skip to main |
skip to sidebar
நவம்பர் 30, 2014
சற்று முன்பு THIRD
PERSON படம் பார்த்து
முடித்தேன். மிகவும்
மெதுவாக நகர்வது
போல கொஞ்ச நேரம் உணர்ந்தாலும், பிற்பகுதியில்
மிகவும் ஆழமாக கால் பரப்பி கரையை அகலப்படுத்தியவாறு முன்னேறுகிறது. Babel போலவே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத
சம்பவங்கள் இரண்டு மணி நேரத்தைக் கட்டுகின்றன. ஒரு எழுத்தாளர் - மனைவி - காதலி என்ற ஒரு
சங்கிலி. சந்தேகிக்கும்
படியான தொழிலில்
இருப்பவன் - எதிர்பாராத இடத்தில் சந்திக்க நேரும் வேற்று மொழிப் பெண்
என்ற அடுத்த சங்கிலி. மணமுறிவிற்குப் பின் தன்னுடைய முன்னாள்
மனைவியிடம் மகனை காட்ட மறுக்கும் தந்தை - பார்க்கத்
துடிக்கும் தாய் - தந்தையின் இந்நாள் காதலி என்ற மூன்றாவது சங்கிலி.
படத்தில் இந்த மூன்று
சங்கிலிகளும் எந்த இடத்திலும் ஒன்றுக்கொன்று உரசிக் கொள்ளவோ, பிணைந்து கொள்ளவோ இல்லை. என்ன
சொல்ல வருகிறது இந்தப் படம் என்பதை தமிழ்ப் படம் பார்க்கும் மனநிலையோடு
ஒருவர் புரிந்து கொள்ள முடியாது. வசனங்கள் - கூர்மையாக கவனிக்கும்
பட்சத்தில் - இதற்கு முன்னே என்ன நடந்திருக்க முடியும் என்று சொல்கின்றன. எல்லாவற்றையும்
தெளிவாக விளக்க இயக்குனர் முயலாதது மட்டுமல்ல, அப்படிப்பட்ட செயலை முனைந்து தவிர்க்க முயன்றிருக்கிறார். முக்கியமாக,
ஒத்துக்கொள்ளப்பட்ட
சமூக மதிப்பீடுகளைப் பற்றிய பயம் இயக்குனரிடம் இல்லை.
இந்தப் படத்தின் கதை
என்ன? சம்பவங்களை
மட்டும்தான் இந்தப் படம் காட்டுகிறது என்று எண்ணுவதற்கு இடம்
இருக்கிறது. ஆனால்,
இந்தப் படம் கதை
ஒன்றையே மூலமாக வைத்து நகர்கிறது. எதைத் தேடி தினமும் ஓடுகிறோமோ, எதைத் தேடிக் கண்டுபிடித்து விட்டதாக இறுமாப்பு
கொள்கிறோமோ, எதை
பிறந்த குடும்பத்திலேயோ அல்லது மணந்த குடும்பத்திலேயோ கண்டுவிட்டதாக நிம்மதி
பெருமூச்சு முதலில் விட்டு பின்பு நிராசையால் மூச்சடைத்து போகிறோமோ,
எதை மனைவிகளை
காதலிகளாக ஆக்குவதின் மூலமோ மனைவிகள் காதலிகளாக மாறுவதின் மூலமோ பெற
நினைக்கிறோமோ, எதை
பெரும் பணம் மற்றும்
அதிகாரம் மூலமாக அடையமுடியும் என்று நினைக்கிறோமோ அதை - உண்மையான அன்பை
- அடைய எதுவுமே
வலிந்து செய்ய வேண்டாம் என்பதைப் பற்றித்தான் இந்தப் படம் பேசுகிறது.
Archies Poster ஒன்று
உண்டு. மிகவும்
புகழ் பெற்றது எண்பதுகளில்.
நான் அடிக்கடி
நண்பர்களிடம் நினைவு கூறுவதுண்டு. அதன் வாசகம் இப்படி இருக்கும்.
If you love
something,
set it free.
if it comes back,
it is yours;
if it doesn't,
it never was.
பெரிய ஹீரோ-வில்லன்
வேலையெல்லாம் எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும்: அதை - அன்பை - கண்டுணரலாம் என்கிறது
இந்தப் படம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
----
நவம்பர் 28, 2014-11-30
இன்றைய தி ஹிந்து
தமிழ்ப் பதிப்பில் திரு.மு.ராமநாதன் அவர்கள் எழுதியுள்ள intellectual
property கட்டுரை ஒன்று
வந்திருக்கிறது. தனது கட்டுரையின் சில பகுதிகள் முப்பது
வருடங்களுக்கு முன்னால் ஒரு முறையும், அண்மையில் ஒரு முறையும் திருடப்பட்டு விட்டன என்று கவலைப்படும்
ஆசிரியர், plagiarism இங்கு
எப்படி நடந்து வந்திருக்கிறது என்பதைப்பற்றி சற்றே விவரிக்கிறார். இலக்கியத் திருட்டு ஒன்றும் நமக்கு
புதிதல்ல. திரைப்படத் துறையில்
சமீப காலமாக வெளிவரும் எல்லாப் படங்களும் தன்னுடைய கதையிலிருந்து திருடப்பட்டதாக எங்கிருந்தோ ஒருவர்
கோர்ட்டை அணுகிய வண்ணம் உள்ளார். அதற்கு
ஆதாரமாக சில வருடங்கள் முன்னமேயே தான் எழுதி
பதிப்பித்த புத்தகம் ஒன்றையும்
காட்டுகிறார். திரு.கமல்ஹாசன் அவர்களின் பெரும்பாலான
படங்களும் இந்த ரகத்தை சேர்ந்தவைதான் என்று ஆவண
சாட்சியாக தெளிவு படுத்தும் புத்தகம் ஒன்றை
புத்தகக் கடை அலமாரி ஒன்றில் கொஞ்ச நாள் முன்பு பார்க்க நேர்ந்தது. The
secret of creativity lies in your intelligence of hiding the source -என்று
எங்கேயோ படித்தது ஞாபகம் வருகிறது. Copying என்பதில்
உள்ள கௌரவக்குறைச்சல் inspiring என்பதில்
இல்லை.
எல்லாமே inspiring
மயம்தான்!
----
நவம்பர் 24, 2014
திரு.ரவி சுப்ரமணியன்
இயக்கியுள்ள எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய ஆவணப் படத்தைப்
பார்த்திருக்கிறீர்களா? ரவி
சுப்ரமணியன் அவர்களின் நேர்முகம் ஒன்று அண்மையில் தி ஹிந்து
தமிழ்ப் பதிப்பில் படிக்க நேர்ந்தது. உடனே, இந்த ஆவணப் படத்தைப் பற்றிய எண்ணங்கள்
மனதில் ஓட இதை எழுதுகிறேன். இளையராஜா அவர்கள் இந்த ஆவணப்படத்தை
தயாரிக்க முன் வந்ததாக குறிப்பிடும் ரவி சுப்ரமணியன், ஜெயகாந்தன் அவர்களின் ஆளுமையை ஒரு ஆவணப்
பட எல்லைக்குள் எந்த அளவு சிறப்பாக கொண்டுவர முடியுமோ, அந்த முழு அளவையும் செய்திருக்கிறார். ஜெ.கே. பல விடயங்களைப் பற்றி எந்த வித
மனத்தடைகளும் இல்லாமல் பேசுவது பிரமிப்பு. தன்னுடைய பழக்க வழக்கங்களை பார்ப்பவன்
என்ன நினைப்பான் என்ற தடங்
கல்கள்
இல்லாமல் படம் பிடிக்க அனுமதித்திருக்கிறார். பாரதியைப்
பற்றி பேசுகிறபொழுது, திடீரென்று
அவருள் புகும் பெரும் சக்தி. பூஞ்சை உடம்பிற்குள் அணுகுண்டின் ரௌத்திரம்.
இது YouTube-ல் கிடைக்கிறது. ஆறு பகுதிகளாக.கண்டிப்பாக பாருங்கள்.
வேறு எதற்காகத்தான் மனுஷனாக பிறந்திருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்?
----
November 25, 2014
There are always two gangs of people when it comes to assess the quality of
short stories. One group would advocate the theme part of the story. For them,
the theme must be of noble nature and should be relevant to the present
scenario of the society. Moreover, it should sensitize the reader on the
burning issues of the passing days. They don't mind if it has to carry some
dose of preaching and propagation.
The other gang is for craftsmanship. 'Art for Art's Sake" is their mantra. The theme does not feature at the top of their
priority list when they come down to read a story. The 'how' part is more
important for them than the 'what' part. Tamil writer Sujata would easily join
this band. When I completed reading a volume of short stories by Somerset
Maugham recently, I had to feel that this side of the issue has more merit in
its advocacy than the group earlier mentioned. Somerset Maugham is awesome and
incandescently brilliant. His perfect craft and the strategies employed and
twists woven into the fabric of narration are all marks of rare genius.
Read his Short
Stories Volume I and you'll more than agree with me!
----
நவம்பர் 25, 2014
நீதியரசர்
வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
கேரளாவில் தொடர்ந்து
பல நிகழ்ச்சிகள் இவரை கௌரவபடுத்தும் விதமாக நடத்தப்
படுகின்றன. உலகத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட
இடதுசாரி அரசில் அமைச்சராக இருந்தவர். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராகவும்,
நீதியரசராகவும்
இருந்தவர். அரசியல்வாதி. மாநில
அமைச்சர். உயர்
நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசர். சிந்தனையாளர். அடித்தட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல்
கொடுத்து வருபவர். இந்திய சட்டம்
உட்பட பல
சட்டச் சீர்திருத்தங்களுக்காக குரல் கொடுப்பவர். மரண
தண்டனையை எதிர்ப்பவர். இன்னும்
சொல்லிக் கொண்டே போகலாம்.
இவை யாவையும் விட,
எனக்குப் பிடித்தது இவரின்
ஆங்கிலப் புலமைதான். நம்ப முடியாத அளவில் சொல்லாட்சி கொண்டவர்.
இவரின் தீர்ப்புரைகளையும், இதழ்களுக்காக
இவர் எழுதியுள்ள கட்டுரைகளையும், (குறிப்பாக
சில வருடங்களுக்கு
முன்பு கிறிஸ்துமஸ் முதல் நாள் ஏசுநாதரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரை), நூற்களையும் படிக்கும்போது நிஜமாகவே
என்னுடைய உடம்பில் தாங்க முடியாத சூடு பரவுவதை
உணர்ந்திருக்கிறேன். இவரைப் போல என்னால் ஆங்கிலத்தில் எழுத முடியும் என்ற
வரத்திற்காக, நான்
ஒருவேளை செல்வம் மிக்க தேசத்தின் சக்ரவர்த்தியாக
இருப்பேனேயானால், தேசத்தையே
மாற்றுக் கொடுப்பேன்.
உண்மையாகவே, இருக்கிறாரோ இல்லையோ, கடவுளிடம் வேண்டுகிறேன்: "நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் இன்னும் நூற்றாண்டு
உடல் உள்ள
நலத்துடன் வாழ்ந்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க வேண்டும்."
----
நவம்பர் 27, 2014
இன்றைய தமிழ் தி
ஹிந்துவில் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களைப் பற்றிய முழுப் பக்க தகவல்கள் படங்களுடன்
சிறப்பாக வந்திருக்கிறது.
இன்று அவரது பிறந்த
தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர்
குறித்த நினைவுகள் பசுமையாகவே இருக்கின்றன.
எனது பட்ட
மேற்படிப்பு ஆண்டுகளில் அவரைப் பற்றிய பாராட்டும் விமரிசனமும் கல்லூரியில்
மாணவர்களிடமும், அதைவிட
அதிகமாக பேராசிரியர்களிடமும்
எப்பொழுதும் கேட்க முடியும். ராஜீவ் காந்தியின்
மந்திரி சபையில்
முதலில் நிதி அமைச்சராகவும், பின்னர்
ராணுவ அமைச்சராகவும் இருந்த காலங்களில் மிகுந்த சர்ச்சைக்குரியவராக இருந்தவர். ராஜீவின் அடியொற்றிகளின் nightmare-ஆக இருந்தவர். Bofors ஊழலின்
முதல் சங்கை ஊதியவர்.
இந்தியாவின் முதல்
பிராமணரல்லாத பிரதமர். மண்டல் கமிஷன் மைய அரசிடம் தனது அறிக்கையை
ஒப்படைத்த நாள் முதல் பிரதமராக இருந்தவர்களெல்லாம் பரிந்துரைகளை அமுல்படுத்த
முன்வராத போது, 1989-ல்,
தான் பிரதமராக இருந்த
காலத்தில், துணிந்து
அமுலாக்கியவர். இதைத் தொடர்ந்து பாரதீய ஜனதா உள்ளிட்ட பிற கட்சிகள் வன்மையோடு எதிர்த்த பொழுது, கொஞ்சமும் அசராதவர். அதன்
பொருட்டு, தனது
ஆட்சியையே இழந்தவர்.
தில்லியில் உயர் சாதி
மாணவர்கள் புகழ்பெற்ற
சர்வகலா சாலைகளில் நாடு அதிரும் போராட்டங்களை நடத்தி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியபோதும், தனது நிலையிலிருந்து பிறழாதவர். கோஸ்வாமி என்ற
மாணவர் தன்னை தீயிட்டுக் கொளுத்திக் கொண்டதை அப்போதைய எல்லா ஊடகங்களும் முதல்பக்க புகைப்படத்துடன்
வெளியிட்டு வி.பி.சிங் அவர்களுக்கு எதிரான ஒரு தீவிரமான எதிர்ப்பு அரசியல்
மனநிலையை உருவாக்கிய போதுங்கூட, கலங்காதவர்.
நான் உட்பட எத்தனையோ
ஆயிரமாயிரம் பேர்கள், 1991-லிருந்து
நடுவண் அரசில் பணியில் சேர முடிந்தது திரு.வி.பி.சிங் அவர்களின் மண்டல் கமிஷன் பிரகடனம் மூலம்
உருவாகிய அரசியல் சட்டப்படியான வாய்ப்புகளால்தான். வி.பி.சிங்
அவர்களின் முக்கியத்துவத்தை தமிழகம், குறிப்பாக திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம்,
நன்கு உணர்ந்திருந்தது. உடல்
நலம் பாதிக்குப்படும் முன் வரை கூட, தமிழகத்தோடு நன்கு தொடர்பில் இருந்தவர். இவர் பிரதமராக
இன்னும் கொஞ்ச வருடங்கள் நீடித்திருந்தால், பிற்படுத்தப்பட்டவர்களின் இந்தியா ஒன்று உருவாகியிருக்கும். ஆனால்,
அப்படி நினைப்பது கூட
பேராசைதான். ஆதிக்க சாதிகளின்
வல்லமையை மிகக் குறைத்து மதிப்பிடுவதாகும் அது.
அவரின் பிறந்த
நாளான இன்று, யார்
இவர் நினைவைப் போற்றுகிறார்களோ இல்லையோ, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களின் அருவம் எங்கிருந்தோ இவரை
பாராட்டியபடியே இருக்கும்.
மண்டல், ஈ.வெ.ரா., வி.பி.சிங் உள்ளிட்ட
சிலர் மாற்று பாரதத்தின் மனசாட்சிகள்!
----