தனது எழுபதுகளில் நோய்மையில் விழுந்து அக்டோபர்
15, 2005 திகதி அமெரிக்காவில் குடும்பம் சூழ மரித்துப் போனார் சுந்தர
ராமசாமி. தமிழ் நவீன இலக்கியத்தின் ஒரு
முக்கியமான ஆளுமை, நீண்ட தனது அகவைகளில் ஒப்பீடாக குறைந்த அளவே எழுதினாலும், வேறு
பலரை எழுத வைத்தவர், நல்ல எழுத்தாளர்கள் பலரைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்தவர்,
இடைவிடாமல் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பல நூறு இலக்கிய ஆளுமைகளை தனது வீட்டிற்கு
வரவழைத்து உபசரித்தது மட்டுமன்றி அவர்களுடன் ஓயாது இலக்கியத்தை சம்பாஷித்து
வந்தவர், வெங்கட் சாமிநாதன், கநாசு, திகசி, நா.வானமாமலை, கைலாசபதி, வல்லிக்கண்ணன்
போன்றோருக்கு கொஞ்சமும் தரத்தில் குறைவில்லாமல் இலக்கிய விமர்சனம் செய்து வந்தவர்,
மாற்றுக் கருத்தினரையும் புரிந்து கொண்டு அவர்களது மேதமையை அங்கீகரித்தவர், தமிழ்
நாவல் உலகின் மூன்று முக்கிய படைப்புக்களை அளித்தவர், பசுவய்யா என்ற கவிஞர், காலச்சுவடு
இதழ் மற்றும் பதிப்பகம் நடத்தியவர், ஓயாது பயணங்கள் செய்தவர் என்ற பெருமைகளை
எல்லாம் தனது இயல்பாகவே கைவரப் பெற்ற ஆளுமையான சுந்தர ராமசாமி அவர்களின் மறைவால்
தமிழ் இலக்கிய உலகம் தனது வழிகாட்டு நட்சத்திரங்களில் ஒன்றை இழந்து போனது.
அன்னாரைக் குறித்து, அவர் மறைவு குறித்து நிறைய
பேர் பேசியும் எழுதியும் ஆகி விட்டது.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் சுந்தர ராமசாமி என்னவாக இருந்தார் என்ற தரப்பு
நியாயங்கள் - சோகங்கள் எழுத்தில் பதிந்தாகி விட்டது. என்றாலும் கூட, சுராவின்
துணைவியாரும், மகள்களும், பெயரன் பெயர்த்திகளும் அவரை எப்படிப் பார்த்தார்கள்,
அவர்களுக்கு அவர் என்னவாக இருந்தார், அவரது ஆளுமை அவர்களது உயிர் வாழ்க்கையை
எங்கனம் பாதித்தது என்ற பதிவு செய்யப்படவே இல்லை என்ற குறையை “எங்கள் நினைவில்
சுரா – குடும்பத்தாரின் நினைவுகள்” எனும் சின்னஞ்சிறிய நூல் போக்கியிருக்கிறது.
முக்கியமாக, சுராவின் துணைவியார் கமலா அம்மா
அவர்களின் எழுத்து வாசகரை வரிகளிலிருந்து தலையை நிமிர்த்த அனுமதிப்பதில்லை. முக்கியமான இலக்கிய ஆளுமைகள் பலர் சுராவிடம்
தங்களது உறவை எப்படி கட்டி அமைத்திருந்தனர், அவர்களைப் பற்றிய சுராவின் மதிப்பீடு,
இவை மட்டுமன்றி இவர்கள் தமது வீட்டிற்கு வருகை தந்திருந்த நேரங்களில் நடந்து
கொண்டது, அவர்களை கமலா அம்மா அவதானித்தது என்று இலக்கிய வாசகன் ஒருவனுக்கு சுவராஸ்யம்
ஏற்படுத்தும் செய்திகள் இந்தச் சிறிய புத்தகத்தில் நேர்மையாக தொகுக்கப் பட்டுள்ளன. கமலா அம்மா அவர்களின் உரைநடை எளிமையும் அர்த்த
புஷ்டியும் நிறைந்தது. ஐம்பது வருடங்கள்
கூடவே இருந்து கணவருக்குப் பணிவிடை செய்து, சக தோழியாய் பயணித்தவருக்கு, இந்த
அபூர்வமான உரைநடை கைவராமல் இருந்தால்தான் புதுமை.
ஆளுமைகளைக் குறித்த கமலா அம்மாவின் அவதானிப்புத்
தொகுப்பை அடுத்து, சுராவின் இரண்டு மகள்களும் தங்களது அப்பா விடைபெற்றுக் கொண்ட
நாட்களைப் பற்றி நெகிழ்வாக தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் இவ்விரண்டு கட்டுரைகளையும் தேர்ச்சியாக தமிழில்
மொழிபெயர்த்துள்ளார் சஞ்சிகையாளர் கவிதா முரளீதரன்.
[காலச்சுவடு வெளியீடு, நன்கொடை உரூபா 35/-]
0 comments:
Post a Comment