மாநிலம் போற்றும் நாடு

| Tuesday, February 7, 2017
இன்று (2-2-2017) தமிழ் தி ஹிந்துவில் நீதியரசர் கே.சந்துரு நீண்ட கட்டுரை ஒன்றை, தமிழ்நாட்டின் இன்றைய பள்ளிக் கல்வியின் நிலையைப் பற்றியதானது, எழுதியிருக்கிறார். கட்டுரையின் முழு உள்ளீடுமே நான் ஒப்புக்கொள்ளக் கூடியது. எமர்ஜென்சி என்று அழைக்கப்படும் அரசியல் நெருக்கடி நிலைப் பிரகடனத்தைப் பயன்படுத்தி கல்வி என்பது நடுவண் அரசுப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டது. இந்தியா போன்ற பரந்த பன்மைத் தன்மை கொண்ட நாடு ஒன்றில் பிரதேச சிறப்புக்கூறுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து புறக்கணித்ததின் விளைவு இன்று அந்த மாநிலங்கள் அனைத்திலும் பிரிவினைவாதம் இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்து வந்த மாநில மற்றும் மத்திய அரசுகள் எமர்ஜென்சியின் போது அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை.

இந்தியா முழுமைக்கான ஒரு கல்விமுறை என்பது மத்திய அரசின் கருத்து நிலைப்பாடுகளை மாநில அரசுகளின் மீது திணிக்க மட்டுமே பயன்படும் என்ற வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அதே சமயத்தில் NEET போன்ற நாடு முழுமைக்கான தகுதித் தேர்வில் கலந்து கொண்டால் தமிழ்நாடு மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்ற வாதம் இங்கு பலமாக இருப்பது எதனால் என்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே 69 சதவிகித வகுப்புரிமை நடைமுறையில் இருக்கிறது. நுழைவுத் தேர்வில் வகுப்புரிமை காரணமாக தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்பதில் உண்மை கொஞ்சமும் இல்லை. 

ஆனால், NEET தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் கலந்துகொள்ளும் நேர்வில், ஒப்பீட்டளவில் நமது மாநில மாணவர்கள் கல்வித் திறனில் மிகக் கேவலமாக பின்தங்கியிருப்பது தேசிய அளவில் தெரிய வரும். இது ஒரு பெரிய அவமானகரமான விஷயம்தான். சந்தேகமேயில்லை. முக்கியமாக, அனைவருக்கும் கல்வித் திட்டம் போன்ற திட்டங்கள் கடந்த இருபது வருடங்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் நிலைமை இவ்வளவு கேவலமாக இருப்பது மாநிலத்திற்கே அவமானகரமானதுதான். நமது நிலை தேசிய அளவில் வெளிப்பட்டு விடுமோ என்ற அரசின் அச்சமும் காரணம் என்பதாக ஒரு கருத்து இருக்கிறது. நியாயமானதுதான். நீதியரசர் சந்துரு தனது கருத்தை நேர்மறையாக வெளியிட்டுள்ளார். NEET வேண்டாம் என்று சொல்வதற்குப் பதிலாக நமது பள்ளிகளின் தரத்தையும், ஆசிரியர்களின் தரத்தையும், பாடத்திட்டங்களின் தரத்தையும் உண்மையாகவே உயர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டிய தருணம் இது.

சில வருடங்களுக்கு முன்பு துறை உயர் அதிகாரிகளுடன் ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டி வந்தது. ஆங்கிலப் பாடத்தின் தரத்தை உயர்த்துவது எப்படி என்பது பற்றியதானது அது. ஆங்கிலப் பாடப் புத்தகங்களையோ, மாணவர்களையோ எதுவும் தொட வேண்டியதில்லை என்றும், விஷயமே ஆசிரியர்களின் கைகளில் இருக்கிறது என்றும், அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஆங்கிலம் நன்கு பயன்படுத்தத் தெரிந்த (Listening, Speaking, Reading and Writing) ஆங்கில ஆசிரியர்களின் சதவிகிதம் ஐந்தைக் கூடத் தாண்டாது என்றும், முன்பு MELT என்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இருந்ததைப் போல ஒரு ஆங்கில மொழி பணியிடைப் பயிற்சியகம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேண்டும் என்றும், இந்த பயிற்சியகங்களில் வழங்கப்படுகிற பயிற்சியின் முடிவில் தரமான தேர்வு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும், தேறாத ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு தேர்வு பெறும்வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என்றும் நான் சொன்னது மிகுந்த கேலிக்கும் புறக்கணித்தலுக்கும் ஆளானது. உண்மையில் இதைத் தவிர வேறு எப்படியும் ஆங்கில மொழித் திறனை அரசுப் பள்ளிகளில் வளர்த்தெடுக்க முடியாது. இது நிச்சயமாகத் தெரியும். ஆனால் செய்ய மாட்டார்கள். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசக்கூடாது என்று முடிவு செய்திருக்கும் அமைப்புகள் வேறு எப்படியும் இயங்குவார்கள் என்று எதிர்பார்த்தல் பேராசையன்றி வேறென்ன?  

எந்தப் பள்ளிகளில் எல்லாம் ஆசிரியர்கள் ஆங்கிலம் பேசுகிறார்களோ அங்கெல்லாம் மாணவர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். Hire the aptitude; train the skill என்ற ஒரு சொலவடை மேலாண்மைத் துறையில் உண்டு. ஆசிரியராக பணியமர்த்தப்படும் போதே ஒருவருக்கு அந்தப் பணியைச் செய்ய வேண்டிய எல்லாத் தகுதிகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை. தன்னிடம் பணியமர்த்தப்பட்டிருக்கிற நபர்களுக்கு, அந்தப் பணியை மேற்கொள்ளவேண்டி தேவைப்படும் தகுதிகளை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் பணியமர்த்துவோருக்கு உண்டு. அது கடமையும் கூட. அந்தக் கடமையில் அரசின் பங்கு என்ன என்பது சுவராஸ்யமான கேள்வி. 

இத்தகைய பணியிடைப் பயிற்சிகள் ஒவ்வொரு பாடத்திற்கும் செய்தாக வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஒரு பெரிய வேலையில் சிறு பகுதியே. ஆசிரியர்களின் தகுதி ஒவ்வொரு நிலையிலும் பரிசோதிக்கப் பட வேண்டும். வேறு வழியே இல்லை. பணிப்பாதுகாப்பு என்பது இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற கவலை தேவையில்லை. உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் உண்டு என்ற நிலையில் ஆசிரியர்கள் அனைவரும் உயர் கல்வி பயில்வது போலவே, இதற்கும் வேறு உபாயங்கள் கண்டிட முடியும். 

ஆசிரியர்கள் தரம் உயராத வரை, பணியிடைப் பயிற்சிகள் தொடர்ந்து தரமாக நடைபெறாத வரை, NEET போன்ற தேர்வுகளுக்குப் பயந்து வேறு மாதிரி குரலெடுத்துக் கூவிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

மற்றபடி, தமிழ்நாடு நாட்டிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்று என்று அரசியல்வாதிகளும் அமைப்புகளும் மேடையேறி அறிவிக்கும் பொழுது, selective amnesia-வை வரவழைத்துக்கொண்டு, அவர்களை நம்ப வேண்டியதுதான். வேறு வழி?


0 comments:

Post a Comment