அல்குலுக்கும் அப்பால்

| Wednesday, March 4, 2015
காவ்யா வெளியிட்டு தமிழ்நாடன் எழுதி 2010-ல் வெளிவந்த "அல்குல்" எனும் சிறு புத்தகம் கிடைத்தது. இன்றைய தமிழ்ச் சூழலில் மிகவும் துணிச்சலான புத்தகம். ஜனவரி மாதம்தான் பெருமாள் முருகனின் "கெட்ட வார்த்தைப் பேசுவோம்" படித்ததாலும், இந்தப் புத்தகமும் ஏறக்குறைய பாடுபொருளாக அவ்விடயத்தையே கொண்டதாலும் ஒருவித புன்முறுவலோடு படிக்க முடிந்தது. ஆனாலும், ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. 'கெட்ட வார்த்தைகள்' என்று சொல்லப்படுபவை மொழியின் முக்கியமான கூறு. வார்த்தைகளில் கெட்ட வார்த்தை - நல்ல வார்த்தை என்றெல்லாம் மொழியியல் பின்புலத்தில் பாகுபடுத்தவே முடியாது. அப்படிப்பட்ட பாகுபடுத்தல்களுக்கெல்லாம் அரசியல் தேவைப்படுகிறது. அந்த அரசியல் எந்த பெயரில் வேண்டுமானாலும் நடமாடலாம். ஒழுக்கம், குடும்ப பாரம்பரியம், படிப்பு, நிறுவன கட்டுப்பாடு என்று என்ன பெயரில் வேண்டுமானாலும் "கெட்ட வார்த்தைகளுக்கு" எதிரான அரசியல் நடமாடலாம். தன்னுடைய தாய் மொழியில் உள்ள "கெட்ட வார்த்தைகள்" தெரியாதவன் தன்னுடைய மொழியை முழுவதுமாக தெரிந்தவன் அல்ல என்பது மட்டுமல்லாமல், அந்த மொழியின் functional efficiency என்பதையே முழுவதுமாக பிரயோகிக்க முடியாதவன்.
 
இந்த புத்தகத்தைப் பொறுத்தவரை இன்னொரு பிரச்சினை. பெண்ணின் பாலியல் உறுப்பை ஏன் வெளிப்படையாக அச்சு எழுத்து பேசுவதில்லை என்பதையே முக்கிய கேள்வியாக தமிழ்நாடன் கேட்கிறார். இது மட்டும்தான் கெட்ட வார்த்தையா என்ன? குறைந்த பட்சம் ஆணின் பாலியல் உறுப்பின் மீதும் அவர் தன் கவனத்தை அதே விகிதத்தில் செலுத்தியிருக்கலாம். கெட்ட வார்த்தைகள் அவை புழக்கத்தில் இருக்கும் சமூகத்தைப் பற்றிய பல உண்மைகளை உரக்க சொல்லுகின்றன. பண்பாடு, சமூக ஒழுக்கம், அறநெறிகள், இலக்கியம், அந்த சமூகத்துப் பெண்களின் நிலை, கல்வியறிவு உள்ளிட்ட பல முக்கியமான செய்திகளை "கெட்ட வார்த்தைகள்" தாங்கி நிற்கின்றன. ஆங்கிலத்தில் இது உணரப்பட்டு பல நூறு ஆய்வு நூற்கள் எழுதப்பட்டு விட்டன. அத்தகைய செயற்கரிய செயல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. என்னிடமே பத்திற்கும் மேற்பட்ட [DICTIONARY OF SLANG] கெட்ட வார்த்தை அகராதிகள் உள்ளன.
 
என்னுடைய அவா என்னவெனில், தமிழிலும் அதைப்போன்றே பிரத்யேகமான அகராதிகள் தொகுக்கப்படுதல் வேண்டும். இந்த lexicography மிகவும் நாணயமாக "ஒழுக்கத்தின் காவலாளிகளின்" தலையீடு சிறிதுமின்றி நடைபெற வேண்டும். ஏதாவது சர்வகலா சாலைகள் இந்தப் பணியினை மேற்கொள்ளலாம். அரசியல் தலையீடுகள் இருக்குமெனில், தனியார் வசம் உள்ள பதிப்பகங்கள் முன் வரலாம்.
 
பெருமாள் முருகனும் சரி, தமிழ்நாடனும் சரி - இரண்டு விதத்தில் பாரியமான வரையறைக்குள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளனர். கெட்ட வார்த்தை என்றாலே பெண்ணின் பாலுறுப்பு என்ற வரையறையும், கெட்ட வார்த்தைகளை தமிழ் மற்றும் இதர மொழிகளின் இலக்கியங்களின் பின்புலம் என்ற வரையறைக்குள் மட்டுமே ஆய்ந்துள்ளனர். இவைகளைத் தாண்டி இத்தகைய ஆய்வாளர்கள் வர வேண்டும். சமூக தளத்திலே, சாதாரண மனிதன் கையாளுகிற கெட்ட வார்த்தைகளை சேகரித்து அவைகளின் பல்வேறு பரிமாணங்கள் - பின்னணிகளை காய்த்தல் உவத்தல் இன்றி பட்டியலிடப்பட்டு அர்த்தங்களை அவைகளின் கையாளுகை முறைகள் மாதிரிகளோடு அச்சில் கொண்டு வர வேண்டும்.

இத்தகைய கடமை நமக்கு உண்டு. நல்லதோர் கடமை இது. மொழிக்கு செய்யும் தொண்டன்றி வேறில்லை. செய்தவரையில், பெருமாள் முருகனுக்கும், தமிழ்நாடனுக்கும் 'தமிழ் கூறும் நல் உலகு' கடமைப்பட்டுள்ளது.
 
[அல்குல், தமிழ்நாடன், காவ்யா வெளியீடு, உரூபா 50/-]

0 comments:

Post a Comment