பெர்லின் சுவரும் மெட்ராஸ் சுவரும்

| Sunday, January 4, 2015
நிறைய பேர் பார்க்கச் சொல்லியிருந்தார்கள் அந்தப் படத்தை. என்னவோ தமிழ்ப் படம் கடந்த பல வருடங்களாகவே பார்க்க முடிவதில்லை. இதை fashion கருதி எல்லாம் சொல்லவில்லை. நான் தமிழ்ப் படங்கள் பார்ப்பதில்லை என்பதும், ஆங்கிலப் படங்கள் நிறைய பார்க்கிறேன் என்பதும் ஒன்றுக்கொன்று ரொம்பவும் சம்பந்தப்பட்டவை. பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் genre specific என்பதால் உணர்வு ரீதியாக அடிக்கடி ஊஞ்சலாட வேண்டியதில்லை. செய் நேர்த்தி ஆங்கிலப் படங்களில் ஒப்பிட முடியாத அளவு அதிகம். ஆங்கிலப் படங்களுக்கு போலிப் பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த மூன்றாந்தர ஒப்பனைகள் இல்லை. அதிகப்படியான ஆங்கிலப் படங்கள் சிறுகதைகள் போன்றவை. ஒரு உணர்வு மாற்றம், நிகழ்வு மாற்றம், தொலைந்ததை கண்டுபிடித்தல் என்பது போன்ற சிறுகதைகளுக்கான விடயங்களே நிறைய ஆங்கிலப் படங்களின் கரு. 

தமிழ்ப் படங்கள் இதிலிருந்து பெரிதும் வேறுபட்டவை. Bildungsroman முறையிலேயே இங்கு படங்கள் எடுக்கப் படுகின்றன. எந்தப் படமும் எந்தப் படத்திலிருந்தும் வித்தியாசமாக இல்லை. யாரோ ஒருவரின் புகழ முடியாத புத்திசாலித்தனம் படம் முழுவதும் துருத்திக் கொண்டே இருக்கும். 'கதாநாயகத் துதி' இங்கு ஏற்பாடாகவே நடக்கிறது. முகமூடிகளைக் கலைந்த நிலையில் ஆண் பெண் உறவுகள், அதில் பொதிந்து கிடக்கும் உலகளவு சூட்சுமங்கள், பொருளாதார - கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் நிகழ்ந்துள்ள உறவுச் சிக்கல்கள் அல்லது சுவராஸ்யங்கள், கட்டுடைப்புக்கள், உளச்சிதைவுகள், உலகக் குடிமகனான தமிழ் இளைஞன் - யுவதி ஆகியோரின் பண்பாட்டு வேர்களால் அவர்களுக்குள் தம்மை அடையாளம் காணமுடியாமை, சேருதல் - விலகுதல் குறித்த பொய்மைகள் மற்றும் மெய்மைகள், எதுவாக இருந்த வீடு எதுவாக ஆகியிருக்கிறது, தலைவன் பதவி பறிக்கப்பட்ட நிலையில் தகப்பனின் ராஜினமா - என்று ஆயிரமாயிரம் விடயங்கள் இருக்க, நமது தமிழ்ப் படங்கள் குறிகளை மட்டுமே மறைத்த ஆடையில் இருந்து காதலனை குறிவைக்கும் காலேஜ் போகும் பெண்களைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. கதாநாயகனும் வில்லனுடன் சண்டை போட்டுக்கொண்டே தனது கையால் காதலி மறைத்திருக்கும் ஆடையை திறந்து பார்க்கும் வித்தையை முயற்சித்த வண்ணம் இருக்கிறான். 


இந்த நிலையில்தான் நான் 'மெட்ராஸ்' பார்க்கும் படி ஆனது. விடியோவில்தான். 2015-ன் முக்கியமான படங்களில் ஒன்று என்றெல்லாம் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. படம் பார்த்த பிறகும், சொல்லப்பட்டது சரிதான் என்று படுகிறது. தமிழில் இந்த வருடத்திய சிறந்த படம் 'மெட்ராஸ்' என்பது உண்மையாக இருப்பதுதான் வேதனை. இது மற்ற படங்களின் விமரிசனமாகவும் ஆகிறது. வட சென்னை பின்புலம், அங்கு நிலவும் குறு நில அரசியல், அது சார்ந்த தகராறுகள், கொலைகள், படிக்காத இளைஞர்கள் மத்தியில் இருக்கும் காதல், நட்பு என்பதையெல்லாம் இன்னும் எத்தனைப் படங்களில் காட்டிக் கொண்டிருக்கப் போகிறோம்? அரசியல்வாதிகளால் நாசமாய்ப் போன குடும்பங்களைப் பற்றிய படங்கள் தமிழில் வந்ததில்லையா? 'இன்று நீ நாளை நான் " என்ற படம் எனக்கு நினைவு வருகிறது. சி.ஏ.பாலன் அவர்கள் எழுதிய 'தூக்கு மர நிழலில்' என்ற குறுநாவலை மேஜர் சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். புற அரசியல் ஏற்படுத்தும் அகச் சிக்கல்களை நுண்ணியமாக சினிமாப்படுத்தியிருந்தார் அதில். பாலச்சந்தரின் 'தண்ணீர் தண்ணீர்', கோமல் சுவாமிநாதனின் 'ஒரு இந்தியக் கனவு', பாரதிராஜாவின் 'என்னுயிர்த் தோழன்' போன்ற படங்கள் கட்சி அரசியல் தனி மனிதனின் மேல் இயக்கும் எதிர்மறை ஆளுமையைத்தான் பேசின, 'மெட்ராஸ்' படத்தை விட மிக வலுவாகவே. 'அச்சமில்லை அச்சமில்லை' மற்றும் 'ஒரு கைதியின் டைரி' போன்ற படங்களும் இதையே பேசின. 

வட சென்னை பின்புலம் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு பதில் என்னவாக இருக்கும்? அந்த நிலக் களன் எனக்கு அறிமுகமில்லாதது. ஆனால் இந்தக் காரணம் மட்டும் போதாது. ஒரு நல்ல டாக்குமெண்டரி இந்த வேலையை இதை விட சிறப்பாக செய்யும். கதா நாயகன் அரசியல் தெளிவுள்ளவன் என்று கூறப்பட வில்லை. அவனின் நண்பன், கொலையுண்டு போகிறவன், பெரிய அரசியல் லட்சியம் எதுவுமில்லாதவன். மூன்று பெண்கள் பிரதானமாக நிறுத்தப்படுகிறார்கள். நாயகி, கொலையுண்டவனின் மனைவி, நாயகனின் அம்மா. நாயகி காதலனை விடாப்பிடியாக காதலிக்க வைக்கிறாள். அதற்கு மேல் அவளுக்குத் தெரியவில்லை. அடுத்ததாக, கொலையுண்டவனின் மனைவி, கணவனுடன் வாழ்ந்து அவன் கொலையுண்ட பின் பிணத்தின் மீது விழுந்து அழுது தன் பாத்திரத்தை முடித்துக் கொள்கிறாள். கடைசியாக, கதாநாயகனின் அம்மா. இது மற்ற இரண்டு பாத்திரங்களை விட கொஞ்சம் சிறப்பானது. காலிப் பசங்களுடன் சுற்றிக் கொண்டு திரிந்தாலும், தன் மகன் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்வது பற்றிய பீற்றலை சரியாக காண்பிக்கிறாள். வசதியான இடத்தில் பெண் எடுக்க வேண்டும் என்பதில் ஆரம்ப காட்சிகளில் தெளிவாக இருக்கிறாள். பிறகும் அவளுக்கும் படத்தில் இடமில்லை.


அடுத்ததாக, 'மெட்ராஸ்' படத்தில் வரும் ஒரு பெரிய சுவர். சுவரில் வரையப் பட்டிருக்கும் ஜெயபாலன் அவர்கள் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் சுவற்றோவியமாக இருந்து கொண்டே அற்புதமாக நடிக்கிறார். படத்தின் பாராட்டும்படியான ஒரே நடிகர் இவர்தான். சுவர் ஒரு குறியீடாக பயன்படுத்தப் படுகிறது. இங்கு சுவர் என்பது அரசியல் அதிகாரம். அதை யார் கைப்பற்றுவது? ஒரு தலைமுறையைத் தாண்டி அதிகாரத்தின் குறியீடாக அந்தப் பகுதியில் இருக்கும் சுவர் இன்னும் என்ன மாதிரியெல்லாம் அந்த மக்களுக்கு சங்கடங்களைத் தந்திருக்கும்? வெறும் இரண்டு குழுக்களின் பிரச்சினைக்கு உரிய சொத்தாக அதை மாற்றியிருப்பது கற்பனை போதாமைதான். Roman Polanski-யின் The Pianist படத்தில் பெர்லின் சுவர் எதன் எதன் குறியீடாகவெல்லாம் நிற்கிறது என்று ஞாபாகப்படுத்திக் கொள்ளும் போது, 'மெட்ராஸ்' படத்தில் சுவர் வெறும் ரவுடிகளின் வரப்புக் குறியாக நின்று விடுவது சிறப்பல்ல. 

இந்தப் படத்தின் இயக்குனருக்கு இது முதல் படமா? ஆனால், நிச்சயமாக இளைஞராகத்தான் இருப்பார். ஒன்றே ஒன்று இவர் சொல்லலாம். "கோடம்பாக்கத் தளத்தில் என்னால் இப்போது இவ்வளவுதான் செய்ய முடியும்." என்னுடைய காட்டம் இவர் மேல் அல்ல. இந்தப் படத்தைக் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகன் மீதுதான். நிறைய படங்கள் நம்மை பிரமிக்க வைக்க, சிந்திக்க வைக்க, இயலாமையால் அழ வைக்க விடியோக்களில் காத்திருக்கும் போது, சில காட்சிகளில், தமது ரசனைக் குறைவால், விசிலடிக்க வைக்கும் தமிழ் சினிமாவிலேயே தங்கி விட்ட விசிலடிச்சான் குஞ்சுகளை எப்படிக் கரையேற்றுவது?

0 comments:

Post a Comment