நினைத்தாலே இனிக்கும்

| Thursday, December 25, 2014

கே.பாலச்சந்தர் - தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை இவரது படைப்புலகம் மூன்று கட்டங்களைக் கொண்டது. 
 
  முதல் கட்டம் அவர் ஏற்கனவே மேடைப்படுத்தியிருந்த நாடகங்களை செல்லுலாய்டில் பதிந்து வந்த காலம். வசனமும் மிகையுணர்ச்சியும் சட்டகங்களை நிரப்பியிருக்கும். மத்திய தர படித்த குடும்பங்களின் பிரச்சினைகளை உரக்கச் சொல்லும் இந்தப் படைப்புக்கள் அன்றைய எம்ஜிஆர் - சிவாஜி படங்களுக்கான ஒரு மாற்றாக முதல் தலைமுறை படித்த மத்திய தர குடும்பங்களுக்கு தெரிந்தது. படித்தது சரியாக நினைவு இருக்குமென்றால், கே.பி.அவர்களின் திரை வரவு 1963 அல்லது 1964 ஆக இருக்கலாம். இவரது பட்ஜெட்டிற்கு சிவாஜியோ எம்ஜிஆரோ சாத்தியம் இல்லை. வேறொரு கோணத்தில், அவர்களுக்கு இவரது படைப்புக் களனில் இடமும் இல்லை. பிற்பாடு, சிவாஜி இவரது ஒரே ஒரு படைப்பில் பங்கு பெற்றிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், ஜெமினி கணேசன், நாகேஷ், ஜெயந்தி போன்றோர் கே.பியின் நாயக நாயகி தேவைகளை தம்மால் முடிந்த படைப்பாற்றலோடு ஈடிட்டிருக்கிறார்கள்.

இரண்டாவது கட்டம், படைப்பூக்கம் மிகுந்தது. அன்னாரின் வெகுமதியான படைப்புகள் அனைத்துமே இந்தக் காலகட்டத்தில்தான் வெளிவந்துள்ளன. திரை மொழியை இதற்குள்ளாக கற்றுக்கொண்டது மட்டுமன்றி, தனித்த திரை மொழி ஒன்றையும் தேர்ந்திருந்தார். எப்படி பேசா விடயங்களை ஜெயகாந்தன் எழுத்தில் ஒரு அடாவடித்தனத்தோடு கொடுத்து வந்தாரோ, அதேபோல் கே.பி. திரையில் அதுவரையில் தமிழ் சினிமா பேசாத விடயங்களை காண்பித்தார். இதற்காண், ஜெயகாந்தனும் பாலச்சந்தரும் பல சமயங்களில் சர்ச்சைகளின் மையமாகிப் போனது சமீபத்திய தமிழ்த் திரைப்பட வரலாறு. பாலச்சந்தர் அவர்களின் பெண் பாத்திரங்கள் மிகவும் சிலாகிக்கவோ, விமர்சிக்கவோபட்டவை. அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், அபூர்வ ராகங்கள், முக்கியமாக - அரங்கேற்றம் போன்ற படங்களில் பெண் மாந்தர்கள் அன்றைய சமூகத்தில் அதிர்வலைகளை உண்டாக்கினார்கள். ஆனால், ஜெயகாந்தனுக்கும் கே.பி. அவர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. ஜெ.கே.வின் நாயகிகள் இறுதிவரைக்கும் தாங்கள் நம்பிவந்ததில் சமரசம் செய்துகொள்வதில்லை. இவர்கள் இயல்பாகவே போராளிகள். போராளிகள் சமரசம் பேச முடியாதவர்கள். ஆனால், பாலச்சந்தரின் பெண்கள் புரட்சி போன்ற ஒன்றை யோசித்துவிட்டு, கொஞ்சம் பேருக்கு தன் எதிர்ப்பைக் காட்டிய பிறகு, மரபான சமூகத்தோடு ஒன்றிப் போவார்கள். சிந்து பைரவி படத்தின் சிந்து ஒரு முக்கியமான உதாரணம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஜெயகாந்தனின் பெண்கள் பெண்ணீய வாதிகள். பாலச்சந்தரின் பெண்கள் பெண்ணீயத்தை உரத்த குரலில் பேசிவிட்டு, காத்திரமாக செயல்படும் நேரம் வாய்க்கும் பொழுது, ஆண் தர்மத்தால் நிறைந்திருக்கும் சமூக நீதிகளோடு சமரசிப்பார்கள். 

நினைத்துப் பார்க்கிறேன். பாலச்சந்தர் மட்டுமே இதற்குக் காரணம் ஆகிவிட மாட்டார். இவருடையது பெரும் வணிக ஊடகம். வணிக ஊடகத்தின் அன்றையை கருத்துரீதியான சாத்தியக் கூறு இவ்வளவுதான். ஜெயகாந்தன் ஒரு எழுத்துக்காரன். வெகுஜனத்தால் ஆதரிக்கப்பட்டாக வேண்டிய பெரும் வணிகத்தைப் பற்றி கவலை சிறிதும் தேவைப்படாத எழுத்தாளி. இந்த வணிக கூட்டல் பெருக்கல்கள் பாலச்சந்தரின் பெண்களை சமரசப்படுத்தியிருக்கலாம். எண்பதுகளின் மிகத் துவக்கத்தில் தண்ணீர்...தண்ணீர் மற்றும் அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்கள் வேறு ஒரு தளத்தில் மிகத் துணிச்சலானவை. இவரது இந்தக் காலகட்ட படங்களை - ஒவ்வொன்றையும் - பலமுறை பார்த்து ரசித்தோ முறைத்தோ இருந்தவன் என்பதால், தனிப்பட்ட காரணங்களுக்காக 'தப்புத் தாளங்கள்' என்ற படம் ரொம்பவும் பிடிக்கும். வீட்டிலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் உயர்நிலைப் பள்ளிக்கு சைக்கிள் கொடுத்து அனுப்பப்பட்ட நாட்கள் அவை. அப்பா அம்மா பணி செய்த பள்ளியிலேயே அதுவரை படித்து வந்ததால் நான் ரொம்பவும் விரும்பிய ஆனால் செய்ய முடியாத - எனது நண்பர்கள் அனைவரும் தாராளமாக செய்து வந்த - ஒரு காரியம் உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட நாட்களில் செய்ய முடிந்தது. வாய் கமழ கெட்டவார்த்தைகள் பேசுவதுதான். பள்ளிக்கு நண்பர்களோடு சைக்கிளில் போய்வரும் சமயம், பள்ளி நேரங்கள், விளையாட்டு பாடவேளைகள் போல எப்போதும் வாயில் கெட்ட வார்த்தைகள்தான். கூடப்படிக்கும் பல பயலுகள் கிட்ட வரவே பயப்பட்ட நாட்கள். தப்புத் தாளங்கள் படத்தில் நிறைய முறைகள் படம் திடீரென்று கட் செய்யப்பட்டு "இந்த இடத்தில் இடம்பெற்ற கெட்ட வார்த்தை சென்சார் குழுவால் தணிக்கை செய்யப்பட்டது" என்ற சிலைடுகள் காண்பிக்கப்படும். இந்த காரணத்தால் ஏனோ பாலச்சந்தர் என்னுடைய தனிப்பட்ட பிரியத்திற்குள்ளாகிப் போனார். 


கே.பி. படைப்புலகின் மூன்றாவது மற்றும் இறுதியான படைப்புக் காலம் ஒரு துன்பியல் நிகழ்வு. இரண்டாயிரமாவது ஆண்டுகளின் ரசனை தன்னுடைய படைப்புத் திறனிலிருந்து பாரியமாக வேறுபட்டதாக அவர் உணர்ந்திருக்க வேண்டும். தன்னுடைய அடுத்தடுத்த தலைமுறைக் கலைஞர்களின் படைப்புக்கள் போலவே தனதையும் ஆக்க முயன்று படுதோல்வி அடைந்த காலம். இந்தக் கால கட்டத்தில், இவரது ஒரு படத்தில் கதாநாயகியைச் சுற்றி இருபது முப்பது பெண்கள் வெள்ளை கவுன் போட்டுக்கொண்டு ஆடிய கொடுமையும் நடந்தது. பிரச்சார நெடி தாங்க முடியாத அளவு அடித்ததும் இந்தக் காலகட்டத்திலான இவரது படைப்புக்களில்தான். 

எனக்கு எப்போதுமே தோன்றுவதுண்டு. இவரது கடைசிப் படமாக 'சிந்து பைரவி' இருந்திருக்க வேண்டும். ஒருவேளை, இவரது கடைசிப் படம் அதுதானோ! ஜெயகாந்தன் இந்த வகையிலும் ஒருபடி மேலே. எழுதுவதை எப்போதோ நிறுத்திவிட்டார்.

கே.பாலச்சந்தர் - எனது பதின்மங்களை பரவசப்படுத்திய கலைஞன். இருபதுகளில் சிந்திக்க வைத்தவன். எப்போதுமே மானசீக நண்பன். போய் வாருங்கள் கே.பி.!

எனக்குப் பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமா?

| Sunday, December 21, 2014
சற்றே பின்னோக்கிப் பார்த்தால், எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப் பட்டிருக்கிறோம்? யாருமே நமக்கு நிரூபித்துக் காட்ட முடியாத விடயங்களில்தான் நிறைய நம்பிக்கையை முதலீடு செய்யுமாறு கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்று தெரிய வருகிற இந்த நாட்களில் அனைவரின் மீதும் கோபம் வருகிறது. ‘அந்தப் புளியமரம் பக்கம் போகாதே! இளசுகளின் மேலேதான் அங்கிருக்கும் பேய்க்கு ஒரு கண்!” என்பது தொடங்கி எத்தனை எத்தனை மோசடிகள்!

அரசியல் என்பதற்கு நமது நடுத்தர வர்க்கத்து குடும்பங்களின் பார்வையை பாருங்களேன்! அது தீண்டத் தகாத ஒரு விடயம் என்று நம்மை முழுமையாக நம் பெற்றோர் நம்ப வைத்திருக்கிறார்கள். “எம்ஜிஆர் சினிமா வேண்டுமானால் பார்த்துக் கொள். அதிமுக என்றால் என்னவென்று கேட்காதே, பக்கத்து வீட்டுக்காரர் வாங்கும் முரசொலியைப் படிக்காதே, பள்ளிக்கூடம் போகும்போது செட்டியார் கடையில் தினத்தந்தி படிப்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் சிந்துபாத் கதையை மட்டும் படி” என்ற அப்பாவின் கட்டளைகள் எனது குழப்பத்தை அதிகரித்தபடியே இருந்தன. அரசியல்வாதிகளுக்கு நம்மைச் சுற்றியிருப்பவர் தந்த அதீதமான பயம் கலந்த மரியாதை அவர்களின் மீது ஒரு தீராத மயக்கத்தையே உண்டாக்கியிருந்தது.
 
நல்லவேளையாக, உயர் நிலைப் பள்ளியில் எனது ஆசான் தனது நண்பர்களிடம் அரசியல் பேசும் பெரும்பாலான நேரங்களில், நாங்கள் அருகில் இருப்பதை பொருட்படுத்தவில்லை. மிக நுண்ணியமான அவரின் அரசியல் அவதானிப்பு, பிற ஆசிரியர் பெருமக்களின் விவாதங்கள் என்னுள் அரசியலைப் பற்றிய தீக்கனலை மூட்டின. முப்பது வருடங்களுக்கு முன்பு எனது ஆசான் கூறிய சில வாசகங்கள், மூன்று நிமிடங்களுக்கு முன் சாப்பிட்டு முடித்த கறிக்குழம்பின் வாசனை இன்னும் கையில் வீசியடிப்பது போல, அப்படியே அவரது குரலிலேயே காதுக்குள் ஒலித்தபடியே உள்ளது. “இந்தியாவை பிரபாகரன் நம்புகிறான் போல தெரியுது: ரொம்ப தப்பு. இண்டியன் கவர்ன்மென்ட்டிடம் இவன் கடைசியில் மோதியாக வேண்டும்” என்று ஆகஸ்டு 1983-ல் சொன்னார் என்றால் நம்பமுடிகிறதா? “தடை செய்யப்பட்ட டாப்லாய்ட் இது. படித்துவிட்டு உடனே கொடுத்து விடு” என்று சொல்லியபடியே எண்பத்து மூன்றில் இலங்கையில் இருந்து வெளிவந்த சில செய்தித் தாள்களை எங்களிடம் கொடுத்தது நினைவுக்கு வருகிறது. பள்ளிக்கூட நூலகத்தை வெறுத்துப் பார்த்தவாறு இருந்த அவர், “டே முட்டாப்பசங்களா! ஒரு புஸ்தகம் விடாம எல்லாம் படிங்கடா. எவன் எப்போ இதையெல்லாம் எரிப்பான்னு தெரியல. இப்படி எரிச்சுப்புட்டானுங்களே படிக்கிற இடத்துல நுழைஞ்சு!” என்று ஒருநாள் எங்களிடம் அவர் கத்தியபோது, திகிலோடு அவரைப் பார்த்தவாறு அசையாமல் நாற்காலிகளில் அமர்ந்திருந்ததும் ஞாபகம் வருகிறது. யாழ் சர்வகலாசாலை எரிக்கப்பட்ட பதட்டமான நாட்கள் அவை. 

தமிழ் மொழி, திராவிட இனம், தென்னிந்திய பிரதேசம், இந்திய தேசம், சோசலிஸ்டு பொருளாதாரம், அரசியல் கட்சிகளில் தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள், எம்ஜிஆர், கருணாநிதி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகள், மேல்சபை, மக்கள் சபை, பாராளுமன்றம், ஜார்ஜ் கோட்டை என்ற வார்த்தைகள் எல்லாம் அந்த ஆசான் எங்களை மனுசப்பயல்களாய் மதித்து பக்கத்தில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருக்கும்போது தெரிந்துகொண்டதுதான். 


“பணக்காரன் கட்சி, ஏழைக்கான கட்சி என்று ரெண்டுதான இருக்கு. இதுல காங்கிரஸ், திமுக, அதிமுக எல்லாம் ஒண்ணுதாண்டா. நம்ப ஊர்ல கம்யூனிஸ்டுகாரன் எதுக்கு இருக்கான்னு தெரியமாட்டேங்குது!” என்று ஒருமுறை ஆதங்கப்பட்டார். அவர் எப்போதும் கையில் தி ஹிந்து அல்லது இண்டியன் எக்ஸ்பிரஸ் வைத்திருப்பார். “டே, இந்தப் பேப்பர எல்லாரும் படிக்க முயற்சி பண்ணுங்கடா, ஐயரு எப்பவுமே குசும்பாத்தாண்டா நியூஸ் போடுவான், கோயங்காதாண்டா பெரிய ஆம்பள! அந்தப் பொம்பளையவே எதுத்து நின்னான் பாரு, அப்பா, யாராலடா முடியும்!” என்று எங்களிடம் அங்கலாய்த்திருக்கிறார். டவுசர் போட்டுத் திரிந்த சின்னூண்டு பசங்களான எங்களுக்கு அன்று அவர் கற்றுத் தந்தது நடைமுறை அரசியலின் பால பாடம்தான். 

இன்றைக்கோ நிலைமையே வேறு! இன்று பள்ளிகளில் பாடம் நடத்தும் எந்த ஆசிரியருக்கும் எந்தவிதமான அரசியல் உணர்வும் – மொழி, இனம், பிரதேசம், தேசம் உட்பட – இருந்து நான் பார்த்ததில்லை. அவர்கள் காலைக்கதிர் படிக்கிறார்கள்; அதிலும் உள்ளூர் செய்தி மட்டுமே. ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாசு போன்ற ஒன்றிரண்டு பெயர்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்கக் கூடும். அதிலும் பெண் ஆசிரியர்களுக்கு இந்தப் பெயர்கள்கூட தெரியாது என்று எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்யலாம். அரசியல் தத்துவங்கள் எதுவும் இவர்களுக்குத் தெரியாது. எந்தக் கட்சியின் கோட்பாடுகளையும் இவர்கள் படித்தது இல்லை. கேபிடலிசம், சோசலிசம், கம்யூனிசம், பாசிசம் போன்ற வார்த்தைகள் தினத்தந்தியிலோ, காலைக்கதிரிலோ பஞ்சப்படி உயர்த்திய செய்தி வந்த நாட்களில் பிரசுமாயிருந்தால் அர்த்தம் புரியாமல் பார்த்திருக்கக்கூடும். கூகுள் இருக்கும் இந்த நாட்களில் ஒருவரின் அரசியல் உணர்வு எவ்வளவு ஆழமாக இருக்க வேண்டும்! 

ச.தமிழ்ச்செல்வன் எழுதி, இந்திய தொழிற்சங்க மையம் இணைந்து பாரதி பதிப்பகம் வெளியிட்ட “அரசியல் எனக்குப் பிடிக்கும்” என்ற சிறிய புத்தகம் நடைமுறை அரசியலை நமக்கு கற்றுத் தருகிறது. அரசு, அரசியல், அரசாங்கம் என்பனவற்றை விளக்கியிருக்கும் தமிழ்ச்செல்வன், கட்சிகளையும் இரண்டே வகைகளில் அடக்கலாம் என்கிறார். இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு பக்கம், மற்ற அனைத்து கட்சிகளும் இன்னொரு பக்கம் என்பதை நிறைய ஆதாரங்களுடன் இவர் நிரூபிக்கும்போது, ‘அடப்பாவிகளா!’ என்று அதிர்ந்து போகிறோம். ரெண்டே ரெண்டு வர்க்கம்தான் இங்கு உண்டு. இருப்பவன் – இல்லாதவன். அவ்வளவுதான். எந்தக் கட்சியும் அனைவரின் நலம் குறித்து போராடாது என்று சொல்லும் ஆசிரியர், அரசு – அரசியல் – அரசாங்கம் பற்றி இதுவரை நாம் ஆழமாக சிந்திக்காமல் இருந்திருக்கிறோம் என்றால், நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். 

வெளிவந்த நாட்களில் முனைப்பாகவும் பரவலாகவும் படிக்கப்பட்ட புத்தகம். படிக்க வேண்டியதும் கூட!

[‘அரசியல் எனக்குப் பிடிக்கும்’, ச.தமிழ்ச்செல்வன், இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் பாரதி புத்தகாலயம், சென்னை, உரூபா 10/-]

உயிர் காப்பான் தோழன்

| Tuesday, December 16, 2014
இன்று தமிழ் ஹிந்துவில் காலச்சுவடு பதிப்பக ஆசிரியர் திரு.கண்ணன் அவர்களின் கட்டுரை வந்திருக்கிறது. பதிப்பக துறையில் அண்மைக்காலங்களில் நடந்துள்ள மாற்றங்களைப் பற்றி எழுதியுள்ளார். படிக்கும் பழக்கம் குறைந்துள்ளதற்கு இளைய வயதினர் காரணமில்லை; அவர்களைப் பயிற்றுவிக்கும் நிலையில் உள்ள பெற்றோர், பள்ளி, சமூகம் ஆகியவையே காரணம் என்றும், பதிப்பக துறை வளர்ச்சியே கண்டுள்ளதாகவும் நம்புகிறார். 
 
  எனக்கென்ன தோன்றுகிறதென்றால், பெற்றோர், பள்ளி மற்றும் சமூகம் காரணம் இல்லை; டாக்டராகவோ, பொறியாளராகவோ மகனோ மகளோ உருவாகாவிட்டால் எதிர்காலமே இல்லை என்று நம்ப வைத்திருக்கிற 1991-லிருந்து இந்தியாவில் நிலைத்துவிட்ட முதலாளித்துவ பொருளாதார அடுக்கு முறைதான் காரணம். கதைப் புத்தகங்கள் படிக்கும் நேரம் என்பது, ப்ளஸ் டூ தேர்வில் மதிப்பெண்கள் வாங்குவதை குறைத்துவிடக் கூடும். மிகு மதிப்பெண்கள் அற்ற ப்ளஸ் டூ மதிப்பெண் அட்டை நரகத்தின் பாஸ்போர்ட். ஆகவே, தேர்வுப் புத்தகங்கள் தவிர வேறு எதையும் படிக்க மாணவனோ, பெற்றோரோ விரும்புவதில்லை. 

ஏனோ எழுபதுகள் ஞாபகத்திற்குள் நுழைகின்றன. பெருங்குடிகாரன் ஒருவன் 24 மணி நேரமும் போதையில் மூழ்கியிருப்பதுபோல, எதையாவது எப்போதும் படித்துக் கொண்டிருப்போம். சனி, ஞாயிறுகளில் காலையிலேயே நண்பனின் வீட்டிற்குச் சென்று கதைப் புத்தகங்கள் மாற்றிக் கொள்வோம். எனது நண்பனின் அம்மா ஒருமுறை கோபித்துக் கொண்டது கூட நினைவுக்கு வருகிறது. "புத்தகங்களை இவ்வளவு சீக்கிரம் நீ படித்து விட்டால், அடுத்தடுத்து உனக்காக நாங்கள் புத்தகம் வாங்கிக் கொண்டிருக்க முடியாது" என்று கோபித்துக் கொண்டு, வழக்கமாக செய்வது போல, சாப்பிட அழைக்காமலேயே உள்ளடுக்கிற்குள் போய் விட்டார்கள். 

அருகிலிருந்த எல்லா அரசு நூலகங்களிலும் உறுப்பினராக இருந்தாலும், அங்கிருந்த புத்தகங்களில் ஒரு சில மட்டும்தான் படிக்க முடிபவையாக இருந்தன. மாவட்ட நூலகத்தில் உறுப்பினராக முப்பது ரூபாய் வீட்டில் கேட்கப் போய், அத்தனை பெரிய தொகை இவன் எப்படி இந்த வயசிலேயே கேட்கிறான் என்று கோபித்துக் கொண்ட அப்பா எனது நண்பர்களிடம் எனது சமீபத்திய பழக்க வழக்கங்களை விசாரித்ததும், மாவட்ட நூலகத்திற்கு தானே நேராய் சென்று ஒரு அட்டைக்கு பத்து ரூபாய் வீதம் மூன்று அட்டைகள் ஒரு உறுப்பினருக்கு வழங்குவது அங்கு நடைமுறை என்று தெரிந்து கொண்டு, முனகிக் கொண்டே ஒரு மாதம் கழித்து முப்பது ரூபாய் கொடுத்ததும், மீண்டும் வாழ விரும்பும் வாழ்க்கையாக கண்முன் நிற்கிறது. 

இங்கிலீஷ் படிக்கத் தெரியாத வயசிலும், எனது ஆதர்சமான திரு.டிவிஎஸ் போலவே கையில் இங்கிலீஷ் புத்தகம் வைத்திருப்பதற்காக மாவட்ட நூலகத்தில் இங்கிலீஷ் புத்தகங்களாகவே எடுத்து எப்போதும் பலர் பார்க்க தூக்கிக் கொண்டு அலைந்த வருடங்கள்தான் எவ்வளவு இனிமையானவை! பிறகு, அந்தப் புத்தகங்களில் இருந்த போட்டோக்களையும் படங்களையும் பார்க்க ஆரம்பித்து, caption-களைப் படிக்க முடிந்து, பின்பு புத்தகங்களையும் படிக்கத் தொடங்கி, அடுத்தடுத்த வருடங்களில் நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் வாசிப்பதே வாழ்க்கையாகிப் போன விந்தை ஒரு bildungsroman புதினத்திற்கு இணையானது. 

எனது வாழ்க்கையின் சிக்கல் மிகுந்த கட்டங்களில், விரக்தி விளிம்பைத் தாண்டி என்னைத் தள்ள இருந்த நேரங்களில், உறவுகள் என்னைத் துயரத்தின் புயல்கண்ணில் வீசித் தள்ளியிருந்த காலங்களில், யாருமேயற்ற அனாதையாக நான் உணர்ந்திருந்த பொழுதுகளில், என்னை தத்தெடுத்துக் கொண்டு தாயாக சீராட்டி மீண்டும் பழைய உற்சாகத்தோடு மீட்டுக் கொண்டு வந்தது வாசிப்புப் பழக்கம்தான். கொடும் பசியாயிருந்த சிசு பல நாட்களுக்குப் பிறகு பால் மிகுந்த தாயின் முலைகளுக்குத் திரும்பியதைப் போல, வெறி பிடித்து பித்தாக மாதக் கணக்கில் படித்திருந்து, நேர இருந்த மனச் சிதைவில் இருந்து என்னை காப்பாற்றிக் கொண்டது, பார்த்து முடித்த துணிகரமான ஒரு ஹாலிவுட் சினிமா போலவே, மனக் கிணற்றின் ஆழத்திலிருந்து மெல்லத் ததும்பி மேலே வருகிறது. 

இதை எழுதுகின்ற இந்த நொடியில் நினைக்கிறேன். படிக்கும் பழக்கம் மட்டும் இருந்திராவிட்டால், குடிகாரனாகவோ ஏன் தற்கொலைக்கோ கூட முயன்றிருப்பேன், அந்த திகில் சூழ்ந்த நாட்களில். எனக்கும் வாசிப்புக்கும் உள்ள உறவு, பார்த்தனுக்கும் அவனுடைய சாரதிக்கும் இடையில் இருந்தது என்னவோ அதுவேதான்!

சேட்டன் பகத்தும் பாதிக் காதலியும்

| Thursday, December 11, 2014

படித்து முடித்தாகி விட்டது. இவரின் முந்தைய ஐந்து புதினங்களை விடவும் அதிகமான சினிமாத்தனங்களோடு உள்ளது. பீகார் மாநிலத்தின் டம்ரான் தாலுக்காவில் உள்ளூர் அரச குடும்பத்து பையன் கூடைப்பந்து விளையாட்டில் மாநில அணியில் விளையாடியதால் தில்லியில் உள்ள St Stephen's கல்லூரியில் சேர வருகிறான். Sports Quota-வில் மட்டும்தான் ஆங்கிலம் தெரியாத மாதவ் ஜா போன்றோர் இந்தக் கல்லூரியில் இடம் .பிடிக்க முடியும். அப்பா இறந்து விட்ட பிறகு, ராஜாங்கத்தையும் செல்வாக்கையும் இழந்து நிற்கும் மாதவ் ஜாவின் குடும்பத்தில் மிஞ்சியது அம்மாவும் அவள் நடத்தி வரும் சிறிய பள்ளிக்கூடம் ஒன்றும்தான்.
கல்லூரியில் ரியா சோமானி என்ற பெண்னை சந்திக்கிறான். அவளும் sports quota. ஆனால், தில்லியின் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பம். ரியா ஏற்கனவே அப்பாவால் பாலியல் தொந்தரவுக்குள்ளானவள். அந்தக் காயம் இன்னும் ஆறாமலே இருக்கிறது. கூடைப்பந்து மாதவ் - ரியாவை நண்பர்களாக்குகிறது. ஆங்கிலம் தெரியாததாலும்,கல்லூரியில் அனைவரும் ஆங்கிலம் பேசுவதாலும் மாதவ் ஜா தான் தாழ்மைப்பட்டதாக உணர்கிறான். நாளடைவில் ரியா மேல் காதலாகிப் போக, அதை தெரிவிக்கையில் ரியா உதாசீனப்படுத்துகிறாள். பின், பணக்கார ரோஹைனை கல்யாணம் செய்துகொண்டு லண்டன் போகிறாள்.
காதலில் தோற்றுப் போய் தன்னுடைய கிராமத்திற்கு வரும் மாதவ் தாயுடன் சேர்ந்துகொண்டு அவள் நடத்தி வரும் பள்ளியை மேம்படுத்தும் வழிகளில் இறங்குகிறான். Microsoft அதிபர் Bill Gates அவர்களுடைய தொண்டு நிறுவனத்தின் உதவி கிடைக்க ஒரே ஒரு வழி - அவரை தன்னுடைய பள்ளிக்கூடத்திற்கு கூட்டிவந்து அவரிடம் விளக்கி உதவி பெறுவதுதான். Bill Gates இந்தியா வருகிறார். மாதவ் நன்றாக ஆங்கிலத்தில் பேசும் பொருட்டு
பாட்னாவிற்கு சென்று ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும் பொழுது, அங்கு ரியாவை மீண்டும் சந்திக்கிறான். இடைப்பட்ட மூன்றாண்டுகளில் லண்டன் போய், ரோஹனிடம் உதை வாங்கி , விவாகரத்து பெற்று, பெற்றோர்களிடம் தங்காமல், தானாகவே பணியில் சேர்ந்து பாட்னா வருகிறாள் ரியா.
Bill Gates முன்னிலையில் ஆங்கிலம் பேச வேண்டியிருப்பதால், மாதவ் ஜாவிற்கு உதவுகிறாள் ரியா. இடையில் இரண்டு முறை அவளுக்கு முத்தம் கொடுக்க முயன்று, ரொம்பவும் திருப்தியாக கொடுக்க முடியாத நிலை. மாதவின் அம்மா ராணி சாஹிபா ரியா விவாகரத்தானவள் என்றும், தன்னுடைய மகன் அவள் மேல் கிறக்கம் கொண்டு திரிகிறான் என்றும் தெரிந்து கொண்டு, ரியாவிடம் தன்னுடைய மகனை விட்டுவிடு என்று எச்சரிக்கிறாள். மனம் கசந்த ரியா, வேலையை ராஜினமா செய்துவிட்டு, சாகக்கிடக்கும் அப்பா எழுதிவைத்த சொத்தை பணமாக மாற்றிக்கொண்டு, பாடகியாக வாழ்க்கை நடத்த New York போகிறாள். ஆனால், அதற்குள் தனக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பதாகவும், இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என்று ஜாவிற்கு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு, மறைந்து விடுகிறாள்.

நடுவில் Chetan Bhagat அவர்களைச் சந்திக்கும் ஜா,அவரிடம் கொடுக்கும் ரியாவின் குறிப்புக்கள் மூலமாக அவளின் திட்டத்தை தெரிந்து கொள்கிறான். New York சென்று மூன்று மாதங்கள் அலைந்து, ஊர் திரும்பும் இரவில் திடீரென்று அவள் பாடும் இரவு விடுதியைத் தெரிந்து கொண்டு, ஆறு கிலோமீட்டர்கள் ஓடி, அவள் பாடிக்கொண்டிருக்கும்போது அவள் முன் நிற்கிறான்.
மூன்று வருடங்கள் கழித்து அவர்களுக்கு ஒரு குழந்தை. டம்ரான் பள்ளிக்கூடம் உலகம் போற்றும் அளவில் நடந்து வருகிறது. ராணி சாஹிபா தன் பேரனோடு விளையாடுகிறாள். கூடைப்பந்து மைதானம் கட்டப்பட்டு, அதைத் திறந்து வைக்க Chetan Bhagat வருகிறார்.
(இதுதான் கதை. டைரடக்டர்களே ..டைரடக்டர்களே .. உங்களுக்காகவே எழுதப்பட்ட இந்தக் கதையை உங்களில் யார் முதலில் காப்பியடிக்கப் போகீறீர்கள்? Chetan Bhagat கோர்ட்டுக்குப் போவார். ஆனால், அதற்கு முன்பாகவே உங்களில் யாராவது, இந்தக் கதையை உங்களிடமிருந்துதான் Chetan Bhagat காப்பியடித்து எழுதியிருக்கிறார் என்று ரிட் பெட்டிஷன் ஒன்று மதுரை உயர்நீதி மன்றத்தில் பதிந்து வையுங்கள்!
ஒரிஜினலான கதை என்று ஏதாவது இருக்கிறதா என்ன? அது Chetan Bhagat-ற்கும் தெரியாதா என்ன?
----
10-12-2014

அதை படிக்கவே கூடாதென்று நினைத்திருந்தேன். சிரங்கு பிடித்தவனின் பிடிவாதம் எத்தனை நாளைக்கு? அந்தப் புத்தகத்தைப் பற்றிய பல review-க்களைப் படித்தபிறகு, அதில் ஒன்றுமே இல்லை என்று விளங்கிப் போனதால் இவரின் முந்தைய நாவல்களைப் போல உடனடியாக படிக்கவும் தோன்றவில்லை. தவிர, இவரின் எழுத்துக்களின் pattern முழுவதும் demystify ஆகிவிட்டது. இவரின் நாவல்கள் படிக்கப் படிக்கவே ஒரு stylistic analysis செய்ய இடம் தருமளவிற்கு எளிதாகவும், எதிர்பார்த்த வண்ணமுமாகவே உள்ளன. முதல்இரண்டு நாவல்களைத் தவிர அடுத்த நான்கும் திரைப்படங்களுக்கான screenplay-களாக செய்யப்பட்டவை என்பதில் எனக்கு எந்த சந்கேகமும் எப்பொழுதும் இல்லை. மிஞ்சிய புத்தகங்களையும் ஹிந்தி சினிமாக்காரர்கள் தலையில் கட்ட முடியாவிட்டால், இவரின் IIM புத்தி மிகவும் ஏமாற்றமடையும்.
Half Girlfriend முன்னுரையையும் முதல் அத்தியாயத்தையும் எட்டு நிமிடங்களுக்குள் சின்னப்பையன் ஒருவன் நண்பர்களோடு பேசிக்கொண்டே சிறுநீர் கழிப்பதுபோல சுலபமாக படிக்க முடிந்ததில் எனக்கு ஏமாற்றம்தான். ஆனால் Chetan Bhagat இதையெல்லாம் அறிந்திருக்கிறார். தன்னை யாரும் பெரிதாக எண்ணிவிட வேண்டாம், நான் ஒரு வணிக மேலாண்மையாளராக இருந்து எழுத வந்திருக்கிறேன், எழுத்து வணிக நோக்கம் கொண்டே செய்யப்படுகிறது, இதில் எனக்கு உதவ ஒரு அணியையே உருவாக்கி வைத்திருக்கிறேன், புதிதாக ஆங்கிலம் படிக்க வந்தவர்கள், முதல் தலைமுறை ஊரக மாணவர்கள், பெரிய பெரிய ஆங்கில நாவல்கள் படிக்க விரும்பி சோம்பல் மற்றும் இயலாமை காரணமாக முடியாமல் போனவர்கள் ஆகியோருக்குத்தான் எழுதுகிறேன் என்பதையெல்லாம் முற்றாக அறிந்திருப்பவர்.
இன்னும் ஒரு நாளைக்குள் ஒரு சின்னப்பையன் வீட்டுப்பாடம் எழுதும் நேரத்தில் படிக்க முடியும் இந்தப் புத்தகத்தை. படித்துவிட்டு சொல்கிறேன்: நான் மேலே சொன்னதெல்லாம் இந்த முறையும் சரியா என்று!
----
06-12-2014
இன்று தமிழ் தி ஹிந்துவில் குப்புசாமி அவர்கள் எழுதிவரும் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய தொடர் அத்தியாயம் அற்புதமாக வந்திருக்கிறது. ஜெயகாந்தன் அவர்கள் மரணத்தை நோக்கும் விதம் குறித்து, கூடவே இருந்து அவதானித்த குப்புசாமி அவர்கள் ரம்மியமான தமிழில் எழுதியுள்ளார்.
தான் மறக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் அனைவருக்கும் உண்டு. அதுதான் மரணபயத்தையே உண்டாக்குகிறது. மரணத்திற்கு முன்பாக, தன்னை மனிதகுலமே எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நல்லதையோ கெட்டதையோ மனுசப்பயல் தொடர்ந்து கைங்கர்யம் பண்ணிக்கொண்டு வருகிறான்.
கிரஹாம் பெல்லுக்கு டெலிபோன். ஷாஜகானுக்கு தாஜ்மஹால். ஹிட்லருக்கு ஹோலோகாஸ்ட். பக்கத்துக்கு வீட்டுக்காரனுக்கு ஏழு பிள்ளைகள்.
எழுதுவதற்கான நோக்கமும் வேறில்லை!
----
06-12-2014
இன்று ஆங்கில தி ஹிந்துவில் ஆனந்த் பார்த்தசாரதி அவர்கள் எழுதியுள்ள கிருஷ்ண ஐயரைப் பற்றிய நினைவுக் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. முப்பத்தைந்து வருடங்களாக அந்த தினசரியில் அய்யர் அவர்கள் வெவ்வேறு விடயங்களைப் பற்றி எழுதி வந்தார்கள். ஆனால், அந்தப் பெரியவருக்கு பொருத்தமாக விலாவாரியான அஞ்சலிக் கட்டுரை ஒன்று தி ஹிந்து வெளியிடவில்லையே என்ற வருத்தத்தை ஓரளவு இந்தக் கட்டுரை போக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அய்யரிடம் நான் கண்டுணர்ந்த விழுமியங்களையே ஆனந்த் பார்த்தசாரதி அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறபோது சந்தோஷமும் வருத்தமும் வருகிறது.
அய்யர் அவர்கள் இறந்திருக்க வேண்டாம். அவரின் தீர்ப்புரைகள், நூல்கள், கட்டுரைகள் மூலமாக அவர் ஜீவித்திருப்பார் என்றாலுங்கூட, ஸ்தூலமாக அவர் இறந்திருக்க வேண்டாம்.
ஒருவேளை அவர் இறக்கவில்லையோ என்னவோ!
----

கற்பித்தவன் இறைவன்

| Friday, December 5, 2014



திரு வி.ஆர்.கிருஷ்ண அய்யர் மறைந்து விட்டார்.  இந்த செய்தி இடி போல் இறங்கியது நேற்று இரவு.  அண்மையில்தான் தனது நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட போது அதில் தள்ளாமையையும் பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்தவர்.  என்னைப் போல லட்சக்கணக்கானோரின் கதாநாயகன்.  அனில் திவன், சோலி சோரப்ஜி போன்றோரின் அஞ்சலிக் கட்டுரைகள் இன்று தினசரிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.  தமிழ் ஒலி ஒளி ஊடகங்களில் சன் டிவி மட்டும் நேற்று சிறப்பானதொரு அஞ்சலி அரங்கை நடத்தியது. தியாகு, மனுஷ்யபுத்திரன் மற்றும் உயர்நீதி மன்ற வழக்குரைஞர் ஒருவர் கலந்து கொண்டு அய்யரின் வாழ்வையும் சிறப்பையும் எடுத்துரைத்தனர். 

அய்யர் அவர்களை நான் எப்படிக் கண்டடைந்தேன்? எனது இருபதுகளில் ‘தி ஹிந்து’ எப்போதும் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கும்.  ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர்கள் தி ஹிந்துவை கையில் வைத்திராவிட்டால் தங்களின் மிகச் சிறந்த அடையாளத்தை இழந்து நிற்பார்கள் என்று நாங்கள் நம்பவைக்கப்பட்டிருந்தோம்.  அதில் வரும் தலையங்கங்கள், நடுப்பக்க கட்டுரைகள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தரப்படும் open page என்ற நான்கு பக்க சிறப்பிதழ் ஆகியவை, ஆங்கில இலக்கியம் கற்கும் மாணவனின் பார்வையில், இன்றியமையாதவை.  காலையில் தி ஹிந்துவை படித்துவிட்டு, கல்லூரிக்குப் போனால் பெரும்பாலும் அங்கு மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துக் கொண்டிருப்பார்கள்.  பி.ஏ, ஆங்கில இலக்கிய மாணவர்கள் சுமார் பத்து பேர் மைதானத்தில் அமர்ந்து அன்று தி ஹிண்டுவில் வெளிவந்திருக்கும் தலையங்கம், மற்றும் சிறப்புக் கட்டுரைகளை விவாதிக்க ஆரம்பிப்போம்.  வகுப்புகளைவிட இது ஏனோ எனக்கு மிகவும் பிடித்துப் போனது. 

இந்த விவாதங்களின்போதுதான் கிருஷ்ண அய்யர் அறிமுகமானார். ‘நெருப்பு பறக்கும்’ எழுத்துக்கள்.  English Prose Paper I-ல் இருந்த எந்த ஆங்கில இலக்கிய கர்த்தாவின் எழுத்துக்களையும் விட எனக்கு, அய்யரின் நடையும், சொல்லாடலும் பிடித்துப்போனது. அய்யரின் அடுத்த கட்டுரை தி ஹிந்துவில் எப்போது வரும் என்று ஏக்கம் பிடித்துக் கொள்ளும்.  கட்டுரை ஒன்று வெளிவந்து விட்டால், நண்பர்களை தொலைபேசியில் அழைத்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வோம். அன்று விவாதம் களைகட்டும். ஐயரின் கட்டுரை வெளிவந்த நாட்களில் நண்பர்கள் அனைவரும் தங்கள் வீட்டிலிருந்து dictionary கொண்டு வருவோம்.  ஒரு கட்டுரையில் அறுபது முதல் நூறு வார்த்தைகளாவது நாங்கள் முதல்முறையாக கேள்விப்படுவதாக இருக்கும்.  வெட்கங்கெட்ட அரசியல்வாதிகளை கட்டுரை ஒன்றில் pachydermic politicians என்று வர்ணித்திருப்பார்.  

தொழில்முறை ஆங்கில வாத்தியார் ஆகி இருபது வருடங்களுக்கு மேலான இற்றை நாட்களில், எப்போதாவது பொதுவெளிகளில் பேசும்போது, உங்களுடைய உரையில் இருந்த பல வார்த்தைகள் எங்களுக்குப் புரியவில்லை என்பதாக சிலர் சொல்கிறார்கள்.  அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கக்கூடும்.  மைதானத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாக அய்யரின் கட்டுரைகளை வைத்துக்கொண்டு அனல் பறக்க விவாதங்களை நடத்திய பிறகு, அவரின் பாதிப்பு கொஞ்சமும் இல்லாமலிருக்க, நாமென்ன pachydermic politicians-களா? 

நேற்று இரவு தூக்கம் பிடிக்கவில்லை, எவ்வளவு முயன்றாலும்.  பிரிந்தவர்கள் நம்மை இப்படியா பாதித்திருக்கிறார்கள்?  அய்யர் ஒரு வகையில் எனக்கு ஆசிரியர்.  எனக்கு ஆங்கிலம் இருபத்தைந்து வருடங்களாக சொல்லிக் கொடுக்கிறார்.  இன்னும் இருபத்தைந்து வருடமாவது சொல்லிக் கொடுப்பார் என்று நம்பிக்கை.  எனது முதல் ஆங்கில ஆசிரியர் திரு.டிவிஎஸ் மார்ச் 2012-ல் என்னை அனாதையாக்கிவிட்டு போனார்.  அய்யரின் நேற்றைய முடிவில் எனது துரோணாச்சாரியாரும் மறைந்தார்.

மண்ணும் மலை கடலும் விண்ணும் மறையும். பெரியவர்கள் போன திசை நோக்கி மனம் கரம் தொழுது நிற்கிறேன்!