ஹிந்தி (மட்டும்) வாழ்க!

| Friday, February 27, 2015
இன்று [பிப்ரவரி 21] தமிழ் ஹிந்துவில் ஆழி.செந்தில்நாதன் அவர்கள் தாய்மொழி தினம் தொடர்பாக எழுதிய கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.  முழுவதும் ஒத்துப்போகக்கூடியதாக இருப்பதில் மகிழ்ச்சி.  பத்து வருடங்கள் நடுவண் அரசால் நடத்தப்பெறும் பள்ளியில் பணி புரிந்தவன் என்ற நிலையில் இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தையுமே சொந்த அனுபவத்தில் உணர்ந்தவன் நான்.  மொழி எதேச்சதிகாரத்தைப் பற்றி யாருக்கேனும் தெரிய வேண்டுமென்றால், அதைப் பற்றிய சொந்த அனுபவங்கள் வேண்டுமென்றால், இந்தப் பள்ளிகளில் பணி புரியலாம்.  இங்கு பணி புரிந்து கொண்டிருந்தபோது, ஒரு மேலதிக நிலைக்கான நேர்முகத் தேர்விற்காய் புது தில்லி செல்ல நேர்ந்தது.  நேர்முகம் செய்தவர்கள் ‘ஹிந்தி தெரியாமல் இந்த வேலைக்கு வந்து என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்டதும் மட்டுமல்லாமல், ‘ஆறு வருடங்களுக்கு மேல் இந்தப் பள்ளிகளில் பணி புரிந்தும் கூட ஹிந்தி  தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?’ என்பதாகவும் கேட்டார்கள்.  நான் ஆங்கிலம் சொல்லித் தருவதாலும், அனைவருமே என்னிடம் ஆங்கிலத்தில் உரையாடுவதால் ஹிந்தி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறது என்றும், ஆனால் என்னிடம் உரையாடும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், பல உடன் பணிபுரிபவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டுள்ளார்கள் என்ற எனது பதிலை அவர்கள் யாருமே ரசிக்கவில்லை என்பதை கடுப்பாகிப் போன அவர்களது முகங்கள் காட்டிக்கொடுத்தன. எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை.  ஹிந்தி தெரியாததும், ஆங்கிலம் தெரிந்ததும்தான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

மற்றொன்று.  என்னுடைய சொந்த அனுபவத்தைப் பொறுத்த வரையில் இதைச் சொல்ல முடியும்.  ஹிந்தியை ஒரு பாடமாக சொல்லித்தரும் ஆசிரியர் உட்பட அதைத் தாய்மொழியாக கொண்ட எவருமே, என்னுடைய பழகு வரம்பிற்குள், அதன் இலக்கிய பாரம்பரியத்தைப் பற்றியோ, செவ்வியல் இலக்கிய படைப்புக்களைப் பற்றியோ எந்தவித பிரக்ஞையும் இல்லாமல்தான் இருந்தார்கள். எவர் கையிலும் ஹிந்தியில் எழுதப்பட்ட பழம்பெரும் இலக்கியப் பிரதிகளை நான் கண்டதில்லை.  இது மட்டுமன்றி, அங்கு வேலை செய்யும் தமிழர்களைப் பற்றி அவர்களுக்கு ‘மொழி வெறியர்கள்’ என்ற எண்ணம் புரையேறிப் போயிருந்தது.  இதன் பொருட்டே தமிழர்களாகிய எங்களைப் பற்றிய ஒருவகையான இறுக்கம் அவர்களிடம் இருந்ததை எவ்வளவோ முறை உணர்ந்திருக்கிறேன்.  அறுபதுகளில் இங்கு சூடேறியிருந்த மொழிப் போராட்டம்தான் இதற்கான காரணம்.  ஒருமுறை எனது வகுப்பில், பரிச்சயமில்லாத ஆங்கில வார்த்தைகளுக்கு ஹிந்தி இணை வார்த்தைகள் சொல்லும்படி கேட்ட மாணவனிடம் எனது இயலாமையைத் தெரிவித்தபோது, ஆச்சர்யமடைந்த அந்த மாணவன், ஹிந்தி பேசத் தெரியாமல் நீங்கள் எப்படி இந்திய குடிமகனாக இருக்க முடியும் என்று கேட்டான். பிறகு சிறிது நேரம் கழித்து அவனுக்கு இன்னொரு ஆச்சர்யம்.  “நீங்கள் இந்தியாவில் இருந்துகொண்டு ஹிந்தி பேசத் தெரியாதது போலவே, கருப்பாக இருந்துகொண்டு ஆங்கிலம் பேசுவதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்ற அந்தப் பையன் ஒரு பாசிச கருத்தாக்கத்தின் அப்பாவியான பிரதிநிதி.  

இத்தகைய இறுக்கமான சூழல் நிலவி வந்ததாலோ என்னவோ, ஹிந்தி கற்றுக் கொள்ளவே கூடாது என்று முடிவு செய்தேன்.  ஒரு சிறிய நஷ்டம்தான் அது என்றாலும் கூட.  ஹிந்தி பேசா விட்டால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது போன்ற அறிவை விட்டு மிக அதிக தூரம் விலகி நிற்கும் காரணங்கள் எல்லாம் இங்கே கதைக்கப் படுகின்றன. ஹிந்தி தெரியாவிட்டால்  இந்தியாவின் பிற பகுதிகளுக்கு சென்று வருவதில் ஏகப்பட்ட சிரமங்கள் என்பதான அபிப்பிராயங்களுக்கு என்னிடம் எந்த மதிப்பும் இல்லை.  கடந்த இருபத்தைந்து வருடங்களாக இந்தியாவின் வட, மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுற்றியிருக்கிறேன்.  எந்தத் தருணத்திலும் மொழி குறித்த நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டதில்லை.  எல்லாவிடத்திலும் ஆங்கிலம் மூலமாக என்னுடைய தேவைகளை, விசாரிப்புக்களை என்னால் சாதித்துக்கொள்ள முடிந்திருக்கிறது.  இன்னும் சொல்லப் போனால், ஆங்கிலத்தில் உரையாடியதாலேயே எனக்கு வட இந்தியரிடம் பல சமயங்களில் அதிகமான பிரியமும் சகாயமும் கிடைத்திருக்கின்றன.  

பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சார பீரங்கிகளும் அதன் தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோடியும் ஹிந்தியின் தனிச் சிறப்பைப் பற்றி மேடைகளில் உரக்க பேசுவதால் பிரயோஜனம் எதுவும் சேர்வதாகக் காணோம்.  ஹிந்தியை வைத்துக் கொண்டு வட இந்தியாவையே இணைக்க முடியக் காணாததால் இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க முடியும் என்ற கனவைத் தவிர்த்துவிட்டு, அவர்கள் ஹிந்தியில் படைப்பாக்கங்கள், மொழிபெயர்ப்புகள், ஹிந்துஸ்தானி இசை, நிகழ்த்துக் கலைகள் ஆகியவையைப் பேணுவதில் கவனம் செலுத்தலாம். குறைந்தபட்சம் சில நூறு நல்ல ரசிகர்கள், வாசகர்களாவது ஹிந்தி மொழிக்கு கிடைப்பார்கள்.  

இன்று தாய்மொழிகள் தினம் [பிப்ரவரி 21] என்ற தகவலை ஆழி.செந்தில்நாதன் தெரிவிக்கிறார்.  ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இன்று எடுத்துக் கொள்ள நிறைய சபதங்கள் இருக்கின்றன.

0 comments:

Post a Comment