கண்களின் தவம்

| Saturday, May 2, 2015
ஞானக்கூத்தன் என்றொரு கவிஞன் 

 கே.பி.வினோத் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் YouTube-ல் கிடைக்கிறது. ஞானக்கூத்தன் என்ற கவிஞர் தமிழ் நவீன கவிதை மரபில் மிகவும் முக்கியமான கண்ணி. பாரதி, பாரதிதாசன் தொடங்கி தமிழ்க்கவிதை அறுபதுகளில் திராவிட இயக்கப் பார்வையோடு வாசகப் பெருவெளியில் நுழைந்தபோது, அதற்கான மாற்றுக் கவிதைப் பார்வையோடு ஞானக்கூத்தன் தன்னுடைய கவிதைகளை வாசகனை நோக்கிச் செலுத்தினார். ம.பொ.சி. அவர்களாலும் அவரின் தமிழ்த் தேசியத்தாலும் ஈர்க்கப் பட்டாலும், ஞானக்கூத்தன் அவர்களின் கவிதையுலகு ஒரு தனித்த மனிதனின் பார்வையாகவே இருந்தது. அவரே இந்த ஆவணப் படத்தில் குறிப்பிடும்படி, “எனக்கு பாரதியைப் போல மிகப்பெரிய விடயங்களின் மேல் ஆர்வம் இல்லை. சாதாரணன் என்னைக் கவருகிறான். என்னைப் போல இருப்பவனின் வாழ்வியல் சிக்கல்கள், இன்பங்கள் மற்றும் துன்பங்கள் என்னைக் கவருபவனாக உள்ளன.”

இவருடைய கவிதைகளில், மனுஷ்யபுத்திரனும், ஜெயமோஹனும் தெரிவிப்பது போல, ஒருவித அங்கதம் தொடர்ந்து வருகிறது. கசப்பின் தொடர்ச்சியாய் நீளும் அந்த அங்கதம் ஞானக்கூத்தன் அவர்களது கவிதைக் கொடை எனலாம். பிரச்சினைகளை அங்கதம் தீர்க்காது என்றாலுங்கூட, அவைகளை முழுவதுமாக பார்க்க அது உதவும். அந்த வகையில் ஞானக்கூத்தன் நம்மை நமக்குக் காண்பித்தவர். இவரின் மற்றுமொரு கவிதைக்கூறு மிகவும் அந்தரங்கமான தளத்தில் இயங்குகிறது. உதாரணமாக, ‘அம்மாவின் பொய்கள்’ கவிதையை சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை, ஞானக்கூத்தன் அவர்களுடைய சிறந்த படைப்பு என்று இதைச் சொல்வேன். 

அம்மாவின் பொய்கள்
 
பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்


தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்


தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்


ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்


எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா


அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்


தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?


அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?


தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா


உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?


ஞானக்கூத்தன் அவர்களுடைய படைப்புலகை பற்றிய இன்னொரு விஷயம், இவருடைய கவிதைகள் இசைத்தன்மை கொண்டவை. மரபுக் கவிதைகளுக்கே உரிய இசைமை இவருடைய கவிதைகளுக்கு உண்டு. மீண்டும் இந்த ஆவணப்படைத்தைப் பற்றி பேசும்பொழுது, எனக்கு ரவி சுப்ரமண்யன் அவர்களின் “மா.அரங்கநாதன்” அவர்களைப் பற்றிய ஆவணப்படம் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. அதிகம் வெகுஜனத்தால் அறியப்படாத ஆனால் மிக முக்கியமான படிப்பாளரும் படைப்பாளருமான மா.அரங்கநாதனைப் பற்றிய அற்புதமான ஆவணப்படம் அது. வினோத் அவர்களின் இந்தப் படத்தில், கவிஞர் தேவதேவன், கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, மனுஷ்யபுத்திரன், திரைப்பட நடிகர் கமலஹாசன், எழுத்தாளர் ஜெயமோகன், சா.கந்தசாமி, அழகியசிங்கர் போன்றோரின் எண்ணங்கள் ஆவணப்படத்தின் இடையிடையே பொருத்தமாக சேர்க்கப்பட்டுள்ளன. கவிஞர் குடும்பத்தாரின் பேட்டிகளும் இப்படத்தைச் சிறப்பாக்குகின்றன.

தனக்கு இருபத்தோரு வயதான நிலையில் மாயவரத்தில் இருந்து, 1959-ல் கவிஞர் சென்னைக்கு வருகிறார். அரசு வேலை. அரசு வேலையில் இருந்துகொண்டே ஒரு மாற்றுச் சிந்தனை மரபையும், திராவிட பாரம்பரியத்திலிருந்து விலகிய நீண்ட கவிதை மரபையும் தோற்றுவித்தது கவிஞரின் பெரிய பங்களிப்பு என்று தைரியமாக சொல்லலாம். நாற்பது நிமிடங்கள் விரியும் இந்த ஆவணப்படம், கமலஹாசன் அவர்கள் சொல்வதைப் போல, கவிஞரை எதிர்காலம் நன்கு அறிந்துகொள்ள முடியும் என்ற வகையில் பதியப்பட்டுள்ளது. தமிழ்க் கவிதை ஆர்வலர்கள் அனைவரும் பார்த்தாக வேண்டிய ஆவணப்படம். சிறந்த படைப்பாளிகளை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே, இத்தகைய ஆவணப்படங்களின் மூலம் பாதுகாக்க வைக்க வேண்டும். 

இதற்காக ஆர்வலர்களும் அரசும் முன் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது பேராசையா? ஜெயகாந்தன் அவர்களின் பூத உடல் மயானம் கொண்டு செல்லப்பட்ட போது, அங்கிருந்தவர்கள் எண்ணிக்கை நூறு பேருக்கும் குறைவுதான் என்று சொல்வனத்தில் சுகா பதிந்துள்ளதைப் படித்ததால், படைப்பாளிகளைப் ஆவணப்படங்கள் பற்றிய ஆசை நிச்சயம் பேராசை என்றுதான் தோன்றுகிறது. ஜெயகாந்தனைப் படமெடுக்க இளையராஜா முன்வந்ததைப் போல, மற்றவர்களுக்கும் நிறைய ராஜாக்கள் தேவை.
----


கண்களின் தவம் 
 இன்றைய மதிய உணவிற்குப் பின், இரண்டு ஆவணப்படங்களை ஒரே மூச்சில் பார்த்து முடித்தேன். ரவி சுப்ரமண்யன் இயக்கியவை. மூத்த எழுத்தாளர் மா.அரங்கநாதன் அவர்களைப் பற்றியது முதல் ஆவணப்படம். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் நீடிக்கிறது. அடுத்ததாக, சைவக்கடல் சைவ சித்தாந்த கலாநிதி டி.என்.ராமச்சந்திரன் அவர்களைப் பற்றியது. ஏறத்தாழ தொண்ணூறு நிமிடங்கள் நம்மை சைவத்தின் தமிழுக்குள்ளும் பக்திக்குள்ளும் ஆழ்த்தி திளைக்க வைக்கிறது.

தமிழின் மிக முக்கியமான ஆவணப்படங்கள் இவை. ரவிசுப்ரமண்யன் அவர்களுக்கு தமிழர்கள் மிகவும் கடன் பட்டிருக்கிறார்கள். "எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்" என்ற தலைப்பில் ரவி சுப்ரமண்யன் த.ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய ஒரு அற்புதமான ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை தயாரித்தவர் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா. இத்தகைய ஆவணப்படங்கள் வழியாக பெருந்தகைகளை பதிவுசெய்யா விடின், கொஞ்ச வருடங்களுக்குப் பிறகு, இப்படியான ஞானவான்கள் பூமியிலே வாழ்ந்தார்கள் என்பதற்கான அடையாளங்கள் இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. 




மா.அரங்கநாதன் ஒரு தமிழ் அறிஞர் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் கடுமையான தேர்ச்சி கொண்டவர். ஆங்கில இலக்கிய விமரிசனம் மட்டுமன்றி தமிழ் இலக்கியத்திலும் பாரியமான பங்களிப்பைச் செய்தவர். இலக்கிய மேதை. இரு மொழிப் புலமை மா.அரங்கநாதன் மற்றும் டி.என்.ஆர். ஆகிய இருவரிடமும் கொட்டிக்கிடக்கிறது. டி.என்.ஆர். அவர்கள் சைவத்திற்கும் தமிழிற்கும் செய்துவரும் தொண்டு நமது கண்களை நிறைக்கிறது. இந்த இரண்டு ஆவணப்படங்களையும் அனைவரும் பார்க்க வேண்டும். 

"நமக்கு எல்லாமே தெரியும் என்ற மதப்பில், எதையுமே ஆழமாகவும் முழுமையாகவும் படிக்காமல் நுனிப்புல் மேய்ந்தவாறே எல்லாவற்றைப் பற்றியும் கொஞ்சமும் வெட்கமின்றி உளறித் திரியும் நவீன மேதா விலாசர்கள்" இந்த குறும்படங்களை கட்டாயமாக பார்க்க வேண்டும். இணையத்தில் இரண்டொரு பக்கங்களை கண்ணுற்ற பிறகு, மற்றவர்கள் அதே பக்கங்களை இன்னும் கண்ணுறாத நிலையில், அவை சம்பந்தமான விடயங்களில் தானே வல்லுநர் என்றும், கற்காதோர் சபை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு தன்னுடைய 'இணைய நுட்பத்தை' காண்பித்து பிழைக்கும் பேர்வழிகள் மேற்சொன்ன இரண்டு ஆவணப்படங்களையும் பார்த்து திருந்தலாம். நல்ல வாய்ப்பு.


ரவிசுப்ரமண்யன் அவர்களின் இந்த இரண்டு ஆவணப்படங்களும் YouTube-ல் காணக் கிடைக்கிறது. ரவிசுப்ரமண்யன் தமிழின் ஆகப்பெரிய ஆவணப்பட இயக்குனர் என்பதை நம்மால் மிக எளிதாக அங்கீகரிக்க முடிகிறது. கிடைக்கும் பிரதிகள் தரமானவையாக, ஒலி மற்றும் ஒளி ஆகியவை சிதறாமல் பிசிறாமல் உள்ளன என்பது நம் பாக்கியம்.

இந்தப் படங்களைக் காண கண் கோடி வேண்டும்!

0 comments:

Post a Comment