மெக்காலே – பெரியார் – அம்பேத்கர் – இங்கிலீசு – இண்டியன்ஸ்

| Saturday, October 17, 2015
சாமி போல வந்தாய் ராசா!
 
கி.பி.1600-ல் இந்திய மண்ணில் நிறுவப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியோடு ஆங்கிலமும் உள்ளே நுழைந்தது. இந்தியர்கள் பொறுத்தவரை இந்த அன்னிய பாஷையை விருப்பத்தோடு முதலில் அணுகியது சூரத் நகரத்து பார்சி வணிகர்கள்தான்.  கம்பெனிக்காரர்களுக்கும் இந்தியக் குடிகளுக்கும் இடையே தரகர்களாக தங்களைப் பாவித்துக் கொண்ட சூரத் பார்சி வணிகர்கள் பெரும் பணம் ஈட்ட முடிந்தது.  நாளடைவில் இந்த விருப்பம் மற்ற ஆதிக்க சாதீயர்களிடமும் தொற்றிக் கொண்டது.  நிலைமை இப்படி இருக்க, 1830 வாக்கில் கம்பெனியார் எடுத்த ஒரு முடிவானது, துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை, நிர்வாகம் மற்றும் கல்வி அமைப்புக்களில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்தது.  இன்னமும் சொல்லப் போனால், இந்தியாவில் ஆங்கில பாஷையின் வளர்ச்சிக்கான விதையே இதுதான்.  பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்தியாவில் உயர் கல்வியை பரவலாக்கம் செய்ய எந்த வகையான முகாந்திரங்களை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க கம்பெனியாரைக் கேட்டுக் கொண்டது.  இதற்காகவென ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய்களை ஒதுக்கீடு செய்யவும் முன்வந்தது.   

உயர் கல்வியை எந்த மொழியில் இந்தியர்களுக்கு அளிப்பது?  இந்தியர்களின் பாரம்பரிய அறிவையே உயர்கல்வி வரை படிப்பிப்பதா? அல்லது ஐரோப்பாவின் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை  உயர் கல்வி நிலையில் இந்தியாவில் ஆங்கிலத்தின் மூலம் வளர்த்தெடுப்பதா? இந்திய கல்வி முறை முழுமைக்குமே ஆங்கில வழி போதனை சிறந்த ஒன்றா? என்ற படியெல்லாம் சூடான விவாதங்கள் கிளம்பின.  ஆனால் ஒரு தனி மனிதர் இத்துணை கேள்விகளுக்கும் அசைக்கமுடியாத பதில்களை வைத்திருந்தார்:  அவரின் தீர்க்கமான கருத்து இந்தியாவை இரண்டாக பிளந்து போட்டது என்றாலுங்கூட.  இந்திய துணைக் கண்டத்தில் நிர்வாகம், கல்வி ஆகியவற்றில் ஆங்கிலம் பிற்காலத்தில் செலுத்தப் போகும் நம்ப முடியாத செல்வாக்கை துவக்கி வைத்தது அவருடைய தீர்மானங்கள்தாம். இந்திய பொது கல்விக் குழுவின் [Indian Committee for Public Instruction] தலைவராக நியமிக்கப்பட்டிருந்த மெக்காலே மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் குழப்பமே இல்லாத விடைகளைக் கண்டறிந்து விட்டார்.  இந்த விடைகளில் இந்திய சாதீயம் தூளாகிவிட்டது என்பதை அவரால் யூகிக்க முடிந்ததா என்பதை எந்த இந்திய ஜோசியராலும் சொல்ல முடியாது என்று நாம் சொன்னால் காழியூர் நாராயணன் கோபிக்கலாம்.

இந்திய பாரம்பரிய அறிவை அரேபிய மற்றும் சமஸ்க்ருத மொழிகளில் இந்தியர்களுக்கு கற்பிப்பதைக் காட்டிலும் ஐரோப்பாவின் நவீன அறிவியலை ஆங்கிலத்தின் மூலம் கற்பிப்பது அவர்களுக்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்று வாதிட்டார்.  மெக்காலேவின் மொழி அகங்காரமானது.  இந்திய பாரம்பரிய அறிவைப் பற்றியதான அவரது வெறுப்பு பிரசித்தமானது.  இருந்தபோதிலும், அவரது வாதங்களுக்கு வேறொரு கோணத்தில் நியாமும் கனமும் இருக்கத்தான் செய்தன.  நாள் பட்டுப்போன, ஒன்றுக்கும் உதவாத பாரம்பரிய அறிவை வழக்கொழிந்து போன மொழிகளில் கற்பிப்பதால் இந்தியா முன்னேற்றப் பாதையில் நகராது என்ற பரிந்துரைகளை தன்னுடைய புகழ்பெற்ற சாசனத்தில் தெரிவித்தார்.  ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதற்காக இந்திய மாணவர்கள் பணம் கட்டிப் படிப்பதற்கும் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்றுணர்ந்த மெக்காலே, மரணப் படுக்கையில் மூச்சு விட சிரமப்படும் சில இந்திய செவ்வியல் மொழிகளை காப்பாற்ற கொஞ்சம் கம்பெனி பணத்தை “செலவிட்டுத் தொலைக்கலாம்” என்று கருணை காட்டவும்  முன்வந்தார்.  இந்திய பாரம்பரிய அறிவைக் கற்பதினால் எவரும் வேலை வாய்ப்புக்களை பெற முடியாது.  அப்படிப்பட்டவர்கள் மற்றவர்களுக்கும், ஏன் தங்களுக்குமே கூட சுமையாகி விடுவார்கள் என்ற அவரின் தரிசனம் முழுவதும் தவறா என்பது ஒரு பெரிய விவாதத்திற்குரிய விடயம்.  மேற்கொண்டு இதைப்பற்றி பேசிய மெக்காலே, ஐரோப்பிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை கற்கும் இந்தியர்கள் அவற்றை தங்கள் நாட்டு மக்களிடைய பரப்ப வேண்டும் என்றும் இந்திய மொழிகளை ஐரோப்பிய தொழில்நுட்பம் மற்றும் அறிவியலை ஏந்திச் செல்லும் வல்லமை படைத்த மொழிகளாக சக்தியேற்றும் ஏற்பாட்டை இந்த முதல் தலைமுறை ஐரோப்பியக் கல்வி பெற்ற இந்தியர்கள்தான் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  பெரும்பாலான இந்தியர்கள் ஐரோப்பிய அறிவைப் பெற்றிருக்கும் நாளில், இந்திய மண்ணை விட்டு பிரிட்டிஷ் அமைப்புகள் வெளியேற வேண்டி வரும் என்றும் அத்தகைய ஒரு பெரு ஞானம் அவர்களுக்கு ஆங்கில மொழிக் கல்வி மூலம் மட்டும்தான் உருவாகும் என்றும் தீர்மானமாகவே மெக்காலே தெரிவித்தார்.  

மெக்காலேவின் பரிந்துரைகள் முற்று முழுமையாக 1835-ம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டு விருப்பமுள்ள இந்தியர்களுக்கு ஆங்கில மொழிக் கல்வி நாடு முழுவதும் பரவலாக துவக்கப்பட்டது.  சரியாக 22 ஆண்டுகள் கழித்து, அதாவது 1857-ல், இந்திய துணைக் கண்டத்தில் ஐந்து பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன.  மெட்ராஸ், கல்கத்தா, அலகாபாத், பம்பாய் மற்றும் லாகூர் நகரங்களில் துவக்கப்பட்ட இந்த பல்கலைக் கழகங்களின் நோக்கம் ஐரோப்பிய கல்வி முறையை இந்திய மண்ணிலே பரவலாக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, இங்கு ஆட்சி மொழியாக இருந்த பெர்சிய மொழியை அகற்றிவிட்டு, அவ்விடத்திலே ஆங்கிலத்தை அமர்த்துவதே.  அன்று வேகம் எடுக்கத் துவங்கிய ஆங்கில மொழி வளர்ச்சி வெறும் நிர்வாகம், கல்வி போன்ற அமைப்புகளோடு மட்டும் நின்று விடவில்லை.  தனக்கும் தன் குடும்பத்திற்கும் சுபிட்சமான வாழ்வை விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் பெரு விருப்பத்தோடு கற்கும் மொழியாக இன்றுவரை ஆங்கிலம் இருந்து வருவது கண்கூடு.  இது மட்டுமன்றி, இந்திய துணைக் கண்டத்தில் ஆங்கிலத்தின் உச்ச பட்ச சாதனை எதுவென்றால், இந்தியர்கள் அனைவரையும் சாதி, மத, இன வேறுபாடு இன்றி ஒரே கூரையின் கீழ் அருகருகே ஆறு மணி நேரத்திற்கு மேலாக தினந்தோறும் உட்கார வைத்ததுதான் என்று சுலபமாக சொல்லலாம்.  ஆறாயிரம் வருடங்களாக நடந்திராத அதிசயம் இது.  நிலச்சுவான்தார்களாலும், ராஜாக்காளாலும், ஜமீன்தார்களாலும், உயர் சாதீயர்களாலும் ஜீரணிக்க முடியாத, ஆனால் ஏற்றுக் கொண்டேயாக வேண்டிய ஒரு சமூக மாற்றத்தை மெக்காலே துவக்கி வைத்தார் என்று சொல்வது, இன்றைய அரசியல் சூழலில் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும், மிகச் சரியாகவே இருக்கலாம். 

பத்தொன்பதாம் ஆரம்ப வருடங்கள் தொடங்கி இற்றைய நாள் வரை இந்திய பெரும் நிலப்பரப்பில் நடந்திருக்கும் சமதர்மத்தை நோக்கிய அத்தனை சமுதாய மாற்றங்களையும் ஆங்கிலம் ஊனாக உயிராக ஆத்மாவாக ஊடுருவி நடத்தி வந்திருக்கிறது என்ற உண்மையை விளங்கிக் கொள்பவர்கள், மதவாத சக்திகளும் எதேச்சதிகார அரசியல் சக்திகளும், ஆறாயிரம் வருட இந்தியப் பாரம்பரிய விழுமியங்களை மீட்டுக் கொண்டு வருவதில் இன்று தீவிரமாக இயங்கி வரும் விளிம்புநிலைக் குழுக்களும் ஏன் ஆங்கிலத்தை வன்மத்தோடு எதிர்க்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்வார்கள்.
  

2 comments:

Unknown said...

Like a coin have two sides, this educational system also have two sides.,
Am I Right Sir...

Unknown said...

yes its true

Post a Comment