விட்டில்பூச்சி விழுங்கிய விளக்கு

| Thursday, March 5, 2015
பிரிந்திருப்பதுதான் ஆரம்பம்.  ஒற்றைச் செல் பல்லுயிரியானதின் ஆதி தனிமைதான்.  தனியாக இருக்கிறோம். போவதும் தனியாகவே.  ஆனால் தங்கியிருக்கும் காலத்தில்தான் எதோ ஒன்றைப் பற்றவும் பற்றியதை கலக்கவும், சேர்ந்து நடக்கவும் தணியாத ஆசை.  இங்கிருந்து அங்கு போக எதனாலோ ஆன பாலம் ஒன்று தேவை.  ஒரு விடுபடாத நீண்ட சாலையின் நடுவே எத்தனை பாலங்கள்!  பாலங்களால் இணைக்கப்படாத சாலை தனது அடிப்படை நோக்கத்தையே இழந்து யாரையும் எங்கும் கூட்டிப்போகாமல், தானும் நகர முடியாமல் நதிதீரங்களில் எதிர்க்கரையை ஏக்கத்துடன் பார்த்து நின்றவாறே முடிந்து போகும்.  சொல்லப்போனால், பாலங்கள்தான் சாலையே.  இன்னும் வேறொரு பார்வையில், எல்லாச் சாலைகளும் பாலங்களே. சாலையில்லாத ஊரும், பாலமில்லாத சாலையும் உறவில்லாத ஜீவனைப் போன்றதே. 
 
வெற்றிகரமான வாழ்க்கை வெகு நீளமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.  சுவையான வாழ்க்கையும் அப்படித்தான்.  அதிபெரும் சுவைகள் நாக்கில் பட்ட நல்ல அல்வாவைப் போல.  பட்டவுடன் கரைந்தாலும் அதன் சுவை நாக்கிருக்கும் வரை நீடிக்கிறதல்லவா! பள்ளிக் காலத்தில் சுவைத்த தின்பண்டங்களின் சுவை நாக்கிலும் நெஞ்சிலும் இன்னும் மாறாமலிருப்பது செய்து கொடுத்த அப்பச்சியின் கைப்பக்குவத்தாலா அல்லது அந்த பொக்கைவாய் கிழவியின் பேரன்பாலா?  என்னுடைய கிருத்துவ நண்பர்கள் கூறுவதுண்டு.  தான் நேசிப்பவரை கிருத்துவானவர் விரைவிலேயே தன்னிடம் அழைத்துக் கொள்கிறார் என்று.  விருப்பமானவர்கள் அதிக நாட்கள் கிருத்துவிடம் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களாகிய நம்மிடமும் நிலைப்பதில்லை.  திடீரென்று வந்து நினைத்திராத தருணங்களைத் தருபவர்கள் கண்ணிமைக்கும் பொழுது நம்மை விட்டு விலகி ஓடுவது நமது வாழ்க்கையின் வேதனையா அல்லது எதிர்பாராமைகளால் நிறைந்திருக்கும் ஜீவிதத்தின் நிதர்சனமா?


The Brdiges of Madison County என்ற திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.  பார்க்க வேண்டியிருந்தது.  கனத்துப் போன மனசின் சுமையை வேறெங்கோ இறக்கி வைக்க திட்டமிடும் போதெல்லாம் பிடித்த புத்தகத்தை மீண்டும் ஒருமுறை படிப்பதோ அல்லது பிடித்த திரைப்படத்தை இன்னொரு முறை பார்ப்பதோ சில தசாப்தங்களாகவே கூட இருக்கும் பயனுள்ள ஒரு பழக்கம்.  இவைகள் என்னை எமாற்றுவதேயில்லை.  Clint Eastwood என்ற hollywood நடிகர் குதிரைவீரர் படங்களில் நடித்து பெரும்புகழ் ஈட்டியவர்.  தன்னுடைய 50களிலே திரைப்படங்களை இயக்கத் தொடங்கிய பொழுது, தான் நடித்ததற்கும் சற்றும் சம்பந்தமில்லாத கருப்பொருட்களையே தேர்ந்தெடுத்தார்.  இவர் இயக்கிய திரில்லர் வகைப் படங்களிலும் அடிநாதமாக மனிதர்களுக்கிடையேயான அன்பின் சரடொன்று காணக் கிடைக்கும்.  அன்பை நோக்கி கதாபாத்திரங்கள் இவரது படங்களில் ஓடிய வண்ணமே இருக்கிறார்கள்.  அன்பை வேண்டுகிறார்கள். அன்பிற்காக மிரட்டுகிறார்கள்.  அன்பின் பொருட்டே விலகுகிறார்கள்.  ஏன், அதன் காரணமாகவே கொலையும் செய்கிறார்கள். 
 

The Brdiges of Madison County நடுத்தர வயது குடும்பத் தலைவி ஒருத்தியின்  நான்கு நாள் வாழ்க்கையையும், அந்த நாட்கள் அவளது பிந்தைய வாழ்க்கையின் முழு அர்த்தமுமாக மாறிப்போன விந்தையையும் நமக்கு ஒரு அற்புதமான திரை மொழியில், ஒரு பேராறு பல மலைகளில் ஆர்ப்பரித்து விழுந்து சமவெளிக்கு வந்து நீண்ட நெடும் பயணத்திற்குப் பின் அகன்ற மணற்படுகைகளில் மெல்ல அமைதியாக நகருகின்ற அழகோடு, பிரான்செஸ்கா ஜான்சனின் பாலைவனச்சோலையே போன்ற தருணங்களை, விவரிக்கிறது.  Bari என்ற இத்தாலிய சிறு நகரத்தில்  இளம் பெண்ணாக இருந்தபொழுது படைவீரராக அங்கு வந்த ரிச்சர்ட் ஜான்சனிடம் காதல் வயப்பட்ட பிரான்செஸ்கா அவனைத் திருமணம் செய்த கையோடு அவனுடைய சொந்த ஊரான அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் உள்ள Madison County என்ற சின்னஞ்சிறு கிராமத்திற்கு குடித்தனம் செய்ய வருகிறாள்.  இத்திரைப் படம் துவங்கும் பொழுது, பதினேழு மற்றும் பதினாறு வயதுகளில் மகனும் மகளும் இருக்க அவர்களை கூட்டிக்கொண்டு கணவன் ரிச்சர்ட் மகள் கலந்து கொள்ளும் ஒரு போட்டியின் பொருட்டு வெளியூருக்கு செல்கிறான்.  திரும்பி வர நான்கு நாட்கள் ஆகும் என்ற நிலையில் மற்ற மூவரும் இல்லாத வெறுமையைப் போக்க வீட்டின் வெளியே நிற்கையில் பச்சை நிற வேன் ஒன்றிலிருந்து இறங்கிய நபர், தனது பெயர் ராபர்ட் என்றும், அங்கு எங்கோ இருக்கும் ரோஸ்மான் பாலத்திற்கு வழிகாட்ட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளும் போது, பிரான்செஸ்காவின் கண்களிலும் ஒரு பாலத்தின் ஆரம்பம் பிரதிபலிக்கிறது.  தான் கூடவே வந்து வழிகாட்டுவதாக முன் வரும் பிரான்செஸ்கா ராபர்ட்டிடம் நிகழ்த்தும் சம்பாஷணையில் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்து இராத ஏதோ ஒன்று  முதன்முறையாக நிகழ்வதை உணர்கிறாள்.  அவர்களின் உரையாடலிலே இருவருமே என்றோ இழந்திருந்த ஒரு நூலிழையின் அறுபட்ட பகுதி மீண்டும் நெருங்கிவருவதாகவே உணர்கிறார்கள்.  அவளின் ஆளுமையையும் ரசனையையும் மெல்ல கேட்டு கண்டுணரும் ராபர்ட் அவள் அத்தனை எளிதான ஒரு கிராமத்துப் பெண் அல்ல என்று கண்டுபிடிக்கிறான்.  தான் எப்பொழுதுமே சந்திக்க விரும்பிய, ஆனால் சந்திக்கவே முடியாத – தன்னை முழுவதுமாய் ஒரு பெண்ணாக உணர்த்தும் ஆண் ஒருவனை முதன்முறையாக வந்தடைகிறாள் பிரான்செஸ்கா.  திரும்பி அவளை வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது தேநீருக்காக உள்ளே அழைக்கப்படும் அவன் இரவு உணவிற்காகவும், பின்னர் அடுத்தடுத்த நாட்களின் பெரும்பகுதி நேரங்களையுமே பிரான்செஸ்காவின் அருகிலும் படுக்கையிலும் தன்னை அவளுக்கு
கொடுக்கிறான். அவளில் தன்னை புதிதாக கண்டுபிடித்தும், காதலின் விசித்திரமான பரிமாணங்களை உணர்ந்தபடிக்கு இருக்கிறான்.

National Geographic என்ற புகழ்பெற்ற சஞ்சிகைக்கு புகைப்படக் கலைஞனாக பணிபுரியும் ராபர்ட் தான் விவாகரத்தானவன் என்றும் இந்த உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பணி நிமித்தமாய் செல்கிற பொழுது பல தோழியரும் தனக்கு நேர்ந்ததுண்டு  என்றும் பிரான்செஸ்காவிடம் தெரிவிக்கும்பொழுது,  ஆற்றாமையால் துவளும் அவள் அவர்களில் ஒருத்திதான் தானா என்ற வேதனையில் வெடிக்கிறாள்.  அதற்கு பதிலிறுக்கும் வண்ணம் ராபர்ட் சொல்கிறான்:  “This kind of certainty comes but once in a lifetime.”  தன்னை அவனோடு கூட்டிச்சென்று விடும்படி கதறும் கணத்திலேயே எளிமையான தனது கணவனும் குழந்தைகளும் நினைவிலாட ஒரு உணர்வின் அதிவேகச் சுழலில் மாட்டிக்கொண்ட அபலையாய் தெரிகிறாள்.  அவளின் நிதர்சனத்தை உணர்ந்தவனாய் கையறு நிலையில் விடைபெறுகிறான் ராபர்ட். 


அடுத்த நாள் காலையில் வீடு திரும்பும் கணவனையும் குழந்தைகளையும் வரவேற்கும் பிரான்செஸ்கா தனக்கென தனியான விருப்பங்களை கொண்ட பெண் அல்ல; இயந்திரங்களின் அத்தனை தன்மைகளோடும் ஆண்டுக்கணக்கில் ஒரே மாதிரியாக தன்னை இயக்கத் தெரிந்த சராசரி குடும்பத் தலைவி.  அந்த வாரத்திலேயே, கணவனோடு ஒரு மாலை நேர மழையில் காரில் பயணிக்கும் பிரான்செஸ்கா, இந்தப் படத்தின் இறுதி காட்சியில், முன்னாள் நகரும் காரில் ராபர்ட் ஊரைவிட்டு போவதை கண்ணுருகிறாள்.  அவளை கவனித்துவிட்ட ராபர்ட் அவள் கொடுத்த கழுத்துச் செயினை அவளிடம் rear view mirror-ல் காண்பித்து அவளின் நினைவுகளை தன்னுடன் கொண்டு செல்வதை உணர்த்துகிறான். 




இந்தப் படம் பிரான்செஸ்காவின் இறப்பிற்குப் பிறகு அவளுடைய உயிலையும், சாவிற்குப் பின்னரே திறந்து பார்க்கும்படி சொன்ன ஒரு பெட்டியையும் அவர்களது குடும்ப வக்கீல் அவளின் மகள் மகன் முன்னிலையில் விவாதிப்பதிலிருந்து துவங்குகிறது.  தன்னுடைய உடலை எரியூட்டும்படியும், சாம்பலை ரோஸ்மான் பாலத்திலிருந்து கீழே நதியில் தூவும்படியும் கேட்டுக்கொண்டிருந்த தன்னுடைய தாயை மகனால் புரிந்துகொள்ள முடியவில்லை.  ராபர்ட்டுடன் பகிர்ந்து கொண்ட அந்த நான்கு நாட்களின் ஒவ்வொரு நொடியையும் தேர்ந்த புகைப்பட கலைஞன் ஒருவனின் அதி உன்னதமான படைப்பைப் போல வெகு நுட்பமாக மூன்று நோட்டுப் புத்தகங்களில் பிரான்செஸ்கா எழுதியிருந்த பதிவுகளைப் படிக்க நேர்ந்த பிறகே அவளின் மகனும் மகளும் தாய் என்ற கடமையிலிருந்து கொஞ்சமும் வழுவாத அவளுடைய நேர்மையையும், நான்கு நாட்களே வீசிய அந்த தென்றலின் சுகத்தை ஜீவிதம் முழுவதும் அனுபவித்தபடியே தவித்த பரிதாபத்திற்குரிய பெண் ஒருத்தியையும் அவர்கள் உணரும் நிமிடம், அவர்களுக்கும் வரவே முடியாத இடத்திற்குப் போய்விட்ட அவர்களது தாயான பிரான்செஸ்காவிற்கும் மேம்பட்ட புரிதலால் ஆன ஒரு பாலம் உருவாகிறது.  


அது ஜன்மங்களை இணைக்கும் பாலம்.  சொல்லப்போனால், அந்த மாதிரியான பாலங்களை எதிர்நோக்கிய படிதான் சாலைகளின் ஜனங்கள் பயணித்த வண்ணம் இருக்கிறார்கள்.  சாலைகளும், மனிதர்களும், பயணங்களும் உண்மையில் பாலங்களை நோக்கித்தான்.  பாலத்தை வந்தடைந்தவர்கள் பாக்கியசாலிகள்.     


0 comments:

Post a Comment