சர்தார் குஷ்வந்த் சிங்

| Monday, November 7, 2016


சர்தார் குஷ்வந்த் சிங்.  2-2-1915 - 20-3-2014 இடையில் 99 ஆண்டுகள்.  பத்திரிகையாளர். எழுத்தாளர்.  வரலாற்றாசிரியர். எமர்ஜென்சி ஆதரவாளர். பத்ம பூஷன் - பத்ம விபூஷன் விருதுகளை அலங்கரித்தவர். ராஜ்ய சபா உறுப்பினர்.  ஆங்கிலத்தில் எழுதி வந்திருக்கும் இந்தியர்களிலேயே மிகவும் பிரபலமானவர். 

"நீங்கள் வருவதாக முன்கூட்டியே தெரிவித்திருந்தால் மட்டுமே அழைப்பு மணியை அழுத்தவும்" என்ற பலகை நம்மை உற்றுப் பார்க்கிறது.  தயங்கிக் கொண்டே அழுத்தினோம்.  சில நிமிடங்கள் கழித்து பணியாளர் ஒருவர் கதவு திறக்கிறார்.  அனுமதி பெற்றுத்தான் வந்திருக்கிறோம் என்று உறுதி செய்த பிறகு, சர்தார் குஷ்வந்த் சிங் அமர்ந்திருக்கும் நடுநாயகமான ஹாலுக்குக் கூட்டிச் செல்கிறார். 

இந்தியாவின் மிகப் பிரபலமான எழுத்தாளர் எந்த வித பாசாங்குகளுமன்றி இயல்பாக இருக்கிறார்.  டீயும் பிஸ்கத்துகளும் மேஜை மேல் பரிமாறப் படுகின்றன.

(2014-ம் ஆண்டு ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழுக்கு சிங் அவர்கள் கொடுக்க இசைந்த செவ்வியின் தமிழாக்கம்.  தமிழில்: முனைவர் மு. பிரபு) 

ரீடர்ஸ் டைஜஸ்ட்: தொண்ணூறு வயதுக்கு மிகவும் இளமையாகத் தோற்றமளிக்கிறீர்கள்.

சிங்: தொண்ணூறுக்கு மேல் ஆகி விட்டது.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: எப்படி இது சாத்தியம்?

சிங்: தெரியவில்லை. அப்பா அம்மாவின் மரபணுக்களில் இரகசியம் இருக்கலாம்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: உங்கள் பெற்றோர்கள் ...

சிங்: அப்பா மறைந்த பொழுது அவருக்கு வயது தொண்ணூறு. தொண்ணூறு வயதில் விஸ்கியைப் பிடித்தபடியேதான் கடைசி மூச்சு பிரிந்தது.  அம்மா 94 வயது வரை இருந்தார்.  அவர்களின் மரபணுக்கள்தான் காரணமாக இருக்க முடியும்.  பிற்பாடு கொஞ்சம் ஒழுங்கான வாழ்க்கையும் என்று சொல்லலாம்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: உங்களது பழக்க வழக்கம் பற்றிச் சொல்லுங்கள்.

சிங்: அதிகாலை 4.30லிருந்து 5-க்குள் எழுந்து விடுகிறேன்.  பிரார்த்தனை செய்தெல்லாம் நேரத்தை வீணடிப்பதில்லை.  செய்தித்தாள்கள் படிக்கிறேன்.  ஏதாவது எழுதுகிறேன். எனது மதிய உணவு ரொம்பவும் எளிமையானது.  கஞ்சிதான். கொஞ்ச நேர ஓய்வுக்குப் பிறகு மாலையில் மீண்டும் ஏதாவது எழுதுகிறேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: எந்த நேரத்திற்குப் படுக்கைக்குப் போகிறீர்கள்?
சிங்: ஒன்பது மணி அளவில்.  இருந்தாலுமே, பத்து மணி வரை படுக்கையிலிருந்தபடியே ஏதாவது படித்துக் கொண்டிருப்பேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: பிரார்த்தனை செய்து நேரத்தை வீணடிப்பதில்லை என்று சொன்னீர்கள்.  சடங்குகளைப் பின்பற்றும் சீக்கியரல்லவா நீங்கள்?

சிங்: சீக்கிய மதத்தில் பற்றுள்ளவன் நான்.  காலையிலும் மாலையிலும் பொற்கோவிலிலிருந்து ஒளிபரப்பாகும் நற்செய்திகளைக் கேட்கிறவன்தான். ஆனால், சொன்னதே திரும்பச் சொல்லப்பட்டால் டிவியை அணைத்துவிடுவேன்.  

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  ஆனால், நீங்கள் சீக்கிய மதத்தின் தீவிரமான பக்தன் இல்லையா?

சிங்: அப்படியெல்லாம் இல்லை.  கங்கை நதி என்னை எப்போதும் கவர்கிறது.  ஹரித்துவாரில் ஆரத்தியைப் பார்க்க வருடத்திற்கு ஓரிரு முறை கண்டிப்பாக போய்வருவேன்.  அது எனக்கு ரொம்பவும் முக்கியம்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  மனரீதியாக உங்களை ஒரு சீக்கியர் என்றுதானே உணர்கிறீர்கள்?

சிங்: சரிதான்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: இந்தியாவைப் போன்றதொரு பரந்த நாட்டில் மக்கள் மத, சாதியப் பின்புலத்தோடுதான் இருக்க வேண்டுமா?

சிங்: நான் இந்த மதத்தைச் சேர்ந்தவன், இன்ன சாதியைச் சேர்ந்தவன் என்று உணர்வது என்னுடைய அடையாளத்திற்கு மிகவும் தேவையானது.  என்னுடைய மதத்தைப் பின்பற்றினாலுமே கூட, பிந்தரன்வாலேயை நான் ஆதரித்தவனல்ல.  இந்த விஷயத்தை யாரும் இந்துவாகவோ சீக்கியராகவோ பார்க்கத் தேவையில்லை.  ஒரு பத்திரிகைக்காரனாக என்னுடைய நிலை இதுதான். பிந்தரன்வாலேயை எதிர்த்ததற்காக பதினைந்து வருடங்கள் அரசுப் பாதுகாப்பில் இருக்க வேண்டி வந்தது.  சீக்கியர்களுக்கான தனி நாடு - காலிஸ்தான் - சாத்தியப்படாது என்று ஆரம்பம் முதலே சொல்லி வந்திருக்கிறேன்.  நான் சொல்வது சரியென்று பெருவாரியான மக்கள் நினைத்ததால்தான் என்னை ஆதரித்தார்கள்.  விளைவுகளைப் பற்றி தீவிரமாக ஆராயும் சீக்கியர் ஒருவர் இந்த முடிவுக்குத்தான் வருவார்.  அப்படிப்பட்டவர்களில் நான் ஒருவனாக இருந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சிதான்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  நீங்கள் சொல்வது படி, தாராளவாத ஊடகவியலாளர்கள் தங்கள் மத, சாதியப் பின்புலத்தோடு இயங்கலாம்.  சமூக சிக்கல்கள் தோன்றும்போது அவைகளைத் தீர்ப்பதற்கு இந்தப் பின்புலங்கள் உதவும்.

சிங்: சரிதான்.  ஆனால் ஒன்று நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.  இப்படிப்பட்ட பின்புலம் என்னை ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்து பிரித்துவிடாது.  Operation Blustar-க்குப் பிறகு, பத்ம பூஷன் விருதை திருப்பிக் கொடுத்த நேரத்தில், "இவன் சீக்கியனா இந்தியனா என்று வரும்பொழுது, சீக்கியன் என்ற அடையாளத்தைத்தான் தேர்ந்தெடுக்கிறான்" என்ற விமரிசனத்தை வைத்தார்கள்.  அவர்களுக்கு நான் சொன்னேன். "என்னுடைய தேசாபிமானத்தை நீங்கள் கேள்விக்குள்ளாக்க முடியாது.  ஒரு இந்துவிடம் 'நீ ஒரு இந்துவா இந்தியனா என்ற கேள்வியைக் கேட்பீர்களா?' ஆனால் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவனிடம் இந்தக் கேள்வியை சங்கோஜமில்லாமல் உங்களால் கேட்கமுடிகிறது.  சீக்கியனா இந்தியனா என்றால், நான் இரண்டுமே."

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  இளமைக் காலத்தில் கம்யூனிஸ்டுகளிடம் நெருக்கமாக இருந்ததாக உங்கள் சுயசரிதையில் குறிப்பிடுகிறீர்கள்.

சிங்: நான் அந்தக் கட்சியின் உறுப்பினர் அட்டையை வைத்திருக்கவில்லை என்றாலும், அவர்களுக்காக வாக்களித்திருக்கிறேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றதுண்டா?

சிங்: இல்லை. போராட்டத்தை ஆதரித்ததுண்டு.  அந்தக் காலத்திலேயே எனது ஆதரவு காங்கிரஸ் கட்சிக்குத்தான்.  அகாலிகளுக்கு அல்ல.  மத ரீதியான கட்சி என்பதாலேயே அகாலிகளை இன்றுவரை கண்டனம் செய்து வருகிறேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: உங்களுக்கு காந்தியைப் பிடிக்குமா?

சிங்: ரொம்பவும்.  சமுதாய விஷயமானாலும் சரி, அரசியல் பிரச்சினையானாலும் சரி, என்ன செய்வது என்பதான மனச்சிக்கால் ஒரு இந்தியனுக்கு வருகிற தருணத்தில் "என்னுடைய இடத்தில் காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?" என்று யோசித்தால் போதும்.  ஒத்துக் கொள்ள முடியாத சில விஷயங்கள் அவரிடம் இருக்கத்தான் செய்தன.  மதுவிலக்கு, பிரம்மச்சரியம், அலோபதி மீதான வெறுப்பு போன்றவை மாதிரி.  என்னைப் பொறுத்தவரை எந்த மதகுருவை விடவும் காந்தி முக்கியமானவர்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: சொந்த வாழ்க்கையில் காந்தியைப் பின்பற்றியதுண்டா?

சிங்: நிச்சயமாக.  என்னுடைய கோபம் எல்லை தாண்ட விட மாட்டேன். எனது எழுத்துக்களில் கோபாவேசத்தை நீங்கள் பார்க்க முடியும்.  ஆனால் நேரிடையாக மனிதர்களிடம் உறவாடும் பொழுது நான் கோபிப்பது இல்லை. ஆபாசமான மொழிப் பிரயோகம் செய்ததில்லை.  இது காந்தியின் பாதிப்பு என்று நான் உணர்கிறேன்.  நீங்கள் கோபப்படும் பொழுது, எதற்காக வாதிடுகிறீர்களோ அது வலு இழக்கிறது.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினீர்கள்.

சிங்:  ஆனால் தொடரவில்லை.  வழக்குகளும் நிறைய வரவில்லை.  படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது.  பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் படிக்கத் தவறியது எல்லாவற்றையும் வக்கீலான பின்புதான் படித்தேன்.  மாணவனாக இருந்தபோது பாஸ் செய்வதே அதிசயம்.  எந்தப் புத்தகத்தையும் படித்ததில்லை.  அப்போதெல்லாம் முழுநேரமும் விளையாட்டுதான். வக்கீலான பிறகு என்னிடம் அரிதாக ஒப்படைக்கப்பட்ட சில வழக்குகளின் கருக்களை வைத்துத்தான் ஆரம்பகால சிறுகதைகளை எழுதினேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: சிறுவயதில் ஒழுங்கற்றவனாக, மேம்போக்கான இளைஞனாக, மிகச் சுமாரான மாணவனாகத்தான் இருந்துள்ளீர்கள்.  ஆனால் பின்னாளில் ரொம்பவும் நெறிமுறைகளோடு வாழத் துவங்கினீர்கள்.

சிங்: எப்படி அது நடந்தது என்று சரியாகச் சொல்ல முடியவில்லை.  கிடைத்த வேலைகளால் திருப்தி அடையவில்லை.  தூதரக அலுவலராகப் போனேன். என்னைப் போன்றவர்களுக்கு அங்கே அதிக வேலை இல்லை.  மனிதர்களை சந்திப்பது, அவர்களை உபசரிப்பது என்பதாகத்தான் இருந்தது.  சலிப்புடன்தான் வெளியே வந்தேன்.  அதற்கு முன்னமேயே என்னுடைய சில கதைகள் பிரசுரிக்கப்பட்டிருந்ததால் கொஞ்சம் தைரியம் இருந்தது.  இந்தியப் பிரிவினையின் போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்துத்தான் A Train To Pakistan  எழுதினேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  ICS பணியை ரொம்பவும் கிட்ட வந்து தவற விட்டீர்கள்.

சிங்:  உண்மைதான்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  அதற்காக வருத்தம் இருக்கிறதா?

சிங்:  நிச்சயமாக இல்லை.  அவர்கள் என்னை தூக்கி எறிந்திருப்பார்கள்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  உங்களுடைய நெருக்கமான நண்பர்களைப் பற்றி பொதுவெளியில் கடும் விமரிசனம் செய்கிறீர்கள். இது நம்பிக்கைத் துஷ்பிரயோகம் இல்லையா?

சிங்:  எனக்கு அவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை.  அரட்டையடிக்க, வீண் அவதூறுகளைப் பகிர்ந்து கொள்ள நேரம் இல்லை.  உண்மையில் நண்பர்கள் நான் செய்கிற வேலைக்கு இடையூறுதான்.  அரட்டையடிக்க யாராவது வந்துவிடுவார்களோ என்ற பயம் எப்போதும் உண்டு. எனக்கு மன்னிக்கும் குணம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது உண்மைதான்.  என்னிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டவர்கள் மீண்டும் நெருங்கி வந்தால், நான் அதை வரவேற்பதில்லை.  உண்மையில், அவர்கள் என்னிடமிருந்து விலகும்போது, பெரிய சந்தோஷமாகவே உணர்கிறேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  நீங்கள் தனிமை விரும்பியா?

சிங்:  ஆமாம்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  எல்லா எழுத்தாளர்களுமே அப்படித்தானா?

சிங்:  அப்படித்தான் இருக்க வேண்டும்.  தனியாகவே அவர்கள் இருக்கிறார்கள்.  தனிமையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.  என்னைச் சுற்றி எப்போதும் புத்தகங்கள் இருக்கின்றன.  கடந்த சில வருடங்களாக என்னுடைய வீட்டிலேயே சன்யாசம் கடைபிடிக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.  எங்கேயும் வெளியே செல்வதில்லை, மிக அவசியமான தேவைகளைத் தவிர.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  சீக்கிய மதம், சீக்கியர் வரலாறு பற்றி எழுத நேர்ந்தது உங்களுடைய வாழ்க்கையின் மிக நிறைவான காரியங்கள் என்று சுயசரிதையில் சொல்கிறீர்கள்.  இருந்தாலுமே கூட, ஜனரஞ்சகமான பிரபல பத்திரிகைகளில் எழுதுவதை நிறுத்தவில்லை.  இதைப் பற்றி வருத்தப் பட்டதுண்டா?

சிங்: இரண்டுமே வேண்டியதுதான்.  என்னுடைய புத்தகங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப் படுகின்றன.  சீக்கியர் வரலாறு பற்றி இரண்டு தொகுதிகள் சமீபத்தில் வந்திருக்கின்றன.  இறப்பு, இறப்பை உணர்வது என்பது பற்றி நான் எழுதியிருக்கும் Death At My Doorstep இப்போது வெளிவருகிறது. இதற்காக தலாய் லாமா, ஓஷோ போன்றோரிடம் பேசித் தெரிந்து கொள்ள நிறைய இருந்தது.  என்னுடைய அனுபவங்களும் இருக்கின்றன.  இந்தப் புத்தகத்தில் நான் எழுதிய சில இரங்கல் கட்டுரைகளும் இருக்கின்றன.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  தீவிரமான எழுத்தை இன்னும் விட்டுவிடவில்லைதானே?

சிங்: இல்லை.  ஆனால் நான் ஒரு தீவிரமாக ஆராய்ச்சி செய்யும் நபர் இல்லை.  ஆழமாக எழுதியதில்லை. அதிகமாக எழுதியிருக்கிறேன். எந்த அசிங்கத்தை நான் எழுதினாலும் அதை பிரசுரிக்கத் தயாராக ஆட்கள் இருப்பதால் புத்தகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டேயிருக்கின்றன.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  உங்களுடையதிலேயே பிடித்தமானது?

சிங்:  சீக்கியர்களின் வரலாற்றை எழுதியதும், சீக்கிய புனித வசனங்களை மொழிபெயர்த்ததையும் சொல்லலாம். உருதுவிலிருந்தும் மொழியாக்கம் செய்துள்ளேன்.  எனக்குப் பிடித்த கவிஞரான இக்பாலின் இரண்டு நீண்ட கவிதைகளை மொழி பெயர்த்ததும் முக்கியமானது.  அது இப்போது பதினோறாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: ஊடகவியலாளராக நீங்கள் அடைந்த பெரிய வெற்றிக்கு காரணம் எது?

சிங்: கடின உழைப்புதான்.  பத்திரிகையாளனாக இருந்த ஐம்பது வருடங்களில் எந்த தருணத்திலும் விதிக்கப்பட்ட காலக்கெடுவை மீற நேர்ந்ததே கிடையாது.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  உங்களுடைய சுயசரிதையைப் படிக்கும் எவருக்கும் நீங்கள் பெண் பித்தரோ குடிகாரரோ இல்லை என்று தெரியும்.

சிங்: என்னுடைய செக்ஸ் வாழ்க்கை குறுகியதுதான்.  ஸ்காட்ச் பிடிக்கும் என்றாலும், அளவை மீறி குடித்ததே இல்லை.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: இன்னும் மூன்று பெக் குடிக்கிறீர்களா?

சிங்:  இல்லை, இரண்டுதான்.  ஆனால், தம்ளர்கள் ரொம்ப பெரியவை. (சிரிக்கிறார்)

ரீடர்ஸ் டைஜஸ்ட்: உங்களது எல்லாப் புனைவுகளிலும் செக்ஸிற்கு பெரிய இடம் இருக்கிறது.

சிங்: ஒவ்வொருவனுடைய வாழ்க்கையிலும் அது முக்கியமானதுதானே.  ஏன் அதை விலக்க வேண்டும்? சுவராஸ்யமான, சந்தோசம் தரக்கூடிய, பல பரிமானங்களுடைய ஒன்று என்னுடைய எழுத்தில் ஏன் தவிர்க்கப்பட வேண்டும்?

ரீடர்ஸ் டைஜஸ்ட்: பகுத்தறிவுவாதி என்று உங்களை சொல்கிறீர்கள். The Illustrated Weekly of India-வில் ஏன் ஜோதிட பலன்களை வெளியிட்டு வந்தீர்கள்?

சிங்: அதை நிறுத்திய போது விற்பனை படுத்து விட்டது.  ஒருவர் இங்கிலாந்திலிருந்து இதை எழுதி வந்தார்.  இந்தக் குப்பையை யார் எழுதினால் என்ன என்று ஒரு இந்தியரை எழுதச் சொன்னேன்.  பூனாக்காரர்.  இங்கிலீஷ்காரருக்கு நாங்கள் கொடுத்து வந்த சம்பளத்தையே கேட்டார்.  இல்லையென்றதும் எழுத மறுத்து விட்டார். அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு நானே ஜோதிட பலன்களை எழுதினேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: இதை யாரும் கண்டிபிடிக்கவில்லையா?

சிங்: இல்லை.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: பஹாய் மதத்தின் இடுகாட்டில்தான் புதைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டோம்.  உண்மைதானா?

சிங்: எரிக்கப்பட விரும்பவில்லை.  புதைக்கப் பட வேண்டும். மரத்தை வீணடிக்கக் கூடாதல்லவா? தவிரவும், இந்தப் பூமிக்கு நாமும் எதையாவது கொடுத்தாக வேண்டும். இஸ்லாம், கிறித்துவ இடுகாடுகளில் நான் புதைக்கப் பட அனுமதி கிடைக்காது.  நாங்கள் ரெடி, ஆனால் எங்களுடைய சடங்குகளைத்தான் செய்வோம் என்று பஹாய் மதத்தினர் சொல்கிறார்கள்.  என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்:  சாவைப் பற்றி பயமிருக்கிறதா?

சிங்: அதற்கு முன்னால் நடக்கப் போவதைப் பற்றிய பயம் இருக்கிறது. வலி, நோய், ஆஸ்பத்திரி படுக்கை, இயற்கை உபாதைகளுக்குக்கூட இன்னொருவர் தயவு - இவைகளைப் பற்றிய பயம் உண்டு.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு, ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் தில்லியில் கொல்லப்பட்டார்கள். ஆனால் இன்று பிரதமர் ஒரு சீக்கியர்.  நாட்டின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர் ஒரு சீக்கியர்.  ராணுவத்தின் தலைமை தளபதி ஒரு சீக்கியர்.

சிங்: மிகப்பெரிய மாற்றம்தான் இது.

ரீடர்ஸ் டைஜஸ்ட்: உண்மையில் இவ்வாறான மாற்றம் நமது நாட்டின் குணாதியசத்தை எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு அற்புதமான தேசம்.

சிங்: உண்மைதான். மிகச் சரியாக சொன்னீர்கள்.

0 comments:

Post a Comment