நாவினால் சுட்ட வடு

| Monday, November 7, 2016
எனது நண்பரின் இளைய சகோதரர் ஒருவர் வணிக மேலாண்மைத் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் கோவையில் இருந்து வந்திருந்த அவர் பதிப்பிக்கப் படவிருக்கும் தனது ஆய்வுக் கட்டுரைகளில் சிலவற்றைக் கொடுத்து அவைகளின் மொழியமைப்பை மேம்படுத்திக் கொடுக்க முடியுமா எனக் கேட்டார்.  இரண்டு மூன்று ஆய்வுத் தாள்கள் "பணியிடங்களில் புறங்கூறுதல்", "பொல்லாங்கு சொல்பவர்களின் மனநிலை" என்பதாக இருக்கவே சுவராஸ்யப்பட்டு அவரிடம் அதைப்பற்றி நிறைய பேசினேன்.  மிகவும் பயனுள்ளதாக இருந்தது மட்டுமன்றி, என்னைச் சுற்றியுள்ள பலரும் ஏன் குறிப்பிட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெளிவு கிடைத்தது.  அதைப் பற்றிய பதிவுதான் இது. உங்களுக்கும் இப்படியான சிந்தனைகளும் அனுபவங்களும் இருக்குமென்பது நிச்சயம். 
 
புறங்கூறித் திரிபவர்களை இஸ்லாம் "மனிதக் கறி உண்பவர்கள்" (cannibals) என்றே அழைக்கிறது.  இறைவன் நம்மை எச்சரிக்கிறார்: "மனிதர்களே! புறங்கூறித் திரியாதீர்கள்.  அப்படியானது பாவம்.  உமது சகோதரனின் சதையை தின்ன விரும்புவீரோ? பொல்லாங்கு சொல்வது இறைவனுக்கு எதிரானது என்பதை அறிவீராக!" (49: 12)

புறந்கூறுவது (backbiting) என்றால் என்ன என்று இறைத்தூதர் விளக்கும் பொழுது "உனது சகோதரன் என்ன விரும்பமாட்டானோ அதை அவனுக்கு செய்வது" என்கிறார். "நீ புறந்கூறுவது உண்மையாக இருந்தால் அவனைக் காயப்படுத்துகிறாய்.  பொய்யாக இருந்தாலோ அவதூறு செய்யும் பாவத்திற்குள்ளாகிறாய்."

இறையும் தூதர்களும் சொல்வது இருக்கட்டும்.  மனிதர்கள் ஏன் புறந்கூறுதலின் மீது மோகித்துக் கிடக்கிறார்கள்?  நண்பரின் ஆய்வுத்தாள் ஆறு காரணங்களைக் குறிப்பிடுகிறது.

[1] அறியாமை (ignorance)
[2] தன்னம்பிக்கையின்மை (low self-confidence)
[3] தனக்கு வேண்டும் என்று விரும்புவது அடுத்தவரிடம் உள்ளது எனும் நிலையில் ஏற்படும் பொறாமை (envy)
[4] வேறு வேலை எதுவும் இல்லாததால் வரும் சலிப்பு (boredom)
[5] அடுத்தவரைக் கவர வேண்டும் என்ற விழைவு (Trying to impress people)
[6] இறைத் தத்துவப் போதாமை (low faith)

மிகவும் வியப்பாக இருந்தது.  நண்பரின் ஆய்வறிக்கைகள் நிறைய பணியாளர்களிடம் பேசி எழுதி வாங்கிய தரவுகளின் அடிப்படையில் மேற்சொன்ன காரணங்களை அடையாளம் கண்டிருந்தன.  என்னுடைய அனுபவத்திலும், உங்களுடையதைப் போலவே, ஏறத்தாழ இந்தக் காரணங்கள்தான்.  நான் பணி புரியும் இடத்திலேயே இத்தகைய மனிதர்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு 'ஒருவிதமான மனநோயோ' என்ற ஐயப்பாடும் உண்டு.  இளம் சகா ஒருவர் இந்த புறந்கூறுதலைத் தனது முழுநேரத் தொழிலாகவே செய்து வருகிறார்.  அடுத்தவரைப் பற்றிக் கேட்கவே பயத்தைத் தரும் விஷயங்களைக் கூறிய பிறகு 'இதை யாரிடமும் சொல்லாதீர்கள்' என்று மறக்காமல் சொல்லுவார். தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தன்னிடம் ரகசியமான மோகம் புதைந்து கிடக்கிறது என்று நம்புகிறார். ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொருவரிடமும் இது போன்று ரசக்குறைவான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். எனக்குக் கவலையாக இருக்கிறது.  இந்தத் தோழி துறையிலும் வாழ்க்கையிலும் நிறைய தொலைவு பயணப்பட வேண்டியிருக்கிறது.  கொஞ்ச நாட்களிலேயே இவரது சுபாவம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.  என்ன புதிய உபாயங்களைக் கைக்கொண்டு மீதமிருக்கும் வருடங்களைத் தள்ளப்போகிறாரோ!

நாம் புறந்கூறுதலுக்கு ஆளாக நேரும் போது / நம்முடைய சகா அப்படியான களங்கத்திற்கு ஆளாக்கப்படும் போது செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றியும் இந்த ஆய்வறிக்கைகள் பேசுகின்றன.

[1] குறைகூறப் படுபவரை புகழுங்கள்
யாரைப் பற்றி உங்களிடம் குறைகூறப் படுகிறதோ அவரைப் பற்றியதான நல்ல குணங்களை பொல்லாங்கு சொல்பவரிடம் எடுத்துக் கூறுங்கள். குறை கூறுபவர் ஏமாற்றமடைவார்.  இதை செய்வதின் மூலம், நீங்கள் சரியான காரியம் ஒன்றையே செய்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  குறை கூறுபவர் ஏமாற்றமடைவது மட்டுமன்றி, அப்படியான தூற்றுச் செயலுக்காக தங்களை மீண்டும் அணுக மாட்டார்.

[2]  இரண்டு பேரிடமும் பேசி உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்
ஒருவரைப் பற்றி உங்களிடம் குறைகூறப்படும் பொழுது, குறை கூறுபவர் சொல்வதில் உண்மை உள்ளதா என்பதை குறைகூறப்படுபவரிடம் பேசித் தெரிந்து கொள்ளுங்கள்.  (நான் முன்னர் குறிப்பிட்ட தோழி நினைவுக்கு வருவதைக் தடுக்க முடியவில்லை. துறையின் முக்கியமான நபர்களை எல்லாம் குறிப்பிட்டு, அவர்கள் அனைவரும் தனித்தனியான சம்பவங்களில் சபை நாகரிகம் குறைச்சலாக நேரிலோ சமூக வலைத்தளங்களிலோ தன்னிடம் பேசியிருக்கிறார்கள் என்று சொல்லுவார். 'அநீதி இழைக்கப்பட்டவர்' என்ற தொனியிலேயே பேசுவார். சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசிய போது அதிர்ந்து போனேன்.  என்னைப் பற்றியும் அவர்கள் அனைவரிடமும் அதே போன்று சொல்லியிருக்கிறார்.  நல்ல மன நல மருத்துவர்கள்  நிறைய பேர் இருக்கிறார்கள்.  இல்லையென்றால் அம்மணிக்கு மிகவும் பரிச்சயமான சமூக வலைத்தளங்கள் மூலமாகவே டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோரைத் தொடர்பு கொண்டு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் பற்றி ஆலோசனைகள் பெறலாம்.)

[3] இது  உங்களுடைய வேலை அல்ல என்று பொல்லாங்கு சொல்பவரிடம் தெளிவாக்குங்கள்.
அடுத்தவர்களைப் பற்றி தூற்றுதலாக உங்களது நண்பர் சொல்லும் பொழுது, தெளிவாக அப்படியானது அவருடைய வேலை அல்ல என்று சொல்வது உங்களை அவர் மீண்டும் அணுகாதவாறு செய்யும்.  அவர் சொல்லுகின்ற விஷயத்தைப் பற்றி உங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதும், வேறு விஷயங்களைப் பற்றி பேசுவதாக இருந்தால் உரையாடல் தொடர முடியும் என்பதும் தெளிவாகிவிட்ட நிலையில் மீண்டும் உங்களை அணுக மாட்டார் என்பது நிச்சயம்.

[4] உங்களைப் பற்றி மற்றவர்கள் பொல்லாங்கு சொல்வது தெரிய வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேளுங்கள்.
மற்றவர்களைப் பற்றி உங்களிடம் பொல்லாங்கு சொல்பவர்களை எக்காரணம் கொண்டும் ஊக்கப்படுத்தாதீர்கள்.  "நீங்கள் சொல்வதில் நான் சம்பந்தப்பட்டிருந்தால் எப்படி உணர்வேன் தெரியுமா?" என்று அவரிடம் கேளுங்கள்.  ஓரளவு மனசாட்சி உள்ளவராக இருந்தால் கூட, இந்தக் கேள்வியால் கொஞ்சம் நிதானத்திற்கு வரலாம்.

[5] பேசிக் கொண்டிருக்கும் விஷயத்திலிருந்து திசை திருப்புங்கள்
உங்களிடம் ஒருவரைப் பற்றி பொல்லாங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, விஷயத்தை மாற்றுங்கள்.  பொல்லாங்கில் உங்களுக்கு விருப்பமில்லை என்று அவர் தெரிந்து கொள்ள இதைவிட சிறந்த வழி ஏதுமில்லை.

[6] இடத்தை விட்டு நகருங்கள்
விலக்கான நபர் ஒருவர், மேற்சொன்ன வழிமுறைகளை நீங்கள் கடைபிடித்த பின்னரும், புறந்கூறுவதைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நேர்வில், அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள்.  வேறு எதுவும் செய்வதற்கில்லை.

ஒருவேளை நீங்களே புறந்கூறும் பழக்கமுடையவராக இருந்தால் எப்படி உங்களை மாற்றிக் கொள்வது?  இதைப் பற்றியும் நண்பரின் ஆய்வுத்தாள்கள் பேசுகின்றன.

[1] யாரைப் பற்றி பொல்லாங்கு சொல்கிறேனோ அவர் விரும்பும் படிக்கு நான் சொல்வது இருக்கிறதா? அந்த நபர் இங்கே இருந்தால் இப்படியெல்லாம் சொல்வேனா? - இந்தக் கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்.  உங்களைப் பற்றி யாரேனும் இதற்கு முன் புறந்கூறியிருந்து அதனால் நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டீர்கள் என்பதையும் நினைத்துக் கொள்வது நல்லது.

[2] நான் சொல்லும் பொல்லாங்கு யாருக்கேனும் பயன்படுமா? பெரும்பாலும் பொல்லாங்கு இரண்டு முனைகள் கொண்ட கத்தி போன்றது.  சொல்பவர் - சொல்லப்படுபவர் இருவரையுமே மோசமாகத் தாக்கும்.  இந்த இருவருக்கிடையில் தீராப் பகையையும் உண்டாக்கி விடுகிறது.  

[3] நான் சொல்வதை கேட்க வேண்டிய தேவை யாருக்கேனும் இருக்கிறதா? இஸ்லாம் என்ன சொல்கிறதென்றால், சாத்தான் ஒருவருக்குள் புகுந்த பின்புதான் அவர் புறந்கூறத் தொடங்குகிறார். ஆகையால் மற்றவர்களுடைய குறைகளின் சம்பளமில்லா விளம்பரதார்களாக இருக்க முயலாமல், நம்முடைய குணாம்சத்தை மேம்படுத்திக் கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது.

[4] நல்ல நண்பர்களோடு / சகாக்களோடு எப்பவும் இருப்பது நல்லது.  'கொடுத்துக் கொளல் வேண்டும் நட்பு' என்று சொல்லப்படுகிறது. புறங்கூறும் பழக்கம் கொண்டோரை நட்பாக வைத்துக் கொள்வது தரையில் கிடக்கும் மின்கம்பியை மிதிப்பதற்குச் சமமானது.  எவ்வளவு செலவு செய்தாவது அத்தகையோரை விலக்கிக் கொள்வது மன நலம் / சமூக மதிப்பு ஆகியவற்றுக்கு உத்தரவாதமானது.

[5] நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஒன்றைப் பற்றி / ஒருவரைப் பற்றி தெரிந்தாலொழிய வாய் திறக்க வேண்டாம்.

[6] சந்திக்கும் / பழகும் மனிதர்களிடம் உள்ள நல்ல, உயர்ந்த குணங்களோடு மட்டுமே உங்களது உறவைப் பேணுங்கள்.  அவரிடம் உள்ள கெட்ட குணங்களோடு மட்டுமே நாம் பொருந்திப் போகிறோம் என்றால் நாம் யார் என்பதையாவது தெரிந்து கொள்ளுங்கள்.

[7] பொல்லாங்கு சொல்லியே தீர வேண்டும் என்கிற மன அழுத்தம் உண்டானால், நீங்கள் சொல்ல விரும்புவதை ஒரு தாளில் எழுதிக் கொள்ளுங்கள்.  இரண்டு நாட்கள் கழித்துப் படியுங்கள்.  தாளை உடனே கிழித்துப் போடுவதற்கு வாய்ப்பு அதிகம். 

நண்பரின் ஆய்வறிக்கைகளில் கண்டிருக்கும் விஷயம் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இணையத்தில் தேட ஆரம்பித்ததும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பல வருடங்களாக தொடர்ந்து பத்திகள் எழுதி வரும் ஜக் சுரையா-வின் (Jug Suraiya) வரி கருத்தில் விழுந்தது.  "ஒருவர் உங்களைப் பற்றி நிறுத்தாமல் பொல்லாங்கு சொல்லிக்கொண்டேயிருக்கிறார். என்ன செய்வது? விலை உயர்ந்த பொருள் ஒன்று வாங்கி உங்கள் அன்புப் பரிசாய் அவருக்கு அனுப்பி வையுங்கள்."

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

0 comments:

Post a Comment