நினைத்தாலே இனிக்கும்

| Thursday, December 25, 2014

கே.பாலச்சந்தர் - தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை இவரது படைப்புலகம் மூன்று கட்டங்களைக் கொண்டது. 
 
  முதல் கட்டம் அவர் ஏற்கனவே மேடைப்படுத்தியிருந்த நாடகங்களை செல்லுலாய்டில் பதிந்து வந்த காலம். வசனமும் மிகையுணர்ச்சியும் சட்டகங்களை நிரப்பியிருக்கும். மத்திய தர படித்த குடும்பங்களின் பிரச்சினைகளை உரக்கச் சொல்லும் இந்தப் படைப்புக்கள் அன்றைய எம்ஜிஆர் - சிவாஜி படங்களுக்கான ஒரு மாற்றாக முதல் தலைமுறை படித்த மத்திய தர குடும்பங்களுக்கு தெரிந்தது. படித்தது சரியாக நினைவு இருக்குமென்றால், கே.பி.அவர்களின் திரை வரவு 1963 அல்லது 1964 ஆக இருக்கலாம். இவரது பட்ஜெட்டிற்கு சிவாஜியோ எம்ஜிஆரோ சாத்தியம் இல்லை. வேறொரு கோணத்தில், அவர்களுக்கு இவரது படைப்புக் களனில் இடமும் இல்லை. பிற்பாடு, சிவாஜி இவரது ஒரே ஒரு படைப்பில் பங்கு பெற்றிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், ஜெமினி கணேசன், நாகேஷ், ஜெயந்தி போன்றோர் கே.பியின் நாயக நாயகி தேவைகளை தம்மால் முடிந்த படைப்பாற்றலோடு ஈடிட்டிருக்கிறார்கள்.

இரண்டாவது கட்டம், படைப்பூக்கம் மிகுந்தது. அன்னாரின் வெகுமதியான படைப்புகள் அனைத்துமே இந்தக் காலகட்டத்தில்தான் வெளிவந்துள்ளன. திரை மொழியை இதற்குள்ளாக கற்றுக்கொண்டது மட்டுமன்றி, தனித்த திரை மொழி ஒன்றையும் தேர்ந்திருந்தார். எப்படி பேசா விடயங்களை ஜெயகாந்தன் எழுத்தில் ஒரு அடாவடித்தனத்தோடு கொடுத்து வந்தாரோ, அதேபோல் கே.பி. திரையில் அதுவரையில் தமிழ் சினிமா பேசாத விடயங்களை காண்பித்தார். இதற்காண், ஜெயகாந்தனும் பாலச்சந்தரும் பல சமயங்களில் சர்ச்சைகளின் மையமாகிப் போனது சமீபத்திய தமிழ்த் திரைப்பட வரலாறு. பாலச்சந்தர் அவர்களின் பெண் பாத்திரங்கள் மிகவும் சிலாகிக்கவோ, விமர்சிக்கவோபட்டவை. அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், அபூர்வ ராகங்கள், முக்கியமாக - அரங்கேற்றம் போன்ற படங்களில் பெண் மாந்தர்கள் அன்றைய சமூகத்தில் அதிர்வலைகளை உண்டாக்கினார்கள். ஆனால், ஜெயகாந்தனுக்கும் கே.பி. அவர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. ஜெ.கே.வின் நாயகிகள் இறுதிவரைக்கும் தாங்கள் நம்பிவந்ததில் சமரசம் செய்துகொள்வதில்லை. இவர்கள் இயல்பாகவே போராளிகள். போராளிகள் சமரசம் பேச முடியாதவர்கள். ஆனால், பாலச்சந்தரின் பெண்கள் புரட்சி போன்ற ஒன்றை யோசித்துவிட்டு, கொஞ்சம் பேருக்கு தன் எதிர்ப்பைக் காட்டிய பிறகு, மரபான சமூகத்தோடு ஒன்றிப் போவார்கள். சிந்து பைரவி படத்தின் சிந்து ஒரு முக்கியமான உதாரணம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஜெயகாந்தனின் பெண்கள் பெண்ணீய வாதிகள். பாலச்சந்தரின் பெண்கள் பெண்ணீயத்தை உரத்த குரலில் பேசிவிட்டு, காத்திரமாக செயல்படும் நேரம் வாய்க்கும் பொழுது, ஆண் தர்மத்தால் நிறைந்திருக்கும் சமூக நீதிகளோடு சமரசிப்பார்கள். 

நினைத்துப் பார்க்கிறேன். பாலச்சந்தர் மட்டுமே இதற்குக் காரணம் ஆகிவிட மாட்டார். இவருடையது பெரும் வணிக ஊடகம். வணிக ஊடகத்தின் அன்றையை கருத்துரீதியான சாத்தியக் கூறு இவ்வளவுதான். ஜெயகாந்தன் ஒரு எழுத்துக்காரன். வெகுஜனத்தால் ஆதரிக்கப்பட்டாக வேண்டிய பெரும் வணிகத்தைப் பற்றி கவலை சிறிதும் தேவைப்படாத எழுத்தாளி. இந்த வணிக கூட்டல் பெருக்கல்கள் பாலச்சந்தரின் பெண்களை சமரசப்படுத்தியிருக்கலாம். எண்பதுகளின் மிகத் துவக்கத்தில் தண்ணீர்...தண்ணீர் மற்றும் அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்கள் வேறு ஒரு தளத்தில் மிகத் துணிச்சலானவை. இவரது இந்தக் காலகட்ட படங்களை - ஒவ்வொன்றையும் - பலமுறை பார்த்து ரசித்தோ முறைத்தோ இருந்தவன் என்பதால், தனிப்பட்ட காரணங்களுக்காக 'தப்புத் தாளங்கள்' என்ற படம் ரொம்பவும் பிடிக்கும். வீட்டிலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் உயர்நிலைப் பள்ளிக்கு சைக்கிள் கொடுத்து அனுப்பப்பட்ட நாட்கள் அவை. அப்பா அம்மா பணி செய்த பள்ளியிலேயே அதுவரை படித்து வந்ததால் நான் ரொம்பவும் விரும்பிய ஆனால் செய்ய முடியாத - எனது நண்பர்கள் அனைவரும் தாராளமாக செய்து வந்த - ஒரு காரியம் உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட நாட்களில் செய்ய முடிந்தது. வாய் கமழ கெட்டவார்த்தைகள் பேசுவதுதான். பள்ளிக்கு நண்பர்களோடு சைக்கிளில் போய்வரும் சமயம், பள்ளி நேரங்கள், விளையாட்டு பாடவேளைகள் போல எப்போதும் வாயில் கெட்ட வார்த்தைகள்தான். கூடப்படிக்கும் பல பயலுகள் கிட்ட வரவே பயப்பட்ட நாட்கள். தப்புத் தாளங்கள் படத்தில் நிறைய முறைகள் படம் திடீரென்று கட் செய்யப்பட்டு "இந்த இடத்தில் இடம்பெற்ற கெட்ட வார்த்தை சென்சார் குழுவால் தணிக்கை செய்யப்பட்டது" என்ற சிலைடுகள் காண்பிக்கப்படும். இந்த காரணத்தால் ஏனோ பாலச்சந்தர் என்னுடைய தனிப்பட்ட பிரியத்திற்குள்ளாகிப் போனார். 


கே.பி. படைப்புலகின் மூன்றாவது மற்றும் இறுதியான படைப்புக் காலம் ஒரு துன்பியல் நிகழ்வு. இரண்டாயிரமாவது ஆண்டுகளின் ரசனை தன்னுடைய படைப்புத் திறனிலிருந்து பாரியமாக வேறுபட்டதாக அவர் உணர்ந்திருக்க வேண்டும். தன்னுடைய அடுத்தடுத்த தலைமுறைக் கலைஞர்களின் படைப்புக்கள் போலவே தனதையும் ஆக்க முயன்று படுதோல்வி அடைந்த காலம். இந்தக் கால கட்டத்தில், இவரது ஒரு படத்தில் கதாநாயகியைச் சுற்றி இருபது முப்பது பெண்கள் வெள்ளை கவுன் போட்டுக்கொண்டு ஆடிய கொடுமையும் நடந்தது. பிரச்சார நெடி தாங்க முடியாத அளவு அடித்ததும் இந்தக் காலகட்டத்திலான இவரது படைப்புக்களில்தான். 

எனக்கு எப்போதுமே தோன்றுவதுண்டு. இவரது கடைசிப் படமாக 'சிந்து பைரவி' இருந்திருக்க வேண்டும். ஒருவேளை, இவரது கடைசிப் படம் அதுதானோ! ஜெயகாந்தன் இந்த வகையிலும் ஒருபடி மேலே. எழுதுவதை எப்போதோ நிறுத்திவிட்டார்.

கே.பாலச்சந்தர் - எனது பதின்மங்களை பரவசப்படுத்திய கலைஞன். இருபதுகளில் சிந்திக்க வைத்தவன். எப்போதுமே மானசீக நண்பன். போய் வாருங்கள் கே.பி.!

0 comments:

Post a Comment