திரு வி.ஆர்.கிருஷ்ண
அய்யர் மறைந்து விட்டார். இந்த செய்தி இடி
போல் இறங்கியது நேற்று இரவு.
அண்மையில்தான் தனது நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட போது அதில்
தள்ளாமையையும் பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்தவர். என்னைப் போல லட்சக்கணக்கானோரின் கதாநாயகன். அனில் திவன், சோலி சோரப்ஜி போன்றோரின் அஞ்சலிக்
கட்டுரைகள் இன்று தினசரிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. தமிழ் ஒலி ஒளி ஊடகங்களில் சன் டிவி மட்டும்
நேற்று சிறப்பானதொரு அஞ்சலி அரங்கை நடத்தியது. தியாகு, மனுஷ்யபுத்திரன் மற்றும்
உயர்நீதி மன்ற வழக்குரைஞர் ஒருவர் கலந்து கொண்டு அய்யரின் வாழ்வையும் சிறப்பையும்
எடுத்துரைத்தனர்.
அய்யர் அவர்களை நான்
எப்படிக் கண்டடைந்தேன்? எனது இருபதுகளில் ‘தி ஹிந்து’ எப்போதும் என்னிடம்
ஒட்டிக்கொண்டிருக்கும். ஆங்கில இலக்கியம்
படிக்கும் மாணவர்கள் தி ஹிந்துவை கையில் வைத்திராவிட்டால் தங்களின் மிகச் சிறந்த
அடையாளத்தை இழந்து நிற்பார்கள் என்று நாங்கள் நம்பவைக்கப்பட்டிருந்தோம். அதில் வரும் தலையங்கங்கள், நடுப்பக்க
கட்டுரைகள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தரப்படும் open page என்ற நான்கு பக்க
சிறப்பிதழ் ஆகியவை, ஆங்கில இலக்கியம் கற்கும் மாணவனின் பார்வையில், இன்றியமையாதவை. காலையில் தி ஹிந்துவை படித்துவிட்டு,
கல்லூரிக்குப் போனால் பெரும்பாலும் அங்கு மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துக்
கொண்டிருப்பார்கள். பி.ஏ, ஆங்கில இலக்கிய
மாணவர்கள் சுமார் பத்து பேர் மைதானத்தில் அமர்ந்து அன்று தி ஹிண்டுவில்
வெளிவந்திருக்கும் தலையங்கம், மற்றும் சிறப்புக் கட்டுரைகளை விவாதிக்க
ஆரம்பிப்போம். வகுப்புகளைவிட இது ஏனோ
எனக்கு மிகவும் பிடித்துப் போனது.
இந்த விவாதங்களின்போதுதான்
கிருஷ்ண அய்யர் அறிமுகமானார். ‘நெருப்பு பறக்கும்’ எழுத்துக்கள். English Prose Paper I-ல் இருந்த எந்த ஆங்கில
இலக்கிய கர்த்தாவின் எழுத்துக்களையும் விட எனக்கு, அய்யரின் நடையும், சொல்லாடலும்
பிடித்துப்போனது. அய்யரின் அடுத்த கட்டுரை தி ஹிந்துவில் எப்போது வரும் என்று
ஏக்கம் பிடித்துக் கொள்ளும். கட்டுரை
ஒன்று வெளிவந்து விட்டால், நண்பர்களை தொலைபேசியில் அழைத்து சந்தோஷத்தை பகிர்ந்து
கொள்வோம். அன்று விவாதம் களைகட்டும். ஐயரின் கட்டுரை வெளிவந்த நாட்களில் நண்பர்கள்
அனைவரும் தங்கள் வீட்டிலிருந்து dictionary கொண்டு வருவோம். ஒரு கட்டுரையில் அறுபது முதல் நூறு
வார்த்தைகளாவது நாங்கள் முதல்முறையாக கேள்விப்படுவதாக இருக்கும். வெட்கங்கெட்ட அரசியல்வாதிகளை கட்டுரை ஒன்றில்
pachydermic politicians என்று வர்ணித்திருப்பார்.
தொழில்முறை ஆங்கில வாத்தியார் ஆகி இருபது
வருடங்களுக்கு மேலான இற்றை நாட்களில், எப்போதாவது பொதுவெளிகளில் பேசும்போது,
உங்களுடைய உரையில் இருந்த பல வார்த்தைகள் எங்களுக்குப் புரியவில்லை என்பதாக சிலர்
சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையாக
இருக்கக்கூடும். மைதானத்தில் மூன்று
வருடங்களுக்கு மேலாக அய்யரின் கட்டுரைகளை வைத்துக்கொண்டு அனல் பறக்க விவாதங்களை
நடத்திய பிறகு, அவரின் பாதிப்பு கொஞ்சமும் இல்லாமலிருக்க, நாமென்ன pachydermic politicians-களா?
நேற்று இரவு தூக்கம்
பிடிக்கவில்லை, எவ்வளவு முயன்றாலும்.
பிரிந்தவர்கள் நம்மை இப்படியா பாதித்திருக்கிறார்கள்? அய்யர் ஒரு வகையில் எனக்கு ஆசிரியர். எனக்கு ஆங்கிலம் இருபத்தைந்து வருடங்களாக
சொல்லிக் கொடுக்கிறார். இன்னும் இருபத்தைந்து
வருடமாவது சொல்லிக் கொடுப்பார் என்று நம்பிக்கை.
எனது முதல் ஆங்கில ஆசிரியர் திரு.டிவிஎஸ் மார்ச் 2012-ல் என்னை அனாதையாக்கிவிட்டு
போனார். அய்யரின் நேற்றைய முடிவில் எனது
துரோணாச்சாரியாரும் மறைந்தார்.
0 comments:
Post a Comment