மூலவர் ஒன்று; உற்சவர் மூன்று

| Saturday, July 21, 2018
மூலவர் ஒன்று; உற்சவர் மூன்று
தன்னுடைய எழுத்து நேர்மைக்காக கோவை ஞானி பரவலாக அறியப்படுபவர். இடதுசாரி அரசியல் தத்துவத்தைக் கற்றவர். இடதுசாரி இயக்கங்களிலும் ஊடுருவியிருந்த சாதி அரசியலை உணர்ந்தவர். இலக்கியகர்த்தா. இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் சமஸ் ஒரு நீண்ட நேர்காணலை கோவை ஞானி அவர்களிடம் நடத்தியிருக்கிறார். அற்புதமாக வந்திருக்கிறது. எவரும் பொறாமைப்படும்படியான அறிஞர். இடைவிடாத படிப்பாளி. கற்றதை அப்படியே ஏற்காமல் தன்னுடைய சுயத்தை அதிலே ஏற்றி உணர்பவர். இப்படிப்பட்ட அறிஞரை ஒரு வெகுஜன தினசரி அசாதாரணமான முக்கியத்துவம் அளித்து முழுப்பக்க நேர்காணலை செய்துள்ளது என்பது உள்ளபடியே பாராட்டத் தக்கது.
இந்தியாவின் மூன்று பாரியமான மார்க்சீயர்கள் என்று அம்பேத்கர், காந்தி மற்றும் பெரியாரை குறிக்கிறார் ஞானி. இந்தியாவில் புரையோடிப் போயிருக்கும் சாதியத்தின் - தீண்டாமையின் கொடுமையை தீவிரமாக வெளிப்படுத்தியதற்காக எதிர்த்ததற்காக அம்பேத்கரும், இந்திய அரசியலில் "சுயத்தை வருத்திக் கொள்ளுதல்" என்பது அமைப்புக்களுக்கு எதிரான வன்மையான ஆயுதம் என்று இந்தியர் அனைவரையும் உணர வைத்ததற்காக காந்தியும், பிராமணியத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராடியதற்காக பெரியாரும் இந்தியா உருவாக்கிய மூன்று மாபெரும் மார்க்சீயர்கள் என்று குறிப்பிடுகிறார் ஞானி.
ஒவ்வொரு தேசத்திலும், அங்கு நிலவும் தனித்தன்மைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு விதமாக மார்க்சீயம் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று சிலர் அபிப்பிராயப் படுகின்றனர். ஞானியின் நேர்காணலை வாசித்த பிறகு எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், மார்க்சீயத்தை ஒவ்வொருவரும் தன்னுடைய விழுமியங்களுக்கு ஏற்ப புரிந்து கொள்ளுகிறார்கள்.
சரிதானே?
-------
ஆயிரத்தில் ஒருவன்
எனது நண்பரின் இல்லத்திற்கு சென்றிருந்த பொழுது, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருந்த அவரது மகளின் புத்தகங்களை பழைய பேப்பர் கடைக்கு அனுப்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். HG Wells எழுதிய The Invisible Man கண்ணில் தட்டுப்படவே ஆசையோடு அதை எடுத்தேன். Unabridged version. பனிரெண்டாம் வகுப்பில் தனக்கு அது non-detailed text என்றாள் அந்த சிறுமி. உனக்குப் பிடித்ததா என்று கேட்டேன். புன்னகைத்து சொன்னாள்: "நினைத்தவுடன் அவனைப் போல யாருமே பார்க்க முடியாமல் காணாமல் போக முடிந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் இல்லையா அங்கிள்!"
இந்தப் புத்தகத்தை முதன் முதலாக படித்தது 83ம் வருடம் என்று நினைக்கிறேன். அற்புதமான அறிவியல் புதினம். இதிலுள்ள ஒவ்வொரு அத்தியாயத்திலும் சராசரியாக இருபது வார்த்தைகளாவது unfamiliar வார்த்தைகளாக இருக்கும். இப்பொழுதும் புரட்டிப் பார்க்கிறேன். பல வார்த்தைகள் unfamiliar ஆகத்தான் இருக்கின்றன. கதாபாத்திரங்களின் முக அமைப்புகள், பாவனைகள், உடை அணிந்திருக்கும் விதம், நிலவெளிகளைப் பற்றிய விவரணை, மாந்தர்கள் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வது போன்ற நிலைகளை விவரிக்க எத்தனை விதமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் HG Wells!
அண்மையில் எனக்கு நண்பரொருவர் வாட்ஸ்அப்பில் போஸ்டர் ஒன்றை அனுப்பியிருந்தார். READ A THOUSAND BOOKS AND WORDS WILL FLOW LIKE A RIVER.
அந்த ஆயிரம் புத்தகங்களில் The Invisible Man கட்டாயமாக இருக்கிறது.
-------

"Be judicious; or else, attract judicial proceedings."
ஒரே மாதிரியான தோற்றம் தரும் ஆங்கில வார்த்தைகள் கற்போரின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. Judicial மற்றும் judicious என்ற வார்த்தைகளுக்கிடையே உள்ள அர்த்த வித்தியாசம் என்ன என்ற கேள்வி அண்மை வகுப்பொன்றில் விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. Jury, judge, judicical, judicious, jurisprudence, jurisdiction போன்ற வார்த்தைகள் கற்பவனுக்கு சிரமம் தரலாம்.
Judicial என்ற வார்த்தைக்கு "நீதிபதி அல்லது நீதிமன்ற சம்பந்தமான" என்று பொருள் கொள்ளலாம். Judicial means pertaining to a judge or court of law.
எடுத்துக்காட்டாக, This is a judicial pronouncement என்ற வாக்கியம் என்ன பொருள் படுகிறது? 'இது ஒரு நீதிமன்றக் கட்டளை' என்பதாக இந்த வாக்கியம் மொழிபெயர்க்கப் பட்டால், குத்துமதிப்பாக சரியான பெயர்ப்புத்தான். கீழே உள்ள இரு வாக்கியங்களையும் பாருங்கள்.
[1] All his work shows a judicial tone of mind, and is remarkable for the charm of its style.
[2] The Supreme Court ordered a judicial inquiry into the deaths.
இந்த இரண்டு வாக்கியங்களிலும் judicial என்ற வார்த்தை 'நீதிபதி அல்லது நீதிமன்ற சம்பந்தமான' என்ற பொருளிலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது.
அடுத்த வார்த்தைக்கு வருவோம். Judicious என்ற வார்த்தை என்ன பொருள்பட்டு நிற்கிறது? "நியாயமான, சரியான, ஜாக்கிரதை உணர்வு கொண்ட" என்பதாக பொருள் கொள்ளலாம். Judicious means wise, showing sound judgment, discreet.
இந்த வார்த்தையை ஒரு வாக்கியத்தில் பொருத்திப் பார்ப்போம். 'Her action was judicious.' அவளுடைய செய்கை நியாயமானது.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு வாக்கியங்களிலும் judicious நியாயமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
[1] Since I have a small budget, I have to be judicious about my purchases.
[2] When it comes to choosing friends, be very judicious and choose wisely.
Jurisprudence மற்றும் jurisdiction ஆகியவற்றை இன்னொரு தருணத்தில் அலசலாம்.
-------

DISTINCTIONS IN WORD USAGE
CUSTOM - HABIT என்ற வார்த்தைகளுக்குமே 'வழக்கம்' / 'வழமை' என்ற பொருள்தான் என்றாலும் இவைகளுக்கிடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று verbal ability வகுப்பில் ஒரு மாணவர் கேட்டார்.
CUSTOM என்ற வார்த்தையை தனிமனிதப் பழக்கங்களைப் பற்றி பேசும் பொழுது பயன்படுத்துதல் ஆகாது; ஒரு சமூகத்தின், இனக்குழுவின், தேசத்தின் உறுப்பினர்கள் / மக்கள் அனைவருக்குமான பொதுப் பழக்கங்களைக் குறிக்கத்தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். காட்டாக,
Burying the dead is an ancient custom among Christians - என்பது சரி. இறந்தவர்களைப் புதைப்பது என்பது கிறித்துவர்களின் நெடுநாளைய பழக்கம். இந்த வாக்கியத்தில் custom என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதுதான் சரி. மாறாக, habit என்ற வார்த்தையைப் பயன்படுத்திப் பாருங்கள். ஒரு விதமான அசௌகரியத்தை உணரமுடியும்.
கீழே உள்ள வாக்கியத்தைப் பாருங்கள்.
Smoking is a bad habit.
இதிலே ஒரு தனிமனிதனின் பழக்கம் குறிக்கப்படுகிறது. ஆகையால், இந்த வாக்கியத்தில் habit என்ற வார்த்தை சரியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
கீழ்க்கண்ட நான்கு வாக்கியங்களிலும் custom என்ற வார்த்தைப் பயன்பாடு சரியாக உள்ளதை அறியலாம்.
[1] They have practiced this custom for many years.
[2] I am unfamiliar with the customs of this country.
[3] That custom originated with the American Indians.
[4] You know more than I do about German customs and traditions.
மேற்கண்டதைப் போலவே, கீழே நான்கு வாக்கியங்களிலும் habit என்ற வார்த்தைப் பயன்பட்டிருப்பதைப் பாருங்கள். சரியான இடங்களில்தான் இந்த வார்த்தைப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
[1] I am in the habit of taking a shower in the morning.
[2] He was in the habit of taking a walk before breakfast.
[3] He has the habit of reading the newspaper while eating.
[4] You should try to form the habit of using your dictionaries.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005

|

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005
[1] முருகன் என்பவர் சேலம் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு ஒரு புகார் மனுவை அனுப்பினார். ஒரு மாதம் கழிந்த நிலையில் அந்தப் புகார் மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கோரி தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுவை அவ்வலுவலகத்தின் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்புகிறார். இந்த நிலையில் பொதுத் தகவல் அலுவலர் அந்த மனுவை எங்ஙனம் அணுக வேண்டும்?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ஐப் பொறுத்தவரை ஏற்கனவே அனுப்பப்பட்ட மனு ஒன்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதாக மனுதாரர் ஒருவர் கோரினால் அது சார்ந்த விவரத்தை அவருக்கு வழங்கத் தேவையில்லை.
தமிழ்நாடு தகவல் ஆணையம், வழக்கு எண் 7627/விசாரணை/13/2013 (32723/பி/2013) நாளிட்ட 12.05.2015 தீர்ப்பாணையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உறுப்பினர் செயலருக்கு அனுப்பிய புகார் மனு நாள் 13.10.2012 அஞ்சல் துறை பதிவு எண். A RT 30298147IN மீது என்ன நடடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.மனுதாரர் மேற்படி அலுவலகத்தில் ஆவணங்கள் அடிப்படையில் என்ன தகவல் இருக்கிறதோ அதைப் பெற்றுக் கொள்வதற்குதகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஒரு புகார் மனுவை அனுப்பி அந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் நடவடிக்கை விவரம், கோரிக்கை விவரம் ஆகியவைகளை தகவலாக பெற தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இனி வரும் காலங்களில் மனுதாரர் தனக்கு எந்த தகவல் வேண்டியிருப்பின் அத்துறையில் நேரடியாக மனு செய்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும்படி இவ்வாணையம் கேட்டுக் கொள்கிறது.
மேற்காண் தீர்ப்பாணையின் அடிப்படையில், ஏற்கனவே அனுப்பப்பட்ட புகார் / கோரிக்கை மனு ஒன்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றித் தெரிவிக்கவும், அந்த மனுவின் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகள் தாங்கிய எந்த ஆவணம் ஒன்றின் ஒளியச்சு நகலையும் வழங்கிட தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் படிக்கு வழிவகை இல்லை என்பதை மனுதாரருக்கு தகவலாக வழங்கலாம்.
--------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[2] ஏற்கனவே இரகசியம் அல்லது மந்தணம் என வகைப்படுத்தி வைக்கப்பட்ட தகவல்களை பொதுத்தகவல் அலுவலர் வெளியிடத் தேவையில்லையா?
ஏற்கனவே இரகசியம் அல்லது மந்தணம் என வகைப்படுத்தி வைக்கப்பட்ட தகவல்கள் வேறு அடிப்படைகளை வைத்தோ அல்லது எப்பொழுதும் போல் நடக்கும் செயல்களாகவோ வகைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும். பொதுத்தகவல் அலுவலர் தன்னிடமிருக்கும் அதிகாரத்தினை பயன்படுத்தி கோரப்பட்டிருக்கும் தகவல் பொது நன்மையின் பொருட்டு கோரப்பட்டிருக்கிறதா என்பதனை உத்தேசித்து தகவலை வெளியிட வேண்டும்.
--------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[3] தகவலைத் திரட்டுவதற்கும் தகவலை ஒருங்கிணைப்பதற்கும் அமர்த்தப்பட்ட பணியாளருக்கான செலவீனங்களை மனுதாரரிடம் பொதுத்தகவல் அலுவலர் கோரலாமா?
கூடாது. அந்த செலவீனங்கள் சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
--------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[4] ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கும் ஒரு தகவலைக் கோரி அல்லது வெளியிடப்போகும் ஒரு தகவலைக் கோரி ஒரு நபர் விண்ணப்பித்திருந்தால் வெளியிடப்பட்டிருக்கும் தகவலைக் குறிப்பிட்டு தகவலைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுத்தகவல் அலுவலர் கூறலாமா?
கூறலாம். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நோக்கம் தகவலை அனைவருக்கும் வெளிப்படுத்துவது மட்டுமே. தகவல் கோரும் நபர் தகவலின் பிரதியை கேட்காமல் விண்ணப்பித்திருந்தால் தகவல் எங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கூறி பொதுத் தகவல் அலுவலர் முடித்து வைக்கலாம்.
-------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[5] ஒரு நீர்ப்பாசன திட்டம் அல்லது மின்சக்தித் திட்டம் ஆரம்பிக்கும்பொழுது பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும்பொழுது, ஒரு குடிமகன் அரசிடம் அத்திட்டத்தைப் பரிந்துரை செய்த அனைத்து பரிந்துரைக் கடிதங்களையும் கோரி விண்ணப்பிக்கலாமா? அவ்வாறு விண்ணப்பிக்கும்போது பொதுத்தகவல் அலுவலர் அது இரகசிய அறிக்கையாக அரசால் வகைப்படுத்தப்பட்டது என்ற காரணத்தைக் கொண்டு தகவல் கூற மறுக்க முடியுமா?
ஒரு குடிமகன் இம்மாதிரியான திட்டங்களில் பரிந்துரைக் கடிதங்களை கேட்கும்பொழுது அரசு அதிகாரி எவ்வித மறுப்பும் சொல்லாமல் தகவல் அளிக்க வேண்டும். ஆனால் இம்மாதிரியான சூழ்நிலைகளில் தகவல் கோரும் விண்ணப்பம் பொதுத் தகவல் அலுவலருக்கு மட்டுமே அனுப்பப்படல் வேண்டும். கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தும் அதிகாரிக்கு விண்ணப்பிக்க கூடாது.
-------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[6] தகவல் கோரும் நபர் தான் கேட்கும் தகவலுக்கான சரியான குறிப்புகள் அவரிடம் இல்லாதபோது, அவர் தான் கேட்கும் தகவல் கொண்ட கோப்பின் அனைத்து பக்கங்களின் நகல்களை கேட்கலாமா?
இம்மாதிரியான சூழ்நிலைகளில் தகவல் கோரும் நபர் அக்கோப்பினை பார்வையிட விண்ணப்பிக்கலாம். அவ்வாறு பார்வையிட்ட பிறகு தான் கேட்கும் தகவல் கொண்ட ஆதாரத்தின் நகலை கேட்கலாம்.
-------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[7] ஒரு பொது அதிகார அமைப்பு மற்றொரு பொது அதிகார அமைப்பிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவலை பெற முடியுமா?
முடியாது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவலை பெறும் வசதி இந்நாட்டுக் குடிமகன்களுக்கு மட்டுமே உண்டு. பொது அதிகார அமைப்புகள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியாது.
-----------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[8] ஒரு துறையின் தலைமை அலுவலரை பொதுத்தகவல் அலுவலராக நியமிக்கலாமா?
கூடாது. பொதுத்தகவல் அலுவலருக்கு மேல் ஒரு தலைமை அலுவலர் மேல்முறையீட்டு மனுக்களை பரிசீலிக்க வேண்டும். எனவே பொதுத் தகவல் அலுவலர் எப்பொழுதும் துறையின் தலைமை அலுவலருக்கு அடுத்த பணிநிலையில் இருக்க வேண்டும்.
ஒருவேளை துறையின் தலைமை அலுவலர் பொதுத்தகவல் அலுவலராக நியமிக்கப்பட்டால், அவரை விட பணிநிலையில் மூத்தவரான மற்றொரு துறையின் தலைவர் மேல்முறையீட்டு அலுவலராக நியமிக்கப்படல் வேண்டும்.
----------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[9] பொதுத்தகவல் அலுவலர் ஒரு சட்ட அலுவலரா?
இல்லை. அவரும் மற்ற பணியாளர்களைப் போல ஒருவர். கூடுதலாக பொதுத்தகவல் அலுவலர் பணியையும் சேர்ந்து கவனிப்பார்.
----------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
பொதுநன்மை என்றால் என்ன?
[10] பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் அனைத்தும் பொது நன்மை ஆகும். பெண்களின் பாதுகாப்புன் பொதுநன்மை ஆகும். சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம் ஆகியவை பொதுநன்மை ஆகும். பொது அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவை பொதுநன்மை ஆகும். பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாத்தல் ஆகியவை பொதுநன்மை ஆகும். பொது நீதி மற்றும் ஊழலற்ற சமுதாயம் ஆகியவை பொது நன்மை ஆகும். சட்டத்தின் வழி நடப்பது பொது நன்மை ஆகும். இம்மாதிரியான விஷயங்களில் எந்தத் தகவலும் இரகசியம் காக்கப்படாமல் வெளியிடப்படுவதை பொதுத்தகவல் அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
 ----------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[11] தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தனிநபர் நலனை விட பொதுநலன் மதிப்பு மிகுந்ததா?
ஆம். ஒரு அரசு ஊழியர் தன்னுடைய சொத்து விவரங்களை தன்னுடைய தனிநபர் சம்பந்தப்பட்டது என்று கூறும்போது, ஒரு பொது அதிகார அமைப்பு அவ்வாறான தகவல்களை தனிநபர் பொருண்மை கொண்டது எனத் தகவல் கூற மறுக்கும்போது, பொதுத்தகவல் அலுவலர் அத்தகவலை பொது நன்மையை உத்தேசித்து கேட்கப்பட்டிருந்தால், தகவல் தனிநபர் பொருண்மை கொண்டதாக இருந்தாலும் தகவலை வெளியிடலாம்.
 ----------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[12] தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டால், தாமதத்திற்கான காரணத்தை மனுதாரருக்கு வழங்காமல் இருந்தால், பொதுத்தகவல் அலுவலர் மீது நடவடிக்கை கோர முடியுமா?
முடியும்.
 --------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[13] தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் தொகையின் தோராய மதிப்பு எவ்வளவு?
Centre for Media Study என்ற நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு வருடமும் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் இலஞ்சத்தில் சம்பந்தப்பட்ட தொகையாக ரூ.21,068/- கோடிகள் மதிப்பிடப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டில் பிரதம அமைச்சராக பதவி வகித்த திரு.ராஜீவ்காந்தி அவர்கள், கிராமப்புற வளர்ச்சிக்காக செலவிடப்படும் தொகையில் 1 ரூபாயில் சுமார் 17 பைசாக்கள் மட்டுமே பயனாளிகளுக்கு சென்று சேர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
---------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[14] வறுமையை ஒழிப்பதும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நோக்கமாக சொல்லப்படுகிறது. எவ்வாறு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் வறுமையை ஒழிக்க முடியும்?
அனைத்து அரசுகளும் தற்போது மிகுந்த பொருட்செலவில் வறுமையை ஒழிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. தொழிலாளர்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தொழில்களுக்கு அரசால் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு தங்களை பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்திக் கொள்ள வங்கிகள் கடன்களை அளித்து வருகின்றன. எனவே வழங்கப்படும் உதவிகள் மக்களுக்கு முறையாக சென்றடைகிறதா என்ற கண்காணிப்பும் மிகுந்த அவசியம். எனவே வறுமை ஒழிப்பில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இத்துறைகளில் ஊழல் நடைபெற்றால், அது குறித்த தகவல்களை பெறுவதற்கு இச்சட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
----------



கேட்பவரெல்லாம் கேட்கலாம்

|
பேசுபவர் கேட்பவர் இடையில் எப்போது பிரச்சினைகள் இருக்கின்றன. முழுதாய் சொன்னவனும் கிடையாது; முழுதாய் கேட்டவனும் கிடையாது. என்னதான் தீர்வு? இவர்களுக்கிடையே உள்ள தாவாவின் தன்மைதான் என்ன?
இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியில் சேரும் முன் ஒரு வருட பயிற்சியை நடுவண் அரசு முசௌரியில் வழங்குகிறது. அந்தப் பயிற்சி நிலையத்தில் ஆங்கிலமும் தகவல் தொடர்பும் கற்றுத்தந்தவரான பேராசிரியர் Omkar Koul தன்னுடைய Effective Communication Skills என்ற புத்தகத்தில் பேசுபவன் - கேட்பவன் இடையே உள்ள தாவாவின் தன்மை மற்றும் தீர்க்கும் முறைமை பற்றிச் சொல்கிறார்:
[1] Listener has preconceived ideas. கேட்பவன் துவக்கத்திலேயே உரையாடலைப் பற்றி தன்னுடைய சொந்த கருத்துகளை வைத்திருக்கிறான். இதன் அடிப்படையிலேயே பேசுபவரின் கருத்தைக் கேட்பான்.
[2] Listener thinks he knows more than the speaker. பேசுபவரைக் காட்டிலும் சம்பாஷணையின் விடயத்தைப் பற்றி தனக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறான்.
[3] Listener is worried about something else. பேசுபவர் தொண்டை வறண்டு கத்திக் கொண்டிருக்க, கேட்பவனோ மனைவி கோழிக் குழம்பும் இட்டிலியும் செய்து வைத்து காத்துக் கொண்டிருப்பாளா என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பான்.
[4] Listener is tired or physically uncomfortable. கேட்பவன் அசதியாய் இருக்கிறான்; உரையாடலுக்குத் தேவையான உள்ள உடல் நிலை அவனிடம் இப்போது இல்லை.
[5] Listener is afraid of the speaker, or envious, or prejudiced about him, or just not interested. பல சமயங்களில், அட இவன் நன்றாகப் பேசுகிறானே, எல்லோரும் இவனைப் பாராட்டுவார்களோ, இவன் என்ன பேசிக் கிழிப்பது - இவனை விட நான் நன்றாகப் பேச மாட்டேனா, இவன் சொல்வதை ஒரு வார்த்தை கூட கேட்டுவிடக்கூடாது என்றெல்லாம் கேட்பவன் பொறாமை வயப்படுகிறான்.
[6] Listener is anxious to express his own ideas. பேசுபவன் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே கொஞ்சமும் பொறுமையில்லாமல் தானும் பேச வேண்டும் என்று முந்திரிக்கொட்டையைத் தவித்துக்
கொண்டிருக்கிறான் கேட்பவன்.
[7] Speaker mumbles, coughs, etc or has heavy accent. பேசுபவன் முணுமுணுக்கிறான்; இருமுகிறான்; அடித்தொண்டையில் இருந்து தன்னுடைய ஸ்தாயியை எடுக்கிறான். இன்னும் என்னவெல்லாம் தன்னுடைய பேச்சுக்கு குந்தகம் செய்ய முடியுமோ அதையெல்லாம் குறைவில்லாமல் செய்கிறான்.
[8] Speaker uses confusing technical jargon. கேட்பவர்கள் நொந்து சாக வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு ஒருவருக்கும் புரியா வண்ணம் வெறும் துறைசார் வார்த்தைகளை மட்டுமே அடித்து விடுகிறான்.
[9] Speaker uses words open to many interpretations. துல்லியமான தகவல் எதுவும் கேட்பவர்களுக்குக் கொடுத்து விடக் கூடாது என்பதில் பேசுபவன் குறிப்பாக இருக்கிறான். ஒரே அர்த்தம் தரும் வார்த்தைகளைக் கவனமாக தவிர்த்துவிட்டு, பல பொருள்கள் தரக்கூடிய வார்த்தைகளை வைத்தே விளையாடுவதால், கேட்பவர்கள் 'இவர் எப்போது நிறுத்துவான்' என்று கவலைப்பட்ட வண்ணம் உள்ளனர்.
[10] There is some external noise. பக்கத்தில் மாரியம்மன் பண்டிகைக்காக கம்பத்திற்கு கம்பம் ஒலிபெருக்கிகளைக் கட்டி, கெட்ட கெட்ட வார்த்தைகளாக வரும் புதிய தமிழ்ப் பாட்டுக்களை தூள் பரத்திக் கொண்டு இருக்கிறார்கள். பேசுபவன் வாயசைக்கிறான். ஆனால் கம்பத்தில் ஒலிபெருக்கிதான் கத்துகிறது.
[11] There are interruptions like telephone, etc. பேசுபவன் பேச்சைத் துவக்கியவுடன் கேட்பவனின் மனைவி அலைபேசி லைனில் வந்து, வரும் வழியில் இருக்கும் டாஸ்மாக் கடையின் பக்கத்து ஓட்டலில் போட்டியும் ரத்தப் பொரியலும் வாங்கியாரச் சொல்லுகிறாள்.
சரி, இந்த காலகாலமான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது எப்படி? அவரே சில வழிமுறைகளை கேட்பவனுக்கு ஆலோசனைகளாகத் தருகிறார்.
[1] Stop talking. You cannot listen if you are talking. நீ பேசுவதை நிறுத்து. அங்கே பார். அவன் பேச ஆரம்பித்து விட்டான். கவனமாகக் கேள்.
[2] Put the speaker at ease. Help a person feel free to talk. This is often called a permissive environment. பேசுபவனுக்கு கொஞ்சம் சௌகரியம் செய்து கொடு. அவன் சகஜமான நிலைக்கு வந்தால் நிறைய தகவல் உனக்குத் தர முடியும். நீ தருகிற அனுமதி அவனுக்கு மிகவும் முக்கியம்.
[3] Show the speaker that you want to listen. Look and act interested. Do not read your papers while someone talks. பேசுபவனைப் பார்த்து தலையை ஆட்டிக் கொண்டிரு. நீ கேட்டுக்கொண்டிருப்பதாக அவன் நினைப்பது அவசியம். அவன் பேசிக் கொண்டிருக்கும்போது நீ பேப்பர் படித்துக் கொண்டிருந்தால் நொந்து போய் விடுவான்.
[4] Listen to understand rather to oppose. அவனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கேட்காதே. ஒருவேளை, உனக்கு உதவும் செய்திகளையும் அவன் சொல்லக் கூடும்.
[5] Remove distractions. Don’t doodle, tap or shuffle papers. அவன் பேசிக் கொண்டிருக்கும் போது அமைதியான சூழல் நிலவ உதவு. வேறு எந்த ரகளையும் செய்யாதே.
[6] Empathize with speaker. Try to see the other person’s point of view. பேசிக் கொண்டிருப்பவன் மீது அனுதாபப் படு. அவன் ஒருத்தன். நீங்கள் நூறு பேர். நீங்கள் ஏதேனும் குந்தகம் செய்தால் அவன் பாவம், அழுது விடுவான்.
[7] Ask questions. This encourages a talker and shows that you are listening. It helps, to develop a point further. பேசுபவன் சொல்வது ஏதேனும் புரியவில்லை என்றால் ஒரு கேள்வியைப் போடு. சந்தோசப் படுவான். அவன் சொல்வதை நீங்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது அவனுக்குப் பெரிய மரியாதை. நீ கேட்பதைப் பற்றி மேலதிகமான தகவல்களை அவன் சொல்லக் கூடும்.
[8] Listen appropriately. பேசுபவன் சொல்வதை சரியாக அர்த்தப்படுத்திக் கொள். அனர்த்தப்படுத்திக் கொண்டு அவதிப்படாதே.
[9] Check understanding when necessary. பேசுபவன் சொல்வது ஏதாவது புரியவில்லை என்றால், அந்த சூழலில் சாத்தியமாகும் அத்தனை அர்த்தங்களையும் மனதில் ஓட்டிப் பார். தேவைப்பட்டால், பக்கத்தில் உட்கார்ந்திருப்பவனிடம் கொஞ்சம் மெதுவாகக் கேள்.
[10] Listen with an open mind. பேசுபவன் சொல்வதை எந்த முன்முடிவுகளும் இல்லாமல் கேட்டுக்கொள். நீ நினைப்பதையே பேசுபவனும் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்காதே. உன்னுடைய மனைவி, மகன், மகள் கூட நீ நினைப்பதற்கு எதிராகத்தான் எப்போதும் பேசுகிறார்கள் என்பதை கவனத்தில் வை.
[11] Develop your non-verbal listening. பேசுபவன் சொல்வது உனக்குப் புரிகிறது அல்லது புரியவில்லை என்பதற்கேற்ப முகபாவங்களை மாற்றிக் கொண்டிரு. உன் முகத்தைப் பார்த்து அதிகமாகவோ குறைவாகவோ அவன் சொல்லுவான்.
வகுப்பறைகளிலோ, நிறுவனக் கூட்டங்களிலோ, நண்பர்கள் மத்தியிலோ எப்பொழுதும் ஒருவன்(ர்) பேசிக் கொண்டிருக்கிறான். மற்றவர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் முழுவதும் புரிகிறதா? ஏன் கொஞ்சம் பேர் கொட்டாவி விடுகிறார்கள். தகவல் தொடர்பு என்பது மன்மதக் கலையை விட மகோன்னதமானது என்று எங்கேயோ படித்திருக்கிறேன். அட, மன்மதக் கலையே கூட ஒரு தகவல் தொடர்புதானே.
பாடுவோர் பாடினால் ஆடுவோர் ஆடலாம்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005: சட்ட திருத்த மசோதா 2018 - சிக்கல்களும் தீர்வுகளும்.

|
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு மசோதா ஒன்றை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் அறிமுகம் செய்வதாக இருந்தது. ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சிகளும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, தீவிரமாக எதிர்த்ததின் பலனாக, நடப்புத் தொடரில் மேற்படி மசோதாவை அறிமுகம் செய்வதிலிருந்து தவிர்த்திருக்கிறது மோடியின் பாஜக. மத்திய தகவல் ஆணையர் எம்.ஸ்ரீனிவாச ஆச்சர்யுலு அவர்களும் தகவல் ஆணையர்களின் தரப்பாக, ஏன் இந்த சட்ட திருத்தம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படலாகாது என்பதற்கான நிறைய காரணங்களை முன் வைத்திருக்கிறார். இந்திய அரசியல் சாசன சட்டத்திற்குப் பிறகு சாதாரண மக்களுக்கு அதிகார அமைப்புகளைக் கேள்வி கேட்கும் வல்லமையை அளித்திருப்பதாக நம்பப்படும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, இதில் ஏற்படுத்தும் எந்த திருத்தத்தாலும் குந்தகப்பட்டு போவதற்கே அதிக வாய்ப்பு என்பதால், இந்தியப் பிரஜைகள் அனைவருமே இச்சட்டத்தில் அரசுகள் முனையும் திருத்தங்களை எதிர்க்க வேண்டும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 5 (13) என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இப்பிரிவின் படிக்கு, இந்தியாவின் தலைமை தகவல் ஆணையர் மற்றும் நடுவண் அரசின் பிற தகவல் ஆணையர்களின் மாத ஊதியம் மற்றும் படிகள் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களுக்கு இணையானதாக இருந்து வருகிறது. இதைப் போலவே தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 5 (16) என்ன சொல்கிறதென்றால், மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்களின் மாத ஊதியம் மற்றும் படிகள் மாநில தலைமை தேர்தல் ஆணையர், தலைமைச் செயலர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களுக்கு இணையானதாக இருந்து வருகிறது. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். மைய அரசின் தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்களின் ஊதியம், படிகள் மற்றும் பிற பணி விதிகள் / நிபந்தனைகள் (terms and conditions) உச்ச நீதி மன்றத்தின் நீதிபதிகளுக்கு இணையானதாகவும் இருந்து வருகிறது. வேறு வாத்தைகளில் சொல்வதென்றால், இந்திய அரசின் தலைமை தேர்தல் ஆணையர், பிற ஆணையர்கள், மாநில அரசுகளின் தலைமை தகவல் ஆணையர்கள் ஆகியோரின் ஊதியம், படி மற்றும் பிற பணி விதிகள் / நிபந்தனைகள் ஆகியவை உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகளுக்கு சரிசமமாக இருந்து வருகிறது.
இதுதான் பாஜக-வின் கண்களை உறுத்தியிருக்கிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ல் திருத்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கான காரணங்களை நடுவண் அரசு அமைச்சர் ஜித்தேந்திர சிங் இவ்வாறு விளக்குகிறார்:
"இந்திய தேர்தல் ஆணையமும் இந்திய தகவல் ஆணையமும் முற்றிலும் வேறான பணித்தன்மைகளைக் கொண்டவை. இந்திய அரசியல் சாசனத்தின் உறுப்பு 324 (1)ன் படி (constitutional body) இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப் பட்டுள்ளது. இதனுடைய பணிகள் மத்திய, மாநில அவைகளுக்கு தேர்தல்களை நடத்துவது மட்டுமன்றி, வாக்காளர் சேர்க்கைப் பணிகள் மற்றும் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகியவற்றையும் நடத்துவதாகும். மாறாக, தகவல் ஆணையம் என்பது சட்டபூர்வமாக (statutory body) ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பாகும். இதன் காரணமாகவே, இந்த இரண்டும் சமமாக மாட்டா என்பதுடன் வேறு வேறாகவும் கருதப்படத் தக்கவையாகும்."
ஆனால் இதில் இன்னொன்றை கவனிக்க வேண்டும். தகவல் ஆணையர்களின் பணிதான் என்ன? இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 19 (1) (a)-வை செயல்படுத்தும் சட்ட முகவர்களாக இவர்கள் இருப்பது பாஜக-அரசின் கண்களுக்குப் புலப்படவில்லையா? அல்லது இத்தகைய பணி இந்திய அரசியல் சாசனத்தோடு தொடர்பற்றது என்பதாக சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுகிறதா? தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ஒரு மைய அரசின் சட்டம்; ஜம்மு காஷ்மீர் நீங்கலாக, இந்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்குமானது.
அதிகாரப் பகிர்வைப் பற்றி அரசியல் சாசனம் சொல்வது என்ன? மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குட்பட்டவைகளில் மேலதிகமாக மைய அரசு எந்த சட்டமும் இயற்றியுள்ளது எனும் நிலை, அரிதினும் அரிதான நிகழ்வுகளைத் தவிர்த்து, பின்பற்றப்பட்டு வராத நிலையில் ஏன் மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்களின் உரிமைகளில் நடுவண் அரசு குந்தகம் ஏற்படுத்த தற்போது முனைகிறது? மாநில தகவல் ஆணையர்கள் /. மத்திய தகவல் ஆணையர்களை தம் வசம் கொண்டு வர விரும்பும் பாஜக அரசின் தந்திரம்தான் இது. தகவல் ஆணையங்கள் இது நாள் வரை குறிப்பிடத்தக்க அளவில் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. இப்படியான நிலை தொடர்வது வருகின்ற காலங்களில் தனது நலனுக்கு மிகப் பெரிய அளவில் சிக்கலை உண்டாக்கும் என்று பாஜக அரசு கருதுவதாலேயே மேற்சொன்ன திருத்தத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது. மத்திய தகவல் ஆணையம் / ஆணையர்களுடையது மட்டுமன்றி, மாநில தகவல் ஆணையர்களின் ஊதியம், பதவிக்காலம் மற்றும் இதர பணி நிலைகளையும் மத்திய அரசே அவ்வப்பொழுது தீர்மானிக்கும் ஆற்றலை இப்படியான திருத்தம் செல்லத்தக்கதாக்கி விடும். நாளடைவில், நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கே வெடி வைக்கும் அபாயமும் இதில் உள்ளார்ந்து இருக்கிறது.
இன்னொன்றையும் பார்க்கலாம். இந்திய தேர்தல் ஆணையமானது இந்திய அரசியல் சாசனத்தின் உறுப்பு 324 (1)-ஐ செயல்படுத்தும் அமைப்பு. இந்திய தகவல் ஆணையம் இந்திய அரசியல் சாசனத்தின் உறுப்பு 19(1)(a)-வை செயல்படுத்தும் அமைப்பு. இதில் முன்னதை அரசியல் சாசன ரீதியான அமைப்பு என்றும், பின்னதை அரசியல் சாசன ரீதியான அமைப்பு அல்ல என்றும் எப்படி பாஜக அரசு முடிவெடுக்கிறது? வேறொன்றையும் கவனியுங்கள். இந்திய அரசியல் சாசனத்தின் 19(1)(a) உட்தலைப்பு (rubric) சொல்வதென்ன? - "right to express choice through voting and also right to information". "வாக்களிக்கும் உரிமையும் தகவல் பெறும் உரிமையும் இந்திய அரசியல் சட்டத்தால் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்" என்று இந்திய உச்ச நீதிமன்றம் திரும்பத் திரும்ப சொல்லியாயிற்று. இந்த நிலையில் தேர்தல் ஆணையரும் தகவல் ஆணையரும் சமமான நிலை வகிக்கிறார்கள் என்பது பாஜக அரசைத் தவிர மற்ற அனைவருக்கும் தெளிவாகி விட்டது.
இரண்டு ஆணையர்களையும் வேறு வேறு தளங்களில் நிறுத்துவதைத் தவிர மற்றொரு பாதகமும் இந்த சட்ட திருத்தத்தில் உறைந்துள்ளது. மாநில உரிமைகளில் நியாயமற்ற முறையிலான மத்திய அரசின் தலையீடு நாளடைவில் குடியரசின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு குந்தகமாகி விடும். பாஜக அரசின் சட்ட திருத்த மசோதாவின் படி, மைய தகவல் ஆணையராக இருந்தாலும் சரி, மாநில தகவல் ஆணையராக இருந்தாலும் சரி, ஊதியத்தையோ, பணிக்காலத்தையோ, பணி விதிகளையோ மைய அரசு நினைத்த படி, நினைத்த பொழுது மாற்றிக்கொள்ளலாம். இந்த வருடம் தகவல் ஆணையர்களாக பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு பணிக்காலமாக மூன்றாண்டுகளும், அடுத்த வருடம் பணியமர்த்தப்பட போகிறவர்களைப் பொறுத்தவரை இரண்டாண்டுகளுமாக மாற்றிக் கொள்ளலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், "எனது பேச்சைக் கேட்டு நடப்பதாக இருந்தால் நீ பதவியில் நீடிக்கலாம்; இல்லையென்றால் மூட்டை கட்டிக் கொள்." நிச்சயிக்கப்பட்ட பதவிக் காலமும், உயர் பதவி நிலையும், எளிதாக பதவி நீக்கம் செய்ய முடியாத முறைமையும் தகவல் ஆணையர்களை தன்னாட்சி சுதந்திரம் கொண்டவர்களாக உருவாக்கியுள்ளது. இப்படியானது பாஜக அரசு சகித்துக் கொள்ளவே முடியாத நிலை. தகவல் ஆணையர்களை தட்டி வைத்தாலொழிய, பாஜக-வின் அரசுகள் தங்களது போக்கில் தொடர முடியாமல் போய்விடக் கூடும் என்கிற அச்சத்தைத்தான் முன்னளிக்கப் பட்டிருக்கும் சட்ட திருத்தம் நமக்கு உணர்த்துகிறது.
மேலும், தலைமை தகவல் ஆணையர் / தகவல் ஆணையர்களின் பதவிகள் அண்மையில் பணி ஓய்வு பெற்றிருக்கும் / பெறவிருக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுதல் ஆகாது. இப்படியான பணியமர்த்தல்கள், பெற்ற லாபங்களுக்கு நன்றி பாராட்டும் செயலாகவோ, அல்லது பெறப் போகும் லாபங்களுக்காக தரப்படும் முன்தொகையாகவோ இருக்கலாமே தவிர, நியாயமான செயல்களாக இருக்கவே முடியாது. இவ்விடத்திலேயே வெளிப்படைத்தன்மை அழிந்தொழிகிறது. பாராளுமன்றம் உறுதியளித்துள்ள படி, தகவல் ஆணையர்களாக பணியமர்த்தப் படுபவர்கள் சமூகத்தின் சிறந்த மனிதர்களாகவும், அவர்களது பணிக்காலம் ஐந்து வருடங்கள் அல்லது அறுபத்தைந்து வயது நிறைவடைதல் ஆகியவற்றில் எது முன்னதோ அது என்பதாக இருப்பது தொடரும் என்று உறுதிப்படுத்துதலும் அவசியமானது. ஆனால், பாஜக முன் வைத்திருக்கும் சட்ட திருத்தமானது பொது அதிகார அமைப்புகளை யாருமே கேள்வி கேட்க முடியாத அமைப்புகளாக மாற்றி விடும். மத்திய தகவல் ஆணையம் / மாநில தகவல் ஆணையங்கள் சம்பந்தப்பட்ட அரசுகளின் கைப்பாவைகளாக மாறிவிடும் அபாயம் உண்டு.
இந்த சட்ட திருத்தமானது தற்போது தேவைதானா என்பது பற்றி யாருடனும் பாஜக அரசு ஆலோசித்ததாக தகவல் இல்லை. மாநில அரசுகள், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகள் கேட்டுப் பெறப்படவில்லை. இந்த ஒரு காரணத்தின் பொருட்டே, இச் சட்ட திருத்தம் ஜனநாயக விரோதமானது என்று கூறிவிடலாம்.
நடப்புப் பாராளுமன்றத் தொடரில் அறிமுகப்படுத்தப் படவிருந்த இந்த சட்ட திருத்தம் பலமான எதிர்ப்புகள் எழுந்ததின் காரணமாக தற்காலிகமாக தள்ளி போடப்பட்டுள்ளது. இது நல்லதுதான். ஆனால், இந்தத் திருத்தமானது முற்று முழுவதுமாக பாஜக அரசால் கைவிடப்படும் வரையில், ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் தத்தம் அளவில் எதிர்ப்புகளை சட்டத்திற்குட்பட்டு தெரிவித்துக் கொண்டேயிருக்க வேண்டும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது விடயத்தில் தங்கள் பணியை நாளது வரை செம்மையாக செய்திருக்கின்றன என்பதையும் சொல்லியாக வேண்டும்.
எப்படியாவது, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 காயம் படாமல் தப்பித்துக் கொண்டால் ஜனநாயகத்திற்கு நல்லதுதானே?