கோடு தேடும் புள்ளிகள்

| Sunday, September 28, 2014


காலம் ஒருவனை மாற்றிவிடுகிறது என்பது உண்மைதான்.  ஆனால், காலம்தான் மாற்றுகிறதா என்ன? நாம் சந்திக்க நேரும் மனிதர்கள்தானே நம்மை மாற்றியிருப்பது?  நமது உலகம் என்பது மொத்த உலகமா?  நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள்தானே நமது உலகத்தை உருவாக்குகிறார்கள்.  நல்லவர்கள் கெட்டவர்களாக மாறுவதும், தீயோர் திருந்தி மாமனிதர்களாக தம்மை நிறுவிக் கொள்வதும் மாயாஜாலம் மூலமாகவா அல்லது அவர்களைச் சூழ்ந்து நிற்கும் மனிதர்களாலா?

எனக்குத் தோன்றுவதுண்டு.  மனிதன் நல்லவனோ கெட்டவனோ அல்ல.  அவன் சூழ்நிலையால் உருவாக்கப்படுகிறான்.  அவனது எண்ணம் சூழலால் கட்டுபடுத்தப் படுவதுதான்.  சூழலை ஒவ்வொருவரும் வேறு மாதிரி உள்வாங்கினாலும் “அவரது உலகம்” உருப்பெற்றதற்கு அவர் எந்த சமூகத்தில் தன்னை கண்டுகொண்டாரோ அதுதான் காரணம்.  ஒரே சூழலை சார்ந்த அனைவரும் ஒரே மாதிரி உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதில்லை.  இந்த நிமிடத்திய எனது சூழலை நான் எப்படி உள்வாங்குகிறேன் என்பது, நான் எனது கடந்த கால சூழல்களை எப்படி உள்வாங்கியிருக்கிறேன் என்பதையும் பொருத்ததாகும்.  

நாம் இன்று எப்படி இருக்கிறோமோ அதற்குத்தான் எத்தனை மனிதர்கள் காரணமாய் இருந்திருக்கிறார்கள்?  சிலரின் சந்திப்பு நம்மை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது!  சிலரின் சிந்தனைகள், வாழ்வை அவர்கள் அணுகிய விதம், வாழ்வு அவர்களைப் பாதித்த விதம், அவர்கள் வாழ்வை பாதித்த விதம் ஆகியவற்றின் நமது அவதானிப்பு எப்படியெல்லாம் நம்மை மௌனமாக பாதித்துள்ளது!
பவா செல்லத்துரை அவர்கள் திருவண்ணாமலையில் ஒரு முக்கிய வாசிப்புப் புள்ளி.  பல வகைகளில் அசாதாரணமானவர்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயற்பாட்டாளர். ஓயாமல் சமூக நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றி வருபவர்.  இவரது துணைவியார் தமிழின் இன்றைய முக்கியமான மொழிபெயர்ப்பாளர்.  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் நினைவோட்டத்தை “சிதம்பர நினைவுகள்” என்ற பெயரில் திருமதி ஷைலஜா அவர்கள் சிலிர்ப்புறும் வண்ணம் மொழிபெயர்த்திருக்கிறார்.  எல்லாவற்றுக்கும் மேலாக, தழின் பல முக்கியமான படைப்பாளிகள் பவா செல்லத்துரை-ஷைலஜா தம்பதிகளின் விருந்தினர்களாக சிலப்பல நாட்கள் தங்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.  பல இலக்கிய “ஊர்ர்சுற்றிகள்” திரும்பத் திரும்ப திருவண்ணாமலைக்கு வருவதே இவர்கள் வீட்டு விருந்தாளியாக சில நாட்கள் தங்கிவிட்டுச் செல்லத்தான்.  
    
இப்படைப்பாளிகள் பற்றிய தமது நினைவை, அவர்களைப் பற்றிய ஆளுமை அவதானிப்பை, தான் அவர்களிடமிருந்து பெற்றதை, அதே சமயம் அவர்களைப் பற்றியதான தனது விமரிசனத்தை, ஏதேனும் இருப்பின், மிகவும் சன்னமாக கடிதோச்சி மெல்ல எறிகிறார். பவா செல்லத்துரை தொடர் வாசிப்பாளர் என்பது தெளிவாகிறது.  இதற்கு மேல், மொழி, குறிப்பாக உரைநடை, இவருக்குக் கைவருகிறது.  சில வாக்கியங்கள் பிரமிக்க வைக்கின்றன.  பிரபஞ்சனைப் பற்றிய கட்டுரையின் கடைசி வரிகள்: “கள்ளுக் கடைகள் இழந்து, சால்னா ஸ்டால்கள் இழந்து, வீடு இழந்து, அந்த ஆலமரம் வேரோடு சாயும்போதும் அதன் கம்பீரம் குறையாமல், தன் வேரில் கோடாரியோடு மல்லுக்கட்டுபவன் மீதும் விழும் ஆலமர நிழல் மாதிரியானது பிரபஞ்சனின் வாழ்வும் படைப்பும்.” 

த.ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய கட்டுரை மிகச் சிறப்பாக வந்திருப்பவைகளில் ஒன்று.  இந்த பிரம்மாண்டமான இலக்கிய ஆளுமையை தான் மெய்மறந்து வருடக் கணக்கில் பூஜித்து வந்திருப்பதை பதிவு செய்யும் பவா அவர்கள், த.ஜெவின் பிந்தைய பல்டிகளை, கல்லெறிந்து அல்ல – பூவை மிக உக்கிரமாக எறிந்து, தெளிவாக விமரிசிக்கிறார்.  ஒருவருக்கொருவர் எதிரெதிர் திசையில், இலக்கியத்தைப் பொறுத்தவரை, பயணிப்பவர்களாக இருந்தாலும், பவா த.ஜெவின் ஆளுமையை, அதில் இவர் ரசித்த மேன்மைகளைப் பற்றி மட்டும் நமக்குச் சொல்லியிருப்பது சிலாக்கியமானது.

சினிமாக் கலைஞர்கள் தொடங்கி தீவிரமாக இலக்கியம் படிப்பவர்கள் வரை பவா அவர்களின் அவதானிப்பிற்கு தப்பவில்லை.  பாலுமகேந்திரா, மம்முட்டி, பால் சக்காரியா, கந்தர்வன், சுந்தர ராமாசாமி, நாசர், பாரதிராஜா, சா.கந்தசாமி, பாலா, வண்ணநிலவன், எஸ்ரா, மிஷ்கின் ஆகியோர் பாவாவின் நினைவுகளில் தாலாட்டப்படுகிறார்கள். 

பாவாவின் தேர்ந்த உரைநடையில், எளிமையான அவதானிப்பு போல தெரிந்தாலும், மானுடர்களின் மாண்பை பாராட்டியிருக்கும் விதம், படிக்கும் வாசகனுக்கு மனிதத்தைப் பற்றிய நம்பிக்கையை பல மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. 

[வம்சி புக்ஸ் வெளியீடு, திருவண்ணாமலை, உரூபா 130/-]

எஸ்ராவின் பேசிக் கடந்த தூரம்

|


எப்பொழுதும் பேசிக்கொண்டேயிருக்கிறோம் நாம்.  யாரிடமாவது அல்லது நமக்குள்ளேயே.  கனவுகளிலும் நாம் யாருடனோ அல்லது வேறு யாரோ இன்ன பிறரோடோ பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.  பேசிப்  பேசியே வளர்ந்து விட்டோம்.  துக்கம், சந்தோசம், வெற்றி, தோல்வி, காதல், சந்தேகம், நெருக்கடி, நோய், பிறப்பு, இறப்பு என்று எது எதுவோ நம் பேச்சுக்குள் நுழைந்தபடியும் வெளியேறிய வண்ணமுமாய் இருக்கின்றன. பேசிக்கொண்டிருக்கும் போதே, இதுவரை புரியாத விஷயங்கள் புரிய ஆரம்பிக்கின்றன.  

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்ததை பேசுகிறோம்; தெரியாததை பிறர் பேசிக் கேட்கிறோம்.  பேச்சு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, எத்தனை கோடி பேர் சுவாசித்து முடித்தும் தீராத காற்று போல.  எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் “பேசிக் கடந்த தூரம்” படித்து முடித்த பின் மாலைப் பொழுதில், இவருக்குத்தான் பேச எத்தனை விஷயங்கள் உள்ளது என்ற ஆச்சர்யம் மிகுகிறது.  இவரின் எழுத்துலகம் சிறுகதை, நாவல், சிறுவர் புனைவு, கட்டுரை, சினிமா, விமர்சனம் என்ற விரிந்த தளத்தில் தன்னை இட்டு நிரப்பியிருக்கிறது.  ஒரு படைப்பாளி, தான் அளிக்கும் செவ்விகளில் தன்னைப் பற்றிய சுயமதீப்பீட்டையும் நிகழ்கால எழுத்துலகில் தன் இடம் எது என்பதைப் பற்றிய பிரகடனமும் செய்கிறான்.  எழுத நேர்ந்ததற்கான காரணங்களைக் கண்டறியவும், ஏன் இதையெல்லாம் எழுத வேண்டியதாயிற்று என்பதையும் பற்றி எந்தப் புனைவும் இல்லாமல் இதைப் போன்ற செவ்விகளில் சொல்லமுடிகிறது படைப்பாளனால்.  

“பேசிக் கடந்த தூரம்” நான்கு உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  முதல் பகுதி நேர்காணல்கள் கொண்டது.  மனுஷ்யபுத்திரன், கீரனூர் ஜாகீர் ராஜா போன்றோர் படைப்புலக ஸ்தூலம் வாசகனுக்கு நன்கு விளங்க வேண்டி ஆழமான கிணற்றில் தூர்வாருவது மாதிரியான கேள்விகளின் மூலம் எஸ்ராவை தனது படைப்புலக சாரம், பின்புலம், இயங்கு சக்தி, இலக்கியம் குறித்த பார்வைகள், சம எழுத்தாளர்கள் மீதான நம்பிக்கை / அவநம்பிக்கை ஆகியவை பற்றி வெளிப்படையாக பேசவைத்திருக்கிறார்கள்.  எஸ்ராவும் பேசச் சலிப்புக் கொண்டவரா என்ன?  தொடர் வாசிப்பை தவமே போல நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருபவரும், தேசாந்தரியாக இந்தப் பரந்த தேசத்தின் நீள  அகலங்களை ஆண்டுக் கணக்கில் சுற்றி அலைந்தவரும், உலகை கண்ணால், காதால், கால்களால், உணர்வால் மேவியவருமான எஸ்ரா தனது பார்வைகளை பாசாங்கு எதுவுமே இல்லாமல் இந்த நேர்காணல்களில் வாசகனிடம் ஒப்புவிக்கும்போது, அந்த நேர்மையில் மகிழ்ந்து போகிறோம்.  

எழுத்து மொழி எப்போதுமே நமது விசேஷ கவனத்தை வேண்டுவது.  கருத்துக்கான மொழி ஒன்று உண்டு.  அதன் பிறப்பு நேர்மையில், தனக்கான வடிவை, சொல்லாடலை தேர்ந்து கொள்கிறது. படைப்பாளி செலுத்தப்படுகிறான்.  அங்கே அவனுக்கு செய்ய ஒன்றுமேயில்லை.  வேண்டுமானால் அவனிடம் இருக்கும் மொழி ஆளுமை, ரகசியங்களை சிமப்பட்டு அடக்காத திறந்த மனது ஆகியவை அப்படைப்பின் வெளியேற்றத்திற்கு கொஞ்சம் உதவலாம்.  எஸ்ரா அவர்களின் சம்பாஷணைகளிலேயே காணப்படும் ஒரு இசை லயம் கொண்ட படைப்பு மொழி, இவர் எப்படி தமிழின் முக்கிய படைப்பாளியாக இருக்கிறார் என்பதின் காரணத்தை விளக்குகிறது.  இவரே முன்னுரையில் சொல்கிறார்:  “நான் ஒரு சலிப்பில்லாத பேச்சாளி. சொல்லப்போனால், சதா பேச்சின் வாலைப் பிடித்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பவன்.”

இதன் இரண்டாவது பகுதி “ஆனந்த விகடன்” வார இதழில் இவர் எழுதி வந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு.  வாசகர்களின் வெள்ளந்தியான கேள்விகளுக்கு முடிந்தவரையில் எளிமையாக பதில்களை சொல்லியிருக்கிறார். இங்கே எட்டிப்பார்க்கும் ஜனரஞ்சகம் விகடனால் விளைந்தது; எஸ்ரா பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.  இந்தச் சிறிய புத்தகத்தின் ஆகச் சிறப்பான பகுதி என நான் கருதுவது மூன்றாவது பகுதியான “ஊரும் வாழ்வும்”.  தனது இளமைப் பிராயத்தைப் பற்றிய கட்டுரைகள்.  வாசகனை அவனது வாழ்வனுபவத்திற்குள் எளிதாக கூட்டிச் செல்கின்றன இந்தக் கட்டுரைகள்.  எப்படி நமது அனைவரின் இளமைப் பிராயங்களும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கின்றன?  எழுபதுகளில் பள்ளியில் படித்து வந்த அனைவரின் பள்ளி நாட்களை மிகவும் நுண்ணியமாக, அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றின் அத்தனை இயக்கத்தையும் ஒன்று விடாமல், “என் பள்ளி” கட்டுரையில் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்.  “துணையெழுத்து” எழுதியவருக்கு இதெல்லாம் சாதனையா என்ன?  படிப்பவனுக்குத்தான் தொண்டையில் பந்து போல எதோ ஒன்று மிதந்து வந்து வழிமறித்துக் கொண்டு, கன்னங்களில் சரம் சரமாக கண்ணீர் மாலைகள் பெருக்கோடு, யாரும் பார்ப்பதற்குள் துடைத்தெறிய வேண்டிய அவஸ்தையெல்லாம்.

இப்புத்தகத்தின் கடைசிப் பகுதியில் “சிறுகதைக் கலை” பற்றிய சில கட்டுரைகள்.  படைப்பின் ரகசியம் மனிதப் பயல் அறிய முடிவதா என்ன?  இருந்தாலும், எல்லோருமே அந்த பிரும்ம ரகசியத்தைப் பற்றி நாம் அறிந்து கொண்ட வரையில் பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்!  எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுக்கப்படும் பாடங்கள், மாணவருக்கு விளங்கிக் கொள்ள முடியாத பகுதிகளாகவே எப்பொழுதும் முடிகின்றன.  

செத்தால்தானே சுடுகாடு தெரியும்!

(உயிர்மை பதிப்பகம், சென்னை, உரூபா 130/-)

தி.ஜாவின் தேவியரும் பரத்தையரும்

|


தொண்ணூறுகளின் ஆரம்ப வருடங்களில் பல்கலைக்கழகங்களின் வளாகங்களில் ஆய்வியல் இளைஞர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் ஆகிய பட்டங்களுக்காக நுழைந்த நான் அடுத்த ஒரு பதினைந்து வருடங்களை அம்மாதிரியான இடங்களிலேயே கழிக்க நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டமா என்பது இன்னும் சரியாக விளங்காத ஒன்றுதான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சிறு நகரங்களின் கல்லூரிகளில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த  ஒருவன் பெருநகரங்களில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான பல்கலைக்கழகங்களின் கட்டிட முற்றங்களிலும், பரந்த புல்வெளிகளிலும், சுருண்டு படுத்திருக்கும் ஒரு பாம்பென வளைந்து முடிவே இல்லாது போய்க்கொண்டிருக்கும் நூலக அலமாரிகளிலும், மின்மினிகளென கண்ணில் ஜாலம் காட்டி இளமையின் உச்சத்தில் திரியும் அந்த மாணவியரின் யவனத்திலும், ஏன் அடிக்கடி நடக்கும் ஆய்வரங்க விவாதங்களிலும் தொலைந்து போவோம். இவைகளால் உள்ளுக்குள் ஏறிவிட்ட மிதப்பு சமனப்பட ஓரிரு வருடங்களாவது ஆகியிருக்கும்.

இது என்னுடைய கதை. எனக்கு இப்படித்தான் நேர்ந்தது. பல்கலைக்கழக மண்ணில் கால் பதித்து நடக்க எனக்கு வருடம் இரண்டாவது ஆகியிருக்கும். வாசிப்பு தீவிரமாகிக் கொண்டிருந்த காலம் அது. நான் வாசித்த வேகம் சக ஆய்வாளர்களிடம் இல்லை என்ற உண்மை வேறு எனக்கு பொருந்தாத மகுடங்களை அணிவித்துக் கொண்டிருந்தது. அவைகள் கோமாளிக் குல்லாய்களாக பிறருக்குத் தெரிந்திருக்கலாம். எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கிலம், தமிழ் மற்றும் மொழியியல் துறைகளில் எனக்கு ஏற்பட்டிருந்த நட்பு வட்டம் எனது வாசிப்பிற்கு முப்பரிமாணத்தை தந்து கொண்டிருந்தது. ஆங்கில செவ்வியல் பிரதிகளில் அதிக நாட்டமும் தீவிர வாசிப்பும் கொண்டிருந்த எனக்கு தமிழ் செவ்வியல் பிரதிகள் எவையேனும் வாசிக்கத் தேவையான திறமைகள் அன்றும் இன்றும் இல்லை. இந்த போதாமையின் பொருட்டு எனது கவனம் தமிழ் நவீன இலக்கியத்தை நோக்கி நகர்ந்தது. புதினம், புதினமற்றவை, கவிதை, சிறுகதை, இலக்கிய விமர்சனம் என்ற துறைகளில் தமிழில் வெளிவந்த முக்கியமான எழுத்துக்கள் அனைத்தையும் படிக்க உகந்ததான இடமாக அந்த சர்வகலாசாலைகளின் வளாகங்கள் இருந்தன. பல புதிய ஆய்வுகள் புதிய களங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. மொழியியல் துறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சில ஆய்வுகளின் முக்கியத்துவம் மொழியின் போக்குகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தன. ஆங்கில இலக்கியத்தில் அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவம் தாண்டி வேறுதிசைகளில் எழுத்து பாயத்தொடங்கியிருந்தது. Magical Realism என்பதின் அதி உயர் சாத்தியங்கள் இலத்தீன் அமெரிக்க எழுத்துக்களில் கோலோச்சிக் கொண்டிருந்தது. இடதுசாரி இலக்கிய விமர்சனக் கோட்பாடுகள், பெண்ணீய பார்வைகள் மற்றும் உளவியல் பகுப்பாய்வின் அடிப்படையில் அமைந்த விமர்சனக் கோட்பாடுகள் பிரதிகளை மறுவாசிப்புக்கு உட்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. ஆய்வாளர்களின் படிப்பறைகள், நூலக முற்றங்கள், துறைக்கும் விடுதிக்கும் இடையே நீண்டிருந்த தார் சாலை நடைப்பயணங்கள், விடுதியின் மாலை நேர தேநீர் தருணங்கள், இரவு சாப்பாட்டிற்கு சற்று முன்னே ஆரம்பித்து சில வேளைகளில் விடியற்காலை வரை நீண்ட விவாதங்கள் எங்களின் தர்க்கங்களை - சிந்தனைகளை சூடுபடுத்திக் கொண்டிருந்தது. தமிழ் ஆய்வு மாணவர் ஒருவர் தமிழ் இலக்கியம் எப்போதும் பல்கலைகழங்களுக்கு வெளியேயே உள்ளது என்று சொன்னதை சம்மதிக்க முடியாமலும் அதன் உண்மைகளையும் ஜீரணிக்க முடியாமல் எங்களில் பலர் திடீரென மௌனமான இரவு இன்னும் அந்த இடம் கால சித்திரம் அழியாமல் அப்படியே உள்ளது. தமிழ் மட்டுமல்ல, வேறு பல துறைகளிலும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான சர்வதேச தரத்தில் ஆய்வேடுகள் எதுவும் சமர்ப்பிக்கப்படுவதேயில்லை என்று எனது பேராசிரியர் ஒருவர் மிகவும் தீர்க்கமாக ஆய்வரங்கம் ஒன்றிலே பிரகடனம் செய்தபொழுது அதை எதிர்த்து பேசவோ அல்லது எதிர்க்கும் முகமாய் ஒரு ஆய்வேட்டை சுட்டவோ யாராலும் முடியாமல் அமைதி காத்த ஆய்வு மாணவர்களாகிய நாங்கள் அதிகபட்சமாக செய்ய முடிந்தது உருவாகிக் கொண்டிருக்கும் எங்களது ஆய்வேடுகளின் தரத்தைப் பற்றிய ஒரு குற்ற உணர்ச்சியை எங்களுக்குள் எழுப்பிக் கொண்டதுதான். அந்த குற்ற உணர்ச்சி பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பின் இதுநாள் வரை தேயவேயில்லை. எனது ஆய்வேட்டை ஒட்டியும் இதே போன்ற சிந்தனைகள் என்னுள் பலசமயம் எழுவதுண்டு. எனது ஆய்வேடானது நான் விரும்பியிருந்த ஆழத்தில், தரத்தில் இல்லை என்பது எனக்கே தெரியும். ஆய்வை நடத்திக்கொண்டிருந்தபொழுதே அது முனைவர் பட்டமளிப்பு விழா கற்பனையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆய்வின் செயல்பாடுகளை விட ஆய்வியல் நிறைஞர் பட்டம் கவர்ச்சி மிகுந்ததாய் தெரிகிறது என்ற உண்மை அப்பட்டத்தை ஒட்டி ஒரு சரியான வேலையை பெறத்துடிக்கும் ஆய்வு மாணவனை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. வேலை பற்றிய கவர்ச்சியின் துணை கொண்டு அவனுடைய ஆய்வின் போதாமையை அவன் எளிதில் கடக்கிறான். வேலை கிடைத்த பிறகு வேறொரு நல்ல ஆழமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு பிராயச்சித்தம் தேடிக்கொள்ளலாம் என்ற அவனது சிந்தனை, அவனது அன்றைய நியாயம் மற்றும் தேவை.

அண்மையில் நூலாக பதிக்கப்பெற்ற தமிழ்த்துறை சார்ந்த ஒரு ஆய்வேட்டை எதேச்சையாக படிக்க நேர்ந்தது. ஆய்வின் தொடக்கமான முன்னுரை, ஆய்வின் கருதுகோல்கள், ஆய்வு நெறி மற்றும் ஆய்வு பிரிவுகளின் தலைப்புகள் ஆகியவை மிகுந்த கவர்ச்சியை ஊட்டுவனவாக இருந்தன. முனைவர்.க.பரிமளம் அவர்கள் “தி.ஜானகிராமனின் நாவல்களில் பாலியல் என்ற தலைப்பிலே தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்தின் பகுதியாக சமர்ப்பித்த ஆய்வேட்டின் செம்மையாக்கப்பட்ட நூல் வடிவம் இது. தி.ஜானகிராமனின் ஆறு நாவல்களையும் அதில் ஆண், பெண் குறித்த ஜானகிராமனின் பார்வைகளையும் பல்வேறு நோக்கில் ஆராய முற்பட்டு தனது கருதுகோல்களை தக்க ஆதாரங்களுடன் நிறுவியோ, மறுத்தோ இருக்கும் க.பரிமளம் அவர்களின் உழைப்பு பெரிய பிரமிப்புக்கானது. க.பரிமளம் அவர்களின் கணவர் தமிழக தலித் சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவரான  திரு.ராஜ்கௌதமன் என்பது இந்தக்  கட்டுரையின் சுவாரசியத்தை கூட்டும் இன்னொரு செய்தி.

ஜானகிராமன் பெண்களை குறித்த தேவி வழிபாடு மனநிலை கொண்டவராக தனது பெரும்பாலான பெண் மாந்தர்களை உருவாக்கியிருக்கிறார். அத்தகைய பெண்களின் வாழ்வில் நேரும் ஆண்கள் அவர்களை பூஜிப்பவர்களாகவே இருக்கிறார்கள். மோகமுள், யமுனா-பாபு இதற்கு சரியான உதாரணம். பாபுவிற்கு யமுனா தேவி உருவம்தான். தேவியின் சகல கடாட்சங்களும் யமுனாவிடம் நிரம்பியிருப்பதாக பாபு உணர்கிறான். இதில் அவனுக்கு சந்தேகம் இல்லை. அவனை விட யமுனா பத்து வயது பெரியவள் என்பது இவன் பிம்பத்தை இன்னும் உறுதிபடுத்துகிறது. இது கண்ணன் ராதாவின் ஒரு முரண் தகவமைப்புதான். கன்னிகாஸ்திரிகள் தங்களின் துறவு வாழ்க்கையை கிறிஸ்துவின் மணவாட்டிகளாக ஆவதின் மூலமே தொடங்குகிறார்கள். மனிதனின் ஆத்மா தெய்வ சேர்க்கையையே நினைத்துக்கொண்டிருக்கிறது. பரமாத்மாவோடு ஆத்மா இணைவது உன்னதம், லட்சியம்.

பரிமளம் அவர்கள் பெண் - பெண்மை, ஆண் - ஆண்மை சமன்பாட்டை ஆழமாக சீர்தூக்கிப் பார்க்கிறார். பெண் என்னும் கருத்து உயிரியல் சம்மந்தப்பட்டது. பெண்மை என்பது சமுதாய மற்றும் கலாச்சார வேர்கள் கொண்டது. பெண் என்னும் உயிரி ஒரு விலங்கு. பெண்ணிற்கு சுற்றித்திரியவும் கட்டுப்பாடற்று தன்போக்கில் இருக்கவும், பிரவகித்து வழியும் பாலின வேட்கைகளை தன் விருப்பத்திற்கு ஒப்ப தணித்துக்கொள்ளவும் நீங்காத வேட்கை கொண்டவள். தந்தைவழி சமூகம் அவளுக்கு ஆண்களால் வகுக்கப்பட்ட கருத்தியல் சட்டகம் ஒன்றை கட்டாயப்படுத்தி அணிவித்திருக்கிறது. பெண்மை என்பது தந்தைவழி சமூகத்தால் அவளுக்கு கொடுக்கப்பட்ட மீளவே முடியாத பாதுகாப்பு அரண் அல்லது சிறை. பெண்மை ஆணுக்கு கட்டுப்படவேண்டியது. ஒரு ஆணை தன்னுடைய பாலின வேட்கைக்காக அவன் விருப்பத்திற்கு உட்பட்டு நுகரக்கொடுப்பது; இதற்கு விலையாய் அவன் தரும் பாதுகாப்பை சுகிப்பது என்ற தகர்க்க முடியாத வளையம் அவளுக்கு இடப்பட்டுவிட்டது. இதற்கான நஷ்ட ஈடாய் அவளுக்கு பதிவிரதை மற்றும் கற்புக்கரசி பட்டங்களும், துர்க்கை, சக்தி மற்றும் காளி அந்தஸ்தும் கொடுக்கப்பட்டது. பெண்மையோடு அவள் நீடிக்கும் வரையில் இந்த பட்டங்களுக்கு அவள் உரிமை கொண்டாடிக் கொள்ளலாம். இதை மீறத் துணிந்தால் அவள் ‘வேசை என்ற முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுவாள். சமூகத்திலிருந்து புறந்தள்ளப்படுதல் என்பது பாதுகாப்பற்ற அச்ச உணர்வு. அதற்கு பயப்படுபவள் பெண் என்ற விலங்கின் வேட்கையை அடக்கி தனது இயல்புக்கு மாறான பெண்மை என்ற இரும்புச்சட்டகத்தை அணிந்து கொண்டு சமூகத்தில் பதிவிரதையாக வலம் வருகிறாள். இதனால் அவளினுள் பெண் மற்றும் பெண்மை இடையே ஒரு பெரிய மோதல் ஏற்பட்டு அந்த மோதலின் தாக்கம் அவளை நிலைகுலையச்செய்கிறது. அவள் ஆணைப் போல் அல்லாமல் தனது பாலின வேட்கையை உயர்மடைமாற்று செய்ய அனுமதிக்கப்படவில்லை. பெண் தன் வாழ்நாள் முழுவதும் பெண் என்ற பாலியல் ஓர்மையுடனேயே இருக்கிறாள். பெண் என்ற ஓர்மை நிலை அவளை விட்டு அகலுவதேயில்லை. வீட்டுக்கு வெளியே சென்று சமூகத்தோடு கலந்து உயர் கல்வி, வேலை, பெரும் பணம் ஈட்டுதல் ஆகியன சில பெண்களுக்கே, அதுவும்  சமீப காலத்தில்தான்  கிட்டியிருக்கிறது. பொருள்முதல்வாதியாக ஆகிப்போன இப்பெண்கள் பணம் ஈட்டும் ஆண்களைப் போலவே பெண் என்னும் உயிரி நிலையில் மையம் கொள்ளுகிறபொழுது, கணவனை தவிர்த்த வேறு ஆடவருடன் பிறழ்ச்சியான பாலுறவில் ஈடுபடுவது இயல்பாகிப்போகிறது. ஆனால் இப்படிப்பட்ட பெண்களால் பெரும் அவதிக்குள்ளாகும் தந்தைவழிச்சமூக ஆண்கள் அவர்களுக்கு ‘வேசையர் என்ற பட்டம் தருகிறார்கள். பொருளீட்டும் மனித ஆற்றலாக பெண் உயர நேர்ந்த பொழுதும் அவள் பெண்மையோடு மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள். அவள் தேவியாக இருக்கலாம், வேசியாக இருக்கலாம். தந்தைவழிச்சமூகம் இரண்டையும் செரித்துக்கொள்கிறது. ஆனால் அவள் பெண்ணாக மட்டுமே இருக்கலாகாது.

க.பரிமளம் அவர்கள் தனது ஆய்வை பெண்ணீயப் பார்வையிலும் விரிவுபடுத்துகிறார். மேற்கத்தீய பெண்ணீயத்தின் முக்கிய ஆளுமைகளின் தத்துவங்களை உள்வாங்கிக்கொண்டு அவைகளை தி.ஜானகிராமன் அவர்களின் படைப்புலகத்தில் உலவும் பெண்மாந்தர்களை ஆய்வுக்கு உட்படுத்தும் க.பரிமளம் இருபதாம் நூற்றாண்டின் மத்திய வருடங்களில் காவிரி நதியின் இரண்டு கரைகளிலும் உருவாகியிருந்த சிறுநகரங்களில் வசித்த விவசாயம் சார்ந்த இந்த பிராமண-வேளாள குடும்பங்களின் பெண்களின் அகச்சிக்கல்களை புதுக்கோணத்திலிருந்து ஆய முயல்கிறார். “அந்தரங்கமே அரசியல்என்பது பெண் ஒரு அகச்சிக்கல் மிகுந்த உயிரி என்பதை விளக்குகிறது. பெண்ணுக்கு பாலுணர்வு தனது உடல் முழுவதும் வியாபித்திருக்கிறது. அது எங்கும் ஒருசேர ஒரே இடத்தில மையம் கொண்டதாக இல்லை. தனது மொத்த உடலே பாலுணர்வால் நிரம்பியுள்ள உயிரியான பெண் அந்த வேட்கையை அவள் விரும்பியபடி, தணித்துக்கொள்ள முடியாதபடி தந்தைவழிச்சமூக அரசியல் அவளை தடுக்கிறது. அவள் உடலால் ஒரு வாழ்வும் மனதால் ஒரு வாழ்வும் கொண்ட அபலையாகிறாள். உடலால் வாழ்வது பெண்மை என்ற நிலையிலும் ஒன்றை விரும்பி அதை மனதால் கற்பனை செய்து வாழ்வது பெண் என்ற நிலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதில் உளச்சிக்கல் மிகுந்து வேறு வேறு நிலைகளில் பல்வேறு வகையாக தன்னை வெளிப்படுத்த முயன்று பிறருக்கும் புரியாமல் தனக்கும் விளங்காமல் சிக்கல்கள் மிகுந்த பெண்களை பேணுவதிலே தந்தைவழிச் சமூக ஆண்களின் சொத்துரிமை காப்பாற்றப்படுகிறது. விதிவிலக்காக தி.ஜானகிராமனின் படைப்புலகத்தில் அம்மணி போன்ற சிலரையும் பார்க்க நேர்கிறது. அம்மணி உடலால் வாழ்பவள். தொட்டுப் பேசித்தான் அவளுக்கு அன்பை காட்ட முடியும். இருபது வயது தொடங்கி தனது முப்பத்தெட்டு வயது வரை ஆயிரத்திற்கும் நெருக்கமான ஆண்களோடு பாலுறவை பகிர்ந்து கொண்ட அம்மணிக்கு தந்தைவழிச் சமூகத்தின் கொடையான குற்ற உணர்வு கொஞ்சமும் கிடையாது. அவள் இந்த உலகத்தையே காதல் செய்கிறாள். தந்தைவழிச் சமூகத்தின் மிகப்பெரிய சவால்கள் இந்த அம்மணிகள். பெண்ணுக்கும் பெண்மைக்கும் இடையில் இருப்பது பொருள்முதல்வாதமே ஒழிய உண்மையில் தந்தைவழிச் சமூக ஆண்களால் பெண்களை எப்போதுமே கட்டுப்படுத்த முடிந்ததில்லை. 

இந்து பிராமண-வேளாள குடும்பங்களின் பதிவிரதைகள் பாத்திரம் ஏற்றிருக்கும் பெண்களுக்கு முரண் பாத்திரங்களாய் பல வேசையர்களையும் உருவாக்குகிறார் தி.ஜானகிராமன். ஆனால், அவரது பிராமண-வேளாள விழுமியங்கள் வேசையர்களை அப்படியே விட்டு விட மறுக்கிறது. அவர்கள் தற்கொலையோ, பைத்தியம் பிடித்தோ அல்லது இறந்தோ போகிறார்கள். ஜானகிராமனை பொறுத்தவரை பாலுணர்வு வேட்கை மிகுந்த பெண்களுக்கு பைத்தியம் பிடிக்கத்தான் வேண்டும். அவரது சமூக மதிப்பீடுகள் அவருக்கு பெண்ணின் உருவத்தை சிலாகிக்க கற்றுக் கொடுத்திருந்தாலும் பெண்மையை மட்டும்தான் துதி பாட சொல்லியிருக்கிறது. ஆசையைத் தணிக்க பெண் வேண்டும்; ஆனால் சொத்துக்களை காக்க தேவைப்படுவதோ பெண்மை. தி.ஜானகிராமனின் இறக்கைகள் வானத்தில் தெரிந்தாலும் கால்கள் மட்டும் இன்னும் மண்ணிலேயே. இருப்பினும் பெண்ணின் அகச் சிக்கல்களை ஒரு இலக்கியப் பிரதிக்குள் - அழகுணர்ச்சி பெருமளவில் பெண்ணீய நோக்கங்களை மழுங்கடிப்பதாக இருந்தாலும் –கொண்டு வந்திருப்பதில் தி.ஜானகிராமனின் படைப்புலகம் தமிழ் புதினத்தில்  ஒரு திருப்பு முனைதான். 

ஜானகிராமனின் படைப்புலகத்தில் உள்ள பாலுணர்வு சிக்கல்கள் நம்முடையவை. நம்மைச் சுற்றியிருக்கும் பெண்கள், அவர்களின் பெண்மை நமக்கு பூடகமாய் தெரிவதின் ஆழத்தை கண்டுணர வேறொரு விமர்சனப் பார்வை தேவைப்படுகிறபொழுது அதை மேற்குலகத்து சமுதாய தத்துவங்களிலிருந்தும் விமர்சன கோட்பாடுகளிலிருந்தும் எடுத்துக் காட்டி விளக்கும் க.பரிமளம் அவர்கள் ஒரு பல்கலைகழக ஆய்வேட்டின் எல்லைக்கோடுகளை மிகத் தெளிவாக தாண்டி பல தொழில்முறை விமர்சகர்கள் சொல்லாததை மேற்கோள் காட்டி விளக்காததை அதீத தாக்கத்துடன் நம் முன் வைக்கிறார்.

தி.ஜானகிராமனின் படைப்புலகத்தில் உள்ள பாலுறவு சிக்கல்கள் ஃப்ராய்ட், யூங், லெவிஸ்ட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய உளவியல் மருத்துவர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கருத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறார் க.பரிமளம். பெண் பால் குறியில்லாதவள். ஆண் குறியைப் பற்றிய தணியாத ஏக்கம் அவளுள் உண்டு. இதை “லிங்க அழுக்காறு (Phallus Envy) என்று உளவியல் குறிப்பிடுகிறது. பாலுணர்வு குறியில்லாத நிலை அவளுள் பெரிய தாழ்வுணர்வை உண்டாக்குகிறது. தான் குறைப்பட்டதாக உணரும் பெண் தாய்மை அடைந்து ஒரு ஆண் மகனை பெற்றெடுக்கும் போது மட்டுமே தன்னுடைய பால் குறியின்மை குறித்த உளச் சிக்கலிலிருந்து விடுபடுகிறாள். ஈடிபஸ் (Oedipus) சந்தர்ப்பம் மற்றும் எலக்ட்ரா (Electra) சந்தர்ப்பம் ஆகிய உளவியல் கருத்துக்களின் வழியாகவும் தி.ஜானகிராமனின் படைப்புலகம் அணுகப்படுகிறது. பெண்ணுக்கு தந்தையை புணர்வதற்கான வேட்கை அவளின் ஓர்மையற்ற மனதில் புதையுண்டு கிடக்கிறது. ஒரு மகனுக்கு தாயைப் புணரும் வேட்கை ஓர்மையற்ற மனதில் புதையுண்டு இருக்கிறது. இவைகளை ஒரு ஆணால் எளிதில் உயர்மடைமாற்று செய்ய முடிகிறது. அவன் பொருள்முதல்வாதியாக பெரும் பொருளீட்டியோ, சமூக உபகாரியாக மாறியோ அல்லது ஏதேனும் வேறொரு செயலில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தியோ தன்னுடைய பாலுறவு சிக்கல்களை உயர்மடைமாற்றம் செய்து வெளியேறுகிறான். ஆனால் தந்தைவழிச் சமூகம் பெண்ணுக்கு அத்தகைய உபாயம் எதையும் தந்திருக்கவில்லை. அவளுக்கு உயர்கல்வியோ வேலைவாய்ப்போ பணம் ஈட்டும் வழியோ அண்மைக் காலம் வரை தரப்படவில்லை. பெண் தன் பாலுணர்வு பற்றிய ஓர்மையிலேயே வாழ்நாள் முழுவதும் இமைப்பொழுதும் அகலாது இருந்து முடிக்கிறாள். உயர்மடைமாற்றம் அவளால் ஆகா. ஜானகிராமனின் அம்மணி, ஈடிபஸ் சந்தர்ப்ப நிலையிலிருந்து நோக்குகின்ற பொழுது, தனது தந்தை வயது உள்ள ஒருவரை புணர்கிறாள். பின் சற்றேறக் குறைய தனது வயதையொத்த ஒருவனிடம் பாலுறவில் சில காலம் ஈடுபடுகிறாள். பிறகு, தனது முப்பதின் அந்திம வருடங்களில், தன் மகன் வயதொத்த ஒருவனைப் புணர்கிறாள். இவ்வாறாக தனக்கு பால் குறியில்லாத ஏக்கத்தை தந்தை, காதலன் மற்றும் மகன் ஆகியோரை புணர்வதில் தீர்த்துக் கொள்கிறாள்.


இந்த நிலை பெரிதும் இந்து பிராமண-வேளாள குடும்பங்களுக்கே பொருந்தும். சாதிப்  படி நிலைகளில்  மிகவும் கீழானவர்கள் எனப்படும் தாழ்த்தப்பட்டோரிலும், பரத்தையரிடத்திலும் இவை பொருந்தா. ஆண்களைப் போலவே இவர்களும் தங்களது பாலுணர்வு சிக்கல்களை எளிதில் உயர்மடைமாற்றம் செய்து கொள்கிறார்கள். இவர்களில் பெரும் பாலானோர் பொருளாதார ரீதியாக சுயசார்பு உடையவர்கள். தங்களது சமூகத்தின் பல தளங்களிலும் ஊடாடி நிற்பவர்கள். தங்களது நிறைவேறாத பாலுணர்வு ஆசைகளை உயர்மடைமாற்றம் செய்வது இவர்களுக்கு எளிது. மேலும் பலருடன் பாலுறவு கொள்வதிலே இவர்களுக்கு மனத்தடையோ சமூகச் சிக்கல்களோ ஏதும் பெரிய அளவில் இல்லை. இவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும் தங்களுடைய சுயத்திற்கு விசுவாசிகளாகவும், இன்பக் கொள்கையில் நியாயமான ஆசை கொண்டவர்களாகவும் தங்களுடைய பாலுணர்வு வேட்கைகளை தணித்துக் கொள்ள பிராமண - வேளாள பெண்கள் நினைத்துப் பார்க்கவும் முடியாத மன உறுதியை உடையவர்களாகவும் திகழ்கிறார்கள். ஆனால் தி.ஜானகிராமனின் படைப்புலகத்தில் இவர்களைப் போன்றவர்கள் இயல்பாக சித்தரிக்கப்படவில்லை. இவர்களுக்கு பிராமண - வேளாள தர்மத்தின் படி தந்தைவழிச் சமூக நீதி ஒன்றை தி.ஜானகிராமன் வழங்கி நிறைவு பெறுகிறார்.

பரிமளம் அவர்களின் நீண்ட ஆய்வேடு படிப்போர் மனதில் பல அதிர்ச்சியான எண்ண அலைகளை உருவாக்குகிறது. நாம் நமது சனாதனம், தர்மம் என்பவைகளின் மீது இதுநாள் வரை வைத்திருக்கும் நம்பிக்கைகளை தகர்த்தெறிகிறது. பொதுவாக ஆய்வேடுகள் “விவாதத்தின் குரலாக இருப்பதில்லை: அப்படி அமைய நெறியாளர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால், க.பரிமளத்தின் இந்த ஆய்வேடு ஒரு பெரிய சமூக விவாதத்தை தன்னுடைய வரம்பிற்குள் நின்று, பெரும் எழுச்சியூட்டும் விதமாக நடத்திக் காட்டியிருக்கிறது. இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ரேடியோவிலிருந்து “பெண்ணாக பிறந்திடவே பெருந்தவம் செய்திட வேண்டுமம்மா என்று ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். இவர் அவரது பெண்களை பதிவிரதைகளாகவோ, தேவியராகவோ, பரத்தையராகவோ  மட்டுமே பார்த்திருப்பார். ஆகவே, குற்ற உணர்ச்சி குறுகுறுக்கிறது. பிராயச்சித்தம் தேடி, ரேடியோ குரலாக காற்றில் அலைகிறது. இவர் போன்றவர்கள் உள்ளிட்ட நம் போன்றவர்கள் பெண்மையை அல்ல பெண்ணை மட்டுமே நம் தோழியாக நடத்திட வேண்டும் என்றதான பரிமளம் அவர்களின் ஆசை தந்தைவழிச் சமூகத்திற்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் மானுடத்திற்கு?

துயருறுவோர் பேறுபெற்றோர்

|

 மதரீதியான அமைப்புக்கள் இறைவனுக்கு தொண்டு செய்வதாகக் கூறிக்கொண்டும், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே புனிதமான தரகு வேலைகள் செய்வதாகக் கூறிக்கொண்டும், இறந்தபிறகு தான் செல்லப்போவதாக சாமான்யன் நம்பும் சொர்க்கத்தை வாழுகின்ற நாட்களிலேயே பூமிக்குக் கொண்டுவந்து அவன் முன் நிறுத்துவதாகக் கதைத்துக் கொண்டும், சடங்குகளின் வழியே மட்டுமேதான் இறைவனின் திருவடிகளைச் சென்றடைய முடியும் என்ற வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டும் தங்களை சமூகத்தின் அதி-உயர் மையங்களாக ஆக்கிக் கொண்டுவிட்டன.  நாட்டை ஆளும் அரசனே இந்த மத அமைப்புக்களின் செல்வாக்குமிக்க அதிகாரத்தைக் கண்டு நடுங்கி அவைகளின் முன் மண்டியிட்டு வணங்கியிருக்கிறான்.  அதற்கான உதாரணங்கள் இத்தாலியிலிருந்து சென்னை மெரீனா கடற்கரை வரை வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன.  

மனிதனின் கண்டுபிடிப்பான கடவுள் உலகத்தின் மிகப்பெரிய சந்தைப்பொருள்.  இந்த வணிகத்தில் நஷ்டம் என்பதே இல்லை.  ஹோட்டல் வைத்து நொடித்துப் போனவனும், துணிக்கடை வைத்து மோசம் போனவனும், சிலையை வைத்து வியாபாரம் செய்து லாபத்தில் கொழிக்கும் மடங்களின் அதிபர்களைப் பார்த்து பொறாமைப்படுவதில் பிரயோஜனமில்லை. எதை வாங்குவதற்கு மக்கள் ஆயத்தமாக இருக்கிறார்களோ அதை விற்பவனே புத்திசாலி.  மக்கள் தயாராக இல்லாவிடினும், சந்தையில் தான் விற்கவிருக்கும் பொருளைப் பற்றிய விளம்பரத்தை சலிக்காமல் தந்து, சந்தைப்படுத்தி, வடியாத தேவை ஒன்றை இவைகளின் வழியே ஏற்படுத்தி வர்த்தக முதலைகளாக மாறிப் போனவர்கள் வரலாறு மேல்மருவத்தூர் முதல் பெங்களூரு பிடடி வரை ஏராளம்.  காஞ்சிபுரம் பழைய பெரிய உதாரணம்.  

பிழைப்புக்காக இவர்கள் வியாபாரம் நடத்திவருவதைப் பற்றிய கவலை ஏதுமில்லை பலரிடம்.  ஆனால், இவர்களிடம் ஏறுமுகத்தில் குவிந்துவரும் அதிகாரம், சமூகத்தில் தாங்கள் என்ன நினைத்தாலும் சாதித்துவிட முடியும் என்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது.  இந்த மடாலய அதிகார குவிப்பிற்கு மதபேதம் இல்லை. ஹிந்து, கிறித்துவம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மதங்களிலும் இந்த அதிகாரக் குவிமையங்களைப் பார்க்கலாம்.  இவைகள் தனிமனிதனிடம் செலுத்த முடியும் அதிகாரம் வியப்பிற்கானது.  குடும்பத்தில் ஒருவரை இறைச்சேவைக்கு அனுப்பி வைக்கும் பழக்கம் இன்னும் சில சமூகங்களில் உண்டு.  துறவிகளாகவும் இறைக்கன்னிகைகளாகவும் பக்தியினால் மடங்களுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களை நரம்புத் தளர்ச்சி நோய்கள் மற்றும் இன்ன பிற உளவியல் சிதைவுகளுக்கு ஆளாக்கியிருக்கின்றன இந்த அதிகார மையங்கள்.   

இவைகளுக்குள் தொடர்ந்து தொண்டாற்ற முடியாமலும், வெளியேற முடியாமலும் உள்ளுக்குள் புழுங்கி வேதனையில் வாடி உழலும் லட்சக்கணக்கான துறவியரிடமிருந்து ஜெஸ்மி வேறுபடுகிறார்.  தன்னுடைய பால்ய காலத்திலிருந்து தன்னுள் ஊற்றெடுத்த கிறித்துவின் மீதான மாசற்ற பக்தி அவரை ஒரு மடாலயத்துக்குள் கொண்டுபோய்ச் சேர்க்கிறது.  சபையின் உதவியின் ஊடே தன்னுடைய கல்லூரிப்படிப்பை முடித்த ஜெஸ்மிக்கு அந்தச் சபை நடத்தும் கல்லூரியொன்றில் ஆங்கிலப் பேராசிரியையாக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது.  மாணவியாகவும், ஆசிரியராகவும் தான் நீடித்த வருடங்களில் அந்தச் சபையில் புரையோடிப்போயிருந்த அரசியல் இவருக்கு பயத்தையும் அருவருப்பையும் தருகின்றன.  இதைவிட, பெண் துறவிகளிடம் பரவலாக இருந்ததாக தான் பார்க்க நேர்ந்தது என்று ஓரினப் பாலுறவை சுட்டுகிறார் ஜெஸ்மி.  லெஸ்பியன் உறவுகள் இங்கே பிரச்சினையல்ல.  அப்படிப்பட்ட பாலுறவுகளை துறவு வாழ்க்கை என்ற போர்வைக்குள் நடத்தி வரவேண்டியிருக்கிற அவலமும், துறவு வாழ்க்கையின் அரசியலும்தான் இங்கே பிரச்சினைகளாக உருவெடுக்கின்றன. மத அமைப்புக்கள் தவிர்த்த சமூகத்தின் ஏனைய வெளிகளில் ஒருவர் காண நேரும் அரசியலைவிட இன்னமும் கொடுமையாக அது மதச் சபைகளில் புகுந்து பல நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன.  அதிலும் துறவிகள் பெண்களாக இருக்கும்போது, அவர்கள் பல்வேறு உள்மன மற்றும் புறவெளிச் சிக்கல்களை சந்திக்க வேண்டிவருகிறது.  மனிதனின் இயங்கு சக்தியான லிபிடோவை உயர்மடைமாற்றம் செய்ய முடியாத இளம் துறவிகள் தங்களுக்குள்ளேயே தங்களை எதிர்த்தே ஆகப்பெரிய போராட்டம் ஒன்றை வாழ்நாள் முழுவதும் நித்தம் நடத்த வேண்டியதாகிறது.  புறவயத்திலோ, சபைகளில் நீக்கமற நிறைந்துள்ள மூன்றாந்தர அரசியல்.  சிவில் வாழ்க்கையில்  ஒருவர் கண்ணுருவதை விடவும் கேவலமான சொல்லவொண்ணா அடக்குமுறைகள்.  

தகுதிகள் நிறைய இருந்தும் ஜெஸ்மி அவர்களுக்கு உயர் கல்வி மற்றும் பதவி வாய்ப்புக்கள் பறிக்கப்படுகின்றன.  அதிகார மையத்தை எதிர்த்து குரலெழுப்பும் இவருக்கு தனது சொந்த குடும்பமும் ஆதரவு அளிக்காத நிலை.  உதவ முன் வந்த ஒரு சில தோழர்களும் அதிகாரக் குவிமையங்களுக்கு பயந்து கைவிட்ட நிலையில், தனக்கான போராட்டத்தை தானே தலைமையேற்று நடத்தி, சபைகளின் இரும்புக் கதவுகளை உடைத்து வெளியேறியிருக்கும் துறவி ஜெஸ்மி அவர்கள், கேரள ஊடகவியல் நண்பர்களின் காலத்தினாற் செய்த உதவிகளை நன்றியோடு நினைக்கிறார்.  துறவியரிடையே நிலவிவந்த பிரத்தியேக நட்புக்கு தானும் சில மாதங்கள் கட்டாயப்படுத்தப் பட்டதாகவும், கடவுளின் துணையாலேயே தன்னை மீட்டதாகவும் சொல்லும் துறவி ஜெஸ்மி அவர்கள், ஒருமுறை அதிகார அடுக்கில் உயர்நிலையில் இருந்த ஆண்துறவி ஒருவரால் துன்பப்பட நேர்ந்தது என்று வருந்துகிறார்.  இயற்கைக்கு மாறான பாலியல் வக்கிரங்கள் எவ்வளவு கொடுமையானவையோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாதவை இயற்கையாக ஊற்றெடுக்கும் பாலுணர்வுக்கு ஏற்ற வடிகால் இன்றிப் போவதும்.  தங்களது பாலுணர்வை உயர்மடைமாற்று செய்யமுடிகிற துறவியரைப் பற்றி குறைகூற எதுவுமே இல்லை.  ஆனால், துறவி ஜெஸ்மி அவர்களின் வாக்குமூலம் மட்டுமன்றி, ஊடகங்களின் வழியே அவ்வப்போது தெரியவருவது என்னவென்றால், தமது பாலுணர்வை உயர்மடைமாற்று செய்யமுடியாமல், தங்களது வேஷத்தையும் கலைக்க முடியாமல், ரகசியமாக பெரிய குற்ற உணர்வுக்கு தம்மை ஆட்படுத்திக்கொண்டு, தாங்கள் ஈடுபடுவது பிறழ்ச்சியான செய்கைகளோ என்ற சந்தேகங்களால் துன்பமிகு உழன்று, தம்முடைய சஹ்ருதயர்களையும் தமக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தி வேடிக்கை மனிதர்களாக வலம் வரும் இவர்களைப் பார்க்கையில் தெய்வமே! என்ன செய்துவிட்டாய் இவர்களுக்கு! என்று பதற மட்டுமே முடிகிறது.
   
அதிகாரம் எதிரிகளை அனுமதிப்பதில்லை.  அதிகாரத்திற்கு சட்டம், நீதி என்ற கரங்கள் உண்டு.  கருணை என்ற ஹிருதயம் இல்லை.  எதிர்ப்பவர்களை அது முழுமூச்சுடன் நசுக்குகிறது.  அப்படி நசுக்குவதின் மூலமே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.  ஆனால், இன்னொன்றும் நடப்பதுதான் அதிசயம்.  நசுக்கப்படுவதின் மூலமே எதிர்ப்பும் தன்னை பலமாக்கிக் கொள்கிறது.  சொல்லப்போனால், அதிகாரமும் எதிர்ப்பும் தனித்தனியே உயிர்வாழ முடியாதவை.  ஒன்றுக்கு மற்றொன்றின் உதவி தேவை கடவுளும் சாத்தானும் போல.  மதங்களின் திருச்சபைகளில் காணப்படும் அரசியல் பாராளுமன்றத்தின் அகன்ற வளைவான தாழ்வாரங்களில் காணப்படுவதைவிட வக்கிரமானதும் பயங்கரமானதும் ஆகும்.  துறவி ஜெஸ்மி அவர்களை அடக்கி ஆள, அதிகாரக் குவிமையங்கள் கையாண்டுவரும் நூற்றாண்டுப் பழமையான தந்திரங்களையே அவரின் சபை பயன்படுத்துகிறது.  துறவி ஜெஸ்மி அவர்கள் ஒரு பைத்தியம் என்று முத்திரை குத்தப்பட்டு, மனநல மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவருடைய சபை இறங்குகிறது.  தான் மனநிலை பிறழாதவள் என்று துறவி ஜெஸ்மி அவர்கள் மறைமாவட்டத்தின் மேல்நிலை துறவியரிடம் கதறினாலும், அந்தப் பெருமக்கள் சிறிதும் இரக்கம் கொள்வதில்லை.  அதிகாரத்தின் தன்மை அப்படி.  தனக்கு முன்னால் இருந்த அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில், சபையில் இருந்து வெளியேறத் துணிகிறார் துறவி ஜெஸ்மி அவர்கள்.  ஆனால், அசாத்தியச் துணிச்சல் தேவையாக உள்ள இந்த காரியத்திற்கு தனது சுற்றமும் நட்பும் உதவாத நிலையில், கேரள ஊடகவியலாளர்கள் சிலர் உதவ முன்வருகிறார்கள். 
 
தன்னைப் பீடித்து வந்த சபை என்ற பிணியில் இருந்து இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் துறவி ஜெஸ்மி அவர்கள், தன்னுடைய வாழ்க்கையை பிறருக்குத் தெரிவிக்கும் பொருட்டு தாய்மொழியான மலையாளத்தில் ஆமென் என்ற தலைப்பில் தன்வரலாறை வெளியிட்டுள்ளார்.  மிகுந்த பரபரப்பை உண்டாக்கிய இப்புத்தகம் மிகக்குறைந்த காலத்தில் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் ஆக்கம் கண்டுள்ளது.  இதன் தொடர்ச்சியாக தமிழிலும் தற்போது வெளிவந்துள்ளது. மொழிபெயப்பு இன்னும் சிறப்பாக அமைந்திருக்க முடியும்.  ஆனால், வந்துள்ள அளவில் பெரிய குறையேதும் இல்லை.  

[காலச்சுவடு பதிப்பகம், உரூபா 175/-]