அகமும் புறமும்

| Monday, April 27, 2015


சமீப நாட்களில் இரண்டு புத்தகங்களைப் படித்தேன். ரவி சுப்ரமண்யன் எழுதிய "ஆளுமைகள் தருணங்கள்." அடுத்தது, ஆ.இரா. வேங்கடசலபதி அவர்களின் "எழுத்தும் வாசிப்பும்".
 
இரண்டுமே மிக முக்கியமான புத்தகங்கள் ஒரு புள்ளியில். முதலாமவது, ஓர் மனிதனின் அக அவதானிப்புகள் பற்றியது. தன்னைப் பாதித்த பெரும் ஆளுமைகளை ரவி சுப்பிரமணியன் எங்கனம் தன்னின் அக வெளிகளில் அவதானித்து வந்திருக்கிறார் என்பது பற்றியது. எப்போதுமே "எதை" "என்ன" என்பதை விட, "எப்படி" என்பதற்கே நான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறேன். ரவி சுப்ரமணியனின் படைப்பு மொழி வாசகனை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. அவரது சொல்லாட்சி புதிய புதிய வார்த்தையாக்கங்களைக் கொண்டது. வழக்கு இழந்துபோன பல பழைய சொற்கள் மீண்டும் ஒரு புதிய தொனியில் பிரயோகப்படுத்தப் படுகின்றன. இவரது உரைநடை மனதின் சொற்களாகவே உள்ளது. பாரம்பரிய இசையில் இவருக்கு இருக்கும் ஈடுபாடும் அறிவும் இவரது உரைநடைக்கு தனி மெருகை வழங்கியிருக்கிறது.

ஆ.இரா. வேங்கடசலபதி இன்றைய தமிழ் இலக்கிய உலகில், பழ.அதியமான் மற்றும் மதிவாணன் ஆகியோரோடு மட்டுமே ஒப்பிடத் தகுந்தவர். புது தில்லியில் முனைவர் பட்ட ஆய்வைச் செய்தவர். ஆவண சாட்சியங்கள் இல்லாமல் ஒரு வாக்கியத்தையும் கட்டமைக்காதவர். புற உலகின் சாட்சியங்கள் இவருக்கு இன்றியமையாதவை. தனது வாதங்களை ஆவண சாட்சியங்கள் அடிப்படையாக மட்டுமே எழுப்புவார். தீராத ஆவலும் உழைப்பும் இத்தகைய எழுத்துக்கு மூலாதாரம். அச்சு இயந்திரம் தமிழ் உலகில் வாசிப்புப் பழக்கத்தில் கொண்டு வந்த மாற்றங்கள், பெண்கள் முதன் முதலாக பெருமளவில் வாசிக்க ஆரம்பித்தது, நாவல் என்ற வடிவத்திற்கு எழுந்த எதிர்ப்பு போன்றவைகளை ஆவணங்களை துல்லியமாக மேற்கோள் காட்டுவதின் மூலமே நிறுவுகிறார்.
இரண்டும் முக்கியமான நூல்கள் என்று படித்துக் கொண்டிருக்கும் தருணத்திலேயே வாசகன் உணர்வது நூலாசிரியர்களின் மேதமையும் சிறப்புமாகும். இவைகளைப் பற்றி விரிவாக எழுதவும் உத்தேசம்.
-----

AMERICAN SNIPER. Clint Eastwood இயக்கியுள்ள படம். திரைவிழாக்களில் பரபரப்பை உண்டாக்கிய ஒன்று. அமெரிக்க அரசின் வீரர்கள் மத்திய ஆசிய பாலைவனங்களில் தீவிரவாதிகள் என்று நம்பப்படும் இளைஞர்களை வேட்டையாட ஆயிரக்கணக்கில் குவிக்கப்படுகின்றனர்.
படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இந்த வீரர்களையும் இவர்களால் கொன்று குவிக்கப்படும் மத்திய ஆசிய முஸ்லிம் இளைஞர்களையும் ஒரே மாதிரி பார்த்துப் பரிதாபப்பட முடிகிறது. இதுதான் படத்தின் செய்தி மற்றும் வெற்றி.

AMERICAN SNIPER படத்தில் கதாநாயகன் 160 நபர்களைக் கொன்றவன். அதற்காக கொஞ்சமும் குற்ற உணர்வால் பாதிப்படையாதவன். இருப்பினும் கிட்டத்தட்ட ஆயிரம் நாட்களை மத்திய ஆசியாவில் தீவிர வாதிகள் என்று அடையாளம் காட்டப்படும் இளைஞர்களை கொன்று குவிப்பதிலேயே கவனம் செலுத்தியதால், அவனால் சிவில் சமூகத்தில் இணக்கமுடன் செயல்பட முடியாமல் தடுமாறுகிறான். மன நலம் பேணுதலில் நிபுணரின் உதவிபெறும் அவன், போரில் காயமுற்று திரும்பிய வீரர்களிடம் தன்னுடைய நேரத்தை செலவழிக்கிறான். குறி வைத்து சுடுவதற்கு கற்றுத்தரும் அவன், தங்களை மீண்டும் ஒரு ஹீரோவாக நினைக்க வைத்திருக்கிறான் என்பதிலே அவர்கள் பெருமையுறும் நாட்களில் மெல்ல மெல்ல சராசரி சிவில் வாழ்க்கைக்கு திரும்பும் கதாநாயகன், போரின் வடு தன் உள்ளத்தில் இருந்து மாறாமல் அந்தக் காரணத்தாலேயே மனம் பிறழ்ந்துபோயிருக்கும் ஒரு ஓய்வு பெற்ற வீரனால் கொல்லப்படுகிறான்.

இந்தப் படம் நிறைய கேள்விகளை நம்முள் எழுப்புகிறது. மேலோட்டமாக, கத்தியைப் பிடித்தவன் கத்தியாலேயே சாகிறான் என்ற வாழ்வியல் விசாரணை. சற்றே உள்ளார்த்தமாக பார்க்கின், யுத்தங்கள் தங்களது வடுக்களை ஆக்கிரமிக்கப் படுபவரைக் காட்டிலும், ஆக்கிரமிக்கவரையே வாழ்நாள் முழுவதும் பாதிக்கிறது.
கிளின்ட் ஈஸ்ட்வுட் சராசரிக்கும் மேலான திரைப்படக் கலைஞர் என்பது இன்னொருமுறை நிரூபணம். இதுவரை இந்தப் படத்தைப் பார்த்திரா விட்டால், அவசியம் பார்த்து விடுங்கள். நம்மை உள்ளுள் பார்க்க இது உதவும்.
---- 

தற்பொழுது பிரேம் எழுதி புலம் 2008-ல் வெளியிட்ட " அதி மனிதர்களும் எதிர் மனிதர்களும்" முடித்திருக்கிறேன். இதன் உள்ளடக்கத்தைப் பற்றி சொல்லும் சொல்லும் முன், பிரேமின் உரைநடையைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். மிகவும் தீவிரமான, சிக்கலான, கருத்துக்களை நுணுகி ஆய்ந்து, கொஞ்சம் கவனம் தப்பினாலும் புரிதலில் பழுது பட்டுவிடக் கூடிய, நவீனத் தன்மை அற்ற ஆராய்ச்சி நடை. ஜம்பமான நடை என்று உதறி விட முடியாது. இந்த நடை அவருக்கு பல ஆண்டுகள் கடுமையான வாசிப்பின் விளைவாகவே வந்திருக்க வேண்டும். ந்தக் கட்டுரையின் எந்த வாக்கியத்தையும் விட்டுவிடக் கூடுவதில்லை. வார்த்தைகளைக் கூட.
பெண்ணீயம், எதேச்சதிகாரம், விளிம்பு மனிதர்கள், அரசு மற்றும் அதன் கடமை, பயங்கர வாதத்தின் உண்மை முகம், இருமைகள் - பன்மைகள் இடையே மாட்டிக் கொண்ட உண்மை அல்லது வாய்மை போன்றவைகள் கடுமையாக விவாதிக்கப் படுகின்றன. 'அதி மனிதர்களும் எதிர் மனிதர்களும்' என்ற கட்டுரையிலும் திருவாளர் காந்தி மற்றும் அவரது மூத்த மகன் திருவாளர் ஹிராலால் காந்தி ஆகியோரின் நிலைப்பாடுகள் புதிய வெளிச்சத்தில் பார்க்கப் படுகின்றன.

இதை முக்கியமான புத்தகமாக கருத முடியும். ஏன் இதுவரை இப்புத்தகம் பற்றி பெரிதாக எதுவும் தமிழக அறிவு வெளியில் பேசப்படவில்லை? பேசப்பட்டிருக்க வேண்டும்.
[புலம் வெளியீடு, சென்னை, உரூபா 60/-]
----

Terry Eagleton அவர்கள் எழுதியுள்ள Literary Criticism and Marxism என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அழகுணர்ச்சி, கவிதை நுட்பங்கள், கலை நுட்பங்கள் போன்றவை மார்க்சீய விமரிசனப் போக்கிற்கு புறம்பானவை என்கிறதான மாயையை உடைத்துப் போடுகிறார். உருவமும் உள்ளடக்கமும் என்ற இரண்டாவது அத்தியாயம் மிகுந்த இலக்கிய அந்தஸ்து உள்ளது. இந்தப் புத்தகம் 1976ம் ஆண்டு வெளிவந்துள்ளது என்பது கூடுதல் ஆச்சர்யம்.
இன்றைய அளவிற்கும், இதன் கருத்துக்கள் முற்றிலும் பொருந்துகிறது என்பது மட்டுமல்லாமல், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளில் தோல்வியைத் தழுவியதைப் போல தோன்றுவது மார்க்சீயம் அல்லவென்றும், முதலாளித்துவம் என்றையும் விட அதிக பலம் பெற்றுள்ள இன்றைய நிலையில் மார்க்சீயமும் முன்னெப்போதையும் விட இப்பொழுது அதிக சமூக பொருத்தப்பாடு கொண்டதென்றும் தோன்றுகிறது.
ரொம்பவும் முக்கியமானதொரு புத்தகம்.
----

வில்லியம் மாக்பீஸ் தாக்கரே பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடப்பதாக எழுதிய Vanity Fair புனைகதை மிகவும் புகழ் பெற்றது. இன்று இருப்பதைப் போலவே அன்றும் மக்கள் தங்களை சாதி, இனம், வகுப்பு, மொழி மற்றும் நாடு ஆகியவற்றால் பிரித்து, மேல் - கீழ் என்ற பாகுபாட்டை தக்க வைத்தே இருந்திருக்கிறார்கள். இந்த நெடுங்கதையை இந்திய வம்சா வழியினரான மீரா நாயர் சினிமாவாக எடுத்துள்ளார். நீளம் கொஞ்சம் அதிகமோ என்று யோசிக்க வைத்தாலும், நாவலை படிக்காதோர் மற்றும் அதன் நீளத்தால் பாதியில் நிறுத்தியோர் இப்படத்தைப் பார்க்கலாம்.
----

0 comments:

Post a Comment