(வண்ணநிலவன் அவர்களின் ‘கடல்புரத்தில்’ பற்றி யாரிடமாவது
எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறேன். ஏன்
நண்பர்கள் யாராவது புத்தகங்களைப் பற்றி பேச இடம் கொடுத்தால் போதும், உடனே
‘கடல்புரத்தில்’ பற்றி பிதற்ற ஆரம்பித்து விடுகிறேன். அண்மையில் ஒரு நண்பரிடம் இது பற்றி சிலாகிக்க,
அவரும் இந்த நாவலைப் பற்றி தன்னுடைய மனசின் பிரஸ்தாபம் என்று இதை எழுதிக் கொடுத்து
விட்டார். இலக்கியத்தை எல்லோரும் ஒரே
மாதிரியாக துய்க்கிறோமா என்றறியும் ஆவலில் இதைப் படிக்க, ஏன் இங்கே
பதிவேற்றக்கூடாது என்று தோன்றியது.
அவரிடம் அனுமதி கேட்க, ‘உன் இஷ்டம்’ என்று முடித்து விட்டார். அவர்
என்னிடம் கொடுத்தவாறே பதிவேற்றியிருக்கிறேன்.
மிகப் பெரிய வாசகனாக வரக் கூடியவர்.
கூடுமா என்பது காலத்திடம்.)
பௌர்ணமியன்று பார்க்கின்ற கடலைப் போல பெரும் அலையடித்துக் கொண்டே இருக்கிறது மனதில். கடலின் இரைச்சல் எங்கோயிருந்து காதுகளை இடித்துக்
கொண்டேயிருக்கிறது. மனதின் இரைச்சலும் கூட. எப்போதோ படித்த 'காதலெனும் தீவினிலே' என்றொரு புத்தகத்தின் ஒரு பகுதி நினைவில் மேலெழுகிறது. அதில் மானுடவியல் குறித்து இப்படி சொல்லப்பட்டிருப்பதாக
நினைவு: “ மனிதனின் வாழ்வு அவனது பரிணாம வளர்ச்சி தொடங்கி இன்று வரை அன்பு என்ற ஒரு உணர்வின் மீதே ஆதாரப்பட்டு வந்திருக்கிறது . அதன் வழியாகவே அவனது மற்றைய செயல்கள் அனைத்தும் நிகழ்ந்திருக்கின்றன .” இந்த 'கடல்புரத்தில்' அதற்கொரு சான்று. மணப்பாட்டு அலைகளினூடே வாழ்ந்திருந்த ஒவ்வொரு மனசுக்கும் அதுவே ஆதாரமாக இருந்திருக்கிறது.
தமிழின் நாட்டுப்புறப் பாடல்கள் அனைத்திலும் பறையர் குலத்தோர் பாடும் பாடல்கள் மிகவும் விசேஷமானவை. ஏனெனில் மற்றைய பாடல்களைக் காட்டிலும் அவர்களது பாடல்களில் துணையைக் குறித்த விரக தாபம் அதிகமாய் இடம் பிடித்திருக்கும் . துணையின் பிரிவின் வலியை மேவியே அப்பாடல்கள் பெருமளவு அமையும். அன்பே பிரதானமாய். எத்தனையோ பெயர்களில் அழைத்தாலும் அன்பு என்னவோ மாறாமலே அப்படியேதானிருக்கிறது. இந்தக் கதையிலும் தான் எத்தனை விதமான பிரியங்கள். குருஸுவுக்கு தன்னுடைய வல்லத்தின் மீதும் கடலின் மீதும், ஏன் மரியம்மையின் மீதும் கூட பிரியம் இருக்கத்தானே செய்கிறது. மனித மனம் ஆழியைப் போல அத்துணை ஆழமானது . அதில் அன்பு மட்டுமே பிரதானம். மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான் . அத்தகையதொரு அன்பே மரியம்மைக்கு வாத்தியின் மேலும். அந்த பிரேமையை விளக்க வார்த்தைகளே கிடையாது. சாமிதாசின் மீது பிலோமிக்கும் , செபஸ்தியின் மீது ரஞ்சிக்கும் இருந்த பிரியத்தைப் போல . பிலோமியையும்
ரஞ்சியையும் பார்க்கையில் தி.ஜா வின் பாபு-ராஜத்தை, ஜெயகாந்தனின் ஹென்றி-தேவராஜனை போலத்தான் தோன்றுகிறது. நம் எல்லோருக்கும் எது தேவையாக இருக்கிறதோ தெரியாது. ஆனால் நமக்கென்று சொல்லிக்கொள்ள ஒரு மனிதன் நிச்சயம் தேவையாக இருக்கிறான். 'ஒரு மனிதன் எனக்கானவன் என்று சொல்லிக்கொள்ள; என் மனிதன் என் நண்பன் என்று சொல்லிக்கொள்ள' என்று தி.ஜா சொல்வதைப்போல. எதோ ஒரு வடிவில் அன்பு நம்மை எப்போதும் ஆட்படுத்தி வருகிறது. அது போல இங்கே ஒவ்வொரு மனிதனின் விஷயத்திலும் கண்களுக்கு புலப்படாமலே ஆனால் நினைத்தாலும் அழிக்க முடியாத ஒரு உயிரிழையைப்போல் அன்பு வழிநடத்திக்
கொண்டேயிருக்கிறது. என்ன மாதிரி ஒரு அன்பு இது . வண்ணநிலவன் மிகச் சரியான கதைக் களத்தைத்தான் தேர்தெடுத்திருக்கிறார். ஏனெனில் வேறெங்கு வாழ்கின்ற - இருக்கின்ற மனிதர்களைக் காட்டிலும் கடலோடு போராடி அதனூடே வாழ்க்கை நடத்துகின்றவானுக்கும் அன்புக்கும் தான் எத்தனை நெருக்கம். அவனுடைய அன்புக்கு அளவுகோலும் அழகுப்பூச்சும் கிடையாது. குருஸுவின் அன்பு அவனுடைய வல்லம் பிடித்த காய்ப்பு காய்த்து உரமேறிப்போன கைகளில் இருக்கிறது. மரியம்மையின் அன்பு அவள் பெட்டியின் அடியில் வைத்திருந்த தாழம்பூ மடலைப் போல. வாத்திக்கு தெரிந்த அந்த அன்பு அவளுக்குப்பின் அவ்வீட்டில் அனைவர் மனதிலும் வாசம் வீசவே செய்கிறது. சாமிதாஸின் அன்பு பிலோமியுடைய அருகாமையில் இருந்த அவனது நேர்மையில் இருக்கிறது. ஏன் லாஞ்சிக்காரன் ஐசக்குடைய பிரேமை கூட லாஞ்சி எரியும் நேரத்தில் கேதரினைக் காட்டி விடவில்லையா? என்ன மாதிரி அன்பு இது.
இவ்வளவு ஏன், அந்த சண்டையும் உயிரிழப்பும் கூட ஏதோவொரு காரணமாகத்தானே. ஊரின் மீது பவுலுப் பாட்டாவிற்கும், பெரிய மாமியாவிற்க்கும் இருந்த அன்பைப் போல ; தரகனாருக்கு பிலோமிக்குட்டி மீது இருந்த அன்பைப் போல ; அவ்வூரின் பிள்ளைகளுக்கு தங்களது அப்பச்சி மீது இருந்த அன்பைப் போல ; அந்த கோயில் மணிக்கும் அந்த கடற்கரைக்கும் இருந்த அன்பைப் போல ; இப்படி ஒவ்வொரு இடத்திலும் அன்பாகவே அள்ளி இறைத்திருக்கிறார் வண்ணநிலவன் . இது எல்லாவற்றிற்கும் உச்சமாய் பிலோமிக்குட்டியின் அன்பைச் சொல்லலாம். பிலோமிக் குட்டியைப் பார்க்கையில் கடலை பார்க்கிற உணர்வு ஏற்படுகிறது. சாமிதாஸி டம் மையல் கொண்ட பௌர்ணமி கடலைப் போன்ற பிலோமி; அவனது பிரிவுக்குப் பின் அலைக்கரங்கள் நீண்டிருந்தும் கரையைத் தொடாத பிலோமி; அம்மையின் கண்டிப்பு குரல் கேட்கும் இரைச்சல் மிகுந்த கடலைப் போன்ற பிலோமி ; குழந்தைகளின் அன்பில் திணறிப் போகும் நுரை பொங்கி வழியும் கடல் போன்ற பிலோமி; வல்லத்துக்காரனுக்குக் கடலைப் போல் ரஞ்சிக்கு தோழியாய் அமைந்த பிலோமி என எத்தனை பரிமாணங்களில் பிலோமியைத் தந்திருக்கிறார். தனிமைத் துயர் கண்டு ஓடும் மனிதன் அன்பிடம் மட்டுமே தன்னை ஒளித்துக்கொள்கிறான் . அந்த அன்பு மட்டுமே அவனை இன்னும் மனிதனாய் திரியச் செய்திருக்கிறது. கடல்சார் மனிதனுடைய வாழ்க்கை கடலில் மிதக்கும் வல்லத்தைப் போல. அது பட்டும் படாமலே இருக்கும்; ஆனால் அதற்கும் வல்லத்திற்கும் உள்ள உறவு மாறாதது . கடலைன்னையின் மடியில் வளர்ந்த மனுசப்
பயல்களுக்கு அன்பும் கூட கடலளவுதான் . குறைவில்லை. ‘கடல்புரத்தில்’
பயலுகளுக்கு ஏற்படும் இயலாமையும் அதனால் வரும் கோபமும் கூட ஒருவகையான அன்பின் வெளிப்பாடுதான் . நிலையில்லாத அந்த வாழ்விலும் அவர்களுக்கு நிம்மதியைத் தந்தது அந்த அன்புதான்.
Love is the principal means of escape
from the loneliness which afflicts most men and women throughout the greater
part of their lives. - Bertrand
Russell.
0 comments:
Post a Comment