Shall we dance, Swarna?

| Thursday, February 16, 2017
என்னுடைய அப்பா திடீரென காலமாகிப் போனதில் எல்லாமே இருட்டிக் கொண்டு வந்தது.  அப்பாவை வெளியே கொண்டு வந்து குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் நீண்டகால நண்பரொருவர் இன்னொருவருக்கு விளக்கிக்கொண்டிருத்தது காதில் விழுந்து தொலைத்து துயரத்தை விடவும் பயத்தைத் தந்தது. "இவனுக்கு ஒரு மயிரும் தெரியாது.  பேஸ்ட் வாங்கிட்டு வாடான்னா பேப்பர் ஓட்டற பசைய வாங்கிட்டு வருவான். அப்பன் இல்லாம என்னாத்த பொழப்ப பண்ணுவானோ."  திகிலடித்தது.  அப்பாவை எரித்து விட்டு ஐந்தாம் நாள் காரியத்தை செய்துவிட்டு எல்லாரும் கிளம்பிய பின் தங்கை சொன்னாள்: "காய் ஏதாவது வாங்கிட்டு வாண்ணா."  "எங்க போய் வாங்கணும்?" என்று நான் கேட்டபொழுது பார்த்துக்கொண்டிருந்தவள் உடைந்து போய் உரத்த குரலில் அழத் தொடங்கினாள். 

காய் கறி வாங்கத் தெரியாதது ஒரு புறம் இருக்கட்டும். அதை எந்தக் கடையில் வாங்குவது, எவ்வளவு வாங்குவது, ஒவ்வொன்றிலும் எந்த அடையாளத்தைப் பார்த்து வாங்குவது என்ற எதையும் தெரியாத அந்த நிமிடத்தில் புதிதாக கட்டத் தொடங்கியிருந்த வேட்டி நழுவுவது உணராமல் ஒரு வேகத்தில் ஸ்கூட்டரை உதைத்துக் கிளம்பினேன்.  முதலில் கண்ணில் படும் பெரிய காய்கறி கடையில் நிறுத்துவதுதான் திட்டம்.  இரண்டாவது கிலோ மீட்டரில் இடது பக்கமாக இருந்தது அந்தக் கடை.  கல்லூரியை அப்போதுதான் முடித்திருக்க வேண்டும்.  உற்சாகமான இளைஞன். எண்பதுகளின் ஆரம்பத்தில் ரஜினிகாந்திடம் இருந்த அதே மாதிரியான திசைவேகம் அந்தப் பையனிடம் இருந்தது.  கூட்டம் குறைய பத்து நிமிடம் காத்திருந்து துக்கம் தொண்டையை அடைக்க அவனிடம் சொன்னேன். "அப்பா போயிட்டாரு.  நான்தான் காய் வாங்கணும்.  என்ன வாங்கனும்னு தெரியல.  மூணு பேரு இருக்கோம் வீட்டுல.  ஏதாவது கொடு தம்பி."  சொல்லும்பொழுது கண்ணில் நீர் பூத்ததை தவிர்க்க முடியவில்லை.  பத்து வினாடிகள் இருக்கும்.  உற்றுப் பார்த்தான்.  "அண்ணா, கவலைப் படாதீங்க. எங்கப்பா மூணாவது படிக்கும்போதே போயிட்டார்.  நான் கடை வச்சுட்டேன்.  கொஞ்சமா தர்றன்.  உங்க வீட்டுல இனிமே இங்கதான் காய் வாங்க சொல்லுவாங்க பாருங்க".  அவன் கைகள் கூடைகளுக்குள் புகுந்து எழுந்ததை இசைமேதை யானி அவர்களின் விரல்கள் கீபோர்டில் விளையாடுவதுடன்தான் ஒப்பிட முடிந்தது.  அந்த நிலையிலும் கூட இந்த ஒப்பீடு மனசில் ததும்பியதை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த பதினைந்து மாதங்களாக பெரும்பாலும் அவன்தான் காய்கறி கொடுக்கிறான்.  வேறு யாராவது கடையில் இருந்தால் போக மாட்டேன்.  அவனுடன் பேசுவது அப்பாவிடம் பேசுவது மாதிரியே இருக்கிறது.  நம்பிக்கையாக இருக்கிறான்.  அடிக்கடி என்னைப் பார்த்து "எல்லாம் சரியாய்  ஆயிடும், அண்ணா" என்கிறான்.  எந்தப் பிரச்சினையையும் அவனிடம் சொன்னதில்லை.  அப்பா அப்படித்தான் சொல்லுவார். "எல்லாம் சரியாயிடும்டா."  காலை வேளைகளில் அவன் முன்பு பயபக்தியோடு நிற்கிறேன்.  நிற்பதை ஓரக்கண்ணால் கவனித்து விடுவான்.  மற்றவர்களை அனுப்பிவிட்டு எனக்காக கொஞ்சம் காய் மட்டும் எடுத்துக் கொடுத்து "இது போதும் அண்ணா. வாரக் கடைசியில் மறுக்க வாங்க." என்பான்.  நவம்பர் மாத ஆரம்பத்தில் ஒருநாள் கிண்டல் கொப்புளிக்க சொன்னான். "பணம் நிறைய இருந்தாக்கா எனக்குக் கொடுங்க. வீட்டுல வச்சிருந்தா செல்லாம போயிடும்."  அதற்கு அடுத்த நாள்தான் பணம் செல்லாமல் போவது பற்றி டிவியில் மோடி சொன்னார்.  இந்த நிகழ்விற்குப் பிறகு அவன் என்ன சொன்னாலும் கேட்கிறேன். 

இன்றும் அவன் முன் போய் நிற்க வேண்டிய நிலை. கூட்டமும் கடையில் அதிகம் இல்லை.  இரண்டொரு பேர்தான்.  ஆனால் பையன் காதுகளில் angry pads-ஐ வைத்துக் கொண்டு தலையை வேகமாக ஆட்டிக்கொண்டு கூரையைப் பார்த்துக் கொண்டு நாக்கை வெளியே துருத்தி பற்களின் இடையே கடித்தவாறு அலகு குத்துவதற்கு முன்னால் பரவச நிலையில் கால்கள் நடுங்க ஆடிக்கொண்டிருக்கும் பக்தனை நினைவு படுத்திய படி இருந்தான்.  பார்க்க ரொம்பவும் அழகாக இருந்தது. "கொஞ்சம் சீக்கிரம் கொடு கண்ணு" என்ற என்னைப் பார்த்துக்கொண்டே "என்ன வேணுமானாலும் எடுத்துக்கோங்க" என்ற படிக்கு கைகளை ஆட்டி உத்தரவு கொடுத்தான்.  "டேய், நீயே எடுத்துக் கொடுடா, தம்பி'" என்று கெஞ்சிய போது, "என்னை தொந்தரவு செய்யாதீங்க" என்று சைகையில் சொல்லி கொஞ்சமாக எழுந்து ஆடினான்.

எனக்கும் ஆடத் தேவையாக இருந்தது.  யாருக்கும் என்னை அந்த இடத்தில் தெரியாது என்பது ரொம்பவும் சௌகர்யமான விஷயம்தான். "என்னடா கேட்கிற? சொல்லித் தொலை.  நானும் ஆடவா?" என்று அடித்தொண்டையில் கத்தினேன்.  காதில் இருந்தவையை கொஞ்சம் எடுத்து கையில் வைத்துக்கொண்டு சொன்னான்: "ஸ்வர்ணா அக்கா பாட்டுண்ணா. கேளுங்க. கருக்கல் பிடிச்சு இதேப் பாட்டத்தான் கேட்டுக்கிட்டுருக்கேன். ஒரே டான்ஸ்தான் போங்க."  அவனிடமிருந்து பிடுங்கி காதில் வைத்தேன். கேப்டன் பிரபாகரன் படத்தில் ஸ்வர்ணலதா பாடிய "ஆட்டமா, தேரோட்டமா" பாட்டு. அவரின் குரலில் கரைபுரண்டோடிய உற்சாகம், கும்மாளம்.  அந்தப் பாட்டை நான் கேட்டுக்கொண்டிருக்கும் போது, அந்த சமயத்தில் என்ன வரிகள் ஓடிக்கொண்டிருக்கும் என்பதை அவனாகவே யூகித்து எழுந்து நின்று முழு வீச்சில் ஆடத் துவங்கியிருந்தான்.  

லுங்கி கட்டிக் கொண்டு போனது சவுரியமாகப் போனது. ஆங்கில இதழ்களில் வாக்கிய அமைப்புக்களின் இலக்கணக் கட்டுமான லட்சணத்தைப் பற்றிய முனைவர் பட்ட ஆய்வேடு ஒன்றை இந்த நாட்டின் மிக முக்கியமான மொழியியல் பேராசிரியரின் நெறியாள்கையில் சர்வகலா சாலை ஒன்றுக்கு சமர்ப்பித்தவன், அரசுப் பள்ளி ஒன்றில் முதுநிலை ஆசிரியன், நண்பர்களோடு வேண்டுமென்றே எப்பொழுதும் ஆங்கிலத்தில்தான் பந்தாவாக சல்லியடிப்பவன் என்ற எதற்கும் உதவாத தகவல்கள் யாருக்கும் தெரியப் போவதில்லை.  இதைப் படிக்கும் நீங்கள் தயவுசெய்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.  16 பெப்ரவரி 2017 காலை ஆறரை மணி.  "ஆடுனதேயில்லை, பரவாயில்லையா?" என்றேன்.  தலையாட்டி அனுமதி கொடுத்தான்.  மெலிதாக ஆரம்பித்தேன்.  ஸ்வர்ணலதா விடவில்லை.  உண்மையில் எப்படி ஆடுவது என்பதை ஸ்வர்ணலதாதான் சொல்லிக்கொடுத்தார். 

"அண்ணா, உங்க ஸ்டெப்பு சூப்பரு" என்றான் பையன்.  

சைக்கிளில், ஸ்கூட்டரில் கடந்து போன இரண்டு பேர் பார்த்து சிரித்து கையசைத்தார்கள்.

"திருப்பி அந்தப் பாட்டையே போடவா?" என்றான்.  சிரித்து வேண்டாம் என்றேன்.  

"ஏன் அழுவுறீங்க?" என்று அவன் கேட்டபோதுதான் "உணர்ச்சிகளின் இரு முனைகளும் கண்ணீரால் ஆனது" என்று எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வந்தது. 

"ஸ்வர்ணா அக்கா எப்பவும் இப்படித்தான். ஆட வச்சுருவாங்க.  நீங்களே ஆடுனீங்க பாருங்க" என்ற பையன் கூடைகளுக்கிடையில் கைகளை அலாசி பை நிறைய காய்களைக் கொடுத்தான். 

திரும்பி வரும்போது நினைத்தேன். "ஸ்வர்ணலதா, ஏன் சீக்கிரம் செத்துப் போனீர்கள்? எங்கள் கால்களில் எவ்வளவு ஆட்டம் மீதமிருக்கிறது தெரியுமா?"


0 comments:

Post a Comment