திண்ணை 8

| Sunday, November 30, 2014


நவம்பர் 16, 2014

நேற்று இரவு தந்தி டிவியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் சீமானிடம் ரங்கராஜ் பாண்டே நிறைய கேள்விகள் கேட்டார். இலங்கை விடயத்தில் நிறைய ஈடுபாடும் ஆராய்ச்சியும் இல்லாது இருப்பின் பாண்டேவின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்வது கடினம். முக்கியமாக, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் இப்போதுதான் இந்தியா வந்து விட்டுச் சென்றிருக்கும் சூழலில், அவர் தெரிவித்திருக்கும் பல கருத்துக்கள் தமிழ் நாட்டில் வசிக்கும் மக்களை, அவர் தெரிவித்ததுதான் முழு உண்மையோ என்று யோசிக்க வைத்திருக்கும் வேளையில், சீமான் இலங்கையிலேயே இன்றும் உயிர்த் துடிப்புடன் இருக்கும் மாற்றுக் கருத்துக்களைப் பற்றி ஆதாரத்துடன் சொன்னது, இலங்கை ஒன்றும் நாம் நினைப்பது போல நமக்கு அருகில் இல்லை என்று உணர்த்தியது. கிட்டத்தட்ட நாற்பைத்தைந்து நிமிடங்கள் நீடிக்கும் இந்த செவ்வியில் இலங்கையின் மறைக்கப்படும் அரசியல் பற்றி பேசப்படுகிறது. கேள்வியாளர் பாண்டேவின் பல கேள்விகள் சீமானின் உணர்வை சீண்டுவதாகவே இருந்தாலும், சீமான் ஒரு நொடி கூட யோசிக்காமல் பதிலிறுத்தது, அவர் இலங்கை விடயத்தில் மிகவும் updated ஆக இருப்பதை பிரதிபலித்தது. இந்த செவ்வி இன்று இரவு எட்டு மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.

-----

நவம்பர் 16, 2014

S V RAJADURAI
இன்று தி ஹிந்து தமிழ் பதிப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் திரு ரவிகுமார் அவர்கள் சமீபத்தில் மறைந்த தில்லி ஜவஹர்லால் நேரு சர்வகலா சாலை பேராசிரியர் பாண்டியன் அவர்களைப் பற்றி ஒரு அஞ்சலிக் கட்டுரை எழுதியுள்ளார். கடந்த ஒரு வாரமாக பாண்டியன் அவர்களைப் பற்றி நிறைய அஞ்சலிக் கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனக்கென்ன தோன்றுகிறதென்றால், இவர்களெல்லாம் பாண்டியன் அவர்களைப் பற்றி எழுதுவதை விட, பாண்டியன் நம்மை விட்டுச் சென்றிருக்கும் இந்த வேளையில், திரு.எஸ்.வி.ராஜதுரை அவர்களும் வ.கீதா அவர்களும் தில்லி பேராசிரியரைப் பற்றி எழுவார்களேயானால், அது மிகவும் பொருத்தமாக இருக்கும். திராவிட இயக்கங்கள், பெரியார் போன்ற பெரும் தலைப்புக்களில் பாண்டியன், எஸ்.வி.ஆர்.. வ.கீதா ஆகியோர் குறிப்பிடத் தகுந்த ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். பெரியார் தலித் இன சமூக, சிந்தனை விடுதலைக்கு எவ்வித எண்ணத் தொய்வுமின்றி உழைத்தவர் என்ற கருத்தில் திரு.ரவிக்குமார் போன்றவர்களுக்கு இருக்கும் ஆட்சேபத்தை மேற்சொன்ன மூவரும் தக்க ஆதாரங்களுடன் மறுத்திடும் ஆய்வுப் புலம் நிறைந்தவர்கள். இந்தக் காரணம் ஒன்றின் பொருட்டே, பாண்டியன் இறந்து பட்டிருக்கும் இந்த நாட்களில், எஸ்.வி.ஆர். மற்றும் வ.கீதா அவர்களிடமிருந்து பாண்டியன் அவர்களைப் பற்றிய ஒரு அஞ்சலிக் கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.

----

நவம்பர் 16, 2014

எழுத்தாளர் த.ஜெயகாந்தனைப் பற்றி அவரது திருப்பத்தூர் நண்பர் திரு.குப்புசாமி அவர்கள் தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில் சனிக்கிழமை தோறும் எழுதி வருவது சிறப்பாக உள்ளது. தமிழ் எழுத்துலகின் போக்கை ஜெயகாந்தன் போல பாதித்தவர்கள் வேறு எவரேனையும் என்னால் நினைவு கூற முடியவில்லை. மிகவும் ஆணவம் பிடித்தவர், கலை நுட்பங்கள் இல்லாதவர், சாதீய அடையாளங்களை வேண்டுமென்றே முன்னிலைப் படுத்தியவர் போன்ற பல குற்றச் சாட்டுக்கள் அவர் மீது அவரின் விமர்சகர்களால் சுமத்தப்பட்டாலும், தமிழ்க் கதையுலகு அது சார்ந்த சமூகத்தின் போக்குகளை, பொக்கைகளை, சோரங்களை, அவலங்களை வேறு யாரும் வெளிக் கொண்டுவர கனவிலும் நினைத்திராத பொழுதுகளில், மலை உச்சியின் மீதேறி அடைத்துக் கொண்ட காதுகளிலும் திராவகமாய் இறங்கியவர். பின் நாட்களில் சமரசம் செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. எழுத்தையும், எழுதுபவனையும் ஒரு சேர பார்ப்பதால் விளையும் பிரச்சினை இது. அவர் எழுதியது உண்மை. அந்த எழுத்துக்கள் அக்கினியாக இருந்தது உண்மை. ஜெயகாந்தனைப் பொறுத்த வரையில் அவர் வாழ்வையும் எழுத்தையும் தனித்தனியாக பார்க்க வேறு வேறு வண்ணங்கள் விரியும். இரண்டுமே கவித்துவமானவை. அவரை நெருக்கமாக பல தசாப்தங்கள் அறிந்தவர் என்ற வகையில், திரு குப்புசாமி ஜெயகாந்தனின் ஆளுமையின் நுண்ணிய பரிமாணங்கள் வெளிப்படும் முறையில் எளிய தமிழில் எழுதி வருவது சிறப்பானது. 


----

நவம்பர் 19, 2014

மதராசாப்பட்டணம்
 

நாலரை மணிக்கு வர வேண்டியவன் மூன்றே முக்காலுக்கே வருகிறான். கீழே காலை வைக்கும் இடத்தில் தூங்கிக் கொண்டிருப்பவனை மிதிக்காமல் லாகவமாக வெளியே வந்து ஆட்டோவைக் கூப்பிட்டால் மீட்டருக்கு மேலே இரண்டு மடங்கு கொடு என்று மிரட்டுகிறான். ஏழு எட்டு ஆட்டோக்களுக்குப் பிறகு கொஞ்சம் மனிதன் போலத் தெரிந்த, தன்னுடைய ஆட்டோவில் பாட்ஷா ரஜினி நெற்றியில் திருநீரோடு இருக்கும் ஸ்டிக்கரை ஒட்டி வைத்திருந்த ஆட்டோ பையனிடம் கிட்டத்தட்ட அழுகுரலில் கெஞ்சியபோது, மீட்டர் காண்பிப்பதை கொடு போதும் என்றதால், உள்ளே உட்கார்ந்து ஒரு மணி நேரத்த்திற்கு பிறகு வெளியேறிய போது, மீட்டர் 250 ரூபாய் என்றது. காசை வாங்கிய போது, பரீட்சையில் முதல் மார்க் வாங்கிய தன்னுடைய மகனை தகப்பன் பார்க்கும் பார்வையில் மீட்டரைப் பெருமிதத்தோடு பார்த்தான். தனது கடைசி பைசாவை இழந்த ஏழை போல நகர்ந்து நண்பனின் அடுக்குமாடி வீட்டிற்கு போனோம். நாலு மணிக்கு வீதி முனைகளில் சிகப்பு பச்சை மஞ்சள் விளக்குகள் வழிகாட்ட நூற்றுக்கணக்கில் வண்டிகள் நகர்வது புதிது என்பதைவிட அதிர்ச்சி என்பதுதான் உணர்ந்ததை சரியாக சொல்வது. நண்பனின் வீட்டில் உபசரணை எப்படி இருந்தது? குடித்தவனின் உடம்பில் ஈ உட்கார்ந்தால் எப்படியோ அப்படி என்று சொன்னால் சரி. நான்கு அல்லது ஐந்து பையன்கள், இருபத்தைந்து வயதிற்குள், வீட்டை விட்டு வந்து வெகு நாட்கள் ஆகியிருந்திருக்க வேண்டும், சவம் போல அசைவற்றும் நினைவற்றும் கிடந்தார்கள். 

---- 

0 comments:

Post a Comment