அந்தத் துண்டு யாருடையது?

| Wednesday, May 16, 2018
ஊடகவியலாளர் அன்பர் ஒருவருக்கு பொது நண்பர் ஒருவரால் அண்மையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு அவரோடு பேசிக்கொண்டு இருந்தேன். தமிழக அரசியல் வரலாறு குறித்து தனது சிரத்தையான வாசிப்பின் மூலம் தனித்த பார்வை ஒன்றை வளர்த்திருந்தார். நான் இதுவரை படித்திராத சில நூற்களையும் அவருடன் கூடி வந்த சம்பாஷணையின் வழி தெரிந்து கொண்டேன். திராவிட இயக்கத்தின் பங்களிப்பு யாராலும் குறைத்து மதிப்பிட வழியே இல்லை என்றவர், பெரியார் கடைநிலை சாதியினருக்காக தீவிரமாக தொண்டாற்றவில்லை என்றார். இப்படியான கருத்து தமிழ் அறிவுலகில் நிறைய பேர்களிடம் இருக்கிறது. அதற்கான சமாதானங்கள், சாட்சியங்கள் அவர்களிடம் இருக்கலாம். இதன் நேரெதிர் கருத்திற்கு எனது வாசிப்பின் வழியே நான் வந்தடைந்திருக்கிறேன். இருப்பினும் நண்பரின் வாசிப்பின் தீவிரம் என்னைக் கவர்ந்தது. கடைநிலை சாதியினர் உள்ளிட்ட மக்களுக்கு, பிராமணர்களுக்கு எப்போதோ சாத்தியப்பட்ட, கல்வியறிவு சென்று சேர வேண்டும் என்பதற்காக பெரியாரும் அவர் சார்ந்திருந்த - துவங்கிய இயக்கங்களும் பெருந்தொண்டு செய்திருப்பதை மறக்க முடியாது என்றவர், திராவிட இயக்கங்களின் பெருந்தோல்வியாக "மக்களை அரசியல்படுத்தத் தவறியதுதான்" என்றார்.
எனக்கும் இது நிறைய முறைகள் மனதில் தோன்றியிருக்கிற கருத்தான படியால், அவர் தொடர்ந்து பேசுவதற்கான இரண்டொரு கேள்விகளை முன் வைத்து கவனித்தேன். கேரளாவில் கம்யூனிச இயக்கங்களும் சரி, காங்கிரசுமே சரி, மக்களை தொடர்ந்து அரசியல்படுத்தி வந்ததால்தான், ஒப்பீட்டு அளவில் அரசியல் நெறிபிறழ்வுகள் அங்கு குறைவு என்றும், political conscientiousness கொண்ட மக்களிடம் அரசியல்வாதிகள் குப்பை கொட்டுவது கடினமான காரியம் என்றும், கிராமங்கள் தோறும் படிப்பகங்கள் துவங்கிய ஒரு இயக்கம் மக்களை அரசியல்படுத்தத் தவறியது மன்னிக்க முடியாத வரலாற்றுத் தவறு என்றும் மிகுந்த ஆதங்கத்தோடும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் பேசினார்.
இதை முழுவதுமாக என்னால் ஒப்புக்கொள்ள முடியும். திராவிடர் கழகமும், அதன் கட்சி அரசியல் தொடர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் மக்களை அரசியல்படுத்தவில்லை. இந்தியாவில் வேறு எங்கேயும் விட, தமிழ்நாட்டில்தான் போராட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடப்பதாக ஒரு செய்தித்தாளில் சில தினங்களுக்கு முன்னால் படித்தது நினைவுக்கு வந்தது. இந்தப் போராட்டங்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்து மக்கள் 'அரசியல்படுத்தப்பட்டு விட்டார்கள்' என்று கூறி விட முடியாது. கட்சிகள் போராட்டங்களை அறிவிக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் தானாக சேர்ந்த கூட்டம், வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட கூட்டம் எல்லாம் சேர்ந்து பெரிய போராட்ட பிம்பம் ஒன்று எதையும் நம்பும் மனிதக் கண்களுக்கு முன்னால் ஊடக கேமராக்கள் வழி கட்டமைக்கப்படுகிறது. போராட்டங்களிலும், உன்னாவிரதங்களிலும், ஊர்வலங்களிலும் கலந்து கொள்ளும் சரிபாதி சாமான்யருக்கு எதற்காக அந்த நிகழ்வு என்பதே தெரியாது. அப்படியானால், எது அரசியல்படுத்தப்படுதல்? ஆட்டோக்காரர் சவாரி ஒன்றுக்கு முன்னூறு ரூபாய் கேட்கும் பொழுது, அதைத் தர முடியாது என்றும், உடனடியாக அதை அந்த இடத்து பொதுப் பிரச்சினையாக்கி இருபது முப்பது பேரை கூவி அழைத்து ஆட்டோக்காரரை சரியான சவாரிக் கட்டணத்திற்கு ஒருவர் கட்டாயப்படுத்துகிறார் என்றால், அவர் அரசியல்படுத்தப்பட்டு விட்டார் என்று அர்த்தம்.
Political Conscientiousness மக்களிடையே குறைவாக இருக்கும் சமூகங்களில், எதையும் விதி - கடவுள் என்று சுமையை மாற்றி இறக்கும் பண்பு மிகுதியாக இருக்கும். மலையாளி ஒருவர் அமைப்பை எதிர்த்து கேள்விகள் கேட்கிறார் என்றால், அரசியல்படுத்தப்பட்ட மனிதர் அதைத்தான் செய்வார். அதை மட்டுமே அவர் செய்ய முடியும். இது மட்டுமன்றி, நிறைய இளைஞர்களுக்கு மேலைத்தேய கம்யூனிஸ்டு இயக்கங்களைப் பற்றிய அறிவும், கம்யூனிச சித்தாந்த தெளிவும் இருப்பதை கேரளாவில் நான் பணிபுரிந்த வருடங்களில் நேரடியாகக் கண்டிருக்கிறேன். அங்கு DC Books என்ற புத்தகக்கடை இல்லாத ஊரே இல்லை. கொச்சி பல்கலைக் கழக வளாகத்திலும் ஒரு கடை உண்டு. சாயந்திர வேளைகளில் அங்கு போய் உள்ளே உலவிக் கொண்டிருப்பதுண்டு. சிறிய கடை என்றாலும் கனமான ஒன்று. அங்கிருக்கும் பையன் சொல்லுவான். அவர்களுடைய மற்ற கிளைகளில் புதினங்கள் கணிசமான அளவில் விற்பதாகவும், இந்தக் கடையில் மட்டும் புதினங்களே விற்பனையாவதில்லை என்றும், non-fiction மட்டுமே விற்றுத் தீர்கின்றன என்றும் விசனப்படுவான். அங்கே சர்வகலா சாலை மாணவர்களின் தரம் அப்படி இருக்கிறது என்றால், இங்கே அதைப் போன்ற உயர் கல்விச் சாலைகளை சுற்றியும் கோனார் நோட்ஸ் போன்ற தெளிவுரைப் புத்தகங்கள் விற்கும் கடைகள் ஏராளம். தமிழர்கள் அரசியல்படுத்தப் படவில்லை என்பதற்கு இது ஒரு தூலமான சாட்சியம்.
இருக்கட்டும். சொல்ல வந்தது ஒரு பொழிவைப் பற்றி. அண்மையில் சென்னை பச்சையப்பர் கல்லூரி பேராசிரியர் சுப.வீரபாண்டியனை அழைத்து "திராவிட இயக்க வரலாறு - ஒரு பார்வை" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற அழைத்து, அவரும் உலக அளவில் சமூகப் புரட்சிகள் செய்த இயக்கங்களின் வரலாறு, தென்னிந்தியாவைப் பொறுத்தவரை 'தென்னிந்தியர் நலவாழ்வு சங்கம்' தொடங்கி திராவிடர் கழகம் வரையிலான கறுப்புச் சட்டையினரின் வரலாறு ஆகியவற்றை கொடுக்கப்பட்ட கால அளவிற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பாகப் பேசினார். இந்தக் காணொளி YouTube-ல் கிடைக்கிறது. திருவாளர் எல்லிஸ் தொடங்கி அருட்தந்தை கால்டுவெல் வழியாக ராமசாமி நாயக்கர் வரை ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் எத்தனையோ பெருமக்கள் செய்த எண்ணவொண்ணா தியாகங்களின் மூலமாகப் பெற்றுத் தந்த உரிமைகளை ருசித்துக் கொண்டிருப்பவர்களே "திராவிட இயக்கங்கள் என்ன செய்து கிழித்தன?" என்று கேட்பது கொடுமையிலும் கொடுமை. மக்களை அரசியல்படுத்தத் தவறியதன் விலையை திராவிட இயக்கங்கள் தற்போது கொடுத்துக் கொண்டிருக்கின்றன. மீண்டும் சாதிய - மதவாத இயக்கங்களுக்கு நாடெங்கிலும் செல்வாக்கு மேலோங்கிக்கொண்டு வருவது கர்நாடகா தேர்தல் முடிவிலும் இன்னொரு முறை பதிவாகியிருக்கிறது.
பேராசிரியர் தன் உரையினூடே ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். கானாடுகாத்தான் என்ற ஊரில் நடைபெற்ற ஒரு விழாவில் நாகஸ்வரம் வாசித்த கலைஞர் ஒருவர் வியர்வையை துண்டால் துடைத்துவிட்டு மறதியாக தோளில் போட்டுக்கொண்டு விட, 'பெரிய' சாதியினர் கொதித்தெழுந்துவிட்டனர். ஆனால், அங்கிருந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமி அந்த நாகஸ்வரக் கலைஞரை 'துண்டு உன் தோளிலேயே இருக்கட்டும்' என்று கறாராக சொல்லிவிட, அடுத்த நாள் ராமசாமி நாயக்கரிடம் பஞ்சாயத்து போயிருக்கிறது. அய்யா இரண்டே கேள்விகளில் தாவாவைத் தீர்த்து விட்டார். "அந்தத் துண்டு யாருடையது?" மற்றும் "அந்த நாகஸ்வரக் கலைஞர் யாருடைய தோளிலே அந்தத் துண்டை போட்டார்?"
பெரியாரைப் போன்றவர்கள் சுயம்புவாகவே தங்களை அரசியல்படுத்திக் கொண்டவர்கள். நம்மைப் போன்றவர்களுக்கு யாராவது வந்து அரசியல்படுத்த வேண்டும். அப்படியான சேவையை செய்ய கல்வி நிறுவனங்களுக்கு உரிமையும் கடமையும் உண்டு. ஆனால், பொறியியல் - மருத்துவக் கல்லூரிகளுக்கு மந்தைகளைத் தயாரித்துத் தரும் உற்பத்திக்கூடங்களாக பள்ளிக்கூடங்கள் எப்போதோ, சரியாகச் சொன்னால் எண்பதுகளின் துவக்கத்திலிருந்து, மாற்றப்பட்டு விட்டன. மார்க் வாங்க வைப்பவனே சிறந்த ஆசிரியன் என்று முத்திரை மாற்றமுடியாத படி குத்தப்பட்டு விட்டது. இப்போது தமிழ்நாட்டு அரசே, NEET மற்றும் இன்னபிற தேர்வுகளுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்ய வியக்கும்படியான முன்னெடுப்புகள் செய்கிறது. கல்லூரிகளிலும் இதே நிலைதான். மார்க் மட்டுமே இங்கே ஒருவனைத் தீர்மானிக்கும் என்றால், பெரியார் சிலை உடைந்தே தீரும். யாரும் மாட்டுக்கறி சாப்பிட முடியாது. பிற மதத்தினர் துரத்தப்பட்டே ஓடுவர். செருப்புத் தைப்பவன் மகனுக்கு செருப்பத் தைக்க கற்றுக்கொடுக்க அமைப்புகளே ஏற்பாடு செய்யும்.
இந்த நிலையில்தான் பச்சையப்பர் கல்லூரி பொழிவு முக்கியத்துவம் பெறுகிறது. பேராசியரே சொல்வது போல, திராவிட இயக்க வரலாற்றை மட்டுமல்ல, காங்கிரஸ் - கம்யூனிஸ்டு - ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்களின் வரலாறுகளையும் சித்தாங்களையும் பற்றி மாணவர்களிடம் உரையாட அவற்றில் பாண்டித்தியம் பெற்ற கற்றோரை அழைத்து மாணவர்களிடம் பேச வைக்க வேண்டிய அரும்பணியை கல்வி நிறுவனங்கள் செய்ய முன்வர வேண்டும். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் இதைச் செய்தன. இப்போது அரசுக் கலைக் கல்லூரிகளில் கூட வேலைநிறுத்தம் நடப்பதில்லை. இது மிகவும் கவலை தரும் விஷயம். வேலைநிறுத்தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் என்பதெல்லாம் பழைய பொய்கள். கேரளாவில் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தங்கள் நடைபெறுகின்றன. ஒரு கிராமத்தில், டவுனில், நகரின் சில பகுதிகளில் என்று வேலைநிறுத்தங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் உருப்படாமல் போய்விட்டார்களா? படிக்கவில்லையா? வீடு கட்டவில்லையா? கலியாணம் செய்யவில்லையா? 'அரசியல்படுத்தப் பட்டவனுக்கு' தான் என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரியும்; அடுத்தவன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்கிறான் என்பதும் தெரியும்.
ஆக, கல்லூரிகளும் பள்ளிக்கூடங்களும் யாரைத் தயாரிக்க வேண்டும் என்றால், political conscientiousness மிகுந்த குடிமகன்களை. தாங்கள் யாராக இருந்தோம் என்ற வரலாறு தெரிந்தவர்களை. வரலாறு தெரிந்தவன்தான் வரலாறு படைக்க முடியும். இதைச் சொன்னவர் அம்பேத்கர். இவரை, பெரியாரை படிக்காமல் ஒருவன் என்ன கிழிக்க முடியும்? கொஞ்ச பேர் NEET எழுதலாம்; JEE எழுதலாம்; மருத்துவன் - எஞ்சினியர் ஆகலாம். மீதிப்பேர் நாசமாகப் போகலாம்.

0 comments:

Post a Comment