தனி மனிதனின் வாழ்க்கை என்பது நூதனச் சிக்கல்களால் நிறைந்திருக்கிறது. சராசரியாக அறுபதும், விதிவிலக்கான மனிதர்களின் கதையில் எண்பது வருடங்களுமாக நீளும் இந்த வாழ்க்கையில் துன்பங்கள் தீர்க்க முடியாத சிக்கல்களால் வளர்கிறது. தீர்வு ஏதும் தெரியாத நிலையிலேயே மனிதனுக்கு இவ்வுலகு விடுதலை அளித்து அனுப்பி வைக்கிறது. தன்னுடைய பூதவுடலுக்கு நேரும் நோய்மையும், முதுமையும் பெரும் துயரம்தான் என்ற போதிலும், சமூகத்தோடு அவன் கொண்டிருக்கிற உறவால் சமூகம் அவனுக்கு வழங்குவதான அக மற்றும் புற உலகு சார்ந்த துன்பங்களால், வலிமையின் ஆணவத்தால் இறுமாந்து நின்ற அவன் சிறுகச் சிறுக செல்லரித்துப்போய் மனம் பேதலித்து தனக்குள்ளாகவே பேசி மறுகி சாவை மட்டுமே எதிர்பார்த்து, வந்தவுடன் கிளம்பிப் போகிறான்.
சமூகத்தின் வாயெங்கும் ரத்தக்கறைகள். சமூகம் ஒரு யட்சி. கிட்ட வந்து மோகம் காட்டி, மயக்கி, சுகமே போல ஒன்றை தந்து, சொக்கி நிற்கும் வேளையில் கடித்துக் குதறி ரத்தம் குடிக்க தொடங்கும். சமூகத்தின் பேச்சு விஷக்குரலால் ஆனது. அதன் தராசுகள் பல்வேறு தருணங்களில் வேறு வேறு நியாயங்கள் காண்பிக்கும். பழி வாங்குவதிலும் சமூகத்தின் குணம் வேறு எதற்கும் சளைத்ததல்ல. அதற்கு யானையின் நினைவாற்றல் உண்டு. அதிகாரத்தைக் கண்டு சற்று பயப்படுவதைப்போல் நடித்தாலும், சீக்கிரம் அதிகாரமே இதைக் கண்டு பயப்படும். சமூகத்தின் உடம்பு துர்நாற்றத்தால் ஆனது. யாரையும் தூக்கிப் பிடித்த மறுகணமே, விளாசி அடிக்கும் குணம் கொண்டது.
மனிதனின் வரலாற்றில் அவனுடைய எந்த சமூகமுமே இந்த பொதுவான குணங்களால்தான் நிரம்பி இருக்கிறது. நாகரீகம் வளர வளர சமூகம் தனது முந்தைய நிலையைவிட, மேலும் மோசமான அக மற்றும் புற சவால்களைத்தான் தனிமனிதனுக்கு தந்திருக்கிறது. துன்பமே உருவான இந்த வாழ்க்கையில் சில மகத்தான மனிதர்களையும், தருணங்களையும் சந்திக்கும் பாக்கியம் பெற்ற ஒரு தனி மனிதன் அந்த பெரும் மனிதர்களின் தரிசனங்கள் தரும் ஞானத்திலும், அற்புதமான தருணங்களின் வெளிச்சதிலும்தான் மிச்ச நாட்களை ஓட்டி, மறுகி, மரித்துப்போகிறான்.
தமிழ் நவீன இலக்கியத்தின் பெரிய ஆளுமைகளில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாவலான "கால வெள்ளம்" கிழக்கு பதிப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது. இவருடைய பிந்தைய புனைவுப் படைப்புகளை பெரும்பாலும் படித்து முடித்த பிறகு, அவரின் ஆதி புனைகதையான கால வெள்ளத்தை படிக்கும்பொழுது, இவரின் படைப்புத் தொடர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் புரிகிறது. இதில் கதை சொல்லப்பட்டிருக்கும் முறை, அவரின் பிந்தைய நாவல்களில் காணப்படும் நடையியல் சார்ந்த குணாதிசியங்களில் இருந்து வேறுபட்டது. 1920-களில் ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரும் செல்வாக்குடன் வாழ்ந்த பச்சைக்கல் என்ற தனிமனிதனின் கதையாக தொடங்கும் புனைவு, அக்காலத்திய பெண்களின் துயர் சொல்லும் கதையாக வளர்ந்து, அந்நாளைய கல்வி, சமூக வாழ்க்கைமுறை, மெல்ல வேகம் எடுத்துக்கொண்டிருந்த தேசிய விடுதலைப் போராட்டத்தின் கதையாக கனிந்து, ஒரு குடும்பத்தின் பரிணாமத்தில் முடிகிறது.
ஸ்ரீரங்கத்து பிராமணர்களின் கதையுமாகும் இது. விதவிதமான பிராமணர்கள். தாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பது பற்றி சுரத்தையில்லாமல், மற்ற எல்லாவற்றையும் கணித்துக்கொண்டிருக்கும் அந்த திண்ணை பிராமணர்கள், யாரையும் தங்கள் பேச்சுக்களால் நொறுக்கிப் போட முடியும். தாங்கள் விளையாடும் சீட்டை குலுக்கிப் போடுவதைப்போல, எவரின் வாழ்க்கையையும் குலுக்கி நொறுக்கிவிட முடியும் என்ற இறுமாப்பில், திண்ணை பேச்சுக்களால் ஸ்ரீரங்கத்தையே இவர்கள் நிரப்பியிருந்தனர்.
பச்சைக்கல் நல்லவரா கெட்டவரா என்று நாவலின் வாசகன் மட்டுமல்ல, அவராலேயே தீர்மானித்துவிட முடியாத மனிதர். எல்லோரையும் கட்டுப்படுத்த நினைத்து யாரையுமே கட்டுப்படுத்த முடியாமல் போனவர். மிக அபூர்வமான நற்குணங்களும் தன் முரட்டு சுபாவத்தில் இருக்கக் கொண்டவர். முதல் மனைவி உயிரோடு இருக்கையில், இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுப்பது, குழந்தை வேண்டுமென்பதற்காகவோ, ஆண் குழந்தை வேண்டுமென்பதற்காகவோ அல்ல, பெண் குழந்தை வேண்டுமென்பதற்காகத்தான் என்று அறிய வரும் வாசகன், அவரை எப்படி எடை போடுவது என்று திகைத்துப் போகிறான். இந்த நாவல் களனாக கொண்ட காலங்களில் ஆண் எவ்வளவு அதிகாரம் படைத்தவனாக குடும்பம் என்ற அமைப்பில் விளங்கியிருக்கிறான் என்று அறியவரும் இன்றைய இளைஞன் பிரமித்துப் போகிறான். குடும்ப சொத்துக்கு வாரிசு என்ற நிலை அக்குடும்பத்தின் மூத்த ஆணுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கிவிடுகிறது. முதல் மனைவியிடம் தான் இன்னொரு கல்யாணம் செய்ய இருப்பதை எந்தவித சங்கோஜமும் இல்லாமல் அறிவிக்கமுடிகிற இந்த பச்சைக்கல், அந்தக்கால காவிரிக்கரை பிரபுத்துவ பிரதிநிதி. தன்னைவிட முப்பது வயது குறைவான பெண்ணை திருமணம் செய்யும் ஆசை இருந்தாலும், முக்கியமான காரணம், குடும்ப ஜோதிடர் பெண்குழந்தைக்கான சாத்தியம் பற்றி கணித்திருக்கிற ஆருடம்தான் அவரை இயக்குகிறது. தன் மனைவிகளிடம் பணிவைத் தவிர வேறு எதையும் விரும்புவதோ எதிபார்ப்பதோ இல்லாத இந்த பச்சைக்கல், பெண் பித்தர் அல்லர். அவரின் துர்குணமாக நாவலில் பிரதானமாக சொல்லப்பட்டிருப்பது, அவரின் கோபம்தான். எல்லோரையும்போல, அவருடைய இயலாமையும் கோபம் என்ற வடிகாலையே தேடுகிறது எப்பொழுதும்.
தன்னுடைய இளம் மனைவி படித்திருக்கிறாள் என்பதிலிருந்து தொடங்குகிறது அவரின் துன்பம். செல்லத்திற்கு பச்சைக்கல்லை எதிர்க்க நேரும் சமயங்களிலெல்லாம், அதை மிகச் சரியாக செய்கிறாள். அவரின் பணம் மற்றும் செல்வாக்கு இவளை சற்றும் பாதிக்கவில்லை என்பது அந்நாளைய பள்ளிக்கூட கல்வியைப் பற்றி வாசகனுக்குள் பெரிய மரியாதையை ஏற்படுத்துகிறது. பச்சைக்கல்லின் முதல் மனைவி அலமேலு வாசகனை கண்மூடி சிந்திக்கவைக்கும் பாத்திரம். உண்மையில், பச்சைக்கல்லை நன்கு அறிந்த ஒரே மனுஷி அவள்தான். பச்சைக்கல் நேசித்த ஒரே மனுஷியும் அவள்தான். பச்சைக்கல்லை அவள் தூஷிப்பதில்லை; மாறாக, புரிந்துகொள்ள முயற்சிக்கிறாள். தனது கணவரின் இரண்டாவது மனைவியாக அந்த பிரம்மாண்டமான வீட்டிற்குள் நுழைந்திருக்கும் செல்லத்தை தனது மகள் போலவே நடத்தும் இவள், பச்சைக்கல் பிராமணரின் ஒரே பலம். இவள் நோய்மைக்குப் பலியாகிற தருணம்தான், பச்சைக்கல்லின் போதாத காலத்தின் தொடக்கம். பெண்பிள்ளை பெறுவதற்காக மணந்து கொண்டவளுக்கு ஆண் பிள்ளையும், ஏற்கனவே இரண்டு ஆண்குழந்தைகளை பெற்றுத்தந்த முதல் மனைவிக்கு பெண் குழந்தையும் பிறப்பது வாழ்க்கையின் வினோதங்களில் ஒன்றுதானே? இரண்டாவது மனைவியாக ஒரு சிறுமி வாய்த்தும், தன முதல் மனைவி மீதான காதல் தீரவில்லை பச்சைக்கல் பிராமணருக்கு. இரண்டு பத்தினிகளும் ஏக காலத்தில் கர்ப்பம் சுமக்கிறார்கள். மிகக் குரூரமாக நம்மால் பார்க்க முடிந்தால், பச்சைக்கல்லின் அன்பை இதில் புரிந்து கொள்ள முடியும். தன் இரண்டாவது மனைவியை இவர் அணுகுவது பெண் குழந்தைக்காக; முதல் மனைவி எப்போதுமே இவரின் அன்புக்கு பாத்திரமாயிருக்கிறாள் என்பது, அக்கால வெளிச்சத்தில், இந்த ஏக காலத்து கர்ப்பங்களால் விளங்குகிறது. பெண்ணானவள் குழந்தை பெற்றுத்தள்ளும் இயந்திரம் அல்ல என்ற பெண்ணீய குரல்கள் கிளம்பியிருக்காத அந்தக் காலங்களில் பச்சைக்கல் மாதிரியான மனுஷன்களும், அலமேலு மாதிரியான மனுஷிகளும் தங்களுக்கிடையேயான தாம்பத்தியத்தின் வலிமையை பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையில்தான் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
மூன்றாவது குழந்தை பிறந்த இரண்டு மாதங்களுக்குள் நோய்மைக்குப் பலியான அலமுலுவின் குழந்தை வேதவல்லிக்கும் சேர்த்து பாலன்னம் தரும் செல்லத்துக்கு, பச்சைக்கல்லின் ஆதிக்கத் திமிர் சுமக்க முடியாத பாரமாகிறது. இவள் சிந்தனை, அறிவால் உருப்பெற்றது. எந்த சூழ்நிலையையும் ஆராய்ந்த பின்னரே புரிந்து கொள்கிறாள் பெண்ணுரிமைப் பற்றி பேசத் தொடங்கியிருக்காத காலங்களிலேயே அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் செல்லம், பிரச்சினைகளை தன்னால் தீர்க்க முடியும் என்று நம்புவள். ஒன்றை பெறுவதற்காக, மற்றொன்றை இழக்கத் தயாரானவள். தன்னுடைய குழந்தை கோபாலனையும் பச்சைக்கல்லிடமே விட்டு விட்டு, திருச்சினாப்பள்ளி வழியாக பட்டணம் சேரும் இவளை, வாழ்க்கை சமூக சேவகியாக கனிய வைக்கிறது.
பச்சைக்கல்லின் குழந்தைகள் நால்வருமே தங்களுடைய வாழ்க்கையில் முற்றுமுதலாக செய்வது, பச்சைக்கல் தங்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்திற்கு எதிர்வினை செய்வதே. உப்பிலி படிக்காதவன். தந்தையார் தன்னை பெரிதாக பொருட்படுத்துவதில்லை என்பதாலேயே, சீட்டாடப்போய் கெட்டுப்போனவன். உண்மையில், இவன்தான் பச்சைக்கல்லை அச்சு அசலாக தோற்றத்தில் உரித்து வைத்திருக்கிறான். அப்பாவைப் போலவே இவனும் கருப்பு. தன்னுடைய சகோதரி மீதும், சகோதரர்கள் மீதும் பொறாமை கொண்டவன். அவர்களைப் பற்றி புறம் சொல்லியே பழகியவன். தன்னுடைய முப்பதுகளின் ஆரம்பத்தில், தன் தாயாரின் புகைப்படத்தின் முன்னின்று கலங்கி அழுது, இனிமேல் சீட்டாடமாட்டேன் என்று சத்தியம் செய்து, உபகாரியாக திடீரென்று மாறுகிறான். வாழ்க்கை எப்பொழுதும் நமக்கான ஆச்சர்யங்களை மறைத்து வைத்திருக்கிறதல்லவா? உப்பிலியின் சகோதரன் சாரங்கன் ஒரு பிறவி சைத்ரீகன். தந்தையாருக்கு பயந்து சிறுவயதில் எங்கேயோ ஓடிப்போய், சைத்ரீக கலையில் மிகவும் தேர்ச்சி பெற்று, பம்பாயில் மராத்தியப் பெண் சந்தியாவை கல்யாணம் செய்துகொண்டு, தெருக்களில் படம் வரைந்து, ஏழ்மையில் மகிழ்ச்சியாக இருக்கமுடிகிற ஒரு இல்லற யோகியாக பரிமளித்துவிடுகிறான். அப்பாவின் குழப்பமான பயமுறுத்தும் ஆளுமைக்கு இவன் செய்யும் எதிர்வினை இது. பச்சைக்கல்லுக்கும் செல்லத்துக்கும் பிறந்த அவரின் மூன்றாவது மகனான கோபாலன் இந்த நாவலில் பச்சைக்கல்லுக்கு அடுத்ததான பிரதான பாத்திரம். அப்பாவிடம் எப்படியோ அனுமதிபெற்று பட்டணத்திற்கு படிக்க கிளம்பும் கோபாலன், தேசிய விடுதலை போராட்டத்தின் தீவிரவாத குழுக்களால் கவரப்பட்டு, பாலங்களை நாசமாக்கவும், ஆங்கிலேய தண்டவாளங்களை தகர்க்கவும் முனைகிறான். ஆனால் சுற்றியிருக்கும் கந்தியவாதிகளிடம் தொடர்ந்து நட்பில் இருக்கும் அவன் காந்தீயத்தின் வலிமையை உணரும் நிமிடம், தன் இயலாமையை புரிந்துகொள்கிறான். விடுதலை போராட்டத்தில் பங்குபெற்றாலுங்கூட, தன்னுடைய குடும்பத்தோடு தொடர்ந்து உறவாடுகிறான். தன்னுடைய தங்கை வேதவல்லியின் திருமணத்தில் நடந்த சீட்டாட்ட குளறுபடிகளால், அவள் வாழாவெட்டியாக வீட்டிலிருப்பதைச் சகிக்காத கோபாலன், அப்பாவுக்கு தெரியாமல் தங்கையை கடத்திச்சென்று சம்மந்தி வீட்டில் சமத்காரமாகப் பேசி, தங்கையை வாழ வைக்கிறான். அவனுடைய புரட்சி இப்படியாக அப்பாவை எதிர்த்தே தொடங்குகிறது. பச்சைக்கல்லின் நான்காவது குழந்தையான வேதவல்லி, அலமேலுவுக்குப்பின் அவருக்கிருக்கும் ஒரே நல்ல ஆறுதல். அவளிடம் மிகுந்த பரிவைக் காட்டுகிறார் பச்சைக்கல். அவளுடைய திருமணம் சுபமாக முடியாமல் அமங்களமாக தொடர்வதில் பெரும் கவலை அவருக்கிருந்தாலும் தன்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுத்து சம்மந்தி வீட்டாரிடம் பேச அவர் தயாரில்லை. வேதவல்லியின் ஆளுமை நன்கு புலனாவது அவள் புக்ககம் போய்ச்சேர்ந்த பின்தான். தன்னுடைய கணவனும், மாமனாரும் கெட்டவர்களில்லை என்று உடனடியாக புரிந்துகொள்ளும் வேதவல்லி, அங்கே ஒரு நல்ல மந்தியாகிறாள்.
இந்த நாவல் நமக்கு திரும்பத் திரும்ப சொல்வது மனிதர்கள் முழுக்க நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை என்பதுதான். ஒரு மனிதன் ஒரே சமயத்தில் நல்லவனாகவும் கெட்டவனாகவும் இருப்பதுகூட சாத்தியம். அவன் நல்லவன் என்றோ, கெட்டவன் என்றோ முடிவு செய்யப்படுவதற்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்படிப்பட்ட எந்தவொரு முடிவும் மாறுதலுக்குட்பட்டதே. காலவெள்ளத்தால் மனிதன் மற்றும் அவன் வாழும் சமூகத்தின் தோற்றம், விழுமியங்கள், அறம் போன்ற எல்லாமே மாறுதலுக்குட்பட்டாலும் - மனிதன் - அவனுடைய அடிப்படை சாராம்சத்தில் - எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்கிறான்.
இந்த நாவலில் வரும் மற்ற கதாபாத்திரங்களான வீரராகவாச்சரியார், ரெங்கு அய்யர், பத்மா, துரைராஜ், ராஜாராமன், திவான் பகதூர் உள்ளிட்டோர் ஒவ்வொருவரும் தனித்த குணங்களுடன் சித்தரிக்கப்படுகின்றனர். இப்புதினத்தின் மூலம் சமூகத்தில் ஒரு காலகட்டத்தை ஒரு தனிப்பட்ட குடும்பத்தைச் சார்ந்த மனிதர்கள் மூலம் கட்டியெழுப்புகிறார் இ.பா. கதையின் பெரும்பான்மை பகுதிகள், இ.பா.வின் பிந்தைய நாவல்களைப்போல தொடர் சம்பாஷணைகளால் ஆனது. பேசிப்பேசியே மானுடக்கதை வளர்கிறது. கேட்கும் மனிதன் பேசுகிறான். பேசும் மனிதன் கதை சொல்கிறான். சொல்லப்போனால், இந்த உலகமே கதைகளால் ஆனது. சொல்லப்பட்ட கதைகளும், சொல்ல மறந்த கதைகளும், கதையின் பிரம்மாண்டத்தை நமக்கு உணர்த்தியபடியே நகர்கின்றன. தன் சொந்த கதையின் கனம் தாங்க முடியாமல், மனம் பேதலித்து எங்கோ ஓரிடத்தை வெறித்து நோக்கிய வண்ணம் நாற்காலியில் அமர்த்தப்பட்டிருக்கும் பச்சைக்கல், காலவெள்ளத்தால் அடித்துச்செல்லப்படவே முடியாத மானுடத்தின் பெருங்கதையை தனது பேதலித்துப்போன மௌனத்தால் சொல்லத் தொடங்கும்பொழுது, நாவல் முடிகிறது.

1 comments:
Post a Comment