தலைப்பிரசவம்

| Sunday, November 16, 2014
ஒவ்வொரு மொழிக்கும் அதற்கே உரிய சிறப்பான இலக்கிய வடிவங்கள் உண்டு.  சில வடிவங்கள் அந்த மொழியின் எழுத்துமுறை வெளிப்பாட்டு வழியாக பல நூற்றாண்டுகள் நீடித்து விடுவதுண்டு.  தமிழ் மொழி 2000த்திலிருந்து 5000 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டதாக வெவ்வேறு தரப்பினர் வேறுபட்ட தரவுகளின் அடிப்படையிலும், புனைவுகளின்  அடிப்படையிலும் கூறி வருவதுண்டு.  மிகக் குறைந்த கணக்கை நாம் நம்புவதாக இருந்தாலும் தமிழ் மொழி இரண்டாயிரம் வருட பாரம்பரியம் கொண்டது. இதற்கு மிகக் குறைவான இலக்கிய பாரம்பரியம் கொண்ட மொழிகள் பலவற்றில் இலக்கிய வடிவங்கள் மிகுந்த எண்ணிக்கையில் ஒன்றின் இடத்தை இன்னொன்று புறந்தள்ளி வந்த வண்ணம் உள்ளது.  ஒரே சமயத்தில் பல்வேறு இலக்கிய வடிவங்கள் பெரும் செல்வாக்கோடு விளங்கி வந்த காலங்களையும் அம்மொழிகளின் இலக்கிய வரலாற்றை ஆராயும் ஒருவர் கண்ணுருகிறார்.

கதை சொல்லல் தமிழில் யாப்பால் கட்டுப்பட்ட செய்யுட்களின் மூலமாகவே நடந்து கொண்டிருந்தது. இது மட்டுமன்றி, மனித ஜீவிதத்தின் பிற துறைகளான மருத்துவம், கல்வி, ஜோதிடம், நிர்வாகம், தத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் எண்ணங்களையும் இலக்கணத்தால் இறுக்கிக் கட்டப்பட்ட செய்யுள் வடிவமே தாங்கி வந்திருக்கிறது.  எழுத்து முறை ஜனரஞ்சகமாகாத நிலையில் செவி வழியாகவே மனித அறிவு பயணப்பட்டுக் கொண்டிருந்தபொழுது, இலக்கணத்தால் கட்டுப்பட்ட மற்றும் அதன் காரணத்தினாலேயே ஒரு இசை வடிவமும் வாய்க்கப்பெற்ற செய்யுள் என்ற இறுக்கமான கட்டு தேவையாக இருந்துள்ளது.  வரிவடிவம், அச்சு இயந்திரம் மற்றும் பதிப்பக தொழில் ஆகியவை சமூகத்தின் இடுக்குகளிலும் நுழைய தலைப்பட்ட பிறகு, பழைய வடிவத்தை அதன் செல்வாக்கு தானாகவே குறையத் தொடங்கியிருந்த காலத்திலும் பிடித்துக் கொண்டிருந்ததை தமிழரின் பிற்போக்குத் தனம் என்ற தைரியமாக கூறலாம்.  பண்டிதம் ஜனரஞ்சகமாவதில் பரம்பரைப் பண்டிதனுக்கு சந்தோசம் இருக்க முடியாது.  அனைவரும் படித்தவர்கள் என்ற நிலையில் பரம்பரைப் பண்டிதன் அடிபட்டுப் போனது மாறும் காலத்தின் மகத்துவம். 
 
தமிழில் வசனம் மிகக் குறுகிய ஆயுளைக் கொண்டது.  கிருத்துவ சாமியார்கள் தமிழ் வசனத்தின் ஆரம்ப வருட கர்த்தாக்கள்.  தமிழ் நாவல் வேதநாயகம் பிள்ளை, ராஜம் அய்யர் வழியாக கிளை விடுகிறது.  தமிழில் கதை சொல்லல் ஜனநாயகப் படுத்தப்பட்டது நாவல் வடிவம் பிறந்ததிலிருந்து என்று சொல்ல ஒரு கோணம் உண்டு.  வருடக் கணக்கான முறையான பயிற்சி அதற்கு முன்னர் கதை சொல்வோருக்கு தேவைப்பட்டது. கதா காலட்சேபம் செய்தவர்கள் அது சம்பந்தமான நுட்பங்களை தங்களின் முன்னோர்களிடமிருந்தே சுவீகரித்துக் கொண்டார்கள்.  இந்த நுட்பங்கள் குடும்ப ரகசியமாகவும் காப்பாற்றப்பட்டன.  சொல்லப்போனால், தமிழிலே வரிவடிவ இலக்கியம் மெத்தப்படித்த சாதிப் படி நிலைகளில் உயர்ந்திருந்தோரிடமும், செவிவழி கதை சொல்லல் உள்ளிட்ட ஆவணம் - இலக்கணம் இல்லா கலை வடிவங்கள் பாட்டாளி வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டோரிடமும் இருந்தன.  புதிய வடிவங்கள் பண்டிதரின் ஆதரவை பெற முடியாதது மட்டுமல்ல, அவர்களின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருந்தது.

இத்தகைய கட்டுக்கோப்பான தமிழ் இலக்கிய சூழலில் காலம் முன் வந்து எதோ ஒரு பெரிய மாற்றத்தை விளைவித்தால் ஒழிய, புதிய வடிவங்கள் பிறப்பதற்கான சாத்தியமே இல்லாமல் இருந்த நிலையில், கும்பினியாரின் வருகை வரி வடிவ புனைவு மற்றும் புனைவற்ற எழுத்து மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட காரணமாயிருந்தது.  ஹிந்து பிராமண, வேளாள குடும்பங்களில் வசதி கொண்ட பல தங்கள் ஆண் பிள்ளைகளை இந்தியாவில் வழங்கப்பட்ட ஆங்கில பள்ளிக் கல்வியையும் தாண்டி இங்கிலாந்திற்குச் சென்று சட்டம் மற்றும் பிற அறிவுசார் துறைகளில் பட்டங்கள் பெற வைத்தன. தங்களது முறைசார் கல்வியின் ஊடாகவும், இது சமயத்து தங்களுக்கு ஏற்பட்ட இயல்பான ஆர்வத்தின் காரணமாகவும் ஆங்கில மற்றும் பிற ஐரோப்பிய இலக்கிய கர்த்தாக்களின் மாபெரும் படைப்புக்களை படிக்க நேர்ந்த அந்த இளைஞர் குழாம், தத்தம் தாய்மொழிகளில் அப்படைப்புக்களை மொழியாக்கம் செய்தனர்.  அவர்களில் பலர் இலக்கிய கற்பனை மிகுந்தவர்களாக இருந்ததும், வேறு பலரின் தரமான இலக்கிய மொழிபெயர்ப்புகளும் இந்திய மொழிகளின் இலக்கிய வரலாற்றின் புது ரத்தம் பாய்ச்சின என்ற கூற்றில் மிகைப்படுத்தல் இல்லை. கட்டுரை, சிறுகதை மற்றும் நாவல் ஐரோப்பிய இலக்கிய உலகின் நன்கொடை.  நமக்கு இன்று நன்கு பரிச்சியமாகியிருக்கும் மேடை நாடகமும் கூட இறக்குமதியான கலை வடிவம்தான். 
 
நாம் இங்கு பேச வந்தது யாப்புடைத்த கவிதை தமிழிலே நுழைந்ததைப் பற்றித்தான்.  முதலிலே அதை பரிசோதனை முயற்சியாக செய்து பார்த்தவர் பாரதியார்.  அவருடைய வசன கவிதை முயற்சிகள் தமிழிலே புதிய போக்கொன்றை தோற்றுவித்தது.  அவருடைய ‘காட்சி’ என்ற படைப்பில் புலனாவது கவிதையா, வசனமா என்பது முடிவு செய்யப்படாமல் நீண்ட காலம் ருசிக்கப்பட்டு வந்தது.  பாரதி பன்முகம் கொண்டவர்.  கவிஞர், ஆசிரியர், விமர்சகர், சஞ்சிகையாளர், சுதந்திரப் போராளி, பதிப்பாளர் போன்ற பல்வேறு நிலைகள்.  அவருக்கு அடுத்து சுய பிரக்ஞையோடு வசன கவிதை வடிவத்தை குறிப்பிடத்தக்க அளவிலே எடுத்தாண்டது யார் என்ற கேள்வியை நமக்குள்ளே எழுப்பி அதற்கு விடைதேடும் பொழுது 1900ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் திகதி கும்பகோணத்தில் பிறந்த, தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நா.பிச்சமூர்த்தி அவர்கள் நமக்கு இருள் காட்டில் பெரும் ஜோதியாய் பிரசன்னம் தருகிறார்.

கும்பகோணத்தில் பட்டப்படிப்பு முடித்த நா.பி. அவர்கள் சட்டம் படிப்பதற்காக சென்னை செல்கிறார்.  சட்டம் முடித்து பிளீடராக சுமார் பதினைந்து வருட காலம் பணியாற்றிய பிறகு அதை உதறிவிட்டு முப்பதுகளின் இறுதியில் ஹிந்து அறப்பணித் துறையில் அதிகாரியாக பதினெட்டு ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெறுகிறார்.  அமெரிக்க கவிஞரான வால்ட் விட்மனின் ‘புல்லின் இதழ்கள்’ என்ற தொகுப்பால் மிகவும் பாதிக்கப்பட்ட நா.பி. அவர்கள் ‘காட்டுவாத்து’, ‘குயிலின் சுருதி’, ‘பிச்சமூர்த்தி கவிதைகள்’, ‘மனநிழல்’, ‘வழித்துணை’ போன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிடுகிறார்.  இவை அனைத்தும் மரபுக் கவிதை அல்லாத எதுவும் கவிதையே அல்ல என்றிருந்த நாட்களிலே வெளியானவை.  இவைகளில் ‘குயிலில் சுருதி’ மட்டும் மரபுக் கவிதை தொகுப்பு.  ‘காளி’ என்ற ஓரங்க நாடகம் தவிர ஆறு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.  அன்பர்களால் இவரோடு சேர்த்து ‘இரட்டையர்கள்’ என்று அழைக்கப்பட்டவரில் மற்றொருவரான கு.ப.ராஜகோபாலன் தமிழ் இலக்கிய உலகிலே ஒரு பெரிய எழுத்துக்காரர்.  நா.பி. மற்றும் கு.ப.ரா. ஆகியோர் ஒரு விதத்திலே பி.எஸ்.ராமையாவிற்கு கடன் பட்டவர்கள்.  ‘மணிக்கொடி’ இரட்டையர்களின் படைப்புக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.  க.நா.சுப்ரமண்யன், சி.சு.செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராமன், மற்றும் தர்மு சிவராமு ஆகியோர் நா.பிச்சமூர்த்தியின் படைப்புலகத்தை பெரிதாகப் போற்றியிருக்கிறார்கள்.  கதை, கவிதை, காவியம், சிறுகதை, நாவல், வசனகவிதை, இலக்கிய விமர்சனம் மற்றும் சக எழுத்தாளர்கள் பற்றி அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை நா.பி. அவர்கள் தெளிவாக வெளியிட்டு வந்திருக்கிறார்.  தன்னுடைய வாழ்நாள் முழுவதும் புதுக்கவிதைக்கு இலக்கிய அந்தஸ்தும், அங்கீகாரமும் கிடைக்கவேண்டி தொடர்ந்து செயலாற்றி வந்தவர்.  எது கவிதை என்பது பற்றி தீர்க்கமான சிந்தனைகள் கொண்டவர். 

இவருக்கு பிறகு சில நல்ல புதுக்கவிதைகளும், புதுக்கவிதைகள் எழுதும் சில ஆயிரம் நபர்களும், லட்சக்கணக்கில் புதுக்கவிதைகளும் தோன்றி விட்டன.  அரிதாக ஒரு நல்ல புதுக்கவிதையைப் படிக்க நேர்ந்தால், தரமான புதுக்கவிதைகள் எழுதும் கவிஞர் ஒருவரை சந்திக்க நேர்ந்தால், நல்ல புதுக்கவிதை ஒன்று சுரக்கும் உள்ளொளியை தரிசிக்க நேர்ந்தால் – இது சமயங்களில்  கொஞ்சம் உன்னிப்பாக நம்மைச் சுற்றி ஐம்புலன்களாலும் தேடுவாமோனால் நா.பிச்சமூர்த்தி அவர்கள் நம் மனக்கண்களிலாவது  தோன்றக்கூடும். 
 
ஆன்றோர்களை தரிசிப்பது அவர்கள் ஈந்த பயன்களின் வழியால்தானே! 

[நா.பிச்சமூர்த்தி அவர்களின் கட்டுரைத் தொகுப்பு முனைவர் ய.மணிகண்டன் அவர்களால் சந்தியா பதிப்பகம், சென்னை மூலமாக வெளிடப்பட்டுள்ளது.  உரூபா 150/-]

0 comments:

Post a Comment