சில நேரங்களில் சில புத்தகங்கள்

| Saturday, September 14, 2013
ஜெயமோகனின் "இரவு" நாவல் அண்மையில் படிக்கக் கிடைத்தது. இவரின் வழக்கமான கதை களனில் இருந்து சற்று விலகி, ஒரு இரவு நேர கல்ட் குழு ஒன்றின் செயல்பாடுகள் மற்றும் அது ஒரு தனி மனிதனின் மேல் உருவாக்கும் தாக்கம் பற்றி, இவருக்கே உரித்தான நடையில் இருந்து மாறுபட்டு எளிய நடை ஒன்றை உருவாக்கி எழுதியிருக்கும் புனைவு. பெரிய பாதிப்பை இது ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தாலும், சும்மாயிருக்கையில் நிச்சயமாக வாசிக்கத் தகுந்த படைப்பு.
---------
ச.மாடசாமி அவர்களின் "ஆளுக்கொரு கிணறு " என்ற கல்வி சார் கட்டுரைகளின் தொகுப்பை அண்மையில் படிக்க நேர்ந்தது. இதைப்போல் பதிப்பை ஏற்படுத்திய ஒரு புத்தகம் சமீப காலங்களில் வெளிவரவில்லை. ஒவ்வொருவரும் படிக்க நிச்சயமாக பரிந்துரை செய்யலாம்.
-------
இந்திரா பார்தசாரதியின் கால வெள்ளம் அண்மையில் படித்தேன். இவரின் முதல் படைப்பு இது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. அந்தக்கால பிராமண சமூக வழக்கங்களை, அவர்களின் நம்பிக்கைகளை இன்றைய வாசகன் இந்த பிரதியின் மூலம் நன்கு விளங்கிக்கொள்ள ஏதுவாகிறது. அவசியம் படிக்க வேண்டிய புனை கதை இது.
 --------
  "எனக்குரிய இடம் எங்கே?" - ச.மாடசாமியின் மாஸ்டர்பீஸ். சந்தேகமேயில்லை. அமைப்பு சார் கல்வி முறைகளில் மாணவன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறான். ஆனால் அவனன்றி ஓரணுவும் அசையாது. அவனை மிரட்டியும் தண்டித்தும் ஆசிரியர் தனது மேலான இடத்தை தக்க வைத்துக்கொள்கிறார். அவனுக்கான கல்வியை அளிக்காது, அரசு தனக்கு சௌகர்யமான பாடங்களை அவன் படிக்குமாறு வற்புறுத்துகிறது. 35 வருடங்களுக்கு மேலாக கல்லூரியிலும் அறிவொளி இயக்கத்திலும் பணியாற்றிய இந்தப் பேராசிரியர், எல்லா நிலை ஆசிரியர்களின் மனசாட்சியையும் உலுக்குகிறார். என்னைப் பொறுத்தவரை, இனிமேல்தான் மாணவர்களோடு சேர்ந்து படிப்பை கத்துக்கணும்.                                                                      அருவி மாலை, மதுரை வெளியீடு. ரூபாய் 60.
--------
எஸ்.வி.ராஜதுரை அவர்களின் "பார்வையிழத்தலும் பார்த்தலும்" படித்து வருகிறேன். அரசியல், புத்தக மதிப்பீடு, சமூக நிகழ்வுகளின் எதிரொலிகள், இலக்கிய மறுவாசிப்புகள் என்ற அகன்ற தளத்தில் தான் எழுதிவந்த முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். "ஆர்டில்லெரிகளுக்கிடையே ஒரு வெண் புறா" - என்ற தலைப்பிட்ட கட்டுரையில் சீறிலங்காவின் நாடக, திரைப்பட கலைஞர்களில் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக நடுநிலையாளர்களால் கருதப்படுபவரும், பெளத்த பேரினவாத சக்திகளால் 'குறிவைக்கப்பட்டுள்ளவருமான' தர்மஸ்ரீ பண்டாரனயகெ அவர்கள் மறுவாசிப்புடன் மேடையேற்றிய "ட்ரோஜன் கந்தாவோ" நாடகத்தைப் பற்றி விவரமாக எழுதியுள்ளது சிறப்பானது. தர்மஸ்ரீ பண்டாரனயகெ விடுதலைப் புலிகளை ஆதரிப்பவரல்லர். ஆனால் சிங்கள இனவாதத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குபவர் என்று மதிப்பிடும் எஸ்.வி.ரா. அரசி ஹெக்கெபெயின் மகளும் அப்போலோ கடவுளுக்குத் திருப்பணி செய்வதற்காக தன்னை அர்ப்பணித்திருந்தவளுமான காஸ்ஸண்ட்ரா மற்றும் கிரேக்க மன்னன் மெலனொசின் மனைவியும் காவியத்தின் ஆகப்பெரிய கதாபாத்திரமுமான ஹெலன் ஆகியோரை பரிவுடன் அணுகுகிறார். இவர்களைப்பற்றிய தர்மஸ்ரீ பண்டாரனயகெவின் அணுகுதலை எஸ்.வி.ரா. இப்படிக் குறிப்பிடுகிறார்: "உடலுறவு இன்பமேதும் அனுபவிக்க முடியாமல் தடை செய்யப்பட்டிருந்த காஸ்ஸண்ட்ராவைப் போலவே, உடல் இன்பத்தை நாடியதன் காரணமாகவே பேரழிவுகளை உருவாக்கியவளாகக் குற்றம் சாட்டப்படும் ஹெலனுக்கும்கூட மானுட கெளரவம் மறுக்கப்படுவதில்லை. அன்பும் காதலும் இல்லாத திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டிருந்த அவள் தனக்குக் கிட்டாத சுகங்களைத் தேடி ட்ரோய் நகரத்திற்குச் சென்றதில் தவறில்லை என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறார் தர்மஸ்ரீ." ["பார்வையிழத்தலும் பார்த்தலும்" - எஸ்.வி.ராஜதுரை, சந்தியா பதிப்பகம், சென்னை, உரூபா 200/-]
----------
 

0 comments:

Post a Comment