கடைசி இதிகாசம்

| Sunday, May 3, 2015
(மலையாள நவீன இலக்கியத்தின் முன்னோடி கர்த்தாக்களில் ஒருவரான ஓ.வி.விஜயனைப் பற்றி சி.சரத்சந்திரன் எழுதி, THE HINDU, மே 3, 2015 பதிப்பில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)


ஓ.வி.விஜயன் மறைந்து இன்றைக்கெல்லாம் பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன.  என்றாலும், மலையாள இலக்கியத்தைப் பற்றி எந்த ஒரு சம்பாஷனையும் விஜயனின் புகழ் பெற்ற நாவலான  ‘கழக்கிண்டே இதிகாசம்’ பற்றி பேசாமல் நிறைவுறுவதில்லை.  மலையாள இலக்கியத்தின் கடைசி பெரும் நாவலாக இதை பலர் மதிப்பிடுகிறார்கள். கடந்த 45 வருடங்களில் 50 முறைகள் இந்த நாவல் பதிப்பிக்கப் பெற்றுள்ளது என்பதிலிருந்தே இதன் செல்வாக்கை உணரலாம்.

‘கழக்கிண்டே இதிகாசம்’ பெரும் மாறுதலுக்கான அடிப்படையை தனது ஜீவனாகக் கொண்டது.  அன்றைய மலையாள எழுத்தாளர்களில் பலர் – தகழி, கேசவ் தேவ், பஷீர், எம்.டி.வாசுதேவ நாயர் – தங்களது கதைக் கருக்களை சமூகத்தின் புறவெளிகளில் இருந்தே தேர்ந்தெடுத்தபொழுது, விஜயன் தன்னுடையவைகளை மனதின் அக வெளிகளில் தேடிக் கண்டடைந்தார்.  மற்றவர்கள் சமூகத்தின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளிலும், நிலப் பிரபுத்துவ அடுக்குகளின் சுரண்டல்களிலும் தங்களது படைப்புகளுக்கான தேவையைக் கண்டறிந்த பொழுது, விஜயன் மனித மனத்தின் உள்ளடுக்குகளிலும், அதனுடைய உள்ளார்ந்த முரண்கள், தனிமை, வெறுமை ஆகியவற்றிலேயே தனது படைப்பின் தேவையை உணர்ந்தார்.

‘கழக்கிண்டே இதிகாசம்’ என்ற நாவல் அதன் மையப் பாத்திரமான ரவி, கழக்கு என்ற பழங்குடி கிராமத்திற்கு ஆசிரியராக வந்து சேருவதில் துவங்குகிறது.  (பலர் கழக்கு என்ற கிராமம் உண்மையில் தஸ்ராக் என்னும் இடமே என்று கருதுகின்றனர்.  ஆர்.கே.நாராயண் அவர்களின் மால்குடி என்ற சிறு நகரம் மைசூரைக் குறிக்கிறதா என்று தொடரும் சர்ச்சையோடு இது ஒப்புநோக்கத் தக்கது – மொழிபெயர்ப்பாளர் குறிப்பு) ரவியின் கடந்த காலம் ஒரு புரட்சிவாதியினுடையது. அவனுக்கு இந்த கிராமத்தில் நேரும் அனுபவங்கள் ஆன்மீகப் பாங்கையும் மதிப்பீடுகளையும் அறிய உந்துகிறது.  மனித மனதின் ஒரு எல்லையிலிருந்து அதன் எதிர்க் கரைக்கு கழக்கு என்ற கிராமம் வழியாக ரவி கடந்து செல்கிறான்.
 
மலையாள வாழ்வியலின் கொடுமையான சமூக, மத, அரசியல், பொருளாதார சுரண்டல்களால் பீடிக்கப்பட்டிருந்த தலைமுறையைச் சார்ந்த இளைஞர்களுக்கு, விஜயனின் ‘கழக்கிண்டே இதிகாசம்’ ஒரு ஆன்மிகம் மற்றும் அமைதி நிறைந்த மனவெளிக்கு கூட்டிச் செல்லும் ரட்சக ஒளியாய் தெரிந்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.  திருத்தவே முடியாத சமூக அமைப்பு, துரத்தும் ஒருவனை விட்டு விலகி வேகமாக முன் ஓடும் கானல் நீரான புரட்சி ஆகியவற்றால் சிதறுண்டு கிடந்த மலையாள இளைஞனுக்கு, அவன் சென்று அடைய வேண்டிய இலக்கை தனது ஆன்மீக ஒளி வழியாக ‘கழக்கிண்டே இதிகாசம்’ கண்பித்ததுதான் இந்த நாவலின் முடியாத புகழுக்கு காரணமாய் இருக்கக்கூடும். தாங்கள் நிறைந்து வாழ விரும்பிய ஆனால் கனவுகளில் மட்டுமே தெரிந்த கிராமமாக கழக்கு அவர்களின் அகக் கண்களில் தெரிந்தது.  அருந்ததி ராயின் ‘அய்மனம்” கிராமத்தைப் போலவே தஸ்ராக்கும் எண்ணற்ற கேரளத்து வாசகர்களின் புனித ஸ்தலமாய் மாறிப் போனதின் காரணம் புரிந்து கொள்ளக் கூடியதே. 
 
இந்த நாவலின் வெற்றிக்கு விஜயனின் இலக்கியார்த்தமான நடையும், அவர் கண்டடைந்த முற்றிலும் புதிதான ஒரு படைப்பு மொழியும் முக்கிய காரணங்கள்.  மலையாள கூட்டு மனதை மயக்கும் ஒரு மந்திர ஜாலம் நிறைந்த மொழிநடை விஜயன் தெரிந்தெடுத்தது.  உலக அளவில், மிகை யதார்த்த பாவனைக்காகவும் படைப்பு மனதிற்காகவும் அறியப்படுகிற காப்ரியல் கார்சியா மார்க்கி என்பவரோடு விஜயனை எளிதாக ஒப்பிடலாம்.

விஜயனின் அடுத்தடுத்த நாவல்களும் புகழ் பெற்றவையே.  குறிப்பாக ‘தருமபுராணம்’ ஒரு அரசியல் அங்கதம்.  அடிப்படையில், ஒரு கேலி சித்திரக்காரர் என்பதால், இந்திய அரசியலின் முகமூடி மறைத்த முகங்களைப் பற்றி விஜயனிடம் தீவிரமான புரிதல் இருந்தது.  பத்மபூஷன் (2003) உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டிருப்பினும், மலையாள தேசத்தைத் தாண்டி அந்த அபூர்வமான எழுத்துக் கலைஞன் அறியப்படவே இல்லை என்பது, இந்தியா மட்டுமன்றி உலகின் பிற பகுதிகளிலும் இருக்கும் இலக்கிய ரசிகருக்கான நட்டமே.

ரவீந்திரநாத் தாகூருக்குப் பின்பு (1913) இலக்கியத்திற்கான நோபல் பரிசை எந்த இந்தியரும் வென்றிருக்கவில்லை.  இந்தியாவின் பிரதேச இலக்கியங்கள், இந்திய சினிமாவைப் போன்றே, இந்த உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்து செல்லப்படுவதற்கான முன்னெடுப்புக்களை செய்தாக வேண்டிய காலகட்டம் இது.

 

0 comments:

Post a Comment