தி.ஜாவின் தேவியரும் பரத்தையரும்

| Sunday, September 28, 2014


தொண்ணூறுகளின் ஆரம்ப வருடங்களில் பல்கலைக்கழகங்களின் வளாகங்களில் ஆய்வியல் இளைஞர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் ஆகிய பட்டங்களுக்காக நுழைந்த நான் அடுத்த ஒரு பதினைந்து வருடங்களை அம்மாதிரியான இடங்களிலேயே கழிக்க நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டமா என்பது இன்னும் சரியாக விளங்காத ஒன்றுதான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சிறு நகரங்களின் கல்லூரிகளில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த  ஒருவன் பெருநகரங்களில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான பல்கலைக்கழகங்களின் கட்டிட முற்றங்களிலும், பரந்த புல்வெளிகளிலும், சுருண்டு படுத்திருக்கும் ஒரு பாம்பென வளைந்து முடிவே இல்லாது போய்க்கொண்டிருக்கும் நூலக அலமாரிகளிலும், மின்மினிகளென கண்ணில் ஜாலம் காட்டி இளமையின் உச்சத்தில் திரியும் அந்த மாணவியரின் யவனத்திலும், ஏன் அடிக்கடி நடக்கும் ஆய்வரங்க விவாதங்களிலும் தொலைந்து போவோம். இவைகளால் உள்ளுக்குள் ஏறிவிட்ட மிதப்பு சமனப்பட ஓரிரு வருடங்களாவது ஆகியிருக்கும்.

இது என்னுடைய கதை. எனக்கு இப்படித்தான் நேர்ந்தது. பல்கலைக்கழக மண்ணில் கால் பதித்து நடக்க எனக்கு வருடம் இரண்டாவது ஆகியிருக்கும். வாசிப்பு தீவிரமாகிக் கொண்டிருந்த காலம் அது. நான் வாசித்த வேகம் சக ஆய்வாளர்களிடம் இல்லை என்ற உண்மை வேறு எனக்கு பொருந்தாத மகுடங்களை அணிவித்துக் கொண்டிருந்தது. அவைகள் கோமாளிக் குல்லாய்களாக பிறருக்குத் தெரிந்திருக்கலாம். எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கிலம், தமிழ் மற்றும் மொழியியல் துறைகளில் எனக்கு ஏற்பட்டிருந்த நட்பு வட்டம் எனது வாசிப்பிற்கு முப்பரிமாணத்தை தந்து கொண்டிருந்தது. ஆங்கில செவ்வியல் பிரதிகளில் அதிக நாட்டமும் தீவிர வாசிப்பும் கொண்டிருந்த எனக்கு தமிழ் செவ்வியல் பிரதிகள் எவையேனும் வாசிக்கத் தேவையான திறமைகள் அன்றும் இன்றும் இல்லை. இந்த போதாமையின் பொருட்டு எனது கவனம் தமிழ் நவீன இலக்கியத்தை நோக்கி நகர்ந்தது. புதினம், புதினமற்றவை, கவிதை, சிறுகதை, இலக்கிய விமர்சனம் என்ற துறைகளில் தமிழில் வெளிவந்த முக்கியமான எழுத்துக்கள் அனைத்தையும் படிக்க உகந்ததான இடமாக அந்த சர்வகலாசாலைகளின் வளாகங்கள் இருந்தன. பல புதிய ஆய்வுகள் புதிய களங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. மொழியியல் துறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சில ஆய்வுகளின் முக்கியத்துவம் மொழியின் போக்குகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தன. ஆங்கில இலக்கியத்தில் அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவம் தாண்டி வேறுதிசைகளில் எழுத்து பாயத்தொடங்கியிருந்தது. Magical Realism என்பதின் அதி உயர் சாத்தியங்கள் இலத்தீன் அமெரிக்க எழுத்துக்களில் கோலோச்சிக் கொண்டிருந்தது. இடதுசாரி இலக்கிய விமர்சனக் கோட்பாடுகள், பெண்ணீய பார்வைகள் மற்றும் உளவியல் பகுப்பாய்வின் அடிப்படையில் அமைந்த விமர்சனக் கோட்பாடுகள் பிரதிகளை மறுவாசிப்புக்கு உட்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. ஆய்வாளர்களின் படிப்பறைகள், நூலக முற்றங்கள், துறைக்கும் விடுதிக்கும் இடையே நீண்டிருந்த தார் சாலை நடைப்பயணங்கள், விடுதியின் மாலை நேர தேநீர் தருணங்கள், இரவு சாப்பாட்டிற்கு சற்று முன்னே ஆரம்பித்து சில வேளைகளில் விடியற்காலை வரை நீண்ட விவாதங்கள் எங்களின் தர்க்கங்களை - சிந்தனைகளை சூடுபடுத்திக் கொண்டிருந்தது. தமிழ் ஆய்வு மாணவர் ஒருவர் தமிழ் இலக்கியம் எப்போதும் பல்கலைகழங்களுக்கு வெளியேயே உள்ளது என்று சொன்னதை சம்மதிக்க முடியாமலும் அதன் உண்மைகளையும் ஜீரணிக்க முடியாமல் எங்களில் பலர் திடீரென மௌனமான இரவு இன்னும் அந்த இடம் கால சித்திரம் அழியாமல் அப்படியே உள்ளது. தமிழ் மட்டுமல்ல, வேறு பல துறைகளிலும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான சர்வதேச தரத்தில் ஆய்வேடுகள் எதுவும் சமர்ப்பிக்கப்படுவதேயில்லை என்று எனது பேராசிரியர் ஒருவர் மிகவும் தீர்க்கமாக ஆய்வரங்கம் ஒன்றிலே பிரகடனம் செய்தபொழுது அதை எதிர்த்து பேசவோ அல்லது எதிர்க்கும் முகமாய் ஒரு ஆய்வேட்டை சுட்டவோ யாராலும் முடியாமல் அமைதி காத்த ஆய்வு மாணவர்களாகிய நாங்கள் அதிகபட்சமாக செய்ய முடிந்தது உருவாகிக் கொண்டிருக்கும் எங்களது ஆய்வேடுகளின் தரத்தைப் பற்றிய ஒரு குற்ற உணர்ச்சியை எங்களுக்குள் எழுப்பிக் கொண்டதுதான். அந்த குற்ற உணர்ச்சி பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பின் இதுநாள் வரை தேயவேயில்லை. எனது ஆய்வேட்டை ஒட்டியும் இதே போன்ற சிந்தனைகள் என்னுள் பலசமயம் எழுவதுண்டு. எனது ஆய்வேடானது நான் விரும்பியிருந்த ஆழத்தில், தரத்தில் இல்லை என்பது எனக்கே தெரியும். ஆய்வை நடத்திக்கொண்டிருந்தபொழுதே அது முனைவர் பட்டமளிப்பு விழா கற்பனையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆய்வின் செயல்பாடுகளை விட ஆய்வியல் நிறைஞர் பட்டம் கவர்ச்சி மிகுந்ததாய் தெரிகிறது என்ற உண்மை அப்பட்டத்தை ஒட்டி ஒரு சரியான வேலையை பெறத்துடிக்கும் ஆய்வு மாணவனை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. வேலை பற்றிய கவர்ச்சியின் துணை கொண்டு அவனுடைய ஆய்வின் போதாமையை அவன் எளிதில் கடக்கிறான். வேலை கிடைத்த பிறகு வேறொரு நல்ல ஆழமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு பிராயச்சித்தம் தேடிக்கொள்ளலாம் என்ற அவனது சிந்தனை, அவனது அன்றைய நியாயம் மற்றும் தேவை.

அண்மையில் நூலாக பதிக்கப்பெற்ற தமிழ்த்துறை சார்ந்த ஒரு ஆய்வேட்டை எதேச்சையாக படிக்க நேர்ந்தது. ஆய்வின் தொடக்கமான முன்னுரை, ஆய்வின் கருதுகோல்கள், ஆய்வு நெறி மற்றும் ஆய்வு பிரிவுகளின் தலைப்புகள் ஆகியவை மிகுந்த கவர்ச்சியை ஊட்டுவனவாக இருந்தன. முனைவர்.க.பரிமளம் அவர்கள் “தி.ஜானகிராமனின் நாவல்களில் பாலியல் என்ற தலைப்பிலே தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்தின் பகுதியாக சமர்ப்பித்த ஆய்வேட்டின் செம்மையாக்கப்பட்ட நூல் வடிவம் இது. தி.ஜானகிராமனின் ஆறு நாவல்களையும் அதில் ஆண், பெண் குறித்த ஜானகிராமனின் பார்வைகளையும் பல்வேறு நோக்கில் ஆராய முற்பட்டு தனது கருதுகோல்களை தக்க ஆதாரங்களுடன் நிறுவியோ, மறுத்தோ இருக்கும் க.பரிமளம் அவர்களின் உழைப்பு பெரிய பிரமிப்புக்கானது. க.பரிமளம் அவர்களின் கணவர் தமிழக தலித் சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவரான  திரு.ராஜ்கௌதமன் என்பது இந்தக்  கட்டுரையின் சுவாரசியத்தை கூட்டும் இன்னொரு செய்தி.

ஜானகிராமன் பெண்களை குறித்த தேவி வழிபாடு மனநிலை கொண்டவராக தனது பெரும்பாலான பெண் மாந்தர்களை உருவாக்கியிருக்கிறார். அத்தகைய பெண்களின் வாழ்வில் நேரும் ஆண்கள் அவர்களை பூஜிப்பவர்களாகவே இருக்கிறார்கள். மோகமுள், யமுனா-பாபு இதற்கு சரியான உதாரணம். பாபுவிற்கு யமுனா தேவி உருவம்தான். தேவியின் சகல கடாட்சங்களும் யமுனாவிடம் நிரம்பியிருப்பதாக பாபு உணர்கிறான். இதில் அவனுக்கு சந்தேகம் இல்லை. அவனை விட யமுனா பத்து வயது பெரியவள் என்பது இவன் பிம்பத்தை இன்னும் உறுதிபடுத்துகிறது. இது கண்ணன் ராதாவின் ஒரு முரண் தகவமைப்புதான். கன்னிகாஸ்திரிகள் தங்களின் துறவு வாழ்க்கையை கிறிஸ்துவின் மணவாட்டிகளாக ஆவதின் மூலமே தொடங்குகிறார்கள். மனிதனின் ஆத்மா தெய்வ சேர்க்கையையே நினைத்துக்கொண்டிருக்கிறது. பரமாத்மாவோடு ஆத்மா இணைவது உன்னதம், லட்சியம்.

பரிமளம் அவர்கள் பெண் - பெண்மை, ஆண் - ஆண்மை சமன்பாட்டை ஆழமாக சீர்தூக்கிப் பார்க்கிறார். பெண் என்னும் கருத்து உயிரியல் சம்மந்தப்பட்டது. பெண்மை என்பது சமுதாய மற்றும் கலாச்சார வேர்கள் கொண்டது. பெண் என்னும் உயிரி ஒரு விலங்கு. பெண்ணிற்கு சுற்றித்திரியவும் கட்டுப்பாடற்று தன்போக்கில் இருக்கவும், பிரவகித்து வழியும் பாலின வேட்கைகளை தன் விருப்பத்திற்கு ஒப்ப தணித்துக்கொள்ளவும் நீங்காத வேட்கை கொண்டவள். தந்தைவழி சமூகம் அவளுக்கு ஆண்களால் வகுக்கப்பட்ட கருத்தியல் சட்டகம் ஒன்றை கட்டாயப்படுத்தி அணிவித்திருக்கிறது. பெண்மை என்பது தந்தைவழி சமூகத்தால் அவளுக்கு கொடுக்கப்பட்ட மீளவே முடியாத பாதுகாப்பு அரண் அல்லது சிறை. பெண்மை ஆணுக்கு கட்டுப்படவேண்டியது. ஒரு ஆணை தன்னுடைய பாலின வேட்கைக்காக அவன் விருப்பத்திற்கு உட்பட்டு நுகரக்கொடுப்பது; இதற்கு விலையாய் அவன் தரும் பாதுகாப்பை சுகிப்பது என்ற தகர்க்க முடியாத வளையம் அவளுக்கு இடப்பட்டுவிட்டது. இதற்கான நஷ்ட ஈடாய் அவளுக்கு பதிவிரதை மற்றும் கற்புக்கரசி பட்டங்களும், துர்க்கை, சக்தி மற்றும் காளி அந்தஸ்தும் கொடுக்கப்பட்டது. பெண்மையோடு அவள் நீடிக்கும் வரையில் இந்த பட்டங்களுக்கு அவள் உரிமை கொண்டாடிக் கொள்ளலாம். இதை மீறத் துணிந்தால் அவள் ‘வேசை என்ற முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுவாள். சமூகத்திலிருந்து புறந்தள்ளப்படுதல் என்பது பாதுகாப்பற்ற அச்ச உணர்வு. அதற்கு பயப்படுபவள் பெண் என்ற விலங்கின் வேட்கையை அடக்கி தனது இயல்புக்கு மாறான பெண்மை என்ற இரும்புச்சட்டகத்தை அணிந்து கொண்டு சமூகத்தில் பதிவிரதையாக வலம் வருகிறாள். இதனால் அவளினுள் பெண் மற்றும் பெண்மை இடையே ஒரு பெரிய மோதல் ஏற்பட்டு அந்த மோதலின் தாக்கம் அவளை நிலைகுலையச்செய்கிறது. அவள் ஆணைப் போல் அல்லாமல் தனது பாலின வேட்கையை உயர்மடைமாற்று செய்ய அனுமதிக்கப்படவில்லை. பெண் தன் வாழ்நாள் முழுவதும் பெண் என்ற பாலியல் ஓர்மையுடனேயே இருக்கிறாள். பெண் என்ற ஓர்மை நிலை அவளை விட்டு அகலுவதேயில்லை. வீட்டுக்கு வெளியே சென்று சமூகத்தோடு கலந்து உயர் கல்வி, வேலை, பெரும் பணம் ஈட்டுதல் ஆகியன சில பெண்களுக்கே, அதுவும்  சமீப காலத்தில்தான்  கிட்டியிருக்கிறது. பொருள்முதல்வாதியாக ஆகிப்போன இப்பெண்கள் பணம் ஈட்டும் ஆண்களைப் போலவே பெண் என்னும் உயிரி நிலையில் மையம் கொள்ளுகிறபொழுது, கணவனை தவிர்த்த வேறு ஆடவருடன் பிறழ்ச்சியான பாலுறவில் ஈடுபடுவது இயல்பாகிப்போகிறது. ஆனால் இப்படிப்பட்ட பெண்களால் பெரும் அவதிக்குள்ளாகும் தந்தைவழிச்சமூக ஆண்கள் அவர்களுக்கு ‘வேசையர் என்ற பட்டம் தருகிறார்கள். பொருளீட்டும் மனித ஆற்றலாக பெண் உயர நேர்ந்த பொழுதும் அவள் பெண்மையோடு மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள். அவள் தேவியாக இருக்கலாம், வேசியாக இருக்கலாம். தந்தைவழிச்சமூகம் இரண்டையும் செரித்துக்கொள்கிறது. ஆனால் அவள் பெண்ணாக மட்டுமே இருக்கலாகாது.

க.பரிமளம் அவர்கள் தனது ஆய்வை பெண்ணீயப் பார்வையிலும் விரிவுபடுத்துகிறார். மேற்கத்தீய பெண்ணீயத்தின் முக்கிய ஆளுமைகளின் தத்துவங்களை உள்வாங்கிக்கொண்டு அவைகளை தி.ஜானகிராமன் அவர்களின் படைப்புலகத்தில் உலவும் பெண்மாந்தர்களை ஆய்வுக்கு உட்படுத்தும் க.பரிமளம் இருபதாம் நூற்றாண்டின் மத்திய வருடங்களில் காவிரி நதியின் இரண்டு கரைகளிலும் உருவாகியிருந்த சிறுநகரங்களில் வசித்த விவசாயம் சார்ந்த இந்த பிராமண-வேளாள குடும்பங்களின் பெண்களின் அகச்சிக்கல்களை புதுக்கோணத்திலிருந்து ஆய முயல்கிறார். “அந்தரங்கமே அரசியல்என்பது பெண் ஒரு அகச்சிக்கல் மிகுந்த உயிரி என்பதை விளக்குகிறது. பெண்ணுக்கு பாலுணர்வு தனது உடல் முழுவதும் வியாபித்திருக்கிறது. அது எங்கும் ஒருசேர ஒரே இடத்தில மையம் கொண்டதாக இல்லை. தனது மொத்த உடலே பாலுணர்வால் நிரம்பியுள்ள உயிரியான பெண் அந்த வேட்கையை அவள் விரும்பியபடி, தணித்துக்கொள்ள முடியாதபடி தந்தைவழிச்சமூக அரசியல் அவளை தடுக்கிறது. அவள் உடலால் ஒரு வாழ்வும் மனதால் ஒரு வாழ்வும் கொண்ட அபலையாகிறாள். உடலால் வாழ்வது பெண்மை என்ற நிலையிலும் ஒன்றை விரும்பி அதை மனதால் கற்பனை செய்து வாழ்வது பெண் என்ற நிலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதில் உளச்சிக்கல் மிகுந்து வேறு வேறு நிலைகளில் பல்வேறு வகையாக தன்னை வெளிப்படுத்த முயன்று பிறருக்கும் புரியாமல் தனக்கும் விளங்காமல் சிக்கல்கள் மிகுந்த பெண்களை பேணுவதிலே தந்தைவழிச் சமூக ஆண்களின் சொத்துரிமை காப்பாற்றப்படுகிறது. விதிவிலக்காக தி.ஜானகிராமனின் படைப்புலகத்தில் அம்மணி போன்ற சிலரையும் பார்க்க நேர்கிறது. அம்மணி உடலால் வாழ்பவள். தொட்டுப் பேசித்தான் அவளுக்கு அன்பை காட்ட முடியும். இருபது வயது தொடங்கி தனது முப்பத்தெட்டு வயது வரை ஆயிரத்திற்கும் நெருக்கமான ஆண்களோடு பாலுறவை பகிர்ந்து கொண்ட அம்மணிக்கு தந்தைவழிச் சமூகத்தின் கொடையான குற்ற உணர்வு கொஞ்சமும் கிடையாது. அவள் இந்த உலகத்தையே காதல் செய்கிறாள். தந்தைவழிச் சமூகத்தின் மிகப்பெரிய சவால்கள் இந்த அம்மணிகள். பெண்ணுக்கும் பெண்மைக்கும் இடையில் இருப்பது பொருள்முதல்வாதமே ஒழிய உண்மையில் தந்தைவழிச் சமூக ஆண்களால் பெண்களை எப்போதுமே கட்டுப்படுத்த முடிந்ததில்லை. 

இந்து பிராமண-வேளாள குடும்பங்களின் பதிவிரதைகள் பாத்திரம் ஏற்றிருக்கும் பெண்களுக்கு முரண் பாத்திரங்களாய் பல வேசையர்களையும் உருவாக்குகிறார் தி.ஜானகிராமன். ஆனால், அவரது பிராமண-வேளாள விழுமியங்கள் வேசையர்களை அப்படியே விட்டு விட மறுக்கிறது. அவர்கள் தற்கொலையோ, பைத்தியம் பிடித்தோ அல்லது இறந்தோ போகிறார்கள். ஜானகிராமனை பொறுத்தவரை பாலுணர்வு வேட்கை மிகுந்த பெண்களுக்கு பைத்தியம் பிடிக்கத்தான் வேண்டும். அவரது சமூக மதிப்பீடுகள் அவருக்கு பெண்ணின் உருவத்தை சிலாகிக்க கற்றுக் கொடுத்திருந்தாலும் பெண்மையை மட்டும்தான் துதி பாட சொல்லியிருக்கிறது. ஆசையைத் தணிக்க பெண் வேண்டும்; ஆனால் சொத்துக்களை காக்க தேவைப்படுவதோ பெண்மை. தி.ஜானகிராமனின் இறக்கைகள் வானத்தில் தெரிந்தாலும் கால்கள் மட்டும் இன்னும் மண்ணிலேயே. இருப்பினும் பெண்ணின் அகச் சிக்கல்களை ஒரு இலக்கியப் பிரதிக்குள் - அழகுணர்ச்சி பெருமளவில் பெண்ணீய நோக்கங்களை மழுங்கடிப்பதாக இருந்தாலும் –கொண்டு வந்திருப்பதில் தி.ஜானகிராமனின் படைப்புலகம் தமிழ் புதினத்தில்  ஒரு திருப்பு முனைதான். 

ஜானகிராமனின் படைப்புலகத்தில் உள்ள பாலுணர்வு சிக்கல்கள் நம்முடையவை. நம்மைச் சுற்றியிருக்கும் பெண்கள், அவர்களின் பெண்மை நமக்கு பூடகமாய் தெரிவதின் ஆழத்தை கண்டுணர வேறொரு விமர்சனப் பார்வை தேவைப்படுகிறபொழுது அதை மேற்குலகத்து சமுதாய தத்துவங்களிலிருந்தும் விமர்சன கோட்பாடுகளிலிருந்தும் எடுத்துக் காட்டி விளக்கும் க.பரிமளம் அவர்கள் ஒரு பல்கலைகழக ஆய்வேட்டின் எல்லைக்கோடுகளை மிகத் தெளிவாக தாண்டி பல தொழில்முறை விமர்சகர்கள் சொல்லாததை மேற்கோள் காட்டி விளக்காததை அதீத தாக்கத்துடன் நம் முன் வைக்கிறார்.

தி.ஜானகிராமனின் படைப்புலகத்தில் உள்ள பாலுறவு சிக்கல்கள் ஃப்ராய்ட், யூங், லெவிஸ்ட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய உளவியல் மருத்துவர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கருத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறார் க.பரிமளம். பெண் பால் குறியில்லாதவள். ஆண் குறியைப் பற்றிய தணியாத ஏக்கம் அவளுள் உண்டு. இதை “லிங்க அழுக்காறு (Phallus Envy) என்று உளவியல் குறிப்பிடுகிறது. பாலுணர்வு குறியில்லாத நிலை அவளுள் பெரிய தாழ்வுணர்வை உண்டாக்குகிறது. தான் குறைப்பட்டதாக உணரும் பெண் தாய்மை அடைந்து ஒரு ஆண் மகனை பெற்றெடுக்கும் போது மட்டுமே தன்னுடைய பால் குறியின்மை குறித்த உளச் சிக்கலிலிருந்து விடுபடுகிறாள். ஈடிபஸ் (Oedipus) சந்தர்ப்பம் மற்றும் எலக்ட்ரா (Electra) சந்தர்ப்பம் ஆகிய உளவியல் கருத்துக்களின் வழியாகவும் தி.ஜானகிராமனின் படைப்புலகம் அணுகப்படுகிறது. பெண்ணுக்கு தந்தையை புணர்வதற்கான வேட்கை அவளின் ஓர்மையற்ற மனதில் புதையுண்டு கிடக்கிறது. ஒரு மகனுக்கு தாயைப் புணரும் வேட்கை ஓர்மையற்ற மனதில் புதையுண்டு இருக்கிறது. இவைகளை ஒரு ஆணால் எளிதில் உயர்மடைமாற்று செய்ய முடிகிறது. அவன் பொருள்முதல்வாதியாக பெரும் பொருளீட்டியோ, சமூக உபகாரியாக மாறியோ அல்லது ஏதேனும் வேறொரு செயலில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தியோ தன்னுடைய பாலுறவு சிக்கல்களை உயர்மடைமாற்றம் செய்து வெளியேறுகிறான். ஆனால் தந்தைவழிச் சமூகம் பெண்ணுக்கு அத்தகைய உபாயம் எதையும் தந்திருக்கவில்லை. அவளுக்கு உயர்கல்வியோ வேலைவாய்ப்போ பணம் ஈட்டும் வழியோ அண்மைக் காலம் வரை தரப்படவில்லை. பெண் தன் பாலுணர்வு பற்றிய ஓர்மையிலேயே வாழ்நாள் முழுவதும் இமைப்பொழுதும் அகலாது இருந்து முடிக்கிறாள். உயர்மடைமாற்றம் அவளால் ஆகா. ஜானகிராமனின் அம்மணி, ஈடிபஸ் சந்தர்ப்ப நிலையிலிருந்து நோக்குகின்ற பொழுது, தனது தந்தை வயது உள்ள ஒருவரை புணர்கிறாள். பின் சற்றேறக் குறைய தனது வயதையொத்த ஒருவனிடம் பாலுறவில் சில காலம் ஈடுபடுகிறாள். பிறகு, தனது முப்பதின் அந்திம வருடங்களில், தன் மகன் வயதொத்த ஒருவனைப் புணர்கிறாள். இவ்வாறாக தனக்கு பால் குறியில்லாத ஏக்கத்தை தந்தை, காதலன் மற்றும் மகன் ஆகியோரை புணர்வதில் தீர்த்துக் கொள்கிறாள்.


இந்த நிலை பெரிதும் இந்து பிராமண-வேளாள குடும்பங்களுக்கே பொருந்தும். சாதிப்  படி நிலைகளில்  மிகவும் கீழானவர்கள் எனப்படும் தாழ்த்தப்பட்டோரிலும், பரத்தையரிடத்திலும் இவை பொருந்தா. ஆண்களைப் போலவே இவர்களும் தங்களது பாலுணர்வு சிக்கல்களை எளிதில் உயர்மடைமாற்றம் செய்து கொள்கிறார்கள். இவர்களில் பெரும் பாலானோர் பொருளாதார ரீதியாக சுயசார்பு உடையவர்கள். தங்களது சமூகத்தின் பல தளங்களிலும் ஊடாடி நிற்பவர்கள். தங்களது நிறைவேறாத பாலுணர்வு ஆசைகளை உயர்மடைமாற்றம் செய்வது இவர்களுக்கு எளிது. மேலும் பலருடன் பாலுறவு கொள்வதிலே இவர்களுக்கு மனத்தடையோ சமூகச் சிக்கல்களோ ஏதும் பெரிய அளவில் இல்லை. இவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும் தங்களுடைய சுயத்திற்கு விசுவாசிகளாகவும், இன்பக் கொள்கையில் நியாயமான ஆசை கொண்டவர்களாகவும் தங்களுடைய பாலுணர்வு வேட்கைகளை தணித்துக் கொள்ள பிராமண - வேளாள பெண்கள் நினைத்துப் பார்க்கவும் முடியாத மன உறுதியை உடையவர்களாகவும் திகழ்கிறார்கள். ஆனால் தி.ஜானகிராமனின் படைப்புலகத்தில் இவர்களைப் போன்றவர்கள் இயல்பாக சித்தரிக்கப்படவில்லை. இவர்களுக்கு பிராமண - வேளாள தர்மத்தின் படி தந்தைவழிச் சமூக நீதி ஒன்றை தி.ஜானகிராமன் வழங்கி நிறைவு பெறுகிறார்.

பரிமளம் அவர்களின் நீண்ட ஆய்வேடு படிப்போர் மனதில் பல அதிர்ச்சியான எண்ண அலைகளை உருவாக்குகிறது. நாம் நமது சனாதனம், தர்மம் என்பவைகளின் மீது இதுநாள் வரை வைத்திருக்கும் நம்பிக்கைகளை தகர்த்தெறிகிறது. பொதுவாக ஆய்வேடுகள் “விவாதத்தின் குரலாக இருப்பதில்லை: அப்படி அமைய நெறியாளர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால், க.பரிமளத்தின் இந்த ஆய்வேடு ஒரு பெரிய சமூக விவாதத்தை தன்னுடைய வரம்பிற்குள் நின்று, பெரும் எழுச்சியூட்டும் விதமாக நடத்திக் காட்டியிருக்கிறது. இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ரேடியோவிலிருந்து “பெண்ணாக பிறந்திடவே பெருந்தவம் செய்திட வேண்டுமம்மா என்று ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். இவர் அவரது பெண்களை பதிவிரதைகளாகவோ, தேவியராகவோ, பரத்தையராகவோ  மட்டுமே பார்த்திருப்பார். ஆகவே, குற்ற உணர்ச்சி குறுகுறுக்கிறது. பிராயச்சித்தம் தேடி, ரேடியோ குரலாக காற்றில் அலைகிறது. இவர் போன்றவர்கள் உள்ளிட்ட நம் போன்றவர்கள் பெண்மையை அல்ல பெண்ணை மட்டுமே நம் தோழியாக நடத்திட வேண்டும் என்றதான பரிமளம் அவர்களின் ஆசை தந்தைவழிச் சமூகத்திற்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் மானுடத்திற்கு?

0 comments:

Post a Comment