அரசு வேண்டாம், ஆனால் அரசியல்?

| Monday, March 31, 2014
அரசு, இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள் - அ.மார்க்ஸ்

 அதிகாரம் என்பதைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் ஒரு கருத்து கொண்டிருக்கிறோம். நாம் அதிகாரம் செலுத்துபவராக இருக்கிறோம் அல்லது நம் மீது அதிகாரம் செலுத்தப்படுகிறது. அதிகாரம் வன்முறையின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதாகவும் ஒரு தோற்றமுண்டு. அது மாயத்தோற்றம் என்கிறார் திரு.அ.மார்க்ஸ் அவர்கள். "அரசு, இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள்" என்ற தனது சிறு நூலின் மூலமாக மிகப் பெரிய விவாதப் பொருளை துவக்கி வைத்திருக்கும் மார்க்ஸ் அவர்களின் சிந்தனையோட்டம், நவீனமானது மட்டுமன்றி, ஒரு தொடர்ச்சியையும் தம் பின்புலமாக பெற்றிருப்பது விசேஷமானது. அதிகாரம் வன்முறையை அடிப்படையாக கொள்ளவில்லை என்று வாதிடும் மார்க்ஸ் அவர்கள், அதிகாரம் ஒப்புதல் (opinion) என்பதின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று வரலாற்று நிகழ்வுகளின் மூலம் நிறுவுகிறார். இறையாண்மைக்கு அடிப்படை அதிகாரம் என்று ஒத்துக் கொள்ளும் மார்க்ஸ் அவர்கள், அந்த அதிகாரத்தை இறையாண்மை ஒப்புதலின் மூலமே பெறுகிறது என்கிறார். "ஒரு அரசின் இறையாண்மையுடன் கூடிய அதிகாரம் அதற்கு அளிக்கப்படும் சட்டபூர்வமான அங்கீகாரத்தின் மூலம் உருவாகிறது. இந்த அதிகாரத்தின் பின்புலம் எதுவாக இருந்த போதிலும் மக்களின் ஆதரவு இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குடியரசாயின் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுதல், முடியரசாயின் வாரிசுரிமை என்கிற வடிவத்தில் உருவாகும் அரசுகளின் இருப்பு, ஏதோ ஒரு வகையில் மக்களின் ஆதரவை நம்பியே உள்ளது. All governments rest on opinion" . அடுத்து மார்க்ஸ் சொல்வது கூர்ந்து அவதானிக்கத் தக்கது. "இந்த ஆதரவை அது இழக்கும்போது வன்முறையை [violence] நாடுகிறது.”

வேறு வார்த்தைகளில் சொல்லுதல் எனின், இறையாண்மை அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிகாரம் ஒப்புதலின் அடிப்படையிலானது. ஒப்புதல் என்பது மக்களின் ஆதரவு ஒன்றின் மூலம் மட்டுமே சாத்தியம். அதிகாரம் சிதைவுறும் போது, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அது வன்முறையை நாடுகிறது. சரி, இறையாண்மை என்றால் என்ன? இறையாண்மையை வரலாற்றுப் பின்புல அடிப்படையில் வரையறுக்க முயலும் மார்க்ஸ், "தனது ஆட்சிப் பரப்பைச் சிதையாமல் வைத்துக் கொள்ளுதல், தேச எல்லையைப் பிறர் கடந்து வராமல் தடுத்தல், பிற (மதம் முதலான) அனைத்து நிறுவனங்களுக்கும் மேலாக அரசின் உரிமைகள் அமைதல் ஆகியன இறையாண்மையின் அவசியக் கூறுகளாயின" எனும் இடத்திற்கு வந்து சேருகிறார். காலப் போக்கில், வணிகச் சுதந்திரமயமாக்கல், தனியார் மயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் என்ற சொல்லாடல்கள் வலுப்பெற்ற தொண்ணூறுகளிலும் அதையொட்டிப் பின் வந்த வருடங்களிலும், ஒரு பேரதிகாரம் (unipolar) கொண்ட உலகில் தனித் தேச இறையாண்மை என்பது வலுவிழந்தது போலவே தோன்றுகிறது. தனது தேச எல்லையைப் பிறர் கடந்து வராமல் தடுத்தல் என்பதிலிருந்து அரசுகள் சற்றே திரும்பி "சொந்த மக்களின் மீது வரம்பற்ற அதிகாரத்தைச் செலுத்தக்கூடிய, மக்களின் மிக அடிப்படையான அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொள்கிற அரசுரிமையே இறையாண்மையின் நடைமுறை வடிவமாக இருந்து வந்துள்ளது. இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்தபோது (1975-78) குடிமக்களுக்கு உயிர் வாழும் உரிமை கிடையாது என அரசு வாதிட்டதும், அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதும் நினைவிற்குரியது" என்றும் சொல்கிறார். 

இறையாண்மை என்ற சொல்லாடலின் நிறம் மாறிப்போனதற்கு வேறு இரண்டோடு, "1990களில் தொடங்கி அதிவேகமாகச் செயல் படுத்தப்படும் உலகமய நடவடிக்கைகள் மற்றும் உலகளாவிய பொருளாதாரம் ஒன்று கட்டமைக்கப் பட்டு தேசிய பொருளாதாரம் என்பதை செயல் இழக்க வைத்துள்ளதை நினைவூட்டும் மார்க்ஸ், செப்டம்பர் 11, 2001க்குப் பின் உருவாக்கி மிக இறுக்கத்துடன் கடைப் பிடிக்கக்கூடிய தேசியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' [War on Terror] என்கிற சொல்லாடல் விளைவித்துள்ள பாரதூரமான மாற்றங்கள்" ஆகியவையே காரணங்களாக சொல்கிறார். 

இந்நிலையில் சுதந்திரப் போராட்டக் குழுக்களுக்கு நேர்ந்துள்ள நெருக்கடிகளையும் கவனத்தில் கொள்ளும் மார்க்ஸ், இக்குழுக்களின் தோல்வியாக சுட்டுவது உற்று நோக்கத் தக்கது. வரம்பற்ற அதிகாரத்தை தனது தேசத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் மீது ஒரு அரசு தொடர்ந்து செலுத்தி வருவதால் கோபமுற்ற இளைஞர் கூட்டம் வன்முறையைக் கையில் எடுப்பது அதிகாரத்தின் முன் எடுபடுவதில்லை என்று வரலாற்று ஆவணங்கள் ஏகப்பட்டவை இருக்கையில், தன்னை 'பயங்கர வாதத்திற்கு எதிரான நாடு' என்று ஒரு அரசு முன் நிறுத்துகையில், சர்வதேசம் அதற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கும் நிலையில், வன்முறையை தனது ஆயுதமாக எடுத்திருந்த சுதந்திரப் போராட்ட குழுக்கள் மாற்று ஆயுதத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று சொல்லும் மார்க்ஸ், அந்த மாற்று ஆயுதத்தையும் சுட்டிக் காட்டுகிறார். "அரசியல்" என்ற மாற்று ஆயுதம் ஏன் இக்குழுக்களால் கைவசப்படுத்தப் படவில்லை என்று வினவும் மார்க்ஸ், அரசியலதிகாரத்தைப் பெற்றிருக்கும் ஒரே காரணத்தால் தமது சொந்த மக்களின் மீதே வரம்பற்ற வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அவர்களின் குரலை நெரிக்கும் இந்த 'இறையாண்மை' மிக்க அரசுகளை எப்படி எதிர்கொள்வது என்பதிற்கு பதிலாக சொல்கிறார்: "வன்முறையின் மூலம் இடம் பெயர்க்கப் பட்டிருந்த அரசியலை அவ்விடத்தில் வைப்பதுதான்" இப்போது மிச்சமிருக்கும் ஒரே வழியாக சொல்கிறார். 

ஈழ போராளிக் குழுக்கள் உட்பட தமது ஆயுதமாக வன்முறையைக் கையில் எடுத்துக் கொண்ட அமைப்புக்கள் மதம், இனம், மொழி என்ற பேரடையாளங்களின் அடிப்படியில் பிற சிறிய அடையாளங்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்க்கின்றன என்று சொல்லும் மார்க்ஸ் "1990ல் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்த 80 ஆயிரம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டதை" எடுத்துக்காட்டாக நம் முன் வைக்கிறார். வன்முறை சிக்கலில்லாதது. அதிகாரம் சூட்சுமமானது. "சொல்லப் போனால், அதிகாரம் வன்முறையற்றது. அதிகாரம் எப்போது சிதையத் தொடங்குகிறதோ அப்போதுதான் அது வன்முறையைக் கையில் எடுக்கிறது" என்று நம்மை பிரமிக்க வைக்கும் மார்க்ஸ், "வரலாற்றில் வெற்றிகரமாக நிகழ்ந்த ஆயுத எழுச்சிகள் அனைத்தும் அரசின் அதிகாரம் முற்றிலும் சிதைந்த நிலையில்தான் ஏற்பட்டுள்ளன" என்றும் நினைவு படுத்துகிறார். 


சரி, 'அரசு' என்றால்தான் என்ன? "பல்வேறு எதிர் எதிரான நலன்கள் தத்தம் கருத்துக்கு ஆதரவு தேடும் செயல்பாடுகளை அனுமதிக்கும் ஒரு சமூக அமைவை நிர்வகிப்பதே அரசியல்" என்று வரையறுக்கும் மார்க்ஸ், இந்நூலின் இறுதியாக சொல்வதை மேற்கோள் கட்டுவது மிகவும் அவசியம்: "பல்வேறு சாத்தியங்களுக்கிடையேயான ஒரு சமரசத்தின் அடிப்படையிலேயே அரசதிகாரத்திற்கு ஆதாரமான ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. வன்முறையையே அரசியலாகக் கொள்பவர்களால் இதைச் சாத்தியப்படுத்த இயலாது. ....வன்முறை எளிமையானது. அரசியல் சிக்கலானது. சிக்கலானது என்பதற்காகவே அரசியலைக் கைவிடுவோமாயின் அது பேரழிவிற்கே இட்டுச் செல்லும். இன்றைய உலகச் சூழலில் இந்தப் பேரழிவு மேலும் விரைவுபடுத்தப்படும்."

ஆக, எந்த மக்களுக்காக வேண்டி, எவரின் விடுதலைக்காக வேண்டி ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவோ, அதே மக்களின் தொலைதூர லட்சியங்களுக்காக அவரின் உடனடி நிகழ் காலத்தைப் பலி கொடுத்தல் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் பட வேண்டிய விடயம் என்று வாதிடும் மார்க்ஸ் அவர்களுக்கு எதிர்வினை தர முடிந்தவர்கள் இந்த பாரியமான விவாதத்தை இன்னும் மேன்மையான அளவில் மேலெடுத்துச் செல்வது இன்றைய தமிழ் அறிவுலகின் தன்மையை, ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவும். 

[புலம் வெளியீடு, சென்னை, உரூபா.25/-]

திண்ணை 7

| Friday, March 28, 2014
28-03-2014
 
அமெரிக்க உளவாளி
 
அ.முத்துலிங்கம் அவர்களின் "அமெரிக்க உளவாளி" அவரின் இணைய தளத்தில் அவ்வப்போது எழுதி வந்த சிறு சிறு கட்டுரைகளின் தொகுப்பு. பல்வேறு விடயங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். தமிழில் அவருக்கு மட்டுமே கைவந்திருக்கும் சூட்சுமமான நகைச்சுவை பெரும்பாலான கட்டுரைகளில் ஆகி வந்திருக்கிறது. தவிரவும், இவர் [அவரே சொல்லியிருப்பது போல] பணி புரியாத நாடுகள் மிகவும் குறைவு என்பதால் இவரின் அவதானிப்பு மிகவும் விரிந்து பட்டதாகவும், நமக்கெல்லாம் புதிய அனுபவமாகவும் இருக்கிறது. முத்துலிங்கம் அவர்களின் படைப்புகளை படிக்கத் தொடங்கிய நாட்களில் எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு. ஏன் இவர் இலங்கைக்காரராக இருந்தும் ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஒன்றும் எழுதவே இல்லை? நான் நினைத்தது தவறு. எழுதுகிறார். ஐநா அமைப்பு போன்ற பன்னாட்டு நிறுவனங்களோடு நிறைய வருடங்கள் பணி செய்திருப்பதால் என்ன முடியும், எது முடியாது மற்றும் உலக வல்லமைகள் இது குறித்த விடயங்களில் எவ்விதமான நிலைப்பாடு எடுக்கும் என்பது இவருக்கு முன்னமேயே தெரிந்திருக்கிறது. ஆனாலும், தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல, ஆங்காங்கே தன் தாய் நாட்டைப் பற்றிய ஏக்கமும், அதன் சுதந்திரத்திற்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்களைப் பற்றிய வணக்கமும் கட்டுரைகளில் எதிர்பாராத இடங்களில் வாசகன் சந்திக்க முடிகிறது. புலிகள் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான சதாசிவம் கிட்டுவைப் பற்றிய கட்டுரை இப்புத்தகத்தில் ஆகச் சிறந்தது. போலியான பாவனைகளை இவரது எழுத்தில் அவதானிக்கக் கூடுவதில்லை.

அ.முத்துலிங்கம் தமிழுக்கு நேர்ந்திருக்கும் சிறந்த நவீன எழுத்தாளர்களில் ஒருவர்.
 
----
 
27-03-2014
 
காற்றில் மிதக்கும் புல்லாங்குழல்
 
கல்யாணி என்கிற கல்யாண சுந்தரம் என்கிற வண்ணதாசனின் தந்தையும் இடது சாரி எழுத்தாளர்களில் மூத்தவருமான தி.க.சி. மறைந்து விட்டார். இலக்கிய விமரசனத்தை தனது தொண்ணூறு ஆண்டு கால வாழ்க்கையில் தொடர்ந்து முன் வைத்துக் கொண்டிருந்தவர். திருநெல்வேலி தந்த நல் வயிரங்களில் ஒருவர். "தி.க.சியின் நேர்காணல்கள்" என்ற புத்தகத்தில் அன்னாரது இலக்கிய கொள்கைகள், தடங்கள், எதிர்நோக்கங்கள் ஆகியவை காணக் கிடைக்கலாம். தமிழ் நவீன இலக்கியத்திற்கு பெரிய இழப்பு.

----

18-03-2014
 
கலாப்ரியாவின் Trilogy

கலாப்ரியா அவர்களின் சுயசரிதை என்றுதான் இவைகளை சொல்ல வேண்டும். ஒரு trilogy தந்திருக்கிறார். முதலில் 'நினைவின் தாழ்வாரங்கள்'; அடுத்து 'ஓடும் நதி'; கடைசியில், 'உருள் பெருந்தேர்'. இவைகளுக்கும் பிறகு, 'சுவரொட்டி' வந்திருக்கிறது. ஆனால், அதில் அறுபதுகளின் சினிமாவைப் பற்றி மட்டும் சொல்லியிருக்கிறார்.

எந்த விதமான பந்தா இல்லாமல் எழுதுவது எவ்வளவு சிரமமான காரியம் என்பது எழுத முயன்றவர்களுக்கு தெரியும். வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பது, அதிலும் எந்தவிதமான romanticism இல்லாமல் திரும்பிப் பார்ப்பது இன்னும் சிலருக்கே முடியும். கலாப்ரியா வார்த்தைகளை தேடுவதேயில்லை. எனக்குப் பலமுறை தோன்றியிருக்கிறது. எழுதப் பட்ட வார்த்தைகளைத்தான் இவரோ அல்லது இவர் குறிப்பிடும் நபர்களோ அந்தச் சமயங்களில் பேசியிருப்பார்கள். தன்னைப் பற்றி பிறர் கணக்கீடு கௌரவமாக இருக்காது என்ற கவலை எங்கேயும் தெரியவில்லை.

தன் குடும்பத்தின் வீழ்ச்சியை சொல்லும்போதும் ஒரு detached மன நிலையில் இருந்தே சொல்கிறார். யாரந்த சசி? சசியைப் பற்றி மட்டும் இன்னும் அந்த உணர்வழுத்தம் நீங்கிய பாடில்லை. மரணப் படுக்கையில் இறுதி நிமிடங்களில் தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் நினைவுகளில் மிதந்தபடி கடைசியாக எஞ்சியிருக்கப் போவது நிறைவேறாத காதலின் துக்கம் மட்டும்தானா?

இந்த மூன்றையும் நீங்கள் படிக்க நான் பிரியப்படுகிறேன்.
[1] நினைவின் தாழ்வாரங்கள் - கலாப்ரியா
[2] ஓடும் நதி - கலாப்ரியா
[3] உருள் பெருந்தேர் - கலாப்ரியா

நம்மைப் போன்ற ஒரு மனுஷனின் நினைவு, வேதனை, சந்தோசம் ஆகியவை நமக்குமானதல்லவா?
 
----