ஹிந்தி (மட்டும்) வாழ்க!

| Friday, February 27, 2015
இன்று [பிப்ரவரி 21] தமிழ் ஹிந்துவில் ஆழி.செந்தில்நாதன் அவர்கள் தாய்மொழி தினம் தொடர்பாக எழுதிய கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.  முழுவதும் ஒத்துப்போகக்கூடியதாக இருப்பதில் மகிழ்ச்சி.  பத்து வருடங்கள் நடுவண் அரசால் நடத்தப்பெறும் பள்ளியில் பணி புரிந்தவன் என்ற நிலையில் இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தையுமே சொந்த அனுபவத்தில் உணர்ந்தவன் நான்.  மொழி எதேச்சதிகாரத்தைப் பற்றி யாருக்கேனும் தெரிய வேண்டுமென்றால், அதைப் பற்றிய சொந்த அனுபவங்கள் வேண்டுமென்றால், இந்தப் பள்ளிகளில் பணி புரியலாம்.  இங்கு பணி புரிந்து கொண்டிருந்தபோது, ஒரு மேலதிக நிலைக்கான நேர்முகத் தேர்விற்காய் புது தில்லி செல்ல நேர்ந்தது.  நேர்முகம் செய்தவர்கள் ‘ஹிந்தி தெரியாமல் இந்த வேலைக்கு வந்து என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்டதும் மட்டுமல்லாமல், ‘ஆறு வருடங்களுக்கு மேல் இந்தப் பள்ளிகளில் பணி புரிந்தும் கூட ஹிந்தி  தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?’ என்பதாகவும் கேட்டார்கள்.  நான் ஆங்கிலம் சொல்லித் தருவதாலும், அனைவருமே என்னிடம் ஆங்கிலத்தில் உரையாடுவதால் ஹிந்தி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறது என்றும், ஆனால் என்னிடம் உரையாடும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், பல உடன் பணிபுரிபவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டுள்ளார்கள் என்ற எனது பதிலை அவர்கள் யாருமே ரசிக்கவில்லை என்பதை கடுப்பாகிப் போன அவர்களது முகங்கள் காட்டிக்கொடுத்தன. எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை.  ஹிந்தி தெரியாததும், ஆங்கிலம் தெரிந்ததும்தான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

மற்றொன்று.  என்னுடைய சொந்த அனுபவத்தைப் பொறுத்த வரையில் இதைச் சொல்ல முடியும்.  ஹிந்தியை ஒரு பாடமாக சொல்லித்தரும் ஆசிரியர் உட்பட அதைத் தாய்மொழியாக கொண்ட எவருமே, என்னுடைய பழகு வரம்பிற்குள், அதன் இலக்கிய பாரம்பரியத்தைப் பற்றியோ, செவ்வியல் இலக்கிய படைப்புக்களைப் பற்றியோ எந்தவித பிரக்ஞையும் இல்லாமல்தான் இருந்தார்கள். எவர் கையிலும் ஹிந்தியில் எழுதப்பட்ட பழம்பெரும் இலக்கியப் பிரதிகளை நான் கண்டதில்லை.  இது மட்டுமன்றி, அங்கு வேலை செய்யும் தமிழர்களைப் பற்றி அவர்களுக்கு ‘மொழி வெறியர்கள்’ என்ற எண்ணம் புரையேறிப் போயிருந்தது.  இதன் பொருட்டே தமிழர்களாகிய எங்களைப் பற்றிய ஒருவகையான இறுக்கம் அவர்களிடம் இருந்ததை எவ்வளவோ முறை உணர்ந்திருக்கிறேன்.  அறுபதுகளில் இங்கு சூடேறியிருந்த மொழிப் போராட்டம்தான் இதற்கான காரணம்.  ஒருமுறை எனது வகுப்பில், பரிச்சயமில்லாத ஆங்கில வார்த்தைகளுக்கு ஹிந்தி இணை வார்த்தைகள் சொல்லும்படி கேட்ட மாணவனிடம் எனது இயலாமையைத் தெரிவித்தபோது, ஆச்சர்யமடைந்த அந்த மாணவன், ஹிந்தி பேசத் தெரியாமல் நீங்கள் எப்படி இந்திய குடிமகனாக இருக்க முடியும் என்று கேட்டான். பிறகு சிறிது நேரம் கழித்து அவனுக்கு இன்னொரு ஆச்சர்யம்.  “நீங்கள் இந்தியாவில் இருந்துகொண்டு ஹிந்தி பேசத் தெரியாதது போலவே, கருப்பாக இருந்துகொண்டு ஆங்கிலம் பேசுவதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்ற அந்தப் பையன் ஒரு பாசிச கருத்தாக்கத்தின் அப்பாவியான பிரதிநிதி.  

இத்தகைய இறுக்கமான சூழல் நிலவி வந்ததாலோ என்னவோ, ஹிந்தி கற்றுக் கொள்ளவே கூடாது என்று முடிவு செய்தேன்.  ஒரு சிறிய நஷ்டம்தான் அது என்றாலும் கூட.  ஹிந்தி பேசா விட்டால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது போன்ற அறிவை விட்டு மிக அதிக தூரம் விலகி நிற்கும் காரணங்கள் எல்லாம் இங்கே கதைக்கப் படுகின்றன. ஹிந்தி தெரியாவிட்டால்  இந்தியாவின் பிற பகுதிகளுக்கு சென்று வருவதில் ஏகப்பட்ட சிரமங்கள் என்பதான அபிப்பிராயங்களுக்கு என்னிடம் எந்த மதிப்பும் இல்லை.  கடந்த இருபத்தைந்து வருடங்களாக இந்தியாவின் வட, மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுற்றியிருக்கிறேன்.  எந்தத் தருணத்திலும் மொழி குறித்த நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டதில்லை.  எல்லாவிடத்திலும் ஆங்கிலம் மூலமாக என்னுடைய தேவைகளை, விசாரிப்புக்களை என்னால் சாதித்துக்கொள்ள முடிந்திருக்கிறது.  இன்னும் சொல்லப் போனால், ஆங்கிலத்தில் உரையாடியதாலேயே எனக்கு வட இந்தியரிடம் பல சமயங்களில் அதிகமான பிரியமும் சகாயமும் கிடைத்திருக்கின்றன.  

பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சார பீரங்கிகளும் அதன் தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோடியும் ஹிந்தியின் தனிச் சிறப்பைப் பற்றி மேடைகளில் உரக்க பேசுவதால் பிரயோஜனம் எதுவும் சேர்வதாகக் காணோம்.  ஹிந்தியை வைத்துக் கொண்டு வட இந்தியாவையே இணைக்க முடியக் காணாததால் இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க முடியும் என்ற கனவைத் தவிர்த்துவிட்டு, அவர்கள் ஹிந்தியில் படைப்பாக்கங்கள், மொழிபெயர்ப்புகள், ஹிந்துஸ்தானி இசை, நிகழ்த்துக் கலைகள் ஆகியவையைப் பேணுவதில் கவனம் செலுத்தலாம். குறைந்தபட்சம் சில நூறு நல்ல ரசிகர்கள், வாசகர்களாவது ஹிந்தி மொழிக்கு கிடைப்பார்கள்.  

இன்று தாய்மொழிகள் தினம் [பிப்ரவரி 21] என்ற தகவலை ஆழி.செந்தில்நாதன் தெரிவிக்கிறார்.  ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இன்று எடுத்துக் கொள்ள நிறைய சபதங்கள் இருக்கின்றன.

நகரும் எழுத்து

|
'குறுக்குவெட்டுகள்' 
அசோகமித்திரனின் 'குறுக்குவெட்டுகள்' எனும் கட்டுரைத் தொகுப்பை நேற்று படிக்க முடிந்தது. மிகவும் அண்மையில் வெளியாகியுள்ள இந்த தொகுப்பில் ஆசிரியர் மூன்று தலைப்புக்களின் அடிப்படையில் ஐம்பத்தாறு கட்டுரைகள் எழுதியுள்ளார். எல்லாமே பல இதழ்களில் 2006க்குப் பிறகு வெளியானவை. முதல் தலைப்பு 'இயல் இசை நாடகம் சினிமாவும்'. அடுத்தது 'ஆடிய ஆட்டமென்ன?' கடைசியாக 'சில நூல்கள்'. 85 அகவைகள் பூர்த்தி செய்துள்ள அசோகமித்திரன் அவர்கள் தனது பதின்மத்தில் ஹைதராபாத்தில் தீவிரமாக கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. நாற்பதுகளில் தொடங்கி அறுபதுகள் வரையிலான கிரிக்கெட் புள்ளி விவரங்கள் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பற்றிய தகவல்கள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. அப்புறம், தேவ் ஆனந்த் பற்றிய கட்டுரை அபாரமாக வந்திருக்கிறது. இரண்டொரு செவ்விகளும் உள்ளன. ஒரு விட்டேத்தியான படைப்பு மொழி இவருக்கு இயல்பாகியிருக்கிறது. எனக்குத் தெரிந்து, இதன் அடிப்படையில் இவருக்கு மிக அருகில் வருபவர் வண்ணநிலவன் மட்டும்தான். இவர்களது வாழ்க்கையில் இதற்கு விடை இருக்கலாம். ஒரு மிகத் தேர்ச்சியான biographer இதன் மர்மத்தை அவிழ்த்துவிட முடியும். இந்த புத்தகத்திலிருந்து சில மேற்கோள்கள் தர ஆசை.

[1] "ஒரு புத்தகத்தை ஒருவர் படித்து ரசிக்க அதற்கெனப் படிப்பு, பயிற்சி எல்லாம் தேவை. ஆனால், ஒரு திரைப்படத்தைப் பார்த்து ரசிக்க ஒருவர் எந்தப் பள்ளிக்கும் போய்ப் படிக்க வேண்டாம். ஒரு சாதாரண மூட்டை தூக்கிப் பிழைக்கும் தொழிலாளி கூட திரைப்பட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். உண்மையில் அந்த அனுபவத்தின் உச்சத்தை அடைய படிப்பு, பயிற்சி, சமூக வாழ்க்கைப் பண்பு எல்லாம் தடைகளாகக் கூட அமைகின்றன."

[2] "வரலாறு ஒரு சமயத்தில் ஒரு வீரனுக்குத்தான் வணக்கம் செய்கிறது."

[3] "ஊரின் நினைவுகள்தாம் உங்களை எழுத வைக்கிறதா?"
இருக்கலாம். எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் இருப்பது நல்லது. அந்த வேர் அறுந்துபோய் விட்டது. இப்போது புதிதாக வேர்கள் கண்டுபிடிக்க வேண்டியது இருக்கிறது. சில சமயம் வேர் பிடித்துக்கொள்கிறது. சில சமயம் பிடிப்பதில்லை."

[4] "சிலர் ரொமாண்டிக் தன்மையுடன் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுடைய இயல்பில் எங்காவது ரொமாண்டிசிஸம் இருக்கும்."
[நற்றிணைப் பதிப்பக வெளியீடு, உரூபா 150/-]
----


எஸ்தர்
வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்' படித்த கையோடு அவரின் சிறுகதை தொகுப்பான 'எஸ்தர்' படிக்க ஆரம்பித்து கீழே வைக்க முடியாமல் ஒரே இரவில் முடித்தாகி விட்டது. சில சமயங்களில் உடம்புக்கு சொகமில்லாமல் போவது எவ்வளவு நல்லது!
 
வண்ணநிலவன் வாழ்க்கையின் கறுமையைப் பற்றி மட்டுமே பேசுகிறார். நடுத்தரக் குடும்பத்துக்காரனின் வறுமை ஏழையின் வறுமையைவிட கேவலமானது. ஏழையிடம் மறைக்க எதுவுமில்லை. ஆனால், நடுத்தரக் குடும்பத்துக்காரன் தன்னுடைய வறுமையை மறைத்தாக வேண்டும். வறுமையை மறைக்கிற பொறுப்பு வறுமையை விட கேவலமானது. கிட்டத்தட்ட இந்த தொகுப்பில் உள்ள எல்லா கதைகளிலும் வறுமை ஊடுபாவாக இழைந்துள்ளது.
 
வறுமைக்கு அடுத்தபடியாக, வண்ணநிலவன் அவர்களை எது பாதிக்கிறது? ஒவ்வொருவனும் ஒவ்வொருவளும் தான் கல்யாணம் முடிக்க முடியாதவர்களையே நினைத்துக் கொண்டு, புருஷனோடோ மனைவியோடோ குடும்பம் நடத்துகிறார்கள். நிறைவேறாத காதலின் அவலம் நிறைந்தவைகள் இந்தக் கதைகள். நிறைய கணவன்களும் மனைவிகளும் அவர்களின் துணைகளின் முன்னாள் அன்பர்களைப் புரிந்தவாறே, மிச்சமிருக்கும் குடும்ப வாழ்க்கையை அன்பைக் கொண்டு நிரப்ப முயன்ற வண்ணம் உள்ளார்கள். நமது அன்பானவர்களின் காதல் நம்முடையதும் அல்லவா!

வண்ணநிலவன் தமிழ் நவீன இலக்கியத்தில் மிக முக்கியமானவர். என்னைக் கேட்டால், ஜெயகாந்தனுக்கு நிகரானவர். தன்னை முன்னிருத்திக் கொள்ள தெரியாதவர். ஆனால், காலம் அதைச் செய்யும். இவரிடமும் அசோகமித்திரனிடமும் ஒரு தட்டையான மொழி - ஆங்கிலத்தில் objective அல்லது indifferent என்று சொல்லலாம் - வசப்பட்டிருக்கிறது. இது இவர்களை காலத்தைக் கடந்த உரைநடைக்கு சொந்தமானவர்களாக ஆக்கியிருக்கிறது.

இந்த தொகுப்பில் 'எஸ்தர்' சிறுகதை மிகவும் முக்கியமானது. இந்தக் கதையில் சம்பந்தப்பட்டுள்ளது கருணைக்கொலையா? படித்துவிட்டு சொல்லுங்கள்!
['எஸ்தர்' - வண்ணநிலவன், நற்றிணைப் பதிப்பகம் வெளியீடு, உரூபா 90/-]
----

'இன்றைய காந்தி'
ஜெயமோகன் அவர்களின் 'இன்றைய காந்தி' படித்துக் கொண்டிருக்கிறேன். அளவைப் பொறுத்தவரை, மிகப்பெரிய புத்தகம். காந்திய இலக்கியம் பல்லாயிரம் புத்தகங்களால் ஆனது. இந்திய மொழிகள் அனைத்திலும் எழுதப்பட்டு பல கோடி மக்களால் வாசிக்கப் பெற்றுவரும் காந்திய இலக்கியம், ஆங்கிலத்தில் மிகவும் சிறப்பாக கடந்த ஒரு நூற்றாண்டாக எழுதப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற தொழில்முறை Biographers தவிர, காந்தி என்ற ஆளுமையால் கவரப்பட்டு தங்கள் நாட்டை விட்டு, அவருடனேயே தங்கி அவரை கூர்மையாக அவதானித்து எழுதியவர்களைத் தவிர, அவரின் கொள்கைகள், போராட்டங்கள், வாழ்க்கை. குடும்பம், அரசியல், பின்பற்றிய மருத்துவ முறைமைகள், ஆன்மீகம், உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களைப் பற்றி லட்சக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டாகி விட்ட நிலையில், ஜெயமோகன் காந்தியைப் பற்றி இடதுசாரிகள், மற்றும் தலித்தியர்கள் எழுதிவரும் விமரிசனங்களுக்கு பதிலாக தன்னுடைய புத்தகத்தை வடிவமைத்துள்ளார் என்று முதல் இருநூறு பக்கங்கள் படித்துள்ள நிலையில் தெரிகிறது.
 
ஜெயமோகன் காந்தியைப் பற்றி எழுதியுள்ளதைத்தான் படித்திருக்க முடியும். காந்தியை நேராக அவதானித்திருக்க முடியாது. காந்திக்குப் பிறகான இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர். காந்தியைப் பற்றி மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுதியுள்ளதில் சிறப்பான சில நூற்களைப் படித்துள்ளார் என்பதும், சில காந்தியர்களிடம் தீவிரமான விவாதங்களை நடத்தியுள்ளார் என்பதும், காந்தியத்தை தன்னுடைய உள்ளம் ஆன்மா சார்ந்து புரிந்துகொள்ள முயன்றுள்ளார் என்பதையும் ஒருவாறு அனுமானிக்க முடிகிறது.
 
படித்த வரையில் ஒன்று சொல்ல முடியும். கீழே வைக்க முடியாத நடை. தமிழ் உரைநடையில் ஜெயமோகன் ஒரு முக்கியமான ஆளுமை. விவாதத்தை அடுக்கும் முறை படிப்பவரை ஜெயமோகனின் கருத்துக்களோடு ஒத்துக் கொள்ள வைக்கும். கவனமாகப் படிக்க வேண்டும் இந்த காரணத்தாலேயே. இன்னொரு குறையும் உண்டு. தன்னால் ஒரு பெரிய ஆய்வும், களங்களுக்குச் சென்று முதல் நிலை தரவுகளை எடுக்கவும் ஆர்வம் இல்லை என்றும், தன்னுடைய புத்தகம் தன்னுடைய உள்ளுணர்வாலேயே எழுதப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கும் ஜெயமோகன், மேற்கோள் காட்டியிருக்கும் ஆசிரியர்கள் அனைவருமே உள்ளுணர்வை ஜாக்கிரதையாகத் தவிர்த்து, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவுகளின் அடிப்படையிலேயே எழுதியுள்ளனர் என்பதை நம்மால் கவனிக்கத் தவற முடியாமல் போவதுதான் ஜெயமோகனின் பலவீனமா?
----

PROTOCOLS
செர்கி நிகல்ஸ் என்ற ரஷ்ய பாதிரி 1905-ல் வெளியிட்ட PROTOCOLS என்ற நூலை வாசித்து வருகிறேன். சோவியத் ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட புத்தகம் என்று தெரிகிறது. யூதர்களின் தாரக மந்திரம் என்று இதைச் சொல்ல முடியும். யூதர்களில் ஒரு ரகசிய பிரிவினர் உலகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பதை விலாவரியாக பேசுகிறது. இதை ஹிட்லர் படித்திருக்க வேண்டும். "யூதர்கள் அல்லாதவர்களை" ஒழித்துக்கட்ட முனையும் இந்த சதி வேலை அவருக்கு யூத இன வெறுப்பை அளித்திருக்க முடியும். எனக்கு என்ன அதிசயம் என்றால், இந்த புத்தகத்தின் நிகழ்கால பொருத்தம்.
 
உண்மையிலேயே நான் அதிர்ச்சியில் உறைகிறேன்! இனம், மொழி, நிறம், சாதி போன்ற வேறுபாடுகள் போலியானவை என்ற அறிவு இருந்தாலும் கூட, இப்படிக்கூட மனிதர்கள் சிந்தித்து உள்ளனர் என்ற உண்மை ஜீரணிக்க கடினமானதுதான்.
----

மணப்பாட்டு அலைகள்

| Thursday, February 19, 2015
நல்ல இலக்கியப் படைப்பு என்பது எதைப் பாடுபொருளாகக் கொள்வது என்பதைப் பற்றிய குழப்பம் உலக மொழிகளில் எங்குமே இல்லை.  அன்பு என்பதானது மட்டும் அத்தனை மேன்மையான படைப்புக்களின் கருவாக இதுவரை இருந்துள்ளது.  இனிமேலும் அப்படித்தான் இருக்கும் என்று யூகிக்கலாம்.  எல்லாமே அன்பையே மையமாகக் கொண்டதுதான். சில சமயங்களில் அதிகமான அன்பும், சில சமயங்களில் அன்பே இல்லாமல் இருப்பதும், விலக்கான தருணங்களில் அன்பின் இன்னொரு பரிமாணமுமான வெறுப்புமே உன்னதமான இலக்கியங்களில் மையச் சரடாய் இருந்துள்ளது.  தமிழ் நவீன இலக்கிய படைப்புக்களிலே ஆகப்பெரிய படைப்புகள் என்றவொரு பட்டியலை தீவிரமான வாசகன் எவனொருவன் தயாரித்தாலும் குறிப்பிட்ட சில படைப்புக்கள் அத்தகைய பட்டியல்களில் தவறாமல் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  அத்தகைய ஆக்கங்களில் ஒன்று 1977ல் ராமச்சந்திரன் என்கிற வண்ணநிலவன் கணையாழியில் தொடராக எழுதி வெளிவந்த ‘கடல்புரத்தில்’. 

‘கடல்புரத்தில்’ தமிழ் நாவல் உலகிலேயே மிகவும் விஷேசமான ஒன்று என்று கருதுவதற்கான காரணங்கள் நிறைய.  இதை மிகவும் கனகச்சிதமாக அளவிட்டுச் சொல்வதென்றால் நீண்ட சிறுகதைக்கும் சற்றே பெரியதான, குறுநாவல் வடிவத்திலே மிகவும் சிறியதான ஒரு படைப்பு என்று சொல்லிவிட முடியும்.  ஆனால், இந்த மதிப்பீடு அதன் அளவை அடிப்படையாகக் கொண்டதுதான்.  ஆழத்தை அல்ல.  மனிதர்களில் அடிப்படையில் கெட்டவர்களே இல்லை.  அவர்களிடம் சுரப்பது அன்பு மட்டும்தான்.  அன்பைத் தவிர வேறு ஒன்றுக்கும் இந்த உலகத்தில் மதிப்போ செல்வாக்கோ கிடையாது என்று மணப்பாட்டு கிராமத்திலே உலவுகின்ற அத்துணை கதாபாத்திரங்களும் நம்மிடம் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். வண்ணநிலவன் ஏதோ ஒரு லட்சியவாத கனவோடு இந்த நாவலை எழுதிவிடவில்லை.  பள்ளிப்படிப்பு முடிந்து ஏதேனும் ஒரு வேலையிலே ஒட்டிக்கொண்டுதான் சாப்பிட முடியும் என்ற நிலையிலே கடற்கரை ஓரம் இருந்த தன்னுடைய உறவினரின் சைக்கிள் கடையில் வேலை செய்ய திருநெல்வேலியை விட்டு வெளியேறிய வண்ணநிலவன் எழுபதுகளின் ஆரம்ப வருடங்களில் அந்த கடற்கரை ஊர் மக்களை, மீனவப் பறையர் பெருமக்களை, அவர்களின் கலாச்சாரத்தை, மொழியை, நடப்புக்களை, அந்த மக்களின் சாரத்தை, சோரத்தை மிகுந்த ஓர்மையுடன் கவனித்திருக்க வேண்டும்.  கதாபாத்திரங்களில் எதுவுமே அதீதப் புனைவுத் தன்மையோடு நம்முன் நடமாடவில்லை.  எழுபதுகளின் உலகைப் பற்றி சற்றேனும் பரிச்சயமிருக்கும் ஒருவருக்கு ‘கடல்புரத்தில்’ அந்த நாளைய தன்னுடைய கிராமத்து உறவுகளை, சனங்களை, சாதிகளை, சண்டைகளை, காதல்களை, பிரிவுகளை, கண்ணீரோடு விடைபெற்று விலகிய தோழர் தோழியர் முகங்களை நினைவுபடுத்தித்தான் தீரும்.  அந்த வகையில் ‘கடல்புரத்தில்’ ஒரு காலக்கண்ணாடி.  எழுபதுகளிலே என் பதின்மத்தை தொடக் காத்திருந்த சிறுவனாகிய நான் எனது நெஞ்சிலே அந்நாட்களின் நிழல்களை மீண்டும் காலச்சாளரத்தின் வழியே உற்றுப்பார்த்து தொட்டுத் தடவி உணரும்பொழுது எனது ஊரிலே நடமாடிக்கொண்டிருந்த இரண்டொரு பிலோமிக்களை மனக்கண்ணில் பார்க்க முடிகிறது.

வறுமை கவிழ்ந்த வாழ்க்கையிலே ஒரு இலக்கியத் தன்மை இல்லாமல் போய்விடுமா?  குரூஸ் மிக்கேலின் குடும்பம் வசதிப்பட்ட குடும்பம் அல்ல.  இப்போதெல்லாம் லாஞ்சிக்காரர்களே எல்லா மீன்களையும் சுரண்டிக்கொண்டு விடுகிறார்கள்.  கிடைத்த மீன்களை தன்னுடன் வல்லம் இழுப்பவனான சிலுவைக்கு கொஞ்சம், தன்னுடைய வீட்டுக் கருவாட்டுக்காக கொஞ்சம் என்பது போக மீதியை தரகனாருக்குக் கிரயம் கொடுத்துவிட்டு, ஒரு பாட்டில் கள்ளின் போதையோடு அதிகாலை வீட்டுக்குத் திரும்பும் கிழவன் குரூஸ் மிக்கேலின் மனதில்தான் எத்தனை விதமான கவலைகள்!  இந்த தேவடியா மரியம்மை ஒவ்வொரு சாயந்திரமும் வாத்தி வீட்டுக்குப் போகிறாள்.  செபஸ்தி வல்லத்தையும் வீட்டையும் விற்று காசாக்கி கையில் கொடு என்று நச்சரிக்கிறான்.  இருக்கிற வாத்தியார் வேலை போதாதென்று சாயபோடு சேர்ந்து சைக்கிள் கடை வைக்க வேண்டுமாம் இந்த ஓடுகாலி மவனுக்கு.  மூத்த மகள் அமலோற்பவம் மட்டும்தான் கிழவனுக்கு பொருட்படுத்தத் தக்க  விசனம் ஏதும் தராதவள்.   ஆனாலும் கிறிஸ்துமஸ் பண்டியலுக்கு வந்துவிட்டாள் என்றால் எப்பொழுதாவது வீட்டிலே பெரிய மல்லுக்கட்டாமல் திரும்பியிருக்கிறாளா என்ன?  வீட்டிலிருக்கும் சின்னப் பெண் பிலோமிக்கு நல்ல பையனாய் பிடிச்சுப் போடணும்.  எப்படியாவது தன்னுடைய கடைசி மூச்சு வரை தகப்பன் கொடுத்த இந்த வல்லத்துடனேயே மல்லுக்கட்டி கடலம்மையின் மடியில் மாய்ந்து போக வேண்டும்.  குரூஸ் கிழவனின் ஆசை, கவலை, சந்தோசம் எல்லாமே இவைகள் பொருட்டுத்தான்.

குரூஸ் மிக்கேலின் மகன் செபஸ்தி தனது அப்பா வயசான காலத்திற்குப் பொறவும் தன்னுடைய பழைய வல்லத்தை வைத்துக்கொண்டு ஏன் லாஞ்சிக்காரர்களோடு இன்னும் போராடிக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பவன்.  செய்கிற வாத்தி வேலையிலே வருகிற வருமானம் போதாதென்று பொண்டாட்டி பேச்சைக் கேட்டு சைக்கிள் கடை சாயபோடு கூட்டாளியாக சேர வேண்டும் என்று மனசிலே ஒரு திட்டம்.  இந்த அப்பன் கிழவன் வல்லத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு பணத்தை தன்னிடம் கொடுத்தால் உடனடியாக தானும் ஒரு சைக்கிள் கடை முதலாளியாகி விட முடியாதா?  தான் என்ன அப்பனையும் ஆத்தாளையும் வைத்துக் கஞ்சித்தண்ணி ஊற்றாமல் போகப்போகிறோமா?  இந்த பிலோமிக்குட்டிக்கு தன்னால் ஒரு வரன் பார்த்து முடிக்க முடியாதா என்ன?  செபஸ்தியின் வாழ்க்கை பரிதாபமான ஒன்று. ரஞ்சியை மனதார நேசித்தான்.  தன்னை கடலை விட அதிகமாக நேசித்த ரஞ்சியின் மனது செபஸ்தி முற்று முழுவதுமாக அறிந்த ஒன்று.  ஆனால் ரஞ்சியை கல்யாணம் கட்ட முடிந்ததா என்ன?  உடன்குடிக்காரி கொஞ்சம் வசதியான வீட்டில் இருந்த வந்தவள் என்பதால்தானே ரஞ்சியை மறுக்க வேண்டி வந்தது?  இப்பொழுதும் மணப்பாட்டு மண்ணிலே எப்போதாவது ரஞ்சியை எதிர்பார்க்காமல் சந்திக்க நேர்ந்தால் உடனடியாக கால்கள் கள்ளுக்கடையை பார்த்துத்தானே நடக்கின்றன!  அவளை மறப்பதற்கு கள்ளுதானே மருந்து.  ரஞ்சி என்ற பாரத்தை செபஸ்தி தன்னுடைய ஆயுசுக்கும் நெஞ்சிலே தூக்கிக்கொண்டுதான் திரிந்தாக வேண்டும். 

பிலோமிக்குட்டியின் தோழியும் செபஸ்தியின் ‘முன்னாள் தோழியுமான’ ரஞ்சிதான் எத்தனை சிநேகமானவள்!  ரஞ்சிக்கு எல்லோரையும் தெரியும். எல்லோருடைய மனசையும் தெரியும்.  ரஞ்சி வாழ்க்கையில் ஏமாறவே இல்லை.   உடன்குடிக்காரிக்காக தன்னுடைய பிலோமிக்குட்டியின் அண்ணன் செபஸ்தி தன்னை கல்யாணம் முடிக்காமல் விலகியபோது கூட, ரஞ்சியால் செபஸ்தியை வெறுக்க முடிந்ததா என்ன?  பிலோமிக்குட்டியின் மனசை ரஞ்சி போல அறிந்தவர் வேறு யார் மணப்பாட்டில் இருக்கிறார்கள்?  காதல் எப்படி வரும், எப்படி வளரும், எப்படி விலகும் என்பதை ரஞ்சிதான் பிலோமிக்குட்டிக்கு சொல்கிறாள்!  கல்யாணம் முடித்த பிறகு, தன்னுடைய கணவனுக்கு விசுவாசியாக இருக்கும் ரஞ்சியின் ஹிருதயத்தின் ஏதோ ஒரு மூலையில் இன்னும் செபஸ்திக்கு ஒரு ரொம்ப ஸ்பெசலான இடம் உண்டு.  பிலோமிக்குட்டியின் ரகசியங்கள் எல்லாமே தெரிந்தவள் இந்த ரஞ்சி.  ரஞ்சிக்கு யாரையும் வெறுக்கத் தெரியாது.  கண்களில் மிளிரும் கண்ணீரோடு எந்தத் துக்கத்தையும் விழுங்கத் தெரிந்த இந்த ரஞ்சி, பிலோமிக்குட்டியை தன்னுடைய உயிராக நினைக்கிறாள்.  தன்னுடைய பிரசவத்தின் போதும், அவள் வேண்டுவது பிலோமிக்குட்டியின் அருகாமையைத்தான்.  ஜன்னலின் வழியே புரியாத கவலையோடு எட்டிப்பார்க்கும் கொழுந்தனைப் பார்த்து புன்னகைக்கும் ரஞ்சியின் மனசு அன்பைத் தவிர வேறு எதையும் நினைக்கவே லாயக்கில்லாதது. பிடித்தவர்கள் கூட அன்பின் காரணமாகவே விலக வேண்டி வரும், அப்படி விலகிய மனுசர்கள் கூட மனசுக்கு நெருக்கமாகவே இருக்கிறார்கள் என்பதையெல்லாம் சக ஜனங்களுக்கு சொல்லிக் கொடுத்த வண்ணமே நகருகிறாள் ரஞ்சி.  பிலோமிக்குட்டியின் மனசாட்சி, பிலோமியின் ரட்சகர், பிலோமியின் மீட்பர் என்று என்னவெல்லாமோ சொல்லலாம் இந்த ரஞ்சியைப் பற்றி.  கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும்.  கடல் காற்றின் ஈரம் உலராமல் இருக்கும் வரை ரஞ்சியின் மனசின் ஈரமும் காய்வதாகத் தெரியவில்லை.  ரஞ்சி கடல் அம்மையின் குழந்தை. 

மணப்பாட்டு ஊர்க்காரர்களை அந்தக் காலகட்டத்தில் எந்த ஊரிலும் நாம் சந்தித்திருக்க முடியும்.  கொஞ்சம் கெட்ட பயலுவளும், குடிகார ராஸ்கோலுகளும், நாட்டாமை பாட்டையாக்களும், உடம்பே கண்ணாக இருக்கும் பெரும் கிழவிகளும் எந்த ஊரில்தான் அப்பொழுது இருக்கவில்லை!  குரூஸ் மிக்கேலின் பக்கத்து வீட்டுக்காரன் ஐசக்.  தனது மனைவி கேதரினை கல்யாணமான புதுசில் ரொம்பவும் கொஞ்சியது உண்டுதான்.  ஆனால், ஒரு பிள்ளைக்குப் பிறகே அற்றுப்போய் விட்ட கேதரின், அடுத்த பிரசவத்தில் பாதி உயிராய்ப் போய் விட்டாள்.  ஆஸ்பத்திரி நர்சால் ‘அடுத்த குழந்தைக்கு உசிரு தங்காது’ என்று மிரட்டப்பட்ட கேதரின், தனது மிஞ்சியிருக்கும் வாழ்நாளை ஐசக்கின் வெறுப்புக் கனலில் வெந்து கழிக்கிறாள்.  ஐசக் தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டு திட்டும்போது, திராணி இல்லாதவள் திட்டு வாங்க வேண்டியுள்ளதே என்ற இரக்கமே நம்மில் சுரக்கிறது.  தன்னுடைய பெரிய லாஞ்சியைக் கொண்டு குரூஸ் மிக்கேலுக்கு பிரமிப்பைத் தந்து பிலோமிக்குட்டியை ‘தட்டிக்கொண்டு போக’ வேண்டும் என்று திட்டமிடும் ஐசக்கிற்கான எதிர்காலத்தை வேறு விதமாக திட்டமிடுகிறது விதி.  தன்னுடைய லாஞ்சி எரிவதைப் பார்த்துவிட்ட ஐசக், அதற்கு காரணமான ரொசாரியோவை எப்பொழுதும் தான் வைத்திருக்கும் சூரிக்கத்தியால் குத்தி சாய்க்கிறான்.  பெரிய புகையாக கக்கி கருகும் லாஞ்சியைப் பார்க்கும் ஐசக் தன்னுடைய அத்தனை கனவுகளும் அந்த புகையில் கரியாவது கண்டு சித்தம் கலங்கி சிதைவுற நேர்கிறது. தொடரும் வியாஜ்ஜியத்தில் எதுவும் ஊர்ஜிதப்படாமல் விடுதலையாகும் ஐசக் கலங்கிய சித்தத்தோடு மணப்பாட்டு கடற்கரை மணலில் எங்கோ வெறித்தவாறே அலைகிறான்.  கடல் அம்மையின் நாக்கு அவனைத் தீண்டி உள்ளே இழுத்து ஜீவிதப் போராட்டத்திலிருந்து விடுதலை கொடுக்கும் வரை, மிரளும் கண்களோடு கடலுக்குள் வெறித்தவாறு மணலில் அலையும் ஐசக் வாழ்க்கையின் விடையில்லாக் கேள்விகளில் ஒருவன்.

மணப்பாட்டு கிரமாத்தில் இரண்டு பேருக்கு பைத்தியம் பிடிக்கிறது.  ஐசக் தவிர, குரூஸ் மிக்கேலும் பைத்தியமாகிப் போகிறான்.  இருவரும் கடல் அம்மையையும், தங்களது லாஞ்சு, வல்லம் ஆகியவையையும் உயிராய் நேசித்தவர்கள்.  லாஞ்சு எரியும் கணத்தில் ஐசக் பைத்தியமாகிறான்.  வீட்டையும் வல்லத்தையும் கிரயம் பண்ணிக்கொடுத்து விட்டு, பணத்தைப் பையில் முடிந்து கொண்டு வரும் குரூஸ் மிக்கேல் தன்னுடைய வாழ்க்கையில் எதை மனைவி மகன் மகள் ஆகியோருக்கு மேலாக நினைத்தானோ, அதை தானே கிரயம் கொடுத்து விட்ட நிலையில், அந்த உண்மை உரைக்கும் கணம் சித்தம் கலங்கி வீழ்கிறான்.  எவ்வளவு பெரிய வீழ்ச்சி!  குரூஸ் மிக்கேல் கடலையும் வல்லத்தையும் தவிர வேறு எதுவும் தெரியாதவன்.  ‘வாத்தி’ ஆகிவிட்ட தன் மகன் செபஸ்தி வல்லத்தைப் பற்றி கேவலமாகப் பேசும்பொழுது துடித்துப் போகும் குரூஸ், வீட்டோடு வல்லத்தையும் விற்ற நிமிடத்தில், தன்னுடைய எல்லா நியாயங்களுக்கும் எதிரான ஒரு காரியத்தை தானே செய்துவிட்டதை உணர்கிறான்.  தன் எதிரே இருக்கும் காலத்தில் வெளிச்சத்தின் எந்த சாத்தியமும் இல்லை என்ற தரிசனத்தைக் கண்ணுற நேர்ந்த பொழுது, அவனுக்கு இருட்டிக் கொண்டு வருகிறது.             

‘கடல்புரத்தில்’ நாவல் நமக்கு காலத்தால்  முந்தி நிற்கும் இரண்டு ஞானிகளை காட்டுகிறது.  ஒன்று மரியம்மை – குரூசின் மனைவி.  இரண்டாவது, மரியம்மையின் ‘வாத்தி’.  வயசாகிப் போன பின்னும் பவுடர் மேல் அலாதிப் பிரியம் வைத்திருப்பவள் மரியம்மை.  வீட்டின் முன் திண்ணையிலேயே ஆண்டுக்கணக்கில் தன் ஜீவித தேவைகளை முடித்துக் கொள்ளும் புருஷன் குரூஸை மரியம்மை பெரிதாக பொருட்படுத்துவதில்லை.  அடித்துப் போட்ட மாதிரி காலை அகட்டி தூங்கும் மரியம்மை சாயந்திர நேரங்களில் மட்டும் ‘வாத்தி’ வீட்டிற்குப் போகத் தவறுவதில்லை. மணப்பாட்டு மனுஷர்களில், ‘கடல்புரத்தில்’ அறிமுகப்படுத்தும் மனுஷர்களில், மரியம்மை மட்டும் வாழ்க்கையின் மீது தீராத காதல் கொண்டிருப்பவள்.  ‘வாத்தி’ மீதும்தான்.  புருஷனையும் வெறுப்பவள் அல்ல.  வாத்திக்கும் மரியம்மைக்கும் இருந்த ஏதோ ஒரு தொடுப்பு குரூஸ் மிக்கேலோ, ஊரோ தெரிந்து கொள்ளாததும் அல்ல; அவர்களின் அபிப்பிராயத்திற்கு பெரிய மதிப்பு எதுவும் கொடுப்பவள் மரியம்மையும் அல்ல.  மரியம்மை வாழ்க்கையைக் கொண்டாடுபவள்.  லட்சியவாதக் கனவு எதுவும் இவளிடம் இல்லை.  நாவலின் ஏதோ ஒரு சரடு, கல்யாணத்திற்கு முன்பே வாத்தியிடம் சிநேகமாக இருந்தவள் மரியம்மை என்றும், குரூஸ் மிக்கேலைக் கல்யாணம் கட்டிக்கொண்ட பின்பும், ‘வாத்தியின்’ சிநேகம் தீர்ந்து போய் விடவில்லை என்பதிலே மரியம்மை சந்தோஷப்படுபவள் என்றும் வாசகனுக்குத் தெரிவிக்கிறது.  ஒருமுறை, குரூஸ் ‘வாத்தியை’ திட்டியும் விடுகிறான்.  ஆனாலும், மரியம்மையின் சிநேகிதம் ஜன்மத்தில் முடியக்கூடியதா என்ன?  கள் குடித்து விட்டு, மயங்கி விழுந்து அடிபட்டுச் சாகும் மரியம்மை, வாழ்க்கையின் எதிர்பாராமை குறித்த நல்ல காட்டு.  தனக்கு வாழத் தெரிகிற மாதிரி வாழ்வதில் எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் வாழ்பவள் மரியம்மை.  புருஷனையும் நேசிப்பவள்.  புருஷனுக்கு கொடுத்தனுப்பும் சோற்றுக்கு உரைப்பாய் வைக்கிற கருவாட்டை கறுக்கியதற்காக மகள் பிலோமியை ‘பிசாசு மவளே’ என்று வையும் மரியம்மை, புருஷனின் மேலுள்ள தன்னுடைய அன்பைத்தான் வெளிக்காட்டுகிறாள்.

இந்த ‘வாத்தி’யைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது!  அவதார புருஷர் போல, மற்றவர்கள் யாரும் நினைக்க முடியாத உசரத்தில் நடமாடும் அன்பு உரு இந்த ‘வாத்தி’.  தனிக்கட்டை.  வாழ்க்கையில் அவருக்கிருந்த ஒரே பிடிமானம் மரியம்மையின் ‘சிநேகிதம்’.  மரியம்மை செத்துப் போனதிற்குப் பிறகு, கொந்தளிக்கும் கடலில் தத்தளிக்கும் பரிதாப ஜீவனாய் நசிவுறும் ‘வாத்தி’, பிலோமிக்குட்டியின் சிநேகத்தால் கரையேறுகிறார். தன்னுடைய சிநேகதி மரியம்மையின் மகளான பிலோமிக்குட்டிக்கு இரண்டு பிஸ்கோத்துகளை கொடுத்து உபசரிக்கும் வாத்தியின் கள்ளங்கபடமற்ற அன்பில் நெகிழும் பிலோமி, தான் அன்பு செலுத்த, தனக்கு வழிகாட்ட தன் முன்னால் நிற்கும் தேவனாகவே வாத்தியைக் காண்கிறாள்.  வல்லத்தை – வீட்டை – இழந்து சித்தம் சிதைவுற்று நிற்கும் தகப்பன் குரூஸ் – தன்னுடைய அப்பாவின் மிரட்டும் கண்களுக்குப் பயந்து பிலோமிக்குட்டியை விட்டு விலகும் சாமிதாஸ் – எங்கோ இருக்கும் அண்ணன் செபஸ்தி – அக்கா அமலோற்பவம் – இவர்கள் யாரிடமும் தஞ்சம் புக விரும்பவில்லை இந்த பிலோமிக்குட்டி.  வழி தவறிய ஆட்டுக்குட்டியை மீட்பர் கைகளில் ஏந்துகிற அதே அன்போடு, தன்னுடைய சிநேகதி மரியம்மையின் மகளையும், மரியம்மையின் சித்தம் சிதைவுற்று நிற்கும் புருஷனையும் தனது வீட்டிற்குள் அழைத்து வரும் ஒண்டிக்கட்டையான வாத்தி, கடைசியில் தன்னுடைய குடும்பத்தைக் கண்டுபிடித்து விட்டார்.  வாத்தியின் தகுதியை அறிந்த தேவனே இப்படியொரு புதிய ஏற்பாட்டை வழங்கியிருக்க வேண்டும்.

என்ன சொல்வது இந்த பிலோமிக்குட்டியைப் பற்றி!  இந்தக் கருப்பிக்குள்தான் எத்தனை வைரப் புதையல்கள்!  பிலோமிக்கு யாரையுமே வெறுக்க முடியவில்லை.  அப்பனோடு சண்டை பிடிக்கும் அண்ணன் செபஸ்தி – எப்போதும் தன்னைக் கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டே இருக்கும் அம்மா மரியம்மை – ஒவ்வொரு பண்டியலுக்கும் வந்து சண்டை கட்டும் அக்கா அமலோற்பவம் – தன்னை சமயம் பார்த்து ‘தட்ட நினைக்கும்’ பக்கத்து வீட்டுக்காரன் ஐசக் – ஏதோ ஒரு அசந்த நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து தன்னை எடுத்துக்கொண்ட பிரியத்திற்குரிய சாமிதாஸ் – பாட்டனார் தாசையா – தன்னுடைய உசுருக்கும் மேலான ரஞ்சி – தரகனார் – அம்மாவின் சிநேகிதர் ‘வாத்தி’ – அமலோற்பவத்தின் குஞ்சுகள் – எல்லோரையும் மாய்ந்து மாய்ந்து நேசிக்கும் இந்த பிலோமிக்குட்டியை நினைத்தாலே தொண்டையில் பந்து போன்ற ஏதோ ஒன்று அடைக்கிறது.  தேவனின் அன்பை தன்னுள் முழுதாக உணர்ந்தவள்.  அதை அப்படியே பிறருக்குத் தருபவள்.  வெறுப்பையே அறியாதவள் இந்த மனப்பாட்டுச் சிறுக்கி.  தன்னுடைய அம்மா மரியம்மைக்கும் வாத்திக்கும் இருந்த சினகத்தின் மீது எந்த வெறுப்பையும் காட்ட முடியாதவளாக, அந்த வாத்தியையே தன்னுடைய சிநேகதனாகவும் நினைக்கும் இந்த பிலோமி, எங்கிருந்து கற்றுக் கொண்டிருப்பாள் இந்த தீராக் காதலை?  மணப்பாட்டுக் கறுப்பியான இவள், தனது குழந்தமையில், முடியாக மோகத்தோடு பூமியை தொடர்ந்து தனது அலைகளால் தொட்டுத் தடவும் கடலை மணிக்கணக்காக பார்த்துப் பழகியவள் என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.  இவள் கடற்கரையில் நின்றிருந்த நேரங்களில், பக்கத்தில் ரஞ்சியும் நிற்கப் பார்த்ததாக மணப்பாட்டு ஜனங்கள் சொன்னால், அதை நம்ப ரொம்ப நியாயமிருக்கிறது. 

முப்பத்திரண்டு வருடங்களாக வாசிக்கிறேன்.  ஆயிரத்திற்கும் அதிகமான  நாவல்கள். ஆங்கிலத்திலும் தமிழிலும்.  இன்னும் சொல்லப் போனால், தமிழ் நாவல் இலக்கியம் மிகச் சிறிய வரலாறே கொண்டதால், அதன் ஜீவ நாடியை உணரும்படியாக இருப்பதாக சொல்லப்படும் முக்கியமான நாவல்களை எல்லாம் கிட்டத்தட்ட வாசித்தாகி விட்டது என்ற நிலையில், என்னை உலுக்கி உணர்வை பெரும் அதிர்வுக்குள்ளாக்கி, படைப்பின் உன்னதத்தில் கரைந்து நெக்குருகி அழுது, உணர்ச்சியின் எல்லையில் ஆன்மா கசடறுத்து ஸ்படிகமாக மிளிர்ந்து, ஒரு பெரிய மலை உச்சியில் வீசும் பரிசுத்தமான காற்றை சுவாசித்தபடிக்கு தன்னை மறக்கும் அபூர்வமான தருணங்களை கடந்த பல வருடங்களில் ‘கடல்புரத்தில்’ போன்று வேறு எந்த படைப்பும் எனக்கு அருளியதில்லை.   

வண்ணநிலவன் ‘கடல்புரத்தில்’ ஆசிரியர் என்று அறியப்படுபவர்.  இவர் வேறு எதையும் எழுதத் தேவையிருக்கவில்லை.  எழுதியிருக்க வேண்டியதில்லை.  எத்தனை ஆயிரம் பக்கங்களில் இவர் சொல்ல விரும்பும் சேதி, ‘கடல்புரத்தில்’ என்ற நாவலின் நூறு பக்கங்களில் சொல்லியாகிவிட்டது. 

இந்த நாவலின் மொழி அதி நுட்பமானது.  மணப்பாட்டுக் காரர்களின் பாஷை பரிசுத்தமாக பிரதியில் வந்துள்ளது தனி விசேஷம். மணப்பாட்டுக் காரர்கள் காதல் செய்கிறார்கள்.  சோரம் போகிறார்கள்.  சிரிக்கிறார்கள்.  துக்கிக்கிறார்கள். விரோதிக்கிறார்கள்.  திரண்டு வரும் உணர்வலைகளை மௌனத்தால் அடக்கி நகர்கிறார்கள்.  கெட்ட வார்த்தைப் பேசுகிறார்கள்.  மேன்மையாகப் புழங்குகிறார்கள்.  நட்பு உண்டு,  துரோகமும் உண்டு அவர்களிடம்.  தேவனின் விசுவாசிகளாக இருக்கிறார்கள்.  நம்மால் முடிந்தவைகளாகவும், முடியாதவைகளுமாய் கண்முன்னே வாழ்கிறார்கள்.

வண்ணநிலவன்!  தமிழில் இதைவிடப் பெரிதாய் இன்னும் ஒரிரு நூற்றாண்டுகளுக்கு யாரும் சாதித்து விட முடியும் என்று சத்தியமாகவே நினைக்க முடியவில்லை.

உங்களுடைய எழுதும் விரல்களை முத்தமிட ஆசையாய் வருகிறது.