திண்ணை 11

| Sunday, November 30, 2014


நவம்பர் 30, 2014
சற்று முன்பு THIRD PERSON படம் பார்த்து முடித்தேன். மிகவும் மெதுவாக நகர்வது போல கொஞ்ச நேரம் உணர்ந்தாலும், பிற்பகுதியில் மிகவும் ஆழமாக கால் பரப்பி கரையை அகலப்படுத்தியவாறு முன்னேறுகிறது. Babel போலவே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சம்பவங்கள் இரண்டு மணி நேரத்தைக் கட்டுகின்றன. ஒரு எழுத்தாளர் - மனைவி - காதலி என்ற ஒரு சங்கிலி. சந்தேகிக்கும் படியான தொழிலில் இருப்பவன் - எதிர்பாராத இடத்தில் சந்திக்க நேரும் வேற்று மொழிப் பெண் என்ற அடுத்த சங்கிலி. மணமுறிவிற்குப் பின் தன்னுடைய முன்னாள் மனைவியிடம் மகனை காட்ட மறுக்கும் தந்தை - பார்க்கத் துடிக்கும் தாய் - தந்தையின் இந்நாள் காதலி என்ற மூன்றாவது சங்கிலி.
 
படத்தில் இந்த மூன்று சங்கிலிகளும் எந்த இடத்திலும் ஒன்றுக்கொன்று உரசிக் கொள்ளவோ, பிணைந்து கொள்ளவோ இல்லை. என்ன சொல்ல வருகிறது இந்தப் படம் என்பதை தமிழ்ப் படம் பார்க்கும் மனநிலையோடு ஒருவர் புரிந்து கொள்ள முடியாது. வசனங்கள் - கூர்மையாக கவனிக்கும் பட்சத்தில் - இதற்கு முன்னே என்ன நடந்திருக்க முடியும் என்று சொல்கின்றன. எல்லாவற்றையும் தெளிவாக விளக்க இயக்குனர் முயலாதது மட்டுமல்ல, அப்படிப்பட்ட செயலை முனைந்து தவிர்க்க முயன்றிருக்கிறார். முக்கியமாக, ஒத்துக்கொள்ளப்பட்ட சமூக மதிப்பீடுகளைப் பற்றிய பயம் இயக்குனரிடம் இல்லை.
 
இந்தப் படத்தின் கதை என்ன? சம்பவங்களை மட்டும்தான் இந்தப் படம் காட்டுகிறது என்று எண்ணுவதற்கு இடம் இருக்கிறது. ஆனால், இந்தப் படம் கதை ஒன்றையே மூலமாக வைத்து நகர்கிறது. எதைத் தேடி தினமும் ஓடுகிறோமோ, எதைத் தேடிக் கண்டுபிடித்து விட்டதாக இறுமாப்பு கொள்கிறோமோ, எதை பிறந்த குடும்பத்திலேயோ அல்லது மணந்த குடும்பத்திலேயோ கண்டுவிட்டதாக நிம்மதி பெருமூச்சு முதலில் விட்டு பின்பு நிராசையால் மூச்சடைத்து போகிறோமோ, எதை மனைவிகளை காதலிகளாக ஆக்குவதின் மூலமோ மனைவிகள் காதலிகளாக மாறுவதின் மூலமோ பெற நினைக்கிறோமோ, எதை பெரும் பணம் மற்றும் அதிகாரம் மூலமாக அடையமுடியும் என்று நினைக்கிறோமோ அதை - உண்மையான அன்பை - அடைய எதுவுமே வலிந்து செய்ய வேண்டாம் என்பதைப் பற்றித்தான் இந்தப் படம் பேசுகிறது.
 
Archies Poster ஒன்று உண்டு. மிகவும் புகழ் பெற்றது எண்பதுகளில். நான் அடிக்கடி நண்பர்களிடம் நினைவு கூறுவதுண்டு. அதன் வாசகம் இப்படி இருக்கும்.

If you love
something,
set it free.
if it comes back,
it is yours;
if it doesn't,
it never was.


பெரிய ஹீரோ-வில்லன் வேலையெல்லாம் எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும்: அதை - அன்பை - கண்டுணரலாம் என்கிறது இந்தப் படம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
----
நவம்பர் 28, 2014-11-30
இன்றைய தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் திரு.மு.ராமநாதன் அவர்கள் எழுதியுள்ள intellectual property கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. தனது கட்டுரையின் சில பகுதிகள் முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு முறையும், அண்மையில் ஒரு முறையும் திருடப்பட்டு விட்டன என்று கவலைப்படும் ஆசிரியர், plagiarism இங்கு எப்படி நடந்து வந்திருக்கிறது என்பதைப்பற்றி சற்றே விவரிக்கிறார். இலக்கியத் திருட்டு ஒன்றும் நமக்கு புதிதல்ல. திரைப்படத் துறையில் சமீப காலமாக வெளிவரும் எல்லாப் படங்களும் தன்னுடைய கதையிலிருந்து திருடப்பட்டதாக எங்கிருந்தோ ஒருவர் கோர்ட்டை அணுகிய வண்ணம் உள்ளார். அதற்கு ஆதாரமாக சில வருடங்கள் முன்னமேயே தான் எழுதி பதிப்பித்த புத்தகம் ஒன்றையும் காட்டுகிறார். திரு.கமல்ஹாசன் அவர்களின் பெரும்பாலான படங்களும் இந்த ரகத்தை சேர்ந்தவைதான் என்று ஆவண சாட்சியாக தெளிவு படுத்தும் புத்தகம் ஒன்றை புத்தகக் கடை அலமாரி ஒன்றில் கொஞ்ச நாள் முன்பு பார்க்க நேர்ந்தது. The secret of creativity lies in your intelligence of hiding the source -என்று எங்கேயோ படித்தது ஞாபகம் வருகிறது. Copying என்பதில் உள்ள கௌரவக்குறைச்சல் inspiring என்பதில் இல்லை.
எல்லாமே inspiring மயம்தான்!
----

0 comments:

Post a Comment