கண்டதை சொல்பவர்

| Tuesday, May 22, 2018
பொன்மாலைப் பொழுது பொழிவுகளில் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி அவர்களின் பொழிவை நேற்று கேட்க வாய்த்தது. மிகவும் முக்கியத்துவம் கொண்டதான பொழிவு. இலக்கியத்தின் ஆதி நாட்கள் தொட்டு அது எப்படிப் படைக்கப்படுகிறது, படைப்பாளியின் அப்போதைய மனநிலை என்னவாக இருந்திருக்கும், எது படைப்பிற்கான கருவாக கர்த்தாவின் மனதில் சூழ் கொள்கிறது போன்ற ஆயிரமாயிரம் கேள்விகள் படைப்பு - படைப்பாளி - படைப்புலகு தொடர்பாக எழுப்பப்பட்டும், சொல்லப்பட்டும் வருகிறது. இவைகள் அனைத்துமே உண்மை அல்லது கூட்டி குறைத்து சொல்லப்படுபவை. இருப்பினும் இத்தகைய கேள்விகள் அவசியமானவை. படைப்பாளிகள் தங்களது படைப்பு மனம், கரு, எழுத்து, செய்திறன் போன்றவற்றை சொல்லிக்கொண்டே இருப்பது இலக்கியத்திற்கு அவசியமானது. இந்த வகையில், தன்னுடைய ஏழு நாவல்களைப் பற்றியும், தான் எழுத்துக்காரராக உருவாகக் காரணமாக இருந்த சூழல்கள் குறித்தும், தன்னுடைய நாவல்களுக்காக தான் செய்ய வேண்டியிருந்தன எவை என்பன குறித்தும் தமிழ்ச்செல்வி அவர்கள் மிகவும் தட்டையான தொனியில், ஏற்ற இறக்கம் எதுவுமற்ற நேர்கோட்டுக் குரலில், அதே சமயம் கேட்பவர் அசரும்படியான விதத்தில் எழுபத்தைந்து நிமிடங்கள் நம்முடன் அசாவுகிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்ப்பாசனம் மிதமிஞ்சிக் கிடைத்து வந்த கிராமமொன்றில் தன்னுடைய பால்யத்தைக் கழித்தவர், அந்த நிலவெளி கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்து அருகிலிருக்கும் கடல் உப்பு நிலத்திலேறி முழுவதும் உவர்ப்பெடுத்து வேளாண்மைக்கு ஒவ்வாததாக மாறிய வருடங்களில் விவசாய மக்கள் வாழ்வாதாரம் தேடி நகர்ந்து கடலோடிகளாக மாறிய அவலத்தை நெஞ்சு முழுவதும் தேக்கிக் கொண்டுள்ளவராகவே தன்னை வெளிப்படுத்துகிறார். கடலோடிகள், கீதாரிகள், குடிகாரக் கணவனால் வாழ்வு நொடித்து குழந்தைகளுடன் உயிர் வாழ தொழில் நகரத்திற்கு குடிபெயரும் பெண், கற்பு என்பதாகப் புரிந்து கொள்ளப்படும் ஒன்றிற்கு எந்தப் பொருளும் இல்லாத வாழ்வை வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட பெண் போன்றவைகள் இவரின் நாவல்களுக்கான ஆதாரங்களாக இருக்கின்றன. மிகு கற்பனை எதுவும் தன்னுடைய நாவல்களில் இல்லை என்றும், டி.ராஜேந்தர் போல அல்லது மேடைகளில் கேட்போரை மயக்கும் நாவன்மை கொண்டோரைப் போன்ற எந்த வித மொழிநடையும் தன்னிடம் எப்போதும் கூடி வரவில்லை என்றும், தொடக்கக் கல்வி ஆசிரியராகவே முப்பது ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருவதால் குழந்தைகளின் மொழியே தன்னுடைய மொழியாகவும் மாறியிருக்கலாம் என்று தன்னுடைய யூகத்தைத் தெரிவிக்கும் தமிழ்ச்செல்வி, தன்னுடைய நாவல்களுக்காக - அவைகளின் உயிரோட்டத்திற்காக செய்ய வேண்டியிருந்த களப்பயணங்கள் பற்றியும் தொடர்பான இன்னபிற ஆயத்தங்களைப் பற்றியும் இயல்பாகப் பேசுவது, எழுத்தில் ஆர்வமிருக்கும் அனைவருக்கும் தம்மை உருவாக்கிக் கொள்ள தேவையானது.
இப்படியான காத்திரமான எழுத்துக்காரர் ஒருவருக்கும் அவர் பணிபுரியும் அரசு அமைப்பிற்கும் ஏதேனும் உரசல்கள் - முறுகல் நிலைகள் ஏற்பட்டிருந்திருக்க வேண்டுமே என்று அவர் பேசிக்கொண்டு வரும்பொழுது நினைத்துக் கொண்டிருந்தேன். அவரது பொழிவின் இறுதி நிமிடங்களில் இதற்கு விடை கிடைத்தது. அவரது துறையின் உயர் அலுவலர்களோடு மோதல் முற்றி பணித்துறப்பு செய்ததாகவும், பிறகு மீண்டும் பணியில் இணைந்ததாகவும் பொழிவினூடே தெரிவிக்கிறார். எனக்குக் கொஞ்சமும் ஆச்சர்யம் ஏற்படவில்லை. இப்படியான படைப்பு மனம் கொண்டவர்கள் காட்டு யானையைப் போன்றவர்கள். அதிகாரம் தன்னுடைய மூக்கைத் தொட எத்தனிக்கும் போது, தொடும் கையை திருகிப் போடுபவர்கள். தமிழ்ச்செல்வி அவர்களை அண்ணா நூற்றாண்டு நூலகம் நடத்தி வரும் தொடர் பொழிவிற்காக அழைத்ததற்காகவே பள்ளிக் கல்வித்துறை செயலரை பாராட்ட வேண்டும். இதற்கு முன்பும் கூட, அமைப்பிற்கு எதிர்நிலைக் கருத்து கொண்டவர்களையும், பரபரப்பிற்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர்களையும் இந்த நூலகம் 'பொன்மாலைப் பொழிவிற்காக' அழைத்துள்ளது, இந்தப் பொழிவு வரிசை தமிழ் அறிவுலகத்தின் - இலக்கியவுலகத்தின் வீச்சான இயக்கமொன்றாக மாற சாத்தியம் கொண்டது என்பதை அறிவிப்பதாகவே உள்ளது.
இன்னொன்றை சொல்ல வேண்டும். தமிழ்ச்செல்வி அவர்களின் பொழிவின் போது அரங்கில் கூட்டமே இல்லை. மிகச் சிலர்தான் இருந்தார்கள். பொழிவாளர் இதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் இந்தப் பொழிவிற்காக வந்திருந்த பொழுது, அரங்கு நிரம்பி வழிந்தது. தமிழ்ச்செல்வியின் பொழிவு அதைவிட பல மடங்கு விஷய கனமான ஒன்று. ஆனால், முப்பது பேர்களுக்கு மேல் அரங்கில் இருந்திருக்க மாட்டார்கள். பொன்மாலைப் பொழுது பொழிவுகளைப் பற்றி சமூக வலைத்தளங்களில், மற்றும் அதிக செலவு பிடிக்காதபடிக்கு எப்படியெல்லாம் விளம்பரப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறேன். இன்னொன்றும் உண்டு. நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய நன்கு பயிற்சி பெற்றவர்களை - முடியுமென்றால் தொழில்முறை ஒளிப்பதிவாளர்களைக் கூட பயன்படுத்த வேண்டும். கேள்வி கேட்கும் ஒருவரை விட்டுவிட்டு கேமரா வேறு எங்கோ அலைகிறது. பொழிவாளரையும் பொழிவையும் நல்ல ஒளிப்பதிவாளர் ஒருவர் வேறு ஒரு உயரத்திற்கு கொண்டு செல்வார்.
இன்னுமொரு செய்தியோடு இந்தப் பத்தியை முடிக்கிறேன். சு.தமிழ்ச்செல்வி அவர்கள் கவிஞர் கரிகாலன் அவர்களின் வாழ்க்கை துணையர். விருத்தாசலம் பெரியார் நகரில் வசித்து வருகின்றனர் இந்தத் தம்பதியர். என்னுடைய உறவினர் ஒருவரும் அதே பகுதியில் வசிக்கிறார். அடுத்த முறை அவரைப் பார்க்கும் பொழுது கேட்க வேண்டும். "நீங்கள் எழுத்தாளர் சு.தமிழ்செல்வி அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா, பேசியிருக்கிறீர்களா?"

0 comments:

Post a Comment