக்க பதில்கள்.
மீண்டும் சேதுபதியின் புத்தகத்திற்கு வருவோம். காலக்கிரயம் இல்லை. பாலாவின் கருத்து விழுந்து, முளைத்து, விருட்சமான கதை இல்லை. பாலாவின் நட்புகளைப் பற்றிய தகவல்கள் ஏதும் விவரமாக இல்லை. அவரின் குடும்பம், பிறப்பு, ஆரம்ப வருடங்களின் போராட்டங்கள், தாயாரின் அசம்பாவிதமான முடிவு, தொடர்ந்த இடப்பெயர்வுகள், உயிரான உறவுகள் என்ற விவரங்கள் இதைப்போன்ற ஆளுமை வரலாறுக்கு அதிமுக்கியமானவை. இதில் எதுவும் சேதுபதியால் சிறப்பாக சொல்லப்படவில்லை.
பாலாவின் வரலாற்றை சேலம் தமிழ்நாடன் அல்லது அகரம் மீ.ராஜேந்திரன் ஆகியோர் இன்னும் பலபடிகள் சிறப்பாக எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். யார் முன்னே, யார் பின்னே என்ற விவரம் தெரியாமல்தான் இந்த வரியை எழுதுகிறேன். சொல்ல வருவது என்னவென்றால், தமிழ்நாடன், ராஜேந்திரன் மாதிரியான எழுத்து வன்மை கொண்ட, பாலாவிடம் நெருங்கிப் பழகி அந்த ஆளுமையின் சிறப்பை சில தசாப்தங்கள் விரும்பிப் பருகியவர் யாரேனும் இந்த கைங்கர்யத்தை செய்திருக்கலாம். அல்லது, சேதுபதியே கூட, நேரம் எடுத்து இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
புதுக்கவிதையின் வரலாறை நுணுகி நுணுகி எழுதியவரின் வாழ்வை இப்படி சிரத்தையின்றி அணுகியிருக்க வேண்டாம் என்றுதான் இந்தப் புத்தகத்தை படித்து முடித்த நிலையில் தோன்றுகிறது.
சேதுபதியும் இதை உணர்ந்திருப்பார் என்றுதான் உள்மனம் சொல்கிறது.
0 comments:
Post a Comment