"அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?"

| Monday, May 21, 2018

"அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?"
பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்கள் எழுதி இரண்டாம் பதிப்பாக தற்பொழுது வந்துள்ள "இதுதான் ராமராஜ்யம்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவின் காணொலியைப் பார்க்க வாய்த்தது. தனக்குப் பின்னால் பெரியாரிய சிந்தனைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் வல்லமை கொண்டவர்களாகத் தான் கருதும் மூன்று இளைஞர்களை மேடைக்கு அழைத்திருப்பதாகக் கூறிய சுபவீ அவர்கள், தற்போதைய தேவையாக இப்படியான சித்தாந்த புலமை பெற்றவர்களே தேவை என்றார். மருத்துவர் தாயன்பன், பேராசிரியர் சுந்தரவல்லி மற்றும் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் தலா ஐம்பது நிமிடங்கள் பேசினார்கள்.
இப்போதுதான் முதன்முதலாக மருத்துவர் தாயன்பன் பேசிக் கேட்கிறேன். அவர் தரும் சிந்தனைகளின் கனத்தில் மண்டை சூடேறுகிறது. மிகவும் பரவலாக கற்றுத் தேர்ந்திருப்பது அன்னாரின் சரளமான மேற்கோள்களில் தெரிகிறது. கொஞ்சமும் அலட்டல் இல்லாத பேச்சு. சாதீயத்தை வேரருப்பதின் மூலம்தான் பெரியாரும் அம்பேத்கரும் எதற்காக தங்களின் வாழ்நாள் முழுவதும் உழைத்து வந்தனரோ அதை எட்ட முடியும் என்றார். தமிழர் என்று கொடி பிடிப்பதை விட, திராவிடர் என்றே நம்மை கருதிக் கொள்ள வேண்டும் என்கிறார். ஏனென்றால், திராவிடர் என்கிற பொழுது, சொன்னவன் ஆரியன் இல்லை என்று அர்த்தம். "அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?" என்ற கலைஞரின் பராசக்தி வசனத்திற்கு தாயன்பன் கொடுக்கும் விளக்கத்தில் மெய் சிலிர்க்கிறது. அம்பாள் எப்பொழுதுமே பேச மாட்டாள். பேச வேண்டி வந்தால், சாதிகள் இல்லை என்று சொல்ல வேண்டி வரும்; பிராமணர்கள் உசத்தி இல்லை என்று சொல்ல வேண்டி வரும்; பெண்கள் இரண்டாந்தர பிரஜைகள் இல்லை என்று சொல்ல வேண்டி வரும். மேற்படியான காரணங்களால், எந்தக் காலத்திலும் அம்பாள் பேசவே மாட்டாள்.
இந்த காணொலியைத் தொடர்ந்து YouTube-ல் தாயன்பனைத் தேடினேன். மேலும் இரண்டு கிடைத்தன. அவைகளையும் பார்த்து முடித்த நேரத்தில், அவரைப் பற்றிய, அவரது வாசிப்பைப் பற்றிய, அன்னாரின் கருத்துத் தெளிவைப் பற்றிய வியப்பு பிரமிப்பாக மாறியிருந்தது.
திராவிட - திராவிடர் அரசியலைப் பற்றி அறியும் ஆர்வம் உள்ளவர்கள் இப்படி எங்கிருந்தாவது தொடங்கித்தான் ஆக வேண்டும்.
-------------------------
அன்பின் மொழி
இருபதாண்டுகள் இருக்குமா? இன்னும் அதிகமாக இருக்கும். "மகேந்திரன் பைத்தியம்" பிடித்துத் திரிந்த நாட்கள் அவை. உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, நண்டு போன்ற படங்களை திரும்பத் திரும்பப் பார்ப்பதுதான் வேலை. பொழுதுபோக்குவதற்காக இல்லை. மகேந்திரனை பொழுது போக்குவதற்காகவெல்லாம் பார்க்க முடியாது. வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இவருக்கென பொழுது ஒதுக்கித்தான் பார்க்க வேண்டும். அந்தக் காலங்களில் கல்லூரி என்பதால் பொழுது நிறைய கைவசம் இருந்தது. நண்பர்களைக் கூட்டிக் கொண்டு, அவர்களில் பலர் மகேந்திரனை வெறுத்ததற்கே காரணம் நான்தான், எத்தனை மேட்டினிகள் போயிருப்பேன்!
அந்த நாளைய மற்ற இயக்குனர்களோடு ஒப்பிடும்போது, மகேந்திரன் படங்கள் ரொம்பவும் soft-ஆக இருப்பதாக நான் நினைப்பதுண்டு. சத்தம் அதிகமிருக்காது. பின்னாளில் படமெடுக்க வந்த மணிரத்தினம் படங்கள் மாதிரி காமிரா இரைச்சலாக இருக்காது. சமகாலத்தவரான பாலுமகேந்திரா படங்கள் மாதிரி தேவையில்லாமல் அழகியலில் தோய்த்தெடுத்த சட்டங்கள் இருக்காது. அம்மணமாக - இதுவெல்லாம் நடந்திருந்தால் இப்படித்தான் நடந்திருக்கும் என்பது மாதிரி இருக்கும். என்ன காரணம் என்று தெரியவில்லை. கமலஹாசனை மகேந்திரன் தன்னுடைய எந்தப் படத்திலும் பயன்படுத்தவில்லை. கமலஹாசன் படச்சட்டத்தை இரைச்சலாக்கி விடுவார். தன்னைத் துருத்திக்கொள்ள வேண்டி தன்னுடைய சொந்த புத்திசாலித்தனம் - கடன் வாங்கியது என்று நிறைய சேர்த்தி ஒரு மாதிரி colorful-லாக காட்சிப்படுத்துவார். மகேந்திரனுக்கு இது ஆகவே ஆகாது. இந்தக் காரணமாகத்தான் இருக்க வேண்டும். இது நான் யூகிப்பது. தவறாகவும் இருக்கலாம். என்னவோ, மகேந்திரன் படைப்புலகில் கமலஹாசனுக்கு இடமேயில்லை. Camera consciousness கொஞ்சமும் இல்லாத சாமிக்கண்ணு, வெண்ணிற ஆடை மூர்த்தி, சரத்பாபு, ரஜனிகாந்த், அசுவினி போன்ற நடிகர்களை அதிகமாக உபயோகித்திருக்கிறார். தேவையைத் தாண்டி அதிக புத்திசாலித்தனத்தைக் காட்டிவிடும் சுஹாசினியைக் கூட அறிமுகம் செய்த படத்தைத் தவிர வேறு எந்த தன்னுடைய படைப்பிலும் அவர் பயன்படுத்தவில்லை.
நண்பன் ஒருவன் கொண்டு வந்து கொடுத்த நண்டு படத்தின் சிடி கொஞ்ச நாட்களாக பார்க்காமலேயே கிடந்தது. நேற்றிரவு, ஒரு sudden impulse காரணமாக படத்தைத் துவங்கி ஒரே மூச்சில் பார்த்து முடித்தேன். சிவசங்கரியின் கதைக்கு திரைக்கதை அமைத்து வசனம் மற்றும் இயக்கவும் செய்திருக்கிறார். முதல்முறை பார்த்த போது என்ன உணர்வுகளால் பீடிக்கப்பட்டேனோ அதே போன்ற தீவிரமான உணர்வழுத்தத்திற்கு இத்தனை ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஆட்பட வேண்டியிருந்தது.
லக்னோவிலிருந்து கதாநாயகன் தன்னுடைய தந்தையுடன் ஏற்பட்ட சச்சரவு காரணமாக மெட்ராசில் வேலை வாங்கிக் கொண்டு குடிபெயர்கிறான். ஒண்டிக் குடித்தனம். தன்னுடன் பணிபுரியும் பெண் ஒருத்தியும் அந்த குடித்தன வளாகத்தில் இருப்பதால் அவளுடைய குடும்பத்துடன் உறவு கொண்டாட ஆரம்பித்து, அவளைக் காதலித்து திருமணம் செய்து, பெற்றோருடன் ஒட்ட முயன்று தோற்று, வருந்தி நோயுற்று குழந்தையுடன் மனைவியை விதிவசம் விட்டுவிட்டு மரித்துப் போகிறான். மகனுக்காக ஏங்கி ரயில் நிலையத்திலேயே செத்துப் போகிறாள் அவனுடைய அம்மா. திமிர் பிடித்து அலையும் அப்பாவிற்கு அவனுடைய சாவும் மனநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவனுடைய மனைவி குழந்தையுடன் ஒரு நீண்ட தனித்த நினைவே துணையான வாழ்க்கை ஒன்றிற்கு ஆயத்தமாகிறாள்.
மனிதர்கள் எப்படிப் பிறந்தார்களோ அப்படியே இருக்கிறார்கள். அப்படியே மரிக்கிறார்கள். அன்பு காட்டத் தெரிந்தவன் அதை மட்டுமே செய்கிறான். வெறுப்பு சுலபமாக எவனுக்கு வருமோ அதை அவன் குறைவில்லாமல் தெரியப்படுத்துகிறான். அன்பானவனுக்கு வெறுக்கத் தெரிவதில்லை; வெறுப்பதில் திருப்தியுறும் ஒருவனுக்கு அன்பின் மொழி புரிவதேயில்லை.
மகேந்திரன் தற்போது படங்கள் இயக்குவதில்லை என்பது அவர் மானிடத்திற்கு செய்யும் மன்னிக்க முடியாத அநீதி.

---------------

"Absence of a system is still a system"
நீதியரசர் செலமேஸ்வர் ஓய்வு பெற்றிருக்கிறார். அன்னாரைப் பற்றி இன்றைய (21-5-2018) தமிழ் ஹிந்து நடுப்பக்கத்தில் சிறப்பான கட்டுரை ஒன்று பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அமைப்புக்குள்ளேயே இருந்து கொண்டு கலகக்குரல் எழுப்பி வருபவர்கள் வெளியே இருந்து அப்படியான எதிர்ப்பை தோற்றுவிப்பவர்களின் பங்களிப்பிற்கு கொஞ்சமும் குறையாத வண்ணம், சொல்லப்போனால் மிகவும் அதிகமாகவும் ஆபத்துகள் நிரம்பியதாகவுமான பங்காற்றலை, செய்து வருபவர்கள். அமைப்பின் சௌகர்யத்தோடு அதனுடைய சேவையைத் துய்க்க வருபவர்களிடமே அதன் குறைகளையும் கேடுகளையும் விளக்கி நீர்த்ததை சீராக்கும் பொருட்டு தன்னாலான மேலாக்கங்களை முன்னெடுப்பவர்கள். மேனாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அப்படியானவர். அண்மைக்கால காட்டாக நீதியரசர் கே.சந்துரு அவர்களைச் சுட்ட முடியும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் அவர்களைப் பற்றிய காட்டமான ஆனால் நாகரீகமான விமரிசனங்களை மூன்று சக நீதியரசர்களோடு முன்வைத்த நாள் முதல் ஓய்வு பெற்ற நாள் ஈறாக செலமேஸ்வருக்கு எந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளும் ஒதுக்கப்படவில்லை என்ற போதும், அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தன்னுடைய பணிக்கடமைகளை செம்மையாக ஆற்றி வந்தவர். சர்வ வல்லமை வாய்ந்த அமைப்போடு மோதும் மனத்திண்மை வாய்ந்த மனிதர்கள் நமக்கானப் பாடங்களாகவே வாழ்கிறார்கள். ஆனால் அதே சமயம், அமைப்பிடம் இருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தோடு அதனோடு மோதும் மாற்று அதிகார அமைப்புக்களிடம் ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படியானவர்கள் அமைப்புக்களை விட ஆபத்தானவர்கள். இவர்களிடமிருந்து இதுவரை நான் கவனமாக விலகியே வந்திருக்கிறேன். பிறந்த நாட்டை விட்டு வேறு அடிமை நாட்டின் விடுதலைக்காகப் போராடி அதைப் பெற்றுத் தந்த பிறகு, வெகுமதியாக தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத் தலைமையில் நீடிக்காமல், மீண்டும் வேறொரு அடிமை நாட்டின் விடுதலைக்காகப் போராட வேண்டி நகர்ந்தவனின் வாழ்வு "அதிகார அமைப்பு - மாற்று அதிகார அமைப்பு" என்ற சமன்பாட்டைப் பற்றிய பல்வேறு சூட்சுமங்களை நமக்கு சொல்லிய வண்ணம் இருக்கிறது.
நீதியரசர் செலமேஸ்வர் பற்றிய இன்னொரு செய்தியும் சிறப்பானது. பணி ஓய்விற்குப் பிறகு அரசு வழங்கும் வேறு எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பணியிலிருக்கும் போதே அறிவித்தவர். எத்தனையோ நீதியரசர்கள் பணி ஓய்விற்குப் பிறகு மாநில ஆளுநர் போன்ற அரசியல் பதிவிகளை 'அலங்கரித்துள்ளனர்'. செலமேஸ்வர் அப்படியான அலங்கோலங்களை நிராகரித்தவர். அமைப்பின் அங்கமாக இருக்கும்போதே அதன் சீர்கேடுகளைப் பொதுவெளியில் பகிரங்கமாக விவாதித்தவர். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட விளிம்பு நிலை மனிதர்களின் மேன்மைக்காக காலம் தனக்கு வழங்கிய அதிகாரத்தை உயர் மடைமாற்றம் செய்தவர். பண்பாளர்.
அமைப்பும் அதன் alter ego-வான மாற்று அமைப்பும் கற்றுக்கொள்ள செலமேஸ்வர் அவர்களிடம் நிறைய இருக்கிறது. கற்றுக்கொள்ளாமல் போனாலும், காலம் செலமேஸ்வர்களை நமக்கு பரிசளித்துக் கொண்டே இருக்கும். அமைப்பும் அதன் alter ego-வான மாற்று அமைப்பும் அயர்ந்து தளரும் வரை.

0 comments:

Post a Comment