சேத்துப்பட்டு ரசம்

| Tuesday, January 31, 2017
எத்தனையோ மகான்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள். பல தருணங்களில் மகான்கள் நம்மிடையே உலவுவது அவர்கள் இருக்கும்வரை தெரிவதில்லை.  முடிந்தவரை உலகை உய்வித்து, நேரம் வந்து நகர்ந்த பிறகுதான், தெரிந்தவர் யாரோ சொல்லி நமக்குப் புலப்படுகின்றனர்.  அலாவுதீனின் விளக்குப் போல தேய்க்கத் தேய்க்க பிம்பம் பெரிதாகிக் கொண்டே போகிறது.  கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கையும் அதைப்போலத்தான்.  ராமானுஜன் சேத்துப்பட்டில் இறந்தபோது வயது 32. பக்கத்தில் ஜானகி - மனைவி, வயது 20. இறந்த தேதியிலிருந்து கணக்குப் போட்டு முந்தைய எட்டு மாதங்கள்தான் இருவரும் சேர்ந்து நடத்திய குடித்தனம்.  அதுவும் ராமானுஜத்தின் அம்மா கோமளத்தம்மாளிடம் சண்டை பிடித்துக் கொண்டு வைத்தியம் பார்த்துக் கொள்ள ஜானகியைக் கூட்டிக்கொண்டு சேத்துப்பட்டிற்கு வந்திருந்தார் ராமானுஜம்.  பிடித்த ரசம் - சாம்பார் - சாதம் வடித்துக் கொடுத்த ஜானகியிடம் கதறியிருக்கிறார்.  இப்படியான உணவு தனக்கு லண்டன் வாசத்தின் போது கிடைத்திருந்தால் காசநோயால் பீடிக்கப்பட நேர்ந்திருக்காதே என்று கதறிய மனது அவருடையது. ராமானுஜத்தின் மறைவிற்குப் பின்பு 67 வருடங்கள் உயிர் வாழ்ந்து மறைந்திருக்கிறார் ஜானகி.  87-வது வயதில் கணவரின் சில புகைப்படங்களும் தேற்றங்களும் அவரிடம் காண்பிக்கப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.  தங்களது சேத்துப்பட்டு எட்டுமாத தாம்பத்தியம் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். 

ராமானுஜத்தின் நூற்றுக்கணக்கான தேற்றங்களைப் பற்றியும் அவரது லண்டன் பயணத்தைப் பற்றியும், லண்டன் பேராசிரியர் ஹார்டியைப் பற்றியும், இருவரின் சர்ச்சை மிகுந்த நட்பு பற்றியும் அதிகம் பேசப்பட்டு விட்டது.  ராமானுஜம் - ஜானகி - கோமளத்தம்மாள் என்ற முக்கோணம் எதுவும் பேசப்படாமலேயே போய்விட்டது.  ராமானுஜத்தைத் திருமணம் செய்துகொண்ட போது ஜானகிக்கு 10 வயது.  ராமானுஜத்திற்கு வயது 22. திருமணம் முடிந்தவுடன் பெற்றோருடனேயே இருத்தி வைக்கப்பட்டார் ஜானகி. அடுத்த பத்து வருடங்கள் கணவனை நேரடியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கப் படவில்லை .  ராமானுஜம் லண்டனில் இருக்கும்போது கோமளத்தம்மாளுடன் தங்கியிருந்த ஜானகிக்கு ராமானுஜம் எழுதிய எந்தக் கடிதமும் தரப்படவில்லை.  கோமளத்தம்மாள் தடுத்துவிட்டார்.  காரணம் அறியாமல் லண்டனில் ராமானுஜம் தவித்துக் கொண்டிருந்தார்.  ஜானகி தன்னை மறந்துவிட்டாள் என்றே நம்பினார் ராமானுஜம்.

கும்பகோணத்தில் பட்டப்படிப்பை முடிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்த ராமானுஜத்திற்கு நண்பரின் உதவியால் சென்னைத் துறைமுகத்தில் மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.  ஆனால் ரசம் சாம்பார் சாதம் கிடைக்கவில்லை.  தேற்றங்களாக எழுதித் தள்ளிக்கொண்டிருந்தார்.  இங்கிலாந்திற்கு தான் அனுப்பிய எந்தக் கடிதத்திற்கும் சர்வகலா சாலைப் பேராசிரியர்கள் எவரும் பதில் அனுப்பாததால் சோர்ந்து போயிருந்த ராமானுஜத்தின் தேற்றங்கள் அடங்கிய பார்சல் ஒன்று கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி அவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது.  ஹார்டியால் நம்பவே முடியவில்லை.  தேற்றங்களை நிரூபணம் செய்யுமாறு அவர் எழுதிய கடிதங்களை ராமானுஜம் சட்டை செய்யவில்லை.  அப்படி மெய்ப்பிப்பது தனது நேரத்தை வீணாக்கும் என்றும், தனது அத்தனை தேற்றங்களும் நிரூபணமாவதுதான் என்றும் பதில் எழுதினர் ராமானுஜம்.  தேற்றங்களை எழுதிப் பார்க்க தாட்கள் இல்லாமல் கிடைத்த கறுப்புத் தாள்களில் சிவப்பு மையைக் கொண்டு தேற்றங்களை எழுதிய ராமானுஜம், தனக்கு பணம் அனுப்பி லண்டனுக்கு அழைத்துக் கொள்ளுமாறு ஹார்டிக்குத் தெரிவித்தார். 

அப்படியாக அவரை அழைப்பதில் ஹார்டிக்கு சிரமங்கள் இருந்தாலும் அவரின் தேற்றங்களின் விசுவரூபத்தில் லண்டன் சென்றார் ராமானுஜம். ஆனால் அதற்கு முன்பாக குலதெய்வம் நாமக்கல் நாமகிரி அம்மனின் அனுமதி பெற தாயால் வற்புறுத்தப்பட்டதால் மூன்று நாட்கள் கோயிலில் படுத்திருந்து அம்மனால் அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதாக சொல்லி, ரசம் சாம்பார் சாதம் செய்வதற்கான மளிகைகளுடன் லண்டன் கிளம்பினார் ராமானுஜம். லண்டன் வாழ்க்கை இன்பம் துன்பம் இரண்டும் கொண்டதாக இருந்தது.  குளிர் தாங்கமுடியாததாக இருந்ததுடன், ரசம் சாம்பார் சாதமும் கிடைக்கவில்லை. ஹார்டியுடனான நட்பு பல முரண்களைக் கொண்டதாக இருந்தது.  இங்கிலாந்து ராமானுஜத்தின் மேதமையை உணர்ந்து கொண்டாலும் ஜாகை உவப்பாக இல்லை. 

குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ராமானுஜத்தை காசநோய் தாக்கியது.  ஒரு கட்டத்தில் அவசமாக திருப்பி அனுப்பப்பட்டார்.  தஞ்சாவூர் அல்லது சேத்துப்பட்டு மருத்துவமனைக்கு செல்லலாம் என்ற நிலையில் சேத்துப்பட்டை தேர்ந்தெடுத்தார் ராமானுஜம்.  ஜானகியை அழைத்துச் செல்வதற்கு கோமளத்தம்மாள் ஆட்சேபம் தெரிவிக்க முதன்முதலில் தாயை எதிர்த்துப் பேசுகிறார் ராமானுஜம்.
எட்டு மாதங்கள் ஜானகியுடன் குடித்தனம் செய்திருக்கிறார் ராமானுஜம். பெரும்பகுதி அழுகையிலேயே கழிந்தது.  "நீ என்னுடன் லண்டன் வந்திருந்து ரசம் சாம்பார் சாதம் செய்து தந்திருந்தால் காசநோய் என்னைத் தாக்கியிருக்காதே" என்று கதறிய வண்ணம் இருந்த ராமானுஜத்தை ஜானகியால் தேற்ற முடியவில்லை.  தன்னுடைய வாழ்நாள் சேமிப்பான ஐயாயிரம் ரூபாயை ஜானகியிடம் கொடுத்து வைரத் தோடு  வாங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். கோமளத்தம்மாளுக்கு ஏதாவது கொடுத்தாரா என்பது பற்றி தகவல் இல்லை. 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட் கனிகல் என்பவர் The Man Who Knew Infinity என்னும் பெயரில் ராமானுஜத்தின் சரிதையை எழுதி, அது உலகம் முழுக்க புகழ் பெற்றது.  நிறைய மொழிகளில் பெயர்க்கவும் பட்டது.  அண்மையில் அதே பெயரில் திரைப்படமும் வெளியாகியுள்ளது.  Slumdog Millionnaire படத்தில் நடித்த தேவ் பட்டேல் ராமானுஜமாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.  தமிழர்கள் எத்தனை பேர் அந்தப் படத்தை பார்த்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாக இந்த இருபது வருடங்களில் இரண்டாயிரம் தமிழர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்திருந்தாலே அதிகம்.  கோவை கேந்திரிய வித்யாலாயாவில் பணியாற்றிக் கொண்டிருந்தபொழுது, அங்கிருந்த நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க பெரிய தொகை ஒன்று ஒதுக்கப்பட்டது.  நூலகர் எனது நண்பர்.  ஆங்கிலப் புத்தகங்கள் தேர்வு செய்ய என்னை அனுப்பினார்.  அவினாசி சாலையில் இருந்த Landmark புத்தகக்கடையில் நிறைய புத்தகங்களைத் தேர்வு செய்தேன். அங்குதான் ராபர்ட் கனிகலின் The Man Who Knew Infinity-ஐ முதலில் பார்த்தேன்.  இரண்டொரு பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்த நான் அங்கேயே உட்கார்ந்து கிட்டத்தட்ட பாதிப்புத்தகத்தை முடிக்க வேண்டி வந்தது.  எளிமையான ஆனால் சுவராஸ்யமான ஆங்கிலத்தில் ராமானுஜத்தின் வாழ்க்கை கண்முன்னே விரிந்தது.  அதன்பிறகு என்னுடைய வற்புறுத்தலால் சகாக்கள் பலரும் அதைப் படித்தனர்.  இதுவரை நான் படித்திருக்கும் வாழ்க்கை சரிதங்கள் - சுயசரிதங்கள் ஆகியவற்றிலேயே மிகவும் சிலாக்கியமானவை என்று கருதுவது ரஸ்ஸலின் சுயசரிதம், Katherine Frank எழுதிய Indira மற்றும் கனிகலின் The Man Who Knew Infinity ஆகியவற்றைத்தான். இவைகளில் ததும்பும் புனைவுத்தன்மை எப்போதும் என்னை ஈர்த்தவாறே இருக்கிறது.  

ஜனவரி விகடன் தடம் இதழில் ராமானுஜம் பற்றிய படம் வெளிவந்திருக்கும் தருணத்தைக் கொண்டாடும் விதமாக இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஒரு நீண்ட கட்டுரையை எழுதியுள்ளார். மட்டுமல்லாது ராபர்ட் கனிகல் அவர்களுடன் நேர்காணல் ஒன்றையும் செய்துள்ளார்.  கனிகல் எழுவதற்கு எந்த முயற்சியும் அதுவரை செய்தவரல்ல.  ஆனால், 'அது' தன்னிடமிருந்து தானாகவே வருகிறது என்கிறார். ஹார்டி ராமானுஜத்தை "எப்படி உன்னால் நூற்றுக்கணக்கில் தேற்றங்களை உருவாக்க முடிகிறது?" என்று கேட்டபொழுது ராமானுஜமும் சொல்லியிருக்கிறார்: "தெரியவில்லை, ஆனால் அவைகள் தானாகவே வருகின்றன."

நல்லவை எல்லாம் நம்மிடமிருந்து "தானாகவே" வந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்!

i am but the films i watch and the books i read

| Wednesday, January 25, 2017

i started to watch films pretty early in life.  there were any number of movie buffs around me.  my cousins, their friends and all those boys and girls who would camp at our ancestral home during summer - all of them were severely stung by film-bug.  naturally, that rubbed on me and my earlier visits to two nearby theaters could never be better.  mgr, sivaji and later rajnikanth - kamalhasan movies were special treats my father and his brother would pamper us children with on special occasions, and sometimes, during weekends. 

when i was in college, it was due to the influence of the last benchers (i could remember them - ramasubramaniam, sundarraj, mohanraj, mugunthakumar, rajkumar, venkatesan, ragupathy) i started watching english movies at imperial talkies in shevapet.  mindboggling.  my entire perception about films had to undergo a sea-change and for the first time in my life, i came to understand that film-making is a very serious and solemn business.  the sensitivity involved is no less that that is involved in writing or making a work of art.  in fact, film-making is an art by itself.  thanks to imperial talkies, my next ten years of so were busily spent in watching almost all the movies screened there.  (later, very sadly, imperial talkies started screening third rate malayalam movies with two minutes porn clip intercepting the movie. and this theater eventually was shut down as its audience fell down drastically).

i still remember the year. 2002.  it was when i bought a dvd player.  it was the same year my friend at pondicherry took me to nehru street there.  there were a couple of video shops vendoring thousands of hollywood, english and foreign movies.  i could find there almost  all the movies i wanted to see but could not do till then.  i borrowed a  few thousands from my friend and bought as many movies as the loan could negotiate.  i came back home with two or three big bags of pirated movies and started relishing them non-stop, unsaturated. in fact, the more i saw, the more i craved for.  to sir with love, to kill a mocking bird, spartacus,   the greatest story ever told, since you went away, come september, the sound of music, barbaros, cleopatra - the list went on and on.  also, this was around the same time i stopped watching tamil movies.  after thousands of english movies into my mind, i could not endure the torture of tamil movies any more. i felt nauseated at the scent of tamil movies.

i should have watched around 5000 movies or quite close to the number.  everywhere i go for freelancing classes or meeting young people, i throw at them a list of english movies they should watch.  i consider this important no matter how these boys and girls take my recommendation.  i grew up watching these movies and i am better for it.  and it is my business to tell people around me about these movies and i should convince them why they would be better too by the experience of watching these movies.
this morning [25-1-2016] i chanced upon two films sites on net where a couple of recommendations are given for the readers. one is about 25 most inspirational movies.  i was happy to know that i have seen all the 25 films already and many of them are really inspirational, i should say.  i feel i should get you guys the list so that you too get happily stung by the film-bug, that is, english movie-bug.  in case, you have not been so far. thank you.
channel42.com recommendations:
  1. dead poets society
  2. eat pray love
  3. the pursuit of happiness
  4. life of pi
  5. one flew over the cucukoo's nest
  6. the pianist
  7. a beautiful mind
  8. forrest gump
  9. schindler's list
  10. million dollar baby
  11. stranger than fiction
  12. to kill a mockingbird
  13. october sky
  14. cast away
  15. the shawshank redemption
  16. life is beautiful
  17. awakenings
  18. adaptation
  19. rush
  20. the theory of everything
  21. freedom writers
  22. braveheart
  23. edward scissorhands
  24. the imitation game
  25. lincoln
i think all these films could be downloaded from famous sites committed to this purpose.  the boys and girls at engineering colleges do it in a jiffy.  i seek help from my students at these freelancing classes and they load my pen-drive with the list of movies asked for. 

these twenty-five movies should tell you why i stopped watching tamil movies from 2002.

தன்னெழுச்சியும் செயல்தலைமையும்

| Sunday, January 22, 2017

இன்றைய தமிழ் தி ஹிந்து நாளிதழில் [22-1-2017] சமஸ் 'டெல்லிக்கட்டு' எனும் தலைப்பில் துணிச்சலான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.  என்னுடைய நண்பர்களிடம் கடந்த ஒரு வாரமாக இதே கருத்தை நான் பேசி வருகிறேன்.  இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ரொம்பவும் சிலாகித்து பேசும் அவர்களிடம், என்னுடைய அவநம்பிக்கையை சில காரணங்கள் கொண்டு விவாதித்திருந்தாலும் அடிக்கிற அலையில் பிரபலங்கள் யாரும் இப்படியான ஒரு பார்வையை முன்வைக்க தயங்குவார்கள் என்று அறிந்திருந்ததுதான்.  அந்த வகையில் சமஸ் துணிச்சலானவர்தான்; சந்தேகம் இல்லை.

முதலில், இந்தப் போராட்டத்தில் சித்தாந்தத்தின் பங்கு இல்லை.  கொஞ்சமும் இல்லை என்பது எனது கருத்து.  ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதற்காக மட்டும் இத்தகைய தன்னெழுச்சி நடந்திருப்பதாக நான் நிச்சயம் கருதவில்லை.   ராமச்சந்திர குஹா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இத்தகைய தன்னெழுச்சி jobless growth-ன் அடையாளம் என்று சொல்லியிருப்பது முற்றிலும் ஒதுக்கிவிடக் கூடியது அல்ல. சித்தாந்தத்தின் அடிப்படையில் இல்லாத எந்த மக்கள் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்றதாக பதிவு எதுவும் வரலாற்றில் இல்லை.  லெனினின் தலைமைக்குப் பின்னால், அதற்கு இருபத்திரண்டு ஆண்டுகள் முன்பாக மார்க்ஸ், எங்கல்ஸ் மற்றும் ஜென்னி உருவாக்கிய சித்தாந்த பங்களிப்பு இருந்தது.  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு பெரியார் உள்ளிட்டவர்கள் முப்பதுகளின் துவக்கத்திலிருந்தே உருவாக்கி வந்த சித்தாந்தம் இருந்தது.  சித்தாந்த அடிப்படை இல்லாத எந்தவித கட்டுமானமும் குலையும் என்பது விதி. அவசரச் சட்டம் போதாது; நிரந்தரமான பாதுகாப்பு ஜல்லிக்கட்டுவிற்கு வேண்டும் என்று சொல்லும் இளைஞர்களின் குரலுக்கு மாநில - நடுவண் அரசுகள் செவிசாய்த்து விட்டால் இந்த ஐம்பது லட்சம் இளைஞர்களும் அடுத்த நாள் காலையிலிருந்து அவரவர் வேலையைக் கவனிக்கப் போய் விடுவார்கள்.  அப்படியான நிலை என்ன அசந்தர்ப்பமானது! இத்தகைய மக்கள் சேர்க்கை - முன்னிகழ்வு இல்லாதது - ஒரு ஜல்லிக்கட்டிற்காக மட்டுமா?  இந்த ஒரு கலாச்சார அடையாளத்திற்காக மட்டுமா ஐம்பது லட்சம் கொண்ட மாநிலம் பரவலான - எல்லா அரசியல்வாதிகளும் திகிலடையும்படியான - ஒரு எழுச்சி?

அடுத்து, இந்த எழுச்சி ஆரம்ப நிலையில் யாரும் எதிர்பார்க்காதது.  காட்டுத்தீயை இதற்கு காட்டாக சொல்லலாம்.  ஒருவர் பின்னால் ஒருவராக சேர்ந்தது இது.  ஒரு தத்துவப் பின்புலம் மட்டும் இதற்கு இருக்குமானால் - ஒரு அமைப்பின் கீழ் இது நிகழ்ந்திருக்குமானால், இதைப் போன்ற மக்கள் வெள்ளத்தை எந்த நியாயமான சமூக எதிர்ப்பின் பொருட்டும் எப்போது வேண்டுமானாலும் கூட்டியிருக்க முடியும்.  ஜல்லிக்கட்டு எழுச்சி தத்துவப் பின்புலம் இல்லாதது; அந்த நேரத்து உணர்வுகளின் அடிப்படையில் தானாகவே கூடி வந்தது.  போராட்டத்தில் இருப்பவர்கள் உட்பட யாருமே எதிர்பார்க்காதது.  

இன்னொன்று, தில்லி அரசால் (காங்கிரஸ் அல்லது பிஜேபி) தொடர்ந்து - காவிரி விடயம் உள்ளிட்டு - தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது  என்ற உணர்வு அனைத்துத் தமிழர்களுக்கும் நீண்ட நெடு நாட்களாகவே இருந்து வந்துள்ளது. அவ்வகையான அடக்கப்பட்ட கோபத்திற்கும் வடிகாலாக இந்தத் தன்னெழுச்சி அமைந்து விட்டது.  தில்லியின் கைப்பாவையாக இருந்து வரும் திமுக / அதிமுக கட்சிகளின் மேல் கவிழும் அதிருப்தியாகவும் இந்த எழுச்சியைப் பார்க்கிறேன். ஒரு வலிமையான சித்தாந்தத்தின் மேல் கட்டப்பட்டது திமுக.  நாற்பதுகளில் தன்னுடைய ஒட்டு வங்கி அரசியல் தடத்தை சித்தாந்த பலத்தின் மூலமாகவே அந்தக் கட்சி தமிழகத்தில் நிறுவியது.  துவக்கப்பட்டு பதினெட்டு ஆண்டுகளுக்குள் அந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்தை காங்கிரசிடமிருந்து கைப்பற்ற முடிந்தது ஒரு மாற்று சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததினால்தான். சித்தாந்த பலம் குன்றி இளைத்துப் போய் விட்டதை திமுக உணர இளைஞர்களின் இந்த எழுச்சி ஒரு நல்ல வாய்ப்பு.

அதிமுகவிற்கு இதனால் ஒரு பெரிய நட்டம் எதுவுமில்லை. அது தனிநபர் வலிமையால் ஏற்படுத்தப்பட்டது; நடத்தப்பட்டது. வலிமையான தலைவர்கள் இல்லை என்ற நிலையில் அதன் இருப்பும் நியாமமும் கடுமையான கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.  திருமதி சசிகலா அல்லது திரு பன்னீர்செல்வம் இந்தக் கட்சிக்கு ஒரு தத்துவப் பின்புலத்தை / சித்தாந்தத்தை உருவாக்கித் தருவார்கள் என்பதை கட்சிக்காரரே நம்பமாட்டார்.  அடிமட்டத் தொண்டர்கள் திருமதி தீபாவிடம் ஏதேனும் சித்தாந்தங்கள் ஒளிந்திருக்காதா என்று தேடத் துவங்கியிருப்பதையும் தெருமுனைச் சுவரொட்டிகள் வழியாக அனுமானிக்க முடிகிறது. 

விஜயகாந்த் பற்றி எதுவும்  பேச வேண்டியிருக்கிறதா என்று தெரியவில்லை.  அவரைப் பொறுத்த வரையில் அண்மையில் இறகுப்பந்து அணி ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார்.  அதுவும் தேசிய அளவிலான போட்டி ஒன்றில் தங்கப்பதக்கம் வென்று மூன்று கோடிப் பரிசையும் பெற்றிருக்கிறது.  இந்த மாதிரியான அவருக்கும் இன்னும் சிலருக்கும் உபயோகமான காரியங்களில் அவர் ஈடுபட்டு வருவது தமிழகத்திற்கு நல்லது.  வைகோ சோ-வைவிட மோசமாகி விட்டார்.  திருமா - அன்புமணி வகையறாக்கள் எல்லோரிடமும் தங்களது சரக்கை விற்க முடியாது.  திருமாவளவனிடம் ஒரு சரியான அரசியல் பார்வை இருந்திருக்க முடியும்; வழியில் எங்கோ அதைத் தொலைத்து விட்டார். 

கம்யூனிஸ்டுகளிடம் ஒரு வலுவான சித்தாந்தம் இருக்கிறது.  அதற்கான தேவையும் முன்னெப்போதையும் விட இப்போது அனைவராலும் உணரப்படுகிறது.  குஹா தெரிவித்திருக்கும் jobless growth என்ற கருத்து உண்மை என்றால், இப்படியான விடயங்களை தத்துவப் புரிதலோடு முன்னெடுக்க கம்யூனிஸ்டுகளால் முடியும்.  அப்படியான ஒரு மக்கள் போராட்டத்தை அவர்கள் முன்னெடுப்பது பொருத்தமும் கூட.  ஆனால், அங்கே தலைவர்கள் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

திமுக செயல் தலைமை தன்னுடைய கட்சி ஆதிகாலத்தில் பிரதிநிதித்துவப் படுத்திய தத்துவங்கள் என்ன, சித்தாந்தங்கள் என்ன, பெரியார், அண்ணா மற்றும் ஆரம்ப கால கருணாநிதி ஆகியோர் அவைகளைப் பற்றி எவ்வகையான புரிதலோடு செயலாற்றி வந்தார்கள் என்பதைப் பற்றி கட்சியில் எஞ்சியிருக்கும் முதியவர்களிடம் சிரத்தையாக பாடம் கற்றுக் கொண்டால், செயல் தலைமையின் நாவன்மை தலைமையின் நாவன்மையோடு ஒப்பீட்டு தரத்தில் உயர்ந்தால், திமுகவிற்கு மீண்டும் ஒரு எதிர்காலம் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.


இளைஞர்களின் எழுச்சியால் நான் தெரிந்து கொண்டவை இவை. சரியா என்பதைக் காலம் சொல்லும்.  ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.    

நின்று போன கடிகாரம்

| Friday, January 20, 2017
படித்தவனுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்த ஒரு காலம் இருந்தது.  எழுபதுகளிலும் அடுத்த பத்தாண்டுகளிலும் நிலைமை இதுதான்.  படித்தவர்களும் குறைவு; அதனினும் குறைவு வேலை வாய்ப்புகள்.  எனக்குத் தெரிந்து MA / MSc BEd முடித்த முதுநிலைப் பட்டதாரிகள் இருபது வருடங்கள் தங்கள் தகுதிக்கான வேலை கிடைக்காமல், எந்தவொரு வேலையையும் செய்தவாறு கல்யாணித்து குழந்தைகள் பெற்று வளர்த்திருக்கிறார்கள்.  ஐம்பது வயதில் அரசு வாத்தியார் ஆகி அடுத்த எட்டு வருடங்களில் பனி ஓய்வு பெற்று வீணாகிப் போனவர்கள் நூற்றுக்கணக்கில்.  உலகமயமாக்கலின் பெருங்கொடையாக,  இந்திய இளைஞர்களைப் பொறுத்தவரையேனும், நான் கருதுவது புதிதாக நுழைந்த ஆயிரமாயிரம் பணி வாய்ப்புக்களையே.  தகவல் தொழில் நுட்பம் மட்டுமன்றி, புதிது புதிதான பல்வேறு தொழில்துறைகள் முதன்முதலாக உருவாக்கப்பட்டு, படித்து முடித்தவுடன் - பல தருணங்களில் படித்து முடிக்கும் முன்னரேயே - வேலைவாய்ப்புக்களைப் பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் 1991ம் ஆண்டிற்குப் பிறகு சாதாரணமாக ஒருவர் பார்த்திருக்கக் கூடியது. "கால் காசானாலும் கவர்ன்மெண்டு காசு" என்ற பெருமிதமெல்லாம் காற்றிலே கரைந்து, அரசு வேலையே வேண்டாம், கார்ப்பரேட் வேலையே சாஸ்வதம் என்று பெங்களூரு, புனே, சென்னை, ஹைதராபாத் வழியாக அமெரிக்கா போய்ச் சேர்ந்து திரும்பி வர முடியாத தொலைவில் மறைந்து போன இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அரசு வேலையில் இருந்தவன் பணித்துறப்பு செய்துவிட்டு, பெங்களூரு வழியாக அமெரிக்கா போன நண்பர்கள் எனக்கே உண்டு.  "என் மகன் இன்போசிஸ், உங்களது மகள்?" என்ற கேள்விக்கு "சின்னவள் டிசிஎஸ், பெரியவள் கனடாவில் செட்டிலாகி விட்டாள்" எனும்படியான பதில் எங்கும் கேட்கக் கிடைத்தது.

இந்த இளைஞர்களின் ஊதியம் அரசு ஊழியர்களின் ஊதியத்தோடு ஒப்பீட்டளவில் மிக அதிகம்.  முதல் மூன்று வருடங்களுக்குள்ளாக பெருநகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வங்கிக் கடனில் வாங்கிவிட முடிந்தது. சென்னையில் சொந்தவீடு என்பது சேலத்துக் காரர்களுக்கு பரம்பரையின் ஊடே ஒளிர்ந்து கொண்டிருக்கும் கனவு. இவர்களைக் காட்டாகக் கொண்டுதான், கடந்த இரண்டு நடுவண் அரசு சம்பளக் குழுக்கள் அரசு ஊழியர்களுக்கான தங்களது ஊதியப் பரிந்துரைகளை செய்தன.  மாத ஊதியம் கணிசமாக உயர்ந்தாலும் கூட வேறு புதிய பிரச்சினைகள் எழும்பின.  1-4-2003 முதல் மத்திய மாநில அரசுப் பணிகளில் சேர்ந்தோருக்கு ஓய்வூதியம் இல்லை என்ற அறிவிப்பின் தத்துவம் என்னவென்றால், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் அரசு பொறுப்பேற்க முடியாது என்பதே.  சமத்துவ சமூகம் என்ற போர்வையிலிருந்து தைரியமாக வெளியேறி முதலாளித்துவ சமூகம் என்ற அரிதாரமில்லாத தனது இயல்பான முகத்தோடு இந்திய அரசும் சமூகமும் உலா வரத் துவங்கியது தொண்ணூறுகளின் இறுதி ஆண்டுகளிலேயே பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

தொடர்ந்த வருடங்களில், அரசுப் பணிகள் தங்களது இயல்பான பணிப் பாதுகாப்பை பல விதங்களில் இழக்கத் துவங்கின.  நவீன தொழிற்புரட்சியின் விளைவாக பணியாளர்களின் தன்மையிலும் அவர்களது பணி நிலையிலும் நம்பமுடியாத மாற்றங்கள் துவங்கின.  நிரந்தரப் பணியாளர்களை முதலாளிகள் தவிர்க்கத் தொடங்கினர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை தமிழக அரசு 2004-லிருந்து 2006-வரை நியமித்ததும், அவர்களுக்கு அந்தப் பணி நிலைகளில் உண்டான ஊதியத்தில் நான்கில் ஒரு பங்கை மட்டுமே வழங்கி எந்தவித பணி உத்திரவாதமும் இல்லாமல் வருடக்கணக்கில் அவர்களை அவதிக்குள்ளாக்கியதும் முன்னுவமை இல்லாத நிகழ்வு. இப்பொழுதும் கூட, ஒவ்வொரு மாநில அரசும், நடுவண் அரசும் லட்சக்கணக்கில் ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்து மிக மோசமான ஊதியம் வழங்கி வருகின்றன.  இந்நிலைக்கு எதிரான போராட்டங்கள் எந்தவிதப் பலனையும் தருவதில்லை என்பது கசப்பான உண்மை. உன்னிப்பாக கவனித்தோமானால், அரசுப் பணிகள் உட்பட எங்கும் முதலாளித்துவம் நுழைந்து விட்டது.  சோஷலிஸ்ட் அரசாக திரும்பவும் மாறப்போவது அண்மைக் காலத்தில் நிச்சயமாக இல்லை.  நிலைமை இன்னும் தீவிரமாகலாம். அப்படியான நிலை வந்து கொண்டிருக்கிறது என்பதை சத்துருன்ஜய் கிருஷ்ணா அவர்கள் தி ஹிந்துவில் 18-1-2017 அன்று Are the days of the permanent employee numbered? என்ற கட்டுரையில் விலாவாரியாக விளக்கி நம்மைப் பயமுறுத்துகிறார்.  இந்தியாவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் மூன்றில் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறார் என்பதை கிருஷ்ணா தரவுகளோடு முன் வைக்கிறார்.

நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு பல சட்டரீதியான அனுகூலங்கள் இருப்பதால், நிறுவனங்கள் அப்படியான ஊழியர்களை விரும்புவதில்லை.  ஊதியம் தொடர்பான செலவினங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதின் மூலம் வெகுவாகக் குறைகின்றன.  மீதமாகும் தொகையை தொழில்நுட்ப மேம்பாட்டுக்காகவும் மற்றவற்றுக்காகவும் பயன்படுத்தப் பட முடியும்.  பல தொழில்களைப் பொறுத்தவரை நிரந்தர - ஒப்பந்த ஊழியர்களுக்கிடையேயான ஊதிய வேறுபாடு மிகவும் கணிசமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  மேலும், வேறு சில தொழிற்துறைகள், பழங்கள் பதனிடுதல் போன்றவை, நிரந்தரப் பணியாளர்களை வேண்டுவதேயில்லை.  அடுத்ததாக, மிக வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற நிலையில் நிரந்தரப் பணியாளர்கள் ஒரு சுமையே.  ஒரு குறிப்பான தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட காலம் பணியமர்த்தினால் நிறுவனங்களுக்குப் போதுமானது.  நிரந்தரப் பணியாளர்களை இடைவிடாமல் பணியிடைப் பயிற்சியில் ஈடுபடுத்த முடியாது.  அப்படியான ஒரு நேர்விலும், அதற்கான செலவினம் மிகவும் அதிகம்.  நிறுவனத்தின் செலவில் பணி மேம்பாட்டு பயிற்சி பெறும் ஊழியர் ஒருவர் சிறிது காலத்திற்குள் நிறுவனத்தை விட்டு விலக மாட்டார் என்பதற்கான எந்தவித உத்திரவாதமும் இல்லை.  மேலும், ஒப்பந்த ஊழியர்களை, அதாவது உயர் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற ஒப்பந்த ஊழியர்களை, உலகின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் கால விரயமின்றி அழைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை, நிரந்தர ஊழியர்கள் எனும் பணியாளர் பிரிவே எதிர்வரும் காலத்தில் இருக்காது என்ற நிலையை உறுதிபடுத்தியிருக்கிறது. தவிர, அரசு அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தமது பணித்தன்மைகளையும், வேண்டிய தொழில்நுட்பங்களையும் அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருப்பதால், நிரந்தர ஊழியர்கள் பெரும் சுமையாக மாறிவிடக் கூடும்.  உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) தன்னுடைய சமீபத்திய குறிப்பு ஒன்றில், இன்றைய நாட்களில் பள்ளிக்கு செல்லத் துவங்கும் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறும்பொழுது, இதுவரை இல்லாத - இனிமேல்தான் உருவாகப் போகிற - புதிய பணிகளில்தான் அமர்த்தப்படப் போகிறார்கள் என்று சொல்வது அனைவரும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இவை தவிர, நிறுவனங்கள் தமக்கிடையே பணியாளர்களை குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றிக் கொள்வதும் நடக்கிறது.  புதிய சிந்தனைகள் கட்டுப்பாடின்றி வெளிவருவதற்கான சாத்தியங்களும் இப்படியான ஒரு ஏற்பாட்டில் அதிகம்.  பணியிடைப் பயிற்சிகளும் நடத்தத் தேவையில்லை. 
    

இத்தகைய பணிப்பாதுகாப்பு அற்ற நிலையில் அரசுகள் எவ்வித நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? அரசு தன்னுடைய ஊழியர்களை எவ்விதம் நடத்த வேண்டும்? சோஷலிஸ்ட் அரசு ஒன்றின் நிலைப்பாடுகளில் எவையெல்லாம் திரும்ப நடைமுறைப் படுத்தத் தகுந்தவை? மாறிவிட்ட சூழலில் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த ஏதேனும் வழிவகைகள் மீதமிருக்கின்றனவா? என்பவையெல்லாம் வருகின்ற நாட்களில் நம் அனைவரையும் எதோ ஒரு வகையில் எதிர்நோக்கும் கேள்விகள். 

மருந்துச்சீட்டு

| Monday, January 16, 2017
சென்னை புத்தகக் காட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல சஞ்சிகைகளில் எழுத்தாளர்கள் தங்களை செதுக்கிய புத்தகங்களைப் பட்டியலிட்டு வருகிறார்கள்.  தமிழ் தி ஹிந்து தினமும் ஒரு எழுத்தாளரிடம் இப்படியான ஒரு பட்டியலைப் பெற்று பிரசுரிக்கிறது.  ரொம்பவுமே கைங்கர்யமானது இது.  படிக்க விரும்பும் ஒருவர் எதைப் படித்தால் நல்லது என்பதை அவைகளைப் படித்து அனுபவித்த ஒருவர் பரிந்துரைப்பது என்பது கால விரயத்தைத் தவிர்க்கும்.  என்னுடைய அனுபவத்தில் இப்படியான பரிந்துரைகள் மூலமே புத்தகங்களைப் தேடித் பிடித்திருக்கிறேன்.  பள்ளிப் பருவத்தில் ஆங்கில உபாத்தியாயர் சௌந்திரராஜன் அவர்களுக்கு பணிவிடைகள் செய்யும் பொருட்டு அன்னாரது வீட்டிலேயே மாலை நேரங்களை கழிப்பது வழக்கம்.  அவரது புத்தக அலமாரியை அவரும் நானும் மட்டுமே தொட முடியும்.  அவரது மகன் மற்றும் மகள்கள் அலமாரியை நெருங்க முடியாது. தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து ஒரு வித வன்மத்துடன் படித்துக் கொண்டிருப்பார்.  புதிது புதிதாக புத்தகங்கள் வாங்கிக் கொண்டேயிருப்பார்.  அந்த அலமாரியிலிருந்து என்ன மாதிரியான புத்தகங்களை எடுத்துப் படிக்கிறேன் என்பதையும் கவனித்தபடிக்கு இருப்பார்.  "இதைப் படிக்காதே! முதலில் இதை எடுத்துப் படி!" என்றபடி வேறு ஒரு புத்தகத்தை என்மீது சிரித்தபடியே வீசுவார்.  இரண்டு புத்தகங்களுக்குமான கருத்தியல் தொடர்ச்சி இரண்டையும் படித்த முடித்த பிறகு விளங்கும். 

ஒரு புத்தகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு அவரிடம் அதைப் பற்றி கேட்டுவிட முடியாது.  பரிந்துரைத்தவுடன் அதைப் பற்றி பேச மாட்டார்.  நான் முடித்து விட்டேன் என்று தெரிந்து கொண்ட பிறகு, தன்னுடைய அபிப்பிராயத்தை சொல்லுவார்.  என்னுடைய கருத்தையும் தெரிந்த நிலையில், விவாதம் ஒன்றைத் துவக்கி அந்தப் புத்தகத்தின் ரகசியங்களுக்குள் என்னை அழைத்துச் செல்வார்.  வைரமுத்துவின் "இதுவரை நான்" புத்தகத்தை படித்து முடித்த நிலையில், முதன்முறையாக நான் அவரிடம் கொடுத்து "படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்" என்ற போது, ஒரே இரவுக்குள் படித்து முடித்து விட்டு, அடுத்த நாள் மாலையில் அவரது கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தபொழுது, "டேய், நீ கொடுத்ததை படித்து விட்டேனப்பா! நீ என்ன நினைக்கிறாய்?" என்றார். "சார்! நான் படித்த சுயசரிதைகளிலேயே இது என்னை மிகவும் கவருகிறது" என்று சொல்ல, என்னை மெதுவாகத் தள்ளிவிட்டு சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து அலமாரிக்கு சென்று எனக்குத் தருவதற்காக ஆயத்தமாக வைத்திருந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையவர்களின் சுயசரிதமான "என் கதை" என்ற நூலைக் கொடுத்து, "இதைப் படித்துவிட்டு நாளைக்கு வா!" என்றார். 

அந்த இரவுக்குள் அதைப் படித்து முடித்த பிறகு, சுயசரிதம் என்றால் என்ன, அதை யார் எழுத முடியும், சுய சரிதத்தின் நோக்கம் என்னவாக இருக்க முடியும், சுய சரிதம் எழுதும் போழ்து தீர்மானித்துக் கொள்ள வேண்டிய மொழிநடை என்ன என்பது பற்றியெல்லாம் விளங்கியது. அடுத்த நாள் அவரிடம் வைரமுத்துவின் புத்தகத்தை அவரிடம் கொடுத்ததற்காக மன்னிப்பும், பிள்ளையவர்களின் புத்தகத்தை எனக்கு வாசிக்கப் பரிந்துரைத்ததற்காக நன்றியும் சொன்ன பொழுது, சிரித்துக் கொண்டே சொன்னார், "ஒரு எழுத்தாளனின் இடம் அவன் அந்த மொழியின் இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியாக இருக்கத் தகுதி வாய்ந்தவனா என்பதைப் பொறுத்தே அமையும்.  வைரமுத்து இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டும்.  வாசிப்பதில் நீயும் கூட ரொம்ப நடக்க வேண்டும், புரியுதா?" என்றார்.  அந்தப் பெருந்தகையை இந்தக் கட்டுரையின் பொருட்டு நினைக்கும் பொழுது, தொண்டையில் பந்து அடைக்கிறது.  என்னுடைய வாசிப்பை நேர்படுத்தியதில் சௌந்திரராஜன் ஐயா அவர்களுக்குப் பாரியமான பங்களிப்பு உண்டு.  ஐயாவின் நிழலிலியே ஒரு பதினைந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன் என்பது கிடைத்தற்கரிய பேறு.

பின்னர் கல்லூரியில் - சர்வகலா சாலையில் படிக்கும் போது, நூலகங்களில் புத்தகங்கள் எடுத்து வாசிக்கும் தருணங்களில் அவைகளுக்குப் பின்னால் இருக்கும் நூற்பட்டியலில் காணக்கிடைக்கும் புத்தகங்களை ஒரு தாளில் எழுதி வைத்து அவைகளைத் தேடிப் பிடித்து படிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.  சர்வகலா சாலையில் நடக்கும் ஆய்வுக் கூட்டங்களில் அறிஞர்கள் தங்களது உரைகளினூடே குறிப்பிடும் புத்தகங்களைப் பற்றிய குறிப்புகளோடு அவைகளைத் தேடிப் படித்தது பல வருடங்கள் நடந்த வண்ணம் இருந்தது.  ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்திற்கு கூட்டிச் செல்கிறது என்பது எனது சொந்த வாசிப்பு அனுபவம்.  எப்படி புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்கும் நேரத்தில், சிரித்துக் கொண்டு கொஞ்சம் திமிராக சொல்வதுண்டு: "இப்போதெல்லாம் நான் அவைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை.  அவைகள்தான் என்னைத் தேர்ந்தெடுக்கின்றன."  ஒரு வகையில் இது சரியான பதில்தான்.

சரி, கட்டுரையின் மையத்திற்கு வருகிறேன்.  கடந்த மூன்று தசாப்தங்களாக வாசிப்பவன் என்ற தகுதியில் நானும் ஒரு சிறிய பட்டியலை முன் வைக்கிறேன். இந்த வரிசையே சரி என்பதும் இல்லை; வேறு புத்தகங்கள் இந்த வரிசைக்கு முன்னே இருக்க முடியாது என்பதும் இல்லை.  விரல்கள் விசைப் பலகையைத் தட்டும்பொழுது மனக்கண்ணில் தோன்றும் புத்தகங்களே இவை.  இன்னொரு நாள் பட்டியலிடும் போது வேறு புத்தகங்கள் வரக்கூடும்.  விரல்களும் நாக்கும் தன்னிச்சையாக செயல்படுபவை. 

[1] மோகமுள், தி.ஜானகிராமன் (நாவல்)

[2] ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜெயகாந்தன் (நாவல்)

[3] என் கதை, நாமக்கல் வே ராமலிங்கம் பிள்ளை (சுய சரிதம்)

[4] கடல்புரத்தில், வண்ணநிலவன் (நாவல்)

[5] ஒருநாள், க.நா.சுப்ரமண்யம் (நாவல்)

[6] ஜே.ஜே.சில குறிப்புகள், சுந்தர ராமசாமி (நாவல்)

[7] ஒரு புளியமரத்தின் கதை, சுந்தர ராமசாமி (நாவல்)

[8] சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ.அதியமான் (அபுதினம்)

[9] அந்தக் காலத்தில் காப்பி இல்லை, ஆ.இரா.வேங்கடாசலபதி (அபுதினம்)

[10] சிதம்பர நினைவுகள், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (தமிழில் கே.வி.சைலஜா), (நினைவுக் குறிப்புகள்)

இந்தப் பட்டியலோடு யாரும் முரண்படத் தேவையில்லை.  ஏனென்றால், இந்தப் பட்டியலின் உள்ளீடு வாசகரைப் பொறுத்து மாறக்கூடியது. வேறு ஒரு நாளில், நானே வேறு ஒரு பட்டியலோடு வரக்கூடும். இந்த நிமிடத்தில் என்னுடைய நினைவுத் திறன் நான் படித்ததிலிருந்து வெளியே தள்ளியவையை இங்கே கொடுத்திருக்கிறேன்.  மேலும், பத்துக்கு மேலே தரக்கூடாது என்பதாலும் தகுதியானவை பல உள்ளே வரவில்லை. 


ஆரம்பிக்காதவர்கள் துவக்கலாம்.  போய்க் கொண்டிருப்பவர்கள் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.  ரொம்ப முன்னாலிருப்பவர்கள் தங்களது பட்டியலை வழியில் நட்டு வைக்கலாம்.  பரஸ்பர ஒத்தாசை மிகவும் முக்கியம்தானே?       

ரேஷன் கார்டு பெறுவது சுலபம்

|
மணல் வீடு

சேலம் மாவட்டம், மேச்சேரி தாலுக்கா பொட்டநேரி கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பார் அங்கிருக்கும் இரும்பாலை ஒன்றில் பணிபுரிகிறார். அந்த நிலையிலேயே சந்தோஷமாக இருக்கலாம். ஆனால், ஆளை இலக்கியம் பிடித்து ஆட்டுகிறது.  இரும்பு பிடித்தவன் கதைதான்.  நிறைய உழைப்பிற்கிடையில் "மணல்வீடு" என்ற பதிப்பகத்தையும் சிற்றிதழையும் நடத்துகிறார்.  பெரிய தலைகள் எல்லாம் எழுதுகின்றன.  எனக்கு நண்பர் சண்முகம் மூலமாக அறிமுகமாகி முகவரி வாங்கி இதழைத் தவறாமல் அனுப்பி வைக்கிறார். ரொம்பவும் கண்ணியத்துடன் கட்டமைக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் corporate brochure போன்ற தோற்றத்துடன் அச்சு, சித்திரங்கள், பக்க வடிவமைப்பு, பைண்டிங் போன்றவையுடன் நம்ப முடியாத தரத்துடன் இருக்கிறது 'மணல்வீடு' இதழ். 

திசம்பர் மாத இதழ் வீட்டிற்கு வந்து இரு வாரங்கள் ஆகியிருக்கும்.  இதற்கென நேரம் ஒதுக்கித்தான் படிக்க முடியும் என்ற மாதிரியான serious reading தேவைப்படுகிற சமாச்சாரம் என்பதால் இன்று காலை முழுவதையும் ஒதுக்கியும் பாதிதான் படித்து கிரகிக்க முடிந்தது.  உயர் மதிப்பு கொண்ட கரன்சிகளை முன்னறிவிப்பின்றி செல்லாது என்ற அறிவித்த பிரதமர் மோடியின் நடவடிக்கையைப் பற்றி கடந்த இரண்டு மாதமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறையப் படித்தாகி விட்டது.  வாசித்ததிலேயே நன்கு புரிகிற மாதிரியும், பிரச்சினையை எல்லாக் கோணங்களிலிருந்தும் அணுகியும், இதன் தத்துவப் பின்னணி, திட்டத்தின் நோக்கங்கள், செயல்படுத்தப்பட்ட விதம், இந்தத் திட்டத்தின் மீது வைக்கப்படும் விமரிசனம், இதையே வேறு விதமாக எப்படி நடைமுறைப் படுத்தியிருக்க முடியும், இத்தகைய திட்டம் ஒன்றின் தேவை என்ன, திட்டத்தின் எந்தக் கூறு நம்மை சந்தேகப்பட வைக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாக ஒன்றன் பின் ஒன்றாக இலக்கமிட்டு பட்டியலிட்டு விவரிக்கிறது பாலசுப்ரமணியன் முத்துசாமி எழுதியுள்ள "அள்ளித் தெளித்தக் கோலம் அவசரக் கோலம்.. அறுதிப் பெரும்பான்மை அரசின் நிலைத் தடுமாற்றம்" என்ற கட்டுரை. 

மொத்தமாக 170 பக்கங்களை உடைய இந்த இதழின் ஆகச் சிறந்த பக்கம் என நான் கருதுவது 14ம் பக்கத்தைத்தான்.  பெருமாள் முருகன் இரண்டு கவிதைகளை எழுதியிருக்கிறார்.  தனக்கு திருச்செங்கோட்டில் நேர்ந்த அவலத்தை இந்தக் கவிதைகளின் மூலமாக அமிலமாகப் பொழிந்திருக்கிறார்.

வெட்டப்பட்ட
கட்டைவிரலை
ஒட்டிக்கொள்ளக்  
கடவுள் அனுமதித்து விட்டார்
கடவுளின் பேச்சுக்கு
மறுபேச்சேது
ஒட்டிக்கொள்கிறேன்
இனி
என் கட்டை விரல்
கட்டை விரல் அல்ல
ஒட்டு விரல்.

கவிஞனை - இலக்கியவாதியைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பது இதனால்தான்.  பெருமாள் முருகனிடம் இவர்கள் சாகும்வரைக்கும் செருப்படி வாங்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.  நினைத்தபோதெல்லாம் கவிதை - கதைகள் மூலமாக அடித்துக் கொண்டேயிருப்பார்.  முரசு கட்டிலில் புலவன் படுத்திருந்ததைப் பார்த்துவிட்டு அவன் தலையை வெட்டி எறியாமல் சாமரம் வீசிய வேந்தன், என்னைப் பொறுத்தவரை, தமிழ்க் காதலனோ இல்லையோ தெரியாது, பெரிய புத்திசாலி.  எழுதி எழுதியே வெறுப்பேற்றுவான் கவிஞன். பெருமாள் முருகனை ஊரை விட்டு துரத்தியவர்கள் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு நாட்களை நகர்த்துவதை விட வேறு வழியில்லை.  

இந்த இதழின் இன்னுமொரு சிறப்பாக நான் கருதுவது பைரு ரகுராம் அவர்களின் ஓவியங்களை.  இதழின் 88ம் பக்கத்தில் சேவலை தூக்கிக்கொண்டு நிற்கும் கருப்பியின் ஓவியம் பிரமிக்க வைக்கிறது.  நம்ம ஊர் கறுப்பழகிகள் கண் முன்னே வருகிறார்கள்.  கூத்துக் கலைஞர் அம்மாபேட்டை கணேசன் அவர்களின் நேர்காணல் அற்புதம். "கூத்த அத்துபடியா கத்துக் கர கண்டவன் எவனுமில்ல, எல்லாமே கண்டு பாவனதான், அரகரா சிவ சிவான்னாப் பத்தாது, அமுது படைக்கனும். உங்கள மாதிரி படிச்ச டிக்கட்டுங்க உள்ற குதிக்கணும். அலங்காரத்த பூர்த்தியா படிச்சி தேறனும், அப்படி ஓராளு இருக்கிரான்னா அவனாலக் கூட சட்டுன்னு கூத்த புதுமையா ஆட முடியாது, கருத்தா கவனிச்சி, உகத்தமா தொழில் செஞ்சிக்கிட்டே வந்தா எந்த பொருள கழிக்கிறது எந்த பொருள சேக்கிரதுன்னு நெட்டு சிக்கும்." 

இதைப் படிக்கும் யாராவது இந்த இதழை வாங்கிப் படிக்க பிரியப் படலாம்.  அவர்களுக்காக முகவரி கொடுக்கிறேன். மு.ஹரிகிருஷ்ணன், களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம், ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் 636 453. அலைபேசி: 98 9460 5371.

விகடனின் தடம் இதழை விட தீவிரமான தொனியில் இருக்கிறது 'மணல் வீடு'. இது போன்ற முயற்சிகள் தோற்காமல் பார்த்துக் கொள்வது, ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர்களால் செய்யப்படும் பிரயத்தனங்களை விட முக்கியமானது.  திரிஷாவிற்கும் விஷாலுக்கும் இது புரியாமல் போகலாம்.  ஆனால், கடந்த ஒரு வாரமாக வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் இரவு பகல் பார்க்காமல் பதிவுகளாக இட்டுத்தள்ளும் தமிழ் இளைஞர் - இளைஞிகளுக்கு கண்டிப்பாக புரியும் என்று எதிர்பார்க்கலாம்.

------
அம்மா தொழிற்சாலை

அண்மையில் தி ஹிந்து தமிழ் நாளிதழில் "காயமே இது பொய்யடா" என்ற தலைப்பில் வாஸந்தி எழுதியிருக்கிற கட்டுரை சில சுவாராஸ்யமான சங்கதிகளை முன்வைக்கிறது. அதிமுக கட்சிக்காரார்களுக்கு 'அம்மா' இல்லாத நிலையில் இன்னொரு 'அம்மா' தேவை.  சின்னம்மாவிற்கு இவர்கள் தேவையோ இல்லையோ இவர்களுக்கு சின்னம்மா தேவை.  சொல்லப்போனால், சின்னம்மாவே இவர்களின் உருவாக்கம்தான்.  சின்னம்மாவை அவர்கள் கடவுளாக்கி காலில் விழுவதற்கான பிம்பமாக்கி விடுவார்கள்.  தாங்கள் அதிகாரத்தில் நின்று நிலைப்பதற்கு அவர்களுக்கு ஒரு தலைமை - பிரநிதித்துவப் பிம்பம் தேவை.  இங்கே, தலைவர் தொண்டர்களைத் தீர்மானிப்பதில்லை.  தொண்டர்களே தலைவர்களைத் தீர்மானிக்கிறார்கள்.  விழுவதற்கான கால்கள் இல்லாவிட்டால் தங்களுடைய பணிவை அவர்களால் வெளிக்காட்ட முடியாது.  காலில் விழுவது வெறும் மானங்கெட்ட அரசியல் அல்ல.  பிழைப்பின் அடிப்படை சூத்திரம்.  'எல்லாம் வல்ல தலைவர்' என்ற பிம்பம் இன்றியமையாதது.  இல்லாவிட்டால் ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும். எல்லா அட்டூழியங்களும் எல்லாம் வல்ல தலைவரின் பெயராலேயே நடத்தப்படுகின்றன.  "எல்லாப் புகழும் தலைவருக்கே; எல்லாப் பழியும் தலைவருக்கே."  பணமும் அதிகாரமுமே அவர்களைப் போலிப் பணிவு காட்ட வைக்கிறது. அம்மா பிம்பம் புனிதமாக்கப்படுவதும் அதனால்தான்.  உண்மையில் 'அம்மாக்கள்' பாவம்:  'ஐயாக்களும்" கூடத்தான்.  புகழப்படுபவனை விட புகழுபவனே புத்திசாலி என்ற பால பாடம் தெரியாமல் அம்மாக்களும் ஐயாக்களும் தாங்கள் செய்யாதவற்றுக்குமான பழியையும் தூக்கிக்கொண்டு தவிக்கும் பொழுது, "கால் விழு" மன்னர்கள் தங்கள் ராஜ்ஜியத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு போகிறார்கள்.  "அம்மாக்கள்" உதிர்கிற பொழுது, இவர்களால் அரங்கேற்றப்படும் புதிய சின்னம்மாக்கள் பிம்பம் கவனமாக அம்மாக்களைப் போலவே கட்டமைக்கப் படுகிறது. நிதானமான நடை, பயிற்சி பெற்ற மேடைப் பேச்சு, மறைந்த தலைவரை நினைவுப் படுத்தும் உடை என சின்னம்மாக்கள் முழுக் கவனத்துடன் தயாரிக்கப்படுகிறார்கள்.

"கால் விழு" மன்னர்களின் ராஜ்ஜியத்தில் ஒருவன் கம்பீரமாக இருக்க முயல்வது என்பது, அம்மண ஊரில் கோவணத்தாண்டியின் கதியைப் போலத்தான்.
-----

ரேஷன் கார்டு பெறுவது சுலபம்

மதுபானப் பிரியர்களுக்கான நல்ல செய்தி ஒன்று ஒக்ஸ்போர்ட் சர்வகலாசாலையிலிருந்து வந்திருக்கிறது.  மனித சமுதாயத்தோடு மிக நீண்ட காலம் தன்னுடைய சகவாசத்தைப் பேணிக்காத்து வரும் மது, சமூக இணக்கத்தைப் பேண தனியார்களுக்கு உதவுகிறது என்கிறது இந்த ஆய்வு.  அதிகமாகவும், தொடர்ந்தும் குடிப்பது ஆரோக்கியத்திற்கும் சமூக உறவுகளுக்கும் குந்தகமானது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அவ்வளவு உண்மை மிதமான மற்றும் சரியான இடைவெளியில் நண்பர்களுடன் குடிப்பது சமூக உறவைப் பேணுவதற்கு அனுகூலமானது என்பதும் ஆகும்.  கிளப்பிற்கு வந்து குடிப்பது, அந்த ஊரில் தன்னுடைய செல்வாக்கை ஜபர்தஸ்தாக வைத்திருக்க உதவுகிறது என்பதாக ஒக்ஸ்போர்ட் ஆய்வு சொல்கிறது. ஆனால் வெளியூரில் இருக்கும் கிளப்புகளில் குடிப்பது என்பது சமூக செல்வாக்கைப் பேண உதவுதில்லை என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தமக்கென சமூகத்தில் ஒரு வட்டம் இருக்கிறது என்று மனிதன் நினைத்து பெருமைப்படுவதற்கு இந்த கிளப்புகளில் சென்று குடிப்பது முக்கியம் என்று இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

என்னுடைய அனுபவமும் கூட அப்படித்தான். ரெகுலராக குடித்துக் கொண்டிருந்த சமயத்தில் உள்ளூரில் எனக்குத் தெரிந்த பிரமுகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.  எந்த வேலையும் உடனே முடிந்து விடும். ரேஷன் கார்டில் விடுபட்ட பெயரை சேர்க்க எவ்வளவோ முயன்றும் முடியாதிருந்த பொழுது, ஒரு இரவு ஒன்றில் நண்பர்களுடன் குடிக்க கூடிய சமயத்தில் இது பற்றி பிதற்றிக் கொண்டிருக்க, நண்பரோடு எங்களுடன் குடிப்பதற்கு வந்திருந்த ஒருவர் அறச்சீற்றத்தோடு ஒரு போனை போட்டு யாரோ ஒருவருடன் பேசிவிட்டு, அடித்த நாள் காலையில் ஆட்சியர் வளாகத்தில் ஒருவரை பார்க்கச் சொன்னார்.  அடுத்த நாள், ஒரு மணி நேரத்திற்குள் பெயர் சேர்க்கப் பட்டது.  இப்படிப்பட்ட கிடைத்தற்கரிய நண்பர்களை எனக்கு பெற்றுத் தந்திருப்பது மதுதான். இன்னொரு பக்கமும் இருக்கிறது. எனக்காக உயிரையே விடத் தயாராக இருப்பதாக முதல் நாள் இரவு கிளப்பில் சொன்னவர்கள் அடுத்த நாள் காலையில் போனை எடுக்க மாட்டார்கள். என்றாலும், இன்னொரு மாலையில் குடிக்கக் கூடும்போது தவறாமல் மன்னிப்பு கேட்கும் நற்குணம் அவர்களிடம் வழிந்தோடியவாறே இருந்தது.

குடிக்காத இற்றை நாட்களில் அந்தக் குடிகார நண்பர்களை கண்களில் வழிந்தோடும் கண்ணீரின் ஊடே நினைத்துப் பார்க்கிறேன்.  என்ன அருமையான மனிதர்கள்! அவர்களோடு குடித்து மகிழ்ந்த பொழுதுகள் என் வாழ்விலே கிடைத்திட எந்த பிறவியில் என்ன தவம் செய்தேனோ!