இற்றைக்கான கவிதை

| Tuesday, February 28, 2017
இற்றைக்கான கவிதை

காதல் எதையெதையோ கொடுத்து எதையெதையோ எடுத்துச் சென்ற வண்ணம் இருக்கிறது. அவள் இருந்த பொழுது எண்ணங்களுக்கு நிறமும் இசையும் இருந்தது. எல்லாம் சாஸ்வதமாகவும் இருந்தன.

அவள் இல்லாவிட்டால் எதுவும் பிடிக்காமல் போகிறது. உலகம் நாராசத்தால் நிரம்பிவிட்டது. அவளின் அன்றைய ஸ்பரிசம் பிறக்காத குழந்தையின் பூவிரலை கன்னத்தில் தேய்த்தவாறு இருக்கிறது.

அவள் இல்லாத இந்தக் கணத்தில் எனது கோப்பையை தனிமை மட்டுமே நிரப்பட்டும்.

அசிங்கங்களுக்கு நான் பழக்கப்பட்டான பிறகு, அவள் இங்கு மறுபடியும் வரவேண்டாம். என்னிடம் கொடுக்கப்பட்டிருக்கிற கசாப்புக் கத்தி தென்றலில் மிதந்து வரும் ரோஜாப்பூவை கொத்திக் குதறக்கூடும்.

பார்த்தால் அவளிடம் சொல்லுங்கள், வரவேண்டாம் என்று. நான் மனிதனே அல்ல என்று சொல்லி தடுத்துவிடுங்கள்.

காதலும் குரூரமும் ஒரே இடத்தில் தங்கக்கூடுவதில்லை.
இதைத்தான் அன்னா ஸ்விர் இந்தக் கவிதையில் சொல்கிறார்.
காதலர் தினத்தை இன்னும் உக்கிரமாக எப்படி அனுசரிப்பது?


I’ll Open the Window
-Anna Swir

Our embrace lasted too long.
We loved right down to the bone.
I hear the bones grind, I see
our two skeletons.

Now I am waiting
till you leave, till
the clatter of your shoes
is heard no more.
Now, silence.

Tonight I am going to sleep alone
on the bedclothes of purity.
Aloneness
is the first hygienic measure.
Aloneness
will enlarge the walls of the room,
I will open the window
and the large, frosty air will enter,
healthy as tragedy.

Human thoughts will enter
and human concerns,
misfortune of others, saintliness of others.
They will converse softly and sternly.

Do not come anymore.
I am an animal
very rarely.

GONE WITH THE WIND

|

Hello,

Good morning. Do you remember those days when you had to run to that expert friend to get a love letter written because you had to deliver it to your new girlfriend on her way back home that evening.

If you could remember any such event, I know how old you are now. You should be into your forties. Most of my secondary schooling years had been indelibly dotted with those thrilling moments of designing love letters for many of my buddies. 

One of my friends who was a school dropout got his marriage fixed with a girl from Gobichettipalayam. She was a graduate in interior designing from a reputed university and her English was immaculate. Desperate to marry her, my friend and his family lied to the girl's family that my friend was a graduate in English literature. The marriage was fixed and the girl wrote to her fiance a wonderful love letter and in its P.S. she said that she was dying to receive a letter from him. I could remember the year even. 1997. My friend had no clues about the letter's content and ran to me to know its finer aspects. It was one of the touching love letters I have ever read. All my friend could do in English is muttering some mono and disyllables with an unsure dose of diffidence. 

Now, he had to reply her. In English. I suggested that we all friends could assemble in Salem Castle, a famous star hotel in Salem at that point of time, and everyone could suggest a line of thought and I could ensemble them into an organic whole of his heart. Having agreed to that, he sent an SOS to our buddies and all of us congregated at the hotel and the letter was somehow coined at the cost of scores of whisky pegs followed by a lavish buffet. 

Nevertheless, the letter came out wonderfully. I wanted our friends to remember at least one line from the letters they wrote either to their wives or to those of others😜

The lady, his fiancee, received it the next day and was on cloud nine. His next visit to Gobichettipalayam was full of amorous adventures. Shameless and in unabashed candidness, he told us that she was kissing him the whole evening, completely gone mad over the letter she received.

We all wrote such letters, didn't we? I remember many of my letters. During the time I had to move out of Salem for higher studies, my letters to her were heavier as they carried my love, tears, anxieties and desperation. She would write letters in a maniacal drive. Hostel letter boxes never disappointed me. 

Those were the best of the times and the worst of the times. All are gone now and with those girls of wonderful decorum and grace went the culture of writing and receiving love letters.

These are the days of phone calls. No reliable evidence of love. Nothing is created to remember those Special Persons and special moments later.

Recently I chanced upon this letter given under. One Mr Manjil Saikia has written this. Evidently, to his ladylove. I had to remember my love letters and those beautiful girls who made my dreams so colorful. Adolescence is the best period of one's life and love letters are the best companions of those years.

I want you to read and enjoy Manjil's letter. This may appear too romantic and unrealistic. But remember, love is always romantic and unrealistic.

Thank you.
Love,
Dr M Prabhu.


----
 
Do you remember?
-Manjil Saikia

Darling, do you remember the first time our lips met? The tension of the moment, and when they finally met I felt the moment should never end. Did you?

Darling, do you remember the kiss we shared under the stars? To me, it seemed like a thousand lights that were burning in my heart had somehow escaped into the heavens and smiled down upon us. At that moment, I felt the cosmic energy embalm us in its stead. Did you?

Darling, do you anticipate the moment when we will stand in the wind, your hair flying and I will gently put my lips on yours? I do.

Darling, do you dream about a day when you will lay in my arms, I will gently stroke your head and plant a kiss on your forehead, with all my love? I do.

That moment, that day is not far.

முத்து வாத்தியாரும் மருத்துவ மாணவர்களும்

|
மருத்துவர்கள் தம்மை அணுகும் நோயாளிகளிடம் ஒருவித பந்தாவோடும் "குனிந்து பார்க்கும் மனப்பான்மையோடும்" நடந்து கொள்வதாக பரவலாக ஒரு கருத்து உண்டு.  பெரும்பான்மையான மருத்துவர்களைப் பொறுத்தவரை அது உண்மையும் கூட. கருணை, இரக்கம், பரஸ்பர விசாரிப்பு, மனித நேயம் இன்றி நடந்து கொள்ளும் இவர்களை சந்திக்க தயக்கம் இருந்தாலும் வேறு வழியின்றி போய்ப் பார்த்துதான் ஆக வேண்டும்.  சிகிச்சை கட்டணமாக எவ்வளவு வசூலிப்பார்களோ என்ற கவலை அனைவரிடமும் இருக்கிறது.  இதில் ரமணா படத்தில் விஜயகாந்த் காண்பித்தது வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது. 

மேலே சொன்ன மனோபாவத்தை மருத்துவர்களிடம் மட்டுமல்ல, மருத்துவ மாணவர்களிடமும் பார்த்திருக்கிறேன். இதில் எங்கேயோ தவறு நடந்திருப்பது தெரிகிறது. மற்றவர்களை - சக மனிதர்களை - தமக்கிணையாக மருத்துவர்கள் ஏன் நடத்துவதில்லை? இதில் விலக்குகள் நிச்சயம் உண்டு. அவர்களைப் பற்றி அல்ல இது.  மெஜாரிட்டி மருத்துவர்களைப் பற்றிய கவலையால் இது பற்றி பேச வேண்டி வருகிறது.  மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய இரண்டும் எந்த நாடுகளில் தனியார் வசம் உள்ளதோ அங்கெல்லாம் சமூகம் பிளவு பட்டுத்தான் இருக்கும்.  இன்சூரன்ஸ் அட்டையை வைத்துக் கொண்டு சாதாரணர்கள் வெயிலிலும் மழையிலும் அலைவதைப் பார்ப்பது அன்றாடக் காட்சியாகி விட்டது.  அரசியல் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்.  மருத்துவம் - கல்வி ஆகிய இரண்டில் மட்டுமாவது அரசியல் இல்லாமலிருக்க கூடாதா என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. ஒட்டுமொத்த சமூக சுபிட்சத்திற்கும் இதற்கும் நேரிடையான தொடர்பை எளிதாக உணரலாம்.

இது குறித்து தி டைம்ஸ் ஆப் இண்டியா தினசரியில் இன்று (28-2-2017) அனந்த் நாராயண் என்ற மருத்துவர் நல்ல பத்தி ஒன்றை எழுதியிருக்கிறார்.  மருத்துவப் படிப்பின் கலைத்திட்டத்தில் வாழ்வியல் புலம் (Humanities) சேர்க்கப் படுவதுதான் ஒரே வழி என்று சொல்கிறார் அனந்த் நாராயண். இலக்கியம் - இசை - நடனம் - மற்ற நுண்கலைப் பற்றிய பாடங்களை மருத்துவ கலைத்திட்டத்தில் உள்ளடக்குவது அவர்களின் மூளையின் வலது - இடது ஆகிய இரண்டு பக்கங்களும் செயல்பட ஏதுவாகும் என்பது அவரது கருத்து.  இதில் எனக்கு உடன்பாடு உண்டு.  நீதி நெறி போதனை என்ற வகுப்புகள் அப்போது பள்ளிகளில் மாணவர்கள் விருப்பத்தோடு எதிர்பார்க்கும் வகுப்புகளாக இருந்தன.  ஆசிரியரும் வந்து நல்ல கதைகளைச் சொல்லுவார். நல்லதங்காள், அரிச்சந்திரன், மராட்டிய சிவாஜி, கட்டபொம்மு, மருது சகோதரர்கள் போன்றோரின் வாழ்க்கை சரிதங்களை எங்களது பள்ளியில் இருந்த அபாரமான கதைசொல்லியான முத்து வாத்தியார் மூலமாகத்தான் தெரிந்து கொண்டோம்.  முத்து வாத்தியாரின் நீதி போதனை வகுப்பு என்றால் வகுப்பை கட் அடித்த மாணவனும் ஒருவரும் அறியாமல் 'அசாமல்' வந்து உட்கார்ந்து விடுவான்.  அவருக்கு வெத்தலையும் கொட்டைப் பாக்கும் பித்தளை சொம்பில் தண்ணீரும் வேண்டும்.  பள்ளிக்கு மிக அருகில் இருந்ததால் எங்கள் வீட்டிலிருந்துதான் தண்ணீர் போகும்.  இரண்டு பைசா, மூன்று பைசா என்று சக மாணவர்களிடம் வசூலித்து ஒரு கத்தை வெத்தலை, கைப்பிடி பாக்கு வாத்தியார் வருவதற்கு முன்னமேயே மேசையில் வைத்து விடுவோம்.  கதை சொல்லுவதற்கு முன் சரியான வெத்தலையைத் தெரிந்தெடுத்து தண்ணீரில் கழுவுவார். வெத்தலையின் பின் பக்கமாக தனது வேட்டி மடிப்பில் எப்பொழுதும் வைத்திருக்கும் சுண்ணாம்பை கொஞ்சமாக எடுத்து பாசத்தோடு தடவுவதைப் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். முதலில் இரண்டு வெத்தலையை தள்ளிய பிறகு ஒவ்வொரு பாக்காக உள்ளே போட்டு பற்களால் உடைக்கும் சத்தம் கடைசிப் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவனின் காதை அடைக்கும்.  வாழ்நாளில் நான் கேட்டிருக்கும் அத்தனை அற்புதமான கதைகளும் முத்து வாத்தியார் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். மாணவர்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கைப் பற்றி மற்றவர்களுக்கு நிறைய பொறாமை இருந்ததாக அவரின் சக ஆசிரியர்களான அப்பா அம்மா சொல்லிக் கொண்டிருப்பார்கள். 

அந்தக் கதைகளின் ஊடே சொல்லப்பட்ட 'செய்திகள்' இன்றுவரை உதவுகின்றன. எத்தனையோ சிக்கலான தருணங்களில் முத்து வாத்தியார் மண்டைக்குள் இருந்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மருத்துவக் கல்லூரிகளில் பெயரளவிற்கு இருக்கும் இலக்கிய மன்றங்கள், திரைப்பட மன்றங்கள் அந்த மாணவர்களிடம் எந்தவிதமான நெகிழ்ச்சியையும் மனோபாவத்தில் கொடுத்து விடவில்லை. இது ரொம்பவும் அபாயகரமான நிலை என்று அனந்த் நாராயண் கவலைப் படுகிறார். உடனடியாக மருத்துவக் கல்வி கலைத்திட்டத்தில் இலக்கியம், இசை போன்ற நுண்கலைகள் கட்டாயப் பாடங்களாக சேர்க்கப்பட்டாக வேண்டும் என்று அனந்த் நாராயண் சொல்வது எளிதில் புறந்தள்ளக் கூடியதாக இல்லை. மருத்துவ மாணவர்களுக்கு emotional balance கிடைக்க இது உதவலாம். 

இலக்கியம், வரலாறு, இசை போன்ற வாழ்வியல் புலம் சார்ந்த துறைகள் அனைத்து வகையான பள்ளிகள், கல்லூரிகளிலும் தேவை.  இவை நம்முடைய வாழ்க்கையில் இடரான தருணங்களில் நம்மைக் காப்பாற்றும் வலிமை கொண்டவை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் தொழிற்கல்விக் கூடங்களிலும் பள்ளிகளிலும் இதன் முக்கியத்துவம் தவிர்க்கப் படுகிறது. Never mock the pain you have not endured என்று சொல்வார்கள். நாம் சந்தித்திராத துயர்கள், இடர்கள் போன்றவையால் இன்னலுறும் மக்களின் சிரமங்களை நமதே போல உணர வைக்க நுண்கலைகளின் பயிற்சியால் பெற்று விட முடியும். இத்தகைய பயிற்சியால் மருத்துவர்களும் சக மனிதர்களை அன்போடும் அனுசரணையோடும் பார்க்கவும் நடத்தவும் முடியும்.  இதற்கு என்ன தேவை என்று பார்த்தால், அனுபவமிக்க பேராசியர்கள், குறிப்பாக இலக்கியம் மற்றும் நுண்கலைப் புலம் சார்ந்த துறைகளில் பேராசிரியர்கள், அவர்களது பணி ஓய்வுக்குப் பிறகு, மருத்துவக் கல்லூரிகளில் பணிக்கு அமர்த்தப் படலாம்.  இந்தப் பேராசிரியர்களே மாணவர்களுக்கான ஒரு அற - சமூக ஒழுக்க பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.  எனக்குத் தெரிந்து ஒரு பொறியியல் கல்லூரியில் Professor of Ethics என்ற பதவியை உருவாக்கி BARC-ல் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, இறையியல், இலக்கியம், பொது வாழ்வு, நடப்பியல் உண்மைகள் என்பவைகளில் தேர்ந்திருந்த ஒரு பெரியவரை நியமித்திருந்தார்கள்.  எப்பொழுதும் சிறு வயதுப் பையனைப் போல சுற்றிக்கொண்டிருப்பார்.  இளைஞர்களிடம் மரத்தடியில், உணவகத்தில், நூலகத்தில், பாதையில் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார்.  எதைப் பற்றியும் பேச முடியும் அவரால்.  தீர்ந்து போகாத அளவுக்கு அவரிடம் ஜோக்குகளும் கதைகளும் கைவசம் இருந்தன.  அந்தக் கல்லூரியின் முதல்வரிடம், எனது நெருங்கிய நண்பர், எப்பொழுதும் சொல்லுவேன்: 'உங்கள் கல்லூரியின் ஆகச்சிறந்த பண்பே இந்த Professor-ஐ நியமித்ததுதான்.' மாணவர்களுக்கிடையே ஏற்படும் வேலைவாய்ப்பு குறித்த அவசங்களை பெருமளவில் இந்தப் பேராசிரியர் குறைத்தார் என்று எளிதாக சொல்ல முடியும்.  இள வயசுப் பெண்கள் அவரைச் சுற்றி எப்போதும் இருந்ததால், அவரும் மாணவனைப் போலவே தெரிந்தார். 

அத்தகைய பெருந்தகைகளை ஒவ்வொரு கல்லூரியும் முயன்றால் கண்டடைந்து விட முடியும்.  குறிப்பாக மருத்துவக் கல்லூரிகள்.  மாணவர்களாகச் சேருபவர்களை மருத்துவர்களாக வெளியில் அனுப்புவது இருக்கட்டும்; முதலில், மனிதர்களாக அவர்கள் வெளியில் வருவதை உறுதி செய்ய Professors of Ethics அங்கெல்லாம் தேவையாக இருக்கிறார்கள்.  
                
சரிதானே?

Shall we dance, Swarna?

| Thursday, February 16, 2017
என்னுடைய அப்பா திடீரென காலமாகிப் போனதில் எல்லாமே இருட்டிக் கொண்டு வந்தது.  அப்பாவை வெளியே கொண்டு வந்து குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் நீண்டகால நண்பரொருவர் இன்னொருவருக்கு விளக்கிக்கொண்டிருத்தது காதில் விழுந்து தொலைத்து துயரத்தை விடவும் பயத்தைத் தந்தது. "இவனுக்கு ஒரு மயிரும் தெரியாது.  பேஸ்ட் வாங்கிட்டு வாடான்னா பேப்பர் ஓட்டற பசைய வாங்கிட்டு வருவான். அப்பன் இல்லாம என்னாத்த பொழப்ப பண்ணுவானோ."  திகிலடித்தது.  அப்பாவை எரித்து விட்டு ஐந்தாம் நாள் காரியத்தை செய்துவிட்டு எல்லாரும் கிளம்பிய பின் தங்கை சொன்னாள்: "காய் ஏதாவது வாங்கிட்டு வாண்ணா."  "எங்க போய் வாங்கணும்?" என்று நான் கேட்டபொழுது பார்த்துக்கொண்டிருந்தவள் உடைந்து போய் உரத்த குரலில் அழத் தொடங்கினாள். 

காய் கறி வாங்கத் தெரியாதது ஒரு புறம் இருக்கட்டும். அதை எந்தக் கடையில் வாங்குவது, எவ்வளவு வாங்குவது, ஒவ்வொன்றிலும் எந்த அடையாளத்தைப் பார்த்து வாங்குவது என்ற எதையும் தெரியாத அந்த நிமிடத்தில் புதிதாக கட்டத் தொடங்கியிருந்த வேட்டி நழுவுவது உணராமல் ஒரு வேகத்தில் ஸ்கூட்டரை உதைத்துக் கிளம்பினேன்.  முதலில் கண்ணில் படும் பெரிய காய்கறி கடையில் நிறுத்துவதுதான் திட்டம்.  இரண்டாவது கிலோ மீட்டரில் இடது பக்கமாக இருந்தது அந்தக் கடை.  கல்லூரியை அப்போதுதான் முடித்திருக்க வேண்டும்.  உற்சாகமான இளைஞன். எண்பதுகளின் ஆரம்பத்தில் ரஜினிகாந்திடம் இருந்த அதே மாதிரியான திசைவேகம் அந்தப் பையனிடம் இருந்தது.  கூட்டம் குறைய பத்து நிமிடம் காத்திருந்து துக்கம் தொண்டையை அடைக்க அவனிடம் சொன்னேன். "அப்பா போயிட்டாரு.  நான்தான் காய் வாங்கணும்.  என்ன வாங்கனும்னு தெரியல.  மூணு பேரு இருக்கோம் வீட்டுல.  ஏதாவது கொடு தம்பி."  சொல்லும்பொழுது கண்ணில் நீர் பூத்ததை தவிர்க்க முடியவில்லை.  பத்து வினாடிகள் இருக்கும்.  உற்றுப் பார்த்தான்.  "அண்ணா, கவலைப் படாதீங்க. எங்கப்பா மூணாவது படிக்கும்போதே போயிட்டார்.  நான் கடை வச்சுட்டேன்.  கொஞ்சமா தர்றன்.  உங்க வீட்டுல இனிமே இங்கதான் காய் வாங்க சொல்லுவாங்க பாருங்க".  அவன் கைகள் கூடைகளுக்குள் புகுந்து எழுந்ததை இசைமேதை யானி அவர்களின் விரல்கள் கீபோர்டில் விளையாடுவதுடன்தான் ஒப்பிட முடிந்தது.  அந்த நிலையிலும் கூட இந்த ஒப்பீடு மனசில் ததும்பியதை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த பதினைந்து மாதங்களாக பெரும்பாலும் அவன்தான் காய்கறி கொடுக்கிறான்.  வேறு யாராவது கடையில் இருந்தால் போக மாட்டேன்.  அவனுடன் பேசுவது அப்பாவிடம் பேசுவது மாதிரியே இருக்கிறது.  நம்பிக்கையாக இருக்கிறான்.  அடிக்கடி என்னைப் பார்த்து "எல்லாம் சரியாய்  ஆயிடும், அண்ணா" என்கிறான்.  எந்தப் பிரச்சினையையும் அவனிடம் சொன்னதில்லை.  அப்பா அப்படித்தான் சொல்லுவார். "எல்லாம் சரியாயிடும்டா."  காலை வேளைகளில் அவன் முன்பு பயபக்தியோடு நிற்கிறேன்.  நிற்பதை ஓரக்கண்ணால் கவனித்து விடுவான்.  மற்றவர்களை அனுப்பிவிட்டு எனக்காக கொஞ்சம் காய் மட்டும் எடுத்துக் கொடுத்து "இது போதும் அண்ணா. வாரக் கடைசியில் மறுக்க வாங்க." என்பான்.  நவம்பர் மாத ஆரம்பத்தில் ஒருநாள் கிண்டல் கொப்புளிக்க சொன்னான். "பணம் நிறைய இருந்தாக்கா எனக்குக் கொடுங்க. வீட்டுல வச்சிருந்தா செல்லாம போயிடும்."  அதற்கு அடுத்த நாள்தான் பணம் செல்லாமல் போவது பற்றி டிவியில் மோடி சொன்னார்.  இந்த நிகழ்விற்குப் பிறகு அவன் என்ன சொன்னாலும் கேட்கிறேன். 

இன்றும் அவன் முன் போய் நிற்க வேண்டிய நிலை. கூட்டமும் கடையில் அதிகம் இல்லை.  இரண்டொரு பேர்தான்.  ஆனால் பையன் காதுகளில் angry pads-ஐ வைத்துக் கொண்டு தலையை வேகமாக ஆட்டிக்கொண்டு கூரையைப் பார்த்துக் கொண்டு நாக்கை வெளியே துருத்தி பற்களின் இடையே கடித்தவாறு அலகு குத்துவதற்கு முன்னால் பரவச நிலையில் கால்கள் நடுங்க ஆடிக்கொண்டிருக்கும் பக்தனை நினைவு படுத்திய படி இருந்தான்.  பார்க்க ரொம்பவும் அழகாக இருந்தது. "கொஞ்சம் சீக்கிரம் கொடு கண்ணு" என்ற என்னைப் பார்த்துக்கொண்டே "என்ன வேணுமானாலும் எடுத்துக்கோங்க" என்ற படிக்கு கைகளை ஆட்டி உத்தரவு கொடுத்தான்.  "டேய், நீயே எடுத்துக் கொடுடா, தம்பி'" என்று கெஞ்சிய போது, "என்னை தொந்தரவு செய்யாதீங்க" என்று சைகையில் சொல்லி கொஞ்சமாக எழுந்து ஆடினான்.

எனக்கும் ஆடத் தேவையாக இருந்தது.  யாருக்கும் என்னை அந்த இடத்தில் தெரியாது என்பது ரொம்பவும் சௌகர்யமான விஷயம்தான். "என்னடா கேட்கிற? சொல்லித் தொலை.  நானும் ஆடவா?" என்று அடித்தொண்டையில் கத்தினேன்.  காதில் இருந்தவையை கொஞ்சம் எடுத்து கையில் வைத்துக்கொண்டு சொன்னான்: "ஸ்வர்ணா அக்கா பாட்டுண்ணா. கேளுங்க. கருக்கல் பிடிச்சு இதேப் பாட்டத்தான் கேட்டுக்கிட்டுருக்கேன். ஒரே டான்ஸ்தான் போங்க."  அவனிடமிருந்து பிடுங்கி காதில் வைத்தேன். கேப்டன் பிரபாகரன் படத்தில் ஸ்வர்ணலதா பாடிய "ஆட்டமா, தேரோட்டமா" பாட்டு. அவரின் குரலில் கரைபுரண்டோடிய உற்சாகம், கும்மாளம்.  அந்தப் பாட்டை நான் கேட்டுக்கொண்டிருக்கும் போது, அந்த சமயத்தில் என்ன வரிகள் ஓடிக்கொண்டிருக்கும் என்பதை அவனாகவே யூகித்து எழுந்து நின்று முழு வீச்சில் ஆடத் துவங்கியிருந்தான்.  

லுங்கி கட்டிக் கொண்டு போனது சவுரியமாகப் போனது. ஆங்கில இதழ்களில் வாக்கிய அமைப்புக்களின் இலக்கணக் கட்டுமான லட்சணத்தைப் பற்றிய முனைவர் பட்ட ஆய்வேடு ஒன்றை இந்த நாட்டின் மிக முக்கியமான மொழியியல் பேராசிரியரின் நெறியாள்கையில் சர்வகலா சாலை ஒன்றுக்கு சமர்ப்பித்தவன், அரசுப் பள்ளி ஒன்றில் முதுநிலை ஆசிரியன், நண்பர்களோடு வேண்டுமென்றே எப்பொழுதும் ஆங்கிலத்தில்தான் பந்தாவாக சல்லியடிப்பவன் என்ற எதற்கும் உதவாத தகவல்கள் யாருக்கும் தெரியப் போவதில்லை.  இதைப் படிக்கும் நீங்கள் தயவுசெய்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.  16 பெப்ரவரி 2017 காலை ஆறரை மணி.  "ஆடுனதேயில்லை, பரவாயில்லையா?" என்றேன்.  தலையாட்டி அனுமதி கொடுத்தான்.  மெலிதாக ஆரம்பித்தேன்.  ஸ்வர்ணலதா விடவில்லை.  உண்மையில் எப்படி ஆடுவது என்பதை ஸ்வர்ணலதாதான் சொல்லிக்கொடுத்தார். 

"அண்ணா, உங்க ஸ்டெப்பு சூப்பரு" என்றான் பையன்.  

சைக்கிளில், ஸ்கூட்டரில் கடந்து போன இரண்டு பேர் பார்த்து சிரித்து கையசைத்தார்கள்.

"திருப்பி அந்தப் பாட்டையே போடவா?" என்றான்.  சிரித்து வேண்டாம் என்றேன்.  

"ஏன் அழுவுறீங்க?" என்று அவன் கேட்டபோதுதான் "உணர்ச்சிகளின் இரு முனைகளும் கண்ணீரால் ஆனது" என்று எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வந்தது. 

"ஸ்வர்ணா அக்கா எப்பவும் இப்படித்தான். ஆட வச்சுருவாங்க.  நீங்களே ஆடுனீங்க பாருங்க" என்ற பையன் கூடைகளுக்கிடையில் கைகளை அலாசி பை நிறைய காய்களைக் கொடுத்தான். 

திரும்பி வரும்போது நினைத்தேன். "ஸ்வர்ணலதா, ஏன் சீக்கிரம் செத்துப் போனீர்கள்? எங்கள் கால்களில் எவ்வளவு ஆட்டம் மீதமிருக்கிறது தெரியுமா?"


சசிகலாவை ஏன் எதிர்க்கலாகாது?

| Saturday, February 11, 2017
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூத்து பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கிறது என்பது தற்காலத்திய சமூக அரசியல் தமிழக, இந்திய சிந்தனாவாதிகளின் முகநூல் பதிவுகளை மேய்ந்தால் ஒருவாறு யூகிக்க முடிகிறது. சனாதனாவாதிகள் அல்லது வலதுசாரி அல்லது ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக கருத்துருவாக்கர்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதைப் பார்க்க முடிகிறது. இவர்களில் மிகச்சிலர் மட்டும் திருமதி தீபா ஜெயராமை ஆதரிக்கிறார்கள். இரண்டாமவரை ஆதரிப்பவர்கள் pure rightists என்றும் முதலாமவரை ஆதரிப்பவர்கள் ஓட்டு அரசியல் சார்புள்ள வலதுசாரிகள் அதாவது பாஜக-காரர்கள். சசிகலாவை ஆதரிப்பவர்கள் இரண்டு வகையானவர். பாஜக பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறது என்பதனால், தமிழர் - திராவிடர் நலனுக்கு பாஜக-வின் ஆதரவு பெற்ற பன்னீர்செல்வத்தால் குந்தகம் மட்டுமே ஏற்பட முடியும் எனக்கருதி (இது உண்மையும் கூட) சசிகலாவை ஆதரிக்கும் ராஜன்குறை கிருஷ்ணன், அ மார்க்ஸ் போன்றோர். இவர்களின் நிலைப்பாடு, நீண்ட கால நோக்கில் பார்க்குமிடத்து, சரியான ஒன்றுதான். பாஜக ஆதரவு பெற்ற அரசு ஒன்று இங்கு அடுத்த நாலரை வருடங்கள் நிலைக்குமானால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தோருக்கு பெரும் பாதகமாக முடியும். மார்க்ஸ் போன்றோரோடு பெரியாரிஸ்டுகளும் இக்காரணம் கொண்டே சசிகலாவை ஆதரிக்க தலைப்படலாம். கி.வீரமணி போன்றோர் ஏன் சசிகலாவை ஆதரிக்கிறார்கள் என்பதை இந்தப் பின்புலம் கொண்டே தெரிந்துகொள்ள முடியும். எனக்கு நிச்சயமாகத் தெரியும். பெரியார் இன்றைய நிலையில் உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவையே ஆதரித்திருப்பார். குடும்ப அரசியல், அந்தக் குடும்பமே அயோக்கியர் கூடாரம் என்ற கருத்தை வைப்போர் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், தனி ஒதுக்கீட்டு கொள்கை பாஜக-வால் ஆதரிக்கப்பட்டு கவர்னரின் முடிவின் பேரில் பன்னீர்செல்வமே முதல்வராகத் தொடர்ந்தால் ஐம்பது ஆண்டு கால தமிழக அரசின் நிலைப்பாட்டையே பன்னீர்செல்வம் மாற்றிவிடக்கூடிய இடர் உண்டு. இந்தியத் துணைக்கண்டத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 69% தனி ஒதுக்கீட்டு கொள்கை நடைமுறையில் இருக்கிறது. இது பாஜக-விற்கு நிச்சயம் உகந்தது கிடையாது. பன்னீர்செல்வத்தைக் கொண்டே இதற்கு முடிவுகட்ட முடியும். பொங்கல் சமயத்தில் மரினா கடற்கரையில் கூடிய முப்பது வயதிற்கும் குறைந்த தொழில்நுட்பத்துறை சார்ந்த மனிதர்கள் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தோருக்கான சமூக அரசியல் உரிமைகளைப் பெற கடந்த நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் நடைபெற்ற நீண்ட போராட்டங்களை அறியார். நேற்றுப் பெய்த மழைத் தாவரங்கள். பொருட்படுத்த வேண்டியதில்லை. அயோத்திதாசப் பண்டிதர், ராமசாமி நாயக்கர், குருசாமி, உள்ளிட்ட சமூக அறச்சான்று மிக்க பெருந்தகைகள் இட்ட பிச்சையின் காரணமாகத்தான் மரினாவில் கூடிய இரண்டாம் தலைமுறை பட்டதாரிக்கூட்டம் செல்போனில் ராத்திரி நேரத்தில் ஆயிரக்கணக்கில் மினுக்கி படம் காட்டியது. Memes வடிவமைக்கும் முப்பது வயதிற்கும் குறைந்த மனிதர்கள் ராத்திரி பகலாக பொது இடத்தில் கூடி நாள்கணக்கில் தங்கியிருப்பதற்கு பதிலாக கடந்த நூற்றாண்டு தென்னகத்தின் அரசியல் போராட்டங்கள், தலைவர்கள், திராவிடச் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகங்கள், சொந்த நலனைத் துறந்து ஓட்டு அரசியலுக்கும் வெளியே தசாப்தங்கள் நெடுகில் கண்துஞ்சாமல் பணியாற்றிய, அறியும் நெஞ்சமும் கண்களும் பனிக்கும்படியான, தலைவர்களைப் பற்றிய புத்தகங்களைப் படிப்பது அவர்களுக்கும் அவர்களுக்குப் பிறக்கப்போகும் அல்லது பிறந்திருக்கும் குழந்தைகளுக்கும் நல்லது. கி.வீரமணியின், பழ நெடுமாறனின், அ மார்க்ஸின் நிலைப்பாட்டை கிண்டலடிக்கும் தகுதி தங்களுக்கு உள்ளதா என்பதைக் கண்ணாடியில் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் அப்படிச் செய்பவர்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் தங்கள் கட்சிக்கு தலைவராக்குவோம் என்ற பாஜக பங்காருலட்சுமணனை தலைவராக்கி சூட்கேசில் காசுகொடுத்து படம்பிடித்து அவமானப்படுத்தி துரத்திவிட்ட கதையை அனைவரும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். பங்காருலட்சுமனனுக்கு முன்னால் அந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர்கள் கட்சிநிதி வாங்கியதில்லையா? எந்தக் கட்சியாவது வசூலிக்கும் பணத்திற்கு சரியாக கணக்குக்காட்டியதாக வரலாறு உண்டா? ஏன் பங்காருலட்சுமணன் மட்டும் மாட்டிக்கொண்டார் என்பதின் விடை அவரின் சாதியில் இருக்கிறது.

சாதி அரசியல்தான் இதற்குப் பின்னால் என்றால் தீபாவை ஏன் பாஜக வெளிப்படையாக ஆதரிக்க முன்வரவில்லை என்றால், இருவரில் பன்னீர்செல்வமே தற்போதைய நிலையில் தங்களுக்கு உகந்தவர். பன்னீர்செல்வம் எப்போதுமே தமிழக அரசியலில் ஒரு தனி சக்தியாக உருவெடுக்க முடியாது. தீபாவிற்கு சன்னமான ஒரு சாத்தியம் உண்டு.

திமுக இதைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. திமுக செயல்தலைமை இதை தனது கட்சியின் சித்தாந்த அடிப்படையில் பார்க்க மறுக்கிறது என்பது எனது எண்ணம். திமுக சசிகலாவை எதிர்ப்பது என்பது புரிந்துகொள்ளக் கூடிய விஷயம்தான். ஆனால் பன்னீர்செல்வத்திற்கு மறைமுகமான ஆதரவு அல்லது இந்தக் குழப்பத்தில் பன்னீர் மகிழும்படியான கருத்துக்களைக் கூறிவருவது என்பது திமுக-வின் நீண்டகால சமூகநீதிப் பாரம்பரியத்திற்கு எதிரானது. சட்டசபை கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டால் திமுக-விற்கு நிச்சயமான வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படியான நிலையை பாஜக தவிர்க்க தன்னாலான எல்லாவற்றையும் செய்யும் என்பது எனது எண்ணம்.

இதில் இன்னொரு கோணம் உண்டு. காங்கிரஸ் எப்பொழுதுமே சனாதனிகளின் கூட்டமாகத்தான் இருந்திருக்கிறது. சசிகலா, இதன் காரணமாகவே, காங்கிரசுக்கு ஆகாதவர். கர்நாடகாவில் இருக்கும் காங்கிரஸ் அரசு, சசிகலா சம்பந்தப்பட்ட வழக்கில் வரவிருக்கும் உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை உடனடியாக வெளியிட சட்டரீதியாகவே நிர்ப்பந்தத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. ஏன் சசிகலாவை தொல்.திருமாவளவன், பழ நெடுமாறன், அ மார்க்ஸ், ராஜன் குறை கிருஷ்ணன் போன்றோர் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு இத்தனைப் பின்புலமும் தெரிய வேண்டும். அடிக்கடி தன் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்பவர் என்று பெரியாரைப் பற்றி ஒரு விமரிசனம் உண்டு. பெரியார் தன்னுடைய அரசியல் சமூக தத்துவத்தை ஒரு அங்குலம் கூட சமரசம் செய்து கொள்ளாதவர். யாரின் மூலம் தன்னுடைய அரசியல் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியுமோ அவரை அந்த சமயம் ஆதரித்திருக்கிறார். "மனிதர்கள் முக்கியமில்லை; தத்துவம் இன்றியமையாதது" என்ற நிலைப்பாடு ஐய்யாவினுடையது.

மற்றபடி சசிகலா என்ற தனிமனுஷிக்கு முதலமைச்சர் என்ற யோக்கியதை உண்டா என்பது விவாதத்திற்குரியதே. சட்டசபை உறுப்பினர்கள் அறம் சார்ந்து, தங்களுக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கேற்ப, சசிகலாவிற்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கலாகாது என்பதெல்லாம் வெறும் facebook மற்றும் WhatsApp பேச்சு. கொஞ்சம் மரியாதையைக் கூட வேண்டாதா பேச்சுக்கள் அவை. கமலஹாசனும் நடிகர் மாதவனும் சசிகலாவை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை முதலில் இந்த மரினா மைனர்கள் தெரிந்து கொள்ளட்டும். எத்தனையோ முறை இந்திய சட்டசபைகள் இந்த மாதிரியான நிலைமைச் சந்தித்து உள்ளனவே? அப்போதெல்லாம் சட்டசபை உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த மனிதர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து பதவி விலகினார்களா? மாயாவதியை மட்டும், பங்காருலட்சுமணனை மட்டும் ஊழல்வாதிகளாக மக்களிடம் காட்டும் கயமைத்தனமிது. ராஜீவ் காந்தியின் Bofors என்ன ஆயிற்று? கர்நாடகாவின் முன்னாள் பாஜக-கட்சியின் முதலமைச்சர் மீதான குற்றச் சாட்டுக்கள் என்ன ஆயிற்று? மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபொழுது சாட்டப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுகள் என்னவாயிற்று? மூவாயிரத்திற்கும் அதிகமாக சீக்கியர்கள் ஒரு நவம்பர் மாத முதல் இரண்டு நாட்களில் எரிக்கப்பட்டார்களே, குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது? மாயாவதி ஆயிரக்கணக்கில் யானை சிலைகள் உத்திரப் பிரதேசம் முழுவதும் நிறுவி அரசுப்பணத்தை வீணடித்து விட்டார் என்பதாக குற்றம் சாட்டுபவர்கள், இந்தியா முழுக்க நேருவின் சிலைகளை மாநில மத்திய அரசுகள் தங்கள் செலவில் நிறுவியிருக்கிறார்களே, அதற்கென்ன வக்காலத்து வாங்குவார்கள்?]

"அண்ணன் எப்போ எந்தரிப்பான்; திண்ணை எப்போ காலியாகும்" என்பதாக திமுக இன்றைய நிலையைக் கவனித்து வருவது கவலை தரும் விஷயம். ஸ்டாலின் அவர்கள் திமுகவின் - திகவின் - சித்தாத்தங்களை வரலாற்றுப் பிரக்ஞையோடு புரிந்து கொள்வது அவசியம். தமிழ்நாட்டின் தலைவிதியை அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு தீர்மானிக்கப்போவது அவராக ஒருவேளை ஆகக்கூடும். அப்படியான நிகழ்வில் ஸ்டாலினிடம் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட / பட்டியல் இனத்தவரின் குழந்தைகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற வாழ்வாதார விடயங்களில் ரொம்பவும் எதிர்பார்த்து நிற்பார்கள்.

ஸ்டாலினின் எதிரி சசிகலா அல்ல என்றுதான் தோன்றுகிறது. ஆனால், காங்கிரஸ், பாஜக மற்றும் பாஜகவினால் ஆதரிக்கப்படும் பன்னீர்செல்வம் - தீபா போன்ற பெரிய - சிறிய சக்திகள் அவரின் எதிரிகளே.

இது சசிகலாவிற்கான வக்காலத்து என்று புரிந்துகொள்ளுதல் ஆரம்ப நிலை அறிவு கூட இல்லை. சசிகலா செய்த - செய்துகொண்டிருக்கும் - செய்யப்போகிற எந்தத் தவற்றிற்குமான affidavit-ம் அல்ல.

திராவிட இயக்கத்தின், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தவரின் வரலாற்றைப் படித்தவர்கள் இந்தக் கட்டுரையை முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ ஏற்றுக்கொள்வார்கள். இதன் உண்மைத்தன்மை உணரப்படுவதும் அதுபோன்ற தருணங்களில் மட்டுமே.


மாநிலம் போற்றும் நாடு

| Tuesday, February 7, 2017
இன்று (2-2-2017) தமிழ் தி ஹிந்துவில் நீதியரசர் கே.சந்துரு நீண்ட கட்டுரை ஒன்றை, தமிழ்நாட்டின் இன்றைய பள்ளிக் கல்வியின் நிலையைப் பற்றியதானது, எழுதியிருக்கிறார். கட்டுரையின் முழு உள்ளீடுமே நான் ஒப்புக்கொள்ளக் கூடியது. எமர்ஜென்சி என்று அழைக்கப்படும் அரசியல் நெருக்கடி நிலைப் பிரகடனத்தைப் பயன்படுத்தி கல்வி என்பது நடுவண் அரசுப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டது. இந்தியா போன்ற பரந்த பன்மைத் தன்மை கொண்ட நாடு ஒன்றில் பிரதேச சிறப்புக்கூறுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து புறக்கணித்ததின் விளைவு இன்று அந்த மாநிலங்கள் அனைத்திலும் பிரிவினைவாதம் இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்து வந்த மாநில மற்றும் மத்திய அரசுகள் எமர்ஜென்சியின் போது அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை.

இந்தியா முழுமைக்கான ஒரு கல்விமுறை என்பது மத்திய அரசின் கருத்து நிலைப்பாடுகளை மாநில அரசுகளின் மீது திணிக்க மட்டுமே பயன்படும் என்ற வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அதே சமயத்தில் NEET போன்ற நாடு முழுமைக்கான தகுதித் தேர்வில் கலந்து கொண்டால் தமிழ்நாடு மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்ற வாதம் இங்கு பலமாக இருப்பது எதனால் என்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே 69 சதவிகித வகுப்புரிமை நடைமுறையில் இருக்கிறது. நுழைவுத் தேர்வில் வகுப்புரிமை காரணமாக தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்பதில் உண்மை கொஞ்சமும் இல்லை. 

ஆனால், NEET தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் கலந்துகொள்ளும் நேர்வில், ஒப்பீட்டளவில் நமது மாநில மாணவர்கள் கல்வித் திறனில் மிகக் கேவலமாக பின்தங்கியிருப்பது தேசிய அளவில் தெரிய வரும். இது ஒரு பெரிய அவமானகரமான விஷயம்தான். சந்தேகமேயில்லை. முக்கியமாக, அனைவருக்கும் கல்வித் திட்டம் போன்ற திட்டங்கள் கடந்த இருபது வருடங்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் நிலைமை இவ்வளவு கேவலமாக இருப்பது மாநிலத்திற்கே அவமானகரமானதுதான். நமது நிலை தேசிய அளவில் வெளிப்பட்டு விடுமோ என்ற அரசின் அச்சமும் காரணம் என்பதாக ஒரு கருத்து இருக்கிறது. நியாயமானதுதான். நீதியரசர் சந்துரு தனது கருத்தை நேர்மறையாக வெளியிட்டுள்ளார். NEET வேண்டாம் என்று சொல்வதற்குப் பதிலாக நமது பள்ளிகளின் தரத்தையும், ஆசிரியர்களின் தரத்தையும், பாடத்திட்டங்களின் தரத்தையும் உண்மையாகவே உயர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டிய தருணம் இது.

சில வருடங்களுக்கு முன்பு துறை உயர் அதிகாரிகளுடன் ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டி வந்தது. ஆங்கிலப் பாடத்தின் தரத்தை உயர்த்துவது எப்படி என்பது பற்றியதானது அது. ஆங்கிலப் பாடப் புத்தகங்களையோ, மாணவர்களையோ எதுவும் தொட வேண்டியதில்லை என்றும், விஷயமே ஆசிரியர்களின் கைகளில் இருக்கிறது என்றும், அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஆங்கிலம் நன்கு பயன்படுத்தத் தெரிந்த (Listening, Speaking, Reading and Writing) ஆங்கில ஆசிரியர்களின் சதவிகிதம் ஐந்தைக் கூடத் தாண்டாது என்றும், முன்பு MELT என்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இருந்ததைப் போல ஒரு ஆங்கில மொழி பணியிடைப் பயிற்சியகம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேண்டும் என்றும், இந்த பயிற்சியகங்களில் வழங்கப்படுகிற பயிற்சியின் முடிவில் தரமான தேர்வு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும், தேறாத ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு தேர்வு பெறும்வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என்றும் நான் சொன்னது மிகுந்த கேலிக்கும் புறக்கணித்தலுக்கும் ஆளானது. உண்மையில் இதைத் தவிர வேறு எப்படியும் ஆங்கில மொழித் திறனை அரசுப் பள்ளிகளில் வளர்த்தெடுக்க முடியாது. இது நிச்சயமாகத் தெரியும். ஆனால் செய்ய மாட்டார்கள். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசக்கூடாது என்று முடிவு செய்திருக்கும் அமைப்புகள் வேறு எப்படியும் இயங்குவார்கள் என்று எதிர்பார்த்தல் பேராசையன்றி வேறென்ன?  

எந்தப் பள்ளிகளில் எல்லாம் ஆசிரியர்கள் ஆங்கிலம் பேசுகிறார்களோ அங்கெல்லாம் மாணவர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். Hire the aptitude; train the skill என்ற ஒரு சொலவடை மேலாண்மைத் துறையில் உண்டு. ஆசிரியராக பணியமர்த்தப்படும் போதே ஒருவருக்கு அந்தப் பணியைச் செய்ய வேண்டிய எல்லாத் தகுதிகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை. தன்னிடம் பணியமர்த்தப்பட்டிருக்கிற நபர்களுக்கு, அந்தப் பணியை மேற்கொள்ளவேண்டி தேவைப்படும் தகுதிகளை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் பணியமர்த்துவோருக்கு உண்டு. அது கடமையும் கூட. அந்தக் கடமையில் அரசின் பங்கு என்ன என்பது சுவராஸ்யமான கேள்வி. 

இத்தகைய பணியிடைப் பயிற்சிகள் ஒவ்வொரு பாடத்திற்கும் செய்தாக வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஒரு பெரிய வேலையில் சிறு பகுதியே. ஆசிரியர்களின் தகுதி ஒவ்வொரு நிலையிலும் பரிசோதிக்கப் பட வேண்டும். வேறு வழியே இல்லை. பணிப்பாதுகாப்பு என்பது இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற கவலை தேவையில்லை. உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் உண்டு என்ற நிலையில் ஆசிரியர்கள் அனைவரும் உயர் கல்வி பயில்வது போலவே, இதற்கும் வேறு உபாயங்கள் கண்டிட முடியும். 

ஆசிரியர்கள் தரம் உயராத வரை, பணியிடைப் பயிற்சிகள் தொடர்ந்து தரமாக நடைபெறாத வரை, NEET போன்ற தேர்வுகளுக்குப் பயந்து வேறு மாதிரி குரலெடுத்துக் கூவிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

மற்றபடி, தமிழ்நாடு நாட்டிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்று என்று அரசியல்வாதிகளும் அமைப்புகளும் மேடையேறி அறிவிக்கும் பொழுது, selective amnesia-வை வரவழைத்துக்கொண்டு, அவர்களை நம்ப வேண்டியதுதான். வேறு வழி?


ரஜினிகாந்தின் தங்கைகள்

|
 தற்கொலைகள் விலங்குகள் மத்தியிலும் அபூர்வமாக உண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். என்ன காரணத்தால் அவைகள் தற்கொலை செய்கின்றன என்று தெரியவில்லை. ஆனால் மனிதர்கள் தற்கொலை செய்த வண்ணம் இருக்கிறார்கள். அதிலும் படித்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஸ்காண்டிநேவியா நாடுகளில் தற்கொலைகள் அதிகம். படிப்பும் அதிகம். இந்தியாவில் கேரளா தற்கொலைகளுக்கு பேர் போனது. அங்கிருந்த வருடங்களில் அடிக்கடி கேள்விப்பட்டவாறே இருந்தேன். எனது மாணவர்கள் அவர்களின் உறவினர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் முதல்நாள் பள்ளிக்கு வரமுடியவில்லை என்று சொல்லியவாறு இருந்தார்கள். சமூகத் தளத்தில் அறிவும் கிண்டலும் எப்போதும் ததும்பிய வண்ணம் இருக்கும் இடத்தில் தற்கொலைகளும் தொடர்ந்து கொண்டே இருப்பது ஒரு நகை முரண்.


கற்பனைக்கும் தற்கொலைக்கும் தொடர்பு உண்டு என்று நம்ப இடமுண்டு. அதை அனுபவ வாயிலாக நான் அறிந்திருக்கிறேன். எண்ணற்ற நிகழ்த்துக் கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  திரைப்படம், நாடகம், தெருக்கூத்து கலைஞர்கள், தொலைக்காட்சி கலைஞர்கள் என்று தற்கொலை செய்து கொள்வதில் ஒரு நீண்ட தற்செயலைக் கவனித்திருக்கிறேன். ஐந்தாவது அல்லது ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலையில் நண்பர்கள் செட்டியார் கடையில் தினத்தந்தி பார்த்துவிட்டு ஓடிவந்து கத்தினார்கள். "டேய், ரஜினி தங்கச்சி தற்கொலை செஞ்சிக்கிட்டா, வெளிய வாடா." நடிகை ஷோபா - முள்ளும் மலரும் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தங்கையாக நடித்திருந்தவர் - தற்கொலை செய்து கொண்டிருந்தார்.  ரொம்பவும் அதிர்ச்சியான காலை நேரம் அது. அன்று முழுக்க பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூட்டம் கூட்டமாக இதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். ரஜினிகாந்த் தங்கையாக நடிப்பதற்கும் தற்கொலை செய்துகொள்வதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்க இடம் உண்டு. தர்மயுத்தம் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நடிகையும் தற்கொலை செய்து கொண்டார். முள்ளும் மலரும் படித்தில் ரஜினியின் மனைவியாக நடித்தவரும் தற்கொலை செய்துகொண்டார் என்பது வியப்பான தற்செயல். தற்கொலை செய்து கொண்ட நடிகர் நடிகையர்களைப் பற்றி கூகுள் செய்தபொழுது கிடைத்த தகவல்கள் பயமுறுத்துகின்றன. ஜியா கான் தொடங்கி குரு தத் வரை பட்டியல் மிக நீளம்.  ஒரு படத்தில் காதலன் காதலியாக நடித்த மோனல் என்ற நடிகையும் குணால் சிங் என்ற நடிகரும் தற்கொலை செய்து கொண்டனர்.  மழையில் நனைந்தவாறு அவர்கள் இருவரும் ஆடிய பாட்டு ஒன்று சன் டிவியில் மிட்நைட் மசாலாவில் ஒவ்வொரு இரவும் வரும். மோனல் - குணால் இருவரோடு மிட்நைட் மசாலாவும் காணாமல் போய்விட்டது.   

சர்வகலா சாலையில் முனைவர் பட்ட ஆய்வைத் தொடங்கியிருந்த சமயம்.  துறையின் வாசலில் ஒரு மிகப்பெரிய பலகையில் ஆண்டு வாரியாக முனைவர் பட்டம் பெற்றவர்களின் பெயர்கள் பட்டியிலிடப்பட்டு இருக்கும்.  அதில் முதலில் இருந்தவர் சேலத்துக்காரர்.  சில சர்வகலா சாலைகள் அவருக்கு பேராசிரியர் பணி கொடுக்க முன்வந்த போது நிராகரித்துவிட்டு, சேலத்தில் நிறுமங்களின் பங்குகள் வாங்கி விற்கும் முகவரானார். விரைவில் ஆச்சர்யப்படத்தக்க அளவில் முன்னேறினார். ஹர்ஷத் மேத்தாவால் அத்தனையும் கெட்டுப்போனது.  தன்னுடைய பங்கு வர்த்தகத்தில் திடீரென ஏற்பட்ட ஏகப்பட்ட நஷ்டத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டார். துறையில் ஒரு வாரம் யாருக்கும் எதையும் செய்யத் தோன்றவில்லை. பேராசிரியர்களில் வயது குறைந்த சிலர் தற்கொலை செய்துகொண்டவரின் சகாக்கள். பித்தம் பிடித்த நிலையில் அலைந்து கொண்டிருந்தனர். அவரைப் பற்றிய கதைகள் எங்களது கனவுகளிலும் வந்தவாறு இருந்தன. அசாதாரணமான ஒருவரின் மாபெரும் வீழ்ச்சியாகக் கருதப்பட்டது.         

தற்கொலை செய்துகொண்ட முட்டாள்கள் என்ற தலைப்பில் தேடுபொறிகளில் பலமணி நேரங்கள் மேய்ந்துகொண்டிருந்த போதும் ஒரு நபரைப் பற்றிய தகவலையும் பெறமுடியவில்லை.  தற்கொலைக்கும் சிந்தனைக்கும் தொடர்பு உண்டு என்பது இதனால் நிரூபணமாகிறது.  தற்கொலை செய்துகொண்ட இலக்கியவாதிகள் என்று தேடினால் பட்டியல் முடிவே இல்லாமல் நீளுகிறது. தமிழில் தற்கொலை செய்துகொண்ட இலக்கிய கர்த்தாக்கள் அதிகம்தான்.  எனக்குத் தெரிந்து அதிர வைத்தது ஸ்டெல்லா ப்ரூஸ் அவர்களின் தற்கொலை.  பள்ளிப்பருவத்தில் விகடனில் வெளிவந்த அவரின் "அது ஒரு நிலாக்காலம்" என்ற நாவலையும், ராம்குமார், சுகந்தி என்ற பெயர்களையும் மறக்க முடியாமல் இரவு நேரங்களில் நண்பனொருவனுடன் மொட்டை மாடிக்குச் சென்று உதடுகள் பழுக்க பழுக்க பீடியும் சாராயமும் குடித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.  "எப்படியாச்சும் சுகந்தியை பாத்திரனும்.  விகடன் ஆபிசுக்குப் போய் ஸ்டெல்லா ப்ரூஸின் அட்ரஸ் வாங்கி விசாரித்து சுகந்தியைப் பார்க்காமல் வூடு வரக்கூடாது" என்ற விசும்பிய நிலையில் நண்பனும் நானும் திட்டம் போட்டதும் ஞாபகத்திற்கு வருகிறது.  அந்த ஸ்டெல்லா ப்ரூஸ் தற்கொலை செய்து கொண்டார்.  பின்னர் அவர்தான் ராம்குமார் என்பதும், சுகந்தி வேறு யாருமல்ல, பதினெட்டே ஆண்டுகள் அவருடைய வாழ்க்கைத் துணையாக இருந்து மரித்துப் போன திருமதி ஹேமா என்பதும் தெரிய வர, நெஞ்சம் கனத்துப் போனது.  "அந்தப் பதினெட்டு ஆண்டுகளில் மொத்த வாழ்க்கையையும் வாழ்ந்துவிட்டேன்" என்பதாக தற்கொலைக்கு சிறிது காலம் முன்பாக எழுதிய நினைவுத்தொகுப்பு ஒன்றில் ப்ரூஸ் எழுதியிருக்கிறார்.  இரண்டு நாட்களுக்கு முன்பாக க.சீ.சிவக்குமார் மாடியிலிருந்து விழுந்து இறந்திருக்கிறார். எழுத்தாளர் பாலகுமாரன் நண்பர் ஒருவரின் (அவரும் எழுத்தாளர்) தற்கொலை குறித்த அவலச்சுவை நிறைந்த அவரது கட்டுரை அப்போது ரொம்பவும் பாதித்தது.  குறத்தி முடுக்கு ஜி.நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார்.  விர்ஜினியா வூல்ப் உடம்பில் கற்களைக் கட்டிக்கொண்டு ஆற்றில் விழுந்து செத்துப் போனார்.  எப்படியேற்பட்ட கர்த்தா! நாஜிப்படைகள் தன்னைப் பிடித்துவிடும் என்று பயந்து வால்டர் பெஞ்சமின் அதிகப்படியாக மார்பின் எடுத்துக் கொண்டு செத்துப் போனார்.  புரட்சியின் போக்கும் மக்களின் எதிர்வினையும் பிடிக்காமல் மாஸ்கோவில் 1930ம் ஆண்டு மாயாகோவ்ஸ்கி தற்கொலை செய்து கொண்டார்.  1961ம் ஆண்டு மன உளைச்சலின் காரணமாக எர்னஸ்ட் ஹெமிங்க்வே ("கிழவனும் கடலும்" என்ற நோபல் நாவலை எழுதியவர்) தன்னையே சுட்டுக்கொண்டு மரித்துப் போனார்.  எரிகின்ற அடுப்பில் தலையைக் கொடுத்து சில்வியா பிளாத் தற்கொலை செய்துகொண்டார்.

க.சீ.சிவக்குமார் மாடியிலிருந்து விழுந்து இறந்து போனது 130 கோடிப்பேர்கள் உள்ள ஒரு தேசத்தில் ஒரு பெரிய விஷயம் இல்லை.  ஆனால் அவர் சிந்தித்துக் கொண்டிருந்ததால் இறந்துபோனார் என்பது நமது சமூகத்தைப் பற்றிய அவலமான ஒரு செய்தி. எல்லா சமூகங்களைப் பற்றிய அவலமான செய்திகளையும் சிந்திப்பவர்கள் தங்களின் தற்கொலைகளின் மூலம் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.   

இந்தப் பூமியின் நெடிய வரலாற்றில் சில தருணங்களில் மட்டுமே தற்கொலைகள் நியாயப்படுத்தப் பட்டுள்ளன. தங்களது நம்பிக்கைகளை சீரழிக்கும் வண்ணம் செயல்படும் அரசை எதிர்க்கும் விதமாக துறவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.  சில தற்கொலைகள் அரசுகளைக் கவிழ்த்திருக்கின்றன. உடல் ரீதியான வழி / துன்பம் நீங்க மாற்று வழியில்லாப் போகும் நிலையில் சில தற்கொலைகள் நியாயமாகலாம். 

இவை தவிர்த்த வேறு எந்த தற்கொலைக்கும் சமூகம் எவ்விதமாகவோ காரணமாக இருக்கிறது. ஒத்துக் கொள்ளவே முடியாத முரண்கள் நிறைந்த இந்த சமூகத்தில் விட்டேத்தியாகவோ, எருமை மாட்டுத் தன்மையுடனோ, சிந்திக்கும் திறன் அற்றோ, கற்பனை வளம் கொஞ்சமும் இல்லாமலோ இருக்க எல்லாம் வல்ல இறைவனின் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பது அனைவரும் முன்னெடுக்க வேண்டிய பிரார்த்தனைதானே!