தகவல்
பெறும் உரிமைச் சட்டம் 2005
[1] முருகன் என்பவர் சேலம்
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு ஒரு புகார் மனுவை அனுப்பினார். ஒரு மாதம்
கழிந்த நிலையில் அந்தப் புகார் மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
என்று கோரி தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுவை அவ்வலுவலகத்தின் பொதுத் தகவல்
அலுவலருக்கு அனுப்புகிறார். இந்த நிலையில் பொதுத் தகவல் அலுவலர் அந்த மனுவை
எங்ஙனம் அணுக வேண்டும்?
தகவல்
பெறும் உரிமைச் சட்டம் 2005-ஐப் பொறுத்தவரை ஏற்கனவே அனுப்பப்பட்ட மனு ஒன்றின் மீது
என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதாக
மனுதாரர் ஒருவர் கோரினால் அது சார்ந்த விவரத்தை அவருக்கு வழங்கத் தேவையில்லை.
தமிழ்நாடு
தகவல் ஆணையம், வழக்கு எண் 7627/விசாரணை/13/2013 (32723/பி/2013) நாளிட்ட 12.05.2015 தீர்ப்பாணையில்
கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
“முறைகேடுகள் குறித்து
நடவடிக்கை எடுக்கக் கோரி உறுப்பினர் செயலருக்கு அனுப்பிய புகார் மனு நாள் 13.10.2012 அஞ்சல் துறை பதிவு எண். A
RT 30298147IN மீது
என்ன நடடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வழிவகை
செய்யப்படவில்லை.மனுதாரர் மேற்படி அலுவலகத்தில் ஆவணங்கள் அடிப்படையில் என்ன தகவல்
இருக்கிறதோ அதைப் பெற்றுக் கொள்வதற்குதகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வழிவகை
செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஒரு புகார் மனுவை அனுப்பி அந்த மனு மீது என்ன
நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் நடவடிக்கை விவரம்,
கோரிக்கை
விவரம் ஆகியவைகளை தகவலாக பெற தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எங்கும்
குறிப்பிடப்படவில்லை. இனி வரும் காலங்களில் மனுதாரர் தனக்கு எந்த தகவல்
வேண்டியிருப்பின் அத்துறையில் நேரடியாக மனு செய்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை
பயன்படுத்திக் கொள்ளும்படி இவ்வாணையம் கேட்டுக் கொள்கிறது.”
மேற்காண்
தீர்ப்பாணையின் அடிப்படையில், ஏற்கனவே அனுப்பப்பட்ட
புகார் / கோரிக்கை மனு ஒன்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றித்
தெரிவிக்கவும், அந்த மனுவின் தொடர்பாக
மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகள் தாங்கிய எந்த ஆவணம் ஒன்றின் ஒளியச்சு
நகலையும் வழங்கிட தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் படிக்கு வழிவகை இல்லை
என்பதை மனுதாரருக்கு தகவலாக வழங்கலாம்.
--------
தகவல்
பெறும் உரிமைச் சட்டம் 2005:
[2] ஏற்கனவே இரகசியம்
அல்லது மந்தணம் என வகைப்படுத்தி வைக்கப்பட்ட தகவல்களை பொதுத்தகவல் அலுவலர்
வெளியிடத் தேவையில்லையா?
ஏற்கனவே
இரகசியம் அல்லது மந்தணம் என வகைப்படுத்தி வைக்கப்பட்ட தகவல்கள் வேறு அடிப்படைகளை
வைத்தோ அல்லது எப்பொழுதும் போல் நடக்கும் செயல்களாகவோ வகைப்படுத்தி
வைக்கப்பட்டிருக்கும். பொதுத்தகவல் அலுவலர் தன்னிடமிருக்கும் அதிகாரத்தினை
பயன்படுத்தி கோரப்பட்டிருக்கும் தகவல் பொது நன்மையின் பொருட்டு
கோரப்பட்டிருக்கிறதா என்பதனை உத்தேசித்து தகவலை வெளியிட வேண்டும்.
--------
தகவல்
பெறும் உரிமைச் சட்டம் 2005:
[3] தகவலைத்
திரட்டுவதற்கும் தகவலை ஒருங்கிணைப்பதற்கும் அமர்த்தப்பட்ட பணியாளருக்கான
செலவீனங்களை மனுதாரரிடம் பொதுத்தகவல் அலுவலர் கோரலாமா?
கூடாது.
அந்த செலவீனங்கள் சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படல்
வேண்டும்.
--------
தகவல்
பெறும் உரிமைச் சட்டம் 2005:
[4] ஏற்கனவே
வெளியிடப்பட்டிருக்கும் ஒரு தகவலைக் கோரி அல்லது வெளியிடப்போகும் ஒரு தகவலைக் கோரி
ஒரு நபர் விண்ணப்பித்திருந்தால் வெளியிடப்பட்டிருக்கும் தகவலைக் குறிப்பிட்டு
தகவலைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுத்தகவல் அலுவலர் கூறலாமா?
கூறலாம்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நோக்கம் தகவலை அனைவருக்கும் வெளிப்படுத்துவது
மட்டுமே. தகவல் கோரும் நபர் தகவலின் பிரதியை கேட்காமல் விண்ணப்பித்திருந்தால்
தகவல் எங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கூறி பொதுத் தகவல் அலுவலர்
முடித்து வைக்கலாம்.
-------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[5] ஒரு நீர்ப்பாசன திட்டம்
அல்லது மின்சக்தித் திட்டம் ஆரம்பிக்கும்பொழுது பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு
கூட்டம் நடைபெறும்பொழுது, ஒரு
குடிமகன் அரசிடம் அத்திட்டத்தைப் பரிந்துரை செய்த அனைத்து பரிந்துரைக்
கடிதங்களையும் கோரி விண்ணப்பிக்கலாமா? அவ்வாறு
விண்ணப்பிக்கும்போது பொதுத்தகவல் அலுவலர் அது இரகசிய அறிக்கையாக அரசால்
வகைப்படுத்தப்பட்டது என்ற காரணத்தைக் கொண்டு தகவல் கூற மறுக்க முடியுமா?
ஒரு
குடிமகன் இம்மாதிரியான திட்டங்களில் பரிந்துரைக் கடிதங்களை கேட்கும்பொழுது அரசு
அதிகாரி எவ்வித மறுப்பும் சொல்லாமல் தகவல் அளிக்க வேண்டும். ஆனால் இம்மாதிரியான
சூழ்நிலைகளில் தகவல் கோரும் விண்ணப்பம் பொதுத் தகவல் அலுவலருக்கு மட்டுமே
அனுப்பப்படல் வேண்டும். கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தும் அதிகாரிக்கு
விண்ணப்பிக்க கூடாது.
-------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[6] தகவல் கோரும் நபர் தான்
கேட்கும் தகவலுக்கான சரியான குறிப்புகள் அவரிடம் இல்லாதபோது, அவர் தான் கேட்கும்
தகவல் கொண்ட கோப்பின் அனைத்து பக்கங்களின் நகல்களை கேட்கலாமா?
இம்மாதிரியான
சூழ்நிலைகளில் தகவல் கோரும் நபர் அக்கோப்பினை பார்வையிட விண்ணப்பிக்கலாம். அவ்வாறு
பார்வையிட்ட பிறகு தான் கேட்கும் தகவல் கொண்ட ஆதாரத்தின் நகலை கேட்கலாம்.
-------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[7] ஒரு பொது அதிகார அமைப்பு
மற்றொரு பொது அதிகார அமைப்பிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவலை பெற
முடியுமா?
முடியாது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவலை பெறும் வசதி இந்நாட்டுக்
குடிமகன்களுக்கு மட்டுமே உண்டு. பொது அதிகார அமைப்புகள் தகவல் அறியும்
உரிமைச்சட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியாது.
-----------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[8] ஒரு துறையின் தலைமை
அலுவலரை பொதுத்தகவல் அலுவலராக நியமிக்கலாமா?
கூடாது.
பொதுத்தகவல் அலுவலருக்கு மேல் ஒரு தலைமை அலுவலர் மேல்முறையீட்டு மனுக்களை
பரிசீலிக்க வேண்டும். எனவே பொதுத் தகவல் அலுவலர் எப்பொழுதும் துறையின் தலைமை
அலுவலருக்கு அடுத்த பணிநிலையில் இருக்க வேண்டும்.
ஒருவேளை
துறையின் தலைமை அலுவலர் பொதுத்தகவல் அலுவலராக நியமிக்கப்பட்டால், அவரை விட பணிநிலையில் மூத்தவரான மற்றொரு துறையின் தலைவர்
மேல்முறையீட்டு அலுவலராக நியமிக்கப்படல் வேண்டும்.
----------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[9] பொதுத்தகவல் அலுவலர்
ஒரு சட்ட அலுவலரா?
இல்லை.
அவரும் மற்ற பணியாளர்களைப் போல ஒருவர். கூடுதலாக பொதுத்தகவல் அலுவலர் பணியையும்
சேர்ந்து கவனிப்பார்.
----------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
பொதுநன்மை
என்றால் என்ன?
[10] பொதுமக்களுக்கு நன்மை
பயக்கும் அனைத்தும் பொது நன்மை ஆகும். பெண்களின் பாதுகாப்புன் பொதுநன்மை ஆகும்.
சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம் ஆகியவை பொதுநன்மை
ஆகும். பொது அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவை பொதுநன்மை ஆகும். பொதுமக்களை
பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாத்தல் ஆகியவை பொதுநன்மை
ஆகும். பொது நீதி மற்றும் ஊழலற்ற சமுதாயம் ஆகியவை பொது நன்மை ஆகும். சட்டத்தின்
வழி நடப்பது பொது நன்மை ஆகும். இம்மாதிரியான விஷயங்களில் எந்தத் தகவலும் இரகசியம்
காக்கப்படாமல் வெளியிடப்படுவதை பொதுத்தகவல் அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[11] தகவல் பெறும் உரிமைச்
சட்டத்தில் தனிநபர் நலனை விட பொதுநலன் மதிப்பு மிகுந்ததா?
ஆம்.
ஒரு அரசு ஊழியர் தன்னுடைய சொத்து விவரங்களை தன்னுடைய தனிநபர் சம்பந்தப்பட்டது
என்று கூறும்போது, ஒரு
பொது அதிகார அமைப்பு அவ்வாறான தகவல்களை தனிநபர் பொருண்மை கொண்டது எனத் தகவல் கூற
மறுக்கும்போது, பொதுத்தகவல்
அலுவலர் அத்தகவலை பொது நன்மையை உத்தேசித்து கேட்கப்பட்டிருந்தால், தகவல் தனிநபர் பொருண்மை
கொண்டதாக இருந்தாலும் தகவலை வெளியிடலாம்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[12] தகவல் பெறும் உரிமைச்
சட்டத்தின் கீழ் தகவலை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டால், தாமதத்திற்கான காரணத்தை
மனுதாரருக்கு வழங்காமல் இருந்தால், பொதுத்தகவல் அலுவலர்
மீது நடவடிக்கை கோர முடியுமா?
முடியும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[13] தகவல் பெறும்
உரிமைச்சட்டத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் தொகையின் தோராய மதிப்பு எவ்வளவு?
Centre for Media Study என்ற நிறுவனத்தின்
மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு
வருடமும் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் இலஞ்சத்தில்
சம்பந்தப்பட்ட தொகையாக ரூ.21,068/- கோடிகள் மதிப்பிடப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டில் பிரதம
அமைச்சராக பதவி வகித்த திரு.ராஜீவ்காந்தி அவர்கள், கிராமப்புற
வளர்ச்சிக்காக செலவிடப்படும் தொகையில் 1 ரூபாயில் சுமார் 17 பைசாக்கள் மட்டுமே
பயனாளிகளுக்கு சென்று சேர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
---------
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005:
[14] வறுமையை ஒழிப்பதும்
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நோக்கமாக சொல்லப்படுகிறது. எவ்வாறு தகவல் பெறும்
உரிமைச்சட்டத்தின் மூலம் வறுமையை ஒழிக்க முடியும்?
அனைத்து
அரசுகளும் தற்போது மிகுந்த பொருட்செலவில் வறுமையை ஒழிக்கும் பணியை மேற்கொண்டு
வருகின்றன. தொழிலாளர்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு
தொழில்களுக்கு அரசால் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வறுமைக்கோட்டிற்கு கீழ்
வாழும் மக்களுக்கு தங்களை பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்திக் கொள்ள வங்கிகள்
கடன்களை அளித்து வருகின்றன. எனவே வழங்கப்படும் உதவிகள் மக்களுக்கு முறையாக
சென்றடைகிறதா என்ற கண்காணிப்பும் மிகுந்த அவசியம். எனவே வறுமை ஒழிப்பில் ஈடுபடும்
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இத்துறைகளில் ஊழல்
நடைபெற்றால், அது
குறித்த தகவல்களை பெறுவதற்கு இச்சட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
----------
0 comments:
Post a Comment